Tuesday 24 April 2012

மறக்க முடியாத மாணிக்கக் கங்கணம்

kuprin

கோவில்பட்டிக்கு அப்போது வசந்தகாலம். தமிழ்நாட்டில் நிலவி வந்த அத்தனை இலக்கிய போக்குகளும் முட்டி மோதிக் கொண்டிருந்த அபூர்வ காலம். தினமும் இலக்கிய விவாதங்களும் தத்துவப் போர்களும் நிகழ்ந்து கொண்டிருந்த பரபரப்பான காலம். புதிய புதிய அனுபவங்கள் நெருக்கியடித்துக் கொண்டு மனசுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. வாழ்க்கையை அதற்குப் பின் ஒரு போதும் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் உணர்ந்ததேயில்லை. 1983ம் ஆண்டில் ஜுன் மாதம் வழக்கம் போல நாங்கள் கூடும் டீக்கடையில் புதிதாக ஒருவர் ஜமாவில் சேர்ந்திருந்தார். ஆறடி உயரத்தில் பிடறி வரை தொங்கிய தலை முடியுடன் கண்ணாடிக்குப் பின்னால் பரபரத்த விழிகளுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடைவெளியில் அவர் திருநெல்வேலி திம்மராஜபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோதி விநாயகம் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவரிடம் பேச்சுக்கொடுக்காமல் அவரையே கவனித்துக் கொண்டிந்தேன். முதலில் அவ்வளவு சுவாரசியமானவராகத் தெரியவில்லை. மேலும் கோவில்பட்டி எழுத்தாளர்களுக்கேயுரிய ஒரு அலட்சியமும் இருந்தது. ஆனால் பின்வரும் நாட்களில் அவர் எனக்கு எவ்வளவு முக்கியமானவராக மாறப்போகிறார் என்று மட்டும் தெரிந்திருந்தால்...

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் ஆகிருதி தெரியத் தொடங்கியது. மூடுண்ட குறுகிய விவாதக்களன்களை உடைத்து இந்தப் பரந்த உலகஇலக்கியப் பரப்பின் பெருவெளியில் எங்களை நிறுத்தியவர் ஜோதிவிநாயகம். கலையின் படைப்பாக்க அழகியல் அனுபவங்களை உணர்த்தியவர். உலக இலக்கியங்களாக புகழ்பெற்ற நூல்களின் சாராம்சமான நுட்பங்களை விளக்கியவர். எந்தக் குறுகிய சிந்தனை யோட்டத்திற்குள்ளும் சிக்காமல் வாழ்வின், கலையின், தத்துவத்தின் அடிப்படை உண்மைகளைத் தேடி தொடர்ந்து விவாதம் செய்தவர். எண்பதுகளின் துவக்கத்திலேயே எங்களுக்கு கிராம்சியை அறிமுகப்படுத்தியவர். அவரது ஆலமரத்தோப்பும் தோப்பாகாக் காளான்களும் என்று கட்டுரை தீவிர விவாதங்களையும், புதிய வெளிச்சங்களையும் அளித்தது. தேடல் என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர். அவர் வேலை பார்த்தது விளாத்திகுளத்தில். ஆனால் மையங்கொண்டிருந்தது, கோவில்பட்டியில். அவருடைய நீண்ட கைகளின் அரவணைப்புக்குள் நானும் எழுத்தாளர் கோணங்கியும் மயங்கிக் கிடந்தோம். வேகவேகமாக கைகளையும் பிடறி மயிர் குலுங்க தலையையும் ஆட்டி அவர் பேசும்போது விரைவில் கைகலப்பு நிகழ்ந்து விடும் என்றே தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் தன் வாதத்தை தீவிரமாக முன்வைத்துப் பேசும் உறுதியின் வெளிப்பாடுகள் தான் அவை. படைப்பின் நுட்பங்களைக் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட ஜோதிவிநாயகம் இதுவரை பேசப்படாத எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படி அவர் செய்த பல எழுத்தாளர்களில் அவருக்கு மிகவும் பிடித்தவர் ருஷ்ய எழுத்தாளர் அலக்சாண்டர் குப்ரின். குப்ரின் எழுதிய மாணிக்கக்கங்கணம் என்ற ஒரு சிறுகதையே அவரை உலக இலக்கிய வரிசையில் சேர்த்துவிடும் என்பார். உண்மைதான்.

எளிய தந்தி கிளார்க்கான ஷெல்த்கோவ் பிரபுக்குல சிற்றரசி வேராவைக் காதலிக்கிறான். அவருடைய திருமணத்திற்கு முன்பிருந்தும் அவருடைய திருமணத்திற்குப் பின்பும் கூட. முதலில் அவனுடைய கடிதங்கள் தொந்தரவு செய்கின்றன. அதை வேரா நிறுத்துகிறாள். அவனுடைய உச்சக்கட்டமுட்டாள் தனமாக அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக மாணிக்கக் கங்கணத்தை அனுப்புகிறான். வேராவின் கணவனும், சகோதரனும் நேரில் சென்று அவனிடம் பேசுகிறார்கள். அவன் ஒருமுறை மட்டும் வேராவிடம் பேசிக் கொள்ளட்டுமா என்று அவள் கணவனிடம் அனுமதிகேட்டு விட்டு பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்கிறான். மறுநாள் தற்கொலை செய்துகொள்கிறான். அதுவரை அவனைப்பார்த்திராத வேரா முதல் முறையாக அவனது இறந்த உடலை வந்து பார்க்கிறாள். தன்னைக் கடந்து சென்று விட்ட மகத்தான காதலை உணர்கிறாள். ஷெல்த்கோவின் இறுதிவேண்டுகோளின் படி பீத்தோவனின் சானட் இரண்டு ஓபஸ் 2 லார்கோ அப்பாஸியனோட்டோவை பியானோவில் வாசிக்கச் சொல்லி ஷெல்த்கோவிடம் மன்னிப்பைக்கோருகிறாள்.

உண்மையில் இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது கூட கண்கள் கலங்குகின்றன. அலக்ஸாண்டர் குப்ரீனின் (1870 - 1938) அதிகமான படைப்புகள் தமிழில் வரைவில்லை.

பூ.சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள் 1 என்ற தொகுப்பில் உள்ள கதையே இது. ஜோதிவிநாயகம் சொன்னபிறகு எத்தனைமுறை இந்தக்கதையைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கும் போது நம் வாழ்வின் மகத்தான காதலின் தருணங்களை நம்மைக் கடந்து சென்ற காதலின் உன்னதங்களை நினைவு கொள்ள முடியும். வேரா உயிரற்ற ஷெல்த்கோவின் உடலைச் சந்திக்கிற பக்கங்கள் உலக இலக்கியத்தின் உன்னதமான பக்கங்கள். அலெக்சாண்டர் குப்ரின் எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள். பற்றிக் குலுக்க விரும்புகிறேன்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் இரவு நேரத்தில் பல மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். நானும் ஜோதிவிநாயகமும், கோணங்கியும் எங்கள் வாழ்வின் மிக அந்தரங்கமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் ஒரு பாடலை ஹம்மிங் செய்து கொண்டிருப்பார். அதுகூட அதிகம் பிரபலமடையாத ஒரு பாடல்தான் யாரந்த நிலவு ஏனிந்த கனவு மிக அபூர்வமான பொழுதுகளில் கரகரத்த குரலில் பாடவும் செய்வார் அப்போது இருளிலும் அவர் கண்கள் மின்னுவதையும் குரல் நடுங்குவதையும் உணர்ந்திருக்கிறேன்.

வாழ்வின் சூழலில் தூக்கியயறியப்பட்ட நான் வேலை கிடைத்து வடஆற்காடு மாவட்டத்தில் விழுந்தபிறகு அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்தது. 1996 ஆம் வருடம் ஜோதி விநாயகத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கிறார். திம்மராஜபுரம் வீட்டிற்கு நானும் நாறும்பூநாதனும் சென்றிருந்தோம். கட்டில் நீளம் போதாமல் வெளியே நீண்டு கொண்டிருந்த கால்களைத் தான் முதலில் நான் பார்த்தேன். ஒரு கணம் இதயம் நடுங்கியது. அடிவயிற்றில் பிசைவது போன்ற வலி. உள்ளே அந்த ஆஜானுபாவனான, தன் நீண்டகைகளை ஆட்டி, பிடறிமுடி குலுங்க பேசிக்கொண்டிருந்த கோவில்பட்டி எழுத்தாளர்களுக்குப் புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்திய, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக உருவாகிக் கொண்டிருந்த ஜோதி விநாயகம் மரணப்படுக்கையில் கிடந்தார். மரணத்தின் வாசனை வீடு முழுவதும். அவரருகில் அமர்ந்து அவர் கைகளைப்பற்றி ஆறுதல் சொன்னேன். அவை வெற்று வார்த்தைகள் என்று அவரும் உணர்ந்திருப்பார். எதுவும் பேசவில்லை. பொங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் அவசர அவசரமாக கைக்குட்டையை எடுத்து துடைந்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டேன். எங்கள் அன்புக்குரிய ஜோதி ! மரணத்தால் உங்களை வெல்ல முடியாது. கோவில்பட்டி தெருக்களில், நீங்கள் நடந்து சென்று பாதைகளில், நின்று குடித்த டீக்கடைகளில், அமர்ந்து விவாதித்த காந்திமைதானத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் ! ஜோதி ! உங்கள் இறுதிக்கணங்களில் பற்றிய கைகளின் ஸ்பரிசம் இன்னும் என் கைகளில் துடிக்கிறது. குளிர்ந்த அந்தஸ்பரிசம் அலக்ஸாண்டர் குப்ரினுடையதா, மகத்தான காதல் கதையான மாணிக்கக் கங்கணத்தின் நாயகனாக ஷெல்த்கோவினுடையதா இல்லை எங்கள் அன்புக்குரிய ஜோதியினுடையதா என்று குழம்பித் தவித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் தவிக்கின்றன உங்களைத் தேடி கண்களில் கண்ணீர் பொங்குகிறது.

1 comment:

  1. ஜோதி விநாயகங்கள் எப்பொழுதும் இறப்பதில்லை.நல்ல் நினைவுகூறல் தோழர்,

    ReplyDelete