Showing posts with label கோவில்பட்டி. Show all posts
Showing posts with label கோவில்பட்டி. Show all posts

Friday, 10 July 2026

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 

 

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 பூங்கொடி பாலமுருகன்




 

 

வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு.. அந்த நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வது எழுத்துக்களால் மட்டுமே சாத்தியம். அப்படி ஒவ்வொரு மனிதனின் நினைவுகளிலும் பதிந்து இருப்பது தான் வாழ்ந்த ஊரும் , அந்த ஊரின் சில மனிதர்களும்.

அப்படி தான் வாழ்ந்த கோவில்பட்டி என்ற ஊரை பற்றியும், அந்த ஊரின் நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட நண்பர்களைப் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ள நூல்தான் முன்னொரு காலத்தில்.

 

எழுத்தாளர் உதயசங்கரின் மற்ற படைப்புகளை காட்டிலும் இந்தப் படைப்பு கொஞ்சம் நம் நுண் உணர்வுகளை கிள்ளி பார்க்கும். ஏனென்றால் இது அவரோடு இரத்தமும் சதையுமாய் பயணித்த நண்பர்களைப் பற்றியது அல்லவா? தன் வாழ்வியல் பக்கங்களை புரட்டிப் பார்ப்பதோடு ,அப்போது வாழ்ந்த நண்பர்கள் அவர்களுடனான அனுபவங்கள் இந்த நூலில் ஏராளமாய் பதியப்பட்டிருக்கிறது.

எழுத்தாளன் என்ற ஒரு ஆளுமை தன்னில் உருவாகிய விதத்தைப் பற்றியும், அதை விதைத்த மனிதர்களைப் பற்றியும் விவரித்த நூல் என்றும் சொல்லலாம்.

 

ஏனென்றால் ஒரு கலைஞன் என்பவன் சுயம்புவாக உருவாகிடுபவன் அல்ல. அந்தக் கலைஞனின் வளர்ச்சியில் தனித்த உழைப்பிற்கு ஈடாக புத்தகங்களும், உரையாடல்களும், மனிதர்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை சொல்லும் புத்தகம் இது.

புத்தகங்களை மனதிற்குள் சுமந்த அலையும் மனிதர்களோடு, அவருடைய இளமைக்காலம் இருந்திருக்கிறது.. அவருக்கு மட்டுமல்ல கோவில்பட்டியை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் அது சாத்தியமாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 எழுத்தாளர்களை பெற்ற பெருமை கரிசல் இலக்கியத்தின் தலைநகரமான கோவில்பட்டிக்கு இருக்கிறது..

 

அந்த வயதில் அவர்கள் வாசித்த நூல்களின் தாக்கம் கோவில்பட்டியை பாரிஸ் நகரத்து வீதியை போல கற்பனை செய்ய வைத்திருக்கிறது. அந்த நகரத்தில் இடதுசாரி சிந்தனைகளை ஊட்டி வளர்த்த ஞான குருவாக இருந்த தோழர் பாலுவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி , அவர் கை பிடித்து இவர்களுக்கு அறிமுகப்படுத்திய, இவான் துர்கனேவ்

அவரின் மூன்று காதல் கதைகள் பற்றி நினைவலைகளை பகிர்ந்திருப்பதை வாசிக்கும் போது காதல் உன்னதமானது காதல் மகத்துவமானது என்று நாமும் உணர்வோம்.

 

வாழ்க்கையில் சில சந்திப்புகள் நம் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவை. அப்படி எழுத்தாளரின் சிந்தனை போக்கை மாற்றியவர்... அவருடைய அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமான நண்பர் எழுத்தாளர் நாறும்பூநாதன்... குச்சு வீட்டில் ஒரு மில் தொழிலாளியின் மூத்த மகனாக பிறந்து உவப்பானதில்லாத இளம் பிராயத்தில் இருந்த அவருக்கு ஆத்மார்த்த தோழனாய் நாறும்பூநாதன் அவர்கள் கிடைத்ததை எண்ணி சிலாகிக்கிறார்.

இவருடைய வாசிப்பு ஆர்வத்திற்கு தீனி போட்டது நண்பர் கொடுத்த சோவியத் புத்தகங்கள். அதிலும் சிவப்பு நிறத்தில் சிலந்தியும் ஈயும் என்ற வில்ஹெமில் லீப்னெஹ்ட் என்ற எழுத்தாளர் எழுதிய நூல், இவருக்கு புதிய புதிய வெளிச்சங்களையும் பெரும் நம்பிக்கையை தருகின்ற புத்தகமாகவும் இன்றளவும் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள வர்க்க வேறுபாடை உணர வைத்தது இந்த நூல் தான்.

இவர்களுக்கு மார்க்சிய தத்துவத்திற்கு விவரங்கள் தந்த தோழர் பால் வண்ணம், சர்வதேச அரசியல் குறித்து தோழர் தேவப்பிரகாஷ், தேசிய அரசியல் குறித்து தோழர் பாலு, தொழிற்சங்க வரலாறு செயல்பாடுகள் குறித்து தோழர் மோகன்தாஸ், பள்ளித் தோழனாகவும் கல்லூரி தோழனாகவும் இலக்கியத் தோழனாகவும் பயணித்த தோழர் மாரீஸ், உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழ் இலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாய் பதிவு செய்த கிரா என்கின்ற இவர்களின் நயினா, மானுடத்தின் மேன்மைக்காக எழுத்தின் மூலமாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஆதர்ச நாயகனாயிருக்கும் கார்க்கியை கை குலுக்க வைத்த தோழர் சுவடி, போராட்டத்தின் மூலமே வாழ்வை அர்த்தமுள்ளதாக முடியும் என்று தன் கவிதைகளில் உணர்த்திய நெருதாவை எப்போதும் நினைவூட்டி கொண்டிருக்கும் வித்யா சங்கர் என்ற துரை, ஆந்தென் செகாவை நினைவூட்டும் அப்பண சாமி இப்படி பல தோழர்களின் நினைவுகள் அவர்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள் என்று பல்வேறு நினைவலைகளை இந்த நூலில் பகிர்ந்து உள்ளார்.

 

குழந்தையோ முதியவரோ அங்கீகாரமும் பாராட்டும் அவர்களுக்கு மிக முக்கியமானது. அப்படி தன் ஆரம்பகட்டத்தில் தான் எழுதிய பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது கதையைப் படித்து கட்டியணைத்து கதகதப்புடன் பாராட்டிய கவிஞர் கந்தர்வன் இன்னும் தான் எழுதிக் கொண்டிருப்பதற்கான ஒரு உந்துதல் என்று மனமுவந்து கூறுகிறார்..

 

தான் எப்போதும் வியந்து நோக்கும் ஆதர்ச நாயகனாக எழுத்தாளர் தோழர் தமிழ்ச்செல்வனை இந்த நூலில் சிறப்பு படுத்தியிருக்கிறார்..

இந்தப் புத்தகம் நெடுகிலும் இருக்கக்கூடிய நினைவலைகள் தான் சிலாகித்த புத்தகங்களின் மூலமாகவும் படைப்பாளிகளின் வழியாகவும் விரிந்து செல்கிறது..

 

எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் எப்பொழுதும் பங்கேற்பாளனாக இருக்கும் ஒரு நண்பரைப் பற்றி இவர் எழுதி இருக்கும் கட்டுரை என்னை கொஞ்சம் அசைத்துப் பார்த்து அழ வைத்தது.. முத்துசாமி என்ற ஒரு தோழரை பற்றிய நினைவலைகள்..  புற்றுநோயின் கொடுமைக்கு தன் ஆருயிர் நண்பரை இழந்தது போல என் ஆருயிர் தோழியையும் இழந்திருக்கிறேன் நான்...

 

முன்னொரு காலத்தில் என்ற இந்த நூல், உதயசங்கர் என்ற ஒரு எழுத்தாளுமை உருவாகக் காரணமாய் இருந்த நபர்களும் ,நூல்களும் படைப்புகளும் இந்த நூல் நெடுக வந்து போகிறார்கள்.

 

ஞாபகங்களை மீட்டெடுத்திடும் சாத்தியம் எல்லோருக்கும் வாய்ப்பு இல்லை. அப்படி உதயசங்கர் அவர்களுக்கு வாய்த்த இந்த நூலை வாசிக்கும் போது நம் கண்களும் பனித்திட தான் செய்யும்.

 

 

 

நூல் : முன்னொரு காலத்தில்

ஆசிரியர் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல் வனம்

விலை : ₹90.00

தொடர்புக்கு - 9751549992

 

 

Sunday, 25 December 2016

மனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்

மனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்

உதயசங்கர்


ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும்  தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன் அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம் போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும் பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில் உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ  சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப் போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.
80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக் கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச் சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக காய் விட்டனர். புத்தகங்களுக்காகப் பழமும் விட்டனர். அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. காகிதத்தில் கற்சிற்பம் வடித்ததைப் போல மனதை விட்டு நீங்க மறுத்தது. அப்படி ஒரு புத்தக வடிவமைப்பை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல் எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஓவியர் அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார். மிகச் சாதாரணமான டெடில் பிரசில் தன் கலையாளுமையை முழுவதும் செலுத்தி அச்சிட்டிருந்தார். அப்போது வடிவமைப்புக்காகப் பரிசும் வாங்கியதாக ஞாபகம். சிற்பங்களைப் போல எழுத்துகள் மனதில் பதிந்தன. அந்த மகத்தான ஓவியர் அஃக் பரந்தாமன் நாங்கள் நடத்திய பிகாசோ நூற்றாண்டு விழா ஓவியக்கண்காட்சியைத் திறந்து வைக்க கோவில்பட்டி வந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது பயமாக இருந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட வில்லனின் அடியாட்களைப் போல முகத்தில் பாதி கிருதாவுடன் சுருட்டை முடியுடன் கருஞ்சிலையென இருந்தார். அருகில் செல்ல பயந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் ஒரு குழந்தையைப் போல பழகினார். ஓவியக்கண்காட்சி முடிந்ததும் எங்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட அவருடைய புகைப்படம் இப்போதும் மாரீஸிடம் இருக்கிறது.  ( ஆனால் இப்போது அஃக் பரந்தாமன் ஏதோ முதியோர் இல்லத்திலோ ஆதரவற்றோர் இல்லத்திலோ இருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவலைக் கேள்விப்பட்டேன்.)
வண்ணதாசனின் சிறுகதைகளை வாசிக்க வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய் இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள். வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை மாற்றி விட்டார்.. மனிதர்களிடம் எதைப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தன அவருடைய கதைகள். இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும் வண்ணதாசனின் கதைகளை நாங்கள்  கொண்டாடினோம்.
குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம் முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது. என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும், புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும், குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும், சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.
காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம் மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின் கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின் கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த என் இனிய நினைவுகள் தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.
ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன், புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின் போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும் என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள் என்றால்  வண்ணதாசன் எந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத் துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின் தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை.
மிச்சத்தில் கசக்கிப்பிழியப்பட்டு மிச்சமாய் வருகிற அவளையும் குட்டியப்பனையும் மறக்கமுடியுமா? தனுமையில் வருகிற ஞானப்பனில் நானும் ஏன் நீங்களும் கூட இருக்கிறீர்கள் தானே, தேரி மணலில் கெந்தி கெந்தி மென்மையாய் நடந்து வருகிற தனலட்சுமி மட்டுமல்ல, தடித்தடியாய் தரை அதிர நடக்கும் டெய்சி வாத்திச்சியும், வேண்டியர்வர்களாக இருக்கிறார்களே. கலைக்க முடியாத ஒப்பனையில் கோவிலில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியை மேய்த்துக் கொண்டு வரும் பாப்பா ஏன் அவனைச் சீண்டிக் கொண்டேயிருக்கிறாள்? அவனிடம் நெருக்கமாய் இருக்க எடுக்கும் முயற்சிகளால் எதை உணர்த்த விரும்புகிறாள்? பாம்பின் காலில் வருகிற சவரக்கலைஞரின் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளுமே. உல்லாசபயணத்தில் வருகிற கடைசி ஒற்றை வார்த்தையில் நம் மனம் அதிர்ந்து போகுமே… பிச்சுவும் புட்டாவும், பிரபாவும், ஆச்சியும், எத்தனையெத்தனை மனிதர்கள்? உணர்ச்சிகளின் சிகரங்களில் மனிதர்கள் எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும், ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும், அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும், என்று உலகம் இப்படியும் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? கவித்துவமான ஒற்றைவரியில் மனநிலையை உணர்த்த முடியுமா? சிலவரிக்காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் குணத்தை வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப் பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும் மனிதர்களைப் பார்க்கையில் அன்பும் கருணையும் சுரக்கும். அதன் பிறகான நம்முடைய வார்த்தைகளில் மனிதர்களின் மீதான பிரியம் பொங்கும். அஃக் பரந்தாமன் அச்சிட்ட வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தை வாசித்த பிறகு நானும் வசியத்தில் விழுந்தவனைப் போல ஆகி விட்டேன்.
82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்தில்  கிராஜூவேட் பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப் படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.
வேலை கிடைத்து வடமாவட்டங்களில் ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன் அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல், எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனக்கிடலாக இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப் போல.

எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை மீண்டும் நான் காண்பேன். அந்தக் கனவுகளைக் காண்பதற்காகவே மீண்டும் மீண்டும் வண்ணதாசனை வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!
( மீள் பதிவு )


Wednesday, 18 May 2016

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

உதயசங்கர்

80-களில் கோவில்பட்டி நகரம் அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளாலும், சந்திப்புகளாலும், அரட்டைகளாலும், விவாதங்களாலும் அன்றாடம் நிரம்பி வழிந்தது. திடீரென ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள், எழுத்தாளர்களாக, சி.பி.எம்.மின் ஆதரவாளர்களாக உருவானார்கள். எங்களுக்கு முன்பே பாலு, சுவடி என்ற சுந்தரவடிவேலு, சி.எஸ்., என்ற சி.சுப்ரமணியன், ரவி, என்று ஒரு இளைஞர் குழாம் 70 –களில் இந்திய மாணவர் சங்கம் தொடங்கி கோவில்பட்டியில் இருந்த கோ.வெ.நா. கல்லூரியில் ஸ்டிரைக் அடித்து டிஸ்மிஸ்ஸாகி, பல்கலைக்கழகத்தின் சிறப்பு அநுமதியுடன் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் சுவடியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அரசியலில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள். சுவடி மட்டுமே கதை கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராமல் நாறும்பூநாதன் தலைமையில் நாங்கள் மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகை வழியாக இடது சாரி ஆதரவாளர்களாக அறிமுகமானோம். எங்களுக்குப் பின்னால் கிட்டத்தட்ட பத்து பதினைந்துபேர் திமுதிமுவென வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பும் ஏன் அதற்குப் பின்பும் கூட அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.
நாறும்பூ நாதன், உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி, சிவசு, ராஜூ, அப்பணசாமி, திடவைபொன்னுச்சாமி, கோணங்கி, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜன், ஞாபகமறதியின் அடுக்குகளில் சிக்கிய இன்னும் சிலபேர் என்று ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. போதாது என்று தமிழ்ச்செல்வனும் கோவில்பட்டி வந்து சேர்ந்தார்.
 அங்கிங்கெனாதபடி நேரங்காலம் தெரியாமல் நாள் முழுவதும் புதிய புதிய அநுபவங்கள், புதிய புதிய உரையாடல்கள், திடீரென தமிழிலக்கியத்தின் கேந்திரமான இடத்தை கோவில்பட்டி பிடித்தது. கோவில்பட்டியை நோக்கி எழுத்தாளர்கள் படைகுருவிகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து போயினர். கோவில்பட்டியில் முதல் நாள் பேசுகின்ற பாடுபொருள் மிக விரைவிலேயே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியது என்று சொல்வது மிகையாக இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் கோவில்பட்டி வந்து செல்கிற எழுத்தாளர்கள் அப்படியான செய்திகளை பரப்பி விடுவார்கள். ஏற்கனவே இடைசெவலில் கி.ரா, இருந்தார். கோவில்பட்டியில் தேவதச்சன், கௌரிஷங்கர், கிருஷி, சுவடி, ஆகியோர் இருந்தார்கள் என்றாலும் பெரிய அளவுக்கு ஒருவருக்கொருவர் ஊடாட்டமோ, சந்திப்புகளோ நிகழவில்லை. நெருக்கடி நிலைக்காலத்தில் தர்ஷனா திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 79-80 வாக்கில் தான் ஒரே ஊரில் பத்து சிறுகதையாளர்கள், ஒரு பத்து கவிஞர்கள், இரண்டு நாடகக்குழுக்கள், கண்காட்சிகள், என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தோம். ஒரு தடவை புதுமைப்பித்தன் நினைவு தினத்தன்று ஊரெங்கும் அவருடைய கட்டுரைகளிலிருந்தும், கவிதைகளிலிருந்தும் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, பற்றிய அவருடைய கருத்துக்களை அட்டைகளில் எழுதி மின்கம்பங்களில் தொங்கவிட்டிருந்தோம். எல்லாவேலைகளையும் நாங்களே செய்வோம். தட்டி போர்டு எழுதுவது, அதைத் தூக்கிக் கொண்டு போய் ரோட்டு முக்கில் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என்று அனைத்து வேலைகளையும் போட்டி போட்டுக் செய்தோம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன், கனவுகளுடன், சந்திப்போம். .எப்போதும் தெருக்களின் முக்கிலிருந்த டீக்கடைகளில், சந்து பொந்துகளில், சாலைகளில், மாலையில் காந்திமைதானத்தில் குறைந்தது நான்கு பேராவது கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருப்போம்.
அரசியல், தத்துவ விவாதங்களும் அனல் பறக்கும். சி.பி.எம். எதிர்ப்பாளர்களாக இருந்த நண்பர்களுக்கும், சி.பி.எம். ஆதரவாளர்களாக இருந்த எங்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். எங்கள் தரப்பில் நான் கொஞ்சம் பிடிவாதமாகவும், வறட்டுத்தனமாகவும் இருந்தேன். அதனால் மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பல எழுத்தாளர்கள், நண்பர்கள், என்னிடம் கொஞ்சம் தூரம் காட்டினர். அப்போது 1982-83 ஆண்டாக இருக்கலாம். ஆசிரமம் தெருவிலிருந்த தந்தி அலுவலகத்துக்கு கவிஞர் சமயவேல் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தோம். அலட்சியமான ஒரு முகபாவத்துடனும், கண்ணாடிக்குப் பின்னால் அலைபாயும் கண்களுடனும், லேசான திக்கலும் நக்கலும் கலந்த கூர்மையான வார்த்தைகளை பேசும் மெல்லிய குரலும் சமயவேலின் மீது ஒரு பயத்தை உருவாக்கியது. அவர் கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த நண்பர்களைப் போல இல்லை. இலக்கியத்தில் விரிந்து பரந்த வாசிப்பும், அரசியலில் கூரான இடது சாரிப்பார்வையும் இருந்தது. ஆனால் சி.பி.எம்மை அப்படி கேலி செய்வார். அதிதீவிர இடது சாரி இயக்கத்தோடு அப்போது தொடர்பு இருந்தது என்று நினைக்கிறென்.கலை குறித்த அவருடைய பார்வைகள் உலகளாவிய அன்றையப் போக்குடன் உடன் செல்பவை. மெல்ல, மெல்ல அவருடைய பேச்சுக்கு நாங்கள் வசமானோம்.
சமயவேல் கோவில்பட்டி எழுத்தாளர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கிண்டலடிப்பார். அவர்களுடைய படைப்புகளைக் கேலி செய்வார். கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால் எல்லோருடனும் உரையாடலை நடத்திக் கொண்டிருப்பார். அவருடைய அலுவலகம் இருந்த ஆசிரமம் தெருவிலேயே ஒரு அறையைப் பிடித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இரவென்றும் இல்லாமல் பகல் என்றும் இல்லாமல் அதிலேயே கிடந்தோம். அந்தச் சிறிய அறையில் சிலசமயம் பதினைந்துபேர் வரை படுத்துக் கிடந்திருக்கிறோம். இரவைச் சூடாக்கிய விவாதங்கள் நடுநிசியில் முடியும்போது குடிதண்ணீர் இருக்காது. ஒரு சிகரெட்டோ, பீடியோ, கூட இருக்காது. ஏற்கனவே குடித்து வீசிய கட்டை பீடிகளை எடுத்து குடிப்போம். சில சமயம் மறுபடியும் விவாதம் கிளம்பி விடும். இந்த ஆசிரமம் தெரு அறை பற்றிய அவருடைய கவிதை அற்புதமானது. சமயவேல் அந்தச் சமயத்தில் அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தார்.
அரசியல் விவாதங்களை ஒட்டி ஒரு நாள் எங்களை ஒரு வகுப்புக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார் சமயவேல். ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் உட்காரவைத்து கண்ணன் என்ற பெயருடைய தோழர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டம், நடைமுறை, அதன் தோல்விகள், பாராளுமன்றப்பாதையின் அபத்தம் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் திட்டம், என்று சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசினார். முடிவில் கேள்விநேரம். யாரும் வாயைத் திறக்கவில்லை. வகுப்பு எடுத்தவருக்குத் திருப்தியில்லை. திரும்பி ஊருக்குள் வருகிறவரை எல்லோரும் ஏதோ இழவு வீட்டுக்குப் போய் வந்த மாதிரி துக்கம் அனுசரித்தோம். அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றி அதற்கப்புறம் கூட பேசியதாக நினைவிலில்லை. ஆனால் பிரயாசைப்பட்டு எங்களையெல்லாம் திரட்டிய சமயவேல் விரக்தியடைந்து விட்டார். எங்களிடம், சி.பி.எம். உங்களை நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிட்டாங்க என்று சொன்னார். அதன்பிறகு எங்களிடம் அரசியல் பேசுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. கதையோ, கவிதையோ, கையெழுத்துப் பிரதியாக எழுதி எல்லோரிடமும் படிக்கக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. கோவில்பட்டி எழுத்தாளர்களே விமரிசனம் செய்வதில் கில்லாடிகள். ஆனால் சமயவேல் அனைவரிலும் கடுமையான விமரிசகராக இருந்தார். நான் கொடுத்த பல கதைகளை அப்படியே நிராகரித்தார். அவர் பரவாயில்லை என்று சொன்ன ஒரே கதை பாலிய சிநேகிதி. அது ஒரு செகாவ் கதையைப் போலிருக்கிறது என்றார். அவ்வளவு போதாதா? நான் தலைகால் புரியாமல் திரிந்தேன். அவருக்கு கோவில்பட்டியில் மிகவும் பிடித்த எழுத்தாளர் கோணங்கி மட்டும் தான். அவரும் கோணங்கியும் டேய் மாப்பிள்ள…டேய் மாப்பிள்ள என்று மூச்சுக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொள்வார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். சமயவேலுடனான உரையாடல்கள் எங்களுடைய இலக்கிய அறிவை விசாலமாக்கியது. படைப்பு நுட்பங்களைப் பற்றி அவருடன் பேசிய இரவுகள், உலக இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வையை எல்லாம் கோவில்பட்டி சுவீகரித்துக் கொண்டது.
1985-ஆம் ஆண்டு வேலை கிடைத்து நான் திருவண்ணாமலை சென்று விட்டேன். 1987-ஆம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு காற்றின் பாடல் வெளியானது. தமிழ்க்கவிதையுலகில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிய மிகச் சிறிய தொகுப்பு. அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே கவித்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை என்று கூறலாம். கவிதைகளில் ஈரம் ததும்பும் மானுடம் வானம்பாடி கவிதைகளுக்குப் ப்ன்பு புதிய பரிமாணத்தில் புதிய வீச்சில் வெளியாகியிருந்தது. பல கவிதைகள் முற்போக்காளர்களின் நிரந்தர கல்வெட்டு வாசகங்களாயிற்று.
கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்
இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்
இளங்காலை
ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்
நேற்றின் அயர்வுகள்
வாசலைத்தாண்டி
உப்புக்காரனின் குரலோடு
ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது
குளிக்க சாப்பிட வேலைக்கென
கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை
இன்றும் நேசிப்பேன்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் பின்னிணைப்பாக அமைந்த கேள்வி-பதில் கலை இலக்கியம், கவிதை குறித்த அவருடைய பார்வையை வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது. அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு அவருடைய அடுத்த கவிதைத்தொகுப்பு அகாலம் வெளிவந்தது. அரசியல், தத்துவம், விஞ்ஞானம் அனைத்தும் மனிதனைக் கைவிட்ட  நிலையில் அவர் தன்னுடைய கவிதைகளின் மீண்டும் அடிப்படையான அறவிழுமியங்களை நோக்கிப் பயணப்பட விரும்புகிறார். மனிதர்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதின் மூலம் மானுடத்தை உரப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்.
 “ வாழ்வின் இத்தனை சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவன் நான். சாய்வுகளில் தான் உண்மை திரிந்து விடுகிறது. பன்முகத்தோற்றம் தருகிறது. நமது சொந்தச்சாய்வை சுத்தமாய் விலக்கி வைத்துவிட்டு, ஒரேயொரு நிமிஷம் யோசித்தால் போதும்; எதைப்பற்றிய உண்மையும் நம்மில் ஊற்றெடுத்துப் பெருகுவதை உணர முடியும். இதற்கு ஞானியாக வேண்டிய அவசியமில்லை. தானற்ற, தன்னலமற்ற எளிய மனமே போதும். இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் எனது கவிதைகளும் எளிமையானவை தாம். மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் “
அகாலத்தில் உள்ள பிரகடனங்கள் வீழ்ந்த காட்டில் என்ற கவிதையை உச்சரிக்காத வாசகர்களோ, கவிஞர்களோ கூட இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சலிப்படையவே மாட்டேன்
மீண்டும் மீண்டும்
நான் நானாவே இருப்பேன்
வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒருபோதும் நிறுத்தேன்
உண்மையை மேலும் மேலும்
காதலிப்பேன்
எல்லாமதிப்புகளும் பூமியில்
இறந்து விட்டன என்னும்
நவீனவாதம் பொய்யாக்குவேன்
நேசம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்துவிட்டு
உழுது விதைவிதைப்பேன்
தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் சிதறட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.
தமிழ்க்கவிதையின் நவீனப்பிதாமகன் பிரமீள் காற்றின் பாடல் தொகுப்பைப் படித்து விட்டு எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.
“ பிதற்றவோ, போதிக்கவோ, மனித விரோதங்களைப் பிறர் மீது பீய்ச்சியடிக்கவோ செய்யாத கவிதைகள் “ என்று சொல்லியிருக்கிறார்.
சமயவேலின் கவிதையியல் நேரடியானது. எளிமையானது. அரசியல் பிரக்ஞையுடையது. ஆனால் அதன் கவித்துவம் மானுடம் போற்றும் மகத்தான தருணங்களைக் கொண்டது. நேரடிக்கவிதைகள் எல்லாம் பருண்மையான புறவயச் செயல்பாடுகளையே பிரகடனங்களாக வெளிப்படுத்த சமயவேலின் கவிதைகள் மனதின் நுண் தளத்தில் ஊடாடுகிறது. முற்போக்குக்கவிஞர்கள் சமயவேலின் கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய மூன்றாவது தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் 2010-ல் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் வெளியும் பாடுபொருளும் மேலும் விரிவடைந்து தமிழ்க்கவிதையுலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் சமயவேல். நேரடியான கவிதைகள் எழுதுகிற யாரும் சமயவேலைத் தவிர்க்க முடியாது.
நீண்டகாலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய புத்தகங்களை அவர் வாசித்திருப்பாரா என்பது கூட சந்தேகம். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தனின் திருமணநிகழ்விலும், மதுரையில் நடந்த கடவு இலக்கிய அமைப்பின் கூட்டத்திலும் சந்தித்தேன். நான் மொழிபெயர்த்து வெளியான மண்டோ கதையைப் படித்து விட்டு அவர் கையில் இருந்த மண்டோ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய சிறுகதை நூல் நான் டைகர் இல்லை என்ற புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அந்தப்புத்தகத்தை நான் உடனே வாசித்தேன். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவாக உவக்கவில்லை. கவிஞர் சமயவேல் தான் என மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும், உத்வேகமளிப்பவராகவும் இருக்கிறார்.

கோவில்பட்டி ஆசிரமம் தெருவில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறை இப்போது இல்லை. அன்று அந்த அறையில் டீயும் பீடியும் குடித்துக் கொண்டு விவாதங்கள் செய்த  இலக்கிய நண்பர்களில் பலர் மறைந்து விட்டனர். பலர் இலக்கிய உலகில் இல்லை. காலம் இரக்கமில்லாதது. எல்லாவற்றையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவுகளில் லேசான சிரிப்புடன் அவருடைய நக்கல் குரலில் சமயவேல் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போதும் சுடுகிறது. அந்தத்தெரு இப்போது மிகவும் உண்மையாக இருக்கிறது.
நன்றி-மலைகள் இணைய இதழ்

Sunday, 10 January 2016

நீங்கள் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது!

நீங்கள் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது!


உதயசங்கர்

எனக்கு முதன்முதலில் எழுத்தாளர் கௌரிஷங்கர் நேரடியாக அறிமுகமானது, 1979-ஆம் ஆண்டு. நாறும்பூநாதன் தலைமையில் நான் சாரதி, மறைந்த நண்பர் முத்துச்சாமி ஆகியோர் நடத்திய மொட்டுக்கள் என்ற கையெழுத்துப்பத்திரிகையை வாசிப்பதற்காக சுற்றுக்கு விட்டிருந்தோம். அந்தக் கையெழுத்துப்பத்திரிகை தான் எங்களுக்கு கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த எழுத்தாளர்கள் வட்டத்தையும், இடது சாரித் தோழர்களையும் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னால் ஓவியர் மாரீஸ் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தான். மிக அற்புதமான வடிவமைப்புடன் வந்து கொண்டிருந்தது. தேவதச்சன், கி.ரா. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, பசப்பல் ராஜகோபால், பிரதீபன், என்று எழுத்தாளர் குழாம் அதில் எழுதிக்கொண்டிநிறைந்திருந்தார்கள். அதில் எங்களுக்கு இடமில்லை. அந்தப்பொறாமையினால் தான் நாங்களும் கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம் என்று நினைக்கிறேன். மாரீஸோடு எல்லா எழுத்தாளர்களும் மிக நெருக்கமாக இருப்பார்கள். நாங்கள் தூரத்தில் இருந்து தேவதச்சன், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர்களைப்பற்றி யாரோ எப்படியோ சொல்லி சில மோசமான அபிப்பிராயங்கள் எங்களிடம் இருந்தன. அந்த வயதுக்கேயுரிய மனோநிலையில் லட்சியவாதத்தின் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கியிருந்த நாங்கள் அவர்களைச் சமூகப்பொறுப்பற்றவர்கள் என்றும், கலைகலைக்காக என்ற கொள்கை கொண்டவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு லட்சியக்காதலை மனதில் வரித்துக் கொண்டிருந்த எங்கள் பருவம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட விட்டேற்றியான போக்குகளை  கடுமையாக வெறுக்கச் செய்தது. மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகையில் அவர்களைக் கேலி செய்வதாக நினைத்து போலிக்காதல் என்ற தலைப்பில் எப்போது வேண்டுமானாலும் ஏறி இறங்கிச் செல்லும் டவுண்பஸ் என்கிற மாதிரியான அர்த்தத்தில் துணுக்கு எழுதியிருந்தோம். அது என்ன மாதிரியான விளைவை அவர்களிடம் ஏற்படுத்தும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பத்திரிகை சுற்றுக்குப் போனது. ஒரு நாள் மாலை எங்களை காந்திமைதானத்துக்கு வரச்சொல்லி மாரீஸ் அழைத்திருந்தான். அன்று இரவு ஏழு மணி இருக்கும். காந்திமைதானத்தில் உள்ள விசுவகர்மா ஆரம்பப்பள்ளியின் வாசல் திண்ணையில் தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் முருகன், உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருக்க, நான், நாறும்பூ, சாரதி, முத்துச்சாமி, நான்குபேரும் போய் நின்ற இடத்தில் தெருவிளக்கின் ஒளி சிந்திக்கொண்டிருந்தது. என்னுடைய நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?
அப்போது முதல் குரல் எழுந்தது. “ உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்? மொட்டுக்களாம் மொட்டுக்கள் அப்படியே மொட்டுக்களைக் கசக்கி எறிய வேண்டும். “ என்று முழங்கினார் கௌரிஷங்கர். அதைத் தொடர்ந்து அந்தக்கையெழுத்துப்பத்திரிகையை நார் நாராக கிழித்து எறிந்தார். அப்பாஸும், முருகனும் மாரீஸும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். தேவதச்சனும் ஏதோ சொன்னார். அவ்வளவு விரோதமாக அவர் ஏதும் சொன்னதாக நினைவிலில்லை. பத்து நிமிடங்கள் பொரிந்து தள்ளினார். எனக்கு அழுகையே வந்து விட்டது. எப்போது அந்த இடத்தை விட்டுப் போவோம் என்றிருந்தது. கௌரிஷங்கர் பேசி முடித்த பிறகு சிறு அமைதி. நாங்கள் ஏதோ சொல்லிவிட்டு போய் விட்டோம். அன்று எங்களுடைய மனநிலை மிகப்பரிதாபமாக இருந்தது. எங்களில் நாறும்பூ கொஞ்சம் தைரியமாக இருந்தான் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து எனக்கு கௌரிஷங்கரைக் கண்டால் பயம். பத்தடி தள்ளியே நிற்பேன்.
கோவில்பட்டி வீதிகளில் ஸ்டெப் கட்டிங் வெட்டி தாடி வளர்த்த ஒரு இளைஞன் ஒரு கையில் ரோஜாப்பூவுடன் ஒரு பெண்ணின் பின்னால் போவதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். எப்போதும் கையில் புத்தகத்துடன் சைக்கிளில் எந்தத் தெருவிலிருந்தோ, எந்தச் சாலையிலிருந்தோ திடீரென புகுந்து வருகின்ற ஒரு இளைஞனைப் பார்த்தோம். இரவில் காந்தி மைதானத்தில் ஓங்கிய குரலில் இலக்கிய விவாதம் செய்யும் அந்த இளைஞனின் குரலில் இருந்த நம்பிக்கை, அலட்சியம், தீர்க்கம், அந்த இளைஞனுடைய நடை, உடை, எல்லாம் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எந்த விவாதத்திலும் விட்டுக்கொடுக்காத பிடிவாதமும் ஈவிரக்கமில்லாத விமரிசனமும் தன்னுடைய வாதத்திற்கு ஆதரவாக அவர் சொல்கிற தர்க்கவிவரணைகளும் அவரை மிகப்பெரிய ஆளுமையாக கட்டமைத்தது, கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் அனைவரும் கௌரிஷங்கரைப் பார்த்து கொஞ்சம் அச்சப்பட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். கவிஞர் வித்யாஷங்கர் சொன்னதைப்போல கம்பீரத்தில் கோவில்பட்டி ஜெயகாந்தனாக இருந்தார் கௌரிஷங்கர். புதிய எழுத்தாளர்கள் யாராவது சிக்கி விட்டால் அவரிடம் புதுமைப்பித்தனைப் படித்திருக்கிறாயா என்ற கேள்வியில் தொடங்கி மூச்சு முட்டும் அளவுக்கு கேள்விகளைக் கேட்டு திணறடித்து விடுவார். முதலில் எனக்கு அப்படி பேசுவது வெறுப்பாக இருந்தாலும் பின்னர் இலக்கியத்தை மிகவும் எளிமைப்படுத்துவதற்கு எதிரான, குரலாகப் புரிந்து கொண்டேன். பின்னர் எப்போதோ பேசிக்கொண்டிருக்கும் போது இதையெல்லாம் தாண்டி இலக்கியத்துப்பக்கம் வர்றவன் வரட்டும் என்று சொன்னார்.  
நாங்கள் அறிமுகமாவதற்கு முன்பே 1975-எமர்ஜென்சி காலகட்டத்தில் கோவில்பட்டியில் ஆதர்ஷா என்ற திரைப்படக்கழகத்தை இடதுசாரித்தோழர்களான பால்வண்ணம், ஜவஹர், ஆர்.எஸ். மணி ஆகியோருடன் இணைந்து நடத்தினார். அப்போது சென்னையில் மட்டும் தான் திரைப்படக்கழகம் இருந்தது. ஷியாம் பெனகலின் ஆங்கூர், நிஷாந்த், சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி, ரித்விக் கடக்கின் மேகதாகதாரா, கே.பாலச்சந்தரின் புன்னகை, கிரிஸ் காசரவள்ளியின் சோமனதுடி, போன்ற திரைப்படங்களை தேசியத் திரைப்படக்கழகத்திடம் வாங்கித் தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். அப்போது புனேயிலிருந்து திரைப்படச்சுருள் அடங்கிய இரும்புப்பெட்டி ரயிலில் வரவேண்டும். திரையிட்டபின் மீண்டும் அதை ரயிலில் அனுப்ப வேண்டும். ஓரிரண்டு வருடங்கள் ஆதர்ஷா திரைப்படக்கழகத்தின் செயலாளராக இருந்தார். இந்த அநுபவம் காரணமாகவோ என்னவோ சினிமாவின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. திரைப்படத்துறையில் நுழைவதற்கான முயற்சிகளையும் செய்தார். அத்தகைய முயற்சிகளின் விளைவாகத் தான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தார். பிற்காலத்தில்  தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களான வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரைப் பற்றியும் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் அறிமுகமான பின்னர் உருவான வீதிநாடக இயக்கமான தர்ஷனாவில் அவருடைய பங்களிப்பு அதிகம். வீதி நாடக இயக்கம் என்ற புதிய நாடக இயக்கம் தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்திருந்த காலம். கோவில்பட்டியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், களத்தில் இறங்கினோம். கௌரிஷங்கர், தேவதச்சன், வித்யாஷங்கர், மனோகர், மாரீஸ், திடவை பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, என்று எல்லோரும் பங்கேற்றோம். கௌரிஷங்கர் பல நாடகக்கருக்களை உருவாக்கித் தந்தார். கோவில்பட்டியிலும் சுத்துப்பட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிக்காசோ நூற்றாண்டு விழாவை ஓவியர் அஃக் பரந்தாமன் தலைமையில் நடத்தினோம். அதே போல கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். இவையெல்லாவற்றிலும் அவருடைய பங்களிப்பு அசாதாரணமானது.
 அவருடைய காதல் கவிதைகளைத் தொகுத்து மழை வரும்வரை என்ற புத்தகம் வெளியானது. வித்தியாசமான புகைப்படங்களுடன் வடிவமைப்பில் ஒரு மாபெரும் புரட்சியாகத்தான் அந்தப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. மாரீஸ் அதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டான். அந்த நூலை சென்னையில் கவிஞர் நா.காமராசன் வெளியிட்டார். எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. அதே போல முந்நூறு யானைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.அந்தத் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய எழுத்தாளர்கள் கௌரிஷங்கர் சிறுகதைகளின் வடிவநேர்த்தியை வியந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஒரு சொல் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நேர்த்தி இருந்தது. வேலையில்லாத இளைஞனின் பிரச்னைகள், திருமணமாகாத பெண்களின் ஏக்கம், உதிரித்தொழிலாளிகளின் வாழ்க்கை, என்று அவருடைய கதைகளில் சமூகத்தின் கீழ்மத்தியதர வர்க்கத்து மக்களே நிறைந்திருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய முந்நூறு யானைகள் தொகுப்பைப் பற்றியும் கௌரிஷங்கரைப் பற்றியும் விரிவாக அவருடைய கதாவிலாசத்தில் எழுதியிருப்பார். அவருடைய கதைகளின் வடிவ நேர்த்தி என்னை மிகவும் பாதித்தது. கதைமொழியைப் பற்றி, கதையில் பாரா பிரிப்பதைப் பற்றி, கதையின் முதல்வரி, கதையின் கடைசிவரி, என்று நிறையப் பேசுவார். அவருடைய கதைகளில் ரேஷன் கடை, தலைவாழை, மிச்சம், முந்நூறு யானைகள், ஆகியவை மிக முக்கியமான கதைகளாகத் தோன்றுகின்றன. கவிதைகளில் கூட அந்தக்காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த புவியரசு, கங்கை கொண்டான், இவர்களின் சாயலும், மத்திய தரவர்க்கத்து காதல் ஏக்கம், கிளிஷேக்களுமாக இருந்தன என்று இப்போது தோன்றுகிறது. அவருடைய படைப்புகள் குறித்த விமரிசனங்களை மூர்க்கமாக எதிர்ப்பவர் என்ற வகையில் தன்னுடைய படைப்புகள் குறித்து அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர் கௌரிஷங்கர் என்று சொல்லலாம்.
கூடிப்பேசும் காந்தி மைதானத்தில் பல தடவை அவருடைய படைப்புகள் குறித்தும் விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அநேகமாக அங்கே விவாதங்களுட்படுத்தாத படைப்புகளே இல்லை என்று சொல்லலாம். கௌரிஷங்கருக்கு வருவாய்த்துறையில் வேலை கிடைத்த பிறகு அவருடைய இலக்கிய நாட்டம் மெல்ல மெல்லக்குறைந்து போனது. மிக நீண்ட காலம் வேலையில்லாமல் போராடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ வேலையில் தீவிரப்பிடிப்பும், வருவாய்த்துறைக்கே உரிய குணாதிசயங்களும் அவரிடம் வந்து விட்டன. எனக்கும் வேலை கிடைத்து திருவண்ணாமலை விருத்தாசலம், கொரடாச்சேரி, நெய்வேலி, என்று சுற்றிக் கொண்டிருந்தபோது கோவில்பட்டிக்குச் செல்லும் விடுமுறை நாட்களில் மாரீஸ், சாரதி, சிவசு, பாலு, ரெங்கராஜ், என்ற அளவில் என் பழக்கமும் குறைந்து விட்டது. கோவில்பட்டியில் சுழன்றடித்த கலாச்சாரப்புயல் கரை கடந்து விட்டது என்று கற்பனை செய்து கொண்டேன்.
நீண்ட கால வேலைக்குப்பின் தாசில்தாராக, டெபுடி கலெக்டராக பணி ஓய்வு பெற்ற கௌரிஷங்கருக்கு சமகால இலக்கியத் தொடர்பே இல்லாமல் போனது. அவரும் மீண்டும் அந்தத் தொடர்பை ஏற்படுத்தி விட முனைந்தார். வம்சி பதிப்பகத்திலிருந்து பின் செல்லும் குதிரை என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பும் அன்றில் என்ற தலைப்பில் கவிதைத்தொகுப்பும் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தித்த கௌரிஷங்கரிடம் பழைய கம்பீரம் இல்லை. இலக்கியம் பற்றி பேச்சு வரும்போது கொஞ்சம் தயங்கினார். தன்னுடைய படைப்புகள் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. மீண்டும் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்போதும் அவர் எழுபதுகள், எண்பதுகள் குறித்து பேசும்போது ஆதெண்டிக்காகப் பேசுவார். விவாதங்களில் முனைப்பாகப் பேசுவார். சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். சந்திக்கும் நேரங்களில் மிகுந்த உற்சாகத்தோடும், பாராட்டுகளோடும் என்னிடம் பேசுவார். கௌரிஷங்கரின் ஆக்ரோஷத்துக்கு நேர் எதிரான மென்மையான போக்குடைய கவிஞர் தேவதச்சன் தான் அவருடைய நீண்டகால நண்பர். இருவரும் பல விஷயங்களில் முரண்பாடுடையவர்கள் என்றாலும் தினமும் சந்தித்து அளாவளாவுவார்கள். தேவதச்சனைப் பார்க்க வருகிற கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்களோடு கௌரிஷங்கரும் விவாதிப்பார். சிலசமயம் பழைய ஆவேசமான கௌரிஷங்கரைப் பார்க்க முடியும்.
ஒரு வருடத்துக்கு முன் முதல் நெஞ்சுவலி வந்தபிறகு மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார். நேற்று முன்தினம் 18-12-15 இரவு மறுபடியும் வந்த நெஞ்சுவலியை மரணத்தின் முதல் அழைப்பென அவர் நினைத்துப்பார்க்கவில்லை. ஆங்கில மருத்துவம் படிக்கும் மகனின் சொல்லையும் கேட்கவில்லை. அவருடைய படைப்புகள் மீது அவருக்கிருந்த நம்பிக்கையைப் போல அவருடைய உயிரின் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. நேற்று 19-12-15 காலையிலிருந்து விட்டு விட்டு வந்த வலியையும் பொறுத்துக் கொண்டார். மாலைவரை வலியின் வேகம் கூடி மருத்துவரும் கைவிட்ட சில மணித்துளிகளில் எழுத்தாளர் கௌரிஷங்கர் காலமாகி விட்டார்.
கோவில்பட்டியில் மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் பண்பாட்டுஅசைவுகளுக்கும், கலாச்சாரமேன்மைக்கும் மொழிக்கும், இலக்கியத்துக்கும், பங்களிப்பு செய்தவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி அந்த ஊர் அறிவதில்லை. 70-களிலும், 80,-களிலும் கோவில்பட்டியில் நிகழ்ந்த பண்பாட்டு நிகழ்வுகளின் சூட்சுமமான விளைவுகள் காந்தி மைதானத்திலும், கதிரேசன் கோவில் மலையிலும், புழுதி பறக்கும் கோவில்பட்டி தெருக்களிலும் பரவிக் கிடக்கின்றன. கௌரிஷங்கரும் அப்படியான பங்களிப்பைச் செய்தவர். காலம் மாறியிருக்கலாம். இன்று அவருடைய படைப்புகளுக்கு மிகக்குறைந்த மதிப்பே கிடைக்கலாம். ஆனாலும் என்ன? அவர் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது.
இன்று காலை தகவல் தெரிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவருடைய இல்லத்துக்குப் போயிருந்தோம்.. மிகக்குறைவான ஆட்கள் அதுவும் உறவினர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். மரணத்தைப் போல குளிர்ந்த அந்த கண்ணாடிப்பெட்டியில் பட்டு வேஷ்டியும் பட்டுச்சட்டையும் அணிந்து கண்களை மூடிக் கிடந்தார் எங்கள் கௌரிஷங்கர்! அவருடைய உதடுகளில் நுரை தள்ளியிருந்தது. வலியை மென்று முழுங்கி வெளியான அந்த நுரை இன்னும் காயவில்லை. நெஞ்சு ஒரு கணம் அதிர்ந்தது. அவருடைய உதடுகளில் இன்னும் அவர் பேசுவதற்காக மிச்சம் வைத்திருக்கும் அந்தத் தர்க்கம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
எங்கள் அன்புக்குரிய ஆசானே போய் வாருங்கள்!

உங்கள் படைப்புகள் எங்களோடு வாழும்! 

நன்றி- உயிரெழுத்து ஜனவரி 2016

Monday, 1 September 2014

இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

உதயசங்கர்ki.ra

அன்று மழை பெய்து கொண்டிருந்தது

மாரிஸும் நானும்

இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து

நடந்து வந்து கொண்டிருந்தோம்

உங்கள் வீட்டிற்கு நயினா..

கந்தகபூமியின்

கரிசல்காட்டு மக்களின்

மனசின் ஈரம் போல

வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்

ஓலைப்பாயில் மோளும்

ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்

ஆரவாரமான கூப்பாடுகள்

வசியம் செய்து

வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்

உங்கள் இனிய குரலால்

உங்களிடமிருந்து

புதிய தகவலோ வாழ்வநுபவமோ

முன்கூட்டியே

ஒரு மெலிதான செருமலை

அனுப்பி வைக்கும் எங்களுக்கு

இலக்கியத்தை மட்டுமில்லை

வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று

வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்

உங்கள் மென்மையான குரலில்

2

இருளும் ஒளிரும்

விருவோடிய மண்ணை

வெறித்தபடி திரிந்தோம்

விரக்தியுடன் நாங்கள்

மெலிந்துயர்ந்த உருவத்தில்

அதிராத நடையில்

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமனுஜன்

என்று எல்லோருக்கும் அன்பான

எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்

கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்

நீங்கள் கரிசல்க்காட்டை

உழுது வைக்கச் சொன்னீர்கள்

மழை வருமா என்றோம்

நீங்கள் எங்களிடம்

விதை விதைக்கச் சொன்னீர்கள்

முளைக்குமா என்றோம்

எங்களை வெள்ளாமைக்குத்

தயாராகச் சொன்னீர்கள்

வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்

தீர்க்கதரிசி நீங்கள்

மழை பொழிந்தது

விதை முளைத்தது

வெள்ளாமை வீடு சேர்ந்தது

வாய்மொழி இலக்கியமாம்

வட்டார இலக்கியமாம்

கரிசல் இலக்கியமாம்

என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்

இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று

புல்லரித்து அலைகிறார்கள்

பிராமண வெள்ளாள மேலாண்மை

இலக்கியக் கரம்பைக்கட்டிகளை

உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்

தமிழிலக்கியத்திற்கு

புதிய திசை காட்டினீர்கள்

தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்

புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது

இப்போது

3

மடிசஞ்சியான

மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்

உழைக்கும் கிராமத்தான்களும்

உரிமை கோர வைத்தவர் நீங்கள்

விதவிதமான பசியை மட்டுமல்ல

கரிசல்க்காட்டு பண்டங்களின்

விதவிதமான ருசிகளையும்

சொன்னீர்கள்

கரிசல்ச்சீமையின்

புதிய எழுத்தாளர் படையை

அணி திரட்டியவர் நீங்கள்

கரிசல் இலக்கியத்தின்

மூலவர் நீங்கள்

உற்சவ மூர்த்தியும் நீங்களே

இப்போது வெக்கையும்

வியர்வையும் பொங்கும்

புதிய மனிதர்கள்

புதிய இலக்கியத்துக்குள்

நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்

4

தேசிய நெடுஞ்சாலையில்

கடக்கும்போதெல்லாம்

ஒரு குழந்தையின்

குதூகலம் பொங்கிவரும்

இடைசெவலைப் பார்க்கும்போது

எங்கள் ஞானத்தந்தை

சுற்றித் திரிந்த பூமியல்லவா

5

இன்னும்

ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்

உங்கள் வீட்டிற்கு

நடந்து கொண்டிருக்கிறோம்

நானும் மாரீஸும்

ஒரு நூற்றாண்டாய் மழை

பெய்து கொண்டிருக்கிறது

கனிவான சிரிப்புடனும்

கருப்பட்டிக் காப்பியுடனும் நீங்கள்…

Sunday, 7 April 2013

சாகச சந்நியாசி விமலாதித்தமாமல்லன்

உதயசங்கர்maamallan

கோவில்பட்டிக்கு எழுத்தாளர் ஜோதிவிநாயகம் வருகை தந்த பிறகு எங்கள் இலக்கிய, அரசியல், தத்துவப்பார்வை மேலும் விரிவடைந்தது. அவருடைய நுட்பமிக்க பார்வை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கட்சி சாராத இடதுசாரியாகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதனால் கட்சியின் நலன்சார்ந்த பார்வைகளைத் தாண்டிய இடதுசாரித் தத்துவங்களை, அரசியல் பார்வைகளை, மார்க்சீயஇலக்கிய விமர்சனங்களை வாசித்து எங்களிடம் வியாக்கியானம் செய்தார். எங்களை கட்சி உறுப்பினராக்குவதற்காகவே தூண்டில் போட்டுப் பிடித்த கட்சித்தோழர்களுக்கு அவருடைய இந்த வியாக்கியானங்கள் உவப்பாகவில்லை. அவர் உச்சரித்த கிராம்ஷி, ஜார்ஜ் லூகாக்ஸ், டெர்ரி ஈகிள்டன், டிராட்ஸ்கி, போன்ற பெயர்களும் இலக்கியம், பண்பாடு, குறித்த அவர்களுடைய பார்வையும் எங்களிடம் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தின.

ஜோதியிடம் நான் கண்ட ஒரு அபூர்வமான குணம் என்னவென்றால் அவர் ஒரு விஷயத்தையோ, ஒரு அநுபவத்தையோ மற்றவர்களிடம் ஒரு முறை சொல்லுவதோடு நிறுத்தமாட்டார். பார்க்கிற ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார் அல்லது விவாதித்துக் கொண்டேயிருப்பார். மேலோட்டமாக கேட்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லுவதைக் கேட்பதனால் ஒரு சலிப்பு உண்டாவதைப்போல இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவர் அந்த அநுபவத்தின் அல்லது கருத்தின் சாராம்சத்தை இன்னும் விளக்கமாக, இன்னும் நுட்பமாக அவரே புரிந்து கொள்ள செய்கிற முயற்சியாகவே எனக்குத் தெரியும். புதிது புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தார். விரிந்த படிப்பாளியில்லை. ஆனால் ஆழமான சிந்தனையாளர். கொஞ்சமாக வாசித்து அதன் வழியே வாழ்வின் சாராம்சத்தை கண்டுணரும் ஆவல் அவரிடம் இருந்தது. சிறந்த உரையாடல்காரர். எனக்கு தினமும் புதிதாக அவர் தெரிந்தார். எழுத்தில் மிக மோசமான கருமி. மிகக்குறைவாகவே எழுதுவார். ஆனால் அவருடைய சிறுகதைகள் ரெம்ப வித்தியாசமானதாக இருந்தன. வாசிக்கும்போது இதுவரை நாம் எதிர்கொண்டிராத ஒரு அபூர்வமான உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நான் எழுத ஆரம்பித்து கொஞ்ச நாட்களாகியிருந்தது. அப்போது தான் எழுந்து நடக்கத் தொடங்கிய குழந்தை தன் நிலையில்லாமல் தத்தக்கா புத்தக்கா என்று நடப்பதைப்போல கன்னாபின்னாவென்று எழுதிக்கொண்டிருந்தேன். அதைவிடக் கொடுமை எழுதியதையெல்லாம் ஜோதியிடம் கொண்டுபோய் படிக்கக் கொடுத்தேன். அவரும் பொறுமையாகப் படித்து அவருடைய அபிப்ராயங்களைச் சொன்னார். மனதார தன் ஆலோசனைகளைச் சொன்னார். இதனால் எனக்கு மேலும் நெருக்கமாகி விட்டார். இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே.

ஒருமுறை அவரிடம் ஏன் அவர் கொஞ்சமாக எழுதுகிறார் என்று கேட்டதுக்கு அவர் நீங்கள் சோறு பொங்குறீங்க..சோறு அன்றாடம் சாப்பிட்டே ஆகணும் உயிர்தங்க வேறுவழியில்லை. நான் முந்திரிப்பருப்பு தயாரிக்கிறேன். எப்பவாவது சாப்பிட்டா தான் ருசி. என்று ஒரு வியாக்கியானம் சொன்னார். நானும் கோணங்கியும் அவருடைய அறையில் கிடையாகக் கிடந்தோம். அந்த நேரத்தில் தான் தேடல் பத்திரிகை வெளிவந்தது. கிட்டத்தட்ட கோவில்பட்டி இலக்கியமையம் விளாத்திகுளத்தை நோக்கி நகர்ந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் நிறைய எழுத்தாளர்கள் கோவில்பட்டிக்கு வராமலேயே விளாத்திகுளத்தை நோக்கிப் படையெடுத்தனர். வேறுவழியில்லாமல் கோவில்பட்டி எழுத்தாளர்களும் விளாத்திகுளத்துக்கு அன்றாடம் போய்வந்தும் ஜோதியின் அறையில் தங்கியும் இருந்தனர். ஜோதியின் செலவில் அவர் கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் மாதம் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தோம். அப்படித்தான் ஒரு முறை நானும் கோணங்கியும் கோவில்பட்டியிலிருந்து தோழர்களிடம் வழிச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு விளாத்திகுளத்துக்கு விடியற்காலையில் முதல் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம். அறையில் ஜோதி இல்லை. கம்மாய் வரை போயிருப்பதாக பக்கத்து வீட்டில் சொன்னார்கள். சரி என்று நாங்களும் கம்மாயைப் பார்த்து நடையைக் கட்டினோம். அந்தக் கம்மாயில் பெரிய ஆலமரம் ஒன்று பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. அதற்குக் கீழே ஒரு சிறுகூட்டம் நடந்து வந்து கொண்டிருந்ததுதான் முதலில் கண்ணில் பட்டது. அந்தக் கூட்டத்தில் செக்கச்சிவப்பாக ஒரு இளைஞன் காவியுடை தரித்து அடர்ந்து வளர்ந்த தாடியுடன் ஒளி சிந்தும் முகத்துடன், சுத்தியிருந்த கரிசக்காட்டுக் கறுப்பர்கள் நடுவே ஒரு கையை அருளாசி வழங்குகிற மாதிரி தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் கம்மாய்க்குச் சென்று கொண்டிருந்த கிராமத்துமக்கள் அந்தச் சாமியாரைப் பார்த்து கைகூப்பி வணங்கினர். அருகில் ஜோதி ஒரு புன்முறுவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் நெருங்கியதும் அந்த உருவத்தின் தேஜஸைப் பார்த்து சற்றுப் பின்வாங்கினேன். ஜோதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் விமலாதித்தமாமல்லன். ஆளுக்கேத்த மாதிரி பேரும் இருந்தது. அவர் புன்முறுவலோடு எங்களிடம் அறிமுகம் ஆனார். ஆனால் அவர் கண்களில் ஒரு அமைதியின்மையையும், குறும்பையும் காண முடிந்தது. வெகுநாள் பழகிய நண்பர்கள் போல ரெம்பச் சகஜமாகப் பேசிக்கொண்டு வந்தார். ஆனால் அறைக்கு வரும்வரை எதிரில் வந்தவர்களுக்கு அருளாசி வழங்கத் தான் அவருக்கு சரியாக இருந்தது.

இந்த வாழ்வின் மீது ஏற்பட்ட சலிப்பினாலும், நெருக்கடியினாலும் முற்றும் துறந்த சந்நியாசியாகப் போய்விட முடிவு செய்து கையில் ஒரு நயாபைசா இல்லாமல் உடுத்திய காவித்துணிகளோடு கிளம்பிவிட்டதாகவும், அப்படியே நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தரராமசாமி தொடங்கி ஒவ்வொரு ஊராக இறங்கி எழுத்தாளர்களைச் சந்தித்தபடியே வந்து கொண்டிருந்தார். அவர் சந்தித்த எல்லா எழுத்தாளர்களும் அவரிடம் லௌகீகவாழ்விலிருந்து கொண்டே இலக்கியப்பரிசாரகம் செய்யலாம் என்றும் அதற்காக முற்றும் துறக்கவேண்டியதில்லை என்றும் அதோடு தமிழ்ச்சமூகத்தில் ஒருவர் முழுநேரமும் எழுத்தாளராக வாழமுடியாது என்றும் நம்முடைய முன்னோடிகளான பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் தொடங்கி இன்றைய கவிஞர் விக்கிரமாதித்தயன் வரை தமிழ்ச்சமூகத்தில் வறுமையில் உழன்றே வாழ்ந்த கதையெல்லாம் சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். அவரும் தமிழ்ச்சமூகத்தின் துரதிருஷ்டத்தை நினைத்தபடியே சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போகும்வழியில் எழுத்தாளர்களைச் சந்தித்துக் கொண்டேயிருந்தார். அந்தப்படியே தான் விளாத்திகுளவிஜயமும்.

இரண்டு நாட்கள் தங்கியிருந்தார் என்று ஞாபகம். ஜோதியின் அறையை அதகளம் பண்ணிவிட்டோம். கோணங்கி யாருடனும் உடனே டா டே போட்டு பழகிவிடுவான். நான் கொஞ்சம் தயக்கத்தோடுதான் பழகுவேன். மாமல்லன் என் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். என்னிடம் மிகுந்த உரிமையோடு பழகி என் கூச்சஉணர்வைப் போக்கினார். இரண்டே நாட்களில் அத்யந்த நண்பர்கள் போல ஆகிவிட்டோம். அவருடனான உரையாடலில் சலிப்பூட்டும் பெருநகரவாழ்வின் அழுத்தத்தினால் சாகசங்களை விரும்புகிற ஒரு கலகக்காரனாகவே நான் அவரைக் கற்பனை செய்து கொண்டேன். எல்லாமதிப்பீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தினார். எல்லாஎழுத்தாளர்களையும் விமர்சனம் செய்தார். எல்லா அரசியல் நிலைபாடுகளையும் கேலி செய்தார். முதலில் அவருடைய துணிச்சலும், தயவுதாட்சண்யமில்லாத விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தன. யாரையும் முகம் பாராமல் தூக்கியெறிந்து பேச அவரால் முடிந்தது. தன்னை ஒரு கலகக்கார இலக்கியவாதியாகவே வரித்துக் கொண்டார். எந்த இலக்கியக்கூட்டமாக இருந்தாலும் விமலாதித்த மாமல்லன் அங்கு ஆஜராகி கூட்ட ஏற்பாட்டாளருக்கும், பிரதான எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கும் கிலியை உண்டு பண்ணினார். கூட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பிவிடும் வல்லமை அவருக்கு இருந்தது. இதில் உடனடியாக ஒரு நேர்மறைப்பலனும் இருந்தது. எல்லோரும் யார் இந்த விமலாதித்தமாமல்லன் என்று கவனித்தனர். அவருடைய கதைகளை வாசித்தனர். அவருடைய கதைகளுக்கு உடனடியான வாசகபலம் கூடியது. விமர்சனக்கவனிப்புகள் குவிந்தன. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே கன்னியாகுமரி முதல் சென்னை வரை இலக்கியவாதிகளிடம் பிரபலமாகி விட்டார். எதிர்மறைப்பலனும் இருந்தது. அந்தக்கலகக்குரல் காரணமாகவே அவரை எல்லோருக்கும் பிடிக்காமல் போய்விடும் ஆபத்து இருந்தது. அதை உணர்ந்தும் அவர் அப்படியே நடந்து கொண்டார். அதற்குக் காரணம் போலித்தனங்களோடு சமரசம் கொள்ள முடியாத கூருணர்வும், முழுமையை நோக்கிய தேடலும் தான் என்று நானாக நினைத்துக் கொள்கிறேன். அதனால் தான் அவரால் எதையும் யாரையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதையும் யாரையும் முழுமையாகச் சார்ந்து இருக்கவும் முடியவில்லை. எதிலும் திருப்தியில்லாமல், எப்போதும் அவருடைய மனமெனும் குளத்தில் தொடர்ந்து அலையடித்துக் கொண்டேயிருந்தது. அந்த அலைகள் அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. அதனால் தான் இரண்டுமுறை மிக இளம் வயதிலேயே சந்நியாசம் ஏற்கும் மனநிலைக்கும் பாபா ஆம்தேவின் இந்திய ஒருமைப்பாட்டுக்காக கன்னியாகுமரியி முதல் காஷ்மீர் வரை சைகிள் பயணம் போனதும், நாடகக்காரராக, சினிமாக்காரராக, தொலைக்காட்சிக்கலைஞராக, அவர் மனம் அலையடித்த இடத்துக்கெல்லாம் ஆவேசத்தோடு அலைந்து கொண்டேயிருந்தார். சமரசமில்லாமல் அவர் இந்த உலகத்தோடு சண்டைபோடும் மனநிலையில் இருந்தார். இலக்கிய உலகில் என்றில்லை; தெருக்களிலும் நியாயமில்லை என்று அவர் உணர்ந்து விட்டால் எதிலும் போய் தலையிட்டு கலகம் செய்கிறவர். ஆனால் அடிப்படையில் அன்புக்காக ஏங்குகிற ஒரு குழந்தையைப் போல மிகுந்த பிரியமுள்ளவர். எந்தப்பாசாங்குமின்றி உண்மையாக இருப்பவர்களிடம் அதே மாதிரியான உண்மையுணர்வுடன் நடந்து கொள்கிறவர். அவரை யாருக்கும் பிடிக்கவும் இல்லை. அதனாலேயே கூட அவருடைய சிறுகதைகளின் மேன்மை தமிழிலக்கியத்தில் போதிய கவனம் பெறவில்லையோ என்று நினைக்கிறேன்.

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நானும் அவரும் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தோம். 1983-ல் அறியாத முகங்கள் என்ற அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பும், 1986-ல் முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள் மற்ரும் பிற கதைகள் என்ற சிறுகதைதொகுப்பும், 1994-ல் உயிர்த்தெழுதல் என்ற சிறுகதைத் தொகுப்பும், 2010-ல் விமலாதித்தமாமல்லன் கதைகள் என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைகளில் அலுவலகம், அதிலேயே வாழ்ந்து வரும் அதிகாரிகள், குமாஸ்தாக்கள், நான்காம்நிலை சிப்பந்திகள் என்றொரு உலகமும், சென்னையின் வறட்சியான, வெறுமையான, யந்திரமயமான உறவுகளும், வாழ்க்கையும் அதன் சகல கோரமான பக்கங்களும் நேர்த்தியாகவும், செறிவாகவும் பதிவாகியிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் குடும்பத்தின் போலியான உறவுமுகங்களின் கிழிந்து தொங்கும் வாழ்வின் அநுபவங்கள் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. செறிவான மொழியும், தேர்ந்த கட்டமைப்பும், அநுபவங்களின் மீதான விசாரணையும், இந்தக் கதைகளை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. சமூகப்பிரச்னைகளை எள்ளலோடும், அமானுஷ்யமான அநுபவங்களின் அதிசயமான உணர்வும் அந்தக்கதைகளைத் தாண்டியும் நம்மை யோசிக்க வைக்கிறது. ஆனால் எல்லாக்கதைகளின் அடிநாதமும் இந்த வாழ்வின் மதிப்பீடுகள் குறித்த விசாரணை தான். மதிப்பீடுகள் குறித்த விமர்சனம் தான். ஒரே நேரத்தில் சிறந்த கதைசொல்லியாகவும், தேர்ந்த சிறுகதைக்கலைஞராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் விமலாதித்தமாமல்லன். மிகக்குறைந்த கதைகளே எழுதியுள்ள மாமல்லன் தமிழ்ச்சிறுகதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக சிறுமி கொண்டு வந்த மலர், முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள், என்ற சிறுகதைகள் இரண்டும் தமிழ்ச்சிறுகதைக்கு மாமல்லன் கொடுத்த கொடையெனச் சொல்லலாம்.

வேலை தேடி சென்னையை நோக்கி வரிசையாக கோவில்பட்டியிலிருந்து படையெடுப்பு நடந்தது. முதலில் கௌரிஷங்கரும், வித்யாஷங்கரும், பின்னர் மனோகரும் சென்றனர். வித்யாஷங்கர் பத்திரிகையிலும் சினிமாவிலுமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் தான் எனக்கு எழுதிய கடிதங்களில் ஊரில் சூழல் சரியில்லையென்றால் சென்னைக்கு வா பார்க்கலாம் என்று தைரியம் சொன்னவர். வீட்டிலும் நெருக்கடி அதிகமாகவே சென்னை சென்று என் நல்வாய்ப்பைப் பரிசோதித்து விடுவதெனத் தீர்மானித்தேன். அதோடு சென்னையி கால் வைத்தால் போதும் நம்ம அறிவுக்கு எப்படியும் பொழச்சுக்கலாம்னு ஒரு நப்பாசை. நானும் சென்னைப்பட்டணம் பிரயாணமானேன். எங்களுடைய சிருஷ்டி என்ற நாடகக்குழு ஒரு நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை போகும்போது நானும் அப்படியே சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுகளோடு ரயில் ஏறினேன். எங்களுடைய கோவில்பட்டி அப்போது மிஞ்சிப் போனால் பத்துபதினைஞ்சு தெருக்களோடும் ஒரே ஒரு கடைத்தெருவும், மூன்று சினிமா தியேட்டர்களும் கொண்டு ஒரு ஒன்றரை கி.மீ. சுற்றளவுக்குள் தான் இருக்கும். ஆனால் சென்னை?

இறங்கியதிலிருந்து என் பதட்டம் தணியவில்லை. பிரம்மாண்டங்களும், சாலைகளும், திசையில்லாத சாலைகளும், எங்கு பார்த்தாலும் விதவிதமான மனிதர்களுமாக சென்னை வெருட்டியது. நாடகவிழா முடிந்து தோழர்கள் எல்லாம் ஊர் திரும்பிவிட்டார்கள். நான் கோவில்பட்டித் தோழர் சி.எஸ்.சின் அறையில் தங்கியிருந்தேன். அப்போது விமலாதித்தமாமல்லன் வேலையில் சேர்ந்து விட்டார். செண்ட்ரல் எக்ஸைஸ் என்று இப்போது ஞாபகத்தில் நிழலாடுகிறது. அவருடைய அலுவலகத்துக்குச் சென்று பார்த்தேன். அவருக்கு தெக்கத்தி இலக்கியவாதிகள் மீது தனீ பிரீதி. அதன்பிறகு சென்னை விட்டு வரும்வரை அவருடைய கைப்புள்ளையாகவே இருந்தேன். அவருடைய அலுவலகத்துக்கு மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளி வழியாக எஸ்.ஐ.இ.டி.கல்லூரி தாண்டி தினமும் நடந்து போவேன். அவர் அலுவலகம் முடிந்ததும் அவருடைய சைக்கிளில் என்னை டபுல்ஸ் ஏற்றிக்கொள்வார். என் வேலை விஷயமாகவும், இலக்கியக்கூட்டங்களுக்கும் போவோம். அங்கேயும் அப்படித்தான். எல்லாக்கூட்டங்களிலும் அவருடைய குரல் அவருடைய சிறுகதைகளைப் போல தனித்து ஒலிக்கும். தெருக்களில் செல்லும்போதும் அவருக்கு நியாயமில்லாத எந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும் உடனே சைக்கிளை நிறுத்தி அங்கே போய் தலையிடுவார். எனக்குப் பயமாக இருக்கும். ஆனால் கொஞ்சநாட்களில் எனக்குப் பழகிவிட்டது. நானும் சென்னை பிஸ்தாவாகிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் என் கனவில் ஒரு நாள் கடும்மழை பெய்தது. என் குணாதிசயத்துக்கு மாறாக நான் கட்ட ஆசைப்பட்ட என் கனவுக்கோட்டை சிலபல துளிகளிலேயே கரைந்து போய் விட்டது. எழுதியதே மறந்து போன ஒரு ரயில்வே சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். அதற்கான அறிவிப்புக் கடிதம் ஊருக்கு வந்திருந்தது. உடனே ஊரிலிருந்து கிளம்பிவரச்சொல்லி கடிதம் வர சென்னை என்னிடமிருந்து பிழைத்துக் கொண்டது. ( இப்படித்தாய்யா கொள்ளைப் பேரு சொல்லிக்கிட்டு திரியிறீங்க என்ற சென்னையின் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.)

விமலாதித்தமாமல்லன் நிறைய எழுதவில்லையோ என்று சந்தேகப்படுகிறேன். அல்லது எனக்குத் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறேன். ஏனெனில் நான் சென்னையை விட்டு வந்தபிறகு அவருடனான தொடர்பு விட்டுப்போயிற்று. இடையறாது உறவுகளைப் பேணுவதிலும் தொடர்புகளைக் காப்பாற்றுவதிலும் நான் மிகவும் பலகீனமானவன். மிக நீண்ட வருடங்களாகிவிட்டது மாமல்லனைப் பார்த்து. ஆனால் சென்னையின் சாலைகளில் சைக்கிள் முன்பார் கம்பியில் என்னை உட்காரவைத்து சுற்றித் திரிந்த அந்த துறுதுறு இளைஞன் விமலாதித்தமாமல்லனை என்னால் மறக்கவே முடியாது. இன்று ஜோதிவிநாயகம் இல்லை ஆனால் அன்று அவருடைய தோழமையின் வழி எனக்குக் கிடைத்த அத்தனை நண்பர்களுக்கும், நான் கண்டடைந்த அறிவுக்கும் என் அன்புக்குரிய ஜோதிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.,அன்று ஜோதி இல்லையென்றால் எனக்கு விமலாதித்தமாமல்லனின் நட்பு கிடைத்திருக்காது. மாமல்லனின் நட்பு இல்லையென்றால் நான் சென்னையில் ஒரு நாள்கூடத் தங்கியிருக்க மாட்டேன். என் இனிய நண்பா மாமல்லன்! நம் இளமைக்காலநட்பை நினைத்து பெருமிதமடைகிறேன். நண்பா…மாமல்லனே…