ராத்திரி எனக்குப்பிடிக்கும்
உதயசங்கர்
ராத்திரி வந்துவிட்டாலே அவ்வளவுதான்.
குட்டித்தம்பி அதிரனுக்கு என்னவோ ஆகிவிடும். அம்மாவை விடாமல் சேலையைப் பிடித்துக் கொண்டே
திரிவான். அம்மா உட்கார்ந்தால் அவனும் உட்கார்வான். அம்மா சமையல் செய்யும்போது அவனும்
கூட நிற்பான். அம்மா தையல் மிஷனில் தையல் தைக்கும்போது அவனும் மடியில் உட்காரவேண்டும்
என்று அடம்பிடிப்பான். அம்மா புத்தகம் வாசிக்கும்போது படிக்கவிடாமல் புத்தகத்துக்குள்
தலையை நீட்டுவான். அம்மாவை அங்கும் இங்கும் அசைய விடமாட்டான்.
. ஒன்பாத்ரூம் போகவேண்டும் என்றாலும்
அம்மா கூட வரவேண்டும். இதெல்லாம் போதாது என்று அம்மாவைத் தூக்கிவைத்துக்கொள்ளச் சொல்லி
அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான் ஐந்து வயது பையனைத் தூக்கிக்கொண்டே அலைய முடியுமா?
அதிரன் ஏன் தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்கிறான் தெரியுமா? பயம்!. இருட்டைக்கண்டு பயம்!.
ராத்திரியானால் இருட்டி விடுகிறது.
இருட்டி விட்டால் விளக்கு வெளிச்சம் வேண்டும். இல்லையென்றால் கண் தெரிய மாட்டேங்குது.
இருட்டில் ஏதேதோ சத்தம்வேறு கேட்கிறது. அதுவும் அந்த சத்தமும் பெரிதாகக் கேட்கிறது.
” டம் “
“ டமார்..”
” கீச்கீச்கீச் “
” கீ கீ கீ கீ “
“ கூகூகூகூவ்..”
“ குர்ர்ர்ர்ர்..”
“ கெக் கெக் கெக் “
இன்னும் என்னென்னவோ சத்தங்கள்!
அதிரனுக்கு ராத்திரி நெருங்க நெருங்கப் பயம் வந்து விடும். தூங்கும்போதும் விளக்கு
எரியவேண்டும் என்று அழுவான்.
“ அம்மா ராத்திரி வேண்டாம்.. போகச்சொல்லு…
ம்ம்ம் போகச்சொல்லு..” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பான். அதிரன் சொல்வதைக் கேட்டு
அம்மாவுக்குச் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்காமல் பொறுமையாக,
“ குட்டித்தம்பி! இரவும் பகலும்
மாறி மாறி வர்றது இயற்கை.. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுத்துது..
அப்ப சூரிய வெளிச்சம் பூமிமேலே படும்போது பகலாக இருக்கும்.. சூரியவெளிச்சம் படாதபோது
ராத்திரியா இருக்கும்.. என்ன தெரிஞ்சிதா? பகலில் சூரியன் வர்றது மாதிரி.. ராத்திரியிலே
நிலா வரும்… பயப்படகூடாது.. எதுக்கும் பயப்படக்கூடாது.. ”
விளக்கமாகச் சொல்லுவார். அவன்
அம்மாச் சொல்வதைக் கேட்பான். எதுவும் புரியாது. ஆனால் முழுவதும் கேட்பான். கேட்டு முடிந்ததும்,
“ அம்மா பயமாருக்கும்மா.. ராத்திரி
வேண்டாம்மா..”
என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.
அம்மா எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து விட்டு கடைசியில்,
“ அதிரா! நான் ராத்திரிகிட்டே
இனிமே நீ வராதே எங்க வீட்டுக்குட்டித்தம்பிக்குப் பிடிக்கலன்னு சொல்லிடறேன்.. இன்ன
சரியா? “
என்று சொன்னார். அதன்பிறகு தான்
அதிரன் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கினான். அப்போது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த இரவுத்தேவதை அதைக் கேட்டுவிட்டார். உடனே அவர் அதிரன்
இருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அதிரன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தான். இரவுத்தேவதை அவனைப் பூப்போலத் தூக்கிக்கொண்டு பறந்தார். குட்டித்தம்பி
அப்படியே இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
“ அதிரா! ஏன் பயப்படுகிறாய்?
“
“ என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை..”
“அப்படியா? இருள் என்பது குறைந்த
ஒளி! அவ்வளவுதான்.. இப்போது பார்..”
அதிரன் முழுவதுமாகக் கண்களைத்
திறக்கவில்லை. லேசாகத் திறந்து பார்த்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சநேரத்திலேயே
எல்லாம் தெரிந்தன. அவனுடைய வீடு, வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டம், அவனுடைய நண்பன்
பாரியின் வீடு, அவர்களுடைய தெரு, அவன் மாலையில் விளையாடப்போகும் பூங்கா, எல்லாம் தெரிந்தன.
உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரே அழகாகத் தெரிந்தது. கருப்பாக இல்லை. கரு நீலநிற
வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. அவனுக்கு இப்போது பயம் குறைந்து விட்டது. அதிரன்
கண்களை நன்றாகத் திறந்தான்.
ஆகா என்ன அழகு!
அப்போது தான் அந்த சத்தம் கேட்டது.
” டம் “ மறுபடியும் அதிரன் கண்களை மூடி இரவுத்தேவதையின்
கழுத்தைக் கட்டிக்கொண்டான். பயம் அடித்துப்புரண்டு கொண்டு வந்தது. இரவுத்தேவதையிடமிருந்து
வந்த அம்மாவின் வாசனை அவனை அமைதிப்படுத்தியது.
இரவுத்தேவதை புன்னகையுடன் அதிரனை
அவனுடைய வீட்டுக்கூரை மேல் பறக்கவைத்தார். என்ன ஆச்சரியம்! அவனுக்குச் சிறகுகள் முளைத்திருந்தன.
அவன் கண்களைத் திறந்தான். அப்போது, அவனுடைய வீட்டின் அருகில் இருந்த மாமரத்திலிருந்து
ஒரு பழுத்த இலை கிளையை விட்டுப் பிரிந்து மெல்ல காற்றில் இறங்கி தகரக்கூரையில் விழுந்தது.
டம்மென்று சத்தம் கேட்டது.
இன்னொரு வேப்பமரத்திலிருந்து ஒரு
காய்ந்த குச்சி டமார் என்று விழுந்தது.
தரையில் காய்ந்து கிடந்த சருகுகளின்
மீது ஓடிக்கொண்டிருந்த எலி சின்னச்சின்னப் பூச்சிகளைப் பிடிக்கும் போது மகிழ்ச்சியில்
கீச் கீச் கீச்கீச் என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. எலியைப் பார்த்த பூச்சிகள் கீகீகீகீ
என்று இரைந்தன. கூகூகூகூவ் என்று புளியமரப்பொந்திலிருந்த ஆந்தை கண்களை உருட்டி அங்கும்
இங்கும் பார்த்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது.
அதிரனின் வீட்டுக்கு அருகில் ஓடிய
சாக்கடையில் தவளைகள் குர்குர்குர் என்று முனகிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால்
இருந்த கோழிக்கூட்டிலிருந்து செவலைச்சேவல் அவ்வப்போது கெக்கெக்கெக் என்று கத்திக்கொண்டிருந்தது.
இப்போது அதிரனுக்குப் புரிந்து
விட்டது. அவனுடைய முகத்தில் வெட்கம் வந்தது. இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம்.
அம்மாவை எவ்வளவு தொந்திரவு செய்து விட்டோம் என்று நினைத்தான்.
இரவுத்தேவதை அவனை அப்படியே பூப்போல
அம்மாவுக்கு அருகில் படுக்கவைத்து விட்டு பறந்து போனாள். அதிரனுக்கு அப்போது ஒன்பாத்ரூம்
வந்தது.
அவன் எழுந்து கழிப்பறை விளக்கைப்போடாமல்
அம்மாவை எழுப்பாமல் போய் விட்டு வந்து படுத்துக் கொண்டான். காலையில் அம்மா எழுந்ததும்
அதிரனிடம் கேட்டாள்,
“ என்னடா குட்டித்தம்பி! ராத்திரி
அம்மாவை எழுப்பலை...” என்று கேட்டார். அதிரன் சிரித்துக் கொண்டே,
“ இனிமே ராத்திரின்னா எனக்கு பயமில்லம்மா!
“ என்றான். அம்மா ஆச்சரியத்துடன்,
“ எப்படித்தம்பி! ஒரே ராத்திரியில
மாறிட்டே..”
என்று கேட்டாள். அதைக் கேட்ட குட்டித்தம்பி
அதிரன்,
“ தெரியலம்மா..” என்று சொல்லிச்சிரித்தான். அவனுக்குத் தூக்கத்தில் எல்லாம் மறந்து போய்விட்டதே…
கெக்க்கே கெக்கேக்க்க்கே..