Sunday 23 June 2019

கும்பிடுறேன்சாமி!


கும்பிடுறேன்சாமி!
உதயசங்கர்

அவனுக்கு அவனுடைய அய்யாவின் மீது கோபம் கோபமாக வந்தது. யாராவது பிள்ளைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்களா? கேட்டால் அவனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம் பிறந்து ஒன்றிரண்டு மாதங்களில் இறந்து விட்டார்களாம். அவர்களை எல்லாம். கடவுள் எடுத்துக்கொண்டாராம். மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால் கடவுள் வேண்டாம் என்று விட்டு விடுவாராம். அப்படி விட்ட பேராம். அவ்வளவு வெள்ளந்தியாகவா கடவுள் இருப்பார்? மண்ணாங்கட்டிக்கு கோபம் வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் மற்ற பையன்களுக்கு ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குருசாமி, சங்கரநாராயணன், என்று அழகழகான பெயர்கள் இருக்கும்போது எல்லோரும் அவனை இளக்காரமாகப் பார்க்கிறார்கள்.  
“ போடா மண்ணாங்கட்டி தெருப்புழுதி ” என்று கேலி செய்கிறார்கள். ஆசிரியரும் கூப்பிடும்போதே,
“ ஏலே மண்ணு உன்பேர் தான் மண்ணுன்னா தலையிலேயும் மண்ணுதானா? “ என்று சும்மா திட்டுகிறார். இத்தனைக்கும் அவன் கஷ்டப்பட்டு படித்து முதல் பத்து ரேங்கில் வந்து விடுவான். ஆனால் அதையெல்லாம் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியர்களுக்கு மற்ற மாணவர்கள் ” குட்மார்னிங் சார் ” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் மட்டும் ” கும்பிடுறேன் ஐயா ” என்று சொல்லணும். வகுப்பறையைப் பெருக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. பாம்பு, தேளு, பல்லி, பூரான், அடிக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. எந்த முரட்டு வேலையாக இருந்தாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு தான். ஒரு தடவை பள்ளிக்கூடக் கக்கூஸைக் கழுவணும் வா மண்ணாங்கட்டி என்று பியூன் வந்து கூப்பிட்டார். அவனுக்கு அழுகையே வந்து விட்டது. வரமுடியாது என்று மறுத்து விட்டான். எந்த அரட்டல் மிரட்டல் உருட்டலுக்கும் பயப்படாமல் மறுத்து விட்டான் மண்ணாங்கட்டி.
 எப்படியாவது படித்து அவனுடைய தெருவில் இருந்த அறிவழகன் அண்ணன் மாதிரி பெரிய வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தான் மண்ணாங்கட்டி. ஆனால் இந்தப் பெயரைச் சொல்லி அவனை காலம் பூராவும் அவமானப்படுத்துவார்களே. என்ன செய்ய? அவனுடன் பேதம் பார்க்காமல் பழகக்கூடியவன் அன்பரசு மட்டும் தான். அவன் மண்ணாங்கட்டியை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்பான். மண்ணாங்கட்டி அவனிடம் தன்னுடைய வருத்தத்தைச் சொன்னான்.
அன்பரசு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம். அரசு பதிவிதழில் அறிவிக்கை செய்து விட்டு பெயரை மாற்றிக்கொள்ளலாம். என்று சொன்னான். உடனே அவன் யோசிக்க ஆரம்பித்தான். இதுவரை அவன் பட்ட அவமானங்களைத் துடைத்து எறிய வேண்டும் என்று நினைத்தான்.
மூன்று மாதங்கள் கழிந்தது. அரையாண்டு பரீட்சை லீவு முடிந்து பள்ளிக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அன்று வருகைப்பதிவு எடுத்தார் வகுப்பாசிரியர்.
“ ஆனந்தன்,”
“ உள்ளேன் ஐயா..”
“ ஆறுமுகம் “
“ உள்ளேன் ஐயா “
என்று வரிசையாகக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார். ஒரு பெயருக்கு முன்னால் கொஞ்சம் தடுமாறி நின்றார்.
“ கும்பிடுறேன்சாமி..”
“ உள்ளேன் ஐயா “
குரல் வந்த திக்கில் நிமிர்ந்து பார்த்தார். அங்கே கும்பிடுறேன்சாமி எழுந்து நின்றான். அவன் முகத்தில் ஒரு புன்னகை பூத்திருந்தது.

நன்றி - வண்ணக்கதிர்



4 comments:

  1. மிகவும் யோசிக்க வைக்கும் கதை .இன்னும் இப்படியான ஒடுக்குமுறைப் பிரச்சனைகள் நம் சமூகத்தில் இருக்கிறது என்பது வேதனையே

    ReplyDelete
  2. நல்ல அருமையான கதை

    ReplyDelete