க கத்திக்கப்பல்
உஉதயசங்கர்
கப்பலில் போகவேண்டும் என்று அரவிந்த் ஆசைப்பட்டான்.. அவனுடைய அப்பா தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கப்பல் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார். பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த கப்பலைப் பார்த்த அரவிந்த் ஆ வென்று வாயைப் பிளந்தான். கப்பலில் ஏறிப் பார்த்தான். அன்று இரவு அவன் ஒரு கப்பலில் ஏறினான்.
அரவிந்த்
வெள்ளைச்சீருடை அணிந்திருந்தான். குட்டிப்பையன் குட்டிச்சீருடை அணிந்திருந்தான். அவனைப்
பார்த்து ஊழியர்கள் வணக்கம் சொன்னார்கள். கப்பல் அலைகளில் ஏறி இறங்கி தாலாட்டியது.
மிதந்து கொண்டிருந்த கப்பலில் அரவிந்த் உறங்கிக்கொண்டிருந்தான்.
“
மணி ஏழாச்சு.. இன்னும் என்ன தூக்கம்? “ என்று அம்மாவின் குரல் கேட்டது. கப்பலில் எப்படி
அம்மா வந்தாள்? என்று யோசித்துக் கொண்டே கண்களைத் திறந்தான். வீட்டில் கட்டிலில் படுத்திருந்தான்.
சோ என்று சத்தம் கேட்டது. சன்னல் வழியே பார்த்தான். மழை பெய்து கொண்டிருந்தது. இரண்டு
நாட்களாய் விடாமல் மழை. புயலும் வீசியதாய் அம்மா சொன்னாள். அரவிந்த் எழுந்து உட்கார்ந்து
மழையை வேடிக்கை பார்த்தான்.
தெருவில்
மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென்று
அரவிந்துக்கு யோசனை. உடனே அவன் ஒரு காகிதத்தை எடுத்தான். அதை மடித்துக் கப்பல் செய்தான்.
அதுவும் கத்திக்கப்பல். அழகான கப்பல். பிறகு ஒரு காகிதக்கொடி செய்தான். ஒரு பொடிக்குச்சியில்
காகிதக்கொடியை ஒட்டினான். அதை கத்திக்கப்பலின் உச்சியில் செருகி வைத்தான்.
மழை
வெறித்து விட்டது. ஆனால் தெருவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அரவிந்த் மெல்ல அவனுடைய
கப்பலுடன் வெளியே போனான். கத்திக்கப்பலைத் தண்ணீரில் விட்டான். அரவிந்த் அதில் ஏறிக்
கொண்டான். முதலில் கத்திக்கப்பல் தடுமாறியது. கவிழ்ந்து விடுவது போல ஆடியது. பிறகு
தடுமாறாமல் வேகமாக தண்ணீரில் மிதந்து சென்றது. அரவிந்த் அதன் முகப்பில் நின்றான். மிதந்து
சென்ற கப்பல் அந்தத் தெருவைக் கடந்தது. அவனுடைய பள்ளிக்கூடத்தைத் தாண்டியது. பள்ளிக்கூடத்தில்
யாரும் இல்லை. யாராவது இருந்தால் கையை ஆட்டலாம் என்று நினைத்தான். ஆனால் பள்ளி வாசலில்
மணி என்ற நாய்க்குட்டி மட்டும் நின்று கொண்டிருந்தது. அரவிந்த்,
“
மணி! நான் கப்பல்ல போறேன்.. வெளிநாடு போய்ட்டு வாரேன்..” என்றான். மணி மழைநீரை ஒரு உதறு உதறிவிட்டு பௌ என்று குரைத்தது.
பின்னர் கத்திக்கப்பல் ஒரு வாய்க்காலுக்குச் சென்றது. அங்கே ஒரு தவளை வாயைத் திறந்து
கப்பலைப் பார்த்தது.
“
நானும் வரட்டா? “ என்று கேட்டது. அரவிந்த் யோசித்தான்.
“
இல்லை இல்லை.. நான் திரும்பிவர நாளாகும்..”
என்றான். “ ஓ அப்படியா.. எனக்கு
முட்டைகளிட வேண்டும்…நிறைய வேலைகள் இருக்கு..” என்று
சொல்லி ஒரு குதிகுதித்தது.
வாய்க்காலில்
ஓடிய கத்திக்கப்பல் ஒரு குளத்துக்குச் சென்றது. குளத்தில் ஒரு நண்டு வேகமாக கத்திக்கப்பலைப்
பிடிக்க வந்தது. ஆனால் கத்திக்கப்பல் அதன் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் வளைந்து
வளைந்து சென்றது.
குளம் நிரம்பி ஆற்றுக்குச் சென்றது. கத்திக்கப்பலும்
ஆற்றுக்குச் சென்றது. ஆற்றங்கரையில் ஒரு பையன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த கத்திக்கப்பல்
நின்று விட்டது.
“
ஏன் அழுகிறே..” என்று அரவிந்த் கேட்டான். அதற்கு அந்தப்பையன்,
“
நான் சாப்பிட்டு இரண்டு நாளாச்சு.. ஆத்துத்தண்ணியைத் தான் குடிச்சிகிட்டிருக்கேன்.. எனக்குப்
பசி தாங்கல..’
“
உனக்கு வீடு இல்லையா? “
“
புயல்ல எங்க வீடு அடிச்சிகிட்டுப் போயிருச்சி.. அப்பா இல்லை.. அம்மா எங்காவது சாப்பாடு
கிடைக்குமான்னு தேடப்போனாங்க.. இன்னும் வரலை..”
என்றான்
அந்தப்பையன். அரவிந்த் கப்பலிலிருந்து ஏராளமான உணவுப்பொட்டலங்களை எடுத்து அந்தப்பையனிடம்
கொடுத்தான்.
“
உனக்கு வேற ஏதாவது வேணுமா? சும்மா கேளு..”
என்று
கேட்டான் அரவிந்த்.
“
எனக்குப் படிக்கப்புத்தகம் வேணும்..”
என்றான். அரவிந்த் கத்திக்கப்பலின்
அலமாரியிலிருந்து புத்தம் புதிய கதைப்புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான். அந்தப்பையன்
அரவிந்துக்கு நன்றி சொன்னான்.
இப்போது ஆறு நிதானமாக ஓடியது. அரவிந்துக்கு இந்த
உலகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது.
ஆற்றின்
இரு கரையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் அவன்.
ஆறு
ஓடி ஓடி கடலில் சென்று கலந்தது. கத்திக்கப்பலும் கடலுக்குள் சென்றது. கடலில் பெரும்
அலைகள் வீசின. கத்திக்கப்பலை மேலும் கீழும் அசைத்தன. கத்திக்கப்பலின் கேப்டன் யார்?
அரவிந்த் இல்லையா? அவன் கத்திக்கப்பலை அழகாக ஓட்டினான்.
இப்போது
கடல் அமைதியாகி விட்டது. கத்திக்கப்பல் கடலின் நடுவில் மிதந்து கொண்டிருந்தது. இனி
கவலையில்லை. அதன் உச்சியில் ஒரு கொடி காற்றில் பறந்து கொண்டிருந்தது.
அரவிந்த்
எங்கே?
அதோ!
அங்கே
கப்பலின் மேல்தளத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் ஒரு புத்தகம் விரிந்து கிடந்தது.
எதிரே நிலா
மறைவதையும் புதிய சூரியன் உதிப்பதையும் பார்த்துக்
கொண்டிருந்தான்.
நன்றி -
பொம்மி