Showing posts with label ஜோதிவிநாயகம். Show all posts
Showing posts with label ஜோதிவிநாயகம். Show all posts

Sunday, 7 April 2013

சாகச சந்நியாசி விமலாதித்தமாமல்லன்

உதயசங்கர்maamallan

கோவில்பட்டிக்கு எழுத்தாளர் ஜோதிவிநாயகம் வருகை தந்த பிறகு எங்கள் இலக்கிய, அரசியல், தத்துவப்பார்வை மேலும் விரிவடைந்தது. அவருடைய நுட்பமிக்க பார்வை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கட்சி சாராத இடதுசாரியாகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதனால் கட்சியின் நலன்சார்ந்த பார்வைகளைத் தாண்டிய இடதுசாரித் தத்துவங்களை, அரசியல் பார்வைகளை, மார்க்சீயஇலக்கிய விமர்சனங்களை வாசித்து எங்களிடம் வியாக்கியானம் செய்தார். எங்களை கட்சி உறுப்பினராக்குவதற்காகவே தூண்டில் போட்டுப் பிடித்த கட்சித்தோழர்களுக்கு அவருடைய இந்த வியாக்கியானங்கள் உவப்பாகவில்லை. அவர் உச்சரித்த கிராம்ஷி, ஜார்ஜ் லூகாக்ஸ், டெர்ரி ஈகிள்டன், டிராட்ஸ்கி, போன்ற பெயர்களும் இலக்கியம், பண்பாடு, குறித்த அவர்களுடைய பார்வையும் எங்களிடம் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தின.

ஜோதியிடம் நான் கண்ட ஒரு அபூர்வமான குணம் என்னவென்றால் அவர் ஒரு விஷயத்தையோ, ஒரு அநுபவத்தையோ மற்றவர்களிடம் ஒரு முறை சொல்லுவதோடு நிறுத்தமாட்டார். பார்க்கிற ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார் அல்லது விவாதித்துக் கொண்டேயிருப்பார். மேலோட்டமாக கேட்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லுவதைக் கேட்பதனால் ஒரு சலிப்பு உண்டாவதைப்போல இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவர் அந்த அநுபவத்தின் அல்லது கருத்தின் சாராம்சத்தை இன்னும் விளக்கமாக, இன்னும் நுட்பமாக அவரே புரிந்து கொள்ள செய்கிற முயற்சியாகவே எனக்குத் தெரியும். புதிது புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தார். விரிந்த படிப்பாளியில்லை. ஆனால் ஆழமான சிந்தனையாளர். கொஞ்சமாக வாசித்து அதன் வழியே வாழ்வின் சாராம்சத்தை கண்டுணரும் ஆவல் அவரிடம் இருந்தது. சிறந்த உரையாடல்காரர். எனக்கு தினமும் புதிதாக அவர் தெரிந்தார். எழுத்தில் மிக மோசமான கருமி. மிகக்குறைவாகவே எழுதுவார். ஆனால் அவருடைய சிறுகதைகள் ரெம்ப வித்தியாசமானதாக இருந்தன. வாசிக்கும்போது இதுவரை நாம் எதிர்கொண்டிராத ஒரு அபூர்வமான உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நான் எழுத ஆரம்பித்து கொஞ்ச நாட்களாகியிருந்தது. அப்போது தான் எழுந்து நடக்கத் தொடங்கிய குழந்தை தன் நிலையில்லாமல் தத்தக்கா புத்தக்கா என்று நடப்பதைப்போல கன்னாபின்னாவென்று எழுதிக்கொண்டிருந்தேன். அதைவிடக் கொடுமை எழுதியதையெல்லாம் ஜோதியிடம் கொண்டுபோய் படிக்கக் கொடுத்தேன். அவரும் பொறுமையாகப் படித்து அவருடைய அபிப்ராயங்களைச் சொன்னார். மனதார தன் ஆலோசனைகளைச் சொன்னார். இதனால் எனக்கு மேலும் நெருக்கமாகி விட்டார். இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே.

ஒருமுறை அவரிடம் ஏன் அவர் கொஞ்சமாக எழுதுகிறார் என்று கேட்டதுக்கு அவர் நீங்கள் சோறு பொங்குறீங்க..சோறு அன்றாடம் சாப்பிட்டே ஆகணும் உயிர்தங்க வேறுவழியில்லை. நான் முந்திரிப்பருப்பு தயாரிக்கிறேன். எப்பவாவது சாப்பிட்டா தான் ருசி. என்று ஒரு வியாக்கியானம் சொன்னார். நானும் கோணங்கியும் அவருடைய அறையில் கிடையாகக் கிடந்தோம். அந்த நேரத்தில் தான் தேடல் பத்திரிகை வெளிவந்தது. கிட்டத்தட்ட கோவில்பட்டி இலக்கியமையம் விளாத்திகுளத்தை நோக்கி நகர்ந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் நிறைய எழுத்தாளர்கள் கோவில்பட்டிக்கு வராமலேயே விளாத்திகுளத்தை நோக்கிப் படையெடுத்தனர். வேறுவழியில்லாமல் கோவில்பட்டி எழுத்தாளர்களும் விளாத்திகுளத்துக்கு அன்றாடம் போய்வந்தும் ஜோதியின் அறையில் தங்கியும் இருந்தனர். ஜோதியின் செலவில் அவர் கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் மாதம் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தோம். அப்படித்தான் ஒரு முறை நானும் கோணங்கியும் கோவில்பட்டியிலிருந்து தோழர்களிடம் வழிச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு விளாத்திகுளத்துக்கு விடியற்காலையில் முதல் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம். அறையில் ஜோதி இல்லை. கம்மாய் வரை போயிருப்பதாக பக்கத்து வீட்டில் சொன்னார்கள். சரி என்று நாங்களும் கம்மாயைப் பார்த்து நடையைக் கட்டினோம். அந்தக் கம்மாயில் பெரிய ஆலமரம் ஒன்று பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. அதற்குக் கீழே ஒரு சிறுகூட்டம் நடந்து வந்து கொண்டிருந்ததுதான் முதலில் கண்ணில் பட்டது. அந்தக் கூட்டத்தில் செக்கச்சிவப்பாக ஒரு இளைஞன் காவியுடை தரித்து அடர்ந்து வளர்ந்த தாடியுடன் ஒளி சிந்தும் முகத்துடன், சுத்தியிருந்த கரிசக்காட்டுக் கறுப்பர்கள் நடுவே ஒரு கையை அருளாசி வழங்குகிற மாதிரி தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் கம்மாய்க்குச் சென்று கொண்டிருந்த கிராமத்துமக்கள் அந்தச் சாமியாரைப் பார்த்து கைகூப்பி வணங்கினர். அருகில் ஜோதி ஒரு புன்முறுவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் நெருங்கியதும் அந்த உருவத்தின் தேஜஸைப் பார்த்து சற்றுப் பின்வாங்கினேன். ஜோதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் விமலாதித்தமாமல்லன். ஆளுக்கேத்த மாதிரி பேரும் இருந்தது. அவர் புன்முறுவலோடு எங்களிடம் அறிமுகம் ஆனார். ஆனால் அவர் கண்களில் ஒரு அமைதியின்மையையும், குறும்பையும் காண முடிந்தது. வெகுநாள் பழகிய நண்பர்கள் போல ரெம்பச் சகஜமாகப் பேசிக்கொண்டு வந்தார். ஆனால் அறைக்கு வரும்வரை எதிரில் வந்தவர்களுக்கு அருளாசி வழங்கத் தான் அவருக்கு சரியாக இருந்தது.

இந்த வாழ்வின் மீது ஏற்பட்ட சலிப்பினாலும், நெருக்கடியினாலும் முற்றும் துறந்த சந்நியாசியாகப் போய்விட முடிவு செய்து கையில் ஒரு நயாபைசா இல்லாமல் உடுத்திய காவித்துணிகளோடு கிளம்பிவிட்டதாகவும், அப்படியே நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தரராமசாமி தொடங்கி ஒவ்வொரு ஊராக இறங்கி எழுத்தாளர்களைச் சந்தித்தபடியே வந்து கொண்டிருந்தார். அவர் சந்தித்த எல்லா எழுத்தாளர்களும் அவரிடம் லௌகீகவாழ்விலிருந்து கொண்டே இலக்கியப்பரிசாரகம் செய்யலாம் என்றும் அதற்காக முற்றும் துறக்கவேண்டியதில்லை என்றும் அதோடு தமிழ்ச்சமூகத்தில் ஒருவர் முழுநேரமும் எழுத்தாளராக வாழமுடியாது என்றும் நம்முடைய முன்னோடிகளான பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் தொடங்கி இன்றைய கவிஞர் விக்கிரமாதித்தயன் வரை தமிழ்ச்சமூகத்தில் வறுமையில் உழன்றே வாழ்ந்த கதையெல்லாம் சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். அவரும் தமிழ்ச்சமூகத்தின் துரதிருஷ்டத்தை நினைத்தபடியே சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போகும்வழியில் எழுத்தாளர்களைச் சந்தித்துக் கொண்டேயிருந்தார். அந்தப்படியே தான் விளாத்திகுளவிஜயமும்.

இரண்டு நாட்கள் தங்கியிருந்தார் என்று ஞாபகம். ஜோதியின் அறையை அதகளம் பண்ணிவிட்டோம். கோணங்கி யாருடனும் உடனே டா டே போட்டு பழகிவிடுவான். நான் கொஞ்சம் தயக்கத்தோடுதான் பழகுவேன். மாமல்லன் என் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். என்னிடம் மிகுந்த உரிமையோடு பழகி என் கூச்சஉணர்வைப் போக்கினார். இரண்டே நாட்களில் அத்யந்த நண்பர்கள் போல ஆகிவிட்டோம். அவருடனான உரையாடலில் சலிப்பூட்டும் பெருநகரவாழ்வின் அழுத்தத்தினால் சாகசங்களை விரும்புகிற ஒரு கலகக்காரனாகவே நான் அவரைக் கற்பனை செய்து கொண்டேன். எல்லாமதிப்பீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தினார். எல்லாஎழுத்தாளர்களையும் விமர்சனம் செய்தார். எல்லா அரசியல் நிலைபாடுகளையும் கேலி செய்தார். முதலில் அவருடைய துணிச்சலும், தயவுதாட்சண்யமில்லாத விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தன. யாரையும் முகம் பாராமல் தூக்கியெறிந்து பேச அவரால் முடிந்தது. தன்னை ஒரு கலகக்கார இலக்கியவாதியாகவே வரித்துக் கொண்டார். எந்த இலக்கியக்கூட்டமாக இருந்தாலும் விமலாதித்த மாமல்லன் அங்கு ஆஜராகி கூட்ட ஏற்பாட்டாளருக்கும், பிரதான எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கும் கிலியை உண்டு பண்ணினார். கூட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பிவிடும் வல்லமை அவருக்கு இருந்தது. இதில் உடனடியாக ஒரு நேர்மறைப்பலனும் இருந்தது. எல்லோரும் யார் இந்த விமலாதித்தமாமல்லன் என்று கவனித்தனர். அவருடைய கதைகளை வாசித்தனர். அவருடைய கதைகளுக்கு உடனடியான வாசகபலம் கூடியது. விமர்சனக்கவனிப்புகள் குவிந்தன. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே கன்னியாகுமரி முதல் சென்னை வரை இலக்கியவாதிகளிடம் பிரபலமாகி விட்டார். எதிர்மறைப்பலனும் இருந்தது. அந்தக்கலகக்குரல் காரணமாகவே அவரை எல்லோருக்கும் பிடிக்காமல் போய்விடும் ஆபத்து இருந்தது. அதை உணர்ந்தும் அவர் அப்படியே நடந்து கொண்டார். அதற்குக் காரணம் போலித்தனங்களோடு சமரசம் கொள்ள முடியாத கூருணர்வும், முழுமையை நோக்கிய தேடலும் தான் என்று நானாக நினைத்துக் கொள்கிறேன். அதனால் தான் அவரால் எதையும் யாரையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதையும் யாரையும் முழுமையாகச் சார்ந்து இருக்கவும் முடியவில்லை. எதிலும் திருப்தியில்லாமல், எப்போதும் அவருடைய மனமெனும் குளத்தில் தொடர்ந்து அலையடித்துக் கொண்டேயிருந்தது. அந்த அலைகள் அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. அதனால் தான் இரண்டுமுறை மிக இளம் வயதிலேயே சந்நியாசம் ஏற்கும் மனநிலைக்கும் பாபா ஆம்தேவின் இந்திய ஒருமைப்பாட்டுக்காக கன்னியாகுமரியி முதல் காஷ்மீர் வரை சைகிள் பயணம் போனதும், நாடகக்காரராக, சினிமாக்காரராக, தொலைக்காட்சிக்கலைஞராக, அவர் மனம் அலையடித்த இடத்துக்கெல்லாம் ஆவேசத்தோடு அலைந்து கொண்டேயிருந்தார். சமரசமில்லாமல் அவர் இந்த உலகத்தோடு சண்டைபோடும் மனநிலையில் இருந்தார். இலக்கிய உலகில் என்றில்லை; தெருக்களிலும் நியாயமில்லை என்று அவர் உணர்ந்து விட்டால் எதிலும் போய் தலையிட்டு கலகம் செய்கிறவர். ஆனால் அடிப்படையில் அன்புக்காக ஏங்குகிற ஒரு குழந்தையைப் போல மிகுந்த பிரியமுள்ளவர். எந்தப்பாசாங்குமின்றி உண்மையாக இருப்பவர்களிடம் அதே மாதிரியான உண்மையுணர்வுடன் நடந்து கொள்கிறவர். அவரை யாருக்கும் பிடிக்கவும் இல்லை. அதனாலேயே கூட அவருடைய சிறுகதைகளின் மேன்மை தமிழிலக்கியத்தில் போதிய கவனம் பெறவில்லையோ என்று நினைக்கிறேன்.

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நானும் அவரும் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தோம். 1983-ல் அறியாத முகங்கள் என்ற அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பும், 1986-ல் முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள் மற்ரும் பிற கதைகள் என்ற சிறுகதைதொகுப்பும், 1994-ல் உயிர்த்தெழுதல் என்ற சிறுகதைத் தொகுப்பும், 2010-ல் விமலாதித்தமாமல்லன் கதைகள் என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைகளில் அலுவலகம், அதிலேயே வாழ்ந்து வரும் அதிகாரிகள், குமாஸ்தாக்கள், நான்காம்நிலை சிப்பந்திகள் என்றொரு உலகமும், சென்னையின் வறட்சியான, வெறுமையான, யந்திரமயமான உறவுகளும், வாழ்க்கையும் அதன் சகல கோரமான பக்கங்களும் நேர்த்தியாகவும், செறிவாகவும் பதிவாகியிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் குடும்பத்தின் போலியான உறவுமுகங்களின் கிழிந்து தொங்கும் வாழ்வின் அநுபவங்கள் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. செறிவான மொழியும், தேர்ந்த கட்டமைப்பும், அநுபவங்களின் மீதான விசாரணையும், இந்தக் கதைகளை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. சமூகப்பிரச்னைகளை எள்ளலோடும், அமானுஷ்யமான அநுபவங்களின் அதிசயமான உணர்வும் அந்தக்கதைகளைத் தாண்டியும் நம்மை யோசிக்க வைக்கிறது. ஆனால் எல்லாக்கதைகளின் அடிநாதமும் இந்த வாழ்வின் மதிப்பீடுகள் குறித்த விசாரணை தான். மதிப்பீடுகள் குறித்த விமர்சனம் தான். ஒரே நேரத்தில் சிறந்த கதைசொல்லியாகவும், தேர்ந்த சிறுகதைக்கலைஞராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் விமலாதித்தமாமல்லன். மிகக்குறைந்த கதைகளே எழுதியுள்ள மாமல்லன் தமிழ்ச்சிறுகதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக சிறுமி கொண்டு வந்த மலர், முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள், என்ற சிறுகதைகள் இரண்டும் தமிழ்ச்சிறுகதைக்கு மாமல்லன் கொடுத்த கொடையெனச் சொல்லலாம்.

வேலை தேடி சென்னையை நோக்கி வரிசையாக கோவில்பட்டியிலிருந்து படையெடுப்பு நடந்தது. முதலில் கௌரிஷங்கரும், வித்யாஷங்கரும், பின்னர் மனோகரும் சென்றனர். வித்யாஷங்கர் பத்திரிகையிலும் சினிமாவிலுமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் தான் எனக்கு எழுதிய கடிதங்களில் ஊரில் சூழல் சரியில்லையென்றால் சென்னைக்கு வா பார்க்கலாம் என்று தைரியம் சொன்னவர். வீட்டிலும் நெருக்கடி அதிகமாகவே சென்னை சென்று என் நல்வாய்ப்பைப் பரிசோதித்து விடுவதெனத் தீர்மானித்தேன். அதோடு சென்னையி கால் வைத்தால் போதும் நம்ம அறிவுக்கு எப்படியும் பொழச்சுக்கலாம்னு ஒரு நப்பாசை. நானும் சென்னைப்பட்டணம் பிரயாணமானேன். எங்களுடைய சிருஷ்டி என்ற நாடகக்குழு ஒரு நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை போகும்போது நானும் அப்படியே சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுகளோடு ரயில் ஏறினேன். எங்களுடைய கோவில்பட்டி அப்போது மிஞ்சிப் போனால் பத்துபதினைஞ்சு தெருக்களோடும் ஒரே ஒரு கடைத்தெருவும், மூன்று சினிமா தியேட்டர்களும் கொண்டு ஒரு ஒன்றரை கி.மீ. சுற்றளவுக்குள் தான் இருக்கும். ஆனால் சென்னை?

இறங்கியதிலிருந்து என் பதட்டம் தணியவில்லை. பிரம்மாண்டங்களும், சாலைகளும், திசையில்லாத சாலைகளும், எங்கு பார்த்தாலும் விதவிதமான மனிதர்களுமாக சென்னை வெருட்டியது. நாடகவிழா முடிந்து தோழர்கள் எல்லாம் ஊர் திரும்பிவிட்டார்கள். நான் கோவில்பட்டித் தோழர் சி.எஸ்.சின் அறையில் தங்கியிருந்தேன். அப்போது விமலாதித்தமாமல்லன் வேலையில் சேர்ந்து விட்டார். செண்ட்ரல் எக்ஸைஸ் என்று இப்போது ஞாபகத்தில் நிழலாடுகிறது. அவருடைய அலுவலகத்துக்குச் சென்று பார்த்தேன். அவருக்கு தெக்கத்தி இலக்கியவாதிகள் மீது தனீ பிரீதி. அதன்பிறகு சென்னை விட்டு வரும்வரை அவருடைய கைப்புள்ளையாகவே இருந்தேன். அவருடைய அலுவலகத்துக்கு மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளி வழியாக எஸ்.ஐ.இ.டி.கல்லூரி தாண்டி தினமும் நடந்து போவேன். அவர் அலுவலகம் முடிந்ததும் அவருடைய சைக்கிளில் என்னை டபுல்ஸ் ஏற்றிக்கொள்வார். என் வேலை விஷயமாகவும், இலக்கியக்கூட்டங்களுக்கும் போவோம். அங்கேயும் அப்படித்தான். எல்லாக்கூட்டங்களிலும் அவருடைய குரல் அவருடைய சிறுகதைகளைப் போல தனித்து ஒலிக்கும். தெருக்களில் செல்லும்போதும் அவருக்கு நியாயமில்லாத எந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும் உடனே சைக்கிளை நிறுத்தி அங்கே போய் தலையிடுவார். எனக்குப் பயமாக இருக்கும். ஆனால் கொஞ்சநாட்களில் எனக்குப் பழகிவிட்டது. நானும் சென்னை பிஸ்தாவாகிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் என் கனவில் ஒரு நாள் கடும்மழை பெய்தது. என் குணாதிசயத்துக்கு மாறாக நான் கட்ட ஆசைப்பட்ட என் கனவுக்கோட்டை சிலபல துளிகளிலேயே கரைந்து போய் விட்டது. எழுதியதே மறந்து போன ஒரு ரயில்வே சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். அதற்கான அறிவிப்புக் கடிதம் ஊருக்கு வந்திருந்தது. உடனே ஊரிலிருந்து கிளம்பிவரச்சொல்லி கடிதம் வர சென்னை என்னிடமிருந்து பிழைத்துக் கொண்டது. ( இப்படித்தாய்யா கொள்ளைப் பேரு சொல்லிக்கிட்டு திரியிறீங்க என்ற சென்னையின் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.)

விமலாதித்தமாமல்லன் நிறைய எழுதவில்லையோ என்று சந்தேகப்படுகிறேன். அல்லது எனக்குத் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறேன். ஏனெனில் நான் சென்னையை விட்டு வந்தபிறகு அவருடனான தொடர்பு விட்டுப்போயிற்று. இடையறாது உறவுகளைப் பேணுவதிலும் தொடர்புகளைக் காப்பாற்றுவதிலும் நான் மிகவும் பலகீனமானவன். மிக நீண்ட வருடங்களாகிவிட்டது மாமல்லனைப் பார்த்து. ஆனால் சென்னையின் சாலைகளில் சைக்கிள் முன்பார் கம்பியில் என்னை உட்காரவைத்து சுற்றித் திரிந்த அந்த துறுதுறு இளைஞன் விமலாதித்தமாமல்லனை என்னால் மறக்கவே முடியாது. இன்று ஜோதிவிநாயகம் இல்லை ஆனால் அன்று அவருடைய தோழமையின் வழி எனக்குக் கிடைத்த அத்தனை நண்பர்களுக்கும், நான் கண்டடைந்த அறிவுக்கும் என் அன்புக்குரிய ஜோதிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.,அன்று ஜோதி இல்லையென்றால் எனக்கு விமலாதித்தமாமல்லனின் நட்பு கிடைத்திருக்காது. மாமல்லனின் நட்பு இல்லையென்றால் நான் சென்னையில் ஒரு நாள்கூடத் தங்கியிருக்க மாட்டேன். என் இனிய நண்பா மாமல்லன்! நம் இளமைக்காலநட்பை நினைத்து பெருமிதமடைகிறேன். நண்பா…மாமல்லனே…

Thursday, 28 March 2013

பிரமீள் மேதையின் குழந்தமை

 

உதயசங்கர்

Piramil 2

திருநெல்வேலியிலிருந்து விளாத்திகுளத்துக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வேலை மாற்றலாகி வந்த ஜோதிவிநாயகம் கோவில்பட்டியில் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத் தலையை கழுத்துக்கு ரெண்டடி மேலே தூக்கிக்கிட்டு திரிந்த எங்கள் தலையில் ஒரு தட்டு தட்டி ( அப்படி தட்டுகிற அளவுக்கு எங்கள் எல்லோரையும் விட ஆறடி உயரத்தில் இருந்தார் ) ஏல உங்களுக்கு என்னல தெரியும் உலக இலக்கியம் பத்தி? என்று கேட்டார். அதுவரை எங்களைக் கேள்வி கேட்க யாரிருக்கா என்று தெருக்களில் யாரும் இல்லாத ராத்திரிகளில் பேட்டை ரவுடிகள் மாதிரி கர்ஜித்து புகை விட்டுத் திரிந்து கொண்டிருந்தோம். அவருடைய கேள்வியினால் எங்களுக்கானால் வெளம். எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? அதுக்கும் ஒரு காரணம் இருந்தது.

கோவில்பட்டிக்காரர்களான எங்களுக்கு ஒரு சிறப்புக்குணம் இருந்தது. அங்கே எழுதிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருக்கிற, நேற்றுத்தான் எழுதத் தொடங்கியிருக்கிற எல்லோருமே தாங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் உலக இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு ஒருத்தரை ஒருத்தர் தெரியாத்தனமாகக்கூட பாராட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் படைப்பை கொலைவெறியுடன் விமர்சனம் செய்தோம். எதிரிகள் போல பாவித்து விவாதம் செய்தோம். தத்துவங்கள் வழி பிரிந்து கிடந்தோம். பல இரவுப்பொழுதுகளில் கோவில்பட்டி காந்திமைதானம் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் தினமும் சந்தித்தோம். தினமும் விவாதித்தோம். இந்த சண்டை சச்சரவெல்லாம் எங்களுக்குள் தான். வெளியூரிலிருந்து யாராவது படைப்பாளிகள் வந்து விட்டார்களென்றால் அவர்கள் முதலில் ஓவியர் மாரீஸைத் தான் சந்திப்பார்கள். அவர் அவருடைய வீட்டில் தங்க வைத்து உணவளித்து ஓய்வெடுக்க வைத்து விட்டு ஊரிலுள்ள எழுத்தாளர்களுக்கு இப்படி இன்னாரின்னார் வந்திருக்கிறார்.. வாய்ப்பு இருக்கிறவர்கள் வந்து சந்தியுங்கள், என்று முரசறைவார். இப்போதென்றால் ஒரு குறுஞ்செய்தியோ, ஃபோனோ போதும். அது பழைய காலம் பெரும்பாலும் கால்நடையாக நடந்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் சென்று தகவல் சொல்ல வேண்டும். அதைச் சலிக்காமல் செய்தார் மாரீஸ்.

இப்படித் தகவல் கிடைத்ததும் எங்களுடைய ஆயுதங்களைத்தீட்டிக் கொண்டு அதுவரை பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஆளாக மாறி வியூகம் அமைத்து வந்தவர் மீது எல்லாவிதமான ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துவோம். அவர் படைப்பைப் பற்றி பேசினால் நாங்கள் தத்துவம் பற்றி கேள்வி கேட்போம். அவர் தத்துவம் பற்றிப் பேசினால் அரசியல் பற்றிக் கேள்வி கேட்போம். இப்படி அவரைச் சுத்திச் சுத்தி வளைச்சு அவர் களைச்சுப்போய் சரணாகதி அடையும்வரை இந்த விவாதத்தின் முடிவுக்காகத் தான் இந்த உலகம் கண்மூடாமல் காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து உரத்த குரலில் சத்தம் போடுவோம். ஒத்தை ஆள் பாவம் என்ன செய்வார்? கடைசியில் சரணாகதி அடைந்து விடுவார். நாங்களும் வெற்றிக் களிப்புடன் அவருடன் சேர்ந்து அவருடைய காசில் டீயும் சிகரெட்டும் புகைத்து விட்டு கலைந்து விடுவோம். இப்படிக் கொள்ளைப்பேரை கலாய்ச்சிருக்கோம். அதனால் எங்களிடம் ஜோதிவிநாயகம் கேட்டபோது தயாரானோம் மற்றுமொரு யுத்தத்துக்கு.

நீளமான தலைமுடியை ஆட்டி ஆட்டி நீண்ட கைகளையும் விரல்களையும் நடன நிருத்தியங்களைப் போல் விரித்தும் நீட்டியும் எங்களிடம் பேசிய ஜோதிவிநாயகத்திடம் நாங்கள் அனைவரும் சரணாகதி அடைந்தோம். ஒரே நாளிரவில் எங்களையெல்லாம் வென்று விட்டார் ஜோதி. அப்படிக் கட்டுண்டிருந்தோம் அவரிடம். அவருடைய பேச்சு, விசாலமான அறிவு, உலக இலக்கிய அறிவு, அளவிலாத அன்பு, எல்லோரையும் அரவணைத்த மனம், இப்படி நாங்கள் அதுவரை கண்டிராத ஆளுமையாக இருந்தார் ஜோதி. அவருடைய உலகளாவிய இலக்கியப்பார்வை எங்களுக்கு எவ்வளவு கொஞ்சமாய் தெரிந்திருந்தது என்பதை உணர்த்தியது. கொஞ்சநாளுக்கு எங்களுடைய சந்திப்பின் மையம் காந்திமைதானத்திலிருந்து விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்கு மாறி விட்டது. அது மட்டுமல்ல எப்போதும் யாராவது ஒருத்தர் ஜோதியின் கூடவே இருந்து கொண்டிருந்தோம்.

எல்லாஎழுத்தாளர்கள் மனதிலும் ஒரு ரகசியக்கனவு இருக்கும். அது தாங்கள் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பது தான். அந்தப் பத்திரிகை மட்டும் வெளியானால் போதும் தமிழிலக்கியமே தலைகீழாகப் புரண்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசிவரை இப்படியே ரகசியமாய் கனவுகண்டே காலத்தைக் கழிப்பவர்களும் இருப்பார்கள். சிலர் அசட்டுத் தைரியத்தில் கண்ட கனவை யதார்த்தத்தில் நிகழ்த்திவிட ஆசைப்படுவார்கள். ஆசை தானே எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணம். ஜோதியும் அப்படி ஒரு கனவு கண்டிருக்கிறார். பிறகென்ன அவருக்கு அருள் வர ஆரம்பித்துவிட்டது. போதாதுக்கு நாங்கள் வேறு ரெண்டாங்கு மேளத்தை டண்டனக்க டன் டண்டணக்க டன் என்று அடித்து அவருடைய அருள் குறையாமல் பார்த்துக் கொண்டோம்.

தேடல் என்ற நாமகரணம் சூட்டி காலாண்டிதழாக அந்தப் பத்திரிகை வெளிவந்தது. அந்தச் சமயத்தில் கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் எல்லோரும் விளாத்திகுளத்துக்கும் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர். கவிஞர் தேவதேவன் தூத்துக்குடியிலிருந்து அடிக்கடி கோவில்பட்டி வந்து செல்வார். அப்போது கவிஞர் பிரமீளுடன் மிக நெருக்கமாக இருந்தார். நவீன கவிதையின் மிகச் சிறந்த கவிஞர் பிரமீள். அவருடைய கண்ணாடியுள்ளிருந்து தொகுப்பு அப்போது தமிழ்க்கவிதையுலகில் பெரும்சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு அவருடைய கவிதை மீது மிகப்பெரும் காதல் இருந்தது. அவருடைய விமர்சனக்கட்டுரைகள், கலை இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் எல்லாம் புதிய ஒளியுடன் மனதுக்குள் வெளிச்சம் பாய்ச்சின. அவருடைய கவிதைகளை விட அவருடைய கட்டுரைகளை ஜோதிக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய மேதாவிலாசத்தைப் பற்றி, அவர் சொல்லியுள்ள கருத்துகளின் புதுமை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

பிரமீள் இலங்கையில் பிறந்தவரென்றாலும் அவருடைய முப்பதுகளிலேயே இந்தியாவுக்கு வந்து விட்டார். இலங்கையிலிருக்கும்போதே அவருடைய இருபதுகளில் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அவர் இந்தியாவுக்கு வந்த காலம் புதுக்கவிதை இயக்கமும் விமர்சன மரபும், தமிழில் வேரூன்றத் தொடங்கியிருந்த காலம். அதன் பிறகு அவர் தமிழ் எழுத்தாளராகவே தான் அறியப்பட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் மகத்தான ஒரு ஆளுமை பிரமீள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், சிற்பம், என்று பலதுறைகளிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியரென்றாலும் பிரமீளின் மேதைமை புதுக்கவிதையிலும் விமர்சனத்துறையிலும் விகசிக்கிறது. யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யமில்லாமல் தன் கருத்துக்களை முன்வைக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. தமிழில் முழுமையான படிமக்கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். புதுக்கவிதையின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய வாழ்நாள் முழுவதும் கவிதையை தன் வாழ்வின் இயக்கமாகக் கொண்டு இயங்கியதும் ஒரு காரணம். ஆரம்பத்தில் தன்னுடைய கவிதை இயக்கத்தை இதுவரை தமிழ்க் கவிதை உலகில் முன்னெப்போதும் ஒப்புவமை சொல்ல முடியாத படிமங்களின் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பிரமீள்.

அவருடைய விடிவு என்ற கவிதையில்,

பூமித்தோலில்

அழகுத்தேமல்

பரிதிபுணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகைத்

தின்னும் கிருமி

வெளிச்சச்சிறகில்

மிதக்கும் குருவி.

என்று படிமங்களின் அழகியலில் வாசகனுக்குப் பிரமிப்பூட்டிய பிரமீள் பின்னால் கவிதையின்வழி ஆன்மீகப்பயணத்தைத் தொடர்ந்தார். அவருடைய E=Mc2 என்ற கவிதையும், கண்ணாடியுள்ளிருந்து கவிதையும் காவியம் கவிதையும், என்றென்றும் பிரமீளின் பெயர் சொல்லும் பல கவிதைகளில் சில. அந்த மகத்தான கவியாளுமையின் கவிதையியக்கத்தை இத்தனை சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பின்பு தமிழில் தோன்றிய மகத்தான ஒரு ஆளுமைக்கு உரிய கௌரவத்தை தமிழிலக்கியம் தரவில்லை என்றே அஞ்சுகிறேன்.

தமிழ் விமர்சன மரபென்பது இன்னமும் சோனிக்குழந்தையாகவே இருக்கிறது. அந்தத் துறையில் இயங்குவதற்கான தெம்பும் திராணியும் நம் இலக்கியவாதிகள் அநேகம்பேருக்கு இல்லை. ஆனால் தன்னுடைய இருபதுகளிலே சுயமான மதிப்பீட்டு உணர்வுடன் தமிழிலக்கியத்தில் இயங்கியவர் பிரமீள். அன்று அவருடன் வெங்கட்சாமிநாதன், கைலாசபதி, நா.வானமாமலை, தொ.மு.சி., சுந்தரராமசாமி, கா.சிவத்தம்பி போன்றோர் வேறு வேறு கோணங்களில் இயங்கினார்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட விமர்சன மரபு தொடரவே இல்லை என்பது தமிழின் துரதிருஷ்டம் தான். அ. மார்க்ஸ்ஸையும் எழுத்தாளர் ஜெயமோகனையும் தவிர வேறு யாரும் அத்தகைய சுயமான மதிப்பீடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனரா என்பது சந்தேகம். இப்போதைய விமர்சனங்கள் எல்லாம் ரசனை சார்ந்த மதிப்புரைகளாகவே இருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கால சுப்பிரமணியன் பிரமீளின் தமிழின் நவீனத்துவம் என்ற நூலின் முன்னுரையில்,

“ விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள். அழகியல் ரீதியிலான அநுபவத்தைச் சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். “

என்று சொல்வதை அவருடைய விமர்சனக்கட்டுரைகளை வாசிக்கிற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர். அத்தகைய ஆளுமையின் வாழ்நாள் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். மிகுந்த கூர்மையான தன்னுணர்வு மிக்கவராகவும், கூருணர்வுடையவராகவும் இருந்ததால் இந்தச் சமூகத்தோடும், நண்பர்களோடும் எல்லாநேரமும் எல்லாக்காலமும் ஒத்துப் போக முடியவில்லை. அதனால் ஏற்பட்ட காயங்கள், அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. எனக்கு அந்தக் குழாயடிச் சண்டைகள் அதுவும் குறிப்பாக மிகவும் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்களை கேரக்டர் அஸாஸினேஷன் செய்கிற மாதிரி எழுத்துகள் அருவெருப்பையே ஏற்படுத்தின. அந்த மகா ஆளுமையின் சித்திரத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட கோடுகளாகவே அவை தெரிந்தன. ஆனால் இவற்றையெல்லாம் சுண்டுவிரலால் புறந்தள்ளி விடுகிற அளவுக்கு மகத்தான படைப்பாளியாக பிரமீள் திகழ்ந்தார். அவருக்குத் தமிழ்ச்சமூகம் எந்த நியாயத்தையும் வழங்கவில்லை. தன்னுடைய சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் தன்னுடைய அறிவார்ந்த ஆளுமையைப் பற்றி அதற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. கால சுப்பிரமணியன் போன்ற மிகச்சில நண்பர்களின் உண்மையான அன்பிலேயே தன் பிற்காலத்தைக் கழித்தார். உடல் நலக்குறைவினால் 1997- ல் வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் மறைந்தார். இப்போதும் பிரமீளின் எழுத்துகள் அனைத்தும் நமக்குக் கிடைப்பதற்கு கால சுப்பிரமணியன் தான் காரணகர்த்தாவாக இருக்கிறார். இந்த ஒரு காரியத்துக்காகவே நம்முடைய தமிழ்ச்சமூகம் கால சுப்பிரமணியத்துக்கு நன்றிக்கடன் பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்ச்சமூகத்தின் எருமைத்தோலில் எந்த வெயிலோ, மழையோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையே. அதற்கு அன்றிலிருந்து இன்று வரை திரைப்படம் ஒன்று தான் ஞானப்பாலூட்டி வளர்க்கும் தாயாக இருக்கிறது.

80- களில் பிரமீளின் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக்கொண்டுவர கவிஞர் தேவதேவன் முயற்சி எடுத்தார். அதற்காக அவருடைய கைப்பிரதிகளை வாங்கி படியெடுத்துக் கொடுக்க என்னிடம் கொடுத்திருந்தார் தேவதேவன். மகத்தான சந்தர்ப்பமென அவற்றை நானும் வாங்கி படியெடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நினைத்தபடி வேலையை உடனே முடிக்க முடியவில்லை. வேலையில்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதால் வீட்டில் கடும்நெருக்கடி. பாதி நாள் வீட்டிலில்லாமல் யார் எந்த ஊருக்குக் கூப்பிட்டாலும் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் காதல் நெருக்கடிகள் வேறு. இதனால் தேவதேவன் எவ்வளவோ அவகாசம் கொடுத்தும் அந்தக் கட்டுரைகளை படியெடுத்து முடிக்கவில்லை. இது தெரியாமல் பிரமீள் தேவதேவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதம் ஏற்படுத்திய வருத்தத்தில் தேவதேவனும் எனக்கு கோபமாக எல்லா கைப்பிரதிகளையும் திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் போட்டார். கடிதம் கண்டவுடன் நான் குற்றவுணர்ச்சி பொங்க என் சூழ்நிலையை விளக்கி ஒரு கடிதத்தை தேவதேவனுக்கு எழுதி விட்டு சில நாட்களிலேயே அந்தக் கைப்பிரதிகளைப் படியெடுத்து ஒரிஜினலையும் சேர்த்து அனுப்பி விட்டேன். பின்னர் அதை மறந்தும் விட்டேன். ஒரு மாதம் கழித்து ஒரு அஞ்சலட்டை வந்தது. பிரமீள் எழுதியிருந்தார். அவர் தவறுதலாக தேவதேவனைக் கடிந்ததின் விளைவே தேவதேவன் உங்களைக் கடிந்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்தும், நன்றி பாராட்டியும் எழுதியிருந்தார். எப்படியிருக்கும்? அந்தக் கடிதத்தை நான் காட்டாத ஆளில்லை.

என் ஆதர்சமான ஆளுமையிடமிருந்து கடிதமென்றால் சும்மாவா? அதன் பிறகு 90-களில் எழுதிய கட்டுரை ஒன்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் சிறுகதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர் தூத்துக்குடிக்கு தேவதேவனைப் பார்ப்பதற்காக வந்தவர் விளாத்திகுளத்துக்கும் ஜோதியைப் பார்ப்பதற்காக வந்தார். நான் தற்செயலாக அன்று விளாத்திகுளத்தில் இருந்தேன். அவரைப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு புறம் தேவதேவனும், இன்னொருபுறம் ஜோதியும் ஒரு பரவச உணர்வோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னே குட்டோட்டமாக வந்து கொண்டிருந்தேன். ஒரு மேதையின் அறிவு விசாலத்தை அன்று நேரில் கண்டேன். எந்த சிரமமுமில்லாமல் அலட்டலுமில்லாமல் அத்தனை விஷயங்களைப் பற்றியும் ஆதாரபூர்வமாக, விளக்கமாக, எளிமையாக, சொல்லிக் கொண்டு வந்தார். அவர் பேசியதைக் கேட்டபோது அதிலிருந்த தெளிவு என்ன அதிசயப்படுத்தியது. எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் பேசினார். நாங்கள் மூன்று பேரும் அப்படியே மெய்ம்மறந்த மாதிரி நடந்து கொண்டிருந்தபோது விளாத்திகுளம் பேரூந்து நிலையத்துக்குள் ஒரு பேரூந்து அப்படியே வளைந்து திரும்பியது. ஒரு கணம் தான் பிரமீள் தன் உதடுகளைப் பிதுக்கி ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒலியெழுப்பியபடியே சின்னப்பயனைப் போல இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கை வளைத்துக் கொண்டு ரோட்டில் கொஞ்சதூரம் ஓடிப் போனார். பின் நின்று திரும்பி மறுபடியும் எங்களிடம் வந்தார். நாங்கள் அப்படியே அசந்துபோய் நின்றோம். அருகில் வந்ததும் புன்னகை மாறாமல் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார் அந்த கவியாளுமை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒரு கூட்டத்துக்காக நான் விளாத்திகுளம் சென்றிருந்தேன். பேருந்து நிலையம் மாறவில்லை. அன்று போலவே பேருந்து வளைந்து திரும்புகிறது. அதோ எனக்கு முன்னால் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தமெழுப்பியபடி பிரமீள் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த மேதையின் குழந்தமை விளாத்திகுளம் பேருந்து நிலையப் புழுதியில் அழியாக்கல்வெட்டாய் பதிந்திருக்கிறது. பிரமீள்..எங்கள் அன்புக்குரிய பிரமீள்…

நன்றி- சொல்வனம் இணைய இதழ்