சாதத் ஹசன் மண்ட்டோ
ஆங்கிலத்தில்- காலித் ஹசன்
தமிழில்- உதயசங்கர்
ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன.
ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்து செல்கின்றன. ஏதோ இசைக்கலைஞன் தன் வாத்தியத்தில் ஒரு அபஸ்வரத்தைத் தட்டியது போல. அது செப்டம்பர் மாதத்தின் கடைசி. வெப்பமாகவும் இல்லை. குளிர்ச்சியாகவும் இல்லை. அதைப் பார்க்கும்போது கோடைகாலமும் குளிர்காலமும் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமாதிரி இருந்தது. நீலவானத்தில் பஞ்சுமேகங்கள் நாள் முழுவதும் ஏரியின் மீது மிதக்கும்படகுகளைப் போல மிதந்து கொண்டிருந்தன.
படைவீரர்கள் முடிவில்லாத, எதுவுமே பெரிதாய் ஒன்றும் நிகழாத இந்த யுத்தத்தினால் களைப்புற்றிருந்தனர். அவர்களுடைய நிலைகளை தாக்கி வெல்ல முடியாது. அந்த இரண்டு குன்றுகளும்- அதில் தான் அவர்கள் இருந்தனர் – எதிர் எதிராக இருந்தன. இரண்டும் ஒரே விதமான உயரம். அதனால் யாருக்கும் சாதகமில்லை. கீழே பள்ளத்தாக்கில் வேகமாகச் செல்லும் ஒரு ஓடை கற்படுக்கையின் மீது பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது.
விமானப்படை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இரண்டு தரப்பினரிடமும் பெரிய துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பெரும் தீயை மூட்டுவார்கள். அந்தக் குன்றுகளில் எதிரொலித்து வரும் அவர்களின் குரலை ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.
இப்போது தான் கடைசிச் சுற்று தேநீர் முடிந்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது. வானம் தெளிந்து விட்டது. காற்றில் குளிர்ச்சி பரவியிருந்தது. கூரான, இனிய தேவதாரு மரக்காய்களின் மணம் வீசியது. படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உறங்கி விட்டனர். இரவுக் காவலரான ஜமேதார் ஹர்னாம்சிங் மட்டும் விழித்திருந்தார். இரண்டு மணியளவில் அவன் காவலை ஏற்றுக் கொள்ள காண்டாசிங்கை எழுப்பிவிட்டான். பிறகு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் போல அவன் கண்களிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. அவன் ஒரு பஞ்சாபிக் கிராமியப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.
“ ஒரு ஜோடி செருப்பு வாங்கி வா என் காதலா
நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு
வேண்டுமானால் நீ உன் எருமையை விற்றுவிடு
ஆனால் எனக்கு வாங்கி வா
நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு “
அந்தப் பாட்டு அவனை உணர்ச்சிவயப்படுத்தியது. உற்சாகத்தையும் தந்தது. அவன் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களையும் எழுப்பினான். பாண்டாசிங் அங்கிருந்த படைவீரர்களில் இளமையானவன். இனிமையான குரலையுடையவன். “ஹீர் ரஞ்சா” பஞ்சாபி துயரக்காதல் காவியத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பாட ஆரம்பித்தான். ஒரு ஆழ்ந்த சோகம் அவர்கள் மீது கவிந்தது. அந்தச் சாம்பல் நிறக்குன்றுகள் கூட அந்தப் பாடலின் துயரத்தில் மூழ்கியது போல இருந்தது.
இந்த மனநிலையை ஒரு நாயின் குரைப்பொலி தகர்த்தது. ஜமேதார் ஹர்னாம்சிங்,
” எங்கேருந்து இந்தப் பொட்டைநாய்க்குட்டி முளைச்சி வந்தது…”
என்று சொன்னான். அந்த நாய் மீண்டும் குரைத்தது. அதன் சத்தம் மிக அருகில் கேட்டது. புதர்களில் சலசலப்பு தெரிந்தது. பாண்டாசிங் துப்பறிவதற்காக எழுந்து போனான். ஒரு சாதாரணக் கலப்பின நாயைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தான். அது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.
” நான் இதை புதர்களுக்குப் பின்னாலக் கண்டுபிடிச்சேன்.. அது எங்கிட்டே அதோட பேரு ஜுன் ஜுன்னு சொல்லிச்சு”
என்று பாண்டாசிங் சொன்னான். எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.
அந்த நாய் ஹர்னாம்சிங்கிடம் சென்றது. அவன் அவனுடைய சாமான்பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தரையில் எறிந்தான். அந்த நாய் அதை மோந்து பார்த்தது. பின்னர் அதைச் சாப்பிடப்போகும் போது ஹர்னாம்சிங் அதைத் தட்டிப் பறித்தான்.
” நில்லு.. நீ ஒரு பாகிஸ்தான் நாயா இருந்தா..”
அவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாண்டாசிங் அந்த மிருகத்தைத் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஹர்னாம்சிங்கிடம்,
” ஜமேதார் சாகிப்.. ஜுன் ஜுன் ஒரு இந்திய நாய்..”
என்று சொன்னான்.
” நீ உன் அடையாளத்தை நிருபிச்சுக் காட்டு..”
ஹர்னாம்சிங் அந்த நாய்க்கு ஆணையிட்டான். அது தன்னுடைய வாலை ஆட்ட ஆரம்பித்தது.
” இது அத்தாட்சியில்லை.. எல்லாநாயும் தான் வாலை ஆட்டும்..”
என்று ஹர்னாம்சிங் சொன்னான். பாண்டாசிங்,
” அவன் பாவம் ஒரு அகதி “
என்று நாயின் வாலோடு விளையாடிக் கொண்டே சொன்னான். ஹர்னாம்சிங் ஒரு பிஸ்கட்டை அந்த நாயிடம் எறிந்தான். அதைக் காற்றிலேயேக் கவ்விக் கொண்டது.
“ நாய்கள் கூட இப்போ அவங்க இந்தியரா பாகிஸ்தானியான்னு முடிவு செய்ஞ்சுக்கணும்..”
என்று படைவீரர்களில் ஒருவன் குறிப்பிட்டான். ஹர்னாம்சிங் தன்னுடைய சாமான் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.
“ எல்லா பாகிஸ்தானியரும் நாய்கள் உட்பட சுடப் படுவார்கள்..”
என்று சொன்னான். உடனே ஒரு படைவீரன்,
” இந்தியா ஜிந்தாபாத்..”
என்று கத்தினான். அந்த நாய் பிஸ்கட்டை கடிக்கப்போனது அப்படியே நின்று விட்டது. தன்னுடைய வாலை கால்களுக்கிடையில் நுழைத்துக் கொண்டு பயந்துபோய் நின்றது. ஹர்னாம்சிங் சிரித்தான்.
” நீ ஏன் உன்னோட சொந்த நாட்டைப்பார்த்துப் பயப்படுறே…? இங்க பாரு ஜுன் ஜுன் இந்தா இன்னொரு பிஸ்கட்..”
திடுதிப்பென்று காலைப் பொழுதின் வெளிச்சம் யாரோ இருட்டறையில் விளக்கைப் போட்டதைப் போல பரவியது. அது டிட்வால் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் படர்ந்தது.
யுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
ஜமேதார் ஹர்னாம்சிங் அவனுடைய பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதிர்புறமாக இருந்த குன்றிலிருந்து புகை எழுந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியென்றால் இவர்களைப் போலவே எதிரியும் காலையுணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறான்.
பாகிஸ்தான் ராணுவத்தின் சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய பெரிய மீசையை ஒரு முறை முறுக்கி விட்டுக் கொண்டே டிட்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய வயர்லெஸ் ஆபரேட்டர் அந்தப் படைப்பிரிவுக் கமாண்டரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகத் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடி தூரத்தில் பஷீர் என்ற படைவீரன் பாறையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய துப்பாக்கி அவனுக்கு முன்னால் கிடந்தது.
“ எங்கே கழித்தாய் இரவை என் அன்பே! என் நிலவே! எங்கே கழித்தாய் இரவை! “
என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். பாடலில் சந்தோஷமடைந்த அவன் இன்னும் சத்தமாக வார்த்தைகளை ரசித்துப் பாட ஆரம்பித்தான். திடீரென அவன் சுபேதார் ஹிம்மத்கானின் அலறலைக் கேட்டான்.
” எங்கே கழித்தாய் இந்த இரவை?”
ஆனால் இது பஷீரைப் பார்த்தல்ல. அவன் கத்தியது ஒரு நாயைப் பார்த்து. சிலநாட்களுக்கு முன்பு அது எங்கிருந்தோ அவர்களிடம் வந்து சேர்ந்தது. அந்த முகாமில் சந்தோஷமாகத் தங்கியிருந்தது. திடீரென நேற்று இரவு காணாமல் போய் விட்டது. ஆனால் இப்போது அது செல்லாத காசைப் போலத் திரும்பி வந்து விட்டது.
பஷீர் புன்னகைத்தான். அந்த நாயைப் பார்த்துப் பாட ஆரம்பித்தான்.
” எங்கே கழித்தாய் இந்த இரவை
எங்கே கழித்தாய் இந்த இரவை? “
ஆனால் நாய் வாலை மட்டும் ஆட்டியது. சுபேதார் ஹிம்மத்கான் ஒரு மிட்டாயை அதனிடம் வீசியபடியே,
” அதுக்குத் தெரிந்ததெல்லாம் வாலை ஆட்டறது மட்டும் தான்..முட்டாள்..”
என்று சொன்னான். அப்போது பஷீர்,
” அது கழுத்தில என்ன சுத்தியிருக்கு..?”
என்று கேட்டான். படைவீரர்களில் ஒருவன் அந்த நாயைப் பற்ரி இழுத்தான். கழுத்தில் கிடந்த கயிற்றுப்பட்டியைக் கழட்டினான். அதில் ஒரு சிறிய அட்டை கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.
” என்ன சொல்லுது அது..”
என்று வாசிக்கத் தெரியாத அந்தப் படைவீரன் கேட்டான். பஷீர் முன்னால் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தான்.
” அது ஜுன் ஜுன்னு சொல்லுது..”
சுபேதார் ஹிம்மத்கான் தன்னுடைய புகழ் வாய்ந்த மீசையை இன்னுமொரு தடவை திருகி விட்டுக் கொண்டே,
” பஷீரேய்..! அது ரகசிய வார்த்தை.. வேற எதாச்சும் சொல்லுதா..?”
என்று கேட்டான்.
” ஆமாம் சார்.. அது ஒரு இந்திய நாய்ன்னு சொல்லுது..”
உடனே சுபேதார் ஹிம்மத்கான்,
” அப்படின்னா என்ன அர்த்தம்? “
என்று கேட்டான். பஷீர் தீவிரமாக,
” ஆனால் அது ரகசியம்..”
என்று பதிலளித்தான்.
” அப்படி ரகசியம் இருந்தா அது ஜுன் ஜுன்கிற வார்த்தையில தான் இருக்கும்..”
என்று இன்னொரு படைவீரன் தன்னுடைய புத்திசாலித்தனமான யூகத்தைத் துணிந்து வெளிப்படுத்தினான்.
சுபேதார் ஹிம்மத்கானும்,
” ஏதாச்சும் இருக்கலாம்.. அதிலே..”
என்று குறிப்பிட்டான். கடமையுணர்வுடன் பஷீர் மீண்டும் அதை முழுவதுமாக வாசித்தான்.
” ஜுன் ஜுன் இது ஒரு இந்திய நாய்..”
சுபேதார் ஹிம்மத்கான் வயர்லெஸ் போனை எடுத்தான். அவனுடைய படைப்பிரிவு கமாண்டரிடம் அவர்களுடைய முகாமில் நாய் திடீரெனத் தோன்றியது, முந்திய இரவில் மறைந்து போனது, மறுபடியும் இன்று காலையில் திரும்பியது என்று விவரமாகச் சொன்னான். படைப்பிரிவு கமாண்டர்,
” நீ என்ன பேசிக்கிட்டிருக்கே. .”
என்று கேட்டார்.
சுபேதார் ஹிம்மத்கான் மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அவன் ஒரு சிகரெட் பாக்கெட் அட்டையைக் கிழித்தான். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து பஷீரிடம் கொடுத்து,
” இப்ப இதில குர்முகியில.. அதான் அந்தச் சீக்கியர்களோட பாஷையில எழுது..”
என்று சொன்னான்.
” நான் என்ன எழுதணும்..?”
”ம்ம்…..நல்லது…”
திடீரென பஷீருக்கு ஒரு ஆவேசம் தோன்றியது.
” சுன் சுன் ஆமாம் அது தான் சரி.. நாம ஜுன் ஜுன்னை சுன் சுன்னால எதிர்ப்போம்..”
சுபேதார் ஹிம்மத்கானும் அதை ஆமோதிக்கிற மாதிரி,
” பிரமாதம்.. அதோட இதையும் சேத்துக்கொ.. இது ஒரு பாகிஸ்தானிய நாய்..”
என்று சொன்னான். அவனே நாயின் கழுத்துப்பட்டியில், எழுதிய அந்தக் காகிதத்தைத் திணித்து,
” இப்ப போய் உன்னோட குடும்பத்தோட சேந்துக்கோ..”
அவன் அதற்கு சாப்பிட ஏதோ கொடுத்தான். பிறகு,
” இங்க பாரு நண்பா.. நம்பிக்கைத் துரோகம் கூடாது.. நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனை மரணம் தான்..”
என்று சொன்னான்.
அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டே அதனுடைய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத்கான் அந்த நாயை இந்திய நிலையைப் பார்த்த மாதிரி திருப்பி,
” போ..இந்தச் செய்தியை எதிரிட்ட கொண்டு போ.. ஆனால் திரும்பி வரணும்.. இது உன்னோட கமாண்டரின் கட்டளை..”
என்று சொன்னான். நாய் வாலை ஆட்டியபடியே அந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வளைந்த மலைப்பாதை வழியே கீழே இறங்கியது. சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்டான்.
பகலில் இந்த மாதிரி விஷயங்களுக்கு இது கொஞ்சம் சீக்கிரம் என்று இந்தியர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கனவே சலிப்பில் இருந்த ஜமேதார் ஹர்னாம்சிங் கத்தினான்.
“ நாம அவங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்..”
இரண்டு பக்கமும் ஒரு அரை மணி நேரத்துக்கு துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். உண்மையில் அது முழுவதுமே காலவிரயம்தான். கடைசியில் ஜமேதார் ஹர்னாம்சிங் கொடுத்தவரை போதும் என்று கட்டளையிட்டான். அவன் அவனுடைய நீளமான தலைமுடியைச் சீவினான். கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டே, பாண்டாசிங்கிடம்,
“ எங்கே போச்சு..அந்த நாய்..ஜுன் ஜுன் “
என்று கேட்டான். அதற்கு பாண்டாசிங்,
” நாய்கள் எப்போதுமே வெண்ணெயைச் சீரணிப்பதில்லைன்னு....பழமொழி இருக்கே..”
என்று தத்துவார்த்தமாகச் சொன்னான். திடீரென கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரன்,
“ அதோ அந்த நாய் வருது..” என்று கத்தினான்.
ஹர்னாம்சிங், “ யாரு ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் படைவீரன்,
” அது பேரென்ன? ஜுன் ஜுன்..”
என்று பதில் சொன்னான். உடனே ஹர்னாம்சிங்,
” அது என்ன செய்யுது..”
என்று கேட்டான். அந்தப்படைவீரன் பைனாகுலர் வழியே கூர்ந்து பார்த்துக் கொண்டே,
” அது நம்மைப் பாத்து வருது..”
என்று பதில் சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் அவனிமிருந்து பைனாகுலரைப் பறித்து அதன் வழியே பார்த்துக் கொண்டே,
“ அது தான்.. அது கழுத்தில ஏதோ சுத்தியிருக்கே.. இரு..இரு.. அது பாகிஸ்தான் மலையிலிருந்து வருதே..ஙொத்தாலோக்க..”
என்று சொன்னான். அவன் அவனுடைய துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கிக்குண்டு அந்த நாய் எங்கிருந்ததோ அதற்கு அருகில் எங்கோ பாறையில் பட்டுத் தெறித்தது. அந்த நாய் நின்று விட்டது.
சுபேதார் ஹிம்மத்கான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பைனாகுலர் வழியே பார்த்தான். அந்த நாய் ஒரு சுற்று சுற்றித் திரும்பி வந்த வழியே திரும்பியது.
” தைரியசாலி யுத்தகளத்தை விட்டு ஓட மாட்டான்.. முன்னேறிப்போ.. உன் வேலையை முடி “
என்று அந்த நாயைப் பார்த்து அவன் கத்தினான். அதைப் பயமுறுத்த பொதுவான திசையில் துப்பாக்கியால் சுட்டான். அதேநேரம் ஹர்னாம்சிங்கும் சுட்டான். அந்த நாய்க்கு சில அங்குல தூரத்தில் குண்டு பாய்ந்து சென்றது. காதுகளை படபடவென அடித்துக் கொண்டு காற்றில் துள்ளி விழுந்தது. சுபேதார் ஹிம்மத்கான் மறுபடியும் சுட்டான். சில கற்களில் பட்டுச் சிதறியது.
அது மிக விரைவில் அந்த இரண்டு படைவீரர்களுக்கான விளையாட்டாக மாறி விட்டது. உயிர் பயத்தில் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. ஹிம்மத்கானும், ஹர்னாம்சிங்கும் பயங்கரமாகச் சிரித்தனர். அந்த நாய் ஹர்னாம்சிங்கை நோக்கி ஓடத் தொடங்கியது. அவன் சத்தமாக அதை வைதுகொண்டே சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலில் பாய்ந்தது. அது ஊளையிட்டது. திரும்பி ஹிம்மத்கானை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைப் பயமுறுத்துவதற்காகச் சுடப்பட்ட குண்டுகளைத் தான் அங்கேயும் சந்திக்க வேண்டியிருந்தது.
” தைரியமான பையனாய் இரு.. உனக்குக் காயம் பட்டாலும் உனக்கும் உன் கடமைக்குமான இடைவெளியிலிருந்து அசையாதே… போ…போ…போ…”
என்று பாகிஸ்தானி கத்தினான்.
நாய் திரும்பியது. அதன் ஒரு கால் இப்போது சுத்தமாய் உபயோகமில்லாமல் ஆகி விட்டது. அது காலை இழுத்துக் கொண்டு ஹர்னாம்சிங்கை நோக்கி நகர்ந்தது. அவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கவனமாகக் குறி பார்த்துச் சுட்டுக் கொன்றான்.
சுபேதார் ஹிம்மத்கான் பெருமூச்சு விட்டுக் கொண்டே,
” பாவம் அந்தப் பயல் தியாகியாகி விட்டான்..”
என்று சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் இன்னமும் சூடாக இருக்கும் அவனுடைய துப்பாக்கியின் குழலைத் தடவிக்கொடுத்துக் கொண்டே,
” அது ஒரு நாயைப் போலச் செத்தது..”
என்று முணுமுணுத்தான்.
நன்றி- தி எண்ட் ஆஃப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்.
நன்றி- மலைகள் இணைய இதழ்