Monday 30 April 2012

எம்.ஜி.ஆர் ராக்கையா

mgr

ராக்கையா எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகன். எம்.ஜி.ஆரின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரைக்கு முன்னால் வெகு அருகில் உட்கார்ந்து பார்ப்பான். கை தட்டி விசில் அடித்து ஒரு பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி விடுவான். அதே போல எம்.ஜி.ஆர் படங்களைப் பலமுறை பார்த்து மனப்பாடம் செய்வதில் கில்லாடி. எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல் படத்தை மட்டும் இருபத்தியேழு தடவை பார்த்திருக்கிறான். பல நாட்கள் காலையில் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டு, பல நாட்கள் மதியம் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டுப் போய் பார்த்திருக்கிறான். திரைப்படத்தில் வருகிற எம்.ஜி.ஆர் மாதிரி எப்போதும் உற்சாகமாக இருப்பான் ராக்கையா.

எம்.ஜி.ஆர் படப்பாடல்களை வாய் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே ஒப்பிக்கிற ராக்கையாவுக்கு பாடங்கள் எதுவும் மண்டையில் ஏறவில்லை. அவனில்லாமல் நாங்கள் எந்த முக்கியமான காரியத்துக்கும் போனதில்லை.
சிரித்த முகமும் துறு துறுவென துடிக்கும் உடல்மொழியும் கொண்ட ராக்கையா கூட இருந்தாலே போதும் யாருக்கும் உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்ளும். அதே போல எந்த வேலைக்கும் அஞ்சாதவன் ராக்கையா. எப்படியோ அவனுக்கு எங்களைப் பிடித்து விட்டது. எப்போதும் எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.நாங்கள் எப்போதாவது போகிற திரைப்படங்களுக்கு அவனைக் கூட்டிக் கொண்டு போவோம். அவன் தான் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கவுண்டரில் ஏறிக் குதித்து சண்டை போட்டு டிக்கெட் வாங்கி விடுவான். நான், நாதன், சாரதி, கந்தசாமி, எல்லோரும் போட்ட சட்டை கலையாமல் உள்ளே போய் திரைப்படம் பார்ப்போம்.


அப்படி ஒரு முறை வசந்தமாளிகை படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவு செய்து விட்டோம். டிக்கெட் எடுக்க வேண்டுமே. ராக்கையாவை விட்டால் எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனால் சிவாஜி படத்திற்கு ராக்கையா வருவானா? என்று சாரதி சந்தேகப்பட்டான். நாதன் தான் அதெல்லாம் வருவாண்டே என்று சொன்னான். எனக்கு உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் அவன் வந்தால் இன்று போவோம். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து கூட்டம் குறைந்த பிறகு போவோம் என்று கந்தசாமி சொன்னான்.

ராக்கையா வந்ததும் சாரதி தான்,“ டேய் ராக்கு.. நீ பிரண்ட்ஸுக்காக ஒரு காரியம் செய்யணும்னா செய்வியால..” என்று முக்கி முனகிக் கேட்டான். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“ என்ன வசந்தமாளிகை டிக்கெட் எடுத்துக் கொடுக்கணுமாக்கும்..’
என்று சொன்னான். நாங்கள் அதிர்ந்து போனோம்.

அன்று சரியான கூட்டம். வழக்கம் போல கூட்டத்துக்குள் முண்டியடித்து கவுண்டருக்குள் ஏறிக் குதித்து வரிசையிலிருந்தவர்களுடன் மல்லுக் கட்டி டிக்கெட் எடுத்து விட்டான். எங்களுடைய டிக்கெட்டுகளுடன் கவுண்டருக்கு அருகில் காத்திருந்தான். நாங்கள் கூட்டம் குறைந்து வரிசையில் போனோம்.

அப்போது கந்தசாமி தான் ராக்கையாவைப் பார்த்து கேட்டான்,“ எல நீ சாரம் கட்டியிருந்தியே அதை எங்கல..” அப்போது தான் ராக்கையாவும் கவனித்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைக் காண வில்லை. வெறும் டவுசர் பனியனோட நின்று கொண்டிருந்தான். கவுண்டர் வழியெல்லாம் தேடிப் பார்த்தோம். சாரம் கிடைக்கவில்லை.

நாங்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்காது. படம் ஆரம்பித்தவுடனேயே தூங்கி விடுவான். சரியாக இடைவேளை சமயத்தில் எழுந்து ஐஸ், முறுக்கு என்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பான். அதேபோல என்ன வேலை சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்று நாங்கள் தான் பயப்படுவோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எம்.ஜி.ஆர். புன்னகை சிந்துவான். அவ்வளவு தான். உடனே சிட்டாய் பறந்துபோய் அந்த வேலையைச் செய்து விட்டுத் திரும்புவான். பெரும்பாலான நேரங்களில் எங்கள் நண்பர்கள் குழாமில் உள்ள யாருடைய வீட்டிலாவது கிடப்பான். அங்கேயே சாப்பிடவும் செய்வான். வீட்டிலுள்ள எல்லோரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுவான். பல நேரங்களில் வீட்டிலுள்ளவர்களே அவனைத் தேடுவார்கள்.

வீட்டில் மட்டும் தான் என்றில்லை யாரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுகிற இயல்பான குணம் ராக்கையாவுக்கு. பழகிய ஐந்தாவது நிமிடத்திலே பல வருடம் பழகியவன்போல அன்யோன்யமாகி விடுகிற வசீகரம் அவனிடம் இருந்தது. அதனால் யாரும் அவன் மீது கோபப் படவே மாட்டார்கள். அப்படியே கோபம் வந்தாலும் வந்த சில நிமிடங்களிலே அவனே சகஜமாக்கி விடுவான். அதனால் பள்ளிக்கூடத்தில் அவன் படிக்கவில்லையென்றால் கூட வாத்தியார்கள் அவனை அதிகம் அடித்ததையோ, திட்டியதையோ நாங்கள் பார்த்ததில்லை. எல்லா வாத்தியார்களும் அவனிடம் ஏதோ ஒரு விதத்தில் வேலை வாங்கியிருப்பார்கள். யாருக்கும் அஞ்சுவதோ, வெட்கப்படுவதோ, கிடையாது. நாங்கள் மிகுந்த யோசனைக்காரர்களாக இருந்ததால் எங்களுக்கு ராக்கையாவின் துணை பெரிய பலமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் அவன் கூட இருந்தானென்றால் எங்களைப் பிடிக்காத எதிரிகள் சற்று விலகியே போவார்கள். அப்படியே யாராவது எங்களிடம் வாலாட்டினால் ராக்கையா எம்.ஜி.ஆர். மாதிரியே சிரித்துக் கொண்டே சண்டைபோடுவான். திரைப்படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸை அவன் வாயினாலே கொடுத்துக் கொள்வான்.

நாங்கள் அவன் கூட துணை நடிகர்கள் மாதிரி நின்று கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்போம். அடி வாங்கிக் கொண்டு வந்தாலும் சரி, அடி கொடுத்து விட்டாலும் சரி, ஒரே சிரிப்புதான். தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு ,” பயகள புரட்டி எடுத்திட்டேன்ல..” என்று சொல்லுவான். எங்களுக்குப் பெருமையாக இருக்கும்.

கோவில்பட்டியின் ஊர் விளையாட்டான ஆக்கியை ஊரிலுள்ள நண்டுநசுக்கான் தொடங்கி பெரியவர்கள் வரை தெருக்காடுகளிலும், மைதானங்களிலும், விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? எங்களுடன் ராக்கையாவும் விளையாடுவான். ஒருபோதும் அவன் கோல் போட்டதே இல்லை. அவனிடம் பந்து கிடைத்தால் அதைக் கொண்டுட்டு ஓட மாட்டான். நாலு அடி ஓடுவதற்குள் பந்தை எதிரணியிடம் விட்டு விடுவான். எல்லோரும் திட்டுவார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். ஆனால் அதற்காக அவனை விளையாட்டில் சேர்க்காமல் இருந்ததில்லை.

பின்னர் கிரிக்கெட் விளையாட்டு பேமஸ் ஆனது. ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டு ” சார் ரன் கேலியே ” என்ற மூச்சு விடாத ஹிந்தி வர்ணனை எங்களைக் கவர்ந்தது. நாங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். இரவு பகல் பாராமல் கிரிக்கெட் விளையாடினோம். காந்திமைதானமே எங்கள் கூப்பாட்டில் அரண்டு போனது. அதிலும் ராக்கையா ஒரு பந்தைக் கூட கேட்ச் பிடித்ததில்லை. ஒரு பந்துகூட பவுலிங் போட்டதில்லை. ஒரு ரன் கூட எடுத்ததில்லை. ஆனாலும் எங்களுடன் விளையாடினான். இப்படி எங்களுடன் இரண்டறக் கலந்து விட்டான் ராக்கையா. எங்கள் இளம் பருவ நினைவுகளை ராக்கையாவை விட்டு விட்டு யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் கல்லூரி போனபோது அவன் கல்லூரி வரவில்லை. ஐ.டி.ஐ. படிக்கப்போய் விட்டான். அப்போதும் தினமும் மாலையில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஐ.டி.ஐ. முடித்த அவன் கோயம்புத்தூர் லட்சுமி மில்லில் வேலைக்குப் போய் விட்டான்.

நாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்து இந்தியாவின் வேலை இல்லாப்பட்டதாரிகளாக உலகை வலம் வந்து கொண்டிருந்தோம். இலக்கியம், அரசியல், தத்துவம், என்று புத்தகங்களை வாசித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், அலைந்து கொண்டிருந்தோம். மனசில்லா மனசோடு வேலை தேடுவதாகப் பாவனை செய்து கொண்டு கனவுகளின் கதகதப்பில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்.

எங்கள் செட்டில் முதலில் வேலைக்குப் போனது ராக்கையா தான். அடுத்து நாதன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்து நான் அல்லரைசில்லரையாகச் சில வேலைகளைப் பார்ப்பதும் விடுவதுமாய் இருந்தேன். சாரதி வருவாய்த்துறையில் சேர்ந்தான். கந்தசாமி அஞ்சல் அலுவலகத்தில் சேர்ந்தான். முதலில் வேலைக்குச் சேர்ந்த ராக்கையா தான் முதலில் கலியாணமும் முடித்தான். அவன் கலியாணம் முடித்தது அவனுடைய தாய்மாமன் மகளைத் தான். கலியாணத்தில் ராக்கையா வைத்த ஒரே கோரிக்கை கலியாண வீட்டில் எம்.ஜி.ஆர். பாட்டைத் தவிர வேறு யாருடைய பாட்டையும் போடக் கூடாது. ஏனெனில் அவனுடைய மாமா சிவாஜி ரசிகர். அவனுடைய கோரிக்கையைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

கலியாணம் முடிந்து ராக்கையா குடும்பத்தோடு கோயம்புத்தூர் சென்று விட்டான். அதன் பிறகு ஆறு மாதங்களாக அவனைப் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப் பட்ட செய்திகளும் நல்லதாக இல்லை. அவன் விரும்பிக் கலியாணம் முடித்த அவனுடைய மாமா மகள் அவனை மதிக்கிறதில்லை. எப்போதும் அவனை வைது கொண்டே இருக்கிறாள். எங்களுக்கு கேட்கச் சங்கடமாக இருந்தது. ஆனால் பெரிதாகக் கவலைப் படவில்லை. ராக்கையா எதையும் சமாளித்து விடுவான் என்று நினைத்தோம். அவனுடைய உற்சாகத்தின் அலையில் எல்லாம் கரை சேர்ந்து விடும் என்று பேசிக்கொண்டோம். அதற்கடுத்த சில வாரங்களில் ராக்கையா ஊருக்கு வந்தான். நாங்கள் ஆவலுடன் அவனைச் சந்திக்கப் போனோம். எங்களைப் பார்த்ததும் சிரித்தான். ஆனால் அதில் பழைய உற்சாகம் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது செய்கிற வழக்கமான ஏற்பாட்டைப் போல இரவு இரண்டாம் காட்சிக்கு போவதெனத் திட்டம் போட்டோம்.

நாங்கள் எல்லோரும் சரியான நேரத்தில் கூடி விட்டோம்.ஆனால் இன்னும் ராக்கையாவைக் காணவில்லை. ராக்கையாவுக்காகவே எம்.ஜி.ஆரின் பழைய படமான பணக்காரக்குடும்பம் திரைப்படத்துக்குப் போவதென்று முடிவு செய்திருந்தோம். தியேட்டரில் படம் போடுவதற்கான முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ராக்கையா வரவில்லை. தூரத்தில் சோர்ந்த நடையுடன் ராக்கையா வந்து கொண்டிருந்தான். கந்தசாமி கத்தினான்.

“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..”
அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது.

“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..”

நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.

Saturday 28 April 2012

கலையாத ஒப்பனையுடன் காற்றில் கலந்தவர்

safther  
எங்கள் நால்வரில் நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி நான் ‡ முத்துச்சாமி தான் வயதில் இளையவர். அதே போல உருவிலும் சற்று குள்ளமானவர். அவர் நாறும்பூநாதனின் வீட்டுக்கு அருகில் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் நாறும்பூநாதனை விட்டு இணைபிரியாமல் இருந்தார். அவருடைய லட்சியக்கதாநாயகனாக அநேகமாக நாறும்பூநாதனே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நாறும்பூநாதன் என்ன செய்தாலும் அதை உடனே அவரும் செய்துபார்த்து விடுவார். இது இளம்பருவத்துக்குப் பின்னும் தொடர்ந்தது என்பது என் அனுமானம்.

எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் எங்களில் வயதில் இயைவரான முத்துச்சாமியுடன் நானும் சாரதியும் அதிகமாகச் சண்டை போடுவோம். எல்லாம் சில்லரைச் சண்டையாக சில்லரைக்கான சண்டையாக இருக்கும். முத்துச்சாமியிடம் சில குணவிசேஷங்கள் இருந்தன. மிகுந்த சிக்கனமும், கட்டுப்பாடும் உறுதியான மனமும் கொண்டவராக இருந்தார். எதனாலும் சபலம் கொள்ளாத சித்தம் அவருக்கு. நாங்கள் அப்படியல்ல எல்லாவிதமான அலைக்கழிப்புகளுக்கும் எங்களை ஆட்படுத்திக் கொண்டிருந்தோம். அதனால் சிலபல நன்மைகளும் தீமைகளும் நிகழ்ந்தன என்பது வேறுவிஷயம். ஆனால் முத்துச்சாமியின் அந்த உறுதி எங்களுக்குப் பொறாமையையும் சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

நண்பர்களுக்குள் கணக்கு வழக்குபார்க்கக் கூடாது என்பது எங்கள் கட்சி. நண்பர்களாயிருந்தாலும் கணக்குன்னா கணக்குத் தான் என்பது அவருடைய கட்சி. இதனால் அடிக்கடி சண்டை போட்டு பின் பேசிக்கொள்வோம். ஆனால் நான்குபேரும் சேர்ந்தே தான் சுற்றிக்கொண்டிருந்தோம் கையயழுத்துப் பிரதி நடத்தினோம். எழுத்தாளர்களிடமும் இலக்கியவாதிகளிடமும், தொழிற்சங்கத் தலைவர்களிடமும். பழகினோம். நிறைய்யப் பேசினோம். நிறைய்யக் கேள்விகள் கேட்டோம். நிறைய்ய வாசித்தோம். நிறைய்ய நிறைய்ய அவர்கள் பேசுவதைக் கேட்டோம். ஆனால் இவை எல்லாவற்றிலும் முத்துச்சாமி பார்வையாளராக மட்டுமே இருந்தார். ஊக்கத்துடன் பங்குபெற்றதாக என் ஞாபகத்தில் இல்லை.

தீடீரென ஒரு நாள் இரவில் காந்தி மைதானத்தில் எழுத்தாளர்கள் கெளரிஷங்கர், துரை, மனோகர் (திரைக்கலைஞர் சார்லி) தேவதச்சன், மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி நான் நாறும்பூநாதன் முத்துச்சாமி, சாரதி, ராம், அப்பாஸ் எல்லோரும் கூடிப்பேசிக் கொண்டிருந்த போது திடீரென தர்சனா என்று நிஜநாடக இயக்கம் கருக்கொண்டது உடனே ஒரு வாரத்திற்குள் நாடகங்கள் தயாராகி நாடகம் நடத்துவதற்கு தர்சனா களமிறங்கியது. தேவதச்சனின் பத்துரூபாய் பேரா. ராமனுஜத்தின் வேலை, தலைவர் மரணம் என்று எல்லாம் பத்து அல்லது இருபது நிமிடநாடகங்கள். அப்போது தான் சென்னையில் பாதல்சர்க்கார் மூன்றாவது அரங்கம் பற்றியும் வீதிநாடகங்களைப் பற்றியும் பயிற்சிப்பட்டறை நடத்தி முடித்திருந்தார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தர்சனா ஏறத்தாழ ஒரு வருடத்திற்குள் நூறு முறைகளுக்குமேல் நாடகங்களை நிகழ்த்தியது. கோவில்பட்டி வீதிகளிலும் தொழிற்சங்க அரங்குகளிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும், இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பாகவும் ஏராளமான இடங்களில் நாங்கள் இந்த நாடகங்களை நிகழ்த்தினோம்.

கிராமங்களில் எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் பேண்ட், சட்டையுடன் ஸ்டெப் கட்டிங் முடியுடன் நாங்கள் விவசாயியாக தொழிலாளியாக நடித்தது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. நாங்கள் நாங்களாகவே நடித்தோம். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றோம். எங்கள் நாடகங்களில் நடிப்பதற்கான ஒத்திகை என்பது ஒரு கூட்டு விவாதம் மட்டுமே மற்றபடி நடித்து பார்ப்பதோ, வசன மனப்பாடமோ கிடையாது. நடிக்கும் போது புதிது புதிதாய் பேசுவோம். நாடகங்களும் புதிய புதிய பரிமாணங்களுக்கு மாறிக் கொண்டிருக்கும். நாடகக் குழுவின் முக்கிய நடிகர்களாக மனோகர், (திரைக்கலைஞர் சார்லி) கெளரிஷங்கர், துரை, திடவைபொன்னுச்சாமி, நான் நாறும்பூநாதன், இருந்தோம். எங்களுடன் முத்துச்சாமியும் இருந்தார், எல்லாவற்றிலும் பார்வையாளராக மட்டும் இருந்தவர் நாடகங்களில் நடிப்பதற்கு பேராவல் கொண்டிருந்தார். எந்தச் சிறிய வேடமாக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். வழக்கமாக நடிக்கிறவர்கள் யாரும் வரவில்லையென்றால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். சுருண்ட தன் தலைமுடியை அடிக்கடி வாரிக்கொண்டும் கருத்த தன்முகத்தை அடிக்கடிக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு நாடகம் தொடங்குமுன்னரே ஒரு பதட்டநிலைக்கு வந்து விடுவார். தர்சனா நாடகங்கள் துவக்குவதற்கு முன்னால் நாடகக்குழுவினர் மொத்தமாக மேடையேறி நாடகக் குழுவைப் பற்றி பிரகடனப்படுத்துவோம்.

தர்சனா ஒரு கண்ணாடி
தர்சனா ஒரு விதைக்கலயம்
தர்சனா ஒரு கருப்பை
தர்சனா ஒரு கிட்டதர்சனி
தர்சனா ........................................
தர்சனா ........................................
நாங்கள் இந்துக்களல்ல, முஸ்லீம்களல்ல... கிறித்தவர்களல்ல, நாங்கள் தாகூரின் கீதாஞ்சலிகள் ...
பாரதியின் குயில்பாட்டுக்கள் ...
பாடித்திரியும் வானம்பாடிகள் ...

இந்த விதமான ஒரு பிரகடனத்திற்குப் பின் எங்கள் நாடகங்கள் தொடங்கும். இதில் எப்போதும் வரிசையில் நின்று சொல்லும் போது யாராவது சொல்வதற்கு மறந்து போய் மேடைப்பதட்டத்தில் அப்படியே நின்று விடுவார். முத்துச்சாமி அப்படி மறந்து போனவருக்குச் சரியாக எடுத்துக்கொடுப்பார். தர்சனாவில் நடித்த மனோகர், துரை, கெளரிஷங்கர் வேலை காரணமாக ஊரை விட்டுப்பிரிந்து சென்றனர். அதற்குள் நாங்கள் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தோம். எனவே புதிதாய் சிருஷ்டி என்றொரு நாடகக்குழு உருவானது. மற்றெல்லா விவாதக்களன்களிலும் ஒதுங்கியே இருந்த முத்துச்சாமி நாடகக்களத்தில் மட்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டார்.
நானும் வேலை கிடைத்து தமிழ்நாட்டின் வடபகுதிக்குச் சென்று விட்டேன். எப்போதும் கோவில்பட்டியை எனது தலையில் சுமந்து கொண்டே அலைந்தேன். ஊருக்கு வரும் பொழுதுகளை என் நண்பர்களுடனேயே கழிக்க விரும்பினேன். அப்போது முத்துச்சாமியும் போஸ்ட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அவரைச் சந்தித்த போது, என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி,

“என்னப்பா ... இப்படியாயிருச்சி ...” என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை.

ஒரு கணஇடை வெளிக்குப்பிறகு, சப்தர் ஹஸ்மியை... அநியாயமாக் கொன்னுட்டாங்களே...” என்றார் தீவிரமான குரலில். பேசிக்கொண்டிருந்த கொஞ்சநேரமும் சப்தர்ஹஸ்மியைப் பற்றியும் பழைய நாடக நினைவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

சப்தர் ஹஸ்மி மகத்தான மக்கள் நாடகக் கலைஞன் ஆட்சியாளர்களின் உயிர்நாடியை தன் கலையால் உலுக்கிய கலைஞன் இடதுசாரி இயக்கத்தின் கலைஞர்களில் தலைசிறந்தவன். வீதி நாடகங்களில் புதிய புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டு மக்களிடம் நேரடியாகச் சென்ற கலைஞன் அதிகாரத்திற்கெதிரான ஓங்கி ஓலித்த அந்தப்புரட்சிக்குரலை அடித்துக் கொலை செய்து கலையின் வரலாற்றுப்பக்கங்களில் தன் கறைபடியச் செய்துவிட்டது அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் சப்தர் மறையவில்லை நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களாக முளைத்தெழுத்தார். அதிகாரம் நடுநடுங்க இன்னும் இன்னும் உரத்து உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஊருக்கு வந்தால் போதும் என்று பதினான்கு வருடங்களுக்குப்பின் ஊர்வந்து சேர்ந்தேன் ஊரைப்பற்றிய என் பிம்பம், பிரமை ஊர்வந்து சேர்ந்ததும் சிதைந்து விட்டது. வந்த கொஞ்சநாட்களிலேயே நான் கண்ட கனவு கலைந்து விட்டது. ஆனால் இன்னமும் சில பழைய நண்பர்கள் பழைய ஞாபகத்தின் மெலிதான சாயலோடு இருந்தார்கள். முத்துச்சாமியும் இருந்தார். அவ்வப்போது சந்திக்கிற பொழுதுகளில் சிறு குசலவிசாரணை ஒரு தேநீர் என்று போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் முத்துச்சாமி என்னை தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும் என்று சொன்னார்.

எங்களுடைய பாலியகால நினைவுச் சின்னமான அதே டீக்கடை முக்கில் சந்தித்தோம். அப்போது தான் அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். தனக்கு கேன்சர் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், சோதனைச்சாலை முடிவுகளுக்காக சென்னை சென்றிருப்பதாகவும் சொன்னார். கேட்ட ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்வு தொடங்கிவிட்டது. சமாளிப்பதற்கு வெகுவாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் முத்துச்சாமியும் அவருடைய கலக்கத்தை வெளிக்காட்டாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை கேன்சர் தான் என்றால் என்னென்ன வழிகளில் வைத்தியம் செய்யலாம் என்று நிதானமாகக் கேட்டார். நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எனக்குத் தெரிந்த வழிமுறைகளை குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமுறைச்சிகிச்சை பற்றியும் அவரிடம் சொன்னேன். விடைபெறும் போது நம்பிக்கையுடன் சென்றார்.

அதற்கு சில நாட்களுக்குப்பிறகு நான் கேள்விப்பட்ட செய்தி நல்லதாயில்லை. சென்னையில் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபிறகே ஊர் வந்து சேர்ந்த அவரைப் பார்க்கப் போயிருந்தேன். புற்றுநோய்ச் சிகிச்சையினால் சுருண்டு அடர்ந்த அவருடைய முடி உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளித்தார். பொங்கி வந்த விம்மலை அடக்கிக்கொண்டேன். வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தோடு அவரிடம் இனி எல்லாம் சரியாகிவிடும். சிகிச்சை அறிக்கைகளைப் பார்த்து விட்டு, குணமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது, என்று சொன்னேன். முத்துச்சாமி முன்பு நான் சொன்னதை நினைவில் வைத்திருந்ததாலோ என்னவோ இனிமேல் வராமலிருக்க ஹோமியோபதி சிகிச்சை எடுக்கலாமா யாரிடம் எடுக்கலாம் ? என்று கேட்டார் அதற்கான வழிவகைகளைச் சொன்னன். அவரும் கோட்டயம் சென்று ஹோமியோபதி டாக்டர். ஆர்.பி. பட்டேல் அவர்களைச் சென்று சந்தித்து மருந்து சாப்பிட்டுவந்தார்.

ஆனால் நாளுக்குநாள் உடல்நிலை நலிந்துகொண்டே வந்தது கண்கூடாகத் தெரிந்தது. இடையில் பல வருடங்களாக சந்திக்காமலே இருந்த நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். வாரம் இரண்டு தடவையோ மூன்று தடவையோ அவர் வீட்டுக்குச் சென்று பழைய பாலியகால மகிழ்ச்சியான வேடிக்கையான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டினேன். அதிலும் குறிப்பாக தர்சனா சிருஷ்டி நாடக நிகழ்வுகளைப் பற்றி அதன் நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் பேசும் போது நான் மறந்து போயிருந்த பல விஷயங்களை அவர் நினைவுபடுத்தினார். புற்றுநோய் சிகிச்சையினால் ஒளியிழந்த அவர் கண்கள், இந்தத் தருணங்களில் மட்டும் தன்னிடம் மீந்திருந்த ஒளியை பிரகாசிக்கச் செய்தன என்று நினைக்கிறேன் பளபளக்கும் அந்தக் கண்களின் கனவுப்பாதை வழியே அவர் பழைய நாட்களின் சந்தோஷ நிழலில் இளைப்பாறினார். புன்னகை சிந்தும் முகத்தோடு நான் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பார். நானும் அவரும் மட்டும் அந்த வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான பிரமை அவ்வப்போது வரும். அவர் குடும்பத்து உறுப்பினர்கள் நிழலாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர் நினைவுபடுத்திச்சொன்னது தான் தர்சனா நாடகக் குழுவின் பிரகடனம். கொஞ்சநாட்களில் என் வருகை அவருக்கு அவசியமாகிவிட்டது. நான் பேசிவிட்டுசென்ற பிறகு கொஞ்சம் தெம்பாக இருக்கிறார் என்று அவர் குடும்ப உறுப்பினர்கள் சொன்னபோது நானும் எல்லாம் சரியாகி முத்துச்சாமி மீண்டும் நடமாடி விடுவார் என்று தான் நம்பியிருந்தேன்.

திடீரென ஒரு நாள் இரவு நான் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது முத்துச்சாமியின் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு உடனே வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எனக்குள் ஒரு பதட்டம். அவர் வீட்டில் பலர் கூடியிருந்தார்கள். படுக்கையில் முத்துச்சாமி கிடந்தார். ஏற்கனவே சிறிய உருவம் இன்னும் சிறிதான மாதிரி ஒடுங்கிக் கிடந்தார். கண்கள் பாதி திறந்த நிலையில் கைகளில் நாடி ஒடுங்கிக்கொண்டிருந்தது. நான் எதுவும் பேசுகிற மனநிலையில் இல்லை. சுற்றிலும் அவர் மனைவி உறவினர்கள் என் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். ஒரு ஓலம் கிளம்பியது. என் வயிற்றை பிசைந்த துக்கம் ஒரு பெரும் விம்மலாக வெளிப்பட கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன். முத்துச்சாமி எங்கள் பாலியகால நண்பர் தர்சனாவை தன் கனவாக அடைகாத்த அருமைத் தோழன் தன் கலையாத ஒப்பனையுடனேயே காற்றில் கலந்து விட்டார். 

Tuesday 24 April 2012

மறக்க முடியாத மாணிக்கக் கங்கணம்

kuprin

கோவில்பட்டிக்கு அப்போது வசந்தகாலம். தமிழ்நாட்டில் நிலவி வந்த அத்தனை இலக்கிய போக்குகளும் முட்டி மோதிக் கொண்டிருந்த அபூர்வ காலம். தினமும் இலக்கிய விவாதங்களும் தத்துவப் போர்களும் நிகழ்ந்து கொண்டிருந்த பரபரப்பான காலம். புதிய புதிய அனுபவங்கள் நெருக்கியடித்துக் கொண்டு மனசுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. வாழ்க்கையை அதற்குப் பின் ஒரு போதும் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் உணர்ந்ததேயில்லை. 1983ம் ஆண்டில் ஜுன் மாதம் வழக்கம் போல நாங்கள் கூடும் டீக்கடையில் புதிதாக ஒருவர் ஜமாவில் சேர்ந்திருந்தார். ஆறடி உயரத்தில் பிடறி வரை தொங்கிய தலை முடியுடன் கண்ணாடிக்குப் பின்னால் பரபரத்த விழிகளுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடைவெளியில் அவர் திருநெல்வேலி திம்மராஜபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோதி விநாயகம் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவரிடம் பேச்சுக்கொடுக்காமல் அவரையே கவனித்துக் கொண்டிந்தேன். முதலில் அவ்வளவு சுவாரசியமானவராகத் தெரியவில்லை. மேலும் கோவில்பட்டி எழுத்தாளர்களுக்கேயுரிய ஒரு அலட்சியமும் இருந்தது. ஆனால் பின்வரும் நாட்களில் அவர் எனக்கு எவ்வளவு முக்கியமானவராக மாறப்போகிறார் என்று மட்டும் தெரிந்திருந்தால்...

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் ஆகிருதி தெரியத் தொடங்கியது. மூடுண்ட குறுகிய விவாதக்களன்களை உடைத்து இந்தப் பரந்த உலகஇலக்கியப் பரப்பின் பெருவெளியில் எங்களை நிறுத்தியவர் ஜோதிவிநாயகம். கலையின் படைப்பாக்க அழகியல் அனுபவங்களை உணர்த்தியவர். உலக இலக்கியங்களாக புகழ்பெற்ற நூல்களின் சாராம்சமான நுட்பங்களை விளக்கியவர். எந்தக் குறுகிய சிந்தனை யோட்டத்திற்குள்ளும் சிக்காமல் வாழ்வின், கலையின், தத்துவத்தின் அடிப்படை உண்மைகளைத் தேடி தொடர்ந்து விவாதம் செய்தவர். எண்பதுகளின் துவக்கத்திலேயே எங்களுக்கு கிராம்சியை அறிமுகப்படுத்தியவர். அவரது ஆலமரத்தோப்பும் தோப்பாகாக் காளான்களும் என்று கட்டுரை தீவிர விவாதங்களையும், புதிய வெளிச்சங்களையும் அளித்தது. தேடல் என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர். அவர் வேலை பார்த்தது விளாத்திகுளத்தில். ஆனால் மையங்கொண்டிருந்தது, கோவில்பட்டியில். அவருடைய நீண்ட கைகளின் அரவணைப்புக்குள் நானும் எழுத்தாளர் கோணங்கியும் மயங்கிக் கிடந்தோம். வேகவேகமாக கைகளையும் பிடறி மயிர் குலுங்க தலையையும் ஆட்டி அவர் பேசும்போது விரைவில் கைகலப்பு நிகழ்ந்து விடும் என்றே தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் தன் வாதத்தை தீவிரமாக முன்வைத்துப் பேசும் உறுதியின் வெளிப்பாடுகள் தான் அவை. படைப்பின் நுட்பங்களைக் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட ஜோதிவிநாயகம் இதுவரை பேசப்படாத எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படி அவர் செய்த பல எழுத்தாளர்களில் அவருக்கு மிகவும் பிடித்தவர் ருஷ்ய எழுத்தாளர் அலக்சாண்டர் குப்ரின். குப்ரின் எழுதிய மாணிக்கக்கங்கணம் என்ற ஒரு சிறுகதையே அவரை உலக இலக்கிய வரிசையில் சேர்த்துவிடும் என்பார். உண்மைதான்.

எளிய தந்தி கிளார்க்கான ஷெல்த்கோவ் பிரபுக்குல சிற்றரசி வேராவைக் காதலிக்கிறான். அவருடைய திருமணத்திற்கு முன்பிருந்தும் அவருடைய திருமணத்திற்குப் பின்பும் கூட. முதலில் அவனுடைய கடிதங்கள் தொந்தரவு செய்கின்றன. அதை வேரா நிறுத்துகிறாள். அவனுடைய உச்சக்கட்டமுட்டாள் தனமாக அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக மாணிக்கக் கங்கணத்தை அனுப்புகிறான். வேராவின் கணவனும், சகோதரனும் நேரில் சென்று அவனிடம் பேசுகிறார்கள். அவன் ஒருமுறை மட்டும் வேராவிடம் பேசிக் கொள்ளட்டுமா என்று அவள் கணவனிடம் அனுமதிகேட்டு விட்டு பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்கிறான். மறுநாள் தற்கொலை செய்துகொள்கிறான். அதுவரை அவனைப்பார்த்திராத வேரா முதல் முறையாக அவனது இறந்த உடலை வந்து பார்க்கிறாள். தன்னைக் கடந்து சென்று விட்ட மகத்தான காதலை உணர்கிறாள். ஷெல்த்கோவின் இறுதிவேண்டுகோளின் படி பீத்தோவனின் சானட் இரண்டு ஓபஸ் 2 லார்கோ அப்பாஸியனோட்டோவை பியானோவில் வாசிக்கச் சொல்லி ஷெல்த்கோவிடம் மன்னிப்பைக்கோருகிறாள்.

உண்மையில் இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது கூட கண்கள் கலங்குகின்றன. அலக்ஸாண்டர் குப்ரீனின் (1870 - 1938) அதிகமான படைப்புகள் தமிழில் வரைவில்லை.

பூ.சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள் 1 என்ற தொகுப்பில் உள்ள கதையே இது. ஜோதிவிநாயகம் சொன்னபிறகு எத்தனைமுறை இந்தக்கதையைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கும் போது நம் வாழ்வின் மகத்தான காதலின் தருணங்களை நம்மைக் கடந்து சென்ற காதலின் உன்னதங்களை நினைவு கொள்ள முடியும். வேரா உயிரற்ற ஷெல்த்கோவின் உடலைச் சந்திக்கிற பக்கங்கள் உலக இலக்கியத்தின் உன்னதமான பக்கங்கள். அலெக்சாண்டர் குப்ரின் எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள். பற்றிக் குலுக்க விரும்புகிறேன்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் இரவு நேரத்தில் பல மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். நானும் ஜோதிவிநாயகமும், கோணங்கியும் எங்கள் வாழ்வின் மிக அந்தரங்கமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் ஒரு பாடலை ஹம்மிங் செய்து கொண்டிருப்பார். அதுகூட அதிகம் பிரபலமடையாத ஒரு பாடல்தான் யாரந்த நிலவு ஏனிந்த கனவு மிக அபூர்வமான பொழுதுகளில் கரகரத்த குரலில் பாடவும் செய்வார் அப்போது இருளிலும் அவர் கண்கள் மின்னுவதையும் குரல் நடுங்குவதையும் உணர்ந்திருக்கிறேன்.

வாழ்வின் சூழலில் தூக்கியயறியப்பட்ட நான் வேலை கிடைத்து வடஆற்காடு மாவட்டத்தில் விழுந்தபிறகு அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்தது. 1996 ஆம் வருடம் ஜோதி விநாயகத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கிறார். திம்மராஜபுரம் வீட்டிற்கு நானும் நாறும்பூநாதனும் சென்றிருந்தோம். கட்டில் நீளம் போதாமல் வெளியே நீண்டு கொண்டிருந்த கால்களைத் தான் முதலில் நான் பார்த்தேன். ஒரு கணம் இதயம் நடுங்கியது. அடிவயிற்றில் பிசைவது போன்ற வலி. உள்ளே அந்த ஆஜானுபாவனான, தன் நீண்டகைகளை ஆட்டி, பிடறிமுடி குலுங்க பேசிக்கொண்டிருந்த கோவில்பட்டி எழுத்தாளர்களுக்குப் புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்திய, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக உருவாகிக் கொண்டிருந்த ஜோதி விநாயகம் மரணப்படுக்கையில் கிடந்தார். மரணத்தின் வாசனை வீடு முழுவதும். அவரருகில் அமர்ந்து அவர் கைகளைப்பற்றி ஆறுதல் சொன்னேன். அவை வெற்று வார்த்தைகள் என்று அவரும் உணர்ந்திருப்பார். எதுவும் பேசவில்லை. பொங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் அவசர அவசரமாக கைக்குட்டையை எடுத்து துடைந்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டேன். எங்கள் அன்புக்குரிய ஜோதி ! மரணத்தால் உங்களை வெல்ல முடியாது. கோவில்பட்டி தெருக்களில், நீங்கள் நடந்து சென்று பாதைகளில், நின்று குடித்த டீக்கடைகளில், அமர்ந்து விவாதித்த காந்திமைதானத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் ! ஜோதி ! உங்கள் இறுதிக்கணங்களில் பற்றிய கைகளின் ஸ்பரிசம் இன்னும் என் கைகளில் துடிக்கிறது. குளிர்ந்த அந்தஸ்பரிசம் அலக்ஸாண்டர் குப்ரினுடையதா, மகத்தான காதல் கதையான மாணிக்கக் கங்கணத்தின் நாயகனாக ஷெல்த்கோவினுடையதா இல்லை எங்கள் அன்புக்குரிய ஜோதியினுடையதா என்று குழம்பித் தவித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் தவிக்கின்றன உங்களைத் தேடி கண்களில் கண்ணீர் பொங்குகிறது.

Saturday 21 April 2012

வெங்காச்சி சொல்லியது

download  

என்னுடைய பால்ய காலத்தில், திருநெல்வேலி என் கனவுப் பிரதேசமாகவே இருந்தது. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சுன்னா, நானும் என் தம்பி கணேசனும் அம்மாவை அரித்தெடுக்க ஆரம்பித்து விடுவோம். திருநெல்வேலியில் வெங்காச்சியும், சாமி தாத்தாவும் இருந்தார்கள். கோவில்பட்டி லட்சுமி மில்லில் வேலை பார்த்த அப்பாவின் சாப்பாட்டுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு அம்மா கிளம்புவாள். காய்ந்த கரிசல் ஊரான கோவில்பட்டியில், தண்ணீர் எடுத்தே வாடிப்போன எங்க அம்மாவின் முகத்திலும் அபூர்வமான அழகு மிளிரும். கும்மரிச்சம் போட்டுக்கொண்டு, பைகளைத் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போய், திருநெல்வேலி பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம்.

அப்போது லயன் கம்பெனி பஸ்ஸும், எம்.ஆர்.கோபாலன் பஸ்ஸும் மாறி மாறி ஷண்டிங் அடிக்கும். பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி உட்கார்ந்ததுமே, திருநெல்வேலி போய்விட்ட உணர்வு வந்துவிடும். கயத்தாறு தாண்டியதுமே நெல்லைச் சீமையின் குளிர்ந்த காற்று தாலாட்டத் தொடங்கிவிடும். தம்பி கணேசன், அந்தக் காற்று பட்டதுமே அப்படியே கிறங்கி அம்மாவின் மடியில் படுத்து விடுவான். தாழையூத்து தாண்டியதும் அம்மா அவனை எழுப்பத் தொடங்குவாள்.

‘‘ஏ... மூதி.. எந்திரில.. பஸ்ஸில ஏர்ற வரைக்கும் என்ன குதியாட்டம் போட்ட. இப்ப உறங்கறதப்பாரு. ஏல ஆச்சி ஊரு வந்துட்டல்ல.. எந்தி...’’

எனக்கு ஆச்சரியமாய் இருக்கும். அம்மா கோவில்பட்டியில் இருக்கும்வரை இப்படிப் பேசிப் பார்த்ததேயில்லை. பாஷையே மாறிவிட்டதே. குரலில் ஒரு ஈரமும், அன்பும் எப்படி பிரவகிக்கிறது? நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பைகளைத் தூக்கிக்கொண்டு நானும் அம்மாவும் நடப்போம். பின்னால், ஓலைக்கொட்டானில் கட்டிய கருப்பட்டி மிட்டாயையும், காரச்சேவையும் கணேசன் தூக்கிக்கொண்டு வருவான். பெரிய மருத மரங்களும், அதன் நிழலும் அடர்ந்த அந்தச் சாலைகள் எங்களை வரவேற்கக் காத்திருக்கும். மீனாட்சிபுரம் போகும் வழியிலுள்ள பெருமாள்கோயில் தெருவில்தான் தாத்தா, வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். ‘வ.சீனிவாசய்யர், அட்வகேட்’ என்ற கருப்புப் பலகை தொங்கும் இரும்பு அளிக்கு ஓரத்தில், மேலே ஏறிச் செல்லும் மரப்படியில், நான்தான் முதலில் ஏறிச் செல்வேன்.

எழுத்து மேசை மீது குனிந்து, கேஸ் கட்டுகளை விரித்து, குண்டான மை பேனாவினால் எழுதிக் கொண்டிருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்ப்பார்.

‘‘ஏ... அய்யா... வா.. வா.. அம்மை வந்திருக்காளா...’’ என்று கேட்பார். நான் வாயெல்லாம் இளித்துக்கொண்டு தலையாட்டுவேன். எனக்குப் பின்னால் ஓலைக்கொட்டானை கையில் பிடித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கா என்று படியேறி வருவான் கணேசன். அவன் வந்து சேருவதற்குள், தாத்தா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, கீழே இறங்க ஆயத்தமாகி விடுவார். கணேசனை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவார். தாத்தாவைப் பார்த்ததும், அம்மா இரண்டு கைகளையும் கூப்பி, ‘‘சேவிக்கிறேன்ப்பா...’’ என்று சொல்லுவாள்.

பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்பு, தாத்தா நடக்கத் தொடங்குவார். நான் ஒருபக்கம் தாத்தாவின் பெரிய விரலைப் பிடித்துக்கொள்வேன். இன்னொரு புறம் கணேசன் பிடித்துக்கொள்வான். தாத்தாவின் இரண்டு கை விரல்களிலும் கல் மோதிரம் இரண்டும், நெளிவு ஒன்றும் கிடக்கும். தெரு முக்கிலிருந்து நாயுடு கடையில் எங்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். பின்னர், பெருமாள்கோயில் அருகிலேயே நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டியைக் கூப்பிடுவார்.

எங்களை அதில் ஏற்றிவிட்டு அம்மாவிடம், ‘‘ரெண்டு கேஸ் கட்டு கிடக்கு.. முடிச்சிட்டு சாமிகிட்டே சொல்லிட்டு வாரேன்...’’ என்று சொல்லிவிட்டுப் போவார். நாங்கள் தாத்தா எங்களிடம்தான் சொல்வதாக நினைத்து, மிட்டாய் எச்சில் வழிய தலையாட்டுவோம்.

ஓங்கு தாங்கான உருவத்துடன், கூர்ந்த நாசியும், மேடேறிய நெற்றியும், தங்க பட்டன் மாட்டிய சட்டையும், அதன் மீது பட்டுச்சரிகை அங்கவஸ்திரமும் அணிந்து, தாத்தா கம்பீரமாய் இருப்பார். எங்களுக்குத் தாத்தாவைப் பார்க்கப் பார்க்கப் பெருமையாக இருக்கும். அம்மா எங்களுடன் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போய்விடுவாள். அப்புறம் லீவு முடிகிற வரைக்கும் எங்களைப் பிடிக்க முடியாது. அங்கே என் சேக்காளிகளான தனபால், ராதா, அம்பலவாணன், உலகநாதன், காந்திமதிநாதன் என்று எல்லோரும் எப்போதும் ஆற்றிலேயேதான் கிடப்போம்.

தண்ணீரே பார்த்திராத என்னுடைய ஊரான கோவில்பட்டியிலிருந்து, தாமிரபரணி தண்ணீருக்காகவே வாழ்கிற திருநெல்வேலிக்குப் போய் சும்மா இருக்க முடியுமா? ஆச்சி என்ன சத்தம் போட்டாலும் கேட்பதில்லை. காலை, மதியம், மாலை என்று முப்பொழுதும் ஆற்றுக்குள் மிதந்து கொண்டேயிருப்போம். முழங்கால் ஆழத்தில் நான் முங்குநீச்சல் போட்டால், என் தம்பி கணேசன் கணுக்கால் ஆழத்தில் முங்குநீச்சல் பழகுவான். முதுகுபூரா நனையாமலே குளித்து முடிப்பான். கண்கள் சிவக்கச் சிவக்க நாங்கள் வீட்டுக்கு வருவோம்.

ஆச்சி எங்களை செல்லமாக,

‘‘எல.. சளிப்பிடிச்சி ஜொரம் வந்துச்சின்னா... ரெண்டு பேரையும் கோவில்பட்டி பஸ் ஏத்தி விட்ருவேன். கேட்டியா? ஏ சின்ன முடிவான், உன்னயத்தான். சிலுப்பட்டத்தப்பாரு...’’

வைவாள்.

எங்களுக்கு வெங்காச்சியைப் பிடிக்காது. காரணம் வேறொன்றுமில்லை. தாத்தா வாங்கிட்டு வரும் தின்பண்டங்களை வாங்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தருவாள். அடுக்களையில் எங்களுக்கு எட்டாத உயரத்தில் கண்ணாடி பாட்டிலில் மிக்சர், ஓமப்பொடி, இனிப்புச்சேவு என்று போட்டு வைத்திருப்பாள். காலையிலும் சாயந்திரமும் அவள் தருகிற கொஞ்சூண்டு தின்பண்டம், எங்கள் யானைப்பசிக்கு காங்காது. அதனால், ஆச்சியிடம் ஒரு விலகல் இருந்தது. அதோடு தாத்தாவுக்குப் பொருத்தமில்லாத கட்டை குட்டையான உருவத்தோடும், திருநெல்வேலி பிராண்ட் எத்துப்பற்களோடும் கருப்பாகவும் இருந்தாள் வெங்காச்சி.

டபடபவென ஐஸ்காரர் ஐஸ்பெட்டி மூடியைத் தட்டிக் கொண்டு வருவார். ராத்திரியில் சவ்வு மிட்டாய்காரர் பொம்மை வைத்த கம்பைத் தூக்கிக்கொண்டு, அதில் மலைப்பாம்பென சுற்றியிருக்கும் மூன்று கலரில் இனித்துக் கிடக்கும் சவ்வு மிட்டாயை வாட்சு, தேளு, பாம்பு, பொம்மை என்று காசுக்கு ஏத்த மாதிரி செஞ்சு கொடுப்பார். எல்லாவற்றையும்விட, கடைசியில் ஒரு இணுக்கு கன்னத்தில் ஒட்டிவிடுவாரே! அதில்தான் அம்புட்டுப் பேருக்கும் பிரியம். தாத்தா இருந்தால் காசு கொடுப்பார். ஆச்சியிடம் அவ்வளவு ஈசியா வாங்க முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ரெண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு பைசா கொடுப்பாள். அன்று எனக்கும் கணேசனுக்கும் சண்டைதான்.

வீட்டுக்கு எதிரே, ஒரு பெரிய பூவரசமரம் இருந்தது. என் வயசுப் பையன்கள், அந்தப் பூவரசு இலையைச் சுருட்டி குழலாக்கி ‘பீ... பீ...’ என்று ஊதிக்கொண்டு திரிய, நான் காற்றும் எச்சிலும் வடிய இலையைக் கசக்கி எறிவேன். வாரம் ஒருமுறை தாத்தாவுக்கு சவரம் செய்ய நாவிதர் வருவார். அவர் வந்து போகும்வரை, நாங்கள் அவரைச் சுற்றியே இருப்போம். சிரைக்கிற கத்தியை சாணைக்கல்லில் அவர் தீட்டுவதும், அவர் வைத்திருக்கும் குளிர்ந்த ஸ்படிகக் கல்லும், நுரை வருவதற்கு அவர் போடும் சோப்பும், எங்களுக்கு தீராத ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

அதைவிட ஆச்சரியமாய், எங்களுடைய தாத்தா உடம்பெங்கும் சவரம் செய்வார். வழுவழுவென்று சிவந்த பழமாகி நிற்பார். எப்போதாவது அந்த நாவிதரிடம் நாங்களும் மாட்டிக்கொண்டு, தலையைக் குனியவைத்து மெஷின் போடுகிறபோது, அழுது பொங்கிவிடுவோம். அழுதாலும் விட்டால்தானே? ஆனால், நாவிதர் வந்துவிட்டால் ஆச்சிக்குப் பிடிக்காது. முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்ன முணுமுணுக்கிறாள் என்று எங்களுக்குப் புரியாது.

ஆச்சி வீட்டு திருணையில், படர்கொடி போட்டிருப்பார்கள். ஆடிமாசம் புடலை, அவரை, பாகற்காய் என்று கொடி படர்ந்து திருணை குளுகுளுவென்று இருக்கும். மேலே தட்டட்டியில் பூசணிக்கொடி போட்டிருப்பார்கள். எங்களுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். ஒரு புதிய உலகத்துக்குள் வந்துவிட்ட மாதிரி, ஆச்சரியங்கள் மாளவே மாளாது. அந்தத் திருணையில்தான் நாங்கள் படுத்திருப்போம். ஆச்சியும் எங்களோடு படுத்திருப்பாள். ஒருநாள் இரவு ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு எழுந்தபோது, விசும்பல் சத்தம் கேட்டது.

நான் பயந்து போய்,

‘‘ஆச்சி...’’ என்றேன்.

விசும்பல் நின்று வெங்காச்சி,

‘‘என்னல.. பேசாம படுல..’’

என்றாள்.

மறுநாள் காலை நாங்கள் எழுந்திரிக்கும்போது, வீட்டுக்கு முன்னால் மாட்டுவண்டி நின்று கொண்டிருந்தது. தாத்தா குளித்து முடித்து, வெளிர் நீலச் சட்டையின் மீது அங்கவஸ்திரம் தரித்து, கைகளில் மோதிரங்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். ஆச்சியும் எழுந்து காப்பி போட்டு, வட்ட கப்பில் ஆற்றிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் தாத்தா,

‘‘போய்ட்டு வாரேன்.. பயகள் பத்திரம்..’’

என்று சொல்லிவிட்டு மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

வண்டி நகண்டதுதான். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த வெங்காச்சியின் முகம் மாறிவிட்டது. நான் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டே,

‘‘ஆச்சி.. தாத்தா எங்க போறாங்க...’’ என்று கேட்டேன்.

ஒரு கணம் என்னைப் பார்த்த வெங்காச்சி சொன்னாள்,

‘‘எஞ்சக்களத்தி வீட்டுக்கு...’’

அப்போது எனக்குப் புரியவில்லை.

Tuesday 17 April 2012

கருகும் கனவுச் சிறகுகள்

எழுதப்படாத கரும்பலகையாய்

குழந்தைகள் மனசு

என்னிடம் இருக்கிறது.

சாக்பீஸ்

சில துகள்கள்

எழுத்துக்களாய்

அப்பிக்கொள்வதும்

சில துகள்கள்

ஒட்டாமல் உதிர்வதும்

நிகழ்ந்து கொண்டே இருக்கிறது

தினமும். - பழ. புகழேந்தி

விந்தையானது குழந்தைகளின் மன உலகம். ஆனால் நாம் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். புற உலகின் அத்தனை நிகழ்வுகளும் தன் பதிவுகளை குழந்தைகளின் மனஉலகில் சுவடுகளாய் பதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள் இந்தப் புறஉலகம் பற்றி, சமூகம்பற்றி ஆண்களைப்பற்றி, பெண்களைப்பற்றி, இயற்கையைப்பற்றி, பிற ஜீவராசிகளைப் பற்றி தன் மனதில் கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தக் கருதுகோள்களே பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவு நிலைகளைத் தீர்மானிக்கிறது.

தாய்,தந்தை,சகோதர சகோரரிகள்,வீடு,வெளியுலகம் என்று எல்லோரும் குழந்தையின் மனதை பாதிக்கின்றனர்.நல்லவிதமாகவும் மோசமான விதத்திலும் பாதிக்கின்றனர்.இந்த பாதிப்புகளை குழந்தைகள் ஏற்றுக்கொள்கின்றனர் அதே மாதிரி நல்ல விதமாகவும் மோசமான விதத்திலும்.எல்லா உயிரினங்களைப் போல குழந்தைகளும் தங்களது சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.தாங்கள் ஐம்புலன்களால் கண்டுணரும் புற உலக அனுபவங்களே உண்மை என்று நம்புகின்றனர்.உயிரியல் ரீதியான இயற்கை உணர்வுகளே அவர்களை வழிநடத்துகின்றன.

முதலில் தான் அனுபவித்த அனுபவங்களையே எதிரொலிக்கின்றனர். குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு ஒரு கையில் சிகரெட் புகையுடன் வலம் வரும் தந்தையிடம் இருந்தும், தன்னை அவமானப்படுத்தும் கீழ்த்தரமான சொற்களையே பேசும் தாயிடமிருந்தும், அடித்தும் கிள்ளியும் தன்னைத் துன்புறுத்தி மகிழும் சகோதர சகோதரரிகளிடமிருந்தும் குழந்தை பெறும் அனுபவங்கள் அதன் மனதில் தீராத காயங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக குழந்தைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளினால் குழந்தையின் மனம் கூம்பிவிடுகிறது. விளையாட்டின் மூலமாக உழைப்பின் காரணமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் குழந்தையின் சுதந்திரவெளி சிறைப்படுகிறது. அதன் உற்சாகம் குலைக்கப்படுகிறது. பெரியவர்கள் தாங்கள் விரும்புகின்ற வகையில் செயல்பட வைப்பதற்காக குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். செய்ததையே திரும்பத் திரும்ப சொல்லியதையே திரும்பத் திரும்ப செய்வதற்கும், சொல்வதற்கும் வலியுறுத்துகிறார்கள். புதிது புதிதாக அனுபவங்களைத் தேடுகிற குழந்தைகளின் தேடலை அவர்கள் மறைக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் தடைகளை மீறுகிற வலிமை இல்லாததினால் குழந்தைகள் உள்ளுக்குள் சுருங்கிவிடுகிறார்கள். இவற்றிலும் கூட பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் இடையே மிகுந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. வாங்கித்தரும் விளையாட்டு பொம்மைகளிலிருந்து உடை, அலங்காரம், அவர்களிடம் பேசும் மொழி, அவர்களை விளையாட அனுமதிக்கிற வெளி, கொடுக்கிற செல்லம், எல்லாவற்றிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் ஆண், பெண் குழந்தைகளின் மன உலகு பிஞ்சிளம் பருவத்திலேயே தகவமைப்படுகின்றன.வீட்டிலேயே பெற்றோர்களாலேயே இத்தகைய மாறுபாடுகளை, பாரபட்சத்தை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி மனித மனங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அதனாலேயே பெண்சிசுக்கொலை, பெண்கருக்கொலை இன்னமும் நமது சமூகத்தில் வேறு வேறு ரூபங்களில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

குழந்தைகளின் வாழ்நிலை வீடு மட்டுமில்லையே. ஒரு பத்து கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு செல்லக் காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது ஒரு நாள் ஒரு கணம் உற்று கவனித்திருப்போமா? அவர்களின் முகத்தில் தெரியும் நிராதரவான உணர்வை என்றாவது உணர்ந்திருப்போமா? அந்தக் குழந்தைகள் தங்களை அலட்சியம் செய்தபடி அங்குமிங்கும் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் மீதும் அந்த வாகனங்களின் மீது பயணிக்கும் பெரியவர்கள் மீதும் என்ன விதமான மரியாதை ஏற்படும்?

குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டு லாபவேட்கை கொண்ட இந்த சமூக அமைப்பின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகி வறுமையில் தவிக்கும் தன் குடும்பத்திற்காக சின்னச்சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கிற சிறுவர்கள், தாங்கள் அந்த வேலைகளைச் செய்யும் போது படுகிற அவமானங்களை எப்படி மறப்பார்கள்? இதற்குமேல் பள்ளியில் ஆசிரியர் என்ற வன்முறை செலுத்தும் அதிகாரி தன் இஷ்டம் போல் குழந்தைகளை அடிக்கவும், அவமானப்படுத்தவும், புறக்கணிக்கவும், வெளியேற்றவும் செய்கிற கொடுமைகளை எப்படி எதிர்கொள்வார்கள்? குழந்தைகள் அதிகாரமற்றவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெரியவர்களை அண்டியே வாழவேண்டியதிருக்கிறது. எனவே பெரியவர்களின் அதிகாரம் தங்களுக்கு உடல், மன ரீதியான துன்பங்களைத் தரமுடியும் என்பதையும், தன்னைவிட பலசாலியான அதனை தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் அந்த அதிகார மையத்தில் ஆண்தான் கட்டற்ற அதிகாரமுடையவனாக இருக்கிறான். குழந்தைகள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஆண்களைக்கண்டு அஞ்சுகிறார்கள். கொஞ்சமும் தயக்கமில்லாமல் தன்னைச்சார்ந்திருக்கிற தன்னைவிட பலவீனமான தன்னை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத குழந்தைகள் மீது எல்லா விதமான அதிகாரத்தையும் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக வீட்டில் ஒரு அப்பா, அம்மாவின் மீது குழந்தைகளின் மீது செலுத்துகிற அதிகாரத்தைக் கண்டு குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். மெல்ல மெல்ல இந்த உலகம் ஆண் மைய உலகம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆண் குழந்தைகள் இந்த அதிகாரத்தை பெண் குழந்தைகளோடு விளையாடும் போது போலி செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் வீட்டில் உள்ள பெண்களைப் பார்த்தும், புற உலக சம்பிரதாயங்களைப் பார்த்தும், மூடச் சடங்குகளைப் பார்த்தும், தாங்கள் வளர்க்கப்படும் விதத்தினாலும் தங்களது ஆற்றலை ஒடுக்கி ஆண் மைய அதிகாரத்திற்கு அடங்கி அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் பெண் குழந்தைகளின் ஆளுமை முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றன. பெண் குழந்தைகள் செப்புச்சாமான் வைத்து சமையல் விளையாட்டும், பார்லி பாப்பாச்சி பொம்மைகளை வைத்துக் குழந்தைகளைச் சீராட்டும் விளையாட்டும் விளையாடிக்கொண்டிருக்க ஆண் குழந்தைகளோ துப்பாக்கிகள், பீரங்கிகள், கார்கள், பைக்குகள், சூப்பர்மேன், °பைடர்மேன், கள்ளன், போலீ° என்று விளையாட்டிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். என்ன கொடுமை இது?

ஆனால் எந்த மாதிரியான மோசமான சூழ்நிலைகளிலும்,குழந்தைகள் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும்,அந்த சூழலுக்குள்ளேயே தன்னுடைய சின்னச் சின்ன மகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். அதை அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் அவர்களை பாதிக்காமல் இருப்பதில்லை. சூழலின் பாதிப்போடு வளர்ந்து வரும் குழந்தைகள் கோழைகளாக, எதையும் கேள்வி கேட்காமல், மறுத்துப் பேசாமல் ஏற்றுக்கொள்கிறவர்களாக தங்கள் ஆளுமைத்திறனை ஒடுக்கிக் கொள்பவர்களாக சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதும் விரக்தியும், கசப்புணர்வும் கொண்டவர்களாக பழிவாங்கும் மனோபாவம் கொண்டவர்களாக குரூர புத்தியுடையவர்களாக, கலகக்காரர்களாக சமூக விரோதிகளாக மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை நாம் அச்சத்துடன் நினைத்துப் பார்த்தோமானால், குழந்தைகளைக் குறித்து சற்றேனும் யோசிப்போம்.....

இருள் என்பது குறைந்த ஒளி

ரயிலின் வேகம் குறையத் தொடங்கியது. கரி எஞ்சினின் நீண்ட கூவல் ஒலி, ஸ்டேஷன் நெருங்கிவிட்டதை உணர்த்தியது. நான், பெஞ்சிலிருந்து எழுந்து வாசலுக்குப் போனேன். இரண்டு பக்க வாசல்களிலும் நின்று, நான் முதன் முதலாக ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரியப்போகும் ஸ்டேஷன் தெரிகிறதா என்று பார்த்தேன். கண்களுக்கெட்டியவரை மரஞ்செடி கொடிகளைத் தவிர, வேறு ஒன்றும் தெரியவில்லை.


சற்று எட்டிப் பார்த்தபோது, ரயில் ஒரு வளைவான மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. கண்ணில் கரித்தூசி விழுந்தது. விழுப்புரம் விட்டதிலிருந்து நாலைந்து முறை இப்படியாகிவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே உள்ளே வந்து என் பைகளை எடுத்துக் கொண்டேன். வாசல் பக்கம் வந்து தயாராக நின்று கொண்டேன். நெஞ்சில் ஒரு இனம்புரியாத உணர்வு. இன்றிலிருந்து புதிய வாழ்க்கை, புதிய நாட்கள், புதிய மனிதர்கள். எப்படி எதிர்கொள்ளப் போகிறேனோ என்ற அச்சம், அவ்வப்போது தலைதூக்கி வயிற்றைப் புரட்டிக் கொண்டிருந்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவமும் தயக்கமும் கொண்ட என்னால், புதியவர்களோடு அவ்வளவு சகஜமாகப் பழக முடிவதில்லை.

டிரெயினிங்கில் நண்பர்களான ஓ.வி.ரமேஷ், செல்வராஜ், ஜோசப்ராஜ், விவேகானந்தன் என எல்லோருமே அவர்களாகவே வந்து என்னிடம் ஒட்டிக்கொண்டு, என்னை இயல்பாக்கிய நல்லவர்கள். கோவில்பட்டியிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்த மாதிரியான ஒரு அநாதரவான உணர்வு இருந்தது. கண்ட கனவுகளுக்கும், படித்த புத்தகங்களுக்கும், எப்போதும் வாசிப்பு, சர்ச்சை என்று வாழ்ந்த வாழ்க்கைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத இன்னொரு அந்நியமான பிரதேசம்.

கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சுகளில், நண்பர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்து பேசியதைத் தவிர, ரயிலில் ஏறிப் பயணித்ததில்லை. ரயில், டால்ஸ்டாயின் அன்னாகரினினாவில் ஓடிக்கொண்டிருந்தது. கு.அழகிரிசாமியின் கதைகளுக்குள் பாய்ந்து சென்றது. எல்லா ரயில்களுக்குள்ளும், மானசீகமாக ஏறி இறங்கிப் பார்த்திருக்கிறேன். ரயிலுக்கு கிடைத்திருந்த இலக்கிய அந்தஸ்து காரணமாகவே, கோவில்பட்டி இலக்கிய நண்பர்கள் மத்தியில் ரயில் ஒரு கனவுக் கன்னியாகவே திகழ்ந்தது.

நான், ரயில்வேயில் உதவி நிலைய அதிகாரி பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவுடன், என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இதோ, ஆறு மாதகால டிரெயினிங் முடித்து, என்னுடைய முதல் வேலை ஸ்தலமான விழுப்புரம் & திருவண்ணாமலை செக்ஷனில் இருக்கும் ‘வேளானந்தல்’ ரயில்வே ஸ்டேஷனில் இறங்கப்போகிறேன். என்ன நடக்கப்போகிறதோ?

ஈளை நோயாளியைப் போல கீசுகீசென்று இளைத்துக்கொண்டே போய் நின்றது ரயில். நான், அவசர அவசரமாக இறங்கினேன். என்னுடைய லக்கேஜுகளை இறக்கி வைத்துவிட்டு, திரும்பிப் பார்த்தேன். ரயில், என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் ஆளரவமே இல்லை. நாலைந்து பெரிய ஆலமரங்கள் அடர்ந்த விழுதுகளோடு நின்று கொண்டிருந்தது. பிளாட்பாரத்தில் ஒருவர்கூட இல்லை. அன்று இறங்கிய ஒரே பயணி நான்தான்போல. ஏதோ, ஜெய்சங்கரின் துப்பறியும் படத்தில் வருகிற மர்மமான ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டேனோ என்றுகூடத் தோன்றியது. என்னுடைய பைகளைத் தூக்கிக்கொண்டு அந்த ஆலமரங்களுக்குப் பின்னாலிருந்த ஸ்டேஷனை நோக்கி நடந்தேன்.

ஸ்டேஷன் வாசலில், வயதான ஒரு பாயிண்ட்ஸ்மேன் நின்று கொண்டிருந்தார். நான், அவரைப் பார்த்துச் சிரிக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் சிரிக்கவில்லை. முகம் இறுகியிருந்தது. அவருடைய தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர் ரிட்டையராகி பல ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். ஆனால், இன்னமும் சர்வீஸில் இருந்தார். ஸ்டேஷன் வாசலில், என்னுடைய பைகளை வைத்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன். உள்ளே, ஒரு சேரில் ஸ்டேஷன் மாஸ்டர் மத்திய வயதில் உட்கார்ந்திருந்தார். நான், அவரிடம் புதிதாக வந்திருக்கும் உதவி நிலைய அதிகாரி என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னுடைய அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரைக் கொடுத்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல் என்னைப் பார்த்தார்.

‘‘ஏன்.. வேற ஸ்டேஷன் கிடைக்கலியா?’’

அவருடைய முதல் வரவேற்பு வாசகங்கள், என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்தன. தொண்டையில் வார்த்தைகளே இல்லாத மாதிரி நான்.

‘‘ஏன் சார்?’’ 


அவர் அதே உணர்ச்சியற்ற குரலில், ‘‘இது பனிஷ்மெண்ட் ஸ்டேஷன் தம்பி. இங்கே எந்த வசதியும் கிடையாது. சாப்பாடும் கிடையாது. கண்டெம்டு குவார்ட்டர்ஸ்லதான் தங்கணும். பாம்புகளோடு குடித்தனம் பண்ணனும். சிங்கம், புலி மாதிரி மிருகங்கள் மட்டும்தான் இங்கே கிடையாது. மற்றபடி எல்லாம் இருக்கு...’’

எனக்கு அழுகையே வந்துவிட்டது. என் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ, ‘‘ஆபீஸ்ஸ்ல தெரிஞ்ச ஆளுக யாராச்சும் இருக்காங்களா? இருந்தா, இப்படியே போய் ஆர்டரை கேன்சல் பண்ணி வேற ஊர் வாங்கிட்டுப் போயிருங்க..’’ என்று ஆலோசனை கொடுத்தார். எனக்கு யாரைத் தெரியும்? அப்படியெல்லாம் இருந்திருந்தால், கோவில்பட்டிக்காரன் திருச்சிக்குப் பக்கத்திலேயே வாங்கியிருப்பேனே.

‘‘இல்ல சார்.. பரவாயில்ல..’’

அவர் நிமிர்ந்து, ‘சரி, உன் தலைவிதி’ என்று சொல்லாமல் பார்வையிலேயே அதை கம்யூனிகேட் பண்ணினார். வெளியே வந்து பார்த்தேன். பெருங்காடு கடலென விரிந்து கிடந்தது. இருள் கவிய கவிய, பூச்சிகளின் ரீங்காரம் ‘‘ங்கொய்ய்’’ என்று காதைத் துளைத்தது. எதிரே தெரிந்த இருள் என்னைப் பயமுறுத்தியது. என் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு. என்ன காத்திருக்கிறதோ எனக்கு?

சின்னப்பிள்ளைகள் எல்லோருக்கும் முதலில் இருட்டைக் கண்டால் பயமாகத்தானிருக்கும். ஆனால், வயதாக ஆக, அந்த பயம் தெளிந்துவிடும். அப்படிப் பயம் தெளியாமலே சிலர் வளர்ந்துவிடுவார்கள். நான் அப்படியே வளர்ந்தவன். பிறந்து வளர்ந்த தெருவில், தெருவிளக்கு எரியவில்லையென்றால்கூட பாட்டுப் பாடிக்கொண்டே போவேன். வீட்டில் யாரும் இல்லையென்றால், சுற்றியிருக்கும் வீடுகளில் இருப்பவர்களுக்கு இலவசமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி, காதல், தத்துவப் பாடல்களை வழங்கிக் கொண்டிருப்பேன்.

எல்லாம் ஒரு தற்காப்புக்காகத்தான். என் சத்தத்தைக் கேட்டுப் பொறுக்க முடியாமல், அருகில் எங்காவது அன்றைய சூடான செய்திகளைப் பரிமாறிக்கொள்ளப் போயிருக்கும் என் அம்மாவைப் பார்த்து, சொல்லி அனுப்பி வைப்பார்கள். அம்மா வீட்டுக்குள் வரும்போதே,
‘‘ஏன் இந்த காட்டுக்கூப்பாடு போடுதே.. கொஞ்ச நேரம் வெளிய போக வலிக்குதா...’’என்று வைதுகொண்டே வருவாள்.

அப்படிப்பட்ட சூரப்புலிக்கு, இப்படி ஒரு ஸ்டேஷன். இப்படி ஒரு வேலை. டூட்டி எடுத்து ஒரு வாரம் ஆகிட்டது. ஒரு வாரமும் நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமில்லை. காலையிலேயே பாயிண்ட்ஸ்மேன் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஸ்டேஷனிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்த வேளானந்தல் கிராமத்துக்குப் போய், இருந்த ஒரே ஒரு கடையில் காலைக்கும், மதியத்துக்கும் இட்லிகளை வாங்கிக்கொண்டு, வேகுவேகென்று சைக்கிளை மிதித்து வந்து டூட்டி எடுப்பேன். இரவுக்கு அடுத்த ஸ்டேஷனான திருவண்ணாமலையிலிருந்து டிபன். இப்படி, டிபனாகச் சாப்பிட்டு, கடும் டீயாகக் குடித்து, சிகரெட்டுகளாகப் புகைத்து உயிர் வாழ்ந்தேன்.
அன்றாடம் ஸ்டேஷனுக்குள்ளும், பாதைகளிலும், ஆலமரப் பொந்துகளிலும், குவார்ட்டர்ஸிலும், பாம்புகள் படையெடுத்து வந்துகொண்டே இருந்தன. கண்காட்சிகளில் கண்ணாடிப் பெட்டிகளுக்குள் மட்டுமே பார்த்திருந்த பாம்புகளை நேரில் பார்த்தால், அதுவும் அருகிலேயே என்னை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் அதன் கண்களைப் பார்த்தால், எப்படி இருக்கும்? ஒரு வாரத்துக்குள் எனக்கு வெறுத்துவிட்டது. கொண்டு வந்த புத்தகங்களைப் பலமுறை படித்துவிட்டேன். எல்லா நண்பர்களுக்கும் என் தனிமையின் துயர் பற்றி கடிதங்களை எழுதித் தள்ளினேன்.

ஒன்று, இந்த ஸ்டேஷனை விட்டு வேறு ஸ்டேஷனுக்கு மாறவேண்டும். இல்லையென்றால் வேலையை விடவேண்டும். இரண்டாவது யோசனையை நினைக்கும்போதே இனித்தது. மீண்டும் கோவில்பட்டி. மீண்டும் நண்பர்கள். மீண்டும் விவாதங்கள்.

எல்லாவற்றையும்விட, என்னை மிகவும் பயமுறுத்தியது வேளானந்தலின் இரவுதான். நரிகளின் ஊளையும், பூச்சிகளின் ரீங்காரமும், இரவுப் பறவைகளின் கூவலும் சேர்ந்து, ஒரு பயங்கர உணர்வைத் தோற்றுவித்தன. எனவே, என்னுடன் வேலை பார்க்கும் பாயிண்ட்ஸ்மேன் கூடவே எப்போதும் இருந்தேன். இரவில், ஸ்டேஷனுக்கு வெளியே நாற்காலியைப் போட்டுக்கொண்டு, பாயிண்ட்ஸ்மேனையும் உட்கார வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பேன். அவருக்குத் தூக்கம் வந்தாலும் விடுவதில்லை. அடிக்கடி கடுங்காப்பியோ, டீயோ போட்டுக் குடித்துக்கொண்டே இரவுப் பொழுதை, இஞ்ச் இஞ்ச்சாக நகர்த்துவேன்.

அப்படி ஒரு அமாவாசை நாள். தூரத்தில் திருவண்ணாமலை நகரத்தின் வெளிச்சப்புள்ளிகளைத் தவிர, வேறு எதுவும் இல்லை. பிசைந்து அப்பிய இருள், என் எதிரே. அது எத்தனையோ மர்மங்களை மூடியிருந்தது. புதிரான அதன் பாஷை எனக்குப் புரியவில்லை. நான், அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பாயிண்ட்ஸ்மேன் ராமசாமி, காப்பி போட்டுக் கொண்டிருந்தார். என் மனதில், தனிமையின் பயங்கரம் என்னைத் தின்று கொண்டிருந்தது.

ராமசாமி, காபியை டம்ளரில் கொண்டு வந்து கொடுத்தார். இதமான அந்த குளிரில், ஆவி பறக்கும் கடுங்காப்பி என்னை ஆற்றுப்படுத்தியது. தண்டவாளங்களுக்கு அப்பால், இருளுக்குள் தொலைத்திருந்த கண்களை மீட்டு, காபியைக் குடிக்கத் தொடங்கினேன். ஏதோ, என் கண்முன்னே அசைவதைப்போல ஒரு உள்ளுணர்வு. நிமிர்ந்து பார்த்தேன். இருளே உருவாக ஒரு ஆள், எதிரே நின்று கொண்டிருந்தான். பயத்தில் நாக்குழறியது.

‘‘ராமசாமி.. ராமசாமி..’’

உள்ளேயிருந்து ராமசாமி என்னவோ ஏதோ என்று கையில் ஒரு கம்புடன் ஓடிவந்தார். பாம்போ, பூச்சியோ இருக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், நிலைமை வேறு மாதிரி இருக்கவே, ‘‘யாருய்யா... நீ...’’ என்று அதட்டலாகக் கேட்டார்.

அவன் பதில் சொல்லவில்லை. நான் குடித்துக் கொண்டிருந்த காப்பி டம்ளரை நோக்கி கையை நீட்டினான். நெஞ்சுவரை வளர்ந்த தாடி, சடை பிடித்த தலைமுடி. கையில் ஒரு சிரட்டை வைத்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன். ராமசாமி உள்ளே போய், கொஞ்சம் டீயைக் கொண்டு வந்து அந்தச் சிரட்டையில் ஊற்றினான்.

‘‘எங்கே போறே?’’ என்று ராமசாமி கேட்டார். பதில் எதுவுமில்லை. நான் அந்த ஆளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி இந்த இருளுக்குள் தனியாக முளைத்து வந்தான்? எனக்கு ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருந்தது.
ராமசாமி, ‘‘ஒண்ணுமில்ல.. பைத்தியங்க இப்படி அப்பப்ப வந்து போகும் சார். பயப்படாதீங்க..’’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு எதைப்பற்றியும் பயமில்லாமல் இருக்க முடிகிறது? நிதானம்தான் பயமா? நிதானம்தான் கற்பனையான பயங்களின் உற்பத்தி மூலமா? என் எண்ணங்கள் ஓடத்தொடங்கியபோது, உள்ளேயிருந்து அடுத்த ரயிலுக்கான ‘அனுமதிக்காக அழைப்பு மணி’ கேட்டது. அனுமதியைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அந்த ஆளைக் காணவில்லை. தண்டவாளத்தில் நின்று இருபுறமும் பார்த்தேன். இல்லை. அந்த ஆள் வந்த சுவடும் போன சுவடும் தெரியவில்லை. எதிரே காட்டுக்குள் உற்றுப்பார்த்தேன். இந்த இருளுக்குள் இருளாக மறைந்துவிட்டானோ?

எனக்கு மனசு லேசான மாதிரி இருந்தது. மனதில் அடைத்துக் கிடந்த ஏதோ ஒன்று திறந்து பாரம் குறைந்த மாதிரி. புதிய உணர்வு ஒன்று முளைவிட்டு வளரத் தொடங்கியது. என் கண்களின் பார்வையில் கூர்மை கூடிக்கொண்டிருந்தது. பயம் என்ற பாறாங்கல் லேசாக அசைந்து கொண்டிருந்தது. எதிரே, இருண்ட காட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காட்சிகள் கட்புலனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. எதிரே இருந்த காட்டுமரங்கள், செடிகொடிகள். அதில் உட்கார்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த பறவைகள். வானத்தில் விடிவெள்ளி தெரிந்தது. இன்னுமொரு புதிய நாளின் புதிய விடியலை அறிவிக்க, காட்டிலிருந்து முதல் குரல் வந்தது. என் மனதில் புதுவெள்ளமெனப் பெருகிய உணர்ச்சிப் பெருக்கில், மகாகவி பாரதியின் கவிதை வரிகளை என் வாய் முணுமுணுத்தது.

‘‘இருள் என்பது குறைந்த ஒளி!’’

Sunday 15 April 2012

அதிசயமனம்

art_2 இந்தப் பூவுலகில் பிறந்ததிலிருந்தே குழந்தையின் மனம் வளரத் தொடங்கி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் புற உலகத்தைக் கண்டு உணர்கின்றன. தனக்கும் புற உலகத்துக்கும் இடையில் அழகிய ஒருதொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள புரிந்துகொள்ள மனதில் இருத்திக்கொள்ள ஒவ்வொரு சிறு சிறு முயற்சியாகச் செய்து பார்க்கிறது. அதன் முயற்சிகளே அதற்கு ஆனந்தத்தைத் தருவதாக அமைகிறது. இந்த ஆனந்தம் தான் அதன் வெற்றி. இப்படி ஒரு வெற்றியிலிருந்து மற்றொரு வெற்றிக்கு பயணப்படுகிறது குழந்தை. இதனால் ஏற்படும் அனுபவப் பதிவுகளை மனதில் இருத்திக்கொள்கிறது. தன்னிடம் அன்பு மீதூற ஒலி எழுப்பிக் கொஞ்சுவோர்களிடம் புன்னகைக்கிறது. தாயாரின் தாலாட்டில் தன்னை மறந்து உறங்குகிறது. திரும்பத் திரும்ப ஒலிக்கும் பதச்சேர்க்கையின் இசைக்கோர்வை குழந்தையின் ஆழ்மனதில் ஒரு அமைதியை உருவாக்கி அதனிடம் முழுமையான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் உளப்பதிவுகள் ஆரம்பத்தில் பார்வை மூலமே உருவாகிறது. எனவே காட்சி பிம்பங்களை பலமுறை உற்றுப்பார்த்த பின்னரே குழந்தை அதைப் புரிந்து கொள்ளவும், அதற்கு எதிர்வினை புரியவும் தொடங்குகிறது. இதனால் குழந்தைக்கு ஒழுங்கின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறது. அந்த இடத்தில் அந்தப் பொருள் இருப்பதையே மனம் பதிவு செய்து கொள்வதால் அந்தப்பொருள் இடம் மாறும்போது மனப் பதிவில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் உணர்ச்சிகளில் மாறுதல் நிகழ்கிறது. குழந்தை அந்தப் பொருளை அதே இடத்தில் வைக்கும்வரை அமைதியிழந்து அழுகிறது. பல்வேறு அறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

பொதுவாகக் குழந்தைகள் ஒழுங்கற்றவர்கள் என்றும், அவர்களால் பொருட்களைச் சிதறடிக்கத்தான் முடியும் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவார்கள். ஆனால் குழந்தையின் ஒழுங்கமைவான அகஉலகத்தில் நாம் நம் விருப்பத்திற்கேற்ப குழந்தையின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து விடுகிறோம். குழந்தைகள் தங்கள் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பையும் கலகத்தையும் செய்கிறார்கள். ஆனால் நாம் குழந்தையின் அக மனதைப்பற்றி அறியாததினால், “என்ன அட்டகாசம்! என்ன சேட்டை... பிள்ளையா இது...”

என்று அங்கலாய்க்கிறோம். மொழியறிவு இல்லாத பருவத்தில் குழந்தை தன் அதிருப்தியை அழுகையின் மூலமே வெளிப்படுத்துகிறது. அந்த அதிருப்தியின் காரணத்தை அறியமுடியாத அவசரத்திலோ. அகங்காரத்திலோ, பலவீனத்திலோ நாம் இருக்கிறோம்.

ஒழுங்கின் மீதான கவனம் ஈர்ப்பு குழந்தையின் மனதை உருவாக்குவதற்கான இயல்பான, அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது. இதையே தானே உருவாக்கிக்கொள்ளும் விளையாட்டுகளிலும், தன்னுடன் மற்றவர்கள் விளையாடும் விளையாட்டுகளிலும் எதிர்பார்க்கிறது. கையால் முகத்தை மூடிக்கொண்டு திடீரென திறந்து உற்சாக ஒலி எழுப்பும் படுக்காளி விளையாட்டும் கண்ணாமூச்சி விளையாட்டும் குழந்தைகளிடம் ஒழுங்கு குலைதலும் ஒழுங்கை மீட்டலுமான செய்கையால் மனங்கவரப்படுகிறது. ஒழுங்கு பற்றிய கூர்மையான உணர்ச்சியை இயற்கையிலேயே குழந்தை பெற்றிருக்கிறது. புறவயமான உலகில் உள்ள ஒழுங்கு என்பது மட்டுமல்ல, அகவயமான தன் உலகிலும் இந்த ஒழுங்கைப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அதே நேரம் ஒழுங்கை நாம் உணர்வது போல் குழந்தைகள் உணர்வதில்லை. ஏற்கனவே உருவாக்கி விட்ட உலக ஒழுங்கு பற்றியே நம்முடைய கவனம் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தங்கள் மனதில் படைப்பூக்கமாக ஒரு ஒழுங்கைப் புதிதாக உருவாக்குகிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் இது ஒன்றுமில்லாததில் இருந்து புதிதாக ஒன்றைப் பிரகாசிக்கச் செய்வதும் ஆக குழந்தை படைப்பின் உச்சத்தில் இருக்கிறது. நுண்ணிறிவின் வளர்ச்சியினால்தான் குழந்தை நம் கண்ணுக்குப் புலனாகாத அசையும் உயரினங்களையும், (எறும்பு, புழு, பூச்சி) அசையாத பொருட்களையும் (தூசி, துரும்பு) கண்டு களிபேருவகைக்கொள்கிறது.

இவற்றையெல்லாம் உணராத பெரியவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களில் மூழ்கி குழந்தையின் அவதானிப்புகளை அலட்சியம் செய்கிறார்கள். குழந்தையின் நுண்ணறிவு வளர்ச்சியைப் பற்றித் தெரியாததினால் இடையூறு செய்கிறார்கள். இதன் மூலம் குழந்தையின் அக உலக வளர்ச்சியில் பெரும்பாதகத்தை ஏற்படுத்துகிறார்கள். பிற்காலத்தில் குழந்தைகளின் ஆளுமைத்திறன்கள் பாதிக்கப்படவும் ஏதுவாகிறது.

குழந்தையின் மனமானது பெரியவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. அவர்களுக்கு அது ஒரு மாயம்போல தெரிகிறது. குழந்தையின் ஒவ்வொரு நடத்தைக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. குழந்தையின் ஒவ்வொரு எதிர்வினையையும் கண்டறிந்து கொள்ளும்போது குழந்தையின் மனஉலகம் பற்றிய ஒரு புதிய புரிதல் ஏற்படுகிறது. குழந்தையிடம் ஒரு ஆசிரியரைப் போல அதிகாரம் செலுத்திய நாம் குழந்தையின் மாணவர்களாகி விடுவோம்.

குழந்தைகள் தங்களுடைய அவதானிப்பால் ஒவ்வொரு பொருளின் நுட்பமான பகுதியையும் உற்று நோக்குகின்றனர். தொட்டுப்பார்க்கின்றனர். முகர்ந்து உணர்கின்றனர். ருசித்துப் பார்க்கின்றனர். இதன்மூலம் அந்தப் பொருளின் எல்லாவித சூட்சுமங்களையும் அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி அறிந்து கொண்ட அனுபவங்களின் மூலம் தங்கள் மன உலகின் அடிக்கட்டுமானத்தைக் கட்டுகின்றனர். அற்பம் என்றோ அற்புதம் என்றோ குழந்தைகள் உலகில் இல்லை. எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் தீராத பயணத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் உற்சாகமின்மை இல்லை. அவர்களிடம் விரக்தியில்லை. அவர்கள் முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். திரும்பிப் பார்ப்பதற்கு அவர்களுக்கு எந்த வருத்தங்களோ, துயரங்களோ இல்லை. படைப்பின் முழுச்சக்தியோடு அவர்கள் இயங்குகிறார்கள்.

சோர்ந்து, வருந்தி, விரக்தியுற்று, கவலையின் வலையில் சிக்கி, நம்முடைய எல்லாச் சக்தியையும் இழந்த நாம் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறோம். குழந்தைகள் நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள்....

Saturday 14 April 2012

புரட்சியின் கண்ணீர்


 

lenin
அவரை நான் மறந்தே போயிருந்தேன்.பார்த்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும். நான் கோவில்பட்டியை விட்டு, வட மாவட்டங்களில்வேலை பார்த்துவிட்டு இப்போதுதான் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தேன். திடீரென அவரைப்பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தாலும், யார் என்று பிடிபடவில்லை.அவரே என்னைப் பார்த்து, ஏத்துப்பல் சிரிப்புடன் சாலையைக் கடந்து ஓடிவந்தார்.
‘‘தோழர்... என்னைத் தெரியலயா...’’
ஏக்கத்தோடு கேட்டார். அவர்கைகளைத் தொட்டதுதான். எனக்குள் மின்னல் வெட்டியது மாதிரி ஞாபகம் வந்துவிட்டது.
‘‘தோழர் புரட்சி! எப்படிஇருக்கீங்க... ஆளே மாறிட்டீங்க...’’
ஆனால், உண்மை அதுவல்ல. அவர்மாறவேயில்லை. காலம் தன் கரத்தால் தலைமுடியில் வெள்ளையையும், உடலில் சில சுருக்கங்களையும்ஏற்படுத்தியிருந்தது. அவ்வளவுதான். மற்றபடி அதே மெலிந்த உடல், பளீரென்ற சிரிப்பு. அழுக்குதெரிந்தும் தெரியாத ஒரு வேட்டி சட்டை. தோளில் சிறிய சிவப்புத்துண்டு. அப்படியேதான்இருந்தார்.
அருகிலிருந்த டீக்கடையில்டீ குடித்தோம். தோழர், கணேஷ் பீடி வாங்கிப் புகைத்தார். நான், வில்ஸ் பில்டர் வாங்கினேன்.அவர் மாறவில்லை. அப்போதும் டீயும் கணேஷ் பீடியும்தான் அவர் உணவு. புரட்சி என்று எல்லோரும்கூப்பிட்டார்கள், நாங்களும் அப்படியே கூப்பிட்டோம். எங்களுக்குப் பின்னால் வந்த இளைஞர்களும்கூடஅப்படியே கூப்பிட்டார்கள். ஒருநாள், அவருடைய உண்மையான பெயரை பாலுவிடம் கேட்டபோதுதான்தெரிந்தது, கந்தசாமி என்ற பெயர், எப்படி புரட்சியாக மாறியது என்று. புரட்சி என்ற சொல்லைக்கேட்டால் போதும், அங்கே தோழர் புரட்சி நின்று கொண்டிருப்பார்.
இந்தியாவில் எமர்ஜென்சி முடிந்துஜனதா ஆட்சிக்கு வந்தபோது, இடதுசாரிகளுக்கு எழுச்சிக் காலமாக இருந்தது. இளைஞர்கள் பல்வேறுஇடதுசாரி சிந்தனைப் பள்ளிகளில் வளர்ந்தார்கள். ஆனால், எல்லோருக்கும் ஒரே ஒரு சிந்தனைதான்.அது, ‘புரட்சியை எப்போது நடத்துவது?’ இரவுகள் இவர்களுடைய விவாதச் சூட்டினால், பகலைவிடவெக்கையாக மாறிவிட்டிருந்தது. யார் புரட்சியைப் பற்றிப் பேசினாலும் புரட்சி அங்கிருப்பார்.தோழர்கள் பேசிக்கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார். யாராவது, ‘‘கோவில்பட்டியில்புரட்சி வந்தால்...’’ என்று ஆரம்பித்தால் போதும். கந்தசாமி உற்சாக மிகுதியில் தன் கைகளைத்தட்டி, ‘‘அப்படிப் போடு!’’ என்று உரக்கக் கூவுவார்.
தோழர்கள் பேசுகிற எந்த ஒருசொல்லும், கீழே சிந்திவிடாத வண்ணம் அப்படியே அவர் விழுங்கிக் கொண்டிருந்தார். தோழர்களுக்குடீ வேண்டுமென்றால், ஓடிப்போய் வாங்கி வருவார். சிகரெட், பீடி வேண்டுமென்றால் வாங்கிவந்து தருவார். விவாதம் அறுபடாமலிருக்க, என்னென்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்வார்.யாராவது அவரிடம்,
‘‘எதுக்குத் தோழர் உங்களுக்குவீண்சிரமம்?’’ என்று கேட்டால்,
‘‘தோழர், எனக்கு ஒரு சிரமமுமில்லை.நீங்க எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க.. ந்தா... ஒருநிமிஷத்துல வாங்கிட்டு வாரேன்...’’ என்று சொல்வார்.
மற்ற விஷயங்களைக் குறித்துஅவருக்கு ஆர்வம் இல்லை. இலக்கியம் பற்றியோ, சினிமா பற்றியோ, வேலையின்றி சுற்றிக்கொண்டிருந்தஎங்கள் குழாம், வேலையின்மை பற்றியோ பேசிக்கொண்டிருந்தால், அருகில் வந்து சிறிது நேரம்உட்கார்ந்திருப்பார். பின்பு, அதிருப்தியான ஒரு பார்வையை எங்கள் மீது வீசிவிட்டு, அங்கிருந்துஅகன்றுவிடுவார். பகலில் எங்கு போகிறார், என்ன வேலை செய்கிறார் என்று தெரியாது. ஆனால்,இரவானதும் நாங்கள் கூடிப்பேசுகிற காந்தி மைதானத்துக்கு வந்துவிடுவார்.
சிலநாட்களில், விடிய விடியபேசிக்கொண்டிருப்போம். நடுநிசியில் எங்களுடைய உரத்த குரல்கள் நகரமெங்கும் அலையடிக்கும்.ஒரு மணிக்கு மேல் டீயோ, சிகரெட், பீடியோ கிடைக்காதென்பதால், தோழர் புரட்சிதான் எங்களுக்குபீடி சப்ளை செய்வார். எல்லோரும் தங்களுடைய பேச்சில் ‘ஜான் ரீடு’ எழுதிய ‘உலகைக் குலுக்கியபத்து நாட்கள்’ என்ற நூலைப் பற்றிப் பேசுகிறார்களே என்று என்னிடம் கேட்டுவிட்டு,‘‘அந்தப் புத்தகம் வேண்டும்’’ என்றார்.
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.அவர் எழுத்துக்கூட்டி வாசிப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும், மறுநாள்அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் நீட்டினேன். அதை வாங்கி, அட்டையிலிருந்தபுரட்சியின் காட்சிப் படத்தையே ரொம்பநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது அவரைஓரக்கண்ணால் பார்ப்பேன். தோழர் புரட்சி, உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் புத்தகத்தின்பக்கங்கள் ஒவ்வொன்றாய் புரட்டிக் கொண்டிருந்தார்.
அதை வாசிக்க முயற்சி செய்யவில்லை.அந்தப் பக்கங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய முகம் அபூர்வமானஒளியுடன் துலங்கியது. கண்களில் கனவின் ரசம் இறங்கி, மெய்மறந்த நிலையில் இருந்தார் அவர்.அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தடவுவதின் மூலம், அவர் ரஷ்யப் புரட்சியின் காலத்துக்குள்சென்று கொண்டிருந்தார். புரட்சியின் பதாகை ஏந்தி, அவரே பீட்டர்ஸ்பர்க் நகரில் கூவிக்களித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்.
நாங்கள் பேசிக் கலைந்தபோது,நானே எதிர்பாராதவாறு அந்தப் புத்தகத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். பேருவகை முகத்தில்கொப்பளிக்க,
‘‘அடடா! என்னமா புரட்சி நடத்தியிருக்கான்!’’
உண்மைதான். தோழர் புரட்சியைப்போலவே நாங்களும் கனவு கண்டு கொண்டிருந்தோம். தீவிரமான அரசியல், தத்துவ விவாதங்கள்,கலை இலக்கியச் சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. புரட்சிக்கான தருணம் நெருங்கிவிட்டதுஎன்றுதான் நாங்களும் நினைத்தோம். அதனால், இந்த அமைப்பில் போட்டித் தேர்வுகள் எழுதிவேலைக்குச் செல்வது வீண் என்று நினைத்தோம். எப்படியும் எல்லாம் மாறத்தான் போகிறது.அன்று சுதந்திரப் போராட்டத்தில் படிப்பை, வேலையை உதறித் தள்ளி, வீதிகளில் இறங்கிய இளைஞர்களைப்போல புரட்சியின்போது எல்லோரும் வீதிகளுக்கு வந்துதான் தீரவேண்டும். பின் எதற்காக வேலைக்குப்போகவேண்டும்? புரட்சிக்கான தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் வேண்டாமா?
ஆனால், வீட்டில் கடும் நெருக்கடிகொடுப்பார்கள். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் அனுப்பி ஹால் டிக்கெட் வாங்குவோம்.தேர்வு மையம் மதுரையோ, திருச்சியோ, திருநெல்வேலியோ, திருவனந்தபுரமோ, தூத்துக்குடியோ,எங்கு இருந்தாலும் அந்த ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கிருந்தபடி, பரீட்சை எழுதாமல்ஊரைச் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவோம்.
வரப்போகும் புரட்சியின்போதுகோவில்பட்டி நகரை எதிரிகளிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது? கேந்திரமான சாலைகள் எவை?எந்தெந்த வழிகளை யார், யார் தலைமையில் பாதுகாக்க வேண்டும்? மக்களுக்கான புரட்சியின்செய்திகளைக் கொடுப்பதற்கான கமிட்டியில், யார் யார் இருக்கவேண்டும்? உணவு சப்ளை, குடிநீர்சப்ளை என்று விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தோம். மாற்றத்தின் கனவுகளைச் சுமந்துகொண்டு,மண்டை வீங்கித் திரிந்தோம். நாங்கள் பேசிய அத்தனை இரவுகளில் உதிர்த்த சொற்களுக்கு வல்லமைஇருந்தால், அவையே புரட்சியை நடத்தியிருக்கும்.
ஆனால், காலம் மாறிவிட்டது.பழைய கனவுகளின் சாயல் மட்டுமே இப்போது மீந்திருக்கிறது. தலைகீழான வாழ்க்கை முறைகளில்,எல்லாவற்றையும் அவசரகதியில் செய்துகொண்டே ஓடவேண்டியிருக்கிறது. அன்று கூடிப் பேசியகாந்தி மைதானத்தைக் கடக்கும்போதெல்லாம், ஆச்சரியத்தின் ஒரு சிறகு என் மேல் வீசிச்செல்வதைஉணர்ந்திருக்கிறேன். அத்தனை வருடங்கள், அத்தனை இரவுகள், பேசித்திரிந்த இடம்தானா? இன்றுஅந்த இரவுகள் இல்லை. அந்த இரவுகளில் கூடிப்பேசிய நண்பர்களும் இல்லை. எல்லோருக்கும்அவரவர் பாடு. நானும்கூட பஜாருக்குப் போகவேண்டும். ரைஸ் மில்லில் கொடுத்திருந்த கேப்பைமாவை வாங்கி வரவேண்டும். துணைவியாரின் முகம் ஒருகணம் மின்னி மறைந்தது.
நான் தோழர் புரட்சியை நிமிர்ந்துபார்த்தேன். தோழர் புரட்சி எங்கோ வெறித்தபடி பீடியைச் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தார்.திடீரென வெயில் மறைந்து, மேகம் கூடி மூடாக்கு போட்டது. மழை வருவதற்குள் வீடு போய்ச்சேரவேண்டும்.
‘‘அப்புறம் தோழர்?’’
விடைபெறும் தோரணையில் கேட்டேன்.
தோழர் புரட்சி என்னை நிமிர்ந்துபார்த்தார். முகம் மாறியிருந்தது. அமைதி கூடி, முகத்தின் சுருக்கங்கள் ஆழமாகின. ஆனால்,அவர் எதுவும் பேசவில்லை. நான் என்னுடைய டி.வி.எஸ். வண்டியில் சாவியைப் போட்டுவிட்டுஅவரைப் பார்த்து சிரிக்க முயன்றேன். நான் புறப்படுவதை உணர்ந்தவர், ஒரு அடி முன்னால்வந்தார். என்னுடைய இடது கையைப் பிடித்துக்கொண்டு,
‘‘தோழர்.. அப்ப புரட்சி வரவேவராதா...?’’
குரல் தழுதழுக்கத் தொடங்கியிருந்தது.அப்படி ஒரு கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.ஒருகணம் தடுமாறிவிட்டேன். என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே என்வாய்,
‘‘தெரியல.. தோழர்...’’ என்று முணுமுணுத்தது.
புரட்சியின் கண்களில் களகள வென கண்ணீர் வழிந்தது.

Thursday 12 April 2012

குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்

-indian-children-near-yellow-wall-in-the-village-of-kanyakumari-anastasiia-kononenko குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்..

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்.

- முகுந்த் நாகராஜன்.

உலகமெங்கிலும் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய முறையில் அவர்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. குழந்தைகள் இயற்கையின் அற்புதப்படைப்பு. அபூர்வமான பரிசு என்று உணர்ந்து கொள்வதில்லை. அது மட்டுமல்ல நாம் உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டிருக்கிற இந்த உலகம், சமூகம், குழந்தைகளின் கைகளுக்குத்தான் வரப்போகிறது, என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை. அப்படி யோசித்திருந்தால் உரியமுறையில் குழந்தைகளை, அவர்களுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்போம்.

பெரும்பாலோர் குழந்தைகளை பயிற்சி கொடுக்கப்படாத, பழக்கப்படுத்தப்படாத மானுட விலங்குகள் என்று நினைக்கிறார்கள். ஆதலால் குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் காட்டுகிறார்கள். ஆனால் பூமியில் பிறந்த கணத்திலிருந்து தன் இடைவிடாத உழைப்பினால் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்துகொள்கிறது. அதன் மனதின் அகஉலக கட்டமைப்பு உருவாகத் தொடங்கி விடுகிறது. பேசத் தெரியாவிட்டாலும், எல்லாவித உணர்வு நிலைகளையும், அனுபவித்து அதைச் சேகரமாக்கிக்கொள்கிறது. இதற்கு இயற்கை உணர்வும், இயல்பாக உள்ள மரபணுக்களின் தூண்டுதல்களும், புறவயமான சூழ்நிலைகளும் துணை புரிகின்றன. நாளும் பொழுதுமாய் குழந்தைகள் அறிதலின் மூலமே வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இருட்டும் நிசப்தமும் நிறைந்த தாயின் கருவறையிலிருந்து வெளிச்சமும் இரைச்சலும் மிகுந்த இந்த உலகத்தைக் கண்டு ஏற்படும் அதிர்ச்சிதான் குழந்தைகளின் இளம் மனதில் ஏற்படும் முதல் பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் தன் புலனுணர்வுகள், அவற்றில் ஏற்படும் சுகம், வலி, வேதனை மூலம் இந்த உலகத்தை உள்ளுணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றன. பிறப்பிலிருந்தே குழந்தையின் புலன் உறுப்புகள் கூர்மையானவையாக இருக்க, அதிலும் குறிப்பாக தொடு உணர்வும், ஒலி எழுப்பும் மற்றும் கேட்கும் உணர்வும் அதிகக் கூர்மையுடன் இருக்கின்றன. எனவே தங்கள் உணர்வுகளை பசி, தாகம், வலி, வேதனை, அதிருப்தி, கலகம் இப்படி எல்லாவற்றையும் அழுகையின் மூலமாகவே வெளிப்படுத்துகின்றன. தொடு உணர்வின் மூலம் மென்மையை, முரட்டுத்தனத்தை, சுகத்தை, வலியை உணர்கின்றனர். இந்த அனுபவங்களை இன்னும் தளிராக உள்ள மூளையின் இளம் பரப்புகளில் பதிவு செய்கின்றன. இந்தப் புதிவுகளின் மூலம் தான் குழந்தைகள் இன்பம், துன்பம் என்ற இருவேறு பிளவுபட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர்.

இவையெல்லாமே உள்ளுணர்வின் மூலமாகவே ஆழ்மனதில் மூழ்கிச் சேர்ந்துவிடுகின்றன. இப்படிச் சேகரமாகிற உள்ளுணர்வின் அனுபவங்களை வளர்ந்த பிறகு அதன் பிரதிபலிப்புகளை அவ்வளவு எளிதில் விளக்கி விடமுடியாது. ஆனால், குழந்தைகளின் ஆளுமைத் திறனை உருவாக்குவதில் உணர்வுநிலையில் இந்தப்பருவம் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்தப்பருவத்தில், குழந்தைகளை அலட்சியப்படுத்துவதோ புறக்கணிப்பதோ, அவமானப் படுத்துவதோ, பயமுறுத்துவதோ அவர்களுடைய ஆளுமைத் திறனைப் பெரிதும் பாதிக்கும்.

குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற அனுபவங்களை தாங்கள் கண்டறிகிற புதிய விஷயங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளும் வரை, அதன் நினைவுக்கிடங்கில் பதிகிற வரை அந்த விஷயங்களை திரும்பத் திரும்ப செய்யவே விரும்புகிறது. அந்த அனுபவத்தின் மூலம் விளைகிற பலனை உணர்ந்த பின்னரே அடுத்த அனுபவத்திற்குப் பயணப்படுகிறது. தவழும்போது அதன் பார்வைத் திறன் கூர்மையால், நம் கண்ணுக்குத் தெரியாத சிறு எறும்பின் பின்னால் தொடர்ந்து சென்று தொட்டுப்பார்க்கிறது குழந்தை. இப்படிப்பட்ட கூடுணர்ச்சிகள் மிக்க புலன்திறனோடு வளர்கிற, குழந்தைகளின் முன்னால் பெற்றோர்களும் சரி, பெரியவர்களும் சரி இதெல்லாம் குழந்தைக்குப் புரியாது, என்று அப்பாவித்தனமாய் ஏமாந்து போகிறார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளின் முன்னால் பேசப்படுகிற, நிகழ்த்தப்படுகிற, செயல்களின் முழுமையான அர்த்தம் தெரியாமல் போனாலும், அதன் அடிப்படையான உணர்வு நிலைகளை குழந்தைகள் புரிந்துகொண்டு விடும். அந்த உணர்வுநிலைகள் அதன் அக உலகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

குழந்தைகளின் குட்டி உலகத்திற்குள் பெற்றோர்களாயினும், மற்றவர்களாயினும், பிரம்மாண்டமான தங்கள் ஆகிருதியுடனோ, அதிகாரத்துடனோ நுழைவதை குழந்தைகள் ஒருபோதும் விரும்புவதில்லை. குழந்தைகளுக்காக குட்டியான ஒரு பால்பாட்டில் குட்டியான ஒரு சங்கு, குட்டியான கிலுக்கு, குட்டியான படுக்கை, தொட்டில் என்று உருவாக்கி அவர்களை அங்கே சுதந்திரமாக திரியவிடுகிறோம். அதன்பிறகு அவர்களுடைய உலத்திற்குள் அத்துமீறி நுழைந்து நம் அதிகாரத்தின் கொடியைப் பறக்கவிடக்கூடாது. குழந்தைகளிடம் ஒரு குழந்தையைப் போலவே, கூடுவிட்டு கூடு பாய்ந்து மாறிச் செல்லவேண்டும். குழந்தைகளிடம் குழந்தையாகவே பேசிப்பழக வேண்டும். குழந்தைகளின் அறிதிறன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தவோ, இடையூறு செய்யவோ கூடாது. அவர்களின் செயல்பாடுகளின் சுதந்திரம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சிறுசிறு அசௌகரியங்கள் நேரலாம். படுக்கைத்துணி ஈரமாகலாம். புத்தகத்தின் பக்கங்கள் கிழியலாம். கண்ணாடி பாட்டில்கள் உடையலாம். குழந்தையின் உடலெங்கும் அசுத்தமாகலாம். இந்த அசௌகரியங்களைக் கண்டு பொதுவாக பெரியவர்கள் முகஞ்சுளிப்பதும், அதட்டுவதும், மிரட்டுவதும், சிலநேரம் கோப மிகுதியால் அடிப்பதும் கூட நிகழ்கிறது. குழந்தைகளுக்குத் தாங்கள் செய்த காரியங்களை விட, அதனால் கிடைத்த விளைவு ஆழ்மனதில் பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் பிற்காலத்திலும் தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த நடுக்கத்தை மறப்பதில்லை.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தவேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். புதிய புதிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச்செய்ய வேண்டும். அதோடு குழந்தைகள் முன்னால் தகாத எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இந்த உலகத்தில் வந்திறங்கியவுடன், அவர்களுக்கு முதலில் இந்த உலகத்தை அறிமுகப்படுத்துகிறவர்கள், உணரவைக்கிறவர்கள், பெற்றோர்கள் தான். குழந்தைகள் பெற்றோர்களைத்தான் முதலில் கவனிக்கின்றனர். உற்றுநோக்குகின்றனர். எனவே குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் நடந்துகொள்கிற நடவடிக்கைகளைப் பொறுத்தே குழந்தைகளின் அகஉலக அடிக்கட்டுமானம் கட்டப்படுகிறது.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுநோக்குங்கள், அதில் தெரியும் ஆவேசம், அர்ப்பணிப்பு, தீவிரம், பேராவல். இடைவிடாத முயற்சி, சிறிய முன்னேற்றத்திலும் கொள்ளும் உவகை. பிரச்னைகளைப் புதிய கோணங்களில் அணுகுகிற அணுகுமுறை, பொறுமை, லாவகம், குழந்தைகள் படைப்பூக்கத்தின் பரிபூரண வடிவமாக திகழ்கிறார்கள். பெரியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். உண்மையில் குழந்தைகள் வளர்ந்த மனிதர்களைப் படைக்கிறார்கள் என்றால் மிகையில்லை....

ஈதல்

 Peacock_Feather_by_Aliace
 

தற்செயலாய் என்னைப்

பார்த்ததந்த மயிலிறகு

நீலக்கண்களை சுபாவமாய்

மூடித்திறந்தபடி

செல்லமகளின் பாடப்புத்தகத்தில்

செல்லமாய் இருந்தபடி

என் காலம் பிழைத்தது

கனவாய் வந்தாள் மகள்

எந்த மயிலிடம் பெற்றாய் கண்ணே!

புன்னகை மாறாமல்

மழலைஇசையாய்

நீ எந்த மயிலிடம் பெற்றாயோ

அந்த மயில்தான் ஈந்ததென்றாள்

ஆடிக் கொண்டிருந்தது காலம்

குழந்தையாய்.

Tuesday 10 April 2012

குழந்தைமை ரகசியம்

images (2) குழந்தைமை ரகசியம்

“குழந்தை தன்னிடத்தே ஒரு வாழ்க்கை ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியம் மனிதர் உள்ளத்தை மறைக்கும் திரையை நீக்க வல்லது. இந்த ரகசியத்தை உணர்ந்தால் மனிதன் தன் சிக்கல்களையும், சமூகச் சிக்கல்களையும் எளிதாக நீக்கிவிடலாம்.” - மரியா மாண்டிசோரி

தாயின் வயிற்றில் கரு உருவான சில வாரங்களிலேயே குழந்தையின் மனம் உருவாகி வளர ஆரம்பிக்கிறது. அது பெரும்பாலும் தாயின் உணர்வுகளையே ஏற்று பிரதிபலிக்கிறது. உடலாலும் உணர்வாலும் தாய் படுகின்ற இன்ப துன்பங்களை கோபதாபங்களை விருப்பு வெறுப்புகளை குழந்தையும் அனுபவிக்க நேர்கிறது. தன் பிரதிபலிப்புகளை வயிற்றுக்குள்ளேயிருந்து கொண்டே வெளிப்படுத்தவும் செய்கிறது. எனவே தான் கருவுற்ற காலத்தில் தாயின் உடல், மன ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. தாயின் கசப்பும், வெறுப்பும், விரக்தியும், கோபமும், இனிமையும், மகிழ்ச்சியும், கூட குழந்தையை பாதிக்கிறது.

மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யு பத்ம வியூகம் பற்றி கேட்டறிந்த கதையை நாம் கேட்டிருப்போம். குழந்தையின் மனம் தாயின் வயிற்றிலேயே உருவாகி வளர ஆரம்பிக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பேசுவதில்லை என்ற காரணத்தினாலேயே நாம் குழந்தையின் உணர்வுகளை, பிரதிபலிப்புகளை, மகிழ்ச்சியை, அதன் கலகத்தை நாம் உணர்வதில்லை. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணத்திலிருந்தே புதிய கிரகத்திற்குள் அடியெடுத்து வைக்கிற பரவச உணர்வோடு எல்லாவற்றையும் உற்றுநோக்குகிறது. அவதானிக்கிறது. புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. புதிய புதிய அனுபவங்களை எதிர்கொள்கிறது. அதன் சாராம்சத்தைத் தனக்குள் தக்கவைத்துக்கொள்ள முனைகிறது. காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையான அர்ப்பணிப்புணர்வோடு வாழ்கிறது. எப்போதும் மகிழ்வோடு வாழப் பழகுகிறது. உடலின் அத்தியாவசியத் தேவைகளை தன் அழுகையின் மூலம் உணர்த்துகிறது. தன் மீது அன்பு கொண்டவர்களைப் போற்றுகிறது. ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாக வாழ்கிறது. புத்தம் புது மலர் போல பூத்துக் குலுங்குகிறது. தன் ஒவ்வொரு செய்கையையும் தானே வியக்கிறது. அதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அந்தச் செய்கையை இன்னும் முதிர்வடையாத தன் ஞாபகக் கிடங்கில் சேர்க்கிறது. அந்தச் செய்கையினால் விளையும் இன்பமோ, துன்பமோ அதையும் தன் உணர்வுச் சேகர கோப்புகளில் பதிவு செய்கிறது.

ஒரு கண்டுபிடிப்பாளனைப் போல இந்த உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறது. அறிதலின் இன்பத்தை அனுபவிக்கிறது. குழந்தைமையின் முதலும் முடிவுமான நோக்கம் இன்பமே. வாழ்வை இன்பமாகக் கழிக்கவே விரும்புகிறது. குழந்தை இன்பத்தைக் கண்டடைகிற முயற்சிகளில் தான் உலகை தன் சுற்றுப்புறத்தை தன் சக ஜீவிகளை அறிந்து கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அது ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் பிறக்கிற ஒவ்வொரு இளம் உயிரும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்துள்ளது. அந்த வாழ்க்கை ரகசியத்தின் மூலமாகவே வாழ்வைப்புரிந்து கொள்கின்றனர். அந்த வாழ்க்கை ரகசியம் உழைப்பு இந்த அற்புதமான ரகசியத்தின் மூலமாகவே அதாவது தொடர்ந்த இடைவிடாத ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பின் மூலமாகவே தான் மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும், புத்துணர்வையும் பெறுகிறது. உழைப்பின் மீது ஆசைகொள்வது குழந்தையின் அடிப்படை இயற்கையுணர்வாகும் உண்மையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப் புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கிற பொறுமை, திறமை பெற்றோர்களுக்கும் இல்லை, மற்ற பெரியவர்களுக்கும் இல்லை.

தாயின் வயிற்றிலேயே இந்த உழைப்பு ஆரம்பமாகி விடுகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னால் உழைப்பு தீவிரமடைகிறது. உழைப்பின் தீவிரம் அதன் வாழ்வைக் களிகொள்ளச் செய்கிறது. அந்த இன்பமே மீண்டும் மீண்டும் உழைப்பின் மீது குழந்தையை ஈடுபாடும் பெருவிருப்பும் கொள்ளச்செய்கிறது.

ஆனால் பெரியவர்கள் குழந்தைகளை பெரும்பாலும் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். குழந்தையை ஏதும் இல்லாத எதுவும் அறியாத ஒரு வெறும் ஜீவி என்று நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தின் மீது நின்று கொண்டே குழந்தைகளை பார்க்கிறார்கள். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தைக் குழந்தைகள் மீது செலுத்த முனைகிறார்கள். தான் தீர்மானிக்கிற, தனக்கு விருப்பமான தனக்குத் தெரிந்த நல்லது கெட்டதுகளைக் குழந்தையிடம் திணிக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத உருளைக்கிழங்கு குழந்தைக்கும் பிடிக்காது என்று நினைக்கிறார்கள் தனக்குப் பிடித்த கோகோ கோலாவை குழந்தையும் சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன் சுயநலத்திற்காக குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் ஒப்படைக்கிறார்கள். பின்பு அதனிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடுகிறார்கள். குழந்தைகளை ஒரு பொருளாகப் பாவிக்கிற எண்ணமே இப்படி அவர்களைக் கையாளச் சொய்கிறது. குழந்தைகள் உடனடியாக வாய் பேசமுடியாது என்பதாலேயே அதற்கு யோசிக்கத் தெரியாது, சிந்தனை கிடையாது, நல்லது கெட்டது தெரியாது என்று குழந்தைகள் சார்பாக அவர்களே முடிவெடுக்கிறார்கள். இறுதியில் குழந்தைகளைத் தனக்குச் சொந்தமான ஒரு பொருள் என கருதி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உரிமையை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தையை அவர்களுடைய சொந்த படைப்பாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பாவம் குழந்தைகள் தாங்கள் ஒரு தனித்துவமிக்க தனி உயிரி என்ற உரிமையை இழக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதைப் பெறுகிற, தங்களுக்குத் தேவையில்லாததை மறுக்கிற சுதந்திரத்தை இழக்கிறார்கள். தங்களுடைய அறிதலின் தாகத்தைக் கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள் உள்ளொடுங்கிப் போகிறார்கள். இந்த உள்ளொடுங்கலே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது சமூகத்தில் நடக்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. எதையும் கேள்வி கேட்கத் துணியாத கோழைத்தனத்தை உருவாக்குகிறது. எதையும் மறுக்கக்கூடிய உரிமையை இழந்து தவிக்கிறார்கள். கல்விக்கூடங்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு குழந்தைகளின் இயல்பான மேதைமையைக் கட்டுப்படுத்தி சாதாரணமானவனாக்கு (ஹஏநுசுஹழுநு) வதற்காக மெனக்கெடுகிறது. சொல்வதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்குவதற்கு தன் முழு பலத்தையும் பிரயோகிக்கிறது.

குழந்தைகள் இதனால் மனம் வெதும்பி தன் இயல்பான அறிதிறனையும், மேதைமைiயும் இழக்கிறார்கள். அரும்பிலேயே கருகச் செய்யும் நடவடிக்கைகளால் தாங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்கள் சொன்னபடி நடக்க ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய அடிப்படை இயல்பான மகிழ்ச்சிக்கான அறிதலுக்கான உழைப்பையும், அதன் மூலம் கிடைக்கிற உள்ளொளியையும் மறந்து போகிறார்கள். இப்படி குழந்தைகளின் குழந்தைமையை அதன் ரகசியக் கனவுகளையும் கருகச் செய்துவிட்டு பெரியவர்கள் “உன்னைய வளர்ப்பதற்காக என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?” என்று அங்கலாய்க்கிறார்கள். விநோதத்தைப் பாருங்கள்.

உயிரின் இயல்பான படைப்பூக்க, உணர்வான உழைப்பு தான் குழந்தைமையின் ரகசியம். குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியடைவதற்கு உழைப்பு தான் முக்கியமான மூலகாரணம் என்று மார்க்சியம் சொல்வதைப் போல குழந்தைகள் உழைப்பதின் மூலமே தங்களின் உள்ளொளியை உள்ளுணர்வை, அறிதிறனை, மேதைமையை மகிழ்ச்சியை வளர்க்கிறார்கள். உழைப்பு அதுதான் எத்தனை அற்புதமான விசயம்! குழந்தைகளை உற்றுநோக்குவோம். நம் அறியாமைகளை அகற்றுவோம்..

Monday 9 April 2012

வெயில் மழையெனப் பொழியும்

 
வெயில் மstock-photo-5790293-arid-dry-desert-landscape-black-and-whiteழையெனப் பொழியும் நிலவெ ளியிலிருந்து...

ஒவ்வொரு ஊரும் பேசிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், யாரும் அதைக் கேட்பதில்லை. அவசரங்களின் சக்கரத்தை காலில் கட்டிக்கொண்டு, எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்நமக்கு, யார் பேசுவதை கேட்கத்தான் நேரமிருக்கிறது? அல்லது பொறுமை இருக்கிறது? வீட்டில்மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும்கேட்பதில்லை. வெளியே ஊர் பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தெரு பேசிக்கொண்டிருக்கிறது.நாம் பார்த்து, பார்த்து கட்டிய வீடு பேசிக் கொண்டிருக்கிறது. வாடகைக் குடியிருப்புகளும்கூடவாய் ஓயாது சலசலவென பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கேட்பதற்குத்தான் யாரும் இல்லை.
ஒட்டுமொத்த வாழ்க்கையையும்,அலைபேசிகளும், தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் சுருட்டி வைத்தக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பெரும்பாலான பொழுதுகளைஅங்குதான் சலவழிக்கிறோம். உயிருள்ள, ஜீவத் துடிப்புமிக்க வாழ்வின் நொடிகளை அங்கே இழந்த கொண்டிருக்கிறோம்.ஒரு ஊர் என்பது வெறும் பூகோள வரைபடமோ,வருவாய்த்துறை வரைபடமோதேர்தலுக்கான வார்டுகளோ, தெருக்கள லல. ஊர் என்பது உயிருள்ள ஒரு ஆன்மா.முதன்முதலாகஒரு இடத்தைத் தேர்ந்தெடத்து,அதில் குடியேறி, காட்டைத் திருத்தி கழனியாக்கிய மக்கள்கூட்டத்தின் ஆன்மா அதில் இருக்கிறது. நாம் குடியிருக்கும் ஊரின் ஒரு துளி மண் கூட வரலாற்றைப்பேசும். என்றாவது நாம் அதைக் கேட்டிருப்போமா. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் இருக்கிறது.

சென்னையில் இறங்கியவுடன் சுண்டவைத்த பழைய கறியும், பேக்கரியின்புதிய சுவையும் கலந்த ஒரு நெடி வீசுவதைப் பார்க்கலாம். மதுரையின் எல்லையில் வரலாற்றின்பழைய வாசம் வீசும் மலர் மணத்தை நுகரலாம். பலசரக்குக் கடையின்மணம் விருதுநகரென்றால்,கரிமருந்தும் சாக்கடையும் கலந்து வீசும் சாத்தூர். கரிசல் விருவுகள் விட்ட வெப்ப மூச்சுஉடலில் வருட, வெயிலின் தீய்ந்த வாடை வீசும் கோவில்பட்டி.

திருநெல்வேலி எல்லை வந்ததும், வயக்காட்டிலிருந்து எழுந்து வரும்நீர்மையான குளிர்காற்றில் மனசு கரைந்துவிடும். தூத்துக்குடியில் உயிர்மீனின் கவிச்சிவீசும். கருவாட்டின் தீவிர வாசனை ராமேஸ்வரத்தில். இப்படிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.ஒவ்வொரு ஊருக்கு ஒரு மணம் இருப்பதைப்போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குணமும் இருக்கிறது.என்றாவது இதையெல்லாம் யோசித்திருப்போமா? ஆனால், எல்லாவற்றையும் சொல்வதற்கு ஊர் துடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் ஒரு நாள் என்னுடைய சொந்த ஊரான கோவில்பட்டியிலுள்ளகதிரேசன் கோவில்மலையில் அந்திசாயும் பொழுதில் உட்கார்ந்திருந்தேன். சூரியனின் கடைசிக் கிரணம் அடிவானத்துக்குள் மறைந்து கொண்டிருப்பது தெரிகிறது. திடீரென ஒரு காற்று தரையிலிருந்துமலையை நோக்கி எழும்பி வருகிறது. கரிசல் வெளியின் விருவுகள், பகலில் வெயிலைத் தின்றுமுடித்து, பின் விட்ட ஏப்பம்தான் அது. காற்று, உடலெங்கும் வீசியடங்கியதும் பேரமைதிவந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டது.
எனக்கெதிரே கவிந்து வரும் இருளில், நகரம் ஒவ்வொரு கண்ணாய் இமைமூடி, திறந்தும் விழித்தும் பார்க்கிறது. எங்கும் நிசப்தம் தன் போர்வையை விரித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ கேட்கும் ஒரு பாடலோ, தேசிய நெடுஞ்சாலையில் விரைந்துசெல்லும் ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தமோ நிசப்தப் போர்வையின் ஓரங்களை உலைத்துக் கொண்டிருக்க,மனம் சலனமற்றிருந்தது.
அப்போதுதான் அந்த முணுமுணுப்பு கேட்டது. மெல்ல அங்கமிங்கும்திரும்பிப் பார்த்தேன். எந்த அரவமும் இல்லை. சில நொடிகள் அமைதி.மறுபடியும் அதே முணுமுணுப்பு.இப்போது இன்னும் தெளிவாய் பேசத் துடித்துக் கொண்டேயிருக்கிற என் ஊரின் குரல்.
‘‘இரவில் மட்டும் எப்படி நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய்?’’ எனக்குள்ளாக
அதனிடம் கேட்கிறேன்.
‘‘இரவில்தான் நான் பிறக்கிறேன். இரவில்தான் நான் வளர்கிறேன்..இரவில்தான் நான் பருவமடைகிறேன்.. இரவில்தான் நான் என் காயங்களை, வலியை, வேதனையை ஆற்றிக்கொள்கிறேன். என் வரலாற்றை திரும்பிப் பார்க்கிறேன். என் மக்களோடு ஆத்மார்த்தமாக உறவுகொள்கிறேன். இரவுதான் உயிர்களின் சூட்சுமம் பொதிந்த ரகசியவெளி...’’
நான் எதுவும் பேசவில்லை. அதன் குரலில், வெக்கையினால் ஏற்பட்டகமறல் குறைந்து, ஈரம் கூடியிருந்தது. அப்படியே அது எனக்குள்ளாக இறங்க, இப்போது நான் பாறையாகிவிட்டிருந்தேன். நான் கதிரேசன் மலையாகிவிட்டேன். நான் என் நகரமாகிவிட்டேன்.என் குரலே மாறிவிட்டது. என் உடல், என் ஊரின் மீது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில், மதுரையிலிருந்துதெற்கு நோக்கி போடப்பட்ட மண்சாலை, கோவில்பட்டி என்ற பெயரறியா கிராமத்தை ஊடறுத்துச்சென்றது. அன்றிலிருந்து வளரத் தொடங்கிய ஊர், இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.அருகிலிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எட்டையபுரம், கயத்தாறு, கங்கைகொண்டான்,கடம்பூர், இளையரசனேந்தல் போன்ற ஊர்களைத் தாண்டி வளரத் தொடங்கியது.
பிரிட்டிஷாரின் தண்டவாளங்கள், மேலும் முக்கியத்துவம் பெற வைத்தன.பருத்தி அமோகமாக விளையும் மானாவாரி விவசாயம் என்பதால், லாயல் மில்லும் லட்சுமி மில்லும்வந்தன. பொய்த்த மழை, உழைப்பை மலிவாக்கியது. சிவகாசியிலிருந்து சாத்தூர் வழியாக தீப்பெட்டியாபீஸ்மெல்ல மெல்ல நடந்து வருகிறது. கிராமம் நகரெமென அரிதாரம் பூசிக்கொள்கிறது.
மகாகவி போகும்போதும் வரும்போதும் இந்த ஊரில்தான் ரயிலேறுகிறான்.இது, ஞானச்செருக்கின் சுவடுகள் படிந்த பூமி. தியாகத் திருவுருவாம் வ.உ.சி.கூட இங்கு அமைந்திருந்த முன்சீப் கோர்ட்டில் வக்கீல் தொழில் பார்த்தவர்தான். அவரது சுவாசம் இந்தஊரில் கலந்திருக்கிறது. இசைமேதை விளாத்திகுளம் சாமிகளும், நாதஸ்வர இசையின் மகத்தானகலைஞன் காருக்குறிச்சி அருணாசலமும் இங்கே வாழ்ந்து, இசையின் ஸ்வரங்களை காற்றில் கலக்கச்செய்துள்ளனர். திருவாதிரை இசைவிழா மூலம், எண்ணற்ற சங்கீத மேதைகள் கோவில்பட்டிக்கு வந்துபோயுள்ளனர். ஓவிய மேதை கொண்டைய ராஜு வாழ்ந்த பெருமையும் கோவில்பட்டிக்கு உண்டு. அவருடையசீடர்களான டி.எஸ்.சுப்பையாவும், ராமலிங்கமும் புகழ்பெற்றது இந்த நகரத்தில்தான்.
ஒன்றா, இரண்டா? பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களையும், சுதேசிசர்க்காருக்கு எதிரான போராட்டங்களையும்ம் வளர்த்தெடுத்த இந்நகரம், வெயிலோடு பிறந்து, வெயிலோடு வளர்ந்து போராடும் மக்களின் போராட்ட குணத்தோடு வளர்ந்து கொண்டேயிருந்தது.மின் உயர்வுக்கு எதிரான விவசாயிகளின் மாட்டுவண்டி போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்குறிஞ்சாக்குளம் கந்தசாமி நாயக்கர் தியாகியானார். கூப்பிட்ட குரலுக்கு நடந்தோ, சைக்கிளிலோவரும் மக்கள் தொண்டன் சோ. அழகர்சாமியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐந்து முறைசட்டமன்றத்துக்கு அனுப்பிய பெருமைமிகு நகரம் இந்நகரம்.
காலம் மாறுகிறது. புதிய தலைமுறைகளுடன், புதியனவும் வந்து சேர்ந்தன.தமிழ்ச் சிறுகதை மேதை கு.அழகிரிசாமி தமிழிலக்கியத்துக்கு பெருமை சேர்க்கிறார். கரிசல் இலக்கியப் பதாகை தாங்கி, கி.ராஜநாராயணன் புறப்படுகிறார். அவருக்குப் பின்னால் ஒரு பெரும்படையேகிளம்பிற்று. பூமணி, தேவதச்சன், கௌரிஷங்கர், தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், ஜோதிவிநாயகம்,சமயவேல், சொ.தர்மன், கோணங்கி, உதயசங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, ஓவியர்மாரீஸ், நடிகர் சார்லி என பெரும் கூட்டமே தமிழ் கலை இலக்கிய வெளியை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்.
இதன் விளைவு, நவீன ஓவியர் பிகாசோ கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறார்.தொடர்ந்து டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், கார்க்கியும், எமிலிஜோலாவும், நட்ஹாம்சனும், மாப்பசானும், செல்மாலாகர்லவ்வும், தாமஸ்மானும், பால்சாக்கும் நகரத்துத் தெருக்களில்டீ குடித்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டு திரிந்தனர். பாரீஸ் நகரத்து வீதிகளைப்போலகோவில்பட்டியெங்கும் கலையும், இலக்கியமும், காதலும் நிறைந்திருந்தது.
ஊர் என்பது கடைவீதிகளின் எண்ணிக்கையோ, சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கையோ, தெருக்களின் எண்ணிக்கையோ இல்லை. அதுவேறு. அதன் ஆன்மாவில் மண்ணின் சுவை,மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவுமுறைகள், இசை, கலை இலக்கியம், விளையாட்டு, வியாபாரம்என்று எல்லாம் கலந்திருக்கிறது. இப்படியாக நாம் வாழும் மண்ணின் குணம்தான் நமக்கும்இருக்கும்.பிரயாணத்தின்போது, சொந்த ஊரின் எல்லையைத் தாண்டுகிறபோது ஏற்படும்பிரிவாற்றாமையும், திரும்பி வரும்போது சொந்த ஊரின் எல்லை கண்களில் படும்போது ஏற்படும்மகிழ்ச்சியையும் சொற்களில் அடக்க முடியுமா?
பேச்சின் லயம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.நான் மீண்டும் ஒருமுறை என் இனிய ஊரான கோவில்பட்டியைப் பார்க்கிறேன். அதன் இதயத்துடிப்பைஉணர்கிறேன். என் மனம் விம்முகிறது. அதுவரை என்னைச் சூழ்ந்திருந்த இருளும் உறங்க ஆரம்பிக்கிறது.என் இரண்டு கைகளையும் விரித்து, மானசீகமாக என் ஊரை அணைத்துக் கொள்கிறேன். கையை விரித்துஅணைப்பது ஊரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். மெல்ல நகரத்தை நோக்கி காலடிஎடுத்து வைக்கிறேன்.
அதோ, கேட்கிறதா? உங்கள் ஊரின் முணுமுணுப்பு. காதுகளுக்கருகில்கேட்கும் கிசுகிசுப்பு, உங்கள் ஊரின் இதயத்துடிப்பு.