Thursday 12 November 2020

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் -சில கருத்துகள்

 

உதயசங்கரின் துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் சிறுகதைத் தொகுப்பு பற்றி சில கருத்துகள்


……… 

சாரதி         
                                                      
இந்தத் தொகுப்பின் கடைசிக் கதையான நீலிச்சுனையையும் படித்த கையோடு புத்தகத்தை என் நெஞ்சில் மேல் வைத்து கண்களை மூடியிருந்தேன். அசந்து விட்டேனா என்னவோ தெரியவில்லை. திடீரென்று என் நெஞ்சு முடிக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போலிருந்தது. என்ன நடந்தது எனத்தெரியவில்லை. முடிகளெல்லாம் குத்திட்டு நின்றது. தொலைந்த என் இளமை துடித்தது. யாரோ என்னை அழைத்தது போலிருந்தது. எழுத்தாளர் உதயசங்கர்தான். என் கையைப் பிடித்து இழுத்தான். நான் எதுவும் சொல்லாமல் அவனுடன் சென்றேன். அரூபஇச்சைக் குகைக்குள் என்னை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அங்கே மரப்பாச்சிகளின் நிலவரை, கருப்பையாவின் வனம், புற்று, நீலிச்சுனைஇந்த கதைகளெல்லாம் மனித இச்சைகளின்  இம்சைகளை , குரோதங்களை, அழகை, அற்புதத்தை, வேறுவேறு படிம உலகத்திற்குள் வாழ்ந்தது போல் பிரமிக்க வைக்கும் தொன்மங்களாய் நிகழ்த்தப்பட்டிருந்தது. என் கண்களை என்னால் நம்பவே முடிய வில்லை. வனத்தின் பெருஞ்சுணையிலிருந்து விழும் நீரின் வழியே நீலியே வடிந்து கொண்டிருந்தாள். அழகிய ஒளிவெள்ளம் போல் என்றைக்குமே பார்க்க முடியாத அசுரஅழகை, கருப்பையாவின் வனத்தில் எவரும் அறியாத மர்ம முடிச்சுகளின் அசரீரியாய் அவரின் சாவுக்குப்பின்னும் துடித்துக் கொண்டிருந்தை, வேறுவேறு காலங்களில் யார் யாரோடோ வாழ்ந்த மரப்பாச்சிகள் அவரவர் மண்டைக்குள் புகுந்து நெஞ்சு, வயிறு, முடிவில் குதம் வழியே வெளியேறிக் கொண்டிருந்ததை, நீரின் மொழியில், காட்டின் மொழியில், மரப்பாச்சிகளின் மொனங்கள்களில், இருள்வழியில் சுற்றித்திரியும் இச்சாதாரி பாம்பின் தடத்தின் வழியே….. என் மேனி சிலிர்கக என்னிடம் சொல்லும் போது நான் மெய் மறந்து நின்றேன்.

அங்கிருந்து என்னை சிறு பாதை வழியே வேறு ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே கடவுளின் காதுகள், குரல்கள் என்ற இரண்டு மனோவயப்பட்ட கதைகளின் வழியே சுப்புலட்சுமி, குமாரசாமி, இருவரது  அடிமனக்குரல்கள், அறையைத் தாண்டி ஒலித்தது. சுப்புலட்சுமிக்கு கடைசிகால அன்பு கிட்டாமல் கடவுளோடு பேசிக் கொண்டிருந்தார்.. குமாரவேலுக்கு முதல் காதலே பூர்த்தியாகமால் பயத்தின் கூப்பாட்டில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஹேங் ஓவர், கருணாகரனின் கதைகளில் பாட்டில் வீடுகளில் சிக்கி, என்றென்றும் மீளமுடியாத லும்பனான விநாயகம், நடுத்தர கருணாகரன் என இரு வேறு வடிவங்களாய் அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தில் விநாயகம் போல் எங்கோ விழுந்து கிடந்தேன்.

குகையிலிருந்து வெளிக்கிளம்பி வேறு திசையில் என்னை அழைத்துச் சென்றான். அங்கே கானல், கிருஷ்ணனின் அம்மா கதைகளில் வரும் அருகிக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள், குடும்ப உறவுகளின் அர்த்தங்களாய் வேறுவேறு குணங்களில் வடித்துள்ள விதம், என் கண்களுக்குள் மிரட்சியடைந்த கனவாய் நின்றதுசண்முகம், பாஞ்சான் நண்பர்களின் உறவில் சண்முகத்துக்கு கல்வி கிட்டினாலும், வாழ்வாதார நிலை ஒரு கானல்தான். எந்த அளவிற்கு பொருளாதரத்தில் உயர்ந்தாலும், கிஞ்சித்தும் கல்வி  கிட்டாத பாஞ்சான்தன் நண்பன் சண்முகத்தை பெருமைப்படுத்தி, உணர்வு வயப்பட்டு வாழ்ந்து  பின் சாகிறான் என்றாலும், பாஞ்சான் கனவில் வந்துவந்து போகிறான்கிருஷ்ணனின் அம்மா என்ற கதையில், கிருஷ்ணனின் அம்மா, அன்பு என்ற மாபெரும் ஆயுதத்தை, சூட்சிமமாய் முன்னிருத்தி, கிருஷ்ணனை கொம்பு சீவி விடுகிறாள். குடும்ப வாழ்வாதாரம் உயரஉயர அவன் தம்பி, தங்கைகள் வாழ்க்கையை, அம்மா  சரிவர முன்னெடுத்துச் செல்கிறாள். எந்த நிலையிலும் தாயின் அன்பையே உயர்வாய் எண்ணும் கிருஷ்ணன், எல்லா நிகழ்வுகளிலும் உதாசினமாகிறான்.. அவன் மனம் உடைந்து வாழ்க்கையை நிதர்சனமாக சந்திக்கும் போது கிழடு தட்டுப் போகிறான்மகன், தாய் என்ற உறவில் அதீத உணர்வு வயப்பட்ட கிருஷ்ணனைப் பற்றி இவ்வளவு சாதுர்யமான அம்மா என்னதான் நினைத்தாள்? என்ற போது உறவின் அர்த்தம் சிலநேரம் பிடிபடாமல் இதயம் சுழட்டுகிறது. அப்பாவின் கைத்தடி என்ற கதையில் ஓகோவென்று வாழ்ந்து, கடைசி அழிவில் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தில் வாழும் சிக்கல்கள் நிறைந்த மனிதர்களை பற்றியது. எழவே முடியாமல் நோய்ப்பட்டிருந்தாலும், சாதி என்ற கலாச்சார கைத்தடியில் ஊனமுடியாமல் ஊனி நிற்கும் அப்பாவை மீறி, சுதந்திரமாய் பறக்க இரண்டாவது முறை கைத்தடியை தாண்டிச் செல்லும் மகள் ரேவதியின் கதை இது.

உடலை விற்று வாழும் ஒரு பெண்ணின் ஆன்மாவின் காதல் கதை  அன்னக்கொடிகதைசொல்லல் ஜி. நாகராஜனை ஞாபகப் படுத்தினாலும், உதயசங்கர் அவருக்கே உருத்தான தொனியுடன் தனித்துதான் நிற்கிறார். அம்மைக்குத்திட்ட கதிரோடு வாழ்ந்த காலம் கனவு போல் அன்னக்கொடிக்கு வந்துவந்து விக்கி நின்றாலும், நமது நெஞ்சில் அன்னக்கொடி எவ்வளவோ காலம் திறண்டு நிற்பாள்.
அறைஎண் 24. மாயாமேன்சன், அந்தரஅறை இரண்டு கதைகளுமே மன உளைச்சல்களோடும், மன உளவியலோடும், வாழ்ந்த வாழுகின்ற மனிதர்களை அவரவர் அறையில் மாயஜாலம் போல் எங்கெங்கோ எப்படியெல்லாமோ சந்தித்து என்னை இழுத்துச்செல்லுகிறது. ஒவ்வொரு முறையும் தப்பித்து ஓடும் தற்கொலையை, ,முடிவில் ஒரு அதிசய தற்கொலை தங்கும்விடுதி, அவனை மட்டுமல்ல நம்மையும் பிரமிக்க வைக்கிறது.  

நான் கண்விழித்த போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  ரோஜா செடிகள்தான்அன்பின் மறுதலிப்பாய், ரோஜாவை சூடிய போதெல்லாம் வேறுவேறு குரோதங்களில், வன்மங்களில் ஆனவக்கொலைகள்  மனித மாண்பையே கேள்விக்குறியாக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் எதனாலும் எத்திசையிலும் நிற்காத காற்றின் பாடலில்  சதாவும் ஜீவிக்கும்  துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலரின் ஒவ்வொரு இதழ்களின் வழியே உக்கிரத்தோடு சொல்லுகிறார்.

உதயசங்கரின் இந்த தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம், முந்தைய கதைகளின் நீட்சியில், குருமலைக்காட்டின் அதிசயத்தில் தத்தளித்து, குகையின் வர்ணஜாலங்களில், பெருஞ்சுணையின் வடியும் நீரின் நினைந்த போது தன் வார்த்தைகள், வடிவங்கள்….புது உருவோடு கதைகளே அதிசயிக்கிறது.
வாழ்த்துக்கள்….உதயசங்கர்..    

நன்றி - சாரதி     

வெளியீடு - நூல்வனம்

விலை-ரூ. 200

தொடர்புக்கு- 9176549991

             
                                                   
                                                   

 

No comments:

Post a Comment