Saturday 12 May 2012

வெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்

dostovesky

கரிசல் நகரமான கோவில்பட்டியில் மேமாத வெயில் பொழிந்து நகரம் தைப்பாறிக்கொண்டிருந்த இரவு. வேர்வையின் கசகசப்பும் புழுக்கமும் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. நானும் ரெங்கராஜுவும் ஆளுக்கொரு சிகரெட்டைப்பிடித்தபடி காந்திமைதானத்தில் உட்கார்ந்திருந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திடீரென்று மாயம் போல காற்று குளிர்ந்தது. சில நிமிடங்களிலேயே பனிபொழிய ஆரம்பித்து விட்டது. அப்போது தான் கவனித்தேன். இரவின்மீது வெண்ணிறத்தைப் போர்த்திய தாஸ்தயேவ்ஸ்கி எங்களருகில் உட்கார்ந்திருந்தார். நான் ரெங்கராஜிடம் கிசுகிசுத்தேன். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் தாஸ்தயேவ்ஸ்கி என்ற முணுமுணுத்தேன். ரெங்கராஜுவும் திரும்பிப் பார்த்தார். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி எங்களைப் பார்க்கவில்லை. இருளை ஊடுருவி துளைத்துச் சென்று கொண்டிருந்தது அவரது பார்வை. ஒரே நேரத்தில் ஒரு குழந்தையின் கண்களைப் போல களங்கமற்றும் ஒரு பைத்தியக்காரனின் கண்களைப் போல உன்மத்தம் ஏறியும் ஒரு குற்றவாளியின் கண்களைப் போல வன்மத்துடனும் ஒரு ஞானியின் கண்களைப் போல ஒளியுடனும் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவரது விழிகள்.

என்னால் ரொம்பநேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை. மெல்லச் செருமினேன். அவருடைய கவனம் கலையவில்லை. குளிர்ந்த இரவின் கதகதப்பில் உணர்ச்சிமிக்க அவரது உதடுகள் துடித்தன. நாஸ்தென்கா. எனக்கு அந்தப் பெயரைக்கேட்டதுமே ஒரு விரல் சொடுக்கில் கோவில்பட்டி நகரமே பீட்டர்ஸ்‡ பர்க் நகரின் சாயல் கொண்டு விட்டது. இதோ நானும் ரெங்கராஜுவும் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறோம். எங்கள் மீது இரவின் அமைதி இனிமையாய் இறங்கிக் கொண்டிந்தது. நடுநிசி நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் தன் கனவுகளைக் கண்டுகொண்டிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு அடுத்த பெஞ்சில் எனதருமை நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கனவுலகவாசியின் நாடகப்பாங்கான, உணர்ச்சிக் சுழலில் திணறிய குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது. தன் வாழ்வில் கனவுகளைத் தின்று, கனவுகளைச் சுவாசித்து, கனவுகளால் தன்னைச் சுற்றிப் பின்னிய கூட்டிற்குள் அன்பின் ஒரு துளிச்சுவைக்காக ஏங்கி பீட்டர்ஸ்பர்க்கின் இரவுகளில் அலைந்து திரியும் கனவுலகவாசியும், கண்தெரியாத பாட்டியின் கண்டிப்பில், ஊக்கினால் பாட்டியின் உடையோடு தன் உடையையும் சேர்ந்து மாட்டி ஒரு கைதியைப் போல வாழ்ந்து வருகிற, காதலுக்காக, ஆதரவான ஒரு வார்த்தைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்க வாசிக்க உன்னதமான அன்பின் பேரொளியும் ஏக்கமும் துயரமும் எங்கள் மீது கவிந்து பெருகிறது. உலக இலக்கியத்தில் இவ்வளவு உணர்ச்சிபூர்வமான ஒரு காதல் கதையைப் படிக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.

ரூஷ்யாவின் மகாகலைஞன் தாஸ்தயேவ்ஸ்கியின் கலைமேதமை எங்களை வியப்பிலாழ்த்தியது. அன்று இரவு முழுவதும் அருள் வந்தவர்களைப் போல நகரத்து வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். கதையின் பல பகுதிகளை மனப்பாடமாக ஒப்பிக்க முயற்சி செய்ததும் நினைவிலிருக்கிறது. இருபதுகளின் நடுவில் பார்க்கிற எல்லாவற்றின் மீதும் காதல் ததும்பிக்கவியும் பருவத்தில் நாங்கள் இருந்தோம். எங்களுடைய மனக்கிளர்ச்சியை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டே வந்தோம். தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி, அவருடைய கலை ஆளுமையைப் பற்றி அவருடைய நாவல்களைப் பற்றி என்னவெல்லாமோ பேசினோம்.

1821ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்த தாஸ்தயேவ்ஸ்கி 1849ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்தவர். வாசிக்கிற யாரையும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்குள் ஆழ்த்திவிடும் எழுத்து தான் தாஸ்தயேவ்ஸ்கியுடையது. அன்றாட நடைமுறை வாழ்வின் புறவயமான சித்தரிப்பிற்குப் பின்னுள்ள ஒரு யதார்த்தத்தைத்தான் தாஸ்தயேவ்ஸ்கி தனது படைப்புகளின் வழியாக உலகிற்குக் காட்டினார். வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று மட்டுமல்ல அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்த விரும்பினார். இவருடைய பெரும்பாலான படைப்புகளில் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள சிறிய பணியாளர்களும் வேலையற்றவர்களும் குற்றவாளிகளும், மனநிலை பிறழ்ந்தவர்களுமே முக்கியக் கதாபாத்திரங்கள். இதனாலேயே தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் சாதாரண கதாபாத்திரங்கள் கூட ஒரு அசாதாரணத்துவத்தை பெறுகின்றனர்.

தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் மற்றெந்த ரஷ்ய இலக்கியவாதிகளை விடவும், நகர்ப்புற நவீன மனிதனின் பிரச்சனைகளை சிக்கலான வாழ்வின் பின்னங்களை அதிகமாக எழுதியவர். மனித மனதின் ஆன்மீக நெருக்கடிகளின் இருட்குகையினுள் ஒளி பாய்ச்சிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்கி. மனதின் அடுக்குகளை விரிக்க விரிக்க அது ஒரு மாயாஜாலம் போல ஒளியும் இருளுமாக காட்சி தருகிறதே. அந்த ஒளியையும் இருளையும் அப்படியே காட்சிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கி. யாருக்காக ஒருவன் சாகவும் தயாராக இருக்கிறானோ அவனையே அவன் கொல்வதும் நேசிப்பவர்களை வெறுக்கவும், வெறுப்பவர்களை நேசிக்கவும், மர்மமும் விந்தையுமிக்க வாழ்வின் கணநேரத் தூண்டுதலினால் தான் சற்றும் நினைத்திராத காரியங்களைச் செய்ய நேர்வதும் அல்லது திட்டமிட்ட காரியங்களை கைவிட நேர்வதுமான மனதின் விசித்திரங்களை, ஒரே நேரத்தில் பேரன்பும் குரோதமும், பெருங்கருணையும் குரூரமும், பாவங்கள் செய்யும் தூண்டுதல்களும், பாவமன்னிப்பைக் கோரும் உருகுதல்களும் என்று புதிராய் விளங்கும் மனதின் இருண்ட பக்கங்களை ஆராய்ந்தவர் தாஸ்தயேவ்ஸ்கி. மனிதன் என்று விடுகதைக்கு விடைதேடி அலைந்தவர் தாஸ்தயேவ்ஸ்சி.

உளவியல் என்ற அறிவியல் துறை உருவாகத் தொடங்கியது 1860 - 70 காலகட்டத்தில் தான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற படைப்புகளான இரட்டையர்கள், பாவப்பட்டவர்கள், குற்றமும் தண்டனையும், முட்டாள், போன்றவை இதற்கு முன்பே ஏற்கனவே வெளியாகிவிட்டன. உளவியலின் தந்தை என்று கூறப்படும் பிராய்டின் உளவியல் கருதுகோள்கள் பலவற்றுக்கும் ஆதாரமாக தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இருந்தன. அதே போல நனவோடை உத்தி என்று உணர்ச்சிப் பிரவாகமான உத்தியை அற்புதமாக தன்படைப்புகளில் முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கிதான். அவர் மறைந்த மூன்றாண்டுகளுக்கு பின்னரே நனவோடை உத்திபற்றி மேற்கத்திய இலக்கிய உலகம் பேச ஆரம்பித்தது.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் சிக்கித் துயருறும் மனசாட்சியை உடையவராக இருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி இந்த மனசாட்சியின் தர்மசங்கடமே அவரது கதாபாத்திரங்களின் எண்ணற்ற போராட்டங்களுக்கும், ஆன்மீக துயருக்குமான முக்கியமான காரணம், சுதந்திரம் அன்பு இவைதான் மனித வாழ்க்கையின் முதுகெலும்பு என்று உறுதியாக நம்பினார் தாஸ்தயேவ்ஸ்கி. அன்பின் மேல் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையே முழுமையான மனிதத் தன்மையுடையதாக இருக்கும் என்று நினைத்தார். இருண்ட வாழ்க்கையின் ஷேக்ஸ்பியர் என்ற புகழப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி ருஷ்யா உலக இலக்கியத்திற்கு வழங்கிய கொடை.

இப்போதும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெண்ணிற இரவின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது. களங்கமற்ற காதலின் நெருக்கடி, தவிப்பு, அர்ப்பணிப்பு, மனதில் எவ்வளவு ஒளியைப் பாய்ச்சுகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும், காதலும் பொங்குகிறது. வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் தங்கள் காதலை அறிவித்து குழம்பி மயங்கி. இரவெல்லாம் பீட்டர்ஸ்பர்க்கின் புறவழிச்சாலைகளில் ஆற்றங்கரையில் சுற்றித் திரிகையில் நம் மனம் குதூகலிக்கிறதே. நாஸ்தென்கா ! என தருமை நாஸ்தென்கா என்று அவளுடைய கரங்களைப்பற்றிக் கொள்ள ஆவல் பொங்குகிறதே. நானும் ரெங்கராஜுவும் பொங்கித் திரை எறியும் காதல் உணர்வுகளுடனேயே அன்று பிரிந்து சொன்றோம்.

என் வீடு இருந்த அந்தக் குறுகலான சந்து மிகப்பெரிய வீதியாக விரிந்தது. வெண்ணிற நிலவொளியின் கீழே யாரையோ எதிர்பார்த்தவண்ணம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தேன். இருளின் கடைசியிலிருந்து சுடரும் ஒளியைப் போல என் நாஸ்தென்கா வருவாளோ ? ஏதோ அரவம் கேட்டது. நான் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன். அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது நிலவு. நான் நின்று கொண்டிருக்கிறேன் இப்போதும், என் நாஸ்தென்காவுக்காக.

No comments:

Post a Comment