Tuesday 22 May 2012

ஓடிய புத்தகங்கள்

School_Books_Royalty_Free_Clipart_Picture_081220-013873-169042

ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் ஒரு நாள் பக்கத்திலிருந்த நகரத்திற்குப் போனார். அங்கே உள்ள பெரிய புத்தகக் கடைக்குள் நுழைந்தார். ஏராளமான புத்தகங்கள் அந்தக் கடையில் இருந்தன. வாத்தியாரைப் பார்த்த கடைக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்,

“ வாங்க ஐயா.. வாங்க புதிய புத்தகங்கள் நிறைய்ய வந்திருக்கு.. பாருங்க..”

என்று வாத்தியாரிடம் புத்தகக் கடைக்காரர் சொன்னார். அதற்கு வாத்தியார்,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. எனக்கு ஒரு அடி நீளம் முக்கால் அடி அகலத்தில பத்துப் புத்தகங்கள்..முக்கால் அடி நீளம் அரை அடி அகலத்தில பத்துப் புத்தகங்கள்..ம்..அப்புறம் அரை அடி நீளம் அரை அடி அகலத்தில இருபது புத்தகங்கள் வேணும்..கிடைக்குமா?”

என்று கேட்டார். உடனே கடைக்காரர்,

”என்ன புத்தகங்கள் வேண்டும்..ஐயா.. அரசியல், இலக்கியம், அறிவியல், தத்துவம், மருத்துவம், பொதுஅறிவு, சுயமுன்னேற்றம்,என்று ஏராளமான தலைப்புகளில் இருக்கிறது..என்ன புத்தகங்கள் வேண்டும் என்று சொன்னால் நான் அதை எடுத்துத் தருகிறேன்..”

என்றார். அதற்கு அந்த வாத்தியார்,

“ என்ன புத்தகங்களாக இருந்தாலும் பரவாயில்லை.. அளவு தான் முக்கியம். அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்..”

என்று சொன்னார். புத்தகக் கடைக்காரருக்கு எதுவும் புரியவில்லை.

” அதில்லை ஐயா.. புத்தகங்களை நீங்கள் பார்க்க வேண்டாமா?”

என்று மீண்டும் கேட்டார், புத்தகக் கடைக்காரர்.

“ சரி..உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.. புதிதாய் வீடு ஒண்ணு கட்டியிருக்கேன்..அதில் புத்தகங்களுக்கென்று ஒரு அலமாரியும் கட்டியிருக்கிறேன்..அதில் வைப்பதற்குத் தான் புத்தகங்கள் வேண்டும்..அதில வைக்கிறதுக்குத் தான் புத்தகங்கள் வேண்டும்..புத்தகங்கள் இருந்தால் பார்க்கிறவங்களுக்கு ஒரு மதிப்பா இருக்கும்ல! அதுக்குத்தான் அலமாரியோட அளவைச் சொன்னேன்.. எந்தப் புத்தகங்களா இருந்தாலும் சரி.. நாம என்ன படிக்கவா போறோம்..எல்லாம் ஒரு ஷோவுக்குத் தானே”

என்று விளக்கமாய் சொன்னார் வாத்தியார். புத்தகக்கடைக்காரர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகங்களைத் தேடத் தொடங்கினார்.

அவர் அளவு பார்த்து புத்தகங்களை எடுக்க புத்தகங்கள் அலறின. என்னை விட்டு விடுங்கள்..என்னை விட்டு விடுங்கள் என்று கதறி அழுதன. வியாபாரம் ஆயிற்றே என்ன செய்ய முடியும்? என்று கடைக்காரர் வாத்தியார் கேட்ட அளவுப் படியே புத்தகங்களை எடுத்துக் கட்டிக் கொடுத்தார்.

வாத்தியார் புது வீட்டில் புத்தகங்களைக் கொண்டு போய் அடுக்கினார். பின்னர் கண்ணாடிக் கதவுகளைச் சாத்திப் பூட்டும் போட்டு விட்டார். அவருக்கு இப்போது திருப்தியாக இருந்தது. இரண்டு நாள் கழித்து புதுமனை புகுவிழா வைத்திருந்தார்.

இரவில் புத்தகங்கள் தாங்கள் சிறைப் பட்டதை நினைத்து கண்ணீர் சிந்தின. அப்போது குழந்தைகள் புத்தகம்,

“ நான் சின்னஞ்சிறு குழந்தைகளை என் சிறகில் ஏற்றிக் கொண்டு இந்த உலகின் அற்புதங்களைக் காட்டலாம்..கதை கதையா சொல்லி குழந்தைகளை சந்தோசப் படுத்தலாம்..என்று நினைத்திருந்தேன்..”

என்று புலம்பியது. அறிவியல் புத்தகம் குறுக்கிட்டு

“ அறிவியலின் வளர்ச்சியை எல்லோரிடமும் சொல்லி சாதி மத மூடநம்பிக்கைகளிலிருந்து எல்லோரையும் விடுவித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.”

என்று படபடத்தது. உடனே ஆரவாரமாய் பேச ஆரம்பித்த அரசியல் புத்தகம்,

“ எல்லாவற்றிலும் இருக்கிற அரசியலைப் பற்றிச் சொல்லவேண்டும்..உண்மையான அரசியல் எது என்பதைப் பற்றியும் எது நமது அரசியல் என்பதைப் பற்றியும் சொல்லவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்..”

என்று வருத்தத்துடன் முடித்தது. அப்போது ஒரு கனத்தகுரல் கேட்டது,

“ செயலற்ற வாழ்வே மாயம்..விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எல்லாத் தத்துவங்களுக்கு நடுவே வாழ்க்கையை மாற்ற முடியும் நம் வாழ்க்கை நம் கையில் தான் என்று சொல்கிற தத்துவத்தைப் பத்திச் சொல்லவேண்டும்..என்று காத்திருந்தேன்..”

குரல் வந்த திசையில் ஒரு தத்துவப் புத்தகம். இப்படி எல்லாப் புத்தகங்களும் புலம்ப ஆரம்பித்தன். என்ன செய்யலாம்? என்று எல்லாப் புத்தகங்களும் சேர்ந்து ஆலோசித்தன. ஒரே முணுமுணுப்பு. கிசுகிசுப்பு.

புதுமனை புகுவிழா அன்னிக்கு காலையில் வாத்தியாரும் விருந்தினர்களும் வீட்டிற்குள் வந்து பார்த்தனர். புத்தக அலமாரியின் கண்ணாடிக் கதவுகள் உடைந்து நொறுங்கியிருந்தன.அலமாரி தட்டுகளில் ஒரு புத்தகத்தைக் கூட காணவில்லை.

எல்லாப் புத்தகங்களும் இரவோடு இரவாக அந்த வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டன.

modernshelves14

1 comment:

  1. அருமையான பதிவு.
    பெருமைக்கு புத்தகங்கள் வாங்கி அடுக்குபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
    நன்றி.

    ReplyDelete