Friday 6 April 2012

அதிசயப்பூ

play


”டேய்…டேய்..அதைக் கொடுத்துர்றா..கிழிச்சிராதே..நான் கஷ்டப்பட்டு செய்ஞ்சது..” என்று கத்திக் கொண்டே செல்வாவின் பின்னால் ஓடினாள், அவனது அக்காசந்திரா. செல்வா சிரித்துக் கொண்டே அவளுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றினான். கடைசியில்தெருவுக்கு ஓடி கையில் வைத்திருந்த அந்தக் காகிதப் பொம்மையைக் கசக்கி எறிந்தான். சந்திராவுக்கு அழுகையே வந்து விட்டது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. ஆனால் பேசாமல் அப்படியே வீட்டுக்குள்திரும்பி விட்டாள்.

அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்தாள். அம்மாவிடம் சொன்னால்,தம்பிக்கு ரெண்டு அடி கிடைக்கும். அவன் அழுது புரளுவான். அவ்வளவு தான். தினசரி நாலைந்துதடவையாவது அம்மாவிடமும், அப்பாவிடமும், அடி வாங்கி அழுகிறான். ஆனால் அவனுடைய முரட்டுத் தனமும், எதையும் உடைக்கிற, கிழிக்கிற குணம் மட்டும் மாறவில்லை.

ரெண்டாம் வகுப்பில் படிக்கிற செல்வா தூங்குகிற நேரம் மட்டும்தான் அமைதியாக இருந்தான். மற்ற நேரம் பூராவும் ஒரே ஓட்டமும் சாட்டமும் தான். காலுக்குக்கீழே எது இருந்தாலும் ஒரு எத்து. கையில் எது கிடைத்தாலும் கிழித்து எறிவது, பள்ளிக்கூடத்திலும்பையன்களுடன் சண்டை. டீச்சரிடமும் அடி வாங்குவான். வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை என்றால்அக்காவிடம் வம்பு இழுப்பான். ஆறாம் வகுப்பில் படிக்கும் சந்திராவுக்கு ரெம்பப் பொறுமை.எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அடக்கிக் கொள்வாள். சமயத்தில் தம்பி செய்கிற குறும்புகளும்கேட்கிற கேள்விகளும் ரசிக்கும்படி இருக்கும். அவள் அதை அம்மாவிடமும், அப்பாவிடமும்,சிநேகிதிகளிடமும்சொல்லிச்சொல்லிச் சிரிப்பாள். ஆனால் எதையும் நாசமாக்குகிற குணம் மட்டும் தான் பிடிக்கவில்லை.

அம்மாவும் அப்பாவும் அவனை அடித்து உதைத்தே சரி செய்து விடலாம் என்று நினைத்தார்கள். அப்படிப் பார்த்தால் அவன் வாங்கிய அடி உதைகளுக்கு என்றோ திருந்தியிருக்க வேண்டும்.சந்திரா யோசித்துக் கொண்டே இருந்தாள்.

கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு தம்பி செல்வா தூங்கிஎழுந்து நல்ல சுமுகமான மன நிலையில் இருக்கும்போது, அவனிடம், “டேய்.. நான் ஒரு அதிசயப்பூ பூக்கிற செடியோட விதை வச்சிருக்கேன்..அந்தச்செடியை யார் வளக்கிறாங்களோ அவங்களுக்கு அந்தப் பூ என்ன கேட்டாலும் கொடுக்குமாம்..”
“எல்லாம் தருமா/”
“ஆமா”
“சாக்லேட்”
“ம்”
“பெப்சி..கோகோ கோலா..தருமா?”
“ம்..தரும்..”

செல்வாவின் கண்கள் அகல விரிந்தன.அவ்ன் அக்காவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.கண்முன்னே சாக்லேட் குவியலும், பெப்சி,கோகோகோலா, பாட்டில்களும் தோண்றியதோஎன்னவோ..
“யெக்கா..யெக்கா.. எனக்கு அந்த விதையைத் தாயேன்..ப்ளீஸ்..”
“நான் எனக்குல்ல வாங்கினேன்..”
“பிளீஸ்க்கா..எனக்கு தாக்கா..உனக்கு வேற வாங்கிக்கயேன்..”
“ சரி அப்படின்னா இதுக்கு தெனமும் காலையில் எந்திரிச்சி நீ தான்தண்ணீ ஊத்தணும்.. யார் ஊத்தறாங்களோ.. அவங்க சொன்னபடி தான் அந்தப்பூ கேக்கும்..”  
“ சரிக்கா நானே தண்ணி ஊத்தறேன்..”
“ பூ வர்ற வரைக்கும் பொறுமையா இருக்கணுமே.. நீ அதுக்குள்ளே..எல்லாத்தையும் பிச்சுருவே..வேண்டாம்பா.”
“ இல்லக்கா…பிய்க்க மாட்டன்க்கா.. பொறுமையா இருப்பேன்..”
“ சரி வா..அப்படின்னா..இப்பவே அந்த விதையை ஊணி வைப்போம்..”
“ எங்கே..விதையைக் காட்டு பாப்போம்..”

அவள் ஜாமிட்ரி பாக்ஸிலிருந்து அந்த இறகு போன்ற காய்ந்து சருகானவிதையை எடுத்துக்காண்பித்தாள். செல்வா அதை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டே, “ யெக்கா இது தான் அந்த விதையா?” என்று கேட்டான். அவள் தலையாட்டினாள்.
“ யெக்கா..இப்பவே அதை ஊணிருவமா?”
“ சரி..முதல்ல அந்தப் பூந்தொட்டியில மண்ணை ரொப்பணுமே”

“ நான் போய் எடுத்துட்டு வாரேன்..”என்று சொல்லி விட்டு வீட்டில் இருந்த பழைய சாக்குப்பையை எடுத்துக்கொண்டு செல்வா பக்கத்திலிருந்த நந்தவனத்திற்கு ஓடினான். சிறிது நேரத்தில் தோட்டத்துமண்ணைத்தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு வந்தான்.

செல்வா கொண்டு வந்த மண்ணை சந்திரா பூந்தொட்டியில் கொட்டி நிரப்பினாள்.செல்வா வீட்டிற்குள் போய் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்தான். சமையல் செய்து கொண்டிருந்த அம்மா,“ என்ன பண்ணுதீக..ரெண்டுபேரும்..ஞாயிற்றுக்கிழமைன்னா போதுமே..ஏட்டிசந்திரா வந்து வீட்டு வேலைகள் ஏதாச்சும் செய்யக்கூடாதா..” என்று கத்தினாள்.

காம்பவுண்டில் அவர்களுடைய வீட்டிற்கு முன்னால் இருந்த காலி இடத்தில்தொட்டியை வைத்து அதில் தோட்டத்து மண்ணைக் கொட்டி நிரப்பினார்கள். பின்பு செல்வாவிடம்அந்த விதையைக் கொடுத்தாள்.

“ டேய்.. ரெம்ப ஆழமா ஊணிராதே..”

செல்வா விதையை அக்கா சொன்னமாதிரி தொட்டி மண்ணில் ஊன்றி மண்ணைப்போட்டு மூடினான். ஏதோ பெரிய காரியத்தைச் செய்த பெருமிதத்துடன் செல்வா இருந்தான்.

“டேய்..செல்வா..மறந்துராதே..தினசரி..தண்ணி ஊத்தணும்..இல்லன்னா.காய்ஞ்சிரும்..அதுவளர வளர உங்கூட பேசக்கூடச் செய்யும்..”
“ என்ன பேசுமா?”

மனசு முழுவதும் அற்புத உணர்வோடு அன்று முழுவதும் இருந்தான்,செல்வா.அன்று இரவு சும்மா சும்மா அக்காவிடம், “யெக்கா நாளைக்கு செடி வந்துருமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். விடிந்து எழுந்ததும் உடனே ஓடிப்போய் பூந்தொட்டியின் அருகில் உட்கார்ந்து உற்றுப் பார்த்தான். ஈரமண் மேடும் பள்ளமுமாகதண்ணீர் தங்கிய தடங்களோடு இருந்தது. எங்காவது விதையில் முளைத்திருக்கிறதா என்று கூர்ந்துகவனித்துக் கொண்டே இருந்தான்.விரலை விட்டு நோண்டிப் பார்க்கலாமா என்று யோசித்தான்.உடனேஅக்கா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“பொறுமையா  இரு..”

பரபரக்கும் கைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டுக் கட்டுப் படுத்திக்கொண்டுபள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான். அன்று முழுவதும் அதே சிந்தனையில் இருந்தான் பள்ளிக்கூடம் விட்டுவந்ததும் பூந்தொட்டிக்கு அருகில் போய் நின்று பார்த்தான். எந்த மாற்றமும் தெரிய வில்லை.உடனே விளையாடப் போய்விட்டான். விளையாட்டுக்கு நடுவில் ஓடி வந்து பார்த்து விட்டுப்போனான். ராத்திரி படுக்கப் போகும்போது ஒருதடவை போய் பார்த்து விட்டு வந்தான்.

இப்படியே நான்கு நாட்கள் போய்விட்டன. செல்வாவுக்கு நம்பிக்கைகுறைந்து கொண்டே வந்தது. இன்னும் ஒரு பார்க்கலாம் இல்லைன்னா அதை தோண்டி எடுத்து பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அன்று காலை தண்ணீர் வாளியோடு போனபோது மண்ணை முட்டிக் கொண்டு வெள்ளையாய் செடி முளை விட்டிருந்தது. அவனுக்கு சந்தோசமுன்னா சந்தோசம். ஒரு குதிகுதித்துக் கொண்டு அக்காவிடம் ஓடினான்.

“யெக்கா.. யெக்கா.. செடி முளைச்சிருச்சி..செடி முளைச்சிருச்சி..”என்று கத்தினான். ஓடிப் போய் அம்மாவிடம் சொன்னான். அப்பாவிடம்சொன்னான். பக்கத்து வீட்டு அபி, சுந்தரி, பாரதி, எல்லோரிடமும் சொன்னான். எல்லோரும்வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

“ எவ்வளவு அழகா இருக்கு.” என்று எல்லோரும் சொன்னார்கள். அதைக் கேட்ட செல்வாவுக்குப் பெருமையாகஇருந்தது.

“ நாந்தான் தண்ணி ஊத்தி வளத்தேன்.. அது எஞ்செடி..”என்று முகம் மலரச் சொன்னான். அன்றிலிருந்து அவனுடைய நடவடிக்கைகள்மாறி விட்டன.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் நிதானமும்பொறுப்பும் கூடிக் கொண்டே வந்தன. இப்போதும் ஓடினான், விளையாடினான், சிரித்தான், படித்தான், சந்திராவுடன் சண்டை போட்டான், பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களோடு மல்லுக் கட்டினான்.ஆனால்எல்லாவற்றிலும் முன்பிருந்த முரட்டுத்தனம் இல்லை. எல்லாவற்றையும் நாசமாக்கும் எண்ணம்இல்லை. துன்புறுத்தும் குணம் இல்லை.

அந்தச் செடியில் ஒவ்வொரு இலையாகத் துளிர்விட, துளிர்விட, செல்வாவுக்குமகிழ்ச்சி பொங்கியது. சந்திராவுக்கும் சந்தோசம். தம்பியின் குணம் மாறிக்கொண்டே இருப்பதை அவள் கவனித்தாள். ஒரு நாள் அந்தச் செடி ஒரு மொட்டு விட்டிருந்தது. இப்போது செல்வா பெரும்பகுதி நேரத்தை அந்தச் செடிக்கு அருகிலேயே கழித்தான். மானசீகமாகப் பேசினான். அதன் இலைகளைத் தடவிக் கொடுத்தான். அந்த மொட்டு மலர்கிற நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அதிசயப்பூ எப்படிப் பூக்கும்? என்ன நிறத்தில் இருக்கும்? அதன் இதழ்கள் எப்படி இருக்கும்? என்றுகற்பனை செய்து கொண்டிருந்தான். சாக்லேட் பற்றியோ கோகோகோலா பற்றியோ அவனுக்கு இப்போது ஞாபகம் இல்லை.

அன்று சாயங்காலம் பார்த்தபோது மொட்டின் இதழ்கள் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தமாதிரி இருந்தது. படுக்க மனமில்லாமலேயே அன்று இரவு படுக்கப் போனான்.

காலையில் எழுந்தவுடன் ஓடிப்போய் பார்த்தான். அங்கே அந்தச் செடியில்அதிசயப் பூ மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. நீல நிறத்தில் இதழ்கள் பளபளக்க விரிந்திருந்தது.செடியே பூத்துக் குலுங்குவது போல இருந்தது. அவன் ஒரு கணம் தன் கண்களையே நம்பமுடியாமல்திகைத்து நின்றான்.

பூ பூத்து விட்டது! அவன் வளர்த்த செடியில் பூ பூத்து விட்டது.அதிசயப் பூ பூத்து விட்டது. அவனுடைய பூ. ஆமாம்.அது அவனுடைய பூ.

அவன் அந்தப் பூவைப் போல பூவாய் மலர்ந்து சிரித்தான். அவனுடையசிரிப்பில் சந்திராவும், அப்பாவும், அம்மாவும், சேர்ந்து கொண்டார்கள்.

1 comment:

  1. மிகவும் யதார்த்தமான அதே சமயம் அருமையான கதை தோழர். சமீபத்தில் பூத்திருக்கும் உங்கள் வலைப்பூ அதற்குள் ஒரு தோட்டமாகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எல்லாவற்றையும் படித்துத் தீர்த்து விட வேண்டுமென்கிற ஆர்வம் மேலிட்டாலும் இடைவெளி விட்டு படிப்பதென்பதே சாத்தியமானதொன்று. ஒரு உண்மை சொல்வதென்றால் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவனாகவே இருக்கிறேன். மூக்கின் நாசித்துளைகளுக்கும் சுவாசத்திற்கும் உள்ள உறவு முறை தான் உங்களுக்கும் எழுத்துக்களுக்கும் என்று நினைக்கிறேன். வெகு நாட்கள் கழித்து உங்களது வலைத்தளத்தில் கால் பதித்த இந்த கணத்தை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

    ReplyDelete