Wednesday 16 May 2012

குழந்தையின் ஆளுமை

father  

“மிகவும் நெருங்கிப் பழகி வருவதன் காரணமாக, குழந்தையிடம் மறைந்து கிடக்கும் பெருமை வெளிக்குத் தெரிவதில்லை. குழந்தை சிரிக்கிறது. அழுகிறது ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் சிரிப்புக்கும், அழுகைக்கும் மறைவில் எத்தனையோ குணபாவங்கள் இருக்கின்றன..”

- மரியா மாண்டிசோரி

சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்த கள்ளமும் கபடமும் கொண்டே நாம் இந்த உலகத்திடம் வேற்றுமை பாராட்டுகிறோம். ஆனால் குழந்தை இந்த உலகத்தில் பிறந்த கணம் முதல் எல்லோரின் மீதும், எல்லாவற்றின் மீதும் வேற்றுமை பாராத அன்பைச் செலுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புணர்வோடு எறும்பிடமும் அன்பு செலுத்துகிறது. மரப்பாச்சி பொம்மையிடமும் தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குத் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ, தான் பிறந்த சாதிபற்றியோ, மதம் பற்றியோ அதன் தன்மைகள் குறித்தோ, விளைவுகள் குறித்தோ தெரியாது. தான் முட்டாள் என்றோ அறிவாளி என்றோ தெரியாது. தன் வீடு சிறியது என்றோ பெரியது என்றோ தெரியாது. தன்னுடைய பெற்றோர்கள், உற்றவர்கள் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ தெரியாது. இந்த உலகம் எவ்வளவு கொடியது என்றோ எவ்வளவு அற்புதமானது என்றோ தெரியாது. ஆனால் குழந்தைக்கு ஒன்று மட்டும் தெரியும். தான் காணும் உணரும் எல்லாவற்றின் மீதும் தீவிரமான அன்பைச் செலுத்தத் தெரியும்.

இப்படி பரிசுத்தமான, களங்கமற்ற குழந்தையிடம் தான் பெரியவர்கள் எல்லாவிதமான கபடங்களைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். தான் பிறந்த மதம், சாதி பற்றிச் சொல்கிறார்கள். அது எவ்வளவு உயர்வானது அல்லது எவ்வளவு இழிவானது என்று சொல்கிறார்கள். குழந்தையை சுற்றியுள்ள உலகத்தை குழந்தைக்கு எதிர்மறையாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். எல்லாப்பொருட்களையும் எல்லா மனிதர்களையும், வெளிச் சூழலையே விரோதியாகக் காட்டுகிறார்கள். குழந்தை முதன்முதலாக பயப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் அதற்குச் சந்தேகம் வருகிறது. யாரையும் நம்பமுடியாமல் இந்த உலகத்தையே அவநம்பிக்கையோடு பார்க்கிறது. களங்கமில்லாத அதன் அன்பின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிச் சிதைகிறது. பயமும், பாதுகாப்பின்மையும் பொங்க இந்த உலகத்தையே வெறுக்கத் தொடங்குகிறது. சமூகம் ஒருபோதும் இதை உணர்வதில்லை. பெரியவர்களும் இதை உணர்வதில்லை. அவர்கள் குழந்தைக்கு அறிவூட்டிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஊட்டப்பட்ட இந்த வெறுப்பு உள்ளே கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களிடம் ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தைக்கு அறிவூட்டுவதல்ல. குழந்தை பிறந்தது முதலே கற்றுக் கொண்டேயிருக்கிறது. தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அழுகை, சிரிப்பு என்ற இரண்டு உணர்ச்சி வெளிப்பாடுகளிலிருந்து இன்னும் நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்கிறது. பயம், கோபம், ஏக்கம், நிராதரவு, திருப்தி, ஆவல், உற்சாகம் என்று பல விதமான உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே கற்றுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், குழந்தையின் முன்னால் செய்யத் தகாதனவற்றை செய்யாமலிருப்பதும் எல்லாவற்றுக்கும் மேல் குழந்தையின் ஆளுமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வேண்டும்.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை உள்ளே மறைந்திருக்கிறது. அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கிறது.

விதைக்குள் அடங்கியிருக்கும் விருட்சமாய் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆளுமையை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாக்குழந்தைகளிடமும் உடனே தெரிந்து விடும் அளவில் இல்லாமலிருக்கலாம். சில குழந்தைகளின் ஆளுமையைக் கண்டு பிடிக்க சிறிது சிரமம் ஏற்படலாம். சிறிது காலம் ஆகலாம். ஆனால் எல்லாக்குழந்தைகளிடமும் ஒரு ஆளுமை ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு பிடித்து வெளிக்கொணர வேண்டும். அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். அதற்குத் தேவையான ஒளியையும், காற்றையும், நீரையும் தரவேண்டியது நம் கடமை. வளரும் போது ஒவ்வொரு ஆளுமையும் இந்த பூமிக்கு தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும், பெற்றோர்களும் சமூகமும் யோசிக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது நம் சமூகத்தில்? யாருமே குழந்தையின் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வது இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. அப்படியே குழந்தைகளின் ஆளுமைத்திறன் துளிர்த்து வெளிப்பட்டாலும் அதைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எறிந்து விடுகிறோம். ஏனென்றால் செம்மறியாட்டு கூட்டத்தை விட மோசமான மந்தை புத்தி கொண்டவர்களாக பெரியவர்கள் இருப்பது தான். வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். அப்போதும் என்ன இப்படியா ஒரு சமூகம் முழுக்க ஒரே விதமான ஆசையைக் கொண்டிருக்கும்? பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையைப் போல தாங்கள் இஞ்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும். அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ, மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் நம் ஆசையை அப்படிக்கூடச் சொல்ல முடியாது, மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணக்கிறோமே. இதை விட வேறு என்ன அவலம் வேண்டும்?

உலகம் பூரா வெறுமனே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபாரப் பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? கட்டடக்கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தேவையில்லையா? இயற்கையியலாளர்கள் தேவையில்லையா? வரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா?

சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம். அப்புறம் எப்படி இந்த மந்தைபுத்தி உருவாகிறது?

குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும். அது ஓவியத்தில் இருக்கலாம். பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம். கணிதத்திலாக இருக்கலாம். கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல், அடக்கி ஒடுக்காமல், அந்தந்தத் துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும். குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும் எல்லாப் பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி அடக்குதலும் இன்றி வெளிப்படும். எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும் புதிய சமுதாயம் மலரும். அதிக மதிப்பெண் என்ற தந்திரவதைக்கூடத்துக்குள் குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள். ஒரே வகை மாதிரியான ஜெராக்ஸ்   சமூகத்தை உருவாக்காதீர்கள்....

No comments:

Post a Comment