“மீனாளின் நீலநிறப்பூ” தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள். இந்த பூவிற்கு பல இதழ்கள். அதில் மலர்ந்து விரிந்திருக்கும் பத்து இதழ்களின் நறுமணத்தின் வாசத்தை நம்மை நுகர வைத்திருக்கும் ஆசிரியர் உதயசங்கர் அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்துடன் எனது விமர்சன பார்வையை காட்சிப் படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இதழ் 1-
“இந்த கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்” – ஒவ்வொரு கதைக்குள்ளும் எழுத்தாளரும் வாசகரும் வந்து வந்து செல்வார்கள். இந்த கதையும் அப்படி தான். “வீட்டை கட்டி பார், கல்யாணம் செய்து பார்” என்ற சொலவடை நம்மில் பலர் சொல்லி கேட்டு உள்ளோம். மனித குல இலக்கே வீடும் கல்யாணம் என்றே சொல்லி சொல்லி வளர்ந்து விட்டோம். வீடு என்ற கட்டமைப்பு நம் தேசாந்திரி வாழ்க்கைக்கு தடைச்சுவர் என்பதை மறந்து விட்டோம். கால்களின் பயணத்தை தாழிட்டு வீட்டுக்குள் முடங்கி விட்டோம். அப்படி எண்ணம் கொண்ட என்னை போலவும் நம்மை போலவும் ஒரு வீடு வாங்க என்ன என்ன கனவுகளையும் கற்பனைகளையும் கொண்டு பயணிப்பார் என்பதை ஒரு சராசரி குடும்பத்தில் கணவனும் மனைவியும் எதிர்கொள்ளும் சவால்களை மிக நேர்த்தியாக ஆசிரியர் கதையை கொண்டு சென்றுள்ளார்.
நாங்கள் வீடு வாங்கும் போது சந்தித்த நிகழ்வுகள் நிழலாக இக்கதையை வாசிக்க வாசிக்க பின் தொடர்ந்து என்பது நிதர்சனம்.
வீடு வாங்குவதை மட்டுமே வாழ்க்கை லட்சியமாக கொண்டு நிகழ் கால வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர். வரும் வருமானம் வாழ்க்கை நடத்த போதுமானதாக இருக்கும் போது ஹோம் லோன் எடுத்து மாதம் emi கட்ட வேண்டும் என்பதற்காகவே பணி சுமையை சுமந்து சுமந்து நொந்து போனவர்கள் பலர்
இச்சிறுகதையில் சேதுசிவராமன் அவருடைய துணைவியார் அலமேலுமங்கை அதே போல் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எழ அதனால் அவர்கள் சந்திக்கும் சவால்களை சொல்லும் கதை.
மனைவி பேசும் போது கணவன் தலையாட்டுவது ஒரு ஆணின் உடலின் மொழியாக சொல்லப்படுகிறது பொண்டாட்டிக்கு தலையாட்டி தலையாட்டி தலையாட்டி, “தலையாட்டி பொம்மையாகிவிட்டான்” என்று. தலையாட்டி பொம்மை சூட்சுமம் நமக்கு தெரியும். அது எத்தனை சுற்றி தலையாட்டினாலும் அதன் இயல்புக்கு வந்துவிடும். தஞ்சை கோயிலின் கட்டிடக் கலைக்கும் தலையாட்டி பொம்மைக்கும் ஒற்றுமை உண்டு. ஆண் தஞ்சாவூர் கோவில் போல் நிலைத்து நிற்பான் என்பது தான். எழுத்தாளர் ஊடே கதையில் வருவது போல் நானும் வந்துவிட்டேன். மன்னிக்கவும் விமர்சன பார்வைக்கு செல்வோம்.
இன குழுவாக தேசாந்திரியாக திரிந்து வாழ்ந்த போது பிரபஞ்சம் வீடாக இருந்தது. சுயநலம் குடி கொண்டு என்னுடையது என்று எண்ணங்கள் குறுகிய பின்னர் வாசலில் திண்னை வைத்து கட்டுவதை கூட மறந்து விட்டோம். கழிவறையை வீட்டுக்குள்ளும். பூஜையறையை வரவேற்பு அலமாரியிலும் வைக்க பழகிவிட்டோம்.
பறவைகள் கூட்டம் சூழலியலுக்கு ஏற்றார் போல் கூடு கட்டி வாழ்கிறது. மனிதனை தவிர எந்த உயிரினமும் இந்த புரோக்கர் தொழில் செய்வதில்லை. புரோக்கர்கள், ஹவுஸ் புரொமோட்டர்கள் இவர்கள் தான் வீட்டின் விலையை நிர்ணயம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
தற்போது ரியல் எஸ்டேட் என்பது ஒரு கார்பரேட் நிறுவனமாக பறந்து விரிந்து திகழ்கிறது. விவசாய நிலங்கள் அழிய இவர்கள் முக்கிய காரணம். எப்படி என்றால் நமது ஆசையை தூண்டி அதன் மூலமாக சென்னைக்கு மிக அருகாமையில்….. என பல கிலோமீட்டர் தள்ளி வீடு கட்டி விற்று சென்று விடுகிறார்கள்.
காவல் கூலி, தேங்கு கூலி பார்வை கூலி என இக்கதையில் வருவது போலவே சமகாலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்பஸ் பன்ட், மெயின்டனஸ் பன்ட், மிஸ்லேனியஸ் பன்ட் ….. என பல பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. எதற்கும் நாம் கேள்வி கேட்பதில்லை என ஆனபிறகு அவர்கள் கூலி என்ற பெயரில் பல கட்டணங்கள் வசூலிக்க துவங்கிவிட்டனர்..
மொத்தத்தில் சராசரி ஒரு தம்பதிகள் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை பட அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சவால்கள் ஏமாற்றங்கள் என்ன என்ன என்பதை அழகாக படைத்துள்ளார். சமகாலத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாலும் இந்த சூழலை சந்தித்து தான் ஆகவேண்டும். ஒரு படைப்பு எக்காலத்திற்கும் ஏற்றதாக அமைவது சிறப்பு. அந்த சிறப்பு இக்கதைகளம் பெற்றுள்ளது
இதழ் 2-
“பெருமாள் சாமியின் பேருந்து பயணம் ” பயணம் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் ஒரே பாதையில் தொடர் பேருந்து பயணம் ஒரு இயந்திர தனமான வாழ்க்கையை தரும். நமது கதை மாந்தர் பெருமாள் சாமிக்கு அந்த நிலை தான். கோவில் பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு பணி நிமித்தமாக ஒரே வழியில் மேற் கொள்ளும் பயணம் பற்றியது தான் இந்த கதை. நம் சக தோழமைகளுக்கு பொது இடங்களில் பயணம் செய்யும் போது இடையூறு தராமல் பயணிப்பது எப்படி என்பது தெரியவில்லை என்பதே உண்மை,
பயணம் என்னும் போது எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் இப்போது நினைவிற்கு வருகிறது, ஒருமுறை ஒரு இறப்புக்கு சென்று இரவு பயணம் வேலூரில் இருந்து சென்னை பெண்கள் மூவர் மட்டும் வரவேண்டிய சூழல் எங்களுக்கு பின். கடைசி இரண்டு வரிசையில் குடி போதையில் ஒரு குடிமகன் பேருந்திலே கழிப்பறை உபயோகிப்பது போல் சீறுநீர் கழிக்க சக பயணிகள் கத்தி கூச்சல் மட்டுமே இட முடிந்தது. நாற்றத்தோடு சென்னை வந்து சேர்ந்தோம். பயண கோட்பாட்டை மக்கள் பயன்படுத்தினால் பெருமாள் சாமி போன்ற தொடர் பயண வாசிகளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும். பேருந்து ஏறியவுடன் அடுத்தவர் மேல் சாய்ந்து குறட்டை விட்டு தூங்குவது, அலைபேசியில் சத்தமாக பேசுவது போன்ற சங்கடங்கள் இன்றும் நாம் சந்தித்து வருகிறோம். தொடர் பயணம் செய்பவர்கள் வாசிக்க வேண்டிய கதை.
இதழ் 3
“மறதியின் புதைசேறு” – – மாய உலகில் சஞ்சரிக்க நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். திடிரென நாம் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் நமக்கும் எப்போதாவது வரும். நம்மிலிருக்கும் பொக்கிஷங்களையும் மற்றவர்களின் கட்டாயத்திலும் சமூகத்தின் கட்டமைப்பிலும் மறதி என்னும் புதைசேற்றில் தொலைத்துவிடுகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. பொதுவாக் கலைத்தன்மை அனைவருக்கும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் சிலரையும் நாம் சமூக கட்டமைப்பு என்ற வகைப்பாட்டில் அவர்களை சுருக்கி சிதைத்து விடுகிறோம். இச்சிறுகதையில் காபிரியேல் மார்க்யூஸின் ” பால்தஸாரின் அற்புத பிற்பகல் நேரம் ” என்ற ஒற்றை வாசகம் அந்த கதையை வாசிக்க தூண்டியது. அந்த கதை மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் கரு கொண்டுள்ளது. ஒரு பறவை கூண்டு வருமான ரீதியாக அல்லாமல் அன்பின் பரிசாக அளித்து செல்லும் கதை. ஒரு வாசிப்பு, “மறந்து போன உறவுகளை நினைவூட்டி அந்த உறவை தேடி போக வைக்கிறது”. அது தான் வாசிப்பின் மகத்துவம். அப்படி தான் நம் கதாநாயகனுக்கு அவனின் மாமா உலகநாதனை நினைவுட்டுகிறது. மாமாவின் கலை உணர்வு என்ன? சமூகம் அவரை எங்கு கொண்டு நிறுத்தியது. அனைத்தையும் மறந்தாலும், மறவாமால் அவரிடம் மிதமிருந்தது என்ன என்று சொல்கிறது இச்சிறுகதை. மனித மனம் ஒரு அழகிய வீணை. அதை மீட்ட தெரிந்தவனுக்கு அது இசையை பரிசாக அளிக்கும். இச்சிறுகதை வாசிக்க வாசகர்களுக்கு உளவியல் சார்ந்த பார்வை தேவை.
இதழ் 4
கண்ணாமூச்சி – – கடன் வாங்கி தலை மறைந்து போவது ஒன்றும் புதிதில்லை. அந்த கடன் பண கடனாக மட்டுமே இருக்க அவசியமில்லை. விருப்பங்கள் மாறுபடும். சேகரிப்புகள் மாறுபடும். அந்த சேகரிப்பில் ஒரு இழப்பு ஏற்பட்டால் மனம் பாடுப்படும். அப்படி தனது சேகரிப்பில் இருந்து ராமநாதன் எதனை கடன் கொடுத்தான்? ஏன் கொடுத்தான்? சோமநாதன் யார்? அவன் ராமநாதனிடம் என்ன கடன் வாங்கினான்? ஏன் வாங்கினான்? வாங்கியதை திரும்பி கொடுத்தானா? அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கண்ணாமூச்சி என்ன என்றே இந்த சிறுகதை பேசுகிறது.
இதழ் 5
மீனாளின் நீலநிறப்பூ – – நம்மிடம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் பேசுவதாக தெரிகிறது என்றால் நம் நிலை என்ன? அதிலும் பெண்களின் ஆட்சியில் என்று ஆண்கள் சுயநலமாக வீட்டு கொடுத்த சமையலறையில் இருக்கும் கடுகு, துவரம் பருப்பு போன்ற பொருட்கள் பேசுகிறது என்றால்…..?
அப்பா அம்மா விளையாட்டு என்றால் சொப்பு வைத்து விளையாடுவது என்ற நிலை மாறி விட்டது. என்னவென்று அறியாவயதில் ஏற்படும் பாலியல் தொல்லை பிள்ளைகள் மனதில் எத்தனை ஆழமான மன பிறழ்வு உண்டாக்குகிறது என்பதை காட்சி படுத்தும் சிறுகதை.
சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் கடுகு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு தண்ணீர் என அனைத்து பொருட்களோடும் அவள் சுதந்திரமாக பேசலாம். ஏன் கோபம் வந்தால் பாத்திரங்களை தூக்கி போடலாம். மிக்ஸி போடும் போது ஓ வென கத்தி தனது கோபத்தை ஆற்றுப் படுத்திக் கொள்ளலாம். காய்கறிகள் வெட்டும் போது டக் டக் என அவளின் சீற்றத்தை காட்டலாம், மாவு பிசைந்து சப்பாத்தி கட்டையில் அடிக்கும் போதும் ……. இவையெல்லாம் பெண்ணின் கோபத்தை வெளியே கடத்தும் கடத்திகள் அந்த சமையலறையோடு அவள் அவளின் வாழ்நாள் முழுவதும் கழிக்கிறாள், பணிக்கு செல்லும் பெண்களுக்கு கூட சமையலறையில் சுவாசம் செய்யாமல் செல்ல முடியாது. மீனாளின் நீலநிறப்பூ புத்தகம் முழுவதும் அதன் நீல நிறத்தை தூவி சென்றுள்ளது நீல நிறம் மாறும் காலம் வருமோ?…. நம்பிக்கை தான் வாழ்க்கை…. நிழலில்
“ – இதழ் 6
ஆனைக்கிணறு தெரு” -- பிரச்சனைகளை சமாளிப்பதில் பெண் சளைத்தவள் இல்லை. பின் ஏன் அவள் தற்கொலை என்ற பலவீனமான பாதையை தேர்வு செய்கிறாள்?
ஒரு குடிகார கணவன் மரணித்தாலோ, உயிருக்கு உயிராக இருக்கும் பெற்றோர் பிள்ளை ஏன் அன்பான கணவன் இறந்தாலும் அவள் அந்த பலவீனமான பாதையை தேர்வு செய்வதில்லை. கணவன் இறந்த பின் இட்லி கடை வைத்தாவது 5 பெண் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களை நன்கு படிக்க வைத்து திருமணம் சிறப்பாக செய்து முடித்த பெண்களை நமது அக்கம் பக்கத்து வீட்டில் பார்த்துள்ளோம். அப்படியெனில் அவளுக்கு பிரச்சினை சமாளிப்பது பிரச்சினை இல்லை. அவள் ஏதோ ஒரு விதத்தில் பன்மடங்கு அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறான், இது வீட்டு பிரச்சினை இல்லை. இது ஒரு உலகளாவிய உளவியல் பிரச்சினை. “மாற்றங்கள் ஒன்றே மாறாதது” ஆனைக்கிணறு அடுக்குமாடி கட்டிடம் ஆகலாம் ஆனால் மாறாத ஒன்று உள்ளது அதை படம் பிடித்து காட்டுகிறது இக்கதை. பிடித்த வரி: இந்நிலைக்கு மூலகாரணம் ” இது ஆண்களின் உலகம் சித்தி… “
இதழ் 7
“ஒரு வீடு ஒரு கனவு ஒரு மனிதன்”- – இதழ் 1 - ல் வீடு வாங்க முயற்சிக்கும் போது புரோக்கர்கள், ஹவுஸ் புரொமோட்டர்களால் உண்டாகும் பிரச்சனைகளை பார்த்தோம். அதனுடைய நீட்சியாக இந்த கதை கட்டிய வீட்டை ஒருவர் எப்படி விமர்சனம் செய்கிறார். சாஸ்திரம் என்ற பெயரில் வாஸ்து எப்படி கட்டிய வீட்டை மாற்றுகிறது என்பதை பிரதிபலிக்கிறது. ஒவ்வொருவரின் கற்பனை வீட்டோடு ஒப்பிட்டு விமர்சனங்களை தூவி செல்லும் மனிதர்கள் பற்றிய சிறுகதை. கனவுகளின்றி வாழ்க்கை இல்லை? கற்பனை வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு . அதிலும் இயற்கை சூழலில் ஒரு வீடு என்பது பலரின் கனவு. கனவுகள் நினைவுகளாக மாற மனித உள்ளம் ஏங்குகிறது என்பதே நிதர்சனம்
-இதழ் 8
“இது ஒரு ரவிச்சந்திரன் கதை (சுகந்தி யின் கதையும் கூட)” –
ஒரு கதை இரண்டு முடிவு. கணவன் இறந்து போக வேண்டும் என்று சுகந்தி விரும்பினால். என்று பெண் கதாபாத்திரத்திற்கு அந்த உரிமையை அளித்த கதை சொல்லிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
சூதிற்கும் மதுவுக்கும் அடைக்கலம் கொடுத்த வர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவன் ரவிச்சந்திரன். சுகந்தி அவனின் மனைவி. அவனது இந்த நடத்தையில் மன உளைச்சலுக்கு ஆளாகி பலமுறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு தோன்றுகிறது. அதே சமயம் தனது பிள்ளைகள் முகம் அவளது கண்முன் பிம்பமாக தோன்றும். உடனே அவள் தற்கொலை முயற்ச்சியை கைவிட்டு விடுவாள். அப்படியே கடந்து சென்ற அவர்கள் வாழ்வில் அடுத்த நகர்வு என்ன? ரவிசந்திரன் திருந்தினானா? சுகந்திக்கு சுகமான வாழ்க்கை கிடைத்ததா? இல்லை ரவிசந்திரன் இறந்தானா? இல்லை வழக்கம் போல கதாசிரியர் பெண் கதாபாத்திரமான சுகந்தியை தான் இந்த படைப்பில் சாகாடித்து சொர்க்கத்திற்கு அனுப்பினாரா என்பதை வாசகர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இதழ் 9
“அண்டாகா கசூம் அபூகா குசூம்” – – இயல்பாக நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நாம் முக்கியதுவம் கொடுப்பதில்லை. அனிச்சை இயக்கங்கள் எல்லாம் அதிசயம் தான். அது எவ்வாறு நடக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளும் உணர்வு நிலை கடந்து வாழ பழகிவிட்டோம். சாதாரணமாக வெளியேறும் சிறுநீர் மலம் வெளியேற வில்லை என்றால் தான் நமது கவனம் அதன் மேல் போகும்
“அண்டாகா கசூம் அபூகா குசூம்” கதை அதை நமக்கு உணர்த்துகிறது. மேன்சன் வாழ்க்கை எத்தனை வித அனுபவங்களை தருகிறது என்பதை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு எழுத்தாளர் ஹோமியோபதி பின்புலம் கொண்டவர். அந்த மருத்துவ சிகிச்சை முறைகள் கதைகளத்தின் ஊடே வந்து செல்கிறது
இதழ் 10
“கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை” –– ஒரு எழுத்தாளரின் மன நிலையை பிரதிபலிக்கும் கதை. எழுத்தாளரின் படைப்புகள் எல்லா உயிர் பெற்று விட்டால் எப்படி இருக்கும்? எழுத்தாளர் கடவுளாகிவிடுவார்
ஒரு படைப்பை வாசிக்கும் போது நம்மை நாம் மறக்க வேண்டும். இந்த சிறுகதையில் ” நல்ல வேளை அந்த அம்மாள் அவருடைய கதையை வாசிப்பதில்லை’ என்ற வரிகள் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தது. எழுத்து வாசிப்பு என்ன செய்யும் என்பதை உணர்ந்தேன். இதைவிட மருந்து ஒன்று வேண்டுமா? ஒரு வாசகிக்கு.
எழுத்தாளரின் மன உளைச்சல், இல்லை மனதை பிரதிபலிக்கும் கதை. எந்த ஒரு எழுத்தாளர் வாசித்தாலும் அவர் இந்த கதையின் நாயகனாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. எழுத்தாளரின் குணங்கள் கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கும் என்பதை ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் ஊடாக நமக்கு தெரிவிக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்தில் சிரிக்க வைத்த வரிகள் போக போக இந்த கதையும் பெண்ணுடலை ஆண் எப்படி ஆளுமை கொள்கிறான் என்பதை பற்றி பேசுவது சற்றும் எதிர்பாராத வண்ணம் இருந்தது. திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் உடலை அன்றே அவள் விட்டு கொடுக்க வேண்டிய நிலை… 99 சதவீதம் பெண்கள் நிலை இது தான்.
ஆண் காமம் பெண் காமம். ஆணின் காம உணர்வுக்கும் இச்சைக்கும் பலி தான் பெண். எழுத்தாளர், அவரின் நண்பர், எழுத்தாளர் உருவாக்கிய கண்ணன் கதாபாத்திரம். அனைவரும் ஆண் என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் ஆண் ஆண் தான் என்பதை எடுத்துக் காட்டும் சிறுகதை
மொத்ததில் அனைத்து சிறுகதைகளிலும் தன்னிலை முன்னிலை படர்க்கை என அனைத்து தன்மை களிலும் இருந்து படைப்பு பேசுகிறது. வாசிக்க வேண்டிய படைப்பு.
ஆசிரியர் உதயசங்கர்:
ஆதனின் பொம்மை சிறார் புத்தகத்திற்கு – பால சாகித்திய புரசுக்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழும் போது அவருக்கு கிடைத்தற்கு இந்த விருதுக்கு இயற்கைக்கு நன்றி
நூலின் விவரங்கள்:
புத்தகம்: மீனாளின் நீலநிறப்பூ (Meenalin Neelanirapoo)
தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
ஆசிரியர்: உதயசங்கர்
பதிப்பகம்: நூல்வனம்
பக்கங்கள்: 102
விலை: Rs. 80/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
No comments:
Post a Comment