Tuesday 17 April 2012

கருகும் கனவுச் சிறகுகள்

எழுதப்படாத கரும்பலகையாய்

குழந்தைகள் மனசு

என்னிடம் இருக்கிறது.

சாக்பீஸ்

சில துகள்கள்

எழுத்துக்களாய்

அப்பிக்கொள்வதும்

சில துகள்கள்

ஒட்டாமல் உதிர்வதும்

நிகழ்ந்து கொண்டே இருக்கிறது

தினமும். - பழ. புகழேந்தி

விந்தையானது குழந்தைகளின் மன உலகம். ஆனால் நாம் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். புற உலகின் அத்தனை நிகழ்வுகளும் தன் பதிவுகளை குழந்தைகளின் மனஉலகில் சுவடுகளாய் பதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள் இந்தப் புறஉலகம் பற்றி, சமூகம்பற்றி ஆண்களைப்பற்றி, பெண்களைப்பற்றி, இயற்கையைப்பற்றி, பிற ஜீவராசிகளைப் பற்றி தன் மனதில் கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தக் கருதுகோள்களே பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவு நிலைகளைத் தீர்மானிக்கிறது.

தாய்,தந்தை,சகோதர சகோரரிகள்,வீடு,வெளியுலகம் என்று எல்லோரும் குழந்தையின் மனதை பாதிக்கின்றனர்.நல்லவிதமாகவும் மோசமான விதத்திலும் பாதிக்கின்றனர்.இந்த பாதிப்புகளை குழந்தைகள் ஏற்றுக்கொள்கின்றனர் அதே மாதிரி நல்ல விதமாகவும் மோசமான விதத்திலும்.எல்லா உயிரினங்களைப் போல குழந்தைகளும் தங்களது சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.தாங்கள் ஐம்புலன்களால் கண்டுணரும் புற உலக அனுபவங்களே உண்மை என்று நம்புகின்றனர்.உயிரியல் ரீதியான இயற்கை உணர்வுகளே அவர்களை வழிநடத்துகின்றன.

முதலில் தான் அனுபவித்த அனுபவங்களையே எதிரொலிக்கின்றனர். குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு ஒரு கையில் சிகரெட் புகையுடன் வலம் வரும் தந்தையிடம் இருந்தும், தன்னை அவமானப்படுத்தும் கீழ்த்தரமான சொற்களையே பேசும் தாயிடமிருந்தும், அடித்தும் கிள்ளியும் தன்னைத் துன்புறுத்தி மகிழும் சகோதர சகோதரரிகளிடமிருந்தும் குழந்தை பெறும் அனுபவங்கள் அதன் மனதில் தீராத காயங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக குழந்தைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளினால் குழந்தையின் மனம் கூம்பிவிடுகிறது. விளையாட்டின் மூலமாக உழைப்பின் காரணமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் குழந்தையின் சுதந்திரவெளி சிறைப்படுகிறது. அதன் உற்சாகம் குலைக்கப்படுகிறது. பெரியவர்கள் தாங்கள் விரும்புகின்ற வகையில் செயல்பட வைப்பதற்காக குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். செய்ததையே திரும்பத் திரும்ப சொல்லியதையே திரும்பத் திரும்ப செய்வதற்கும், சொல்வதற்கும் வலியுறுத்துகிறார்கள். புதிது புதிதாக அனுபவங்களைத் தேடுகிற குழந்தைகளின் தேடலை அவர்கள் மறைக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் தடைகளை மீறுகிற வலிமை இல்லாததினால் குழந்தைகள் உள்ளுக்குள் சுருங்கிவிடுகிறார்கள். இவற்றிலும் கூட பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் இடையே மிகுந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. வாங்கித்தரும் விளையாட்டு பொம்மைகளிலிருந்து உடை, அலங்காரம், அவர்களிடம் பேசும் மொழி, அவர்களை விளையாட அனுமதிக்கிற வெளி, கொடுக்கிற செல்லம், எல்லாவற்றிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் ஆண், பெண் குழந்தைகளின் மன உலகு பிஞ்சிளம் பருவத்திலேயே தகவமைப்படுகின்றன.வீட்டிலேயே பெற்றோர்களாலேயே இத்தகைய மாறுபாடுகளை, பாரபட்சத்தை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி மனித மனங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அதனாலேயே பெண்சிசுக்கொலை, பெண்கருக்கொலை இன்னமும் நமது சமூகத்தில் வேறு வேறு ரூபங்களில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

குழந்தைகளின் வாழ்நிலை வீடு மட்டுமில்லையே. ஒரு பத்து கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு செல்லக் காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது ஒரு நாள் ஒரு கணம் உற்று கவனித்திருப்போமா? அவர்களின் முகத்தில் தெரியும் நிராதரவான உணர்வை என்றாவது உணர்ந்திருப்போமா? அந்தக் குழந்தைகள் தங்களை அலட்சியம் செய்தபடி அங்குமிங்கும் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் மீதும் அந்த வாகனங்களின் மீது பயணிக்கும் பெரியவர்கள் மீதும் என்ன விதமான மரியாதை ஏற்படும்?

குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டு லாபவேட்கை கொண்ட இந்த சமூக அமைப்பின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகி வறுமையில் தவிக்கும் தன் குடும்பத்திற்காக சின்னச்சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கிற சிறுவர்கள், தாங்கள் அந்த வேலைகளைச் செய்யும் போது படுகிற அவமானங்களை எப்படி மறப்பார்கள்? இதற்குமேல் பள்ளியில் ஆசிரியர் என்ற வன்முறை செலுத்தும் அதிகாரி தன் இஷ்டம் போல் குழந்தைகளை அடிக்கவும், அவமானப்படுத்தவும், புறக்கணிக்கவும், வெளியேற்றவும் செய்கிற கொடுமைகளை எப்படி எதிர்கொள்வார்கள்? குழந்தைகள் அதிகாரமற்றவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெரியவர்களை அண்டியே வாழவேண்டியதிருக்கிறது. எனவே பெரியவர்களின் அதிகாரம் தங்களுக்கு உடல், மன ரீதியான துன்பங்களைத் தரமுடியும் என்பதையும், தன்னைவிட பலசாலியான அதனை தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் அந்த அதிகார மையத்தில் ஆண்தான் கட்டற்ற அதிகாரமுடையவனாக இருக்கிறான். குழந்தைகள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஆண்களைக்கண்டு அஞ்சுகிறார்கள். கொஞ்சமும் தயக்கமில்லாமல் தன்னைச்சார்ந்திருக்கிற தன்னைவிட பலவீனமான தன்னை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத குழந்தைகள் மீது எல்லா விதமான அதிகாரத்தையும் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக வீட்டில் ஒரு அப்பா, அம்மாவின் மீது குழந்தைகளின் மீது செலுத்துகிற அதிகாரத்தைக் கண்டு குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். மெல்ல மெல்ல இந்த உலகம் ஆண் மைய உலகம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆண் குழந்தைகள் இந்த அதிகாரத்தை பெண் குழந்தைகளோடு விளையாடும் போது போலி செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் வீட்டில் உள்ள பெண்களைப் பார்த்தும், புற உலக சம்பிரதாயங்களைப் பார்த்தும், மூடச் சடங்குகளைப் பார்த்தும், தாங்கள் வளர்க்கப்படும் விதத்தினாலும் தங்களது ஆற்றலை ஒடுக்கி ஆண் மைய அதிகாரத்திற்கு அடங்கி அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் பெண் குழந்தைகளின் ஆளுமை முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றன. பெண் குழந்தைகள் செப்புச்சாமான் வைத்து சமையல் விளையாட்டும், பார்லி பாப்பாச்சி பொம்மைகளை வைத்துக் குழந்தைகளைச் சீராட்டும் விளையாட்டும் விளையாடிக்கொண்டிருக்க ஆண் குழந்தைகளோ துப்பாக்கிகள், பீரங்கிகள், கார்கள், பைக்குகள், சூப்பர்மேன், °பைடர்மேன், கள்ளன், போலீ° என்று விளையாட்டிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். என்ன கொடுமை இது?

ஆனால் எந்த மாதிரியான மோசமான சூழ்நிலைகளிலும்,குழந்தைகள் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும்,அந்த சூழலுக்குள்ளேயே தன்னுடைய சின்னச் சின்ன மகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். அதை அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் அவர்களை பாதிக்காமல் இருப்பதில்லை. சூழலின் பாதிப்போடு வளர்ந்து வரும் குழந்தைகள் கோழைகளாக, எதையும் கேள்வி கேட்காமல், மறுத்துப் பேசாமல் ஏற்றுக்கொள்கிறவர்களாக தங்கள் ஆளுமைத்திறனை ஒடுக்கிக் கொள்பவர்களாக சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதும் விரக்தியும், கசப்புணர்வும் கொண்டவர்களாக பழிவாங்கும் மனோபாவம் கொண்டவர்களாக குரூர புத்தியுடையவர்களாக, கலகக்காரர்களாக சமூக விரோதிகளாக மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை நாம் அச்சத்துடன் நினைத்துப் பார்த்தோமானால், குழந்தைகளைக் குறித்து சற்றேனும் யோசிப்போம்.....

1 comment:

  1. உண்மைதான் குழந்தைகளை அவர்களாக நாம் வளரவிடுவதில்லை. நம் எண்ணப்படியே ஆட்டுவிக்கிறோம்.

    ReplyDelete