Friday, 19 September 2025

குழந்தைகளுக்குத் தத்துவமா? - 5

குழந்தைகளுக்குத் தத்துவமா? - 5
கொஞ்சம் வரலாறு உதயசங்கர்




தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.


என்ன சரிதானே!


வாயுக்கள், தூசி போன்றவை அடங்கிய சுழலும் பெருமேகமான நெபுலாவில்  இருந்து பெருவெடிப்பில் சிதறிய ஒரு துண்டுதான் பூமி. அந்த சம்பவம் நடந்து சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.


என்னது?

454 கோடி ஆண்டுகளா?


ஆமாம். நாம் வாழும் இந்த பூமி பிறந்து 454 கோடி ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோளமான பூமியில் ஒரு உயிர் எப்போது தோன்றியது தெரியுமா?


380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் முதல் உயிர் தோன்றியது. 


என்னது 74 கோடி ஆண்டுகளாக பூமி எரிஞ்சிக்கிட்டே இருந்ததா? அப்படின்னா பூமியைப் படைத்தது, உயிர்களைப் படைத்தது கடவுள் என்று சொல்கிறார்களே..


அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இப்போது தெரிந்துகொள்ளலாம். அறிவியல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து நிரூபிக்கும். அல்லது நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும். 


புரியலையே!


தண்ணீர் எப்படி உருவானது என்று முதலில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது பள்ளிக் குழந்தைகூட ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்று சொல்லிவிடும்.


அது எப்படித் தெரிந்தது?


தண்ணீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆராய்ந்து நிரூபிப்பது அறிவியல் என்று சொல்கிறோம்.


சரி. முதல் உயிர் எப்போது, எப்படித் தோன்றியது?


74 கோடி ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த பூமி கொஞ்சம்கொஞ்சமாகக் குளிர்ந்தது. அப்படிக் குளிர்ந்தபோது விதவிதமான வாயுக்கள் உருவாயின. ஹைட்ரஜன், நைட்ரஜன், ஹீலியம், கார்பன் டை ஆக்சைடு, இவற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் வினைபுரிந்து தண்ணீர் உருவானது.


அதுதான் கடல். 


பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்த ஊர் என்றால் அது கடல்தான்.  அந்தக் கடலில்தான் முதல் உயிரான சயானோ பாக்டீரியா அல்லது நீலப்பச்சை பாசி போன்ற நுண்ணுயிரி தோன்றியது.


அடேயப்பா!

நம்முடைய மூதாதையர் யார்? என்று கேட்டால் சயானோ பாக்டீரியா என்று சொல்லவேண்டும். 

சரியா? பேரே அழகா இருக்குல்ல..


ree

சயானோ.


அந்த சயானோவிலிருந்துதான் பூமியில் இப்போது இருக்கும் இத்தனை கோடி உயிரினங்களும் தோன்றின. இதையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கென்று  தனியான பண்புகளுடன் வாழ்கின்றன. இயற்கையில் ஒன்றைப் போல இன்னொரு உயிர் கிடையாது.


சரி. மனித இனம் எப்போது, எப்படி உருவானது?


அறிவியலறிஞர் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை (Evolution Theory) கண்டுபிடித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அதிலிருந்து கிடைத்த உண்மைகளைச் சொன்னார். 


குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் சொன்னார். ஆனால் டார்வினுக்குப் பின்னால் வந்த அறிவியலாளர்கள் அவர் சொன்ன பரிணாமவரலாற்றில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள்.


அது என்ன? 

குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொது மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. நேரடியாக குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை. 


உராங் ஊத்தன், சிம்பன்சி, கொரில்லா, போனோபாஸ் போன்ற வாலில்லா குரங்குகளுக்கும் மனித இனத்துக்கும் ஒரே பொது மூதாதை இருந்தது. 


அப்படி என்றால் இப்போது நாம் பார்க்கும் குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை?


அங்கேதான் இருக்கிறது இன்னொரு ட்விஸ்ட்.


அதாவது, பிரைமேட் என்று சொல்லப்படும் குரங்கினங்களுக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் இடையில் ஹோமினிட் என்று சொல்லப்படும் விலங்கினங்கள் தோன்றியிருக்கின்றன.

 

வாலில்லாக் குரங்குகளுக்கு முன்னால் ஒரு குரங்கினம் தோன்றியிருக்கிறது. அதனுடைய பரிணாம வளர்ச்சியில்தான் வாலில்லா குரங்குகள் தோன்றின. அதேபோல் அந்தப் பொது மூதாதையிலிருந்தே மனித இனம் தோன்றியது.


இதெல்லாம் எப்போது ஆரம்பித்திருக்கும்?


சுமார் அறுபது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்.. மனித இனத்தின் பொது மூதாதை பூமியில் தோன்றியது.


அதற்கு முன்னால் மனித இனமே கிடையாது.


நவீன மனித இனமான, அதாவது ஹோமோசேப்பியன்ஸ் எப்போது தோன்றியது?


சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான்.


சரி. எங்கே தோன்றினார்கள்?


ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள். ஆமாம். இன்று உலக முழுவதும் பரவியுள்ள  மனித இனம் முதன்முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான். 


நமக்கெல்லாம் பூர்விகம், அதாவது மூதாதையர் அல்லது முன்னோர்களின் ஊர் ஆப்பிரிக்காவா?


எதுக்குச் சுத்தி வளைச்சிகிட்டிருக்கீங்க? மொத்த மனித இனத்தின் பாட்டி, தாத்தாவின் ஊர் ஆப்பிரிக்கா. 


அவ்வளவுதான்.


ஆனால்? 

என்ன ஆனால்?

இல்லை. வந்து.. ஆப்பிரிக்க மக்களுக்கும் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லையே.


ஆமால்ல..ஆனால் ஆப்பிரிக்காதான் எல்லோருக்கும் சொந்த ஊர்.

என்ன குழப்பமாக இருக்கா?


சரி. குழப்பம்தான், அதாவது சந்தேகம்தான் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரே வழி.. 

எப்படின்னு பார்ப்போம்.


(தத்துவம் அறிவோம்)நன்றி - இயல் மின்னிதழ்


 

No comments:

Post a Comment