Monday 10 June 2019

எலி ராஜ்ஜியம்


எலி ராஜ்ஜியம்

உதயசங்கர்

கோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை கோவூர் நாட்டை திம்மன் ஆண்டு கொண்டிருந்தான். திம்மனின் ஆட்சியில் மக்கள் ஒரு நாளும் நிம்மதியாகத் தூங்கியதே இல்லை. திடீர் திடீரென்று நள்ளிரவில் தொலைக்காட்சியில் தோன்றி முழங்குவான். மக்கள் தொலைக்காட்சியை அணைத்து வைத்திருந்தாலும் எல்லாத்தொலைக்காட்சிகளின் மெயின் ஸ்விட்ச் திம்மனின் அரண்மனையில் இருந்தது. அதனால் திம்மனால் எப்போது வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் தோன்ற முடியும். திம்மன் பகல் முழுவதும் தூங்குவான். இல்லை என்றால் ஊர் ஊராகச் சுற்றுவான். இரவில் தான் அவனுடைய மந்திரிசபையைக் கூட்டுவான். உடனே மந்திரிகள் மக்களிடம் எப்படி எல்லாம் வரி வசூல் செய்யலாம். மக்கள் மத்தியில் எப்படி எல்லாம் சண்டை மூட்டி விடலாம் என்று ஆலோசனை சொல்லுவார்கள். அடுத்த நிமிடம் திம்மன் தொலைக்காட்சியில் தோன்றி,
“ கோவூர் நாட்டின் குலதெய்வமான நம்முடைய எலிக்கடவுள் நேற்று என் கனவில் வந்தார். எல்லோரும் எலிகளை விரட்டுகிறார்கள். சிலர் எலிகளைக் கொன்று விடுகிறார்கள். அதனால் நாட்டுக்கு மிகப்பெரும் கேடு வரப்போகிறது. அதனால் இனிமேல் எலிகளைப் பராமரிக்க, காப்பற்ற, உங்களுடைய ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுங்கள். அந்த ஒரு வேளை உணவுக்கான பணத்தை என்னுடைய கஜானாவில் தினமும் கொண்டு வந்து கொடுங்கள். இல்லையில்லை நமது நிதித்துறை ஊழியர்களே உங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்வார்கள். எலிக்கடவுளுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும். எலிகளை விரட்டினாலோ, எலிகளைக் கொண்றாலோ அவர்கள் தேசத்துரோகிகள் என்று கருதப்படுவார்கள். நம்முடைய நாட்டுக்காக உங்களுடைய தாய் நாட்டுக்காக இதைக்கூடச்செய்யக்கூடாதா? நமக்கு எலிப்பற்று வேண்டாமா? இனி எலிகளை வளர்க்க பாதுகாக்க பராமரிக்க, ஒரு தனியாக எலித்துறையும் அதற்கு எலிமந்திரியும்.நியமிக்கப்படுவார்கள்.”
என்று பேசுவான். ஏற்கனவே இரண்டுவேளை உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிற மக்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். திம்மனின் ஆட்சியில் படித்தவர்களுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு விலையில்லை. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லைகளினால் மக்கள் கோபத்தில் இருந்தார்கள். இதில் இப்படி ஒரு அறிவிப்பு.
மறுநாள் காலையில் தெருவுக்குத் தெரு எலிக்கோவில்கள் கட்டப்பட்டன. எலிகள் தெருக்கள், வீடுகள், கடைகள், அலுவலகங்கள், என்று எல்லா இடங்களிலும் சுதந்திரமாக அலைய ஆரம்பித்தன. வீடுகளில் கடைகளில், ஒரு பொருளை வைக்க முடியவில்லை. யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த எலிகள் வீட்டில் ரோட்டில் எல்லா இடங்களிலும் வந்து குடியேறின. எல்லோருடைய மடியிலும் ஏறு உட்கார்ந்து அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர்களுடைய கையிலிருந்தோ வாயிலிருந்தோ பிடுங்கித் தின்றன. அவர்களால் கையை ஓங்கி விரட்ட முடிய வில்லை. திம்மன் காவனித்துக்கொண்டிருப்பாரே. அது மட்டுமல்ல எலிகளை யாரும் துன்புறுத்துகிறார்களா என்று கவனிக்க  எலிக்குண்டர் படையையும் ஊர் ஊராக அனுப்பியிருந்தான் திம்மன்.
மக்கள் வேறுவழியில்லாமல் எலியைக் கும்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடுவதற்கு முன்னர் எலிக்குப் படைத்து விட்டு சாப்பிட்டார்கள். ஒருத்தர் எலியின் குண்டியைத் தொட்டுக் கும்பிட்டதால் அன்று அவர் வீட்டு முன்னறை அலமாரியில் வைத்திருந்த மசால்வடை முற்றத்தில் கிடைத்து விட்டது. இதை அவர் நண்பரிடம் சொல்ல அவர் இதை அவருடைய நண்பரிடம் சொல்ல, இப்படியே சொல்லிச் சொல்லி…. மறுநாள் காலையில் ஊரே எலிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. இன்னொருவர் அவருடைய வீட்டில் எலி மூத்திரத்தை கலந்து தெளித்ததால் எறும்பு ஈ கொசுத்தொல்லை இல்லை என்று சொல்லிவிட்டார். உடனே எலி மூத்திரம் சிறந்த கிருமிநாசினி என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
கோவூர் நாட்டு மந்திரிகள் உடனே மவுஸூரின் என்ற பெயரில் எலிமூத்திரதீர்த்தத்தை விற்க ஆரம்பித்தனர். எலிக்கோவில்களில் திரிஎலியா என்ற தீர்த்தத்தையும் விறக ஆரம்பித்தனர். திரிஎலியா என்றால் என்ன என்ற கேள்விக்கு எலிக்கோவில்களின் தலைமை பூசாரி தொலைக்காட்சியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நம்முடைய திரிஎலியா தீர்த்தம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்து. பேய்பிசாசுகளை விரட்டக்கூடியது. அதில் ஒரு சொட்டை எடுத்து வீட்டில் எருக்கிலையில் இட்டு வீட்டில் தெளித்தால் வீடு சுத்தமாகிப் பளபளக்கும். எலிமூத்திரம், எலிப்பால், எலித்தயிர்,, மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் திரிஎலியா உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும்…. “ என்று மந்திரம் சொல்வதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மக்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் போட்டிபோட்டுக்கொண்டு திரிஎலியாவை வாங்க அலை மோதினார்கள். பல இடங்களில் கூட்டநெரிசல். உள்ளூர் கம்பெனிகளும் உலகக்கம்பெனிகளும் போட்டி போட்டுக்கொண்டு திரிஎலியாவைத் தயாரித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தான் உண்மையான திரிஎலியாவை தயாரிப்பவன் அதுவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எலிவேதங்களில் உள்ள ஃபோர்முலாப்படி தயாரிக்கிற கம்பெனி என்று விளம்பரங்கள் வந்தன.
மக்களில் சிலர் எலிகளைக் கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாக எப்போதும் போல இருந்தனர். அவர்கள் இந்த எலிக்கூச்சல்களுக்குப் பயப்படவில்லை. அவர்களைப் பயமுறுத்துவதற்காக எலிக்குண்டர்படை அவர்களுடைய வீட்டில் எலிக்கறி இருப்பதாக அரசனிடம் அறிக்கை கொடுத்தனர். புனிதமான எலியைச் சாப்பிட்டதற்காக அவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுக்கப்பட்டது. ஆனால் எலித்துறை மந்திரி தன்னுடைய தம்பி பெயரில் வெளிநாடுகளுக்கு எலிக்கறி ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்தார். அது கோவூர் நாட்டில் பிறந்த குழந்தை முதல் திம்மன் வரை தெரிந்த பரமரகசியம்.  
இப்படியே கோவூர் நாட்டில் எலிகள் பெருகிப்பெருகி மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பஞ்சம் வந்து விட்டது. எலிகளுக்கும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதராகக் காணாமல் போனார்கள். திம்மனிடம் சென்று மக்கள் முறையிட்டனர். திம்மன் அவர்களை அடித்து விரட்டினான்
“ புனிதஎலியைக் குற்றம் சொல்பவர்களுக்குச் சிறைத்தண்டனை ” என்று அறிவித்தான். ஒவ்வொருவராக நாட்டை விட்டு அழுதுகொண்டே வெளியேறத் தொடங்கினர்.
கோவூர் நாட்டின் தென்மூலையில் இருந்த பகுத்தறிவு மலையில் பதினைந்து பதினாறு வயது இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அங்கே இருந்த தாடிக்கிழவரிடம் கோவூர் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களைச் சொன்னார்கள். அதைக்கேட்ட தாடிக்கிழவர்,
“ வெங்காயம்.. வெங்காயம்.. வெங்காயம்.. “
என்று திட்டினார். அவர் இளைஞர்களிடம் ஓர் யோசனை சொன்னார். இளைஞர்கள் அவருடைய யோசனையைக் கேட்டு அப்படியே செய்வதாகச் சொல்லிச்சென்றனர்.
மறுநாள் காலை திம்மன் கண்விழிக்கும்போது அவன் மீது நூறு எலிகள் உட்கார்ந்திருந்தன. கூச்சலிட்டுக் கொண்டே எழுந்தான். கட்டிலுக்குக் கீழே கால் வைக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் எலிகள். எலிகள். எலிகள். அரண்மனையில் மந்திரிகள் இல்லை. தளபதிகள் இல்லை. படைவீரர்கள் இல்லை. சேவகர்கள் இல்லை. வேலைக்காரர்கள் இல்லை. சமையற்காரர்கள் இல்லை. நேரத்துக்கு ஒரு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரர்கள் இல்லை. ஒப்பனைக்காரர்கள் இல்லை. திம்மனின் ஒவ்வொரு அசைவையும் பெரிய சாதனையாகக்காட்டும் தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் இல்லை. ஒருவரும் இல்லை. எல்லோரையும் எலிகள் தின்றுவிட்டன. திம்மன் அலறிக்கொண்டே ஓடினான். ஆனால் எலிகள் அவனைவிட வேகமாக ஓடி அவனைக் கடித்தன. பசி தாங்காமல் இருந்த எலிகள் திம்மனையும் தின்று தீர்த்தன.
கோவூர் நாட்டிலிருந்த அத்தனை எலிகளையும் அரண்மனைக்குள் பிடித்துக் கொண்டு வந்து விட்ட இளைஞர்கள்  வெளியில் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் எலிகளோடு சேர்த்து அரண்மனையைக் கொளுத்தினர். இப்போது கோவூர் நாட்டில் எலிகள் இல்லை. மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சி நடத்தினர்.
பகுத்தறிவு மலையில் இருந்த தாடிக்கிழவரின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு அதன் படி கோவூர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - வண்ணக்கதிர்
15+

                           

















1 comment: