தபால் பெட்டி எங்கே?
உதயசங்கர்
” தபால் பெட்டி எங்கே? “ மணிப்புறா காகத்திடம் கேட்டது.
காகம் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்தது. வேப்பமரத்தின்
ஒவ்வொரு கிளையாகப் பார்த்தது. எங்கும் இல்லை. தலையைத் தூக்கிப் பார்த்தது.
சாய்த்துப் பார்த்தது. குனிந்து பார்த்தது. பிறகு காலால் தலையைச் சொறிந்து கொண்டே,
“ இங்கே தானே இருந்தது..”
என்று முணுமுணுத்தது. பிறகு
அந்தப் பூங்காவில் இருந்த ஒவ்வொரு மரமாய் பறந்து சென்று பார்த்தது. இரண்டு மூன்று முறை கருமலைக் காட்டில் இருக்கும் தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
தபால் அனுப்பியிருக்கிறது. அப்போது இந்த வேப்பமரத்தில் இருந்த
சிவப்புநிறப் பெட்டியில் தான் போட்டது.
மணிப்புறா சோகமாக உட்கார்ந்திருந்தது. அதன்
வாயில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதம் மணிப்புறா அதனுடைய
அம்மாவுக்கு எழுதியது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் காட்டில் இருந்து
நகரத்துக்கு அந்த மணிப்புறா வந்து விட்டது. தானாக வரவில்லை.
யாராவது அருமையான காட்டை விட்டு வருவார்களா?
“ அதானே! நீ எப்படி வந்தே?
கர்ர் “ என்று காகம் கேட்டது.
“ காக்கையண்ணே அது ஒரு சிறிய கதை..க்ம் க்கும் “ என்று மணிப்புறா பதில் சொன்னது.
“ கதையா? கதைன்னா எனக்கு
ரொம்பப்பிடிக்கும்..கா காகா ” என்று காகம்
மகிழ்ச்சியாகக் கத்தியது.
“ சரி சரி.. சொல்றேன்..
காக்கையண்ணே! ஒரு நாள் நான் தான் நகரத்தை வேடிக்கை பார்க்கலாம்னு பறந்து
வந்தேன்.. அப்போ திடீரென்று ஒரு கல் என்னுடைய இடது பக்கச் சிறகில்
பட்டு விட்டது. எப்படியாவது பறக்க முயற்சி செய்தேன். ஆனால் கீழே விழுந்து விட்டேன். என்னை ஒரு சின்னப்பையன்
தூக்கிக் கொண்டு போனான். “ சரி அவ்வளவுதான்… “ என்று நினைத்தேன். “
“ அப்புறம்? “ என்றது
காகம்
“ ஆனால் அந்தப் பையன் ரகு அடிபட்ட இறகில் ஏதோ
மஞ்சள் பொடியை வைத்துக் கட்டினான். தானியங்களை உணவாகக் கொடுத்தான்.
இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது.. ” என்று மணிப்புறா
தன் சிறகை விரித்துக் காட்டியது.
“ அப்புறம் என்ன பண்ணினான்.?. குறும்புக்காரப்பசங்களை நான் நம்புறதில்லை.. க்கா க்கா
கா..” என்று காகம் முகத்தைத் திருப்பிக் கொண்டது.
” அந்தப் பையனே என்னைப் பறக்கவிட்டான்..
முதலில் எனக்கும் நகரம் பிடிக்கவில்லை. பிறகு கொஞ்சம்
கொஞ்சமாய் விட்டது. உயரமான கட்டிடங்களில் தங்குவேன். உனக்குத் தான் தெரியுமே. நீ தானே எங்கே தானியங்கள் கிடைக்கும்
என்று சொன்னாய். .திடீர்னு எனக்கு அம்மா ஞாபகம் வந்துருச்சி..
அம்மா எவ்வளவு கவலைப்பட்டாங்களோ. அதான் அம்மாவுக்குக்
கடிதம் எழுதிப் போடலாம் என்று நினைத்தேன் ”
என்று சொன்ன மணிப்புறா தலையை உயர்த்தி
வானத்தைப் பார்த்தது. காகமும் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தது.
ஒரு வேளை தபால்பெட்டி வானத்தில் இருக்குமோ. சிறகுகளை
விரித்து மேலே எழும்பி ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தது.
“ இல்லையே அங்கேயும் தபால்பெட்டி இல்லையே..கா கா ” என்று கத்தியது. மணிப்புறா,
“ வேற எங்கேயாச்சும் இருக்குமா? “ என்று கேட்டது. காகம் யோசித்தது.
“ ஆங்.. ஒரு பள்ளிக்கூடத்துக்குப்
பக்கத்தில் பாத்துருக்கேன்..” என்று சொல்லிவிட்டு பறந்தது காகம். மணிப்புறாவும் பின்னாலேயே
பறந்தது. பள்ளிக்கூடத்தின் வாசலிலும் தபால்பெட்டி இல்லை.
அப்படியே பஜாரில் பூக்கடைக்கு அருகில் போய் பார்த்தன. அங்கேயும் இல்லை.
” தபால் பெட்டிகள் எல்லாம் எங்கே போச்சு?
“ என்று காகமும் மணிப்புறாவும் கவலையுடன் பறந்தன. அப்போது ஒரு கட்டிடத்தின் பின்புறம் நிறையத் தபால்பெட்டிகள் ஒன்றுக்கு மேல்
ஒன்றாகக் கிடந்தன.
அந்தத் தபால்பெட்டிகளின் அருகில் போய்
காகமும் மணிப்புறாவும் இறங்கின.
காகம் கேட்டது,
“ என்னாச்சு ஏன் இங்கே கிடக்கிறீங்க?
“
“ அதுவா அண்ணே! முன்னே
எல்லாம் மக்கள் நிறையா தபால் எழுதி பெட்டியில் போடுவாங்க.. அதனால்
தெருவுக்குத் தெரு தபால்பெட்டி இருந்துச்சு.. இப்ப யாருமே தபால்
எழுதறதுமில்ல.. போடறதுமில்ல. எங்களுக்கு
வேலையும் இல்லை .”
என்று சிவப்புநிறம் மங்கிப்போன வயதான
தபால்பெட்டி சொன்னது. அதைக் கேட்ட காகம்,
“ ஆமா ஆமா எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு..
தபால் பெட்டியில் கடிதத்தைப் போட்டுட்டா உலகத்தின் எந்த மூலை முடுக்காக
இருந்தாலும் சரி..இண்டு இடுக்காக இருந்தாலும் சரி… தபால் போய்ச் சேந்திரும்… எங்க பாட்டி இருக்கிற நடுக்காட்டுக்குள்ளேயே
வரும்னா பாத்துக்கோயேன்..”
என்று அலகில் விரலை வைத்துக் கொண்டு சொன்னது. மணிப்புறா,
“ இப்ப நான் என்ன பண்றது.. எங்க அம்மா தேடுவாங்க..”
உடனே வயதான தபால்பெட்டி,
“ கவலைப்படாதே.. அதுக்கு
ஒரு வழி பண்றேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றது.
” உன் கடிதத்தை என்னோட வயித்தில் போடு..”
என்றது தபால்பெட்டி. மணிப்புறா கடிதத்தைப் போட்டது.
தபால்பெட்டி அப்படியே நடந்து சென்று தபால்நிலையத்துக்கு அருகில் போய்
நின்று கொண்டது.
அதைப் பார்த்த மணிப்புறாவும் காகமும்
அங்கிருந்து பறந்து சென்றன.
தபால்காரர் வருவதற்காகத் தபால்பெட்டி
காத்துக் கொண்டிருந்தது.
திடீரென கூட்டம் கூட்டமாய் பறவைகள் அலகுகளில்
கடிதங்களுடன் வந்தன. கடிதங்களைத் தபால்பெட்டியில் போட்டன.
தபால்பெட்டி நிறைந்து விட்டது. தபால் நிலையத்தை
விட்டு வெளியே வந்த அஞ்சல் ஊழியர் தபால்பெட்டியைப் பார்த்து முதலில் ஆச்சரியமடைந்தார்.
பிறகு பெட்டியைத் திறந்து பார்த்தார். ஏராளமான
கடிதங்களைப் பார்த்த அவருடைய முகத்தில் சிரிப்பு. சாக்குப்பையில்
எல்லாக்கடிதங்களையும் எடுத்துக் கொண்டுபோனார்.
அதன்பிறகு அந்த இடத்திலேயே தபால்பெட்டி
நின்றது. தினமும் கடிதங்கள் பெட்டியில் கிடந்தன. மனிதர்களும் கடிதங்களை போட்டனர்.
உலகமுழுவதும் கடிதங்கள் பறந்து கொண்டிருந்தன.
உங்கள் ஊரில் தபால்பெட்டியைப் பார்த்திருக்கிறீர்களா
குட்டீஸ்!
நன்றி - வண்ணக்கதிர்
No comments:
Post a Comment