Sunday, 20 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

உதயசங்கர்DSC01492

நான் ஏன் எழுதுகிறேன்? இந்தக் கேள்வியை முதல்முதலாக 1980 ல் ஒரு சில கவிதைகள் மட்டுமே எழுதியிருந்த எங்களிடம் அண்ணாச்சி கவிஞர்  விக்ரமாதித்தியன் கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஏதோ பெரிய புதிர் போலவும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லையென்றால் இலக்கிய வேதாளம் ஓடிவிடும் போலவும் அண்ணாச்சி ஒரு நீண்ட இடைவெளி கொடுத்து எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அப்பவே இது என்னடா பெரிய தொரட்டா போச்சி என்று தோன்றியது. என்னுடன் இருந்த நாறும்பூநாதன் ஏதோ சொன்னான். என்ன சொன்னான் என்று இப்போது நினைவிலில்லை. அவனுக்குப் பின்னால் பம்மிக் கொண்டிருந்த நானும் அவன் சொன்னதையேத் திரும்பச் சொன்னேன். அண்ணாச்சியின் முகத்தில் நிராசை தெரிந்தது. அப்போதே முடிவு பண்ணியிருக்கணும் இவனுங்க ஒரு பயலும் வேதாளத்துகிட்ட மாட்ட மாட்டாங்கன்னு. ஆனால் எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொண்டது. புதுசா யாராச்சும் எழுத வந்தாங்கன்னா அவங்க கிட்ட முதல்ல இந்தக் கேள்வியைக் கேட்டு அவங்க பயந்து முகம் கோணுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று தெரிந்து விட்டது.

ரெம்ப நாளைக்கு எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவதைப் போல இந்தக் கேள்வியைப் பார்த்தும் பயந்து கொண்டிருந்தேன். யாராவது பெரிய எழுத்தாளர்களைப் பார்க்கப் போனால் இந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களோ என்று பயந்து கொண்டேயிருப்பேன். இதற்கான ரெடிமேடான பதில்களையும் யோசித்து உருவேற்றிக் கொண்டிருந்தேன்.

சமூகத்துக்காக எழுதுகிறேன்.

சமூகமாற்றத்துக்காக எழுதுகிறேன்.

எனக்காக எழுதுகிறேன்.

நான் தெரிந்து கொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக எழுதுகிறேன்

எழுதாமலிருக்க முடியாது அதனால் எழுதுகிறேன்

இப்படி…இப்படி.. இப்படி…

இவை எல்லாவற்றிலும் திருப்தியில்லை. இவற்றில் ஏதோ ஒரு பகட்டு இருப்பதாகத் தோன்றியது. ஒரு பொய்மையின் மர்மப்புன்னகை நெளிகிறது. உண்மையாக இல்லையென்று நினைத்தேன். இத்தனை வருடங்கள் கழிந்த பிறகு தான் எனக்குச் சில விஷயங்கள் புரிந்தது.

நான் ஏன் எழுதுகிறேன் என்றால் நான் பயந்தாங்குளியாக இருப்பதானால். சிறு பிராயத்திலிருந்தே நான் பயந்தவனாக இருக்கிறேன். அம்மாவைப் பார்த்து பயந்திருக்கிறேன். அப்பாவைப் பார்த்து பயந்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். என்னுடைய சின்ன உருவத்துக்கு முன்னால் ஆஜானுபாகுவாக கையில் பிரம்புடன் நிற்கிற வாத்தியார்களைப் பார்த்து பயந்திருக்கிறேன். வெளியே விளையாடப் போகும் போது என்னைக் கேலி செய்கிற நண்பர்களைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். கடைக்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்திருக்கிறேன். என்னுடைய தவறினாலோ, என் அம்மாவின் தவறினாலோ தவறான பொருள் வாங்கி வந்ததை மாற்றப் பயந்திருக்கிறேன். புதிய மனிதர்களிடம் பேசப் பயந்திருக்கிறேன். புதிய இடங்களுக்குப் போகப் பயந்திருக்கிறேன். எனவே எனக்குள்ளே ஒரு தனி உலகத்தை சிருஷ்டிக்கத் தொடங்கினேன். அந்த உலகத்தில் என்னை விட வயது குறைந்த பெண்பிள்ளைகளை மட்டும் சுதந்திரமாக சேர்த்துக் கொண்டேன். அவர்களோடு விளையாடுவதில், அவர்களோடு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் பெருமகிழ்ச்சி கொண்டேன். நான் உருவாக்கிய கதைகளை அவர்கள் ஆர்வத்துடன் கேட்டார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய அபூர்வ உணர்ச்சிகளில் நான் திருப்தியுடன் மூழ்கித் திரும்பத் திரும்ப கதைகளை உருவாக்கினேன்.. ஒரு வேளை இந்த பயத்திலிருந்து என் எழுத்து தோன்றியிருக்கலாம்.

நான் ஏன் எழுதுகிறேன் என்று வேறுவகையில் யோசித்தால் என்னுடைய தாழ்வுணர்ச்சியினால் என்றும் சொல்லலாம். சரியான பயந்தாங்குளியாக இருப்பவன் வேறு எப்படி இருக்க முடியும்? என்று தோன்றுகிறதல்லவா. உண்மை தான். வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பேன். தெரிந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தயக்கத்தினால் வாத்தியாரிடம் அடி வாங்குவேன். வாய் வரை வந்த பதில் என்னைக் கைவிட்டு மீண்டும் பயத்தின் காரிருளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். பதில் தெரிந்தும் சொல்ல முடியாத தாழ்வுணர்ச்சி என்னைக் கௌவ நான் விதியின் கையில் ஒப்புக் கொடுத்து விட்டு வருவதை ஏற்றுக் கொள்வேன். இதனால் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் ஆசை அறையுலுற்று ஏதாவது போட்டியில் கலந்து கொண்டு விட்டால் அவ்வளவு தான். மீண்டும் என்னை இந்தப் பயமும், தாழ்வுணர்ச்சியும் தங்களுடைய பதுங்குக்குழிக்குள் அமுக்கி விடும். வழக்கம் போல அவமானத்தோடு திரும்புவேன். எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வத்தோடு இறங்கிக் கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். எல்லோர் கவனமும் என் மீது விழ வேண்டும் என்று ஆசைஆசையாக இருக்கும். ஹாக்கி, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், செஸ், என்று விளையாட்டுகளை விளையாடிப் பார்த்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் தெருவில் வீட்டுவீட்டுக்குத் துட்டுப் பிரித்து நாடகம் போட்டிருக்கிறேன். புகுமுகவகுப்பில் ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்துப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் எல்லாஇடங்களிலும் எனக்கு முன்னால் என்னுடைய பயமும், தாழ்வுணர்ச்சியும் போய் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும். சபைகளில் கவர்ச்சியாகப் பேசத் தெரியாது. மிகுந்த தயாரிப்போடு போயிருந்தாலும் வசனமும், காட்சியும் மறந்த நாடக நடிகனைப் போல உளறிக்கொட்டி விட்டு வருவேன். மற்றவர் உரிமைக்காக உரத்துப் பேசுவேன். ஆனால் என்னுடைய நியாயமான உரிமையைப் பேச கூச்சப்படுவேன். யாராவது சண்டை போட்டால் பயம் வந்து விடும். யாராவது சத்தமாகப் பேசினால் அவர்கள் சொல்கிறபடி கேட்டுக் கொள்வேன். இத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டிருந்தும் எனக்குரிய நியாயமான இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. ஆனால் அதற்காக யாரிடமும் பொதுவெளியில் குறைப்பட்டுக் கொண்டதில்லை. ஏனெனில் இந்த உலகம் இலக்கிய உலகத்தையும் சேர்த்துத் தான் என்னைப் போன்ற பலஹீனர்களுக்கானதில்லை என்றும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன் என்று மற்றுமொரு வகையில் யோசித்தால், பயமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவர்கள் எளிதில் மன அழுத்தம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். என்னைச் சுற்றி இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அத்தனை துயரங்களும் என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகின்றது. ஒரு சித்ரவதையோ, வன்முறையோ, ஒவ்வொரு முறையும் என் மீது நிகழ்வதாகவே உணர்கிறேன். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களையும் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்களுடைய மனது மானிட மனதெனவே அதில் தோன்றும் வக்கிரஎண்ணங்களோ, கொடூரக் குணங்களோ, கொலைபாதகங்களோ, என் மனதில் தோன்றுவதாகவே நினைக்கிறேன். சித்ரவதை செய்பவனும், சித்ரவதைக்கு ஆளாகின்றவனும் நானே என்று தோன்றுகிறது. எனவெ புற உலகம் என்னை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. அதிலிருந்து மீளவும் அதைப் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கிறேன். இதனால் எல்லாம் நான் ரெம்பவும் நல்லவன் என்று கற்பனை செய்து விட வேண்டாம். நான் ரெம்ப பயந்தவனாகவும், தாழ்வுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பதினால் வேண்டுமானால் நல்லவனாக இருக்கிறேன் என்பது என் கணிப்பு. நான் என்ன யோசிக்கிறேன் என்பதை விட மற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று யோசிப்பதிலேயே என் பெரும்பகுதி வாழ்க்கையை கழித்திருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன் என்றால் மேலே எழுதப் பட்ட பயம், தாழ்வுணர்ச்சி, மன அழுத்தம், இவைகளைச் சமாளிப்பதற்கு, அல்லது இவற்றிலிருந்து மீள்வதற்கு, அல்லது தப்பிப்பதற்கு என்று சொல்லலாம். ஏனெனில் எழுத்து என் ரகசிய உலகமாக இருக்கிறது. அதில் என்னால் எந்த பயமோ, தாழ்வுணர்ச்சியோ, மன அழுத்தமோ இல்லாமல் கம்பீரமாக, சுதந்திரமாகத் இருக்கமுடிகிறது. நான்  ‘ இருக்கிறேன் ‘ என்பதை எழுதும் போது உணர்கிறேன். அதற்காகவே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் ரகசிய உலகின் உயிருக்குள்ளே எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், ஜனநாயக உணர்வுடனும், சமத்துவமாகவும், அறவுணர்ச்சியுடனும் வாழுகின்ற ஒரு உலகம் உருவாகும் கனவை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த உலகில் தான் என்னைப் போன்ற பயமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டவர்கள் எழுதாமலிருக்கவும் அதன் மூலம் வாசகர்களைத் தொந்திரவு செய்யாமலிருக்கவும் வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன்.

9 comments:

 1. என் ரகசிய உலகின் உயிருக்குள்ளே எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், ஜனநாயக உணர்வுடனும், சமத்துவமாகவும், அறவுணர்ச்சியுடனும் வாழுகின்ற ஒரு உலகம் உருவாகும் கனவை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த உலகில் தான் என்னைப் போன்ற பயமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டவர்கள் எழுதாமலிருக்கவும் அதன் மூலம் வாசகர்களைத் தொந்திரவு செய்யாமலிருக்கவும் வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன் //

  .இது உங்கள் கருத்தாகக் கொள்வதைவிட
  எழுதுகிறவர்களின் அனைவரின் கருத்தாகவும்
  நிச்சயமாகக் கொள்ளலாம்
  ஏனெனில் பலகீனமானவர்களுக்கு
  எதிரிலிருக்கும் துரும்பை அசைப்பதைவிட
  கனவில் கற்பனையில் மலையை அசைப்பது
  எளிதாகத்தானே இருக்கிறது
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நேற்றைய ’நான் ஏன் எழுதுகிறேன்?’ - தொடர்ச்சியோ என நினைத்து வாசிக்கத்
  துவங்கினேன். ஆனால், இது வேறு என்பது படிக்கப் படிக்கப் புரிந்தது. எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. மன அழுத்தத்தின் காரணமாக எழுதுவதாக நண்பர்கள் பலரும் சொல்லக் கேட்டதுண்டு. பயத்தின் விளைச்சல் எழுத்து என்பது புதுமையான சிந்தனை. நன்றாகவும் இருக்கிறது.

  //நான் ஏன் எழுதுகிறேன் என்றால் மேலே எழுதப் பட்ட பயம், தாழ்வுணர்ச்சி, மன அழுத்தம், இவைகளைச் சமாளிப்பதற்கு, அல்லது இவற்றிலிருந்து மீள்வதற்கு, அல்லது தப்பிப்பதற்கு என்று சொல்லலாம். ஏனெனில் எழுத்து என் ரகசிய உலகமாக இருக்கிறது. அதில் என்னால் எந்த பயமோ, தாழ்வுணர்ச்சியோ, மன அழுத்தமோ இல்லாமல் கம்பீரமாக, சுதந்திரமாகத் இருக்கமுடிகிறது. நான் ‘ இருக்கிறேன் ‘ என்பதை எழுதும் போது உணர்கிறேன். அதற்காகவே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.//

  மேற்சொன்ன காரணங்கள் நம்ப முடியாமலும் இருக்கிறது. சில நேரங்களில் எனக்குப் பொறாமையாகக் கூட இருக்கும். பயத்தினால் எழுதத் துவங்கியதிலிருந்து இன்று வரை ஏராளமாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படியோ ஒரு நல்ல பதிவை அளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழர்.

  ReplyDelete
 3. ஏதோ நான் எனக்கே பேசிக் கொள்வது போலிருந்தது - நல்ல பதிவு

  ReplyDelete
 4. பயந்தாங்கொள்ளியாக இருப்பவர்கள் எல்லோருமே எழுத வரவில்லையே சாமி?

  ReplyDelete
 5. ஒரு 90 சதமானம் நீங்கள் சொன்ன உணர்வுதான் எனக்கும். நீங்கள் எழுதித்தீர்க்கிறீர்கள் ஒரு சுதந்திர வேட்கையை உருவாக்கிக்கொண்டீர்கள். நான் அப்படியாக உருவாக எத்தனிக்கிறேன்.

  ReplyDelete