Monday, 3 June 2019

அண்டப்புளுகனை வென்ற ஆகாசப்புளுகன்


அண்டப்புளுகனை வென்ற ஆகாசப்புளுகன்
உதயசங்கர்

முன்பு ஒரு காலத்தில் இந்தியாவின் வடக்கு திசையில் புளுகு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் யார் பெரிதாகப் புளுகுகிறார்களோ அவர்களே ராஜா. அதைவிட கொஞ்சம் குறைவாகப் புளுகுகிறவன் முதல் மந்திரி. அதைவிட ஒரு படி குறைவாகப் புளுகுகிறவன் ராணுவ மந்திரி. அப்படியே நிதி மந்திரி, உணவு மந்திரி, என்று வரிசையாகப் பதவிகள் கிடைக்கும். யார் நன்றாகப்புளுகுகிறார்கள் என்று முடிவு சொல்வதற்கு புளுகு மந்திரி ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புளுகுப்போட்டி நடத்தி எல்லோரையும் தேர்வு செய்வார்.
இப்போது அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜாவின் பெயர் அண்டப்புளுகன். முதல்மந்திரியின் பெயர் அண்டாப்புளுகன், ராணுவ மந்திரியின் பெயர் குண்டாப்புளுகன், நிதி மந்திரியின் பெயர் கொப்பரைப்புளுகன், வெளியுறவுத்துறை மந்திரியின் பெயர் செப்பானைப்புளுகன், இப்படியே குத்துப்போணி புளுகன், சருவச்சட்டிப்புளுகன், வாணெலிப்புளுகன், கெண்டிப்புளுகன், தம்ளர்புளுகன், என்று அவர்கள் சொல்கிற பொய்களுக்கு ஏற்ப பெயர் வைத்துக் கொண்டார்கள். மக்கள் பாவம்! இவர்கள் சொல்கிற பொய்களைக் கேட்க முடியவில்லை. எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாங்க புளுகாத புளுகா? அப்படி என்ன புளுகி விட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள்?
ராஜா அண்டப்புளுகன், “ நான் பிறக்கும் போதே என் தலையில் கிரீடத்துடன் தான் பிறந்தேன்..” என்று சொல்லுவான். யாராவது அம்மாவின் வயித்துக்குள்ளே கிரீடத்துடன் இருக்க முடியுமா? அப்புறம் கிரீடம் எப்படி வயித்துக்குள்ளே வந்துச்சுங்கிற கேள்வியும் இருக்கு.
முதல் மந்திரி அண்டாப்புளுகன், “ நான் நடந்து போனா கடல் ஒதுங்கி வழி விட்டுரும்..”
என்று சொல்லுவான்.  சாலைகளில் உள்ள பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீர் கூட வழி விடாது. குண்டாப்புளுகன், “ நான் வாயைத்திறந்தா ஒரு லட்சம் படை வீரர்கள் என் வாயிலேர்ந்து வருவாங்க..”
என்றான். ஆனால் குண்டாப்புளுகன் வாயிலிருந்து அவன் நேற்று தின்ற பிரியாணியின் கெட்டுப்போன வாசனை தான் வந்தது. கொப்பரைப்புளுகன்,
“ என் உடலின் அத்தனை ஓட்டைகள் வழியாகவும் தங்கக்காசு கொட்டும்..? “
என்று சொல்லுவான். ஆனால் அவன் உடலிலிருந்து கத்தாழை நாற்றம் அடிக்கும் வியர்வை தான் கொட்டும். அப்புறம் என்ன? செப்பானைப்புளுகன் சும்மா இருப்பானா?
“ நான் ஊம்னு சொன்னாப்போதும் உலகத்திலுள்ள அத்தனை நாட்டு ராஜாக்களும் தங்களுடைய நாட்டைச் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விடுவார்கள்..
என்பான். ஆனால் எந்த நாட்டுக்கும் வரக்கூடாது என்று செப்பானைப்புளுகனுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  இது மட்டுமல்ல.
தினமும் அரசாங்க அறிவிப்புகள் வேறு வரும். இனி யாரும் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. தினமும் நம்முடைய குலதெய்வமான எலிமூத்திரத்தை குடித்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்றோ புளுகு நாட்டு கடலுக்கடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கற்காலப்பாலம் இருக்கிறது அதனால் இனிமேல் மக்கள் அந்தப் பாலத்தில் தான் நடந்து செல்ல வேண்டும் என்றோ பூனையின் தலையை யானைக்கு வைத்துத் தைத்து மருத்துவத்தில் வெற்றி கண்ட நாடு என்பதால் இனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நம் மூதாதையர் சொன்ன பாம் ஹீரீம்..மாம் ஹிரீம் என்ற மந்திரத்தைச் சொன்னால் போதும். ஆபரேஷன் நடந்து விடும் என்றோ மழை பெய்ய எல்லோரும் டம்ளருக்குள் உட்கார்ந்து மழையே மழையே போ போ என்று ஆங்கிலத்தில் பாடவேண்டும் என்றோ விசித்திரமான அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். இதையெல்லாம் மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்று  புளுகர் படை ஒன்று கண்காணிக்கும்.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் புளுகு மூட்டைகள் தினசரி அவிழ்த்து விடப்பட்டன. அண்டப்புளுகன் காலடி பட்டால் மண் பொன்னாகிறது. அண்டாப்புளுகன் கை பட்டால் வயலில் நெல் தானாக விளைகிறது. ஏனெனில் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது அண்டப்புளுகன் தானே.
மக்களுக்கு வாழவழியில்லை. விவசாய நிலங்களில் வீடுகள் வந்து விட்டன. படித்தவர்களுக்கு வேலையில்லை.ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். புளுகு நாட்டின் கடைக்கோடியில் அண்டப்புளுகன் ஆட்சியைப் பிடிக்காத சில இளைஞர்கள் கூடி மக்கள் படுகிற துயரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே இருந்த இளைஞன் மகிழன்
“ அடுத்த போட்டியில் நாம் கலந்து கொண்டு. இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம்..” என்றான். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
ஐந்து ஆண்டு முடிந்து புளுகுப்போட்டி தொடங்கியது.
அண்டப்புளுகன் தன்னுடைய புளுகைச் சொன்னான்.
“ நான் பிறந்த அடுத்த நிமிடமே டிஜிடல் கேமிராவில் படம் பிடித்தேன்.. அந்தப் புகைப்படம் இதோ..” என்று ஒரு குழந்தையின் விரலில் கேமிராவின் வார் இருப்பதைப்போல இருந்த படத்தைக் காட்டினான். உடனே புளுகு மந்திரி “ ஆகா.. ஆகா.. எப்பேர்ப்பட்ட புளுகு! அடுத்த ஐந்து வருடத்துக்கும் இவரே ராஜா..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் மகிழன் முன்னால் வந்தான்.
“ இருங்கள் புளுகு மந்திரியாரே! என்னுடைய புளுகையும் கேளுங்கள். அப்புறம் முடிவு பண்ணுங்கள்…”
அண்டப்புளுகனும் புளுகு மந்திரியும் மகிழனை அலட்சியமாகப் பார்த்தார்கள். இவன் என்ன புளுகப்போறான்? புளுகுவதற்கு என்றே பிறந்தவர்கள் தாங்கள் தானே என்ற இறுமாப்பில்,
“ ம்ம் நீ யார்? உன் பெயர் என்ன?.. “ என்றார்கள். மகிழன்,
“ ஐயா என் பெயர் ஆகாசப்புளுகன். நமது அண்டப்புளுகன் பிறந்த பிறகு தான் டிஜிடல் கேமிராவில் படம் எடுத்ததாகச் சொன்னார். நான் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதே டிஜிடல் கேமிராவில் என்னையே படம் எடுத்திருக்கிறேன்..”
“ என்னது அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதா? புளுகறதுக்கும் ஒரு அளவில்லையா? “
என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் சிரித்துக்கொண்டே,
“ இதோ ஆதாரம்…”
 என்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்த படங்களைக் காட்டினான்.
“ இந்தப்படங்கள் கருப்பாக இருக்கின்றன.. நான் ஏத்துக்கிடமாட்டேன்..” என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் உடனே,
“ இருட்டிலிருந்து எடுத்ததாலே இருட்டாருக்கு.. என்ன மக்களே என்ன சொல்றீங்க? “ என்று சுற்றியிருந்த மக்களைப் பார்த்துக் கேட்டான். உடனே மக்கள்,
“ ஆமா இதுதான் ஆகாசப்புளுகு.. ஆகாசப்புளுகன் வாழ்க! “ என்று கத்தினார்கள். வேறுவழியில்லாமல் புளுகு மந்திரி மகிழனையே புளுகு நாட்டின் ராஜாவாக முடி சூட்டினான். ராஜா மகிழன் முடி சூட்டியவுடன் செய்த முதல் வேலை அண்டப்புளுகனையும் அவனுடைய ஆட்களையும் நாட்டை விட்டே துரத்தினான். புளுகு நாட்டின் பெயரை அறிவுநாடு என்று மாற்றினான். ஆட்சியில் மக்களையும் பங்கெடுக்க வைத்தான்.
அறிவுநாடு அறிவுள்ள நாடாகத் திகழ்ந்தது.

நன்றி - வண்ணக்கதிர்


No comments:

Post a Comment