Sunday 23 June 2019

கும்பிடுறேன்சாமி!


கும்பிடுறேன்சாமி!
உதயசங்கர்

அவனுக்கு அவனுடைய அய்யாவின் மீது கோபம் கோபமாக வந்தது. யாராவது பிள்ளைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்களா? கேட்டால் அவனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம் பிறந்து ஒன்றிரண்டு மாதங்களில் இறந்து விட்டார்களாம். அவர்களை எல்லாம். கடவுள் எடுத்துக்கொண்டாராம். மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால் கடவுள் வேண்டாம் என்று விட்டு விடுவாராம். அப்படி விட்ட பேராம். அவ்வளவு வெள்ளந்தியாகவா கடவுள் இருப்பார்? மண்ணாங்கட்டிக்கு கோபம் வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் மற்ற பையன்களுக்கு ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குருசாமி, சங்கரநாராயணன், என்று அழகழகான பெயர்கள் இருக்கும்போது எல்லோரும் அவனை இளக்காரமாகப் பார்க்கிறார்கள்.  
“ போடா மண்ணாங்கட்டி தெருப்புழுதி ” என்று கேலி செய்கிறார்கள். ஆசிரியரும் கூப்பிடும்போதே,
“ ஏலே மண்ணு உன்பேர் தான் மண்ணுன்னா தலையிலேயும் மண்ணுதானா? “ என்று சும்மா திட்டுகிறார். இத்தனைக்கும் அவன் கஷ்டப்பட்டு படித்து முதல் பத்து ரேங்கில் வந்து விடுவான். ஆனால் அதையெல்லாம் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியர்களுக்கு மற்ற மாணவர்கள் ” குட்மார்னிங் சார் ” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் மட்டும் ” கும்பிடுறேன் ஐயா ” என்று சொல்லணும். வகுப்பறையைப் பெருக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. பாம்பு, தேளு, பல்லி, பூரான், அடிக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. எந்த முரட்டு வேலையாக இருந்தாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு தான். ஒரு தடவை பள்ளிக்கூடக் கக்கூஸைக் கழுவணும் வா மண்ணாங்கட்டி என்று பியூன் வந்து கூப்பிட்டார். அவனுக்கு அழுகையே வந்து விட்டது. வரமுடியாது என்று மறுத்து விட்டான். எந்த அரட்டல் மிரட்டல் உருட்டலுக்கும் பயப்படாமல் மறுத்து விட்டான் மண்ணாங்கட்டி.
 எப்படியாவது படித்து அவனுடைய தெருவில் இருந்த அறிவழகன் அண்ணன் மாதிரி பெரிய வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தான் மண்ணாங்கட்டி. ஆனால் இந்தப் பெயரைச் சொல்லி அவனை காலம் பூராவும் அவமானப்படுத்துவார்களே. என்ன செய்ய? அவனுடன் பேதம் பார்க்காமல் பழகக்கூடியவன் அன்பரசு மட்டும் தான். அவன் மண்ணாங்கட்டியை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்பான். மண்ணாங்கட்டி அவனிடம் தன்னுடைய வருத்தத்தைச் சொன்னான்.
அன்பரசு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம். அரசு பதிவிதழில் அறிவிக்கை செய்து விட்டு பெயரை மாற்றிக்கொள்ளலாம். என்று சொன்னான். உடனே அவன் யோசிக்க ஆரம்பித்தான். இதுவரை அவன் பட்ட அவமானங்களைத் துடைத்து எறிய வேண்டும் என்று நினைத்தான்.
மூன்று மாதங்கள் கழிந்தது. அரையாண்டு பரீட்சை லீவு முடிந்து பள்ளிக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அன்று வருகைப்பதிவு எடுத்தார் வகுப்பாசிரியர்.
“ ஆனந்தன்,”
“ உள்ளேன் ஐயா..”
“ ஆறுமுகம் “
“ உள்ளேன் ஐயா “
என்று வரிசையாகக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார். ஒரு பெயருக்கு முன்னால் கொஞ்சம் தடுமாறி நின்றார்.
“ கும்பிடுறேன்சாமி..”
“ உள்ளேன் ஐயா “
குரல் வந்த திக்கில் நிமிர்ந்து பார்த்தார். அங்கே கும்பிடுறேன்சாமி எழுந்து நின்றான். அவன் முகத்தில் ஒரு புன்னகை பூத்திருந்தது.

நன்றி - வண்ணக்கதிர்Sunday 16 June 2019

கஞ்சனைத் திருத்திய காகம்


கஞ்சனைத் திருத்திய காகம்

உதயசங்கர்

கொடையூரில் பிரபு என்று ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். பெயர் தான் பிரபு. அவன் மகாக்கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான். தானமோ, தர்மமோ, கொடுக்கமாட்டான். அந்தக் காலத்தில் சொல்வதைப் போல எச்சில் கையால் கூட காக்காவை விரட்ட மாட்டான். ஏன் தெரியுமா? அந்த எச்சில் கையில் உள்ள சோற்றுப்பருக்கைகள் கீழே விழுந்து விட்டால்? விழுந்த அந்தப்பருக்கையை காக்கா கொத்தித் தின்று விட்டால்? சாப்பிடும் போது சோற்றுப்பருக்கைகளை எண்ணி எண்ணிச் சாப்பிடுவான். மனைவி நல்லம்மாளுக்கும், குழந்தை தங்கத்துக்கும் கூட பருக்கைகளை எண்ணித்தான் சாப்பிடக் கொடுப்பான். சோறு வடித்த கஞ்சியைக் கூட யாருக்கும் கொடுக்க மாட்டான். அதனால் கொடையூர் மக்கள் பிரபுவுக்கு வடிகஞ்சன் என்று பெயர் வைத்து விட்டனர்.
வடிகஞ்சனின் மனைவி நல்லம்மாள் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர்.  வீட்டுக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் ஒரு காகம் கூடு கட்டியிருந்தது. அந்தக் காகத்துக்குத் தினமும் கம்பு, கேப்பை, அரிசி, சோறு, என்று ஏதாவது ஒரு உணவைக் கொடுப்பார் நல்லம்மாள். குடிக்கத்தண்ணீரும் ஒரு சிரட்டையில் வைப்பார். அந்தக் காகமும் அவருடைய தலையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கா கா கா கா கா கா என்று கரையும். அவருக்கு அருகில் வந்து நிற்கும். நல்லம்மாள் சிரித்துக் கொண்டே, “ சாப்பாடு வேணுமாக்கும்..” என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஏதாவது தீனி எடுத்து வருவாள். ஓய்ந்த நேரங்களில் புறவாசலில் உட்கார்ந்து காகத்திடம் பேசிக் கொண்டிருப்பாள். எப்போதாவது தங்கம் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவாள். அதனால் காகம் தங்கத்தைப் பார்த்தாலும் மகிழ்ச்சியில் கரையும்.
ஒரு நாள் தங்கம் பள்ளிக்கூடம் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. நேரமாகி விட்டது. நல்லம்மாளுக்கு இருக்க முடியவில்லை. வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே போய் விட்டு அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த வடிகஞ்சனிடம்,
“ ஏங்க.. தங்கத்தைக் காணலேங்க..” என்று பதட்டமாய் சொன்னாள். அதைக் கேட்டதும் வடிகஞ்சன் உடனே பாய்ந்து வீட்டுக்குள் ஓடினான். ஓடி பீரோவைத் திறந்து நகைப்பெட்டியைத் தேடினான். நல்லவேளை நகைப்பெட்டி உடனே கிடைத்தது. அதைத் திறந்து நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தான். அவன் பின்னாலேயே ஓடி வந்த நல்லம்மாள் அவனுடைய செயலைப் பார்த்து தலையில் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நம்ம மகளைக் காணலீங்க.. “ என்று கோபத்துடன் சொன்னாள். அதற்கு வடிகஞ்சன்,
” அவ்வளவுதானா? வருவா வருவா.. எங்கேயாச்சும் சுத்திகிட்டு வருவா..” என்று அலட்சியமாகச் சொன்னான். நல்லம்மாள் பக்கத்து வீட்டு பார்வதிப்பாட்டியை துணைக்குக் கூட்டிட்டு தங்கத்தைத் தேடப்போனாள். ஒரு வழியாக தங்கம் அவளுடைய தோழி வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள். வீட்டுக்கு வந்து பார்த்தால் வடிகஞ்சன் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் மதியம் நல்லம்மாள் புறவாசலில் துவைக்கும் கல்லைக் கழுவி காகத்துக்குச் சோறு வைத்தாள். காகம் அவளைப் பார்த்ததும் கா கா கா கா கா என்று கரைந்து கொண்டே சோறு சாப்பிட மரத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது வடிகஞ்சன் வந்து விட்டான். உடனே பாய்ந்து வந்து காகத்தை விரட்டினான். காகத்துக்கு வைத்திருந்த சோற்றை வாயில் போட்டு விழுங்கினான். பின்னர் உள்ளே சென்றான். நல்லம்மாளிடம்,
“ நான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வைக்கிறத நீ காக்காவுக்கும் குருவிக்கும் போட்டு வீணடிக்கிறியா..கழுதை.. “ என்று வைதான். அன்று முழுவதும் நல்லம்மாள் கண்ணில் பார்க்கும்போதெல்லாம் வைதான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தது காகம்.
மறுநாள் காலையில் வடிகஞ்சன் வேலைக்குக் கிளம்பினான். வாசல்படியை விட்டு கீழே இறங்கியது தான் உடனே எங்கிருந்தோ காகங்கள் பறந்து வந்து வடிகஞ்சனின் தலையில் கொத்தின.
“ ஐயோ அம்மா “ என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் ஓடினான். மறுபடியும் கொஞ்சநேரம் கழித்து வாசல்படியில் நின்று வெளியில் பார்த்தான். எதுவும் இல்லை. மெல்ல தெருவில் இறங்கினான். அவன் தெருவில் இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான். எங்கிருந்து தான் வருமோ? அப்படி ஒரு படையெடுப்பு. காகங்கள் பறந்து வந்தன. அவன் விழுந்தடித்து வீட்டுக்குள் ஓடினான். அப்படியும் ஒரு காகம் அவன் தலையில் கொத்தி விட்டது. அன்று பகல் முழுவதும் அப்படித்தான் நடந்தது.
இரவில் தான் அவன் வெளியே போக முடிந்தது. அவனுக்குப் புரிந்து விட்டது. அவன் காகத்துக்கு வைத்திருந்த சோற்றைத் தின்றதால் வந்த கோபம். இரவு முழுதும் அவனுடைய காதுகளில் காக்கைகளின் கா கா கா கா கா கா சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
 காக்காக்களுக்கு அவ்வளவு ஞாபகசக்தியா இருக்கும்? என்று நினைத்துக் கொண்டே தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வடிகஞ்சன் தெருவில் நடந்தான். ஒன்றும் நடக்கவில்லை. சரி. இனி பயமில்லை என்று நினைத்தான். அவனுடைய தெருவைத் தான் கடந்திருப்பான். ஒரு காகம் அவனுடைய முகத்துக்கு நேரே பறந்து அவனைப் பார்த்து விட்டது. அவன் யோசிப்பதற்குள் ஒரு கூட்டம் வந்து கொத்தி எடுத்து விட்டது. அவன் மறுபடி வீட்டுக்கு ஓடிப் போனான். முகத்தில், தலையில், ரத்தக்காயம். டாக்டர் வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்த்தார். பத்து நாட்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்தான் வடிகஞ்சன்.
ஊரெல்லாம் காகம் விரட்டிய வடிகஞ்சனைப் பற்றித்தான் பேச்சு. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் கூட அந்தச்செய்தி வந்து விட்டது. வடிகஞ்சனால் இரவில் கூட தலைகாட்டமுடியவில்லை. எல்லோரும் “ காக்காவை என்ன செய்ஞ்சே? என்ன செய்ஞ்சே..? “ என்று கேட்டார்கள். அவர்களிடம் காக்காவுக்கு வைத்திருந்த சோற்றைத் தின்னுட்டேன்னு சொல்லவா முடியும்? காகத்தின் சத்தம் கேட்டாலே வடிகஞ்சனின் உடல் நடுங்கியது.
கடைசியில் நல்லம்மாளிடம்,
“ நல்லம்மா என்னை மன்னிச்சிரு.. ஏதாச்சும் செய்யணும்.. சொல்லு.. எனக்குக் கேவலமா இருக்கு..”
என்று சொன்னான். நல்லம்மாள் ஆறுதலாக அவனிடம்,
“ நம்ம எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை தான்.. அதை எல்லோருக்கும் உதவி செய்ஞ்சு, மகிழ்ச்சியாக வாழணும்… அவ்வளவு தான்… நாளைக்கு நீங்களே காக்காவுக்குச் சோறு வைங்க..” என்றாள்.
 மறுநாள் காலை புறவாசலில் இருந்த திண்டில் வடிகஞ்சன் இல்லையில்லை பிரபு காக்காவுக்குச் சோறு வைத்தான். வேப்பமரத்திலிருந்த காகம் முதலில் சந்தேகமாகப் பார்த்தாலும், அருகில் நல்லம்மாள் இருப்பதைப் பார்த்து தைரியமாகப் பறந்து வந்து சோற்றைச் சாப்பிட்டு மற்றவர்களையும் அழைத்தது. எல்லாக்காகங்களும் கூட்டமாகச் சாப்பிடுவதைப் பார்த்த பிரபுவுக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது.
அதன் பிறகு அவன் எல்லோருக்கும் உதவிகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான். இப்போது அவனை எல்லோரும் பிரபு என்றே கூப்பிடுகிறார்கள்.,

நன்றி - வண்ணக்கதிர்

Monday 10 June 2019

எலி ராஜ்ஜியம்


எலி ராஜ்ஜியம்

உதயசங்கர்

கோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை கோவூர் நாட்டை திம்மன் ஆண்டு கொண்டிருந்தான். திம்மனின் ஆட்சியில் மக்கள் ஒரு நாளும் நிம்மதியாகத் தூங்கியதே இல்லை. திடீர் திடீரென்று நள்ளிரவில் தொலைக்காட்சியில் தோன்றி முழங்குவான். மக்கள் தொலைக்காட்சியை அணைத்து வைத்திருந்தாலும் எல்லாத்தொலைக்காட்சிகளின் மெயின் ஸ்விட்ச் திம்மனின் அரண்மனையில் இருந்தது. அதனால் திம்மனால் எப்போது வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் தோன்ற முடியும். திம்மன் பகல் முழுவதும் தூங்குவான். இல்லை என்றால் ஊர் ஊராகச் சுற்றுவான். இரவில் தான் அவனுடைய மந்திரிசபையைக் கூட்டுவான். உடனே மந்திரிகள் மக்களிடம் எப்படி எல்லாம் வரி வசூல் செய்யலாம். மக்கள் மத்தியில் எப்படி எல்லாம் சண்டை மூட்டி விடலாம் என்று ஆலோசனை சொல்லுவார்கள். அடுத்த நிமிடம் திம்மன் தொலைக்காட்சியில் தோன்றி,
“ கோவூர் நாட்டின் குலதெய்வமான நம்முடைய எலிக்கடவுள் நேற்று என் கனவில் வந்தார். எல்லோரும் எலிகளை விரட்டுகிறார்கள். சிலர் எலிகளைக் கொன்று விடுகிறார்கள். அதனால் நாட்டுக்கு மிகப்பெரும் கேடு வரப்போகிறது. அதனால் இனிமேல் எலிகளைப் பராமரிக்க, காப்பற்ற, உங்களுடைய ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுங்கள். அந்த ஒரு வேளை உணவுக்கான பணத்தை என்னுடைய கஜானாவில் தினமும் கொண்டு வந்து கொடுங்கள். இல்லையில்லை நமது நிதித்துறை ஊழியர்களே உங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்வார்கள். எலிக்கடவுளுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும். எலிகளை விரட்டினாலோ, எலிகளைக் கொண்றாலோ அவர்கள் தேசத்துரோகிகள் என்று கருதப்படுவார்கள். நம்முடைய நாட்டுக்காக உங்களுடைய தாய் நாட்டுக்காக இதைக்கூடச்செய்யக்கூடாதா? நமக்கு எலிப்பற்று வேண்டாமா? இனி எலிகளை வளர்க்க பாதுகாக்க பராமரிக்க, ஒரு தனியாக எலித்துறையும் அதற்கு எலிமந்திரியும்.நியமிக்கப்படுவார்கள்.”
என்று பேசுவான். ஏற்கனவே இரண்டுவேளை உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிற மக்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். திம்மனின் ஆட்சியில் படித்தவர்களுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு விலையில்லை. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லைகளினால் மக்கள் கோபத்தில் இருந்தார்கள். இதில் இப்படி ஒரு அறிவிப்பு.
மறுநாள் காலையில் தெருவுக்குத் தெரு எலிக்கோவில்கள் கட்டப்பட்டன. எலிகள் தெருக்கள், வீடுகள், கடைகள், அலுவலகங்கள், என்று எல்லா இடங்களிலும் சுதந்திரமாக அலைய ஆரம்பித்தன. வீடுகளில் கடைகளில், ஒரு பொருளை வைக்க முடியவில்லை. யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த எலிகள் வீட்டில் ரோட்டில் எல்லா இடங்களிலும் வந்து குடியேறின. எல்லோருடைய மடியிலும் ஏறு உட்கார்ந்து அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர்களுடைய கையிலிருந்தோ வாயிலிருந்தோ பிடுங்கித் தின்றன. அவர்களால் கையை ஓங்கி விரட்ட முடிய வில்லை. திம்மன் காவனித்துக்கொண்டிருப்பாரே. அது மட்டுமல்ல எலிகளை யாரும் துன்புறுத்துகிறார்களா என்று கவனிக்க  எலிக்குண்டர் படையையும் ஊர் ஊராக அனுப்பியிருந்தான் திம்மன்.
மக்கள் வேறுவழியில்லாமல் எலியைக் கும்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடுவதற்கு முன்னர் எலிக்குப் படைத்து விட்டு சாப்பிட்டார்கள். ஒருத்தர் எலியின் குண்டியைத் தொட்டுக் கும்பிட்டதால் அன்று அவர் வீட்டு முன்னறை அலமாரியில் வைத்திருந்த மசால்வடை முற்றத்தில் கிடைத்து விட்டது. இதை அவர் நண்பரிடம் சொல்ல அவர் இதை அவருடைய நண்பரிடம் சொல்ல, இப்படியே சொல்லிச் சொல்லி…. மறுநாள் காலையில் ஊரே எலிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. இன்னொருவர் அவருடைய வீட்டில் எலி மூத்திரத்தை கலந்து தெளித்ததால் எறும்பு ஈ கொசுத்தொல்லை இல்லை என்று சொல்லிவிட்டார். உடனே எலி மூத்திரம் சிறந்த கிருமிநாசினி என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
கோவூர் நாட்டு மந்திரிகள் உடனே மவுஸூரின் என்ற பெயரில் எலிமூத்திரதீர்த்தத்தை விற்க ஆரம்பித்தனர். எலிக்கோவில்களில் திரிஎலியா என்ற தீர்த்தத்தையும் விறக ஆரம்பித்தனர். திரிஎலியா என்றால் என்ன என்ற கேள்விக்கு எலிக்கோவில்களின் தலைமை பூசாரி தொலைக்காட்சியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நம்முடைய திரிஎலியா தீர்த்தம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்து. பேய்பிசாசுகளை விரட்டக்கூடியது. அதில் ஒரு சொட்டை எடுத்து வீட்டில் எருக்கிலையில் இட்டு வீட்டில் தெளித்தால் வீடு சுத்தமாகிப் பளபளக்கும். எலிமூத்திரம், எலிப்பால், எலித்தயிர்,, மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் திரிஎலியா உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும்…. “ என்று மந்திரம் சொல்வதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மக்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் போட்டிபோட்டுக்கொண்டு திரிஎலியாவை வாங்க அலை மோதினார்கள். பல இடங்களில் கூட்டநெரிசல். உள்ளூர் கம்பெனிகளும் உலகக்கம்பெனிகளும் போட்டி போட்டுக்கொண்டு திரிஎலியாவைத் தயாரித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தான் உண்மையான திரிஎலியாவை தயாரிப்பவன் அதுவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எலிவேதங்களில் உள்ள ஃபோர்முலாப்படி தயாரிக்கிற கம்பெனி என்று விளம்பரங்கள் வந்தன.
மக்களில் சிலர் எலிகளைக் கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாக எப்போதும் போல இருந்தனர். அவர்கள் இந்த எலிக்கூச்சல்களுக்குப் பயப்படவில்லை. அவர்களைப் பயமுறுத்துவதற்காக எலிக்குண்டர்படை அவர்களுடைய வீட்டில் எலிக்கறி இருப்பதாக அரசனிடம் அறிக்கை கொடுத்தனர். புனிதமான எலியைச் சாப்பிட்டதற்காக அவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுக்கப்பட்டது. ஆனால் எலித்துறை மந்திரி தன்னுடைய தம்பி பெயரில் வெளிநாடுகளுக்கு எலிக்கறி ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்தார். அது கோவூர் நாட்டில் பிறந்த குழந்தை முதல் திம்மன் வரை தெரிந்த பரமரகசியம்.  
இப்படியே கோவூர் நாட்டில் எலிகள் பெருகிப்பெருகி மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பஞ்சம் வந்து விட்டது. எலிகளுக்கும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதராகக் காணாமல் போனார்கள். திம்மனிடம் சென்று மக்கள் முறையிட்டனர். திம்மன் அவர்களை அடித்து விரட்டினான்
“ புனிதஎலியைக் குற்றம் சொல்பவர்களுக்குச் சிறைத்தண்டனை ” என்று அறிவித்தான். ஒவ்வொருவராக நாட்டை விட்டு அழுதுகொண்டே வெளியேறத் தொடங்கினர்.
கோவூர் நாட்டின் தென்மூலையில் இருந்த பகுத்தறிவு மலையில் பதினைந்து பதினாறு வயது இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அங்கே இருந்த தாடிக்கிழவரிடம் கோவூர் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களைச் சொன்னார்கள். அதைக்கேட்ட தாடிக்கிழவர்,
“ வெங்காயம்.. வெங்காயம்.. வெங்காயம்.. “
என்று திட்டினார். அவர் இளைஞர்களிடம் ஓர் யோசனை சொன்னார். இளைஞர்கள் அவருடைய யோசனையைக் கேட்டு அப்படியே செய்வதாகச் சொல்லிச்சென்றனர்.
மறுநாள் காலை திம்மன் கண்விழிக்கும்போது அவன் மீது நூறு எலிகள் உட்கார்ந்திருந்தன. கூச்சலிட்டுக் கொண்டே எழுந்தான். கட்டிலுக்குக் கீழே கால் வைக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் எலிகள். எலிகள். எலிகள். அரண்மனையில் மந்திரிகள் இல்லை. தளபதிகள் இல்லை. படைவீரர்கள் இல்லை. சேவகர்கள் இல்லை. வேலைக்காரர்கள் இல்லை. சமையற்காரர்கள் இல்லை. நேரத்துக்கு ஒரு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரர்கள் இல்லை. ஒப்பனைக்காரர்கள் இல்லை. திம்மனின் ஒவ்வொரு அசைவையும் பெரிய சாதனையாகக்காட்டும் தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் இல்லை. ஒருவரும் இல்லை. எல்லோரையும் எலிகள் தின்றுவிட்டன. திம்மன் அலறிக்கொண்டே ஓடினான். ஆனால் எலிகள் அவனைவிட வேகமாக ஓடி அவனைக் கடித்தன. பசி தாங்காமல் இருந்த எலிகள் திம்மனையும் தின்று தீர்த்தன.
கோவூர் நாட்டிலிருந்த அத்தனை எலிகளையும் அரண்மனைக்குள் பிடித்துக் கொண்டு வந்து விட்ட இளைஞர்கள்  வெளியில் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் எலிகளோடு சேர்த்து அரண்மனையைக் கொளுத்தினர். இப்போது கோவூர் நாட்டில் எலிகள் இல்லை. மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சி நடத்தினர்.
பகுத்தறிவு மலையில் இருந்த தாடிக்கிழவரின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு அதன் படி கோவூர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - வண்ணக்கதிர்
15+

                           

Friday 7 June 2019

பப்பியின் வீடு


பப்பியின் வீடு

உதயசங்கர்

பப்பி தடுமாறியது. எதிரேயும் குறுக்குமறுக்கும் யார் யாரோ வந்து போய்க் கொண்டிருந்தனர். இரண்டு அடி முன்னால் போய் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது. யாரோ,
“ நாய்க்குக் கண்ணு தெரியுதா பாரு.. நின்னுக்கிட்டிருக்கிற ஆட்டோவில வந்து மோதுது…சூ…சூ..சூ.. “
என்று ஆட்டோக்காரர் சத்தம் போட்டார். பப்பி பயந்து நடுங்கியது. பப்பிக்கு எந்தப் பக்கம் போகவேண்டும் என்று தெரியவில்லை. உடம்பில் அரிப்பு எடுத்தது. அப்படியே உட்கார்ந்து முன்காலால் சொறிந்து கொண்டது. செம்பட்டைக்கலரில் முடி கொத்து கொத்தாய் தொங்கியது. முதுமையினால் தளர்ந்து போயிருந்தது. பப்பிக்கு பதினைந்து வயதாகி விட்டது. ஒரு கண் முழுவதுமாய் பார்வை தெரியவில்லை. ஒரு கண்ணில் அரைப்பார்வை மட்டும் தெரிந்தது. பல பற்கள் உதிர்ந்து விட்டன. மோப்பசக்தியும் குறைந்து விட்டது. குரலும் ஒடுங்கி விட்டது. குரைப்பதற்காக வாயைத் திறந்தால் ஊளைச்சத்தமோ, முனகலோ தான் வருகிறது.
எப்படி இந்தத்தெருவுக்கு வந்தோம் என்று பப்பி யோசித்தது. பப்பியின் சொந்தக்காரர் நேற்று இரவில் பப்பியை ஒரு சாக்குப்பையில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தார். இந்தத் தெரு மூலையில் பையோடு வைத்து விட்டுப் போய் விட்டார்.
காலையில் போக்குவரத்துச் சத்தம் கேட்டுத்தான் பப்பி கண்விழித்தது. பப்பியின் இளமையில் படு சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு நொடி கூட சும்மா இருக்காது. அதனுடைய சொந்தக்காரரோ, அவருடைய மனைவி குழந்தைகள் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடக்கும். காலையில் பேப்பரைக் கவ்விக் கொண்டு வரும். வீசுகிற பந்தை எடுத்து வரும். இரவில் தூங்கவே தூங்காது. சின்னச்சத்தம் கேட்டாலும் காதுகளை விடைத்துக் கொண்டு உற்றுக் கவனிக்கும். அந்தச் சத்தம் ஆபத்து என்று தோன்றி விட்டால் உடனே குரைக்க ஆரம்பித்து விடும். ஒருமுறை அப்படி குரைத்ததால் பப்பியின் சொந்தகாரர் எழுந்து எல்லாவிளக்குகளையும் போட்டார். அதைப்பார்த்த திருடன் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து ஓடி விட்டான். குழந்தைகளோடு அப்படி விளையாடும். எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது பப்பி. இப்போது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். பப்பியால் முன்பு போல குரைக்கவோ, ஓடவோ, முடியவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
பப்பி கண்களை மூடி யோசித்தது. வயிறு பசித்தது. தெரு மங்கலாகத் தெரிந்தது. எல்லோரும் பப்பியைக் கடந்து போனார்கள். யாரும் நிற்கவில்லை. பப்பிக்குச் சோர்வாக இருந்தது. அப்படியே ஒடுங்கிப் படுத்துவிட்டது. பப்பி ஒரு கனவு கண்டது.
” மகா..மகா.. இங்கே பாரேன் ஒரு சடைநாய்..”
“ ஐய்..ஆமா.. நாம வீட்டுக்குக் கூட்டிட்டு போவோமா? “
“ அய்யா திட்டுவாரே..”
“ நாம கெஞ்சிக் கேட்டா ஒண்ணும் சொல்லமாட்டாரு..”
சாக்குப்பையில் பப்பி மிதந்து கொண்டே போகிறது. வெகுநேரம் கழித்து சாக்குப்பையிலிருந்து பப்பியை யாரோ தூக்குகிறார்கள்.
“ அட கிழட்டு நாயை எதுக்குத் தூக்கிட்டு வந்தீக.. உங்களுக்குச் சாப்பாடு போடறதே கஷ்டமா இருக்கு.. கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று அப்பாவின் குரல் கேட்கிறது.
“ அய்யா.. அய்யா.. இருக்கட்டும்யா.. பாக்கப் பாவமா இருக்கு.. “ என்று குழந்தைகள் கெஞ்சுகின்றன. பப்பி கண்களைத் திறந்து பார்க்கிறது. அரைக்கண் பார்வையில் அது ஒரு தகரக்கூரை போட்ட பிளாட்பார்ம் வீடு என்று தெரிகிறது. அப்பாவின் முகத்தில் இருந்த கடுமை குறையவில்லை. குழந்தைகள் பிரியத்தோடு பப்பியைத் தடவிக் கொடுத்தார்கள். அந்தப்பிஞ்சு விரல்களில் வழிந்த அன்பை பப்பி உணர்ந்தது. அப்போது ஒரு வயதான கிழவி அந்த வீட்டுக்குள் வந்தாள். பப்பியைப் பார்த்தாள். குழந்தைகளைப் பார்த்தாள்.
“ நாய்க்குச் சோறு வைச்சீகளா..பிள்ளைகளா..? என்னை மாதிரி அதுக்கும் முடியல… பாவம்..”
என்று சொல்லிக் கொண்டே அடுப்பாங்கரைப் பகுதிக்குப் போனாள். அதன் பிறகு அப்பா எதுவும் சொல்லவில்லை.  மகாவும் கதிரும் பப்பியைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பப்பி வாலை ஆட்டியது. லேசாய் முனகியது.
எல்லாம் கனவு மாதிரியே இருந்தது. ஆனால் மகாவும் கதிரும் பப்பிக்கு எதிரில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் கொஞ்சம் சோறு போட்டுக் கொண்டு வந்தார்கள். பப்பி அந்தக் குழந்தைகளைப் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்குத் தங்க நிறத்தில் சிறகுகள் முளைத்திருந்தன.

நன்றி - மாயாபஜார்Thursday 6 June 2019

செம்மொழி
1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள்.
2. இந்த மூவாயிரம் மொழிகளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றை கொண்ட மொழிகள் ஆறு மட்டுமே.
3. தமிழ், சீனம், சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், ஹீப்ரு, ஆகிய மொழிகளை யுனஸ்கோ பழமையான மொழிகளாக அங்கீகரித்துள்ளது.
4. இவற்றில் லத்தீன் வழக்கொழிந்து விட்டது.
5. வழக்கில் இல்லாத ஹீப்ருவை இஸ்ரேல் அரசு உயிரூட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
6. கிரீக் இடையில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மெல்ல நிலைபெற்று வருகிறது.
7. சமஸ்கிருதம் மந்திரமொழியாக மிகக்குறைந்த நபர்களால் மனனம் செய்து ஒப்பிக்கப்படுகிறது.
8. சீனமும், தமிழும் மட்டுமே ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செம்மொழியாக உலக அளவில் திகழ்கின்றன.
9. சீனமொழி சித்திர வடிவத்தில் இருப்பதால் மனித உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த முடியவில்லை என்பது மொழியியலாளரின் கருத்து.
10. தமிழ் மட்டுமே
1) தொன்மையானது
2) தனித்தன்மை கொண்டது
3) பொதுமைத்தன்மை கொண்டது
4) நடுநிலைமையுடைய மொழி
5) பல மொழிகளின் வேர்மொழி
6) அநுபவங்களை துல்லியமாக வெளிப்படுத்தும் மொழி
7) பிறமொழிக்கலப்பினால் சுயம் இழக்காத மொழி
8) இலக்கிய வளம் கொழிக்கும் மொழி
9) உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்த தடையில்லாத மொழி
10. கலையில் இலக்கியத்தில் தனித்தன்மை கொண்ட மொழி
11) தனக்கென தனித்துவமிக்க மொழிக்கோட்பாடும் இலக்கணமும் கொண்ட மொழி
11) உலகிலுள்ள மொழிகளில் தமிழ் மட்டுமே தன்னிகரில்லாத தனித்துவம் கொண்ட மொழியாகத் திகழ்கிறது.
12) உலகில் ஏறத்தாழ பதினைந்து கோடி மக்கள் பேசும், எழுதும் பழமையான செம்மொழி தமிழ் மட்டுமே.
13) தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

Tuesday 4 June 2019

மொழியும் இனமும்

மொழியும் இனமும்

1. மொழி ஒரு இனத்தின் ஆன்மா.
2. மொழியின் மூலமே ஒரு இனம் தன்னை அடையாளம் காண்கிறது.
3. மொழி வெறும் தகவல் தொடர்புக்கருவியல்ல. அது ஒரு பண்பாட்டின் ஆணிவேர்.
4. மொழி ஒரு இனத்தின் இரத்த ஓட்டம். அது ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் அந்த இனம் தனித்துவத்துடன் தன்னை நிலை நிறுத்தமுடியும்.
5. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழித்தால் போதுமானது.
6. எந்த ஒரு மொழியும் எந்த மொழிக்கும் எதிரியல்ல.
7. ஆனால் எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
8. ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்வில் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியின் வழியாகவே சிந்திக்கிறான்.
9. மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அந்த இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்று விழுமியங்கள் இருக்கின்றன
10. தன்னுடைய மொழியை அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இனத்தின் கடமை.

Monday 3 June 2019

அண்டப்புளுகனை வென்ற ஆகாசப்புளுகன்


அண்டப்புளுகனை வென்ற ஆகாசப்புளுகன்
உதயசங்கர்

முன்பு ஒரு காலத்தில் இந்தியாவின் வடக்கு திசையில் புளுகு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் யார் பெரிதாகப் புளுகுகிறார்களோ அவர்களே ராஜா. அதைவிட கொஞ்சம் குறைவாகப் புளுகுகிறவன் முதல் மந்திரி. அதைவிட ஒரு படி குறைவாகப் புளுகுகிறவன் ராணுவ மந்திரி. அப்படியே நிதி மந்திரி, உணவு மந்திரி, என்று வரிசையாகப் பதவிகள் கிடைக்கும். யார் நன்றாகப்புளுகுகிறார்கள் என்று முடிவு சொல்வதற்கு புளுகு மந்திரி ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புளுகுப்போட்டி நடத்தி எல்லோரையும் தேர்வு செய்வார்.
இப்போது அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜாவின் பெயர் அண்டப்புளுகன். முதல்மந்திரியின் பெயர் அண்டாப்புளுகன், ராணுவ மந்திரியின் பெயர் குண்டாப்புளுகன், நிதி மந்திரியின் பெயர் கொப்பரைப்புளுகன், வெளியுறவுத்துறை மந்திரியின் பெயர் செப்பானைப்புளுகன், இப்படியே குத்துப்போணி புளுகன், சருவச்சட்டிப்புளுகன், வாணெலிப்புளுகன், கெண்டிப்புளுகன், தம்ளர்புளுகன், என்று அவர்கள் சொல்கிற பொய்களுக்கு ஏற்ப பெயர் வைத்துக் கொண்டார்கள். மக்கள் பாவம்! இவர்கள் சொல்கிற பொய்களைக் கேட்க முடியவில்லை. எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாங்க புளுகாத புளுகா? அப்படி என்ன புளுகி விட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள்?
ராஜா அண்டப்புளுகன், “ நான் பிறக்கும் போதே என் தலையில் கிரீடத்துடன் தான் பிறந்தேன்..” என்று சொல்லுவான். யாராவது அம்மாவின் வயித்துக்குள்ளே கிரீடத்துடன் இருக்க முடியுமா? அப்புறம் கிரீடம் எப்படி வயித்துக்குள்ளே வந்துச்சுங்கிற கேள்வியும் இருக்கு.
முதல் மந்திரி அண்டாப்புளுகன், “ நான் நடந்து போனா கடல் ஒதுங்கி வழி விட்டுரும்..”
என்று சொல்லுவான்.  சாலைகளில் உள்ள பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீர் கூட வழி விடாது. குண்டாப்புளுகன், “ நான் வாயைத்திறந்தா ஒரு லட்சம் படை வீரர்கள் என் வாயிலேர்ந்து வருவாங்க..”
என்றான். ஆனால் குண்டாப்புளுகன் வாயிலிருந்து அவன் நேற்று தின்ற பிரியாணியின் கெட்டுப்போன வாசனை தான் வந்தது. கொப்பரைப்புளுகன்,
“ என் உடலின் அத்தனை ஓட்டைகள் வழியாகவும் தங்கக்காசு கொட்டும்..? “
என்று சொல்லுவான். ஆனால் அவன் உடலிலிருந்து கத்தாழை நாற்றம் அடிக்கும் வியர்வை தான் கொட்டும். அப்புறம் என்ன? செப்பானைப்புளுகன் சும்மா இருப்பானா?
“ நான் ஊம்னு சொன்னாப்போதும் உலகத்திலுள்ள அத்தனை நாட்டு ராஜாக்களும் தங்களுடைய நாட்டைச் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விடுவார்கள்..
என்பான். ஆனால் எந்த நாட்டுக்கும் வரக்கூடாது என்று செப்பானைப்புளுகனுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  இது மட்டுமல்ல.
தினமும் அரசாங்க அறிவிப்புகள் வேறு வரும். இனி யாரும் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. தினமும் நம்முடைய குலதெய்வமான எலிமூத்திரத்தை குடித்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்றோ புளுகு நாட்டு கடலுக்கடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கற்காலப்பாலம் இருக்கிறது அதனால் இனிமேல் மக்கள் அந்தப் பாலத்தில் தான் நடந்து செல்ல வேண்டும் என்றோ பூனையின் தலையை யானைக்கு வைத்துத் தைத்து மருத்துவத்தில் வெற்றி கண்ட நாடு என்பதால் இனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நம் மூதாதையர் சொன்ன பாம் ஹீரீம்..மாம் ஹிரீம் என்ற மந்திரத்தைச் சொன்னால் போதும். ஆபரேஷன் நடந்து விடும் என்றோ மழை பெய்ய எல்லோரும் டம்ளருக்குள் உட்கார்ந்து மழையே மழையே போ போ என்று ஆங்கிலத்தில் பாடவேண்டும் என்றோ விசித்திரமான அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். இதையெல்லாம் மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்று  புளுகர் படை ஒன்று கண்காணிக்கும்.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் புளுகு மூட்டைகள் தினசரி அவிழ்த்து விடப்பட்டன. அண்டப்புளுகன் காலடி பட்டால் மண் பொன்னாகிறது. அண்டாப்புளுகன் கை பட்டால் வயலில் நெல் தானாக விளைகிறது. ஏனெனில் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது அண்டப்புளுகன் தானே.
மக்களுக்கு வாழவழியில்லை. விவசாய நிலங்களில் வீடுகள் வந்து விட்டன. படித்தவர்களுக்கு வேலையில்லை.ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். புளுகு நாட்டின் கடைக்கோடியில் அண்டப்புளுகன் ஆட்சியைப் பிடிக்காத சில இளைஞர்கள் கூடி மக்கள் படுகிற துயரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே இருந்த இளைஞன் மகிழன்
“ அடுத்த போட்டியில் நாம் கலந்து கொண்டு. இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம்..” என்றான். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
ஐந்து ஆண்டு முடிந்து புளுகுப்போட்டி தொடங்கியது.
அண்டப்புளுகன் தன்னுடைய புளுகைச் சொன்னான்.
“ நான் பிறந்த அடுத்த நிமிடமே டிஜிடல் கேமிராவில் படம் பிடித்தேன்.. அந்தப் புகைப்படம் இதோ..” என்று ஒரு குழந்தையின் விரலில் கேமிராவின் வார் இருப்பதைப்போல இருந்த படத்தைக் காட்டினான். உடனே புளுகு மந்திரி “ ஆகா.. ஆகா.. எப்பேர்ப்பட்ட புளுகு! அடுத்த ஐந்து வருடத்துக்கும் இவரே ராஜா..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் மகிழன் முன்னால் வந்தான்.
“ இருங்கள் புளுகு மந்திரியாரே! என்னுடைய புளுகையும் கேளுங்கள். அப்புறம் முடிவு பண்ணுங்கள்…”
அண்டப்புளுகனும் புளுகு மந்திரியும் மகிழனை அலட்சியமாகப் பார்த்தார்கள். இவன் என்ன புளுகப்போறான்? புளுகுவதற்கு என்றே பிறந்தவர்கள் தாங்கள் தானே என்ற இறுமாப்பில்,
“ ம்ம் நீ யார்? உன் பெயர் என்ன?.. “ என்றார்கள். மகிழன்,
“ ஐயா என் பெயர் ஆகாசப்புளுகன். நமது அண்டப்புளுகன் பிறந்த பிறகு தான் டிஜிடல் கேமிராவில் படம் எடுத்ததாகச் சொன்னார். நான் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதே டிஜிடல் கேமிராவில் என்னையே படம் எடுத்திருக்கிறேன்..”
“ என்னது அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதா? புளுகறதுக்கும் ஒரு அளவில்லையா? “
என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் சிரித்துக்கொண்டே,
“ இதோ ஆதாரம்…”
 என்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்த படங்களைக் காட்டினான்.
“ இந்தப்படங்கள் கருப்பாக இருக்கின்றன.. நான் ஏத்துக்கிடமாட்டேன்..” என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் உடனே,
“ இருட்டிலிருந்து எடுத்ததாலே இருட்டாருக்கு.. என்ன மக்களே என்ன சொல்றீங்க? “ என்று சுற்றியிருந்த மக்களைப் பார்த்துக் கேட்டான். உடனே மக்கள்,
“ ஆமா இதுதான் ஆகாசப்புளுகு.. ஆகாசப்புளுகன் வாழ்க! “ என்று கத்தினார்கள். வேறுவழியில்லாமல் புளுகு மந்திரி மகிழனையே புளுகு நாட்டின் ராஜாவாக முடி சூட்டினான். ராஜா மகிழன் முடி சூட்டியவுடன் செய்த முதல் வேலை அண்டப்புளுகனையும் அவனுடைய ஆட்களையும் நாட்டை விட்டே துரத்தினான். புளுகு நாட்டின் பெயரை அறிவுநாடு என்று மாற்றினான். ஆட்சியில் மக்களையும் பங்கெடுக்க வைத்தான்.
அறிவுநாடு அறிவுள்ள நாடாகத் திகழ்ந்தது.

நன்றி - வண்ணக்கதிர்


Saturday 1 June 2019

தாஸ்தோவ்ஸ்கியை பற்றிய உரை

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு - தாஸ்தோயேவ்ஸ்கி நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை
நூல் வெளியீடு - நூல்வனம்
தொடர்புக்கு - 91765 49991.
https://m.youtube.com/watch?v=TOVwGXnsimM&t=5s
https://m.youtube.com/watch?v=TOVwGXnsimM&t=5s

நன்றி- ஸ்ருதி டி.வி.