Thursday 13 April 2017

மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி

மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி

ஆதி
வணக்கம் நேயா, பரீட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சா?”
“ஓ புத்தகப் புழு! நீ திரும்ப வந்திட்டியா? இவ்வளவு நாள் காணாமப் போயிருந்தியே... ம்... ஆமா நீயும் உன்னோட பள்ளிக்கூடத்துல படிக்கப் போறதா சொல்லியிருந்தேயில்ல, மறந்தே போயிட்டேன்”
“ஆமா நேயா, நானும் படிக்கத்தான் போயிருந்தேன். எனக்கு ஏப்ரல் மாசம் முதல் வாரம் லீவு விட்டுட்டாங்க. அதன் புதுசா ஒரு புத்தகம் வாசிச்சிட்டு நேரா உன்னைப் பார்க்க வந்தி்ட்டேன்.”
“சரி, இந்த தடவ என்ன புத்தகம் வாசிச்ச?”
“அந்தப் புத்தகம் பேரு ‘பேசும் தாடி’, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதினது”
“பேசும் தாடியா? தாடி எப்படிப் பேசும்?”
“ஏன் பேசக் கூடாது? தாவரங்கள் தங்களோட மொழில பேசுது. உயிரினங்கள் தங்களோட மொழில குரல் கொடுக்குது. அதே வகையைச் சேர்ந்த உயிரினத்துக்கு அதெல்லாம் புரியுதே.”
“நீ சொல்றதெல்லாம் அறிவியல்.”
“ஆமா, அறிவியல்தான். ஆனா, இந்தக் கதை நிஜமும் மாயாஜாலமும் நிரம்பிய கதை.”
“ஆஹா! மாயாஜாலமா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே”
“அப்படீன்னா, இந்தக் கதையில வர்ற தாத்தாவ உனக்குப் பிடிக்கும். ஏன்னா அவருடைய தாடி பல மாயாஜாலங்களைச் செய்யுது.”
“ஓ! அதான் கதையோட பேரு ‘பேசும் தாடி’யா?”
“சரியா கண்டுபிடிச்சிட்டீயே. அந்தத் தாடி மட்டுமில்ல, இன்னும் நிறைய சுவாரசியங்கள், இந்தப் புத்தகத்துல நிரம்பியிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு ‘சொலவடை’ சொல்லுற பாட்டியும் இந்தக் கதையில வர்றாங்க”
“அது என்ன ‘வடை’?”
“படிப்பறிவு இல்லாதவங்கன்னு நம்பப்படுற கிராமத்து மக்கள் பழமொழிகளைப் போல நிறைய சொற்றொடர்களை உருவாக்கியிருக்காங்க. கிண்டலும் கேலியுமா அவங்க உருவாக்கின பல சொலவடைகள் இந்தக் கதையில வருது. நெஜமாவே கிராமத்து மக்கள் இப்படித்தான் பேசிக்குவாங்க.”
“ஓ, சொலவடைன்னா இதுதானா?”
“அப்புறம் நீ ரொம்பக் கவலைப்படாத, சாப்பாடு பத்தியும் நிறைய பேசிக்கிறாங்க. ஆரோக்கியமான சாப்பாடு பத்தியும் இந்தப் புத்தகம் சொல்லுது.”
“சாப்பாடு பத்தியும் இருக்கா, சூப்பர். அப்புறம் என்னவெல்லாம் அந்தக் கதையில இருக்கு?”
“நிறைய இருக்கு. அதுல ரொம்ப முக்கியமா வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எறும்புகள், பறவைகள்ளோட உலகத்துக்கே கூட்டிட்டுப் போயிடுறாங்க”
“அதெப்படி முடியும்?”
“முடியும். ‘அற்புத உலகில் ஆலிஸ்’ கதையில ஒரு திரவத்தைக் குடிச்சா ஆலிஸ் குட்டியாகிடுவா, அப்புறம் ஒரு கேக்கைச் சாப்பிட்டா மீண்டும் பெருசாகிடுவா இல்ல”
“ஆமா, அந்தக் கதைய நான் படிச்சிருக்கேனே.”
“அதேமாதிரிதான் அப்புறம் சொல்ல மறந்துட்டனே. பேசும் தாடி புத்தகத்துல கறுப்புவெள்ளை ஓவியங்கள் நிறைஞ்சிருக்கு. அழகா வரைஞ்சிருக்கிறாரு டி.என். ராஜன். வடிவமைப்பும் ரொம்ப நல்லாயிருக்கு. சின்னப் பசங்க கையில வைச்சு வாசிக்கிற மாதிரி புத்தகத்தோட அளவும் சின்னதா இருக்கு.”
“எழுத்தாளர் உதயசங்கரின் ஒரு சில கதைகளை ஏற்கெனவே வாசிச்சிருக்கேன். அந்தக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”
“அப்படீன்னா, இந்த மாயாஜாலக் கதையும் உனக்குப் பிடிக்கும்.”
“இவ்வளவு சொன்ன பிறகும் தாமதப்படுத்துவேனா, நாளைக்கே வாங்கிடுறேன்” என்று சொல்லி புத்தகப் புழுவிடம் இருந்து விடைபெற்றாள் நேயா.
நன்றி - மாயாபஜார்



Sunday 9 April 2017

தழும்பின் கதை

தழும்பின் கதை

உதயசங்கர்

எப்படியும் இன்று ஒரு கதை எழுதி விட வேண்டும் என்று உட்கார்ந்து அவருடைய லேப்டாப்பைத் திறந்த கதாசிரியருக்கு ஒரு மணி நேரத்தைக் கடத்தியும் ஒரு எழுத்தும் அடிக்க முடியவில்லை. கதாசிரியர் கதையைத் தேடித் தேடி கடைசியில் சோர்ந்து போனார். யோசிக்கும்போது நெற்றியைத் தடவுகிற பழக்கம் உண்டு. கைவிரல்களில் தட்டுப்பட்ட மேடும்பள்ளமுமான அந்தத் தழும்பு.. ஆம் அந்தத் தழும்பு.. அப்போது தான் அவருக்கு தன்னுடைய நெற்றியில் எப்படி இந்த தழும்பு வந்தது என்று ஞாபகப்படுத்தினார். அட இந்தத்தழும்பின் கதையைச் சொல்லலாமே. இப்படி ஆரம்பிக்கலாம்.
நான் தழும்பு பேசுகிறேன். என்ன வாசகரே அதிர்ச்சியாக இருக்கிறதா?  
என்ன கதாசிரியரே கதை விடுறீங்க. எங்கேயாவது தழும்பு கதை சொல்லுமா? கெக்கேகெக்கே
என்று சிரிக்கிற உங்களைப்பார்த்து கதாசிரியர் கொஞ்சம் யோசிக்கிறார். வாசகர்களின் கருத்துக்களை அலட்சியம் செய்யலாமா? அப்போது நவீனச்சிறுகதையின் பிதாமகரான வ.வே.சு. ஐயர் அவருடைய நீண்ட தாடியைத் தடவிக்கொண்டே வந்தார்.
“ ஏம்ப்பா.. 1916-லேயே நான் அரசமரம் கதை சொல்றமாதிரி எழுதியிருக்கேன். அப்பவே அதை யாரும் ஒண்ணும் சொல்லல்லை… “
கதாசிரியரின் ஆதர்ச எழுத்தாளரான புதுமைப்பித்தன் வெற்றிலைச்சிவப்பு நாக்கில் எப்படி ஏறியிருக்கிறது என்று நாக்கை நீட்டிப்பார்த்தவர் கதாசிரியரைப்பார்த்து,
“ வே..இப்படியெல்லாம்கெடந்து யோசிச்சீர்னா ஒரு கதை உம்மால எழுத முடியாதுவே… நாங்கூட மூட்டைப்பூச்சி கதை சொல்ற மாதிரி எழுதியிருக்கேன்… வாழையடி வாழையாய் வரப்போகிற உம்ம வாசகன் புரிஞ்சிக்கிடுவான்…. எதைப்பத்தியும் கவலைப்படாம எழுதும்வே..”
என்று நமுட்டுச்சிரிப்புடன் சொன்னார். அவுஹ சொன்னபிறகு கதாசிரியருக்கு அப்பீலே கிடையாது. எல்லாக்கிலேசங்களையும் புறந்தள்ளிவிட்டு தழும்பை கதை சொல்லச்சொன்னார்.
உள்ளங்கையளவுக்கு காசியின் நெற்றியில் இருந்த அந்தத் தழும்பு வேல்ச்சாமியைப் பார்த்ததும் முகம் சுளித்தது. தன்னுடைய ஒழுங்கில்லாத, கோரைகோரையான விளிம்புகள் சற்று சுருங்கி விரிந்தன. உடனே கணத்தின் பின்னத்தில் ஒரு வலி அந்தத் தழும்பில் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த வலியில் மூளையின் செல்கள் மரணத்தை கண்முன்னே கண்டமாதிரி பயந்து நடுங்கின. அந்த நடுக்கம் காசியின் வலதுகையை மேலே தூக்கி அந்தத் தழும்பைத் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தியது. சொரசொரப்பான காசியின் வலது உள்ளங்கை வழுவழுப்பான தழும்பைத் தடவியபோது வளர்ப்புநாயைத் தடவிக்கொடுக்கும்போது  சொகமாக கழுத்தை நீட்டுமே அப்படி அந்தத் தழும்பும் விரிந்து கண்களை மூடிப் பெருமூச்சு விட்டது. அந்தத்தழும்பை மறைக்க எவ்வளவோ பிரயத்தனப்பட்டான் காசி. அதேபோல அந்தத்தழும்பிற்கான சம்பவத்தையும் மறக்க முயற்சித்தான். ஆனால் வேல்ச்சாமி கண்ணில்படும்போதெல்லாம் அந்தக்காட்சி அவன் கண்முன்னே அத்தனை துல்லியமாக ஓடியது. அந்தத்துல்லியத்தில் அவனே கவனித்திராத இன்னும் கூடுதலான விவரங்களும் இருந்ததைப்பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனை நோக்கி வந்த கல் அப்போது தான் தார்ரோடு போடுவதற்காக கொட்டி வைத்திருந்த பெரிய ஜல்லிக்கல். அதுவரை மண்சாலை தான். அந்தக்கல் சப்பட்டையாகவும் இல்லாமல், சதுரமாகவும் இல்லாமல், அறுங்கோணமாக விளிம்புகளில் கிரஷர் கட்டிங் வரிகளுடன் இருந்ததை இப்போது உணரமுடிந்தது. அதனால் தான் இத்தனை கோரமாய் அந்தக் காயமும் தழும்பும் காசியின் நெற்றியில் அழிக்க முடியாதபடிக்குத் தோன்றிவிட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எப்போதும் கல் எறிவதைப்போல வேல்ச்சாமியின் கை தலைக்கு மேலே தூக்கி உடலை முன்னால் வளைத்து வீசி எறியவில்லை. அவனுடைய முழுபலத்தையும் அந்த ஜல்லிக்கல்லில் செலுத்தி பிரமாஸ்திரத்திடம் மந்திரம் சொல்லி அனுப்பியதைப்போல ஜல்லிக்கல்லை அனுப்பினான். வீசி எறியப்பட்ட கல் அவனை நோக்கி வருவதைப் பார்த்தான் காசி. ஆனால் அசையவில்லை. மூளை குனிந்து கொள் என்றோ, ஓடிவிடு என்றோ அலாரம் அடித்ததைப்போலச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. காசி அவனுடைய தலையைக் குறிவைத்து வந்து கொண்டிருந்த கல்லின் வேகத்தையும் சுழன்று வரும் அதன் அழகையும் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்.
என்ன இருந்தாலும் வேல்ச்சாமி வேல்ச்சாமி தான். சின்னவயசிலிருந்தே அவனுக்கு எல்லாக்கலையும் கைவந்தது. இத்தனைக்கும் அவனும் காசியும் விரோதிகளில்லை. தீராத பகையென்று எதுவும் கிடையாது. சின்ன வயசில் இருந்தே இரண்டு பேரும் ஒரே தெருவில் குடியிருந்தார்கள். ஒன்று போலவே நகராட்சி ஆரம்பப்பள்ளிக்குப் போனார்கள். இரண்டு பேருக்கும் ஒன்று போலவே படிப்பு வரவில்லை. இரண்டுபேரும் ஒன்று போலவே பள்ளிக்கூடம் போகாமல் காடுகரை என்று சுற்றினார்கள். ஓணான் அடித்தார்கள். வேல்ச்சாமி எப்படியோ ஒரு கவட்டாபுல்லை வாங்கி வந்தான். அந்த கவட்டாபுல்லில் வைத்து எறிவதற்காக சின்னச்சின்ன கற்களைப் பொறுக்கிச் சேர்த்து வைத்தான் காசி. அந்தக் கற்களின் மீது ஒரு அணிலின் பெயரோ, ஒரு மைனாவின் பெயரோ, ஒரு சிட்டுக்குருவியின் பெயரோ ஒரு ஓணானின் பெயரோ எழுதப்பட்டிருந்தது. வேல்ச்சாமி மரத்தின் மீது ஒரு மைனாவைப்பார்த்து விட்டால் வைத்தகண்ணை எடுக்க மாட்டான். அரைஞாண் கயிற்றில் ஆடிக்கொண்டிருக்கும் டவுசரின் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கவட்டாபுல்லை கையில் எடுப்பான். பின்னால் கையை நீட்டினால் காசி அவனுடைய டவுசர் பையில் சேகரித்து வைத்திருக்கும் அந்த சிறிய உருண்டைக்கற்களில் ஒன்றை எடுத்துக் கொடுப்பான். அந்தக்கல்லை வாங்கி எதற்கென்றே தெரியாது. உதட்டிலும் நெற்றியிலும் சாமி கும்பிடுவதைப்போல வைத்து முணுமுணுப்பான். சிறிய அந்த தோல்த்துண்டில் கல்லை வைத்து இழுப்பான்.
பின்னால் நின்று கொண்டிருக்கும் காசி மரத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். விர்ர்ர் என்று ஒரு சத்தம் கேட்கும். காசியின் கண்முன்னால் ஒரு மைனா சொத்தென்று கீழே விழும். இரண்டு பேரும் சேர்ந்து மைனாவைச் சுட்டுத் தின்பார்கள்.  கவட்டாபுல் தான் வேண்டும் என்பதும் கிடையாது. சிறிய கல் கிடைத்தாலும் துல்லியமாக இலக்கைத் தாக்கிவிடுவான். தெருவில் உள்ள பையன்களுக்கு அத்தனை விளையாட்டுகளையும் வேல்ச்சாமி தான் சொல்லிக்கொடுத்தான். எந்த விளையாட்டிலும் அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. அவன் எந்த அணியில் இருந்தானோ அந்த அணியே வெற்றி பெற்றது. எல்லோரும் அவனுடைய அணிக்குப்போவதற்கு ஆசைப்பட்டனர். எல்லோரும் பச்சைக்குதிரை விளையாட்டில் ஒருத்தரைக்குனிய வைத்து தாவினால் வேல்ச்சாமி மூன்று பேரை குனிய வைத்துத் தாண்டினான். எத்தனை உயரத்திலிருந்தும் குதித்தான். குதித்து அப்படியே நின்றான். எவ்வளவு நீளத்தையும் தாண்டினான்.
கிணற்றில் வாளிவிழுந்தால் எடுத்துக்கொடுத்தான். வீடுகளில் பாம்பு புகுந்து விட்டால் பிடித்து விளையாடினான். ஓணான்கள் அவனைப்பார்த்து விட்டால் தலை தெறிக்க ஓடிவிடும். தெருவில் உள்ள பையன்களுக்கு அவன் சாகசவீரனாக இருந்தான். காசி எப்போதும் அவனோடு ஒட்டிக்கொண்டே அலைந்தான். வேல்ச்சாமி இளைஞனான போது சில்லரை வியாபாரம் செய்தான். மதுரை விளக்குத்தூண் கடைகளில் சேலை துணிமணிகள் வாங்கி தவணைக்குக்கொடுப்பது, புளி, மிளகாய் வத்தல் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்பது, பழைய பேப்பர், புத்தகம் வாங்கி விற்பது, திருவிழா சமயங்களில் கிலுக்கு, பொம்மைகள், பலூன்கள், விற்பனை செய்வது என்று வியாபாரியாக மாறிவிட்டான்.
 காசி சின்னச்சின்ன திருட்டுகளாகச் செய்ய ஆரம்பித்தான். வெளியே காயப்போட்டிருக்கும் துணிமணிகளைத் திருடுவான். அசந்து போயிருக்கும் வீடுகளில் ரெண்டு பாத்திரபண்டங்களைத் திருடுவான். டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் திருடுவான். பெரும்பாலும் அவனுடைய திருட்டுகளுக்கு போலீஸ் ஸ்டேஷன் போகாத மாதிரியான பொருட்களைத் திருடுவான். திருட்டுப்போன பொருட்களின் மதிப்பை விட போலீஸ்காரர்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்ற யதார்த்தம் மக்களுக்குத் தெரியும். அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போகமாட்டார்கள். காசிக்கு அன்றன்றைய பாட்டுக்குக் கிடைத்தால் போதும்.
என்ன கதை சொல்றீங்க கதாசிரியரே! ஏதோ தழும்புக்கதைன்னு சொன்னீங்க.. ஆனால் வேற எங்கேயோ போய்க்கிட்டிருக்கீக.. எங்களுக்கும் வேற பாடுசோலி கிடக்குல்ல… ஏதாவது சொன்னா  வ.வே.சு., புதுமைப்பித்தன்னு பெரிய ஆட்களைத் துணைக்குக்கூப்பிடுறீக….
அடடா.. இப்படித்தான் எதையாவது சொல்ல ஆரம்பித்து எதையாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள் கதாசிரியர்கள். இது ஒரு வியாதி தான். தக்கசமயத்தில் இடையீடு செய்ததுக்கு நன்றி வாசகரே!
வேல்ச்சாமிக்குக் கலியாணம் முடிந்தது. மஞ்சுளா வீட்டுக்கு வந்த நேரம் தெருவில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் வேல்ச்சாமியின் வீட்டுக்கு முன்னாலேயே கிடையாய் கிடைந்தார்கள். உடனே மஞ்சுளா அந்தரியோ இல்லை சுந்தரியோ என்று கற்பனைக்குதிரைகளை ஓடவிடாதீர் வாசகரே! அவள் மிகச்சாதாரணமான பெண்தான். அப்புறம் என்ன விஷேசம்? ஏன் இளைஞர்கள் கூட்டம் அங்கே குவிந்திருந்தது என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? காசியைக்கேட்போம்.
மஞ்சு அந்தத் தெருவில் உள்ள எல்லோரிடமும் பேசினாள். அதுவும் இளைஞர்களிடம் சிரித்துப்பேசினாள். அந்தச் சிரிப்புக்கும் அவள் பேசுகிற பேச்சுகளுக்கும் வேறு வேறு அர்த்தங்களை ஒவ்வொருத்தரும் நினைத்துக் கொண்டார்கள். அதற்கு அவள் எப்படி ஜவாப்தாரியாக முடியும்? அவளை வெள்ளந்தி என்றும் சொல்ல முடியாது. அவளுக்கு ஆண்களைப் பிடித்திருக்கிறது. ஆண்களின் மீதான ஒரு ஈர்ப்பு அவளைச் சிரிக்க வைத்தது. ஆணின் அருகாமையை அவள் மிகவும் விரும்பினாள். வேல்ச்சாமி மாதத்தில் பாதிநாட்கள் ஊரில் இருப்பதில்லை. ஒவ்வொரு முறை ஊரிலிருந்து வியாபாரம் முடிந்து வரும்போதும் வேல்ச்சாமியின் அம்மா எல்லாவற்றையும் ஒப்பிப்பாள். வேல்ச்சாமிக்கு வெளம் பொங்கி வரும். அவன் மஞ்சுவை எதுவும் கேட்க மாட்டான். அப்படியே கேட்டாலும் அவள் பதில் சொல்லமாட்டாள். ஒரு மோகனச்சிரிப்பைச் சிந்துவாள். ஒயிலாக நடந்து வேல்ச்சாமியின் அருகில் வந்து இறுக்கி அணைப்பாள். உதடுகளைக் கவ்வி இழுப்பாள். வேல்ச்சாமியின் கோபம் புகையாகி விடும். அவன் ஊர்ப்பயல்களைத் திட்டுவான். அடுத்த ஊருக்கு வியாபாரத்துக்குப் போகும்வரை வீட்டு வாசலில் காவல் இருப்பான்.
எல்லோரையும் போல காசியும் மஞ்சுவைப் பார்ப்பதற்காக வேல்ச்சாமியின் வீட்டின் முன்னால் நின்றான். வேல்ச்சாமிக்கும் அவனுக்குமான தொடர்பு இற்றுப்போய் வெகுகாலமாகி விட்டது. ஆனால் அந்தத் தொடர்பை இப்போது புதுப்பிக்க நினைத்தான். வேல்ச்சாமியின் அம்மாவிடம் போய் வலியப்பேசினான். உயரமாக ஒல்லிக்குச்சியாக இருந்த வேல்ச்சாமியை விட கட்டுமஸ்தானாக இருந்த காசி அவளைக் கவர்ந்தான். தினமும் வந்து மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
வேல்ச்சாமி ஊரிலிருந்து வந்த அன்று தான் அந்தச் சம்பவம் நடந்தது. காசி வழக்கம் போல மஞ்சுவைப்பார்ப்பதற்காக வேல்ச்சாமியின் வீட்டிற்குப் போனான். வேல்ச்சாமியின் அம்மா எல்லாவிவரங்களையும் வேல்ச்சாமியிடம் சொல்லியிருந்தாள். வீட்டு வாசலில் காத்திருந்த வேல்ச்சாமி காசியைப் பார்த்தவுடன் தயாராக வைத்திருந்த கல்லை எடுத்து புகழ்பெற்ற தழும்பு ஏற்படுத்த எறிந்தான். எறிந்த கல் காசியின் நெற்றியில் பட்டவேகத்தில் தெறித்து விழுந்தது. கணநேரத்தில் காசியின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. காசி அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்தான். வேல்ச்சாமி திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளே போனான். மஞ்சுவிடம் எதுவும் பேசவில்லை. எதுவும் கேட்கவில்லை. குளித்து விட்டு நன்றாகச் சாப்பிட்டான். பலூன் வியாபாரப்பையையும் ஸ்டாண்டையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவ்வளவு தானா கதை என்று சலிப்புடன் கேட்கிற வாசகருக்கு சில நிமிடங்கள் பொறுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். வாழ்க்கை விசித்திரமானது என்று கதாசிரியர் நம்புகிறார். ஊருக்குப்போயிருந்த வேல்ச்சாமி திரும்பி வந்தபோது அவன் எதிர்பார்த்த மாதிரியே மஞ்சு காசியுடன் ஓடிப்போயிருந்தாள். அவனுடைய அம்மா மஞ்சுவை வைதாள். வேல்ச்சாமி அவளை எதுவும் சொல்லாதே என்று அம்மாவை அதட்டினான். ஆறுமாதம் கழித்து அதே தெருவுக்கு காசி மஞ்சுவுடன் குடி வந்தான். ஊரிலிருக்கும் பொழுதுகளில் வேல்ச்சாமி தூரத்திலிருந்து மஞ்சுவைப் பார்ப்பான். அவ்வளவு தான். அது போதும் அவனுக்கு. வேல்ச்சாமியின் அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் வேறொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படிச் சொன்னால் மட்டுமே வாசகர்களைத் திருப்திப்படுத்தமுடியும் என்று கதாசிரியர் நம்புகிறார். அத்துடன் கலைக்கும் இப்படியான கற்பிதங்கள் தேவைப்படுகிறது. குரூரமான யதார்த்த வாழ்க்கையில்  எல்லோருக்கும் ஒரு லட்சியக்காதல் தேவைப்படுகிறதல்லவா.
சரி. சரி. கதை முடிந்து விட்டதா? எங்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன என்று கேட்கும் வாசகர்களுக்கு ஒரு பின்குறிப்பு.
நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று கதாசிரியர் புரிந்து கொள்கிறார். கதையின் துவக்கத்தில் கதாசிரியரின் நெற்றித்தழும்பின் கதை என்கிற மாதிரி ஒரு பில்டப் இருந்ததே. இந்தக் கதையின் காசி கதாசிரியர் தானா? என்று கேட்க வருகிறீர்கள் இல்லையா. கதாசிரியர் சொல்ல விரும்புவது என்னவென்றால் காசியும் அவரே. வேல்ச்சாமியும் அவரே. மஞ்சுவும் அவரே.
ஐயோ போதும். போதும். ஆளை விடுங்களய்யா என்று தலைதெறிக்க ஓட நினைக்கும் உங்களிடம் கடைசியாகச் சில வார்த்தைகளைச் சொல்ல நினைக்கிறார் கதாசிரியர்.
மஞ்சு இப்போதும் ஆண்களைப்பார்த்துச் சிரிக்கத்தான் செய்கிறாள். ஏன் வேல்ச்சாமியைப் பார்த்துக் கூடச் சிரிக்கிறாள். வேல்ச்சாமி அவ்வப்போது அவளுக்கு கடன் என்ற பெயரில் பணம் கொடுத்து உதவுகிறான். இதெல்லாம் காசிக்குத் தெரியும். அவன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவனுடைய தொழிலில் மும்முரமாக இருந்தான். ஆனால் வேல்ச்சாமியைப் பார்க்கும்போதெல்லாம் அந்தத்தழும்பின் முகம் சுருங்கி விரிகிறது. பளபளப்பான தன் எல்லைகளை விரித்து ஓரங்களில் ஞாபகத்தின் வரலாற்றை எழுதுகிறது. அத்துடன் இந்தக்கதையை எழுதிய கதாசிரியரிடமும் வாசிக்கிற வாசகர்களிடமும் அந்தத் தழும்பு ஒரு கேள்வியைக் கேட்க நினைக்கிறது. கதாசிரியர் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்கிறார். கலை அமைதி கெட்டுவிடும் என்று சொல்கிறார். அமைதியைக்குலைப்பதற்காகத்தானே எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அப்புறம் அமைதி அமைதி என்று கூவுகிறீர்கள் என்று தழும்பு இடைமறித்தது. எந்தக் கதாபாத்திரம் கதாசிரியர் சொல்வதைக் கேட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உருவாக்குகிற வரைக்கும் தான் கொஞ்சம் பவ்யமாக இருக்கிற மாதிரி இருப்பார்கள். அதற்கப்புறம் சுதந்திரமாகி விடுவார்கள். கதாசிரியர்கள் கையாலாகதவர்கள் தான். ஆனால் என்ன தான் தழும்பு கதாசிரியர் சொன்னபடி கேட்காவிட்டாலும் தழும்பு கதாசிரியர் வழியாகத்தானேப் பேசவேண்டும்.
நீட்டி முழக்கி மிகுந்த நம்பிக்கையோடு தழும்பு கேட்ட கேள்வியை கதாசிரியர் சைலண்ட் மோடில் போட்டு விட்டார். என்ன செய்தாலும் தழும்பு என்ன கேட்டிருக்கும் என்று வாசகர்களுக்குத் தெரியாதா?

நன்றி- மலைகள்





Saturday 8 April 2017

விசும்பல்

விசும்பல்

உதயசங்கர்

மீண்டும் அந்தச் சத்தம். நரேனுக்கு லேசான பயம் துளிர்த்தது. சில நொடிகள் இடைவெளி. அமைதியின் கதவுகளைப் படீரெனத் திறந்து கொண்டு மறுபடியும் அந்தச் சத்தம்.கேட்டது. சத்தம் என்றால் சத்தமில்லை. ஒரு ஈளக்கம். யாரோ ஒரு வயது முதிர்ந்த ஆண் அழுகிற ஒலி. மனசை அறுக்கிற அந்த இழுவை. அழுகை என்று கூடச் சொல்லமுடியாது. அழுகையை அடக்க முயற்சி செய்து முடியாமல் கார்வையுடன் குரல் தழுதழுக்க வருகின்ற ஒலி. நிராதரவான அந்தச் சத்தம் ஒரு ஆணின் தொண்டையில் கோழை அடைத்து தட்டுத்தடுமாறி காற்று வெளியேறும்போது வருகிற பிசிறலான ஒரு சப்தம். சில நிமிடங்கள் தொடர்ந்து கேட்டது. பின்னர் சில நொடிகள் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதி அழுகையை அடக்கியதனால் வந்த அமைதி. மறுபடியும் பீறிட்டு வரும் அழுகையை வாயைப் பொத்தி அடக்க முயற்சிக்கும் சத்தமும் கேட்டது. நரேன் திரும்பிப் பார்த்தான். அருகில் திவ்யா புதுவீட்டின் பெருமிதம் துலங்க ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். உற்றுக்கேட்டால் மட்டுமே தெரிகிற லேசான குறட்டைச் சத்தமும் கேட்டது. மணியைப் பார்த்தான். மணி இரண்டரை. உடம்பில் லேசான நடுக்கம் ஓடி மறைந்தது. திவ்யாவை எழுப்பலாமா? அவளுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும்? அசங்காமல் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். இப்போது மறுபடியும் அந்த அழுகை.  எண்ணெயின் முகத்தை நீண்ட நாட்களாகக் காணாத பெரிய மரக்கதவுக்கீல்களின் அழுகையைப் போல கேட்க ஆரம்பித்தது. உற்றுக் கவனித்தான் நரேன். அது முன்னால் உள்ள படிப்பறையிலிருந்து வருகிற மாதிரி இருந்தது. ஒருவழியாக தைரியத்தை சேர்த்துக் கொண்டு மெல்ல எழுந்து படுக்கையறையை விட்டு வெளியே வந்தான்.
நரேனும் திவ்யாவும் புது வீட்டுக்குக் குடிவந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. இன்னமும் புதிய வீட்டின் மணம் சுவாசத்தில் கலந்து கிளர்ச்சியைத் தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. உற்சாகம் கொப்பளிக்க திவ்யா வீட்டின் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மூலையிலும் சென்று ரசித்துக் கொண்டிருந்தாள். சிறுபிள்ளைகள் ஆச்சரியப்படுவதைப் போல அந்த வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய அடக்க முடியாத சந்தோஷமும், ஆச்சரியம் அவனுக்கு முத்தங்களாக மாறின. அவன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதாகவே நினைத்தான். அவன் எஞ்சினியரிங் படித்து முடித்து அரசு உத்தியோகத்துக்கான குரூப் டூ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி அரசு உத்தியோகத்தில் உட்கார்ந்து விட்டான். இனி கவலையில்லை. பாதுகாப்பான வேலை. நிரந்தரமான சம்பளம். விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வருடத்துக்கு ரெண்டுமுறை சம்பள உயர்வு கிடைக்கும். வேறென்ன வேண்டும்?
அவனும் திவ்யாவும் மிகுந்த முன்யோசனையோடு திட்டமிட்டு வாங்கிய வீடு. பெருநகரை விட்டு வெகுதூரம் விலகி இருந்தாலும் முதன்முதலில் வீட்டைப் பார்த்ததுமே மனதில் பாரதியின் காணிநிலம் வேண்டும் பராசக்தி என்ற கவிதைவரி துள்ளி வந்தது. அப்படி ஒரு ஏகாந்தமான சூழல். சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் எல்லாவீடுகளும் கடலில் நடுவே உள்ள தீவுகள் போல தனித்தனியே இருந்தன. விலை அதிகம் என்றாலும் நம்பகமான புரோமோட்டர்ஸ், என்றதும் இருவரும் உடனே ஓகே சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த ஒரு வாரத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஒருவேளை வாஸ்து சரியாகப்பார்த்திருக்க மாட்டார்களோ? தச்சு கழித்திருக்க மாட்டார்களோ..? என்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடின.
கிரஹப்பிரவேசத்தன்று இரவே அந்த அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் நரேனுக்கு கிரஹப்பிரவேச வேலை அசதியில் அடித்துப் போட்ட மாதிரி தூங்கி விட்டான். இடையில் பாத்ரூம் போவதற்காக எழும்போது கேட்டாலும் அது மூளையில் பதியவேயில்லை. பாத்ரூம் போய்விட்டு வந்து மறுபடியும் திவ்யாவைக் கட்டிக் கொண்டு உறங்கி விட்டான். ஆனால் மறுநாள் திங்கள்கிழமையிலிருந்து சொல்லி வைத்த மாதிரி அந்த அழுகை அவனை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டது. அவன் பயந்து போய் உறங்கியும் உறங்காமலும் இரவைக் கழித்தான். ஒருவேளை அவனுக்குத்தான் அப்படி கேட்கிறதா? திவ்யா கொஞ்சம் கூட அசங்கவில்லையே. பிரம்மையாக இருக்கலாமோ? ஆனால் மிகத்தெளிவாகக் கேட்கிறதே. கிளையர் ஆடியன்ஸ் நோயாக இருக்கலாமோ ? எங்கெங்கோ கேட்கிற சத்தங்கள் இங்கே மிக அருகில் கேட்பதான பாவனையாக இருக்கலாமோ? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
புதன்கிழமை அந்த ஏரியாவில் இருக்கிற சில வீடுகளுக்குப் போய் வலிய அறிமுகம் செய்து கொண்டான். குடியிருப்போர் நலச்சங்கம் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினான். அப்படிப் பேசுகிற சாக்கில்,
“ இங்க வேற ஒண்ணும் பிரச்னையில்லியே..” என்று கேட்டு ஆழம் பார்த்தான். மற்ற யாரும் அப்படி ஏதும் இருப்பதாக சிறு சமிக்ஞை கூடக் காட்டவில்லை. இப்போது நரேனுக்கு வேறு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை வீடு கட்டிய இடம் சுடுகாடாக இருக்குமோ? அதுதான் ஆவிகளின் சேட்டையாக இருக்கலாம் என்று நினைத்தான். இது எல்லாவற்றையும் விட எப்படி இதை திவ்யாவிடம் சொல்வது? நண்பர்களிடம், உறவினர்களிடம் எப்படிச் சொல்வது என்பது தான் பெரிய பிரச்னை. அவனைப் பயந்தாங்குளி என்று நினைத்து விட்டால்! அவன் கொஞ்சம் பயந்தவன் தான். இன்னமும் இருட்டை சத்தமாய் படிக்கும் பாட்டின் வழியே தான் கடந்து கொண்டிருந்தான். ஆனால் இதை எப்படி விட்டு விட முடியும்? அல்லது எப்படி சகித்துக் கொள்ளத்தான் முடியும்?
  மெல்ல எழுந்து முன்னறைக் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டான். கையில் ஏதாவது கம்பு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றி விட்டது. யாரையும் அடிப்பதற்காக இல்லையென்றாலும் அவனுக்கு ஒரு தைரியத்துக்காகவாச்சும் தேவைப்பட்டது. புது வீடு சுத்தமாக பளிச்சென்றிருந்தது. நல்லவேளை திவ்யா தினசரி வீட்டின் தரையைத் துடைக்கும் தரைதுடைப்பான் கம்பு மூலையில் இருந்தது. அதுவும் பிளாஸ்டிக் தான். இருந்தாலும் பரவாயில்லையென்று கையில் எடுத்துக் கொண்டான். இப்போது அந்த அழுகைச் சத்தம் மிக அருகில் கேட்டது. அதைக் கேட்கும்போதே அவன் மனசைப் பிசைந்தது. இனி வாழ்வதற்கு ஏதும் இல்லை என்ற அநாதரவான அழுகை அது. நரேன் படிப்பறையின் வாசலில் போய் நின்றான். மூடியிருந்த கதவுக்கருகில் நின்று சத்தமாய் யாரு? என்று கேட்டான். ஆனால் குரல் வரவில்லை. வெறும் காற்று தான் வந்தது. அவனுக்கு தன்னறியாமல் வியர்த்து விறுவிறுத்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய தொண்டையைக் கள்ளச்சாவி போட்டு திறந்து மெதுவாக யாரு உள்ளே? என்றான். அந்தச் சத்தம் அவனுக்கே கேட்டதா என்று தெரியவில்லை. அழுகையின் ஸ்தாயி கூடிக் கொண்டே வந்தது. அந்த அழுகையினுள்ளே வாழ்வும் மரணமும் போராடிக் கொண்டிருந்தது. அவனால் தாங்க முடியவில்லை. கைகள் நடுங்கின. அவன் படிப்பறையின் வெளித்தாழ்ப்பாளை அரவமில்லாமல் திறந்து ஓங்கிக் கதவைத் தள்ளினான். தள்ளிய வேகத்தில் அவன் பின்னால் ஓடி விட்டான். படிப்பறையின் கதவுகளும் வேகமாகத் திறந்து பின்னால் போன வேகத்தில் மறுபடியும் வந்து மூடிக் கொண்டது. அந்த இரவின் நிசப்தத்தில் அந்த சப்தம் இடியெனக் கேட்டது.
சில நொடிகள் அமைதியாக இருந்தது. மறுபடியும் மனதை உருக்கும் அந்த அழுகைச்சத்தம். அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிப்பறையின் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வலது கைப்பக்கமாக இருந்த ஸ்விட்சைப் போட்டான். பளீரென அறை அந்த எல்லீடி பல்பின் வெள்ளையொளியில் ஒளிர்ந்தது. இப்போது அந்த அழுகைச் சத்தம் நின்று போனது. அறைக்குள் சுற்றிலும் பார்த்தான்.. வித்தியாசமாக எதுவும் இல்லை. அவன் தேர்வு செய்து சேகரித்த புத்தகங்கள், தனுஷ்கோடி சென்றிருந்தபோது கிடைத்த கிளிஞ்சலை ஒட்டி வைத்திருந்த அந்த ஓவியம், பூஜாடி, அவன் கல்லூரியில் படிக்கும்போது பேச்சுப்போடியில் வாங்கிய பல்கலைக்கழக ஷீல்டு, ஒரு சாய்வு நாற்காலி, புத்தக அலமாரியின் அருகில் ஒரு மேஜை. இல்லை. எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்றான். காற்றாடியைச் சுழல விட்டு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தான்.
வெளியே கீச்சிடும் பூச்சிகளின் சப்தம் மட்டும் கேட்டது. இடையில் ஒரு தடவை காலம் பிழைத்துக் கத்தும் காகத்தின் குரல் ஒற்றையாய் கரகரத்தது. தூரத்தில் தேய்ந்து போன நாயின் குரைப்பொலி. அமைதி. விர்ர்ரென்று சுழலும் காற்றாடியை நிமிர்ந்து பார்த்தான். ஏதோ பிரமைதான். தலை சுற்றுவது போலிருந்தது. உறக்கம் கண்களை அழுத்திக் கொண்டு வந்தது. உறக்கத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு அவன் நுழையும்போது மறுபடியும் அந்த அழுகைச்சத்தம் மெல்ல மேலெழுந்து வந்தது.
இப்போது அந்த அறையின் நடுவே கிளைகள் அடர்ந்த வேம்பு நின்று கொண்டிருந்தது. அந்த வேப்பமரத்தின் எதிரே நின்று கொண்டிருந்தான் நரேன். வேம்பு காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே நாற்பத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முதிர்ந்த ஆள் ஒரு கல்லின் மீது உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்திருந்த அவர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்ணீர் நிற்கவில்லை. உடல் நடுங்கி திடீர் திடீரென அழுதார். வாயைப் பொத்தியும் தொண்டையிலிருந்து பீறிடும் அழுகைக்குரலை அடக்க முடியவில்லை. அவருடைய அழுக்கான வேட்டியும் தலையில் கட்டிய பச்சைத் துண்டும் அறுதப்பழசாக இருந்தது. அவருக்கு முன்னால் பீட்டர் இங்கிலாண்டு சட்டையும், லெவிஸ் ஜீன்ஸும் போட்டு நின்று கொண்டிருப்பது நரேனுக்கு அவமானமாக இருந்தது. இப்போது குழப்பமாகவும் இருந்தது. அவன் ஏன் அங்கே வந்தான்? அவர் யார்? எதற்காக இப்படி உட்கார்ந்திருக்கிறார்? என்று தோன்றியது நரேனுக்கு. ஒரு வேளை கனவு காண்கிறானோ? திடீரென ஒரு சாயலில் அவர் அவனுடைய அப்பாவாகத் தெரிந்தார். தெற்கில் உள்ள கரிசல்குளத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா ஏன் இப்போது இங்கே உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்போதும் தலைப்பாகை கட்டியிருக்கும் அந்த பச்சைக்கலர் துண்டின் விசிறி அவருடைய  உடல் குலுங்குவதற்கேற்ப ஆடியது. அவருடைய அந்த அழுகை அவனுடைய அப்பாவின் அழுகை தான். ஒரு கணத்தில் அது அவனுடைய குரலாக மாறியது. அம்மா இறந்தபோது அழுதானே யாராலும் தேற்ற முடியாதபடி அப்படியான குரலாக மாறியது. தேற்றமுடியாத அந்தக்குரலின் பாதையில் நரேன் நடந்தான்.
 கலங்கிய கண் திரை வழியே எதிரே காய்ந்து வறண்ட அந்த கரிசல் நிலம் பெரும்பாதாளமாகத் தெரிந்தது. அது காரிருளான தன் வாயைத் திறந்து அவனை அழைத்துக் கொண்டிருந்தது. அவன் அரசாங்கம் கொடுத்த விதைகளைப் போட்டான். அரசாங்கம் கொடுத்த உரங்களைப் போட்டான். இரவும் பகலும் கண்ணும் கருத்துமாய் நிலத்தைப் பார்த்துக் கொண்டு வந்தான். அவன் சூரியன் உதிக்குமுன்னே எழுந்து வயக்காட்டுக்கு வந்து விடுவான். புதிய களைகளை ஒவ்வொன்றாய் தேடிப் பிடுங்குவான். ஏற்கனவே சாலடித்த பாத்திகளை ஆழப்படுத்துவான். ஏதாவது ஒரு செடி கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் அதனருகில் நின்று கவனிப்பான். நீர்வரத்து பத்தாதா? உரம் சரியாகப் போடவில்லையா? என்று குழம்புவான். ஒரு இலை புதிதாக துளிர்த்தாலும் அது அவனுக்குத் தெரியும். ஒரு இலை உதிர்ந்தாலும் அவனுக்குத் தெரியும். அவன் அந்த நிலத்தின் மண்ணை தீத்தித் தான் பல்லைத் தேய்ப்பான். மத்தியானம் கஞ்சியைக் கூட வரப்பில் வைத்துத் தான் குடிப்பான். அவனுக்கு மண்தான் எல்லாம். அவனே மண் தான். ஒரு நாள் அவன் மண்ணோடு பேசிக் கொண்டிருப்பதாக அவனுடைய சின்ன மகள் அவளுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். அதற்கு அவளுடைய அம்மா
 “ அந்த கிறுக்கெழவு அப்படித்தான்… மண்ணு..மண்ணுன்னு சாகும்..” 
என்று சொன்னாள். எப்போதும் தோளில் மம்பட்டியோ, களைக்கொத்தியோ, உட்கார்ந்திருக்கும். விதைகளைப் பற்றி அத்தனை விவரங்களைச் சொல்வான். உரங்களைப் பற்றிப் பேசச்சொன்னால் அப்படிப் பேசுவான். எப்போதும் மழை, பருவம், விதைப்பு, களை, அறுவடை என்று விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத மாதிரியே திரிவான். மாலை மசங்க மசங்க அவனுடைய பதட்டம் கூடி வரும். இரவில் பிரியமுடியாமல் பிரிந்து வருவான் வீட்டுக்கு. இரவு தூக்கத்தில் கூட அவனுடைய வயக்காடே அவன் கனவுகளில் வரும்.
ஒவ்வொரு நாளும் பதினாறு மணிநேரம் உழைத்தான். பெரிய கோடீசுவரனாகி விட வேண்டும் என்கிற கனவெல்லாம் அவனுக்கில்லை. வயதுக்கு வந்து பத்து வருடங்களாக வீட்டில் இருக்கும் மூத்த மகள் சண்முகத்தாயைக் கட்டிக் கொடுக்க,வேண்டும். சின்னவள் சொர்ணாவைக் காலேஜில் சேர்க்க,வேண்டும், கடைக்குட்டிப்பயல் ராஜேஷுக்கு அது என்னமோ கிரிக்கேட் மட்டை வாங்கிக் கொடுக்க.வேண்டும்.. ஒரு வருசம் இல்லைன்னு சொல்லாம கஞ்சித்தண்ணி குடிச்சிக்கிற…அளவுக்கு வெள்ளாமை வேண்டும். அவ்வளவு தான்… இவ்வளவு தான் அவனால் யோசிக்க முடிந்தது. ஆனால் அந்த வருசம் மழை பொய்த்தது. கஞ்சிக்கே கடன் வாங்கினான். வெளிநாட்டுக்கம்பெனிகள் விதைகளைக் கொடுத்தன. உரங்களைக் கொடுத்தன. புதிது புதிதாகப் பூச்சிகள் வந்தன. அதற்கு பூச்சி மருந்துகளும் தந்தன. வாங்கிய கடன் தலைக்கு மேல் போய் விட்டது.. நிலத்தை அடமானம் வைத்தான். எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பினான். அவனுடைய மண் அவனைக் கைவிடாது என்று நம்பினான். அவனுடைய நிலத்தைப் பற்றி அவனை விட வேறு யாருக்குத் தெரியும்? எல்லோரும் விவசாயத்தைக் கைவிட்ட போதும் அவன் நம்பினான். அவன் பருத்தியைப் போட்டான். பூவே பூக்காமல் பொய்த்தது. கத்தரிக்காய் காய்க்கவில்லை. தக்காளி விலை போகவில்லை. கடன் அலைமேல் அலையாக அடித்து அவனைக் கீழே வீழ்த்தியது. குடும்பமே பட்டினி கிடந்தது. இதோ அவனுடைய நிலம் ஏலத்துக்குப் போகப்போகிறது. பிறந்ததிலிருந்து அவன் நேசித்த மண் ஏலம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. இதை விட வேறு அவமானம் என்ன வேண்டும். அவனுடைய மண் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய .ஊர் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய தேசம் அவனைக் கைவிட்டு விட்டது. ஒரு நாளின் முழுப்பொழுதும் நிலத்தில் புரண்டெழுந்து தன்னுடைய ஆன்மாவாக நினைத்த அந்த நிலம் மலடாகிப் போனதற்கு யார் காரணம்? நிலம் அள்ளிக் கொடுத்தபோது அதற்கு சரியான விலை கிடைக்காமல் உழைப்பை ரோட்டில் கொட்டி விட்டு வருவதற்கு யார் காரணம்? மலட்டு விதைகளையும், கொடூர நஞ்சான உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொடுத்து நிலம் பாழ்பட்டதற்கு யார் காரணம்? அவனுக்கு எதுவும் புரிய வில்லை. கேள்விகள் ஊறிக் கொண்டேயிருந்தன. ஆனால் பதில்? எல்லோரும் யார் யாரையோ குற்றம் சொல்கின்றனர். ஏன் அவனையே கூட குற்றம் சொன்னார்கள். பணம் சம்பாதிக்கும் அவனுடைய பேராசை தான் காரணம் என்று கூடச் சொன்னார்கள். இனி யார் என்ன சொல்லி என்ன செய்ய? அவனைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டது.
அவனுடைய கண்ணுக்கு முன்னால் மனைவி, குழந்தைகளின் முகங்கள் நிழலாடின. இன்னும் அழுகை கூடியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் சின்னப்பிள்ளையாக இருந்தபோது நட்டு வைத்த வேம்பு இப்போது அடர்ந்து வலுவான கிளைகளுடன் படர்ந்திருந்தது. அரசாங்கம் கொடுக்கிற உதவித்தொகை குடும்பத்துக்குக் கிடைக்கும். அவர்களாவது இந்த காட்டின் நடுவில் கிடந்து நிலத்தோடு போராடாமல் பெருநகரின் யந்திரங்களில் வேலை செய்து பிழைக்கட்டும் என்று நினைத்தான். பெருமூச்சு வந்தது. இது தான் கடைசி மூச்சு என்று யோசித்தபடியே மாடு கட்டிய கயிற்றை தாழ்ந்திருந்த வேம்பின் கிளையில் வீசி சுருக்கு போட்டான். காற்றில் அலைந்த வேம்பு வேண்டாம் வேண்டாம் என்றது. அவன் அருகில் கிடந்த கற்களை நகட்டி நின்று கொள்ள ஏதுவாய் வைத்தான். ஒருகணம் ஆவலுடன் தன்னுடைய நிலத்தை, சுற்றிலும் கிடந்த பூமியை, வானத்தைப் பார்த்தான். அப்படியே கல்லின் மீது ஏறி சுருக்கில் கழுத்தை நுழைத்து கண்களை மூடினான்.
நரேன் வேண்டாம் வேண்டாம் என்று அவனைப் பார்த்து ஓடினான். ஆனால் ஏதோ கல் தடுக்கியது போல வெடுக்கென அவனுடைய கழுத்தில் கயிறு சுண்டியிழுத்தது. அவனுடைய கழுத்தில் ஆழமான ஒரு வலி உடலெங்கும் ஓடியது. அவனால் தாங்க முடியவில்லை. மூச்சுத்திணறியது. தொண்டையில் அடைத்துக் கொண்டது  எல்லாம் சில கணங்கள் தான். சடக்கென்று கழுத்து எலும்பு முறியும் சத்தம் கேட்டது. அப்போது அவனுடைய அடிவயிற்றிலிருந்து ஓரு விசும்பல் எழுந்தது. தொண்டையை அடைத்துக் கொண்டு பீறிட்டு வந்த அந்தச் சத்தம் அப்படியே அடங்கியது. அவனுடைய கைகால்கள் துடிதுடித்தன. மெல்ல துடிப்பு அடங்கும்போது நரேன் வாய் விட்டு கத்த முயற்சித்தான். கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்தான். படிப்பறையின் நடுவில் அவன் அந்த வேம்பின் கிளையின் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். திவ்யா காபி கோப்பையோடு உள்ளே வந்தவள்,
“ என்ன ஐயா இன்னிக்கி சீக்கிரமே எந்திச்சாச்சி..” என்று சொல்லியபடியே டேபிளின் மீது காப்பியை வைத்து விட்டுப் போனாள். அவன் மலங்க மலங்க விழித்துக் கொண்டே அவனுடைய கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

நன்றி- நான்காவது கோணம் மார்ச் 17