Sunday 6 May 2012

அன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்

images

பெரியவர்களிடம் இற்றுத் தூர்ந்துபோன ஊற்றுக்கண்களான அன்பும், அர்ப்பணிப்பும் குழந்தைகளிடம் பொங்கிப் பிரவகிக்கின்றன. அப்படியென்றால் பெரியவர்களிடம் அன்பென்ற பொருளே இல்லையா? அர்ப்பணிப்பின் அழகே இல்லையா? இருக்கின்றன. எல்லாம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நடைமுறைத் தந்திரமாக வெளிப்படுகின்றன. பிரதிபலன் நோக்கி வெளிப்படுகின்றன. சுயநலம் சார்ந்து செயல்படுகின்றன. தன்னை முன்னிறுத்தத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி, பிரதிபலன் பார்க்காது, தன்னை முன்னிறுத்தும் அவசியமின்றி அன்பைக் குழந்தைகளே வெளிப்படுத்துகின்றன. அது எப்படி? குழந்தைகள் மீது பெற்றோர்கள் தானே பேரன்பு செலுத்தி பேணிப்பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்ற கேள்வி வருகிறதே. தாயை விட அன்பிற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல முடியுமா? என்று யோசிக்கலாம். உண்மைதான், தாயன்பு பேரன்பு தான். ஆனால் அதிலும் குழந்தையிடம் போலன்றி சிறிது எதிர்பார்ப்பு இருக்கிறது. உயிரியல் தூண்டுதலினாலும், சமூகத்தின் உள்ளுணர்வுத் தொகுப்பினாலும் ஒரு தாய் தன் குடும்பத்தைப் பேணிப்பாதுகாக்க முற்படுகிறாள். அதன் வழியாகவே குழந்தை வளர்ப்பும் நிகழ்கிறது.

குழந்தைக்கு அப்படியில்லை. எந்த எதிர்பார்ப்புமின்றியே இந்த பூமிக்கு வருகிறது. கண் திறந்தபொழுது தொடங்கி காணும் பொருட்கள், உயிர்கள் யாவற்றையும் நேசிக்கத் தொடங்குகிறது. அன்பின் அலைகளால் மூழ்கடிக்கிறது. அம்மாவை விட்டு அகல மறுக்கிறது. தூங்கும் அப்பாவின் மீது விழுந்து புரள்கிறது. மரப்பாச்சியோ, பார்பியோ எப்போதும் கூட்டிக்கொண்டே அலைகிறது. அதன் எல்லாக் காரியங்களிலும் அன்பு ததும்புகிறது. இந்த அன்பிற்கும் பெரியவர்களின் அன்பிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அர்ப்பணிப்புணர்வுதான். அர்ப்பணிப்புடன் கூடிய அன்புப் பெருவெள்ளத்தில் எல்லாவற்றையும் மூழ்கடிக்கிறது. அதனால்தான் தான் நம்பும் பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்கிறது குழந்தை. குதி என்று சொன்னால் சற்றும் யோசிக்காமல் குதிப்பதற்குக் காரணம் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு சின்னச் சின்னக் காரியத்தையும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் செய்கிறது குழந்தை. எறும்பின் பாதையைப் பின் தொடர்வதாக இருக்கலாம், கைகளிலிருக்கும் பொருட்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். புதிதாக அது கண்டு பிடித்த ஒரு சொல்லாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் அதைச் செய்கிறது. குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள். நாம் செய்கிற எந்தக் காரியத்திலும் அன்பும் அர்ப்பணிப்பும் செலுத்த முடிந்தால் அந்தக் காரியமே பேரழகு பெற்று ஒளிரும்.

பெரியவர்கள் தங்களுடைய வசதிக்கேற்பவே குழந்தைகளிடம் தங்கள் அன்பைச் செலுத்துகிறார்கள். தங்கள் ஓய்வு நேரத்தின்போது சில நேரம் கடமையாக சில நேரம் குழந்தையின் வற்புறுத்தல் அல்லது தொந்தரவு தாங்க முடியாமல், சிலநேரம் குழந்தையை ஏமாற்ற இப்படி அவர்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு யாதொரு பங்கமும் வராதவண்ணம் குழந்தைகளை நேசிக்கிறார்கள். என்றாவது ஏதாவது இடையூறு, தொந்தரவு நேர்ந்து விட்டால் போச்சு, அதைத் தாங்கள் குழந்தைக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகள் தங்களுடைய இயல்பான வளர்ச்சியை இடையூறு செய்யும் பெரியவர்களை ஒரு நாளும் குறை சொல்வதில்லை. மாறாக தீராத நேசத்தைக் காட்டுகிறார்கள்.

குழந்தைகள் உறங்கும்போது தூக்கிக் கொஞ்சுகிறார்கள். தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையூறு செய்து தூக்கிக்கொண்டு போய் விடுகிறார்கள் பெரியவர்கள். குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாகப் பெரியவர்களின் வசதியே கணக்கில் கொண்டு குழந்தைகளை வளர்க்கிறார்கள். இவற்றால் எல்லாம் இயல்பான குழந்தையின் மனதில் அதன் வளர்ச்சிப் போக்கில் புண்படுத்தப்பட்டு பெரியவர்களின் கட்டளை அல்லது எண்ணம் புகுந்து விடுகிறது. அப்போது குழந்தை தடுமாறுகிறது. செய்யலாமா? வேண்டாமா? என்று தயங்குகிறது. போகலாமா வேண்டாமா? என்று யோசிக்கிறது. எப்போதும் பெரியவர்களின் அதட்டும் குரலினைக் கொண்ட கடுமையான முகமே அதனைப் பயமுறுத்துகிறது. தன் சொந்த இயல்பான உள்ளுணர்வைப் பின்பற்றத் தவறி விடுகிறது. பாதை தடுமாறி ஒரே நேரத்தில் குழந்தையாகவும், பெரியவர்களாகவும் இருக்க நேர்கிற நெருக்கடியைச் சந்திக்கிறது. இத்தகைய நெருக்கடியின் விளைவாக அதன் ஆளுமையில் சின்னச் சின்ன கீறல்கள் ஏற்படுகின்றன.

ஏனெனில் குழந்தைகள் பெரியவர்களை அலட்சியப்படுத்த முடியாது. பெரியவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி குழந்தைகள் அவர்களை நேசிக்கிறார்கள். அளவற்ற நேசத்தின் விளைவாகவே பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். அதன்படி நடக்க வேண்டும் என்ற பேரவா குழந்தைகளுக்கு எழுகிறது. அதன் விளைவாகவே தன் இயல்பூக்க உணர்வை கைவிட்டுவிட்டு பெரியவர்களின் சொல்படி கேட்கத் தொடங்குகிறது.

அதுமட்டுமல்லாமல் குழந்தை பெரியவர்களின் மீது கொண்ட பேரன்பினால் அவர்களை உற்றுக் கவனிக்கிறது. அவர்களைப் போலவே நடந்து கொள்ள விரும்புகிறது. இது குழந்தைக்கு அளவிலா மகிழ்ச்சி ஊட்டுகிற காரியமாக இருக்கிறது. பெரியவர்களின் சட்டையைப்போடுவது, பெரியவர்களின் செருப்புகளைப் போட்டு நடப்பது, போன்ற காரியங்களில் குழந்தைக்கு ஏற்படும் உற்சாகத்தைப் பாருங்கள். உணர்ச்சிகள் மட்டுமே ததும்பி நிற்கும் பருவத்தில் குழந்தையின் மொழியே அன்புதான். பெற்றோர், உற்றோர், நாய், பூனை, மாடு, ஈ, எறும்பு, பொம்மை, செப்புச் சாமான்கள் என்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மீது இந்த அன்பினால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது இந்தக் குழந்தை. குழந்தையின் அன்பில் வேற்றுமை கிடையாது. சுனையூற்றின் நீர்போல தூய்மையானதாக அது திகழ்கிறது. குழந்தையே அன்பின் உருவமாக ஒளிவீசுகிறது. அதன் ஒவ்வொரு செல்லிலும் தன்னை அர்ப்பணிக்கும் அன்பு ததும்பி நிற்கிறது. அதனாலேயே குழந்தை எல்லோரையும் தன்னுடனேயே இருக்கச் சொல்கிறான். எப்போதும் பெரியவர்களுடன் இருந்து பெரியவர்கள் பேசுவதை, செய்வதைக் கவனிக்க விரும்புகிறான். ஆனால் பெரியவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்களுக்கு வேலை இருக்கும்போது குழந்தையும் வேறுவேலைகள் செய்யவேண்டும். அவர்கள் உறங்கும்போது குழந்தையும் உறங்கவேண்டும். அவர்கள் சாப்பிடும்போது குழந்தையும் சாப்பிட வேண்டும். மொத்தத்தில் பெரியவர்களுடைய பெரிய வாழ்க்கையை குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.

இந்தத் திணிப்பை எதிர்த்துக் குழந்தைகள் கலகம் செய்கிறார்கள். எப்படியாவது பெரியவர்களுக்குப் புரிய வைத்துவிட முயற்சிக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொண்டு விடமாட்டார்களா என்று ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கிறார்கள். ளநேசம் பொங்கும் முகத்துடன் பெரியவர்களைத் தொட்டு உணர்த்த விரும்புகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்! எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! என்று மன்றாடுகிறார்கள்.

ஆனால், நடைமுறை வாழ்வின் கொடூரமான பற்சக்கரங்களில் கிழிபட்டு நார்நாராகிக் கொண்டிருக்கும் அதற்கான காரணங்களையே புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை எனும்போது தொலைந்துபோன நுட்பமான உணர்வுகளின் ததும்புதலில் திளைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? குழந்தைகள் தங்களுடைய அன்பையும் அர்ப்பணிப்பையும் பெறுவதற்கு யாருமின்றி விசும்புகிறார்கள். அந்த விசும்பல் சத்தம் கேட்கிறதா?

2 comments:

  1. கள்ளம் புகாத வயது.விசாலமனதால் நம்மை கொள்ளைகொள்கிறது.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மைதான் சார். குழந்தைகளை குழந்தைகளாக நாம் இருக்க விடுவதில்லை. நம்முடைய விருப்பமே பிரதானமாக உள்ளது. நம் விருப்பங்களை திணிப்பதால் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் புறந்தள்ளப்படுகின்றன.

    ReplyDelete