Tuesday, 10 November 2020

குழந்தைகளும் நீதிநெறி/நன்னெறி/அறிவுரைக் கதைகளும்--- சிறார் இலக்கியக்குறிப்புகள்

 


குழந்தைகளும் நீதிநெறி/நன்னெறி/அறிவுரைக் கதைகளும்---

1.
பெரும்பாலும் குழந்தைகளுக்கான  கதைகளிலும் / பாடல்களிலும் ஏதாவது ஒரு நீதி அல்லது நன்னெறி அல்லது அறவுரை அல்லது கருத்து இருக்கவேண்டும் என்று ( நூற்றுக்கு 99.99 சதவீதம்பேர் ) வாசிக்கிற பெற்றோர்/ஆசிரியர்கள் நினைக்கிறார்கள்.

2.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் அப்படி நினைப்பதால் எழுத்தாளர்களும் அப்படி எழுத முனைகிறார்கள். ஆகவே இந்தக்கதையிலிருந்து சொல்லப்படும் நீதி என்னவென்றால்................... என்று கதை முடிகிறது. அப்படி இல்லையென்றாலும் அதை உருவாக்கிச் சொல்லுகிறார்கள்.

3.
யதார்த்தத்தில் குழந்தைகள் அப்படி நினைப்பதில்லை. ஆனால் அப்படி பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதனால் குழந்தைகளும் கதைகளைச் சொல்லிமுடித்ததும் ஞாபகமாக கதை சொல்லும் நீதியைச் சொல்லுகிறார்கள்.

4.
கலை என்பதே ஒருவகையில் பிரச்சாரம் தான். ஆனால் அந்தப்பிரச்சாரம் அந்தக் கலைவடிவத்தைத் தாண்டித் துருத்திக் கொண்டிருக்கும்போது அது கலையின்பத்தைத் தருவதில்லை. ஒரு பாடலோ, ஒரு ஓவியமோ, அதன் இசைவடிவும்,, வண்ணங்களின் இசைமையும் தான் முதலில் ஈர்க்கிறதே தவிர அது என்ன செய்தியைச் சொல்கிறது என்பதற்காக இல்லை.

5.
கலை வடிவங்கள் யதார்த்தத்தின் அடிப்படையிலான புனைவு எனும்போது யதார்த்தத்தின் நுண்கூறுகள் அதில் இருக்கத்தான் செய்யும். எத்தகைய அதிபுனைவு நூலானாலும் சரி. ஆனால் அந்த நுண்கூறுகள் வாசிப்பவரின் மனதில் உணர்வலைகளை ஏற்படுத்தும்போது அது வாசிப்பவரிடம் உளவியலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

6
அறிவுக்குள் திணிக்கப்படுகிற எதுவும் செரிக்காமல் வெளியேறிவிடும். கலை அறிவுக்கான களமல்ல.

7.
சரி. எல்லாவற்றையும் பொதுவாக நீதிநெறி என்று எடுத்துக் கொள்வோம். இதுவரை சொல்லப்பட்டிருக்கிற நீதிநெறிநூல்கள் எந்தச் சமூகத்தின் நீதியை முன்வைக்கின்றன? என்று யோசித்திருக்கிறோமா?

8.
காலாவதியாகிப்போன நிலவுடைமைச்சமூகத்தின், மதிப்பீடுகள், விழுமியங்கள் யாருடைய நலனை முன்வைக்கின்றன என்று சிந்தித்திருக்கிறோமா?

9.
பஞ்சதந்திரக்கதைகள் தொடங்கி நீதி என்ற வார்த்தையை  முன்வைத்து சொல்லப்பட்டிருக்கும் கதைகளின் உட்பொருளை நாம் அறிந்திருக்கிறோமா?

10.
ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தை அவர்களுக்கென்றேயுரிய பிரத்யேகமான முறையில் அறிந்து கொள்கிறார்கள். அந்த அறிதலில் அவர்கள் புனைகிறார்கள். கற்பனை செய்கிறார்கள். கனவு காண்கிறார்கள். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுடைய சிறகுகள் விரிந்து பிரபஞ்ச வெளியில் பறக்கத்துடிக்கின்றன.

11.
அந்தக்குழந்தைகளின் மனவெளியில், நீதிநெறிகள் ஒருபெரும் பாறாங்கல்லாக அவர்களுடைய படைப்பூக்கத்தை நசுக்குகிறது என்பது புரிகிறதா?

12.
குழந்தைகள் இயல்பிலேயே அன்பானவர்கள். சமூக உணர்வுள்ளவர்கள். அவர்களுக்கு நம்முடைய வறட்டுத்தனமான கருத்துகள் அல்ல நம்முடைய நடைமுறைகளே எடுத்துக்காட்டாக இருக்கமுடியும்.

13.
பெரியவர்கள் ஒருபோதும், கடைப்பிடிக்காத நன்னெறிகளைப் போதிப்பதனால் மட்டும் குழந்தைகள் சிறந்து விளங்கமாட்டார்கள். முரண்பட்ட நடைமுறை வாழ்க்கையனுபங்கள் குழந்தைகளின் உளவியலில் பெரும்நெருக்கடிகளை உருவாக்கும்.
14.
குழந்தைகள் சிறந்த மனிதர்களாக வளரவேண்டுமென்றால் பெரியவர்கள் சிறந்த நடைமுறைகளைக் கொண்டிருக்கவேண்டும்.

15.
குழந்தைகள் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பெரியவர்கள் நினைக்கிறார்களோ அதைப் பெரியவர்கள் செய்யாமலிருப்பதும் குழந்தைகள் எதையெல்லாம்  செய்யவேண்டும் என்று பெரியவர்கள் நினைக்கிறார்களோ அதை பெரியவர்கள் முதலில் செய்யவும் வேண்டும்.

16.
மனிதனின் முதலும் முடிவுமான லட்சியமே மகிழ்ச்சி தான். அதற்காக உழைக்கிறான். அதற்காகவே கஷ்டப்படுகிறான். அதற்காகவே வருந்துகிறான். அதற்காகவே அழுகிறான். கடைசியில் அதை அடையாமலே இறந்தும் போகிறான்.

17.
எனவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உருவாக்கும் எல்லாக்காரியங்களையும் இந்த சமூகம் செய்யவேண்டும். வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குழந்தைமையின் அற்புத உலகை குழந்தைகளிடமிருந்து நம்முடைய அரதப்பழசான நீதிநெறிகளைச் சொல்லிப் பறித்துவிட வேண்டாம்.

18.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

 

4 comments:

  1. குழந்தைகளின் இயல்பான சிந்தனைகள் அன்பின் நீதியிலானவை.
    குழந்தை எழுத்துக்கான வழிகாட்டுதாகவும் கொண்டால் நல்ல கட்டுரை.

    ReplyDelete
  2. குழந்தைகள் உலகில் குழந்தையாய் பயணிக்க தூண்டிய அருமையான கட்டுரை.பெற்றோர் எனும் முன்னத்தி ஏரை பின் தொடர்ந்தே குழ்ந்தைகள் எனும் பின்னத்தி ஏர் வருகிறது.சரியானவற்றை பெரியவர்களே கடைப்பிடிக்காமல் குழந்தைகளை கடைப்பிடிக்கச் சொல்வது சரியல்ல என்பதை பதிவு செய்திருப்பது சிறப்பு தோழர்.

    புனைவையும் யதார்த்தத்தையும் குழந்தைகள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.நாம் தான் அவர்களின் உணர்தலில் குறுக்கீடு செய்து அவர்களின் இயல்பை மாற்ற முயற்சிக்கிறோம்.செடி அதன் போக்கில் இயல்பாக வளர்ந்தால் மரமாகும்.குறுக்கீடு செய்தால் வளர்ச்சி குறைந்து விடும்.அதுபோல் தான் குழந்தைகளின் உலகில் நாம் குறிக்கீடு செய்வதும் என்பதை இக்கட்டுரையில் அழகுற எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு.

    குழந்தைகளோடு இயல்பாக பயணிக்க இக்கட்டுரை பெரிதும் உதவுகிறது.

    பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும் தோழர் 🤝🙏😍

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரி. குறுக்கீடல்ல. தலையீடல்ல. அவர்களுக்குத் துணையாக, ஆதரவாக, வழிகாட்டியாக இருந்தாலே போதும். மிக்க நன்றி தோழர்.

      Delete