Saturday, 21 April 2012

வெங்காச்சி சொல்லியது

download  

என்னுடைய பால்ய காலத்தில், திருநெல்வேலி என் கனவுப் பிரதேசமாகவே இருந்தது. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சுன்னா, நானும் என் தம்பி கணேசனும் அம்மாவை அரித்தெடுக்க ஆரம்பித்து விடுவோம். திருநெல்வேலியில் வெங்காச்சியும், சாமி தாத்தாவும் இருந்தார்கள். கோவில்பட்டி லட்சுமி மில்லில் வேலை பார்த்த அப்பாவின் சாப்பாட்டுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு அம்மா கிளம்புவாள். காய்ந்த கரிசல் ஊரான கோவில்பட்டியில், தண்ணீர் எடுத்தே வாடிப்போன எங்க அம்மாவின் முகத்திலும் அபூர்வமான அழகு மிளிரும். கும்மரிச்சம் போட்டுக்கொண்டு, பைகளைத் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போய், திருநெல்வேலி பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம்.

அப்போது லயன் கம்பெனி பஸ்ஸும், எம்.ஆர்.கோபாலன் பஸ்ஸும் மாறி மாறி ஷண்டிங் அடிக்கும். பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி உட்கார்ந்ததுமே, திருநெல்வேலி போய்விட்ட உணர்வு வந்துவிடும். கயத்தாறு தாண்டியதுமே நெல்லைச் சீமையின் குளிர்ந்த காற்று தாலாட்டத் தொடங்கிவிடும். தம்பி கணேசன், அந்தக் காற்று பட்டதுமே அப்படியே கிறங்கி அம்மாவின் மடியில் படுத்து விடுவான். தாழையூத்து தாண்டியதும் அம்மா அவனை எழுப்பத் தொடங்குவாள்.

‘‘ஏ... மூதி.. எந்திரில.. பஸ்ஸில ஏர்ற வரைக்கும் என்ன குதியாட்டம் போட்ட. இப்ப உறங்கறதப்பாரு. ஏல ஆச்சி ஊரு வந்துட்டல்ல.. எந்தி...’’

எனக்கு ஆச்சரியமாய் இருக்கும். அம்மா கோவில்பட்டியில் இருக்கும்வரை இப்படிப் பேசிப் பார்த்ததேயில்லை. பாஷையே மாறிவிட்டதே. குரலில் ஒரு ஈரமும், அன்பும் எப்படி பிரவகிக்கிறது? நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பைகளைத் தூக்கிக்கொண்டு நானும் அம்மாவும் நடப்போம். பின்னால், ஓலைக்கொட்டானில் கட்டிய கருப்பட்டி மிட்டாயையும், காரச்சேவையும் கணேசன் தூக்கிக்கொண்டு வருவான். பெரிய மருத மரங்களும், அதன் நிழலும் அடர்ந்த அந்தச் சாலைகள் எங்களை வரவேற்கக் காத்திருக்கும். மீனாட்சிபுரம் போகும் வழியிலுள்ள பெருமாள்கோயில் தெருவில்தான் தாத்தா, வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். ‘வ.சீனிவாசய்யர், அட்வகேட்’ என்ற கருப்புப் பலகை தொங்கும் இரும்பு அளிக்கு ஓரத்தில், மேலே ஏறிச் செல்லும் மரப்படியில், நான்தான் முதலில் ஏறிச் செல்வேன்.

எழுத்து மேசை மீது குனிந்து, கேஸ் கட்டுகளை விரித்து, குண்டான மை பேனாவினால் எழுதிக் கொண்டிருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்ப்பார்.

‘‘ஏ... அய்யா... வா.. வா.. அம்மை வந்திருக்காளா...’’ என்று கேட்பார். நான் வாயெல்லாம் இளித்துக்கொண்டு தலையாட்டுவேன். எனக்குப் பின்னால் ஓலைக்கொட்டானை கையில் பிடித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கா என்று படியேறி வருவான் கணேசன். அவன் வந்து சேருவதற்குள், தாத்தா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, கீழே இறங்க ஆயத்தமாகி விடுவார். கணேசனை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவார். தாத்தாவைப் பார்த்ததும், அம்மா இரண்டு கைகளையும் கூப்பி, ‘‘சேவிக்கிறேன்ப்பா...’’ என்று சொல்லுவாள்.

பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்பு, தாத்தா நடக்கத் தொடங்குவார். நான் ஒருபக்கம் தாத்தாவின் பெரிய விரலைப் பிடித்துக்கொள்வேன். இன்னொரு புறம் கணேசன் பிடித்துக்கொள்வான். தாத்தாவின் இரண்டு கை விரல்களிலும் கல் மோதிரம் இரண்டும், நெளிவு ஒன்றும் கிடக்கும். தெரு முக்கிலிருந்து நாயுடு கடையில் எங்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். பின்னர், பெருமாள்கோயில் அருகிலேயே நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டியைக் கூப்பிடுவார்.

எங்களை அதில் ஏற்றிவிட்டு அம்மாவிடம், ‘‘ரெண்டு கேஸ் கட்டு கிடக்கு.. முடிச்சிட்டு சாமிகிட்டே சொல்லிட்டு வாரேன்...’’ என்று சொல்லிவிட்டுப் போவார். நாங்கள் தாத்தா எங்களிடம்தான் சொல்வதாக நினைத்து, மிட்டாய் எச்சில் வழிய தலையாட்டுவோம்.

ஓங்கு தாங்கான உருவத்துடன், கூர்ந்த நாசியும், மேடேறிய நெற்றியும், தங்க பட்டன் மாட்டிய சட்டையும், அதன் மீது பட்டுச்சரிகை அங்கவஸ்திரமும் அணிந்து, தாத்தா கம்பீரமாய் இருப்பார். எங்களுக்குத் தாத்தாவைப் பார்க்கப் பார்க்கப் பெருமையாக இருக்கும். அம்மா எங்களுடன் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போய்விடுவாள். அப்புறம் லீவு முடிகிற வரைக்கும் எங்களைப் பிடிக்க முடியாது. அங்கே என் சேக்காளிகளான தனபால், ராதா, அம்பலவாணன், உலகநாதன், காந்திமதிநாதன் என்று எல்லோரும் எப்போதும் ஆற்றிலேயேதான் கிடப்போம்.

தண்ணீரே பார்த்திராத என்னுடைய ஊரான கோவில்பட்டியிலிருந்து, தாமிரபரணி தண்ணீருக்காகவே வாழ்கிற திருநெல்வேலிக்குப் போய் சும்மா இருக்க முடியுமா? ஆச்சி என்ன சத்தம் போட்டாலும் கேட்பதில்லை. காலை, மதியம், மாலை என்று முப்பொழுதும் ஆற்றுக்குள் மிதந்து கொண்டேயிருப்போம். முழங்கால் ஆழத்தில் நான் முங்குநீச்சல் போட்டால், என் தம்பி கணேசன் கணுக்கால் ஆழத்தில் முங்குநீச்சல் பழகுவான். முதுகுபூரா நனையாமலே குளித்து முடிப்பான். கண்கள் சிவக்கச் சிவக்க நாங்கள் வீட்டுக்கு வருவோம்.

ஆச்சி எங்களை செல்லமாக,

‘‘எல.. சளிப்பிடிச்சி ஜொரம் வந்துச்சின்னா... ரெண்டு பேரையும் கோவில்பட்டி பஸ் ஏத்தி விட்ருவேன். கேட்டியா? ஏ சின்ன முடிவான், உன்னயத்தான். சிலுப்பட்டத்தப்பாரு...’’

வைவாள்.

எங்களுக்கு வெங்காச்சியைப் பிடிக்காது. காரணம் வேறொன்றுமில்லை. தாத்தா வாங்கிட்டு வரும் தின்பண்டங்களை வாங்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தருவாள். அடுக்களையில் எங்களுக்கு எட்டாத உயரத்தில் கண்ணாடி பாட்டிலில் மிக்சர், ஓமப்பொடி, இனிப்புச்சேவு என்று போட்டு வைத்திருப்பாள். காலையிலும் சாயந்திரமும் அவள் தருகிற கொஞ்சூண்டு தின்பண்டம், எங்கள் யானைப்பசிக்கு காங்காது. அதனால், ஆச்சியிடம் ஒரு விலகல் இருந்தது. அதோடு தாத்தாவுக்குப் பொருத்தமில்லாத கட்டை குட்டையான உருவத்தோடும், திருநெல்வேலி பிராண்ட் எத்துப்பற்களோடும் கருப்பாகவும் இருந்தாள் வெங்காச்சி.

டபடபவென ஐஸ்காரர் ஐஸ்பெட்டி மூடியைத் தட்டிக் கொண்டு வருவார். ராத்திரியில் சவ்வு மிட்டாய்காரர் பொம்மை வைத்த கம்பைத் தூக்கிக்கொண்டு, அதில் மலைப்பாம்பென சுற்றியிருக்கும் மூன்று கலரில் இனித்துக் கிடக்கும் சவ்வு மிட்டாயை வாட்சு, தேளு, பாம்பு, பொம்மை என்று காசுக்கு ஏத்த மாதிரி செஞ்சு கொடுப்பார். எல்லாவற்றையும்விட, கடைசியில் ஒரு இணுக்கு கன்னத்தில் ஒட்டிவிடுவாரே! அதில்தான் அம்புட்டுப் பேருக்கும் பிரியம். தாத்தா இருந்தால் காசு கொடுப்பார். ஆச்சியிடம் அவ்வளவு ஈசியா வாங்க முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ரெண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு பைசா கொடுப்பாள். அன்று எனக்கும் கணேசனுக்கும் சண்டைதான்.

வீட்டுக்கு எதிரே, ஒரு பெரிய பூவரசமரம் இருந்தது. என் வயசுப் பையன்கள், அந்தப் பூவரசு இலையைச் சுருட்டி குழலாக்கி ‘பீ... பீ...’ என்று ஊதிக்கொண்டு திரிய, நான் காற்றும் எச்சிலும் வடிய இலையைக் கசக்கி எறிவேன். வாரம் ஒருமுறை தாத்தாவுக்கு சவரம் செய்ய நாவிதர் வருவார். அவர் வந்து போகும்வரை, நாங்கள் அவரைச் சுற்றியே இருப்போம். சிரைக்கிற கத்தியை சாணைக்கல்லில் அவர் தீட்டுவதும், அவர் வைத்திருக்கும் குளிர்ந்த ஸ்படிகக் கல்லும், நுரை வருவதற்கு அவர் போடும் சோப்பும், எங்களுக்கு தீராத ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

அதைவிட ஆச்சரியமாய், எங்களுடைய தாத்தா உடம்பெங்கும் சவரம் செய்வார். வழுவழுவென்று சிவந்த பழமாகி நிற்பார். எப்போதாவது அந்த நாவிதரிடம் நாங்களும் மாட்டிக்கொண்டு, தலையைக் குனியவைத்து மெஷின் போடுகிறபோது, அழுது பொங்கிவிடுவோம். அழுதாலும் விட்டால்தானே? ஆனால், நாவிதர் வந்துவிட்டால் ஆச்சிக்குப் பிடிக்காது. முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்ன முணுமுணுக்கிறாள் என்று எங்களுக்குப் புரியாது.

ஆச்சி வீட்டு திருணையில், படர்கொடி போட்டிருப்பார்கள். ஆடிமாசம் புடலை, அவரை, பாகற்காய் என்று கொடி படர்ந்து திருணை குளுகுளுவென்று இருக்கும். மேலே தட்டட்டியில் பூசணிக்கொடி போட்டிருப்பார்கள். எங்களுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். ஒரு புதிய உலகத்துக்குள் வந்துவிட்ட மாதிரி, ஆச்சரியங்கள் மாளவே மாளாது. அந்தத் திருணையில்தான் நாங்கள் படுத்திருப்போம். ஆச்சியும் எங்களோடு படுத்திருப்பாள். ஒருநாள் இரவு ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு எழுந்தபோது, விசும்பல் சத்தம் கேட்டது.

நான் பயந்து போய்,

‘‘ஆச்சி...’’ என்றேன்.

விசும்பல் நின்று வெங்காச்சி,

‘‘என்னல.. பேசாம படுல..’’

என்றாள்.

மறுநாள் காலை நாங்கள் எழுந்திரிக்கும்போது, வீட்டுக்கு முன்னால் மாட்டுவண்டி நின்று கொண்டிருந்தது. தாத்தா குளித்து முடித்து, வெளிர் நீலச் சட்டையின் மீது அங்கவஸ்திரம் தரித்து, கைகளில் மோதிரங்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். ஆச்சியும் எழுந்து காப்பி போட்டு, வட்ட கப்பில் ஆற்றிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் தாத்தா,

‘‘போய்ட்டு வாரேன்.. பயகள் பத்திரம்..’’

என்று சொல்லிவிட்டு மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

வண்டி நகண்டதுதான். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த வெங்காச்சியின் முகம் மாறிவிட்டது. நான் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டே,

‘‘ஆச்சி.. தாத்தா எங்க போறாங்க...’’ என்று கேட்டேன்.

ஒரு கணம் என்னைப் பார்த்த வெங்காச்சி சொன்னாள்,

‘‘எஞ்சக்களத்தி வீட்டுக்கு...’’

அப்போது எனக்குப் புரியவில்லை.

1 comment:

  1. உங்கள் திருநெல்வேலி அனுபவம் படிக்க படிக்க சுவாரஷ்யம். இளமைக்கால நினைவுகள், இனிப்பு மிட்டாய்கள், வட்ட கப் அருமையான நினைவுகள். உங்களுடன் நானும் பயணித்தேன்.

    ReplyDelete