யாரும் எழுதாத கதையை எழுதுவது எப்படி?
1. எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் அவர்கள் எழுதும் கதை இதுவரை யாரும் எழுதியதில்லையென்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.
2. நிறைய எழுத்தாளர்கள் இது அப்படியே நடந்தது என்று சொல்வார்கள். நடந்ததை அப்படியே சொல்வது இலக்கியமல்ல. நாம் வாழும் சமூகத்தில் ஒரே மாதிரியான சம்பவங்கள், அனுபவங்கள், நிறையப்பேருக்கு நடந்திருக்கும். அப்போது கூறியது கூறலாக மாறிவிடும்.
3. கூறியது கூறல் கலையின் தனித்துவத்தை வெளிப்படுத்தாது. முதல் ருசிக்கும் நூறாவது ருசிக்கும் வேறுபாடு இருப்பதைப் போல.
4. மற்றவர்கள் வாசிக்கும் போது நாம் எழுதியதைப்போலவே , அதே மாதிரி கருப்பொருளில் ஆயிரம் கதைகள் எழுதப்பட்டிருப்பது தெரியும்.
5. அப்படியென்றால் என்ன செய்வது?எழுதுபவர்கள் முதலில் நாம் எழுத நினைப்பதை ஏற்கனவே வேறு எழுத்தாளர்கள் எழுதிவிட்டார்களா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
6. வாசிப்பு ஒன்று தான் அதற்கு வழி. எல்லாநூல்களையும் வாசிக்க முடியாவிட்டாலும் முக்கியமான மாஸ்டர் எழுத்தாளர்களின் புத்தகங்களையாவது வாசித்துவிட வேண்டும்.
7. நாம் எழுத நினைப்பது தேய்வழக்கான கருப்பொருளாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படியே அதே மாதிரி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
8 இன்னொரு வழி தேய்வழக்கான கருப்பொருளாக இருந்தாலும் இதற்கு முன் யாரும் அணுகியிராத கோணத்தில் யோசிக்க வேண்டும். புதிய வடிவத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.
9. தேய்வழக்கான கருப்பொருளும், கதைசொல்லலும் புதிய அனுபவத்தைத் தராது. கதை ஆரம்பிக்கும்போதே முடிவு தெரிந்துவிடும்.
10. ரெடிமேட் சட்டைகளைப்போல கருத்துகளுக்கேற்ற கதைகளைச் செயற்கையாக உருவாக்கலாம். சிறார் இலக்கியத்தில் இது அதிகம். இப்படிப்பட்ட படைப்புகளைத் தான் வணிக இலக்கியம் அல்லது போலி இலக்கியம் என்கிறோம். இப்படிப்பட்ட படைப்புகள் முற்போக்கு இலக்கியத்திலும் உண்டு.
11. கதைகள் வாசகனுக்கு புதிய அனுபவத்தைத் தரவேண்டும். இதுவரை அவன் வாசித்திராத கதைக்களனைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது வாசித்திராத கோணத்தில் எழுதப்பட்டிருக்க வெந்ண்டும்.
12. கதாபாத்திரங்கள் முழுமையானவர்களாக, கதைக்குள்ளேயே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். ஜவுளிக்கடை பொம்மை போல இருக்கக்கூடாது.
13. கதையில் வரும் சம்பவமோ, அனுபவமோ, நுண்விவரங்களுடன் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு கதை ஒரு பஸ் ஸ்டாப்பில் நடக்கிறதென்றால் அந்த பஸ் ஸ்டாப்பைப் பற்றி அங்கே பல நிலைகளில் காத்துக்கொண்டிருக்கும் பயணிகளைப் பற்றி நுட்பமான விவரணைகளைச் சேர்க்க வேண்டும்.
14. நுட்பம் கூடக்கூட ஆழமும் நம்பகத்தன்மையும் அதிகமாகும். ஆழம் அதிகமாகும்போது அது வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவுகளும் அதிகமாகும். ஆனால் அந்த நுட்பங்கள் கதையோடு ஒன்றியும், கதைக்குத் தேவையானதாகவும் இருக்க வேண்டும். கதாபாத்திரங்களின் மனநிலையோடு அந்தக் காட்சி விவரணைகளை ஒன்றிணைக்கத் தெரியவேண்டும்.
15. கதை தொடங்கியதும் அதற்குள்ளே ஒரு அகவெளி உருவாகிறது. அந்த அகவெளியை மொழியின் மூலம் எழுத்தாளன் தான் உருவாக்குகிறான். அகவெளியை உருவாக்குவதற்கும் நுட்பமான விவரணைகளும் உணர்ச்சிநிலைகளும் உதவும். அதற்கான வலிமையை எழுத்தாளன் பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
16. எழுதும் களம் குறித்த முழுமையான தரவுகள், உளவியல் மற்றும் தகவல்களைப் பெற உழையுங்கள். அதற்கு எழுத்தாளனுக்கு சமூகம் குறித்த பார்வை மிக முக்கியம்.
17. மாறிவரும் மதிப்பீடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அந்த மதிப்பீடுகள் உருவாக்கும் மனிதமனநிலைகளை ஆராய வேண்டும்.
18. கதைகள் மனிதர்களின் அகநிலை மற்றும் புறநிலை குறித்த ஆய்வுகள் தான். அந்த ஆய்வுகளின்வழியே எழுத்தாளனும் வாசகனும் மானுடத்தைப் புரிந்து கொள்வான்.
19. அதுவே மானுடத்தின் மேன்மைக்குத் தூண்டுகோலாக இருக்கும்.. அத்தகைய பொறுப்புணர்ச்சியுடன் கதைகளை எழுதுங்கள். உங்கள் கதைகள் இதுவரை யாரும் எழுதாத கதையாகத் திகழும்.
No comments:
Post a Comment