தீராத்தனிமையை எழுதித் தீர்த்த ஒற்றைக் கலைஞன்
உதயசங்கர்
-
பவா செல்லதுரை
அது அழகிய
கையெழுத்தில் எழுதப்பட்டதொரு இன்லேண்ட் லெட்டர். இதற்கு
மேல் வார்த்தைகளைச் சுருக்கிவிட முடியாது.
“அன்புமிக்க பவா,
நான்
உதயசங்கர், இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
உதவி நிலைய அதிகாரியாக வேலை கிடைத்து உங்கள் ஊருக்கருகே வேளானந்தல் ரயில்வே
ஸ்டேஷனில் ஒத்தையில் நிக்கேன். உங்களைச் சந்திக்க வேண்டும்.
நேரம் வாய்த்தால் ஸ்டேஷனுக்கு வாங்க”
கடிதத்தை
எப்போதும் போல் இரண்டு மூன்றுமுறைப் படித்தேன். அடுத்தநாள் மதியம்
நானும் கருணாவும் தனித்தனி சைக்கிள்களில் ரயில்வே தண்டவாளத்தின் வழியே ஒதுங்கிக்கிடந்த
மண்சாலையில் இறைந்து கிடந்த ஜல்லிக்கற்களை உரசியவாறே வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கிப் போனோம்.
கற்களின் உரசல் ஜாலியான மனநிலையைக் கொடுத்தது.
பெரும்
மரங்கள் அடைகாத்த பேய்ப் பங்களா மாதிரி அப்பழைய கட்டிடம் திப்பக்காட்டின் ஒரு பக்கமாக
நின்றிருந்தது. சீமை ஓடுகள் சரிந்து கிடந்த ஊழியர்களுக்கான
குவார்ட்டஸ்கள் பாம்படையும் புற்றுகளாகியிருந்தன.
கொஞ்சம்
சுமாரான ஒரு வீட்டின் பழைய சிமெண்ட் தரையில் பாய்விரித்து, கையை தலையணையில் ஊன்றி குள்ளமான ஒரு மனிதர் படுத்துக்கொண்டே படித்துக் கொண்டிருந்தார்.
கதவு திறந்தேதான் கிடந்தது.
‘‘நான் பவா’’ எனத் துவங்கும் முன்,
‘‘தெரியும் வாங்க, இது கருணாதானே’’ என அறிமுகத்தை வெகு சுலபமாக்கிக் கொண்டார்.
பாதியில்
மூடிவைக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன்.
தாஸ்தாவேஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ இத்தனைப் பெரிய புத்தகத்தை தனிமையில்
படிக்க வாய்ந்திருந்த கணமே என்னைக் கொஞ்சம் பொறாமைப்படுத்தியது.
அப்போது
நாங்கள்,
கலை இரவு, இலக்கியக்கூட்டம், நாடகம், போஸ்டர், போராட்டம்,
என அலைந்து, திரிந்து வாசிப்பை இரண்டாவதாக வைத்திருந்த
நாட்கள்.
அவர்
கோவில்பட்டியின் இலக்கியச் சூழல் பற்றிப் பேச ஆரம்பித்தார். எந்நேரமும் நாங்கள் ஓடிவிடக் கூடுமென நினைத்தோ என்னமோ எங்களுக்காக உணவு தயாரித்துக்
கொண்டே பேசினார்.
வாத்தியார்
ராமகிருஷ்ணன் (க்ருஷி) தமிழ்ச்செல்வன்,
கோணங்கி, தேவதச்சன், சாரதி,
அப்பணசாமி, நாறும்பூநாதன், திடவை பொன்னுசாமி என சென்ற அவர் பேச்சு ஒரு ஊரில் இத்தனை படைப்பாளிகளாவென ஆச்சர்யபட
வைத்தது.
நைனாதான்
எங்க எல்லோருக்குமே முன்னத்தி ஏர். அழகிரிசாமியும்,
புதுமைப்பித்தனும் அதற்கும் மேலே… நான் சராசரிக்கும்
மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்த அந்த ரயில்வே குவார்ட்டர்ஸின் சுவரையேப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
அதில்
கறுப்பு வெள்ளையிலான ஒரு சின்னப் புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. பழைய கல்யாண போட்டோக்களைச் சட்டமிடும் பிரேமில் சிறு கண்ணாடியிடப்பட்டிருந்தது.
எங்கள் பேச்சை மீறி அப்புகைப்படம் என்னை வசீகரித்தது.
தரைப்
படுக்கைக்கருகே பிரிந்து படித்தும் படிக்காமலும் பத்திருபது இன்லேண்ட் கடிதங்கள் பரப்பி
வைக்கப்பட்ட மாதிரியிருந்தன. எழுதப்படாத ஐம்பதுக்கும் மேற்பட்ட
இன்லேண்ட் கடிதங்கள் ஒரு பெரிய புத்தகத்தின் நடுவில் துருத்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
உதயசங்கர்
என் கவனிப்பை நுட்பமாய் யூகித்து,
‘இது நண்பர்களுக்கு
எழுத…
கூட படிச்சவன், கவிஞன், எழுத்தாளன், என்னை இருமுறை
நிராகரித்தவள் என பெயர் ஞாபகம் வரும் எவருக்கும் கடிதம் எழுதுவேன். இத்தனிமையை இப்படி மட்டுமே கரைத்துக் கொள்கிறேன்.
நாங்கள்
ஒரு சராசரியான மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது. எப்போதும் மனித நெரிசலில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எனக்கும் கருணாவுக்கும்
இம்மனிதனின் தனிமை வியப்பளித்தது.
எங்கள்
உரையாடல் நீண்டு கொண்டேயிருந்தது. சூரியனின் மறைவு அறையிலிருந்த
எங்கள் மூவரையும் வெளியே வரவழைத்தது. தண்டவாளத்திற்கு எதிர்ப்புறம்
முழுக்கக் காடு. ஒரு ரயில் போகுமளவிற்கு மட்டுமே இடைவெளி.
தூரத்தில் யாரோ சில பெண்கள் தலையில் விறகுச்சுமையோடு கிட்டத்தட்ட ஓடிக்
கொண்டிருந்தார்கள்.
பெருமரங்களினூடே
எழுந்த காற்றின் சப்தம் பழக்கப்படாதவர்களைப் பயமுறுத்தும். எங்கள் இருவரையும் பயமுறுத்தியது. உதயஷங்கர் பழக்கப்பட்டிருந்தார்.
என் நினைவு
சரிதானெனில் அன்றிரவு அவருடனேயே படுத்துறங்கினோம். எங்கே
உறங்கினோம்? பின்னிரவு வரை பேசிக் கொண்டிருந்தோம். அதிகாலையின் குளிர் காற்றினூடே அவரோடு கை குலுக்கியபோது நேற்றிலிருந்து என்னை
வசீகரித்த அப்படத்தை காட்டி,
‘‘இது யார் சங்கர்?’’ எனக் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா, காலமாயிட்டாரு, பேரு விருத்தாச்சலம்’’ என சிறு புன்னகை உதட்டோரம் ஒதுங்க
உதயசங்கர் சொல்லி, எங்களை சைக்கிள் மிதிக்க அனுமதி தந்தார்,
வீடடைந்ததுமே
அவர் சொன்ன புத்தகங்கள், அவர் பேச்சில் தெறிந்த சிறு பத்திரிகைகள்,
அவர் பார்த்த திரைப்படங்கள் என தேட ஆரம்பித்தேன்.
அப்போது ‘சுபமங்களா’வை கோமல் பொறுப்பேற்று புதுப் பொலிவோடு நடத்த
ஆரம்பித்திருந்தார். மூலக்கடை சௌந்தர் கடையில் காத்திருந்து அதை
வாங்கிக் கொள்வதுண்டு. ஆர்வத்தை வீடு வரை கொண்டு போக முடியாத
அவசரத்தில் அங்கேயே பிரித்துப் பக்கங்களைப் புரட்டுவேன்.
ஒரு முழுப்பக்கத்தில்
நேற்று உதயசங்கரின் குவார்ட்டர்ஸில் பார்த்த அவர் சித்தப்பாவின் படம் பிரசுரமாகியிருந்தது. படத்திற்கு கீழே விருதாச்சலத்திற்குப் பதில் புதுமைப்பித்தன் என அச்சாகியிருந்தது.
என் குழப்பத்தைத் தீர்க்க தொலைபேசியில்லை. அன்றும்
மதிய வெயிலில் வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கி தனியாளாக சைக்கிள் மிதித்தேன். நான் ஸ்டேஷனை அடைந்தபோது ஷங்கர், ஒயிட் அண்ட் ஒயிட் சீருடையில்
கையில் ஒரு பச்சைக் கொடியோடு ஏதோ ஒரு ரயிலின் வருகைக்காக, தென்பக்கமாய்ப்
பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்.
நான்
அவரருகில் நின்று மூச்சு வாங்கியதைக் கூட உணராமல் வெகுதூர ரயில் சத்தத்திற்கு தன் காதுகளை
ஒப்படைந்திருந்தார்.
மிகுந்த
இரைச்சலோடு ஒரு ரயில் நிற்காமல் எங்களை கடந்து போனது. நான் காதுகளில் கை வைத்து கொஞ்சம் ‘பாவ்லா’ காட்டிக் கொண்டேன்.
நிறைவின்
ஆசுவாசத்தோடு திரும்பி ஸ்டேஷனுக்கு போகையில் நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.
சம்பிரதாயங்களோடு
சில கடமைகளைச் செய்து முடித்து, வேறு யாரிடமோ எல்லாவற்றையும்
ஒப்படைத்து விட்டு, ‘குவார்டர்ஸ்க்கு போலாமா?’ என என் முகத்தை ஏறெடுக்கையில்தான்
அவர் முகத்தின் ஓரத்தில் ததும்பி நின்ற ஒரு குறும்புப் புன்னகையைக் கவனித்தேன்.
‘‘அப்புறம்?’’
‘‘இது யார் சங்கர்?’’ என நேற்றைய கேள்வியை மறுபடியும் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா’’
‘‘பேரு’’
‘‘விருத்தாச்சலம்’’ நேற்றைய நிதானத்தோடேயே அவர் சொன்னார்.
‘‘இல்ல, புதுமைப்பித்தன்’’
இது கோபமேறிய நான்,
அவர்
வாய்விட்டு சிரித்தார்.
நான்
கொடுத்த சுபமங்களாவைப் பார்த்துக்கொண்டே,
விருத்தாச்சலமும், புதுமைப்பித்தனும் ஒருத்தர்தான் பவா, புதுமைப்பித்தனை
தெரியாம நீயெல்லாம் கதை எழுத ஆரம்பிச்சிட்டே என்ற வார்த்தைகளில்தான் திருநவேலிக் குசும்பை
முதன்முதலாய்க் கேட்டேன்.
பதிலுக்கு
நானும் சிரித்துக் கொண்டேன். அன்றிரவு அவரிடமிருந்து வாங்கிவந்த
என்.பி.டி. வெளியிட்டிருந்த
புதுமைப்பித்தன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியும்
உதயசங்கர் என்ற சிறுகதையாளனை நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்ட விதத்தை சொல்லலாம்.
இந்த
மத்தியான நேர சைக்கிள் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில் அவரின் முதல் தொகுப்பு ‘யாவர் வீட்டிலும்’ சென்னை புக்ஸ் பாலாஜியால் கொண்டுவரப்பட்டது.
களச்
செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் ‘தமுஎச’வின் நிகழ்வில் ஒன்றாய் அதற்கான வெளியீட்டு விழாவை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ரீப்பர் பட்டைகள் உடைந்த அதன் நீண்ட ஹாலில் ஏற்பாடு செய்தோம்.
நிகழ்ச்சியை
நடத்தி முடிக்க இரண்டாயிரம் செலவாகும். புத்தகம் எழுதின
உதயசங்கரின் ரயில் வரும்வரை காத்திருந்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு நிதி வசூலுக்கு
அலைவோம்.
ஐம்பது
ரூபாய்
கொடுக்கும் ஆள் கடவுள். கடவுள்
எப்போதும் எங்கள் கைகளுக்கு அகப்பட்டதேயில்லை.
எழுத்தாளர். ச. தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் முதல் சிறுகதைத் தொகுப்பை
வெளியிட தோழர் ஆரோக்கியசாமி அதைப் பெற்றுக்கொண்டு பேசினார். அந்த
நிகழ்விற்கு இரண்டு மூன்று நாட்களுக்குமுன் இரவில்தான் அத்தொகுப்பை
முழுவதுமாய்ப் படித்து முடித்தேன். தாங்கிக்கொள்ள முடியாததொரு
மௌனத்தில் கிடந்த நான், அடுத்த நாள் அத்தொகுப்பில் ‘ஒரு பிரிவுக் கவிதை’ என்றொரு கதை படித்தேன். கதையென்றா சொன்னேன்? இல்லை. ஒரு மிக நீண்ட கவிதை அது. கவிதையிலான உரைநடையென்றும் சொல்லலாம்.
ஆனந்த், சேது, அவள்.
ஆனந்த்
அவள் கணவன், சேது அவள் காதலன் மூவரும் ஆளரவமற்ற அந்த ரயில்வே
நிலையத்தில் எப்போதோ வரப் போகிற ஒரு ரயில் வண்டியை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.
மௌனத்தால்
மட்டுமே கதை நகரும். உரையாடல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதொரு
புனைவு அது.
சேதுவை
ரயிலேற்ற ஆனந்தும் அவளும் நிற்பார்கள். அவர்களுக்கான
ஒரு தனிமையை உருவாக்க வேண்டி ஆனந்த் தூரத்திலிருக்கும் ஒரு பெட்டிக்கடையை நோக்கி சிகரெட் வாங்க போவான்.
அவனின்
இச்செயல் அவளுக்கு அருவெறுப்பூட்டும். ஆனாலும் அந்நிமிடத்திற்கே
காத்திருந்தது போல் அவர்களிருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் மேலெழும். தொட்டால்… இல்லையில்லை… பெயர் சொல்லியழைத்தாலே
அழுதுவிடுவது போலிருப்பாள் அவள்.
அவர்கள்
மூவரின் உலகத்தில் இதற்கும் மேல் ஒரு அங்குலமும் என்னால் நுழைய முடியாது. நீங்கள் வேண்டுமானால் முயன்று பாருங்கள்.
டிகிரி
படித்து முடித்து வேலைகிடைக்காமல் அலைக்கழிப்புகளும் அவமானங்களும் நிறைந்த முதல் பத்தாண்டுகளின்
துயர வடுவை இன்னமும் உதயசங்கர் நடுநெஞ்சில் தடவிப்பார்த்துக் கொள்கிறார். எழுதியெழுதித் தீர்த்த பின்னும் அது வளரும் புற்றாக எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
க.நா.சு. தான் இறப்பதற்கு முன் தினமணியின்
நடுப்பக்கத்தில் தமிழ் சிறுகதைச் சூழலைப்பற்றி எழுதின ஒரு முக்கியமான கட்டுரையில்,
நம்பிக்கையளிக்கும் இரு சிறுகதைத் தொகுப்புகளென உதயசங்கரின் ‘யாவர் வீட்டிலும்’ஐயும் கௌதம சித்தார்த்தனின் ‘மூன்றாவது சிருஷ்டி’யையும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்
இலக்கியச் சூழல் எப்போதும் இருவேறு துருவங்களாகவே பிரிந்து கிடந்திருக்கிறது. ஒன்று முற்றிலும் வெகுஜன வாசிப்பு சார்ந்தது. ஜெயகாந்தன்,
சுஜாதா, பாலகுமாரன் என அது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு
இவர்களின் படைப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தது.
கோபிகிருஷ்ணன், சம்பத், பாதசாரி, ஆத்மநாம்,
பிரமிள் என சிறுபத்திகைகளை மட்டுமே நம்பி எழுதின படைப்பாளிகள்.
இரண்டாம் வகை.
கந்தர்வன், உதயசங்கர், தமிழ்செல்வன், வேலராமமூர்த்தி,
லட்சுமணபெருமாள் மாதிரியான அலாதியான படைப்பாளிகள், இவை இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டவர்கள்.
எப்போதும்
மழைநிழல் பிரதேசவாசிகள் இவர்கள். இரு தரப்பு வாசகர்களும் தவறவிட்ட
பெரும் படைப்புகளை வெகுகாலம் கழித்து இப்போதுதான் தமிழ்ச்சூழல் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது காலம்
கடந்த கவனிப்பு. ஆனால் படைப்புகளுக்கு ஏது காலம்? அது எப்போதுமே சாகாவரம் பெற்றவைகளே. பொருட்படுத்தாமை
நம் துரதிஷ்டமே.
‘ஆனால் இது அவனைப் பற்றி’ என்றொரு குறுநாலை உதயசங்கர் எழுதியிருக்கிறார். ‘ஆட்டோகிராப்’ என்ற சேரனின் திரைப்படம் அக்கதையின் சாரம்தான்.
ஒரு மனிதனின்
மொத்த ஜீவிதத்தில் குறைந்தது ஆறேழு பெண்கள் வந்து போய்விடுகிறார்கள். ஓரிருவர் தங்கி விடுகிறார்கள்.
கோலம்
போட்டு அதைக் கவனிக்கும் கண்களைச் சந்தித்துப் பிரியும் ஒரு கணம் வந்துபோன கோமதியோ, எதேச்சையான ஒரு சந்திப்பில் விடுதியறையில் தங்க நேரிடும் சங்கரியாகவோ,
வாழ்நாளெல்லாம் கடிதமெழுதி, ரத்தக் கையெழுத்திட்டு
ஒரு மாலையில் சொல்லாமல் பிரியும் வசந்தியாகவோ அப்பெண்கள் நம் வாழ்வைத் தீண்டிச் செல்லும்
‘தீ’ ஜுவாலைகள்.
உதயசங்கர்
தன் குறுநாவலில் அவர்களை அத்தனை அழகாக வரிசைப்படுத்தியிருப்பார்.
சில எழுத்தாளர்கள்
அவர்களின் ஆக சிறந்த கதை ஒன்றின் பெயரின் அடைமொழியோடே அழைக்கப்படுவதுண்டு.
சாயாவனம்,
சா.கந்தசாமி, கோவேறு கழுதைகள், இமயம், இடைவெளி சம்பத், மனர்குடம் மாதவராஜ் இப்படி பெரு
நாட்கள் உதயசங்கரும், சக மனிதன் உதயசங்கர் என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.
இரவு
கடைசி டவுன் பஸ்ஸில் ஒரு அலுவலக ஊழியனும், ஒரு சம்சாரியும் பயணிப்பார்கள். அரசு ஊழியன்
அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் மறதியில் பேண்ட் பாக்கெட்டில் கிடந்தது.
இன்னொருவேன்
சம்சாரி, மளிகைக் கடைக்காரனுக்கு தரவேண்டி எடுத்து வந்த ஐநூறு ரூபாய், மளிகைக் கடை
பூட்டியிருந்தால் பையில் இருந்தது.
எதேச்சையாக
இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அமர நேர்கிறது.
இருவருமே
ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர். சம்சாரியின் முகத்திலிருந்த வெட்டுத் தழும்பு அவன்
பாக்கட் அடிப்பவனேயென அரசு ஊழியனை நம்ப வைக்கும்.
எதுவுமே
நேராமல் பஸ் பயணம். சகமனிதர்களை சந்தேகப்படும் படியானதொரு உலகில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது.
ஒரு நிறுத்தத்தில்
இருவருமே இறங்கிக் கொள்பார்கள். வாழ்வு ஆளுக்கொரு
திசைக்கு அவர்களை செலுத்தும். கொஞ்ச தூரம் நடந்து போய் திரும்பிப் பார்த்து சிரித்துக்
கொள்வர்கள். எப்படியானதொரு குரூரமான சமூக விளிம்பில் சக மனித அன்பு சிக்கித் தவிக்கிறது!
உதயசங்கரின்
எல்லாக் கதைகளுமே எளிமையும், சிடுக்கல் இல்லாதவைகளும்தான். அது தெளிந்த நீரில் விழும்
நாணயத்தைப் போல் நம் கண்ணெதிரே தரையைத்தொடும்.
உதயசங்கரின்
மாஸ்டர் பீஸ் கதை ஒன்று உண்டு. ‘டேனியல் பெரிய நாயகத்தின்
புல்லாங்குழல்’ ஒவ்வொரு படைப்பாளியையும்
தன் வாழ்நாளில் லௌகீக நச்சரிப்பு இப்படி ஒரு கதை எழுத வைத்திருக்கிறது.
கந்தர்வன்
தன் ராமன் சாரை முதல் பென்ஷன் பணத்தில் புல்புல்தாரா வாங்க வைத்ததும்,
தமிழ்செல்வன்
கருப்பசாமியின் அய்யா இசக்கிமுத்துவை சதுரம் சதுரமாய் இட்லி சுட வைத்ததும்,
நான்
என் ஏழுமலையை பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் பழக்கூடை சுமக்க வைத்ததும்,
உதயசங்கர்
தன் டேனியல் பெரியநாயகத்தின் தூசடைந்து மூலையில் கிடக்கும் புல்லாங்குழலை தன் மகனே எடுத்து அப்பாவை
வாசிக்க சொல்வதும் தற்செயலானவைகள் அல்ல.
ஒரு சமூகம்
கலைஞர்களிடம் காட்டும் குரூரம் அது. அச்சமூக வாழ்வியலைக்
கூர்ந்து அவதானிக்கும் ஒரு படைப்பாளி, பிரதேசங்கள் மாவட்டங்களைத்
தாண்டி தன் அசலான மனிதர்களை படைப்பாக்குகிறான். அப்படித்தான்
கலைவயப்பட்ட கலைஞர்களை லௌகீகமும், அரசும் புதைகுழியில் நெட்டித்தள்ளுவதை
இவர்கள் எல்லோருமே படைப்பாக்கியிருக்கிறார்கள்.
டேனியல்
பெரிய நாயகத்தின் மகன் ஏசுராஜைப் போல சில மகன்கள் மட்டும் அதிசயமாக புதைகுழியிலிருந்து
மீள அப்பாக்களுக்கு தங்கள் பிஞ்சுக் கரங்களை நீட்டுகிறார்கள்.
உதயசங்கர்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் எழுத்தாளனில்லை. கரிசல் மண்ணிலிருந்து
எழுதத் துவங்கியிருப்பினும், பணி நிமித்தம் வெவ்வேறு நிலப்பரப்புகளில்
வாழ்வு வேர்பிடிக்க ஆரம்பிக்கையில் வேறொரு இடத்தில் பிடுங்கி நடப்பட்டவர் அவர்.
அதனாலேயே அவர் படைப்பு முழுவதையும் பொதுவான மனித மனங்களே ஆக்ரமித்துக்
கொள்கின்றன.
‘ஒரு பிரிவுக் கவிதை’ ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்’ ‘பெயிண்டர் பிள்ளையின் ஒருநாள் காலைப் பொழுது’ ‘பூனை வெளி’ ஆகிய நான்கு கதைகளும்
வேறு எவராலும் எழுதிவிட முடியாத அசாத்திய படைப்புகள். இந்த உயரத்தை
அடைவதற்கே ஒவ்வொரு படைப்பாளியும் தன் ஜீவிதம் முழுக்க எழுதியெழுதித் தீர்க்கிறான்.
உதயசங்கர் மிக எளிமையாக இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதே நம் பெருமிதங்களில்
ஒன்று.
வேளானந்தல்
ஸ்டேஷனுக்கு பக்கத்து ஸ்டேஷன் தண்டரை. இதுவும் திப்பக்காட்டின்
தென்பக்க நீட்சிதான். அதுவும் எப்போதாவது பயணிகள் வந்து போகும்
ஒரு ரயில் நிலையம்தான். திருச்சூரிலிருந்து பிடுங்கி நடப்பட்ட
மலையாள இலக்கியமறிந்த வெங்கடேஸ்வரன் அதன் ஸ்டேஷன் மாஸ்டர்.
சற்று
நின்று கிளம்பும் ரயிலில் அவர் ஏறி பக்கத்து ஸ்டேஷனில் உயிர்ப்புடன் இயங்கும் இன்னொரு
படைப்பாளியோடு எப்போதும் தன் இலக்கிய, அரசியல் உரையாடலைத்
துவக்குவார். இருவருக்குமே மார்க்சியம்தான் அடிப்படை.
அவர்
பஷீரை சொல்லும்போது, பதிலுக்கு இவர் ஜி. நாகராஜனை அறிமுகப்படுத்துவார். இப்படித்தான் உதயசங்கர்
மலையாளம் கற்று, தேர்ந்து, பல மலையாளக்
கதைகளை தமிழ்ப்படுத்தினார். இது இன்னொரு மொழியின் மீதுள்ள பற்று
மட்டுமல்ல. வெறி. அம்மொழியைக் கற்று அந்த
இலக்கியங்களை அதன் சொந்த வாசனையோடு முகர்ந்துவிட வேண்டுமென்ற அதீத ஆர்வம். அதையும்கூட வேளானந்தல் ஸ்டேஷனின் பிடுங்கித் தின்னும் தனிமையே அவருக்குக் கற்றுத்தந்தது.
தோழர்
வெங்கடேஸ்வரன் கடைசிவரை கற்றுக் கொடுப்பவராக மட்டுமேயிருந்தார். கற்றுக் கொள்ளவேயில்லை. இருந்திருந்தால் பல நல்ல தமிழ்ப்
படைப்புகள் மலையாளத்திற்குப் போயிருக்கும்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுவர்
இலக்கியம், பாடல், ஓமியோபதி மருத்துவம்
என உதயசங்கரின் உலகம் விரிந்து கொண்டேயிருக்கிறது. இது ஒரு வகை
அசாத்தியம்தான். ஆனால் என் பார்வையில் சிறுகதைகளில்தான் உதயசங்கர்
வேறொரு உயரத்தை எட்டியிருக்கிறார். இயற்கையாகவே இதன் அடுத்த பரிணாமம்
நாவல். அவருக்கமைந்த மொழியிலேயே கரிசல் நிலப்பரப்பைத் தாண்டி
முப்பது வருடங்களுக்கும் மேலாக அலைக்கழித்த அவர் வாழ்வையும், சந்தித்த மனிதர்களையும், கவித்துவத்திற்கு வெகு அருகாமையில்
அமைந்த அவர் மொழியில் எழுத வேண்டி ஒரு பெரும் நாவல் அவருக்கெதிரே அரூபமாய் நிற்பதாகவே
தோன்றியது.
கோபல்லபுரம்
போலவோ,
நீலகண்டபறவையைத் தேடி போலவோ ஒரு பெரும் வாழ்வை எழுதுவதற்கான வலுப்பெற்ற
கலைஞன்தான் உதயசங்கர் என்ற ஐந்தடிக்கும் குறைவான அந்த மனிதன்.
நான்
அவர் வலைப்பக்கத்தை எப்போதும் பார்ப்பதில்லை. முகநூல் பக்கம்
போனதில்லை. இந்த சாதரணங்கள் முப்பது வருடங்களுக்கு முன்பான எங்கள்
தோழமையை அழித்து விடக்கூடும் என்ற அச்சம் உள்ளூரக் காரணமாயிருக்கலாம்.
மழையில்
நனைந்து,
வெயிலைக் குடித்து வேளானந்தல் ரயில் நிலைய அகன்ற தண்டவாள வெளிகளில் பேசித்
தீர்த்த பல மணி நேர ஈரம் மிகுந்த உரையாடல்கள் மட்டும் போதும் எனக்கு.
நன்றி - செம்மலர் ஆகஸ்ட் 2016