தழும்பின் கதை
உதயசங்கர்
எப்படியும் இன்று ஒரு கதை எழுதி
விட வேண்டும் என்று உட்கார்ந்து அவருடைய லேப்டாப்பைத் திறந்த கதாசிரியருக்கு ஒரு மணி
நேரத்தைக் கடத்தியும் ஒரு எழுத்தும் அடிக்க முடியவில்லை. கதாசிரியர் கதையைத் தேடித்
தேடி கடைசியில் சோர்ந்து போனார். யோசிக்கும்போது நெற்றியைத் தடவுகிற பழக்கம் உண்டு.
கைவிரல்களில் தட்டுப்பட்ட மேடும்பள்ளமுமான அந்தத் தழும்பு.. ஆம் அந்தத் தழும்பு.. அப்போது
தான் அவருக்கு தன்னுடைய நெற்றியில் எப்படி இந்த தழும்பு வந்தது என்று ஞாபகப்படுத்தினார்.
அட இந்தத்தழும்பின் கதையைச் சொல்லலாமே. இப்படி ஆரம்பிக்கலாம்.
நான் தழும்பு பேசுகிறேன். என்ன
வாசகரே அதிர்ச்சியாக இருக்கிறதா?
என்ன கதாசிரியரே கதை விடுறீங்க.
எங்கேயாவது தழும்பு கதை சொல்லுமா? கெக்கேகெக்கே
என்று சிரிக்கிற உங்களைப்பார்த்து
கதாசிரியர் கொஞ்சம் யோசிக்கிறார். வாசகர்களின் கருத்துக்களை அலட்சியம் செய்யலாமா? அப்போது
நவீனச்சிறுகதையின் பிதாமகரான வ.வே.சு. ஐயர் அவருடைய நீண்ட தாடியைத் தடவிக்கொண்டே வந்தார்.
“ ஏம்ப்பா.. 1916-லேயே நான் அரசமரம்
கதை சொல்றமாதிரி எழுதியிருக்கேன். அப்பவே அதை யாரும் ஒண்ணும் சொல்லல்லை… “
கதாசிரியரின் ஆதர்ச எழுத்தாளரான
புதுமைப்பித்தன் வெற்றிலைச்சிவப்பு நாக்கில் எப்படி ஏறியிருக்கிறது என்று நாக்கை நீட்டிப்பார்த்தவர்
கதாசிரியரைப்பார்த்து,
“ வே..இப்படியெல்லாம்கெடந்து யோசிச்சீர்னா
ஒரு கதை உம்மால எழுத முடியாதுவே… நாங்கூட மூட்டைப்பூச்சி கதை சொல்ற மாதிரி எழுதியிருக்கேன்…
வாழையடி வாழையாய் வரப்போகிற உம்ம வாசகன் புரிஞ்சிக்கிடுவான்…. எதைப்பத்தியும் கவலைப்படாம
எழுதும்வே..”
என்று நமுட்டுச்சிரிப்புடன் சொன்னார்.
அவுஹ சொன்னபிறகு கதாசிரியருக்கு அப்பீலே கிடையாது. எல்லாக்கிலேசங்களையும் புறந்தள்ளிவிட்டு
தழும்பை கதை சொல்லச்சொன்னார்.
உள்ளங்கையளவுக்கு காசியின் நெற்றியில்
இருந்த அந்தத் தழும்பு வேல்ச்சாமியைப் பார்த்ததும் முகம் சுளித்தது. தன்னுடைய ஒழுங்கில்லாத,
கோரைகோரையான விளிம்புகள் சற்று சுருங்கி விரிந்தன. உடனே கணத்தின் பின்னத்தில் ஒரு வலி
அந்தத் தழும்பில் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த வலியில் மூளையின் செல்கள் மரணத்தை கண்முன்னே
கண்டமாதிரி பயந்து நடுங்கின. அந்த நடுக்கம் காசியின் வலதுகையை மேலே தூக்கி அந்தத் தழும்பைத்
தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தியது. சொரசொரப்பான காசியின் வலது உள்ளங்கை வழுவழுப்பான
தழும்பைத் தடவியபோது வளர்ப்புநாயைத் தடவிக்கொடுக்கும்போது சொகமாக கழுத்தை நீட்டுமே அப்படி அந்தத் தழும்பும்
விரிந்து கண்களை மூடிப் பெருமூச்சு விட்டது. அந்தத்தழும்பை மறைக்க எவ்வளவோ பிரயத்தனப்பட்டான்
காசி. அதேபோல அந்தத்தழும்பிற்கான சம்பவத்தையும் மறக்க முயற்சித்தான். ஆனால் வேல்ச்சாமி
கண்ணில்படும்போதெல்லாம் அந்தக்காட்சி அவன் கண்முன்னே அத்தனை துல்லியமாக ஓடியது. அந்தத்துல்லியத்தில்
அவனே கவனித்திராத இன்னும் கூடுதலான விவரங்களும் இருந்ததைப்பார்த்து ஆச்சரியப்பட்டான்.
அவனை நோக்கி வந்த கல் அப்போது தான் தார்ரோடு போடுவதற்காக கொட்டி வைத்திருந்த பெரிய
ஜல்லிக்கல். அதுவரை மண்சாலை தான். அந்தக்கல் சப்பட்டையாகவும் இல்லாமல், சதுரமாகவும்
இல்லாமல், அறுங்கோணமாக விளிம்புகளில் கிரஷர் கட்டிங் வரிகளுடன் இருந்ததை இப்போது உணரமுடிந்தது.
அதனால் தான் இத்தனை கோரமாய் அந்தக் காயமும் தழும்பும் காசியின் நெற்றியில் அழிக்க முடியாதபடிக்குத்
தோன்றிவிட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எப்போதும் கல் எறிவதைப்போல வேல்ச்சாமியின்
கை தலைக்கு மேலே தூக்கி உடலை முன்னால் வளைத்து வீசி எறியவில்லை. அவனுடைய முழுபலத்தையும்
அந்த ஜல்லிக்கல்லில் செலுத்தி பிரமாஸ்திரத்திடம் மந்திரம் சொல்லி அனுப்பியதைப்போல ஜல்லிக்கல்லை
அனுப்பினான். வீசி எறியப்பட்ட கல் அவனை நோக்கி வருவதைப் பார்த்தான் காசி. ஆனால் அசையவில்லை.
மூளை குனிந்து கொள் என்றோ, ஓடிவிடு என்றோ அலாரம் அடித்ததைப்போலச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
காசி அவனுடைய தலையைக் குறிவைத்து வந்து கொண்டிருந்த கல்லின் வேகத்தையும் சுழன்று வரும்
அதன் அழகையும் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்.
என்ன இருந்தாலும் வேல்ச்சாமி வேல்ச்சாமி
தான். சின்னவயசிலிருந்தே அவனுக்கு எல்லாக்கலையும் கைவந்தது. இத்தனைக்கும் அவனும் காசியும்
விரோதிகளில்லை. தீராத பகையென்று எதுவும் கிடையாது. சின்ன வயசில் இருந்தே இரண்டு பேரும்
ஒரே தெருவில் குடியிருந்தார்கள். ஒன்று போலவே நகராட்சி ஆரம்பப்பள்ளிக்குப் போனார்கள்.
இரண்டு பேருக்கும் ஒன்று போலவே படிப்பு வரவில்லை. இரண்டுபேரும் ஒன்று போலவே பள்ளிக்கூடம்
போகாமல் காடுகரை என்று சுற்றினார்கள். ஓணான் அடித்தார்கள். வேல்ச்சாமி எப்படியோ ஒரு
கவட்டாபுல்லை வாங்கி வந்தான். அந்த கவட்டாபுல்லில் வைத்து எறிவதற்காக சின்னச்சின்ன
கற்களைப் பொறுக்கிச் சேர்த்து வைத்தான் காசி. அந்தக் கற்களின் மீது ஒரு அணிலின் பெயரோ,
ஒரு மைனாவின் பெயரோ, ஒரு சிட்டுக்குருவியின் பெயரோ ஒரு ஓணானின் பெயரோ எழுதப்பட்டிருந்தது.
வேல்ச்சாமி மரத்தின் மீது ஒரு மைனாவைப்பார்த்து விட்டால் வைத்தகண்ணை எடுக்க மாட்டான்.
அரைஞாண் கயிற்றில் ஆடிக்கொண்டிருக்கும் டவுசரின் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கவட்டாபுல்லை
கையில் எடுப்பான். பின்னால் கையை நீட்டினால் காசி அவனுடைய டவுசர் பையில் சேகரித்து
வைத்திருக்கும் அந்த சிறிய உருண்டைக்கற்களில் ஒன்றை எடுத்துக் கொடுப்பான். அந்தக்கல்லை
வாங்கி எதற்கென்றே தெரியாது. உதட்டிலும் நெற்றியிலும் சாமி கும்பிடுவதைப்போல வைத்து
முணுமுணுப்பான். சிறிய அந்த தோல்த்துண்டில் கல்லை வைத்து இழுப்பான்.
பின்னால் நின்று கொண்டிருக்கும்
காசி மரத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். விர்ர்ர் என்று ஒரு சத்தம் கேட்கும். காசியின்
கண்முன்னால் ஒரு மைனா சொத்தென்று கீழே விழும். இரண்டு பேரும் சேர்ந்து மைனாவைச் சுட்டுத்
தின்பார்கள். கவட்டாபுல் தான் வேண்டும் என்பதும்
கிடையாது. சிறிய கல் கிடைத்தாலும் துல்லியமாக இலக்கைத் தாக்கிவிடுவான். தெருவில் உள்ள
பையன்களுக்கு அத்தனை விளையாட்டுகளையும் வேல்ச்சாமி தான் சொல்லிக்கொடுத்தான். எந்த விளையாட்டிலும்
அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. அவன் எந்த அணியில் இருந்தானோ அந்த அணியே வெற்றி பெற்றது.
எல்லோரும் அவனுடைய அணிக்குப்போவதற்கு ஆசைப்பட்டனர். எல்லோரும் பச்சைக்குதிரை விளையாட்டில்
ஒருத்தரைக்குனிய வைத்து தாவினால் வேல்ச்சாமி மூன்று பேரை குனிய வைத்துத் தாண்டினான்.
எத்தனை உயரத்திலிருந்தும் குதித்தான். குதித்து அப்படியே நின்றான். எவ்வளவு நீளத்தையும்
தாண்டினான்.
கிணற்றில் வாளிவிழுந்தால் எடுத்துக்கொடுத்தான்.
வீடுகளில் பாம்பு புகுந்து விட்டால் பிடித்து விளையாடினான். ஓணான்கள் அவனைப்பார்த்து
விட்டால் தலை தெறிக்க ஓடிவிடும். தெருவில் உள்ள பையன்களுக்கு அவன் சாகசவீரனாக இருந்தான்.
காசி எப்போதும் அவனோடு ஒட்டிக்கொண்டே அலைந்தான். வேல்ச்சாமி இளைஞனான போது சில்லரை வியாபாரம்
செய்தான். மதுரை விளக்குத்தூண் கடைகளில் சேலை துணிமணிகள் வாங்கி தவணைக்குக்கொடுப்பது,
புளி, மிளகாய் வத்தல் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்பது, பழைய பேப்பர், புத்தகம்
வாங்கி விற்பது, திருவிழா சமயங்களில் கிலுக்கு, பொம்மைகள், பலூன்கள், விற்பனை செய்வது
என்று வியாபாரியாக மாறிவிட்டான்.
காசி சின்னச்சின்ன திருட்டுகளாகச் செய்ய ஆரம்பித்தான்.
வெளியே காயப்போட்டிருக்கும் துணிமணிகளைத் திருடுவான். அசந்து போயிருக்கும் வீடுகளில்
ரெண்டு பாத்திரபண்டங்களைத் திருடுவான். டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் திருடுவான். பெரும்பாலும்
அவனுடைய திருட்டுகளுக்கு போலீஸ் ஸ்டேஷன் போகாத மாதிரியான பொருட்களைத் திருடுவான். திருட்டுப்போன
பொருட்களின் மதிப்பை விட போலீஸ்காரர்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்ற
யதார்த்தம் மக்களுக்குத் தெரியும். அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போகமாட்டார்கள்.
காசிக்கு அன்றன்றைய பாட்டுக்குக் கிடைத்தால் போதும்.
என்ன கதை சொல்றீங்க கதாசிரியரே!
ஏதோ தழும்புக்கதைன்னு சொன்னீங்க.. ஆனால் வேற எங்கேயோ போய்க்கிட்டிருக்கீக.. எங்களுக்கும்
வேற பாடுசோலி கிடக்குல்ல… ஏதாவது சொன்னா வ.வே.சு.,
புதுமைப்பித்தன்னு பெரிய ஆட்களைத் துணைக்குக்கூப்பிடுறீக….
அடடா.. இப்படித்தான் எதையாவது
சொல்ல ஆரம்பித்து எதையாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள் கதாசிரியர்கள். இது ஒரு வியாதி
தான். தக்கசமயத்தில் இடையீடு செய்ததுக்கு நன்றி வாசகரே!
வேல்ச்சாமிக்குக் கலியாணம் முடிந்தது.
மஞ்சுளா வீட்டுக்கு வந்த நேரம் தெருவில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் வேல்ச்சாமியின் வீட்டுக்கு
முன்னாலேயே கிடையாய் கிடைந்தார்கள். உடனே மஞ்சுளா அந்தரியோ இல்லை சுந்தரியோ என்று கற்பனைக்குதிரைகளை
ஓடவிடாதீர் வாசகரே! அவள் மிகச்சாதாரணமான பெண்தான். அப்புறம் என்ன விஷேசம்? ஏன் இளைஞர்கள்
கூட்டம் அங்கே குவிந்திருந்தது என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? காசியைக்கேட்போம்.
மஞ்சு அந்தத் தெருவில் உள்ள எல்லோரிடமும்
பேசினாள். அதுவும் இளைஞர்களிடம் சிரித்துப்பேசினாள். அந்தச் சிரிப்புக்கும் அவள் பேசுகிற
பேச்சுகளுக்கும் வேறு வேறு அர்த்தங்களை ஒவ்வொருத்தரும் நினைத்துக் கொண்டார்கள். அதற்கு
அவள் எப்படி ஜவாப்தாரியாக முடியும்? அவளை வெள்ளந்தி என்றும் சொல்ல முடியாது. அவளுக்கு
ஆண்களைப் பிடித்திருக்கிறது. ஆண்களின் மீதான ஒரு ஈர்ப்பு அவளைச் சிரிக்க வைத்தது. ஆணின்
அருகாமையை அவள் மிகவும் விரும்பினாள். வேல்ச்சாமி மாதத்தில் பாதிநாட்கள் ஊரில் இருப்பதில்லை.
ஒவ்வொரு முறை ஊரிலிருந்து வியாபாரம் முடிந்து வரும்போதும் வேல்ச்சாமியின் அம்மா எல்லாவற்றையும்
ஒப்பிப்பாள். வேல்ச்சாமிக்கு வெளம் பொங்கி வரும். அவன் மஞ்சுவை எதுவும் கேட்க மாட்டான்.
அப்படியே கேட்டாலும் அவள் பதில் சொல்லமாட்டாள். ஒரு மோகனச்சிரிப்பைச் சிந்துவாள். ஒயிலாக
நடந்து வேல்ச்சாமியின் அருகில் வந்து இறுக்கி அணைப்பாள். உதடுகளைக் கவ்வி இழுப்பாள்.
வேல்ச்சாமியின் கோபம் புகையாகி விடும். அவன் ஊர்ப்பயல்களைத் திட்டுவான். அடுத்த ஊருக்கு
வியாபாரத்துக்குப் போகும்வரை வீட்டு வாசலில் காவல் இருப்பான்.
எல்லோரையும் போல காசியும் மஞ்சுவைப்
பார்ப்பதற்காக வேல்ச்சாமியின் வீட்டின் முன்னால் நின்றான். வேல்ச்சாமிக்கும் அவனுக்குமான
தொடர்பு இற்றுப்போய் வெகுகாலமாகி விட்டது. ஆனால் அந்தத் தொடர்பை இப்போது புதுப்பிக்க
நினைத்தான். வேல்ச்சாமியின் அம்மாவிடம் போய் வலியப்பேசினான். உயரமாக ஒல்லிக்குச்சியாக
இருந்த வேல்ச்சாமியை விட கட்டுமஸ்தானாக இருந்த காசி அவளைக் கவர்ந்தான். தினமும் வந்து
மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
வேல்ச்சாமி ஊரிலிருந்து வந்த அன்று
தான் அந்தச் சம்பவம் நடந்தது. காசி வழக்கம் போல மஞ்சுவைப்பார்ப்பதற்காக வேல்ச்சாமியின்
வீட்டிற்குப் போனான். வேல்ச்சாமியின் அம்மா எல்லாவிவரங்களையும் வேல்ச்சாமியிடம் சொல்லியிருந்தாள்.
வீட்டு வாசலில் காத்திருந்த வேல்ச்சாமி காசியைப் பார்த்தவுடன் தயாராக வைத்திருந்த கல்லை
எடுத்து புகழ்பெற்ற தழும்பு ஏற்படுத்த எறிந்தான். எறிந்த கல் காசியின் நெற்றியில் பட்டவேகத்தில்
தெறித்து விழுந்தது. கணநேரத்தில் காசியின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
காசி அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்தான். வேல்ச்சாமி திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
வீட்டுக்குள்ளே போனான். மஞ்சுவிடம் எதுவும் பேசவில்லை. எதுவும் கேட்கவில்லை. குளித்து
விட்டு நன்றாகச் சாப்பிட்டான். பலூன் வியாபாரப்பையையும் ஸ்டாண்டையும் எடுத்துக்கொண்டு
வெளியேறினான்.
அவ்வளவு தானா கதை என்று சலிப்புடன்
கேட்கிற வாசகருக்கு சில நிமிடங்கள் பொறுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். வாழ்க்கை
விசித்திரமானது என்று கதாசிரியர் நம்புகிறார். ஊருக்குப்போயிருந்த வேல்ச்சாமி திரும்பி
வந்தபோது அவன் எதிர்பார்த்த மாதிரியே மஞ்சு காசியுடன் ஓடிப்போயிருந்தாள். அவனுடைய அம்மா
மஞ்சுவை வைதாள். வேல்ச்சாமி அவளை எதுவும் சொல்லாதே என்று அம்மாவை அதட்டினான். ஆறுமாதம்
கழித்து அதே தெருவுக்கு காசி மஞ்சுவுடன் குடி வந்தான். ஊரிலிருக்கும் பொழுதுகளில் வேல்ச்சாமி
தூரத்திலிருந்து மஞ்சுவைப் பார்ப்பான். அவ்வளவு தான். அது போதும் அவனுக்கு. வேல்ச்சாமியின்
அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் வேறொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படிச் சொன்னால்
மட்டுமே வாசகர்களைத் திருப்திப்படுத்தமுடியும் என்று கதாசிரியர் நம்புகிறார். அத்துடன்
கலைக்கும் இப்படியான கற்பிதங்கள் தேவைப்படுகிறது. குரூரமான யதார்த்த வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு லட்சியக்காதல் தேவைப்படுகிறதல்லவா.
சரி. சரி. கதை முடிந்து விட்டதா?
எங்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன என்று கேட்கும் வாசகர்களுக்கு ஒரு பின்குறிப்பு.
நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள்
என்று கதாசிரியர் புரிந்து கொள்கிறார். கதையின் துவக்கத்தில் கதாசிரியரின் நெற்றித்தழும்பின்
கதை என்கிற மாதிரி ஒரு பில்டப் இருந்ததே. இந்தக் கதையின் காசி கதாசிரியர் தானா? என்று
கேட்க வருகிறீர்கள் இல்லையா. கதாசிரியர் சொல்ல விரும்புவது என்னவென்றால் காசியும் அவரே.
வேல்ச்சாமியும் அவரே. மஞ்சுவும் அவரே.
ஐயோ போதும். போதும். ஆளை விடுங்களய்யா
என்று தலைதெறிக்க ஓட நினைக்கும் உங்களிடம் கடைசியாகச் சில வார்த்தைகளைச் சொல்ல நினைக்கிறார்
கதாசிரியர்.
மஞ்சு இப்போதும் ஆண்களைப்பார்த்துச்
சிரிக்கத்தான் செய்கிறாள். ஏன் வேல்ச்சாமியைப் பார்த்துக் கூடச் சிரிக்கிறாள். வேல்ச்சாமி
அவ்வப்போது அவளுக்கு கடன் என்ற பெயரில் பணம் கொடுத்து உதவுகிறான். இதெல்லாம் காசிக்குத்
தெரியும். அவன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவனுடைய தொழிலில் மும்முரமாக இருந்தான்.
ஆனால் வேல்ச்சாமியைப் பார்க்கும்போதெல்லாம் அந்தத்தழும்பின் முகம் சுருங்கி விரிகிறது.
பளபளப்பான தன் எல்லைகளை விரித்து ஓரங்களில் ஞாபகத்தின் வரலாற்றை எழுதுகிறது. அத்துடன்
இந்தக்கதையை எழுதிய கதாசிரியரிடமும் வாசிக்கிற வாசகர்களிடமும் அந்தத் தழும்பு ஒரு கேள்வியைக்
கேட்க நினைக்கிறது. கதாசிரியர் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்கிறார். கலை அமைதி கெட்டுவிடும்
என்று சொல்கிறார். அமைதியைக்குலைப்பதற்காகத்தானே எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அப்புறம்
அமைதி அமைதி என்று கூவுகிறீர்கள் என்று தழும்பு இடைமறித்தது. எந்தக் கதாபாத்திரம் கதாசிரியர்
சொல்வதைக் கேட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உருவாக்குகிற வரைக்கும் தான் கொஞ்சம் பவ்யமாக
இருக்கிற மாதிரி இருப்பார்கள். அதற்கப்புறம் சுதந்திரமாகி விடுவார்கள். கதாசிரியர்கள்
கையாலாகதவர்கள் தான். ஆனால் என்ன தான் தழும்பு கதாசிரியர் சொன்னபடி கேட்காவிட்டாலும்
தழும்பு கதாசிரியர் வழியாகத்தானேப் பேசவேண்டும்.
நீட்டி முழக்கி மிகுந்த நம்பிக்கையோடு
தழும்பு கேட்ட கேள்வியை கதாசிரியர் சைலண்ட் மோடில் போட்டு விட்டார். என்ன செய்தாலும்
தழும்பு என்ன கேட்டிருக்கும் என்று வாசகர்களுக்குத் தெரியாதா?
நன்றி- மலைகள்
No comments:
Post a Comment