Thursday 17 May 2012

அன்பின் பேராற்றில்………….

bava_chelladurai_thumb[6]karuna 

வேலை கிடைத்தும் நிம்மதியில்லை. கோவில்பட்டியின் ஞாபகங்கள் என்னைக் கொத்தித் தின்றன. கல்லூரி முடித்த நாளிலிருந்து வேலைக்கான ஆர்டர் வாங்கிய நாள்வரை கோவில்பட்டி நண்பர்களோடும், தமுஎச தோழர்களோடும், தான் வாழ்ந்து வந்தேன் என்று சொல்லலாம். வீடு உண்பதற்கும், உறங்குவதற்குமான தற்காலிக உறைவிடமாகவே இருந்தது. பல சமயங்களில் உண்பதும், உறங்குவதும் கூட நண்பர்களோடு வெளியே வெளியூரில் என்று ஆகி விட்டிருக்கிறது. அத்தனை நண்பர்களையும், தோழர்களையும் விட்டு விட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வெயிலில் எரிந்து கொண்டிருந்தேன்.அதுவும் நான் இது வரை கண்டிராத வட ஆற்காடு மாவட்டம். விசித்திரமான வட்டார மொழி. புதிய நிலப்பரப்பு. புதிய மனிதர்கள்.இவர்களுக்கு நடுவே திருவண்ணாமலை அருகில் திப்பக்காட்டுக்கு நடுவில் இருந்த வேளானந்தல் ரயில்வே ஸ்டேசனில் வேலை. அங்கே மனிதவாடையே இல்லை. மனிதர்கள் என்று ஸ்டேசனில் வேலை பார்த்த நாங்கள் மட்டும் தான் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு திரிந்தோம். மனிதர்களைத் தவிர வகைவகையான பாம்புகள், நட்டுவாக்காலி, ஜலகண்டச் சிலந்திகள், தேள்கள், இரவில் படையெடுக்கும் அத்தனை வகையான பூச்சியினங்கள், அவைகளின் விசித்திரமான சப்தங்கள், ஊளையிடும் நரிகள், பறவைகளின் விதம்விதமான குரரொலிகள் என்று எல்லாம் நிறைந்திருந்தது.

நான் அதிகபட்சம் எங்கள் ஓட்டுச்சாய்ப்பு வீட்டில் தேளைப் பார்த்திருக்கிறேன். அதைக் கூட நான் அடித்ததில்லை. அம்மாவோ, இல்லை அப்பாவோ,அடிப்பார்கள். ஏன் தம்பிகூட அடித்திருக்கிறான். நான் அருகிலேயே போக மாட்டேன். சின்ன வயதில் எனக்கிருந்த ஏராளமான பயங்களில் தேள் பயமும் ஒன்று. அது எங்கள் வீட்டுச் சுவரில் எங்கோ உயரத்தில் இருந்ததைப் பார்த்து போட்ட கூப்பாட்டில் தெருவே திரண்டு விட்டது. அப்பேர்க்கொண்ட தைரியசாலியான என்னை இப்பேர்க்கொண்ட ஸ்டேசனில் அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்தார்கள். எனக்கு அங்கே இருந்த மரம், செடி, கொடி, எதைப்பார்த்தாலும் பயமாகவிருந்தது. எல்லாமே பாம்புகளாகத் தெரிந்தது. அது வரை நான் படித்திருந்த இலக்கியம், அரசியல், தத்துவம், எல்லாம் என்னைக் கைவிட்டன. அங்கேயிருந்த ரயில்வே தொழிலாளர்கள், சகநிலைய அதிகாரிகள் பேசிய மொழியே புரியவில்லை. அவர்கள் ரயில்வே சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிகாரிகளைப்பற்றி, அன்றாடம் நடந்த ரயில்வேதுறை சார்ந்த நடவடிக்கைகள் பற்றி, தீரவே தீராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பொழுது போவதற்காக முறைபிறழ் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள்.

எனக்கு இவை இரண்டும் ரசிக்கவில்லை. அப்போது தான் நான் கதகதப்பாய் இருந்த உலகம் வேறு. வெளியே இருக்கிற உலகம் வேறு என்று மண்டையில் உறைத்தது. எப்படியாவது மீண்டும் அந்த கதகதப்பான உலகத்துக்குள் போய்விட ஆசைப்பட்டேன். அதற்காக என் வேலையை விடவும் தயாரானேன். தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்றது. யாரிடமும் வாயார பேச முடியவில்லை. மனதார பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கொண்டு போன புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் படித்தாயிற்று. தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டு சிசர் சிகரெட்டுகளாக ஊதித் தள்ளினேன். நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். தினமும் குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதித் தள்ளினேன். அது வரை சரியாகக் கூடப் பேசியிராத நண்பர்களுக்குக் கூடக் கடிதம் எழுதினேன். என்னைத் தனிமையின் கொடூரச் சித்திரவதையிலிருந்து யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தேன். மூச்சு முட்டும் இந்தத் தனிமைச் சுழலிலிருந்து கை கொடுத்துக் காப்பாற்ற யாரும் இல்லையா? தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் தலைக்கு மேலே கையைத் தூக்கி காப்பாற்றச் சொல்லும் உயிர்வாதையாய் அந்தக் கானகத்தின் நடுவிலிருந்து கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் யார் காதிலும் அது விழவில்லை. நான் நூறு கடிதம் போட்டால் பதிலுக்கு ஐந்து கடிதம் வந்தது. எல்லோரும் எரிச்சலும், சலிப்பும் அடைந்தார்கள். சில நண்பர்கள் கோணங்கி, பாரதி, சாரதி, முத்துச்சாமி, வேளானந்தல் ஸ்டேசனுக்கே வந்து ஆறுதல் சொன்னார்கள். ஒருநாள் திருவண்ணாமலையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தபோது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கூடம் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் தற்செயலாகக் கண்ணில் பட்டது. உள்ளே பெரிய மீசையுடன் தோழர் ஒருவர் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பற்றி விசாரித்தேன். அவர் தான் அதே தெருவில் இருந்த பல்லவன் ஆர்ட்ஸில் மாலை நேரம் சென்று பார்க்கச் சொன்னார்.

அன்று நேரமாகி விட்டதால் ரயிலுக்கு ஓடி விட்டேன். மறுநாள் மாலை படபடக்கும் நெஞ்சோடு பல்லவன் ஆர்ட்ஸை நெருங்கினேன். அங்கே பளபளக்கும் முகத்தோடு மெல்லியமீசையோடு படம் வரைந்து கொண்டிருந்த இளைஞரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கூடவே என்னை விட கருப்பாய் ரெண்டு இளைஞர்கள் இருந்தார்கள். நான் பேசி முடித்ததும் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியர் பல்லவன் சிரித்துக் கொண்டே எழுந்து, பின்னாலிருந்த இளைஞர்களிடம்,

“ யெப்பா உங்க ஆளு வந்துட்டாருப்பா..”

என்று சொன்னார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அந்த இளைஞர்கள் தங்களை என்னிடம் அறிமுகம் செய்த போது அவர்கள் இருவரும் தமிழ்க்கலை இலக்கிய உலகத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகப் போகிறார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள், எல்லாநாளும் கார்த்திகையாக வாழ்வைக் கொண்டாடுகிற, கலைஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற, தமிழின் மிகமுக்கியமான படைப்பாளியாக உருவாகியிருக்கிற பவா செல்லத்துரையும், மாற்றுத்திரைப்பட, குறும்பட, ஆவணப்பட,இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிற குறும்பட இயக்குநர், பண்பாட்டுப்போராளி, கருணாவும் தான்.

அன்றிலிருந்து நானும் அவர்களை விடவில்லை. அவர்களும் என்னை விடவில்லை. என் தனிமைத்துயர் நீங்க எனக்குக் கிடைத்த மாமருந்தாய் அவர்கள் இருந்தனர். எனவே அது வரை பேசாத பேச்செல்லாம் பேசினேன். எனக்குத் தெரிந்த அத்தனை விசயங்களையும் அவர்களிடம் கொட்டினேன். நவீன இலக்கியம் குறித்த முற்போக்கு இலக்கியம் குறித்த, அரசியல் குறித்த, தத்துவம் குறித்த, புரட்சி குறித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த, அத்தனை விசயங்களையும் சொல்லித் தீர்த்தேன். வேளானந்தல் ஸ்டேசனில் பணி முடிந்ததும் திருவண்ணாமலைக்கு ஆவலோடு ஓடி வந்து விடுவேன். அவர்களோடு அவர்கள் போகிற இடங்களுக்கெல்லாம் கூடவே அலைந்து திரிந்தேன். அங்கே பவாவின் வீட்டில் பெரும்பாலான சமயங்களில் சாப்பிட்டேன். பவாவின் அம்மாவைப் பார்க்கிற போதெல்லாம் ஒரு செவ்வியல் கதாபாத்திரத்தைச் சந்திக்கிற உணர்வு தோன்றும். அவர்களின் அன்பும் பரிவும், பவாவைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்கிற வார்த்தைகளும் ஓலைக்குடிசையும் அதன் சாணவாசமும் ஒரு வங்காள நாவலுக்குள் நானும் பங்கேற்கிற மாதிரியே உணர்வேன். பவாவின் அப்பா மத்திய அரசு ஊழியன், ஸ்டேசன் மாஸ்டர்,என்ற மரியாதையுடன் ஒரிரு வார்த்தைகள் என்னுடன் பேசி விட்டு அகன்று விடுவார். அந்தச் சிறு வயதிலேயே பவாவுக்கு ஊரிலுள்ள அத்தனை பேரைத் தெரிந்திருந்தது ஆச்சரியமாகவிருந்தது. எல்லோரிடமும் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுத் தான் வருவார் பவா. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பதும், செய்யவிருப்பதும் தெரியும். யாரையும் குறை சொல்லத் தெரியாத ஒரு பேராளுமையின் சாயலை அப்போதே நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு அது பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோவில்பட்டிக் குணம் எனக்கு இருந்தது. அதைச் சில சமயங்களில் சொல்லியுமிருக்கிறேன். பவா என்னுடைய வார்த்தைகளை ஒரு புன்னகையில் ஒதுக்கி விடுவார்.

பவாவின் எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் என்ற கவிதை நூல் அப்போது வெளியாகியிருந்தது. எனக்கு அது அவ்வளவு உவப்பாக இல்லை. ஆரம்பகால ரொமாண்டிக் தன்மையை அது தாண்டவில்லை என்று விமர்சனம் செய்த ஞாபகம் இருக்கிறது. பல சமயங்களில் பவாவும் கருணாவும் சைக்கிளில் வேளானந்தல் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார்கள். எனக்கு உற்சாகம் கரைபுரள பேசிக் கொண்டிருப்பேன். கருணா கேலியாக,

“ ரேடியோவை ஆன் பண்ணுங்க..”

என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். எல்லாத் துறைகளைப் பற்றிப் பேசுகிற ஒரு ஆளாக என்னை நானே கற்பிதம் செய்து கொண்ட காலம் அது. நிறைய நண்பர்கள், தோழர்கள், பவா, கருணா, மூலமாகக் கிடைத்தார்கள். பல்லவன், கவிஞர் வெண்மணி, உத்ரகுமார், பாஸ்கர், வெங்கடேசன், சந்துரு, பாலாஜி, சுகந்தன், போளூர்கோவிந்தன், ஃபீனிக்ஸ், என்று எத்தனை நண்பர்கள். திக்குத் தெரியாத காடாக இருந்த திருவண்ணாமலை இப்போது எனக்கு என் சொந்த ஊர் போல ஆயிற்று.

எல்லா நண்பர்கள் வீட்டிலும் ஒரு வேளையாவது சாப்பிட்டிருக்கிறேன். என் மீது அவர்கள் காட்டிய அன்புக்கு மாற்றாக என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை. பவாவும், கருணாவும், ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு முகங்கள் என்று நான் நினைத்திருந்தேன். உணர்ச்சிமயமான, கருணைபொங்கும், வாழ்வைக் கவித்துவமாய் பார்க்கும் பவாவும், கறாரான, நடைமுறைவாதியான, உண்மையை நேருக்குநேராய் வெடிப்புற பேசுகிற,கருணாவும் இணைந்து அப்போது திருவண்ணாமலையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் பல புதிய மாற்றங்களை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது. அதற்கு திருவண்ணாமலையும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகமெங்கும் ஒரு மாற்றுக் கலாச்சாரக் கலைவிழாவாகக் கொண்டாடப்படும் கலை இரவு திருவண்ணாமலை கொடுத்த தமிழகத்துக்குக் கொடை.அந்தக் கொடை வழங்கிய காலத்தில் நானும் அங்கேயிருந்தது என் பாக்கியம். எல்லா நண்பர்களின் அயராத உழைப்பு இருந்ததென்றாலும் குறிப்பாக பவா, கருணாவின் பங்களிப்பு மகத்தானது.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி யாவர் வீட்டிலும் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். என் சொந்த ஊரில் கூட அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை. நான் அந்த ஊரை விட்டு இனி வேறெங்கும் போகப்போவதில்லை என்று தான் நினைத்திருந்தேன். திருமணம் முடித்து வந்த பிறகு திருவண்ணாமலையில் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்கள் வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும், தமுஎச கூட்டங்களுக்கும் என் மனைவிமல்லிகாவை அழைத்துச் சென்றேன். புதிதாக வந்த ஊரில் புதுப் பொண்டாட்டிகிட்ட என் பவுசைக் காட்டவேண்டும் என்ற ஆசை தான் காரணம். பவாவின் அம்மாவின் உபசரிப்பில் மல்லிகா நெகிழ்ந்து போனாள். பவாவின் அம்மாவும் எங்களுக்கென்றே தனியாக சோறு சமைத்து பவாவிடம் கொடுத்து வேளானந்தலுக்குக் கொடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று முடிவு செய்த பொழுதில் எனக்கு விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள பூவனூருக்கு பதவி உயர்வு உத்தரவு வந்தது.

முதல் முதலாய் வேளானந்தல் வரும்போது இருந்த உதயசங்கர் இப்போது மாறி விட்டான். தன்னம்பிக்கை மிக்கவனாக, எதையும் எதிர்கொள்ளும் தைரியமிக்கவனாக, புதிய சூழ்நிலைகளை வரவேற்பவனாக, மாறி விட்டான். இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் திருவண்ணாமலை நண்பர்கள், தோழர்கள். குறிப்பாக பவாவும், கருணாவும். அவர்களை என் உதாரணபுருஷர்களாக நான் மனதில் வரித்துக் கொண்டேன். இன்று தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஸ்தலமாக எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக, 19, டி.எம். சாரோன் உருவாகியிருக்கிறது. சொந்த அண்ணன் தம்பி வீட்டிலேயே போய்த் தங்க முடியாத நிலைமையில் உறவுகள் சிடுக்காகிப் போயிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விருதாக்கோட்டிகள் என்று உறவுகள் ஏளனம் செய்யும் காலம். அவர்களைப் போற்றிக் கொண்டாடி போஷிப்பதற்கு மகத்தான அன்பு வேண்டும். அது பவாவிடம் பேராறாய் பிரவகித்து வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இன்று இருப்பது எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் எழுதிய பவா அல்ல. இன்று தமிழ்ச் சிறுகதையின் மிக முக்கியமான எழுத்தாளராகவும், தன்னுடைய எழுத்தின் வசீகரத்தால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிற நூல்களின் படைப்பளியாகவும் திகழ்கிறவர் பவா.

இன்று பவா என்கிற அந்த அன்புப் பேராற்றில் எல்லோரும் ஒரு கை அன்பள்ளிப் பருகி நெகிழ்ந்து போகிறார்கள். ஆனால் அந்தப் பேராறு சுனையூற்றாய் இருக்கும்போதே தரிசித்திருக்கிறேன்.பேராற்றில் பலமுறை முங்கிக் குளித்திருக்கிறேன். குளித்துக் கொண்டுமிருக்கிறேன். ஈரம் சொட்ட சொட்ட..இப்போதும்…இன்னமும்

2 comments:

  1. //திருவண்ணாமலை தோழர்கள் யாவரும் காட்டிய அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்//அவர்களுக்கான கைமாறாகவே இந்த எழுத்து தெரிகிறது.வேளானந்தல் ஸ்டேசனையும் திருவண்ணாமலையையும் தங்களது எழுத்து கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது,நன்றி, வணக்கம்.

    ReplyDelete