Sunday 30 September 2018

பேசாநாட்டில் பேசும்கிளிகள்


பேசாநாட்டில் பேசும்கிளிகள்

உதயசங்கர்
பெரியமலை நாடு திடீரென்று ஒரு நாள் பேசாநாடாக மாறி விட்டது. ஏன் தெரியுமா? பெரியமலை நாட்டு ராஜா இடிவர்மன் ஏராளமான வரிகளைப் போட்டு மக்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருந்தான். ஏற்கனவே சிரமத்தில் இருந்த மக்கள் அந்த வரிகளைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டனர். நாட்டில் குடியிருப்பதற்கு நாட்டுவரி, வீட்டில் குடியிருப்பதற்கு வீட்டுவரி, நிற்பதற்கு நில்வரி, உட்காருவதற்கு உட்கார்வரி, நடப்பதற்கு நடவரி, படுத்து உறங்குவதற்கு படுவரி, உறங்கும்போது கனவு கண்டால் கனவுவரி, குழந்தை பிறந்தால் பிறவரி, யாராவது இறந்து போனால் இறவரி, இளைஞர்களுக்கு இளமைவரி, திருமணம் முடித்தால் திருமணவரி, குடும்பம் நடத்தினால் குடும்பவரி, நோய்வந்தால் நோய்வரி, நீண்டநாள் உயிருடன் இருந்தால் முதுமைவரி, பள்ளிக்கூடம் போனால் பள்ளிக்கூடவரி, கல்லூரிக்குப்போனால் கல்லூரி வரி, விளையாட்டு வரி, பொருளை விற்றால் விற்பனை வரி, பொருளை வாங்கினால் வாங்கும் வரி, உணவு வரி, குப்பை வரி, என்று ஆயிரத்து ஒன்று வரிகளை ராஜா இடிவர்மன் போட்டிருந்தார்.அப்படி வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 இந்த வரிகளைக்கட்ட முடியாத பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வியாபாரிகள், எல்லோரும் தனித்தனியாக ராஜா இடிவர்மனின் அரண்மனைக்குப் போய் முறையிட்டனர்.
வேண்டாம் ராஜா இந்த வரிகள் ராஜாவே
உயிர் போகுது எங்களுக்கு ராஜாவே
நாட்டு மக்களை நினைச்சுப்பாருங்க ராஜாவே
நல்லது செய்ய முடிவெடுங்க ராஜாவே 
ராஜா இடிவர்மனுக்குக் கோபம் வந்து விட்டது. அவனை எதிர்த்து பிறந்த குழந்தைகள் கூட அழுது போராட்டம் செய்வதைப்பார்த்து அடக்க முடியாத சினம் வந்து விட்டது. உடனே என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாள் ராத்திரி பனிரெண்டு மணிக்கு இனிமேல் யாரும் பேசக்கூடாது என்று ராஜா இடிவர்மன் சட்டம் போட்டு விட்டான். அந்தச் சட்டத்தை மாநகரங்களிலும், நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், முரசறைந்து அறிவித்தான். துண்டறிக்கைகளாகக் கொடுத்தான். தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்ஸாக அறிவிப்பு செய்தான். அந்த செய்தி என்னவென்றால்,
“ இதனால் சகலமானவர்களுக்கும் பெரிய நாட்டு ராஜாதிராஜ ராஜகுல திலக இடிவர்மன் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், இந்த நிமிடம் முதல் பெரிய நாட்டு மக்கள் யாரும் யாருடனும் பேசக்கூடாது. சாப்பிடுவதற்கு மட்டும் நீங்கள் வாய் திறக்கலாம். மற்றநேரங்களில் எல்லோருடைய வாய்களிலும் பேசாப்பூட்டு பூட்டப்படும். அவர்கள் பேசாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு காவலர் இருப்பார். அதையும் மீறி யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் “
அறிவிப்பு செய்த நாளில் இருந்து பெரியமலை நாடு பேசாநாடாக மாறிவிட்டது. ஒரே அமைதி. அமைதி. அமைதி. யாரும் யாருடனும் பேசவில்லை. எல்லோரும் சைகையில் பேசிக்கொண்டார்கள். அதையும் மீறி ஒன்றிரண்டு பேர் சாப்பிடும்போது குழம்பு நல்லாருக்கு என்று சொன்னதுக்கும், இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க என்று சொன்னதுக்கும் கைது செய்யப்பட்டார்கள். அப்புறம் என்ன?
எல்லோரும் வாயில் பூட்டோடு அலைந்தார்கள். யாருமே யாருடனும் பேசமுடிய வில்லை. எல்லோருக்கும் பேச்சு மறந்து விட்டது. காவலர்களும் பேச மறந்தனர். பிறந்த குழந்தைகளும் பேச்சுச்சத்தம் கேட்காமல் வளர்ந்ததால் பேசவில்லை. எல்லோரும் கைஜாடை போட்டே பேசிக்கொண்டார்கள். பேசாநாட்டு ராஜா இடிவர்மனுக்கும் அவனது மந்திரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்களை எதிர்த்து பேச யாரும் இல்லை. அவர்கள் இன்னும் என்ன வரிகளைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் தினம் இரவு இரண்டு மணிக்கு மக்கள் எல்லோரும் பேசாநாட்டின் கிழக்கு திசையிலிருந்த பெரிய மலைக்குப் போய் வந்தார்கள். காவலர்கள் கேட்டதுக்கு
“ சும்மா ஒரு நடை “ என்று சொன்னார்கள். சில நாட்கள் கழித்து காவலர்களும் கூட அங்கே போய் வர ஆரம்பித்தனர். அப்படி என்ன அங்கே நடந்தது? யாரும் யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் தான் பேசக்கூடாதே.
 ஒரு நாள் காலையில் ராஜா இடிவர்மன் அவனது அரண்மனைத்தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு மாமரத்திலிருந்து
முட்டாள் ராஜா இடிவர்மன்
முரட்டு ராஜா இடிவர்மன்
சட்டம் போட்டான் இடிவர்மன்
சறுக்கி விழுந்தான் இடிவர்மன்
மக்களைப் பகைத்தான் இடிவர்மன்
மண்ணாய்ப்போவான் இடிவர்மன்
என்று ஒரு பாட்டு கேட்டது. ராஜா இடிவர்மன் சுற்றிச்சுற்றிப்பார்த்தான். மாமரத்தின் உச்சிக்கிளையில் ஒரு கிளி உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது. ராஜா இடிவர்மனுக்குக் கோபமானகோபம். அந்தக்கிளியை விரட்ட கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்தான். அவ்வளவு தான். அந்தத்தோட்டத்தில் இருந்த குயில், சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, சாம்பல்புறா, மாடப்புறா, மணீப்புறா, செம்போத்து, காக்கா, வாத்து, அன்னம், மைனா, மயில், தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, தையல்சிட்டு, கொண்டைக்குருவி, பனங்காடை, மீன்கொத்தி, மரங்கொத்தி, என்று எல்லாப்பறவைகளும் சேர்ந்து பாட ஆரம்பித்தன. பகலில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தை கூட முழித்துப்பாடியது. பெரிய புயல் வீசியதைப்போல இருந்தது அந்தக்குரல். அதைக்கேட்டு பயந்து போன இடிவர்மன் அரண்மனைக்குள் ஓடினான்.
அரண்மனைக்கு உள்ளேயும் அந்தப்பாட்டு கேட்டது. அவன் உற்றுக்கேட்டான். அது மக்களின் குரல். பார்த்தால் மக்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், காவலர்கள், நாய்கள், பூனைகள், பன்றிகள், மாடுகள், ஆடுகள், அணில்கள், ஓணான்கள், எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், என்று ஒரு பெரும்படையே திரண்டு வந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் முன்னால் மக்கள் எல்லோருக்கும் பேச்சு மறந்து விடாமல் இருக்கப் பெரியமலையில் பயிற்சி கொடுத்த இளங்குமரன் வந்து கொண்டிருந்தான்.
மக்கள் திரளைப் பார்த்து “ தப்பித்தோம் பிழைத்தோம்” என்று ராஜா இடிவர்மனும் அவனது மந்திரிகளும் அரண்மனையின் பின்வாசல் வழியே ஓடினார்கள். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேசாநாடு மறுபடியும் பெரியமலை நாடாகி விட்டது.
நன்றி - வண்ணக்கதிர்


Wednesday 26 September 2018

பாம்புக்குத் தடை விதித்த ராஜா


பாம்புக்குத் தடை விதித்த ராஜா
உதயசங்கர்
பறம்பூர் நாட்டு ராஜாவான பழையனுக்குப் பாம்பு என்றால் அப்படி ஒரு பயம். அதனால் அவருடைய அரண்மனையைச் சுற்றி அகழி கட்டி அதில் தண்ணீர் விட்டு பாதுகாப்பாக இருந்தார். யாராவது அவரிடம் பாம்பு என்று சொல்லி விட்டாலே போது அப்படியே பதறி துள்ளிக்குதித்து உருண்டு விடுவார். இத்தனைக்கும் பாம்பை அவர் நேரில் பார்த்ததில்லை. அதனால் முக்கிய மந்திரியோ, விவசாய மந்திரியோ, காட்டிலாகா மந்திரியோ, வீட்டு மந்திரியோ, ரோட்டு மந்திரியோ, யாரும் ராஜா பழையனிடம் பாம்பு என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் அறிவியல் மந்திரி மட்டும் சொன்னார்.
“ இயற்கையில் எல்லோரும் சமமானவர்கள். பாம்பும் பல்லியும், பூச்சியும், புழுவும் மனிதனும்… எல்லோரும் சமமானவர்கள்.. ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் போதும்.. விபத்துகள் நேராது..”
அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அவர் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டார். பறம்பூர் விவசாய நாடு. மலையடிவாரத்தில் இருந்தது. எனவே அடிக்கடி காட்டிலிருந்து யானை, மிளா, மரைமான், காட்டுப்பூனைகள், காட்டு மாடுகள், நரி, காட்டு நாய்கள், நாட்டுக்குள் வந்து விடும். மக்கள் அந்த மிருகங்களை தாரை தப்பட்டை அடித்து காட்டுக்குள் விரட்டி விடுவார்கள். ராஜாவோ, மந்திரிகளோ, எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் பத்திரமாக அரண்மனைக்குள் இருப்பார்கள்.
ஒரு நாள் ராஜா தன்னுடைய மாளிகைப்பூந்தோட்டத்தில் மாலைநடை நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சரக்கொன்றை மரத்தின் கிளையில் ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் அழகாக இருந்தது. அவருக்கு பச்சை நிறம் ரொம்பப்பிடிக்கும். அவர் அந்தக்கயிற்றைப் பிடித்து இழுத்தார். கையில் வழு வழு என்று நெளிந்தது. அவ்வளவு தான். பாம்பு! பாம்பு! பாம்பு! என்று அலறினார். கைகளை உதறு உதறு என்று உதறிக்கொண்டிருந்தார். அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அவர் உதறிய உதறில் பாம்பு எங்கேயோ போய் விழுந்து விட்டது.
ராஜா பழையன் மறுநாள் மாலை தான் கண்விழித்தார். எழுந்ததும் கேட்ட முதல் கேள்வியே
பாம்பு எங்கே? என்ற கேள்விதான்.
காட்டு மந்திரி உடனே,
“ அதை அப்பவே கொன்னு புதைச்சாச்சு ராஜாவே! “
என்று சொன்னார். ராஜா உடனே ஆணையிட்டார்.
” பறம்பூர் நாட்டில் ஒரு பாம்பு கூட இருக்கக்கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்…”
அதைக்கேட்ட மந்திரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய மந்திரி நாடு முழுவதும் பாம்புகள் ஊருக்குள் வராமலிருக்க யாகம் நடத்தச்சொன்னார். உடனே தெருவுக்குத் தெரு ஆல மரக்குச்சிகளையும், அரசமரக்குச்சிகளையும் போட்டு லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி வாயில் நுழையாத மந்திரங்களைச் சொல்லி யாகங்களை நடத்தினார்கள். புகை மூட்டத்தில் அங்கங்கே பொந்துகளிலும், பொடவுகளிலும் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து தெருக்களில் அலைய ஆரம்பித்தன. யாகம் நடத்தியவர்கள் அலறியடித்து ஓடி விட்டார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்த பறம்பூர் நாட்டு மக்கள் உருண்டு விழுந்து சிரித்தனர். இப்படி முக்கிய மந்திரி கஜானாவில் பாதியைக் காலி பண்ணினார்.
காட்டு மந்திரி பாம்பு பிடிப்பவர்களைக் கொண்டு மகுடி ஊதி பாம்புகளைப் பிடிக்கப்போகிறேன் என்று ராஜாவிடம் சொன்னார். பாம்பு பிடிப்பவர்கள் தெருக்களில் மகுடி ஊதினார்கள். அவர்களைத் தெரிந்த மாதிரி பத்து பாம்புகள் அவர்களுக்கு முன்னால் ஊர்ந்து வந்து தலையசைத்து ஆடின. பாம்பு பிடிப்பவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையில் அந்தப்பாம்புகளைப் பிடித்து அடைத்தார்கள். மறுநாளும் அவர்கள் வேறு தெருவுக்குப் போய் ஊதினார்கள். அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இன்னொரு தெருவுக்குப் போனார்கள். அங்கேயும் அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இப்படி பத்து பாம்புகளை வைத்து ஆயிரம் பாம்புகளைப் பிடித்ததாகக் கணக்குக் காட்டினார் காட்டு மந்திரி.
ரோட்டு மந்திரி சும்மாயிருப்பாரா?  ஊரில் உள்ள தெருக்களில் எல்லாம் பாம்புக்கோவில்களைக் கட்டினார். அந்தக்கோவில்களில் மூன்று வேளையும் பூஜை நடத்தச்சொன்னார். மக்கள் அனைவரும் அந்தக்கோவில்களுக்குச் சென்று வழிபடவேண்டும். பாம்புகளைப்பற்றிய கட்டுக்கதைகளைத் தொலைக்காட்சியில் மெகாசீரியல்களாக எடுத்து வெளியிடச் செய்தார். அதில் கஜானாவிலிருந்து கால்வாசியைக் காலி பண்ணினார்.
விவசாயமந்திரியும் விவசாயிகள் இனிமேல் தங்களுடைய நிலங்களில் விதைக்கக்கூடாது. எந்தப்பயிரையும் பயிர் செய்யக்கூடாது. பயிர் செய்தால் தானே தவளைகளும், எலிகளும், பூச்சிகளும், சிறுபறவைகளும் வருகின்றன. பின்னாலேயே அவற்றைப் பிடித்துத் தின்பதற்காகப் பாம்புகளும் வருகின்றன. எனவே பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போடுங்கள் என்று ஆணையிட்டார். மக்கள் மன்றாடினார்கள். விவசாயம் இல்லை என்றால் மக்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் மட்டும் இல்லை ராஜா, மந்திரிகள், மக்கள் யாருமே வாழமுடியாது. என்றார்கள்.
” உணவு தானியங்களை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம்.” என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார்.
பறம்பூர் நாட்டில் யாரும் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் செய்தால் தண்டனை. நாட்டில் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மக்கள் அரண்மனைக்குச் சென்று போராட்டம் செய்தனர். ராஜா பழையனுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. அந்தப்போராட்டத்துக்குத்  பழைய அறிவியல் மந்திரி தலைமை தாங்கி நின்றார். வேறுவழியில்லாமல்,
“ என்ன செய்ய வேண்டும் அறிவியலாளரே! “
என்று ராஜா பழையன் கேட்டார். அறிவியல் மந்திரி உடனே,
 பாம்புகள் மிகவும் குறைவான அறிவுத்திறன் கொண்டவை ராஜா. அவைகளுக்குக் காது கேட்காது. எந்த உணவையும் மென்று தின்கிற மாதிரி அவற்றின் வாயோ, தொண்டையோ கிடையாது. உணவுக்காகவும் பாதுகாப்புக்காவும் மட்டுமே அவை கடிக்கும். ஞாபகசக்தி கிடையாது. எனவே பழிவாங்க, ஞாபகம் வைத்திருக்கத்தெரியாது. எல்லாப்பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. நாம் அதன் வழியில் குறுக்கிடக்கூடாது. அவைகளும் நம்வழியில் குறுக்கிடாது. இயற்கையில் யாரும் யாரைப்பார்த்தும் அச்சப்படத்தேவையில்லை…….” என்று விளக்கமாகச் சொன்னார்.
பறம்பூர் நாட்டு ராஜா பழையனுக்கு புரிந்து விட்டது. பறம்பூர் நாட்டு மக்களும் பாம்புகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - மாயாபஜார்

Monday 17 September 2018

எட்டு டுட்டுவான கதை


எட்டு டுட்டுவான கதை

உதயசங்கர்
இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்பாடம் படிக்கும் போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, டுட்டு, ஒன்பது, பத்து…. என்று தான் படிக்கிறார்கள். யாராவது நாட்டில் எட்டு என்று சொல்லி விட்டால் போதும். அவ்வளவு தான் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. படைவீரர்கள் வந்து கைது செய்து  ராஜாவின் முன்னால் நிறுத்தி விடுவார்கள். ராஜா என்ன என்று கூட கேட்க மாட்டார். ஐந்து டுட்டு கசையடி கொடுக்கச்சொல்லி ஆணையிடுவார். அந்த நாட்டில் எட்டு எப்படி டுட்டுவாச்சு? மாணவர்கள் ரகசியமாய் உறங்கும்போது அப்பாஅம்மாவிடம் கேட்பார்கள். அவர்களும் வாயை மூடிக்கொண்டு அந்தக்கதையைச் சொன்னார்கள். வாயைத்திறந்தால் அவ்வளவுதான். திடீரென்று வீட்டுக்குள் ராஜாவே வந்து விடுவாரே. அந்த பயம் தான்.
 சரி. சரி . கதைக்கு வருவோம்.
முன்பு ஒரு காலத்தில் எட்டூர் என்ற பெயர் இருந்தபோது, நடந்த கதை. அந்த எட்டூர் நாட்டில் விவசாயம் தான் முக்கியமான தொழில். அந்த நாட்டு மக்கள் எல்லோரும் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சாமை, சோளம், எள், உளுந்து, துவரை, கடலை, என்று பயிர் செய்வார்கள். அதே போல கத்தரி, வெண்டை, வெங்காயம், பச்சைமிளகாய், பூசணிக்காய், தடியங்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய், என்று காய்கறிகளைப் பயிர் செய்வார்கள். கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, போன்ற கிழங்குகளையும் பயிரிட்டார்கள். காலையில் ஆறு மணிக்கு விவசாய வேலைகளுக்காக காடுகரைகளுக்கு மக்கள் போவார்கள். மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி சமையல் செய்து சாப்பிட்டுத் தூங்குவார்கள். எட்டூர் நாடு முழுவதும் பச்சைப்பசேல் என்று மரங்கள், செடிகொடிகள், மலைகள், அருவிகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள், என்று நாடு செழிப்பாக இருந்தது.
 பக்கத்து நாடான கொடுக்கா சும்மா இருக்குமா? எப்படியாவது எட்டூரை தன்னுடைய  அடிமை நாடாக மாற்றி விடவேண்டும் என்று திட்டம் போட்டது. கிட்டுராஜா யார் சொன்னாலும் கேட்பார். என்ன சொன்னாலும் கேட்பார். அவருக்கு மூன்று வேளையும் பீட்சாவும் பர்கரும் வேண்டும். மற்றபடி எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். அதனால் எட்டூர் அரசாங்க அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி சட்டம் போடுவார்கள்.
இனி யாரும் யாருடனும் பேசக்கூடாது. பேசினால் ஐம்பது கசையடி.
தனியாக காட்டுக்குள் போய் தனியாகப் பேசிக்கொள்ளலாம்.
ராஜாவைப்பார்க்க யாரும் வரக்கூடாது.
வந்தால் அவர்கள் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட வேண்டும்.
என்று ஏராளமான சட்டங்கள் போட்டார்கள். கொடுக்கா நாட்டு ஒற்றர்கள் எட்டூர் நாட்டு வளமைக்கு காரணம் என்ன என்று ஒற்று அறிய வந்தார்கள். ஒரு வாசனைத் திரவியத்தைக் கொடுத்ததும் அரசாங்க அலுவலர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்.
எட்டூர் நாட்டின் எட்டு வழிகளிலும் எட்டு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வற்றாத அந்த ஆறுகளால் எட்டூரில் எப்போதும் விவசாயம் நடந்து கொண்டேயிருக்கும். மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
உடனே கொடுக்கா நாட்டு ராஜா கொடுக்கு எட்டூருக்கு வருகை புரிந்தார். எட்டூர் ராஜா கிட்டுவுக்கு உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பீட்சாவும், பர்கரும், வாங்கிக்கொண்டு வந்து பரிசாகக் கொடுத்தார். அதைப்பார்த்த கிட்டு ராஜாவுக்கு வாயில் எச்சில் வழிந்தது. அந்த நேரத்தில் எட்டு ஆறுகள் ஓடும் பாதைகளில் எட்டு பாலங்களை கொடுக்கா நாட்டிலிருந்து கட்ட வேண்டும். அப்படிக் கட்டி விட்டால் உலகின் எட்டு திசைகளிலிருந்தும் மூன்று வேளையும் சுடச்சுட பீட்சாவும் பர்கரும், சாண்ட்விச்சும் உடனுக்குடன் வந்து சேரும். ராஜா மட்டுமல்ல மக்களும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம் என்று சொன்னார். கிட்டு ராஜா யோசிக்கவே இல்லை. உடனே கொடுக்கா நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.
அவ்வளவு தான் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினார்கள். மக்கள் அலறி அடித்துக் கொண்டு கிட்டு ராஜாவிடம் போய் முறையிட்டாரகள்.
ஆறுகள் இல்லை என்றால் விவசாயம் இல்லை ராஜாவே
விவசாயம் இல்லை என்றால் உணவில்லை ராஜாவே
உணவில்லை என்றால் உயிர்வாழ முடியாது ராஜாவே
என்று கதறினார்கள். அப்போது தான் பொரித்திருந்த பிஎஃப்சி கோழித்துண்டை கடித்து இழுத்துக்கொண்டிருந்த கிட்டு ராஜா புது ஆறுகளை உருவாக்குவோம் என்றார். நாடு முழுவதும் மக்கள் அழுதனர். எங்குபார்த்தாலும் எட்டு ஆறுகளைப் பற்றியே பேசினார்கள்.
அன்றிலிருந்து தான் கிட்டு ராஜா எட்டு என்ற எண்ணையே நாடு கடத்தி விட்டார்,
மக்களின் அழுகுரல் கேட்டு எட்டு ஆறுகளின் எட்டு தேவதைகளுக்கும் கோபம் வந்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆறுகளின் மீது கொட்டப்பட்ட மணலை ஊதினார்கள். அந்த மணல் எல்லாம் எட்டு திசைகளில் இருந்தும் கிட்டு ராஜா அரண்மனை மீது கொட்டியது. மணல் மழை மாதிரி கொட்டி அரண்மனையை மூடி விட்டது. கொடுக்கா நாட்டை மக்கள் விரட்டி அடித்தனர். எட்டூர் நாட்டு மக்களே எட்டூர் நாட்டை ஆட்சி செய்தனர். எட்டு ஆறுகளின் தேவதைகளும் மழை பொழிந்து வாழ்த்தினார்கள்.
அட! கிட்டு ராஜா எங்கே?
தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று தலை தெறிக்க அதோ ஓடிக்கொண்டிருக்கிறார் கிட்டு ராஜா.
நன்றி - வண்ணக்கதிர்



Thursday 13 September 2018

கிருஷ்ணனின் வேஷம்


  கிருஷ்ணனின் வேஷம்

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்


இரவின் முக்கால்பாகமும் கழிந்தபிறகு வெறுமையாயிருந்த மேடையை நோக்கி ஒரு இளைஞன் தயக்கத்துடன் நடந்து சென்றான்.
இடப்புறத்தில் திரைச்சீலைக்கு அருகில் பழுதான ஸ்விட்சின் காரணமாக ஒரு பல்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. யாருமில்லாத நாடக சபையில் மூன்றாவது வரிசையில் ஒரு குடிகாரன் தன்னுடைய தலையை நெஞ்சில் சாய்த்து உறங்கிக்கொண்டிருந்தான்.
எல்லா வார்த்தைகளும் உச்சரிக்கப்பட்டு விட்டன.
எல்லா நடனங்களும் முடிந்து விட்டன.
எல்லா கானங்களும் நின்று விட்டன.
பார்வையாளர்களும் போய் விட்டனர்
இந்த அசந்தர்ப்பத்தில் நீ எதற்காக வந்தாய்?
மகாவேடங்கள், சிரித்தும் அட்டகாசம் செய்தும், கர்ஜனை செய்தும் புயற்காற்று போல சப்தங்கள் நிறைந்திருக்கும் இந்த மேடையில் அமைதியானவனும் இளைஞனுமான நீ எதற்காக வந்தாய்?
சுவரின்மேல் சிவந்த வெற்றிலை எச்சில் கறைகள் தரையில் சிகரெட்டுத்துண்டுகள், ஒப்பனையறையில் வெளுத்துப்போன வண்ணக்கலவைகள், நாடகசபையில் குடிகாரனின் குறட்டைச்சத்தம். பெயர்ந்து விழுவதற்குத் தயாராக இருக்கிற மேற்கூரையில் காற்றின் கிறீச்சிடல்கள்.
“ நீ இவ்வளவு சீக்கிரம் ஏன் வந்தாய்? நீ எந்த வேடத்தில் நடிப்பதற்கு உத்தேசித்திருக்கிறாய்? உன்னுடைய கையில் ஆயுதங்களில்லை. உன்னுடைய தலையில் கிரீடமுமில்லை.
உன்னுடைய முகத்தில் வன்ணப்பூச்சில்லை. உன்னைப்பார்த்தால் ஒரு நடிகன் என்று யாரும் சொல்லமுடியாதல்லவா?
“ உன்னுடைய பெயர் என்ன? “
“ நான் கிருஷ்ணன்.. நான் நானாக நடிக்கிறேன்..”
“உன்னை எங்கேயோ முன்பு ஒரு காலத்தில் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது..”
“ ஆனால் அது சாத்தியமில்லை. நீ சிறியவன். இந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேனா? கஷ்டம்! எனக்கு ஞாபகம் வரவில்லையே. ஆனால் ஒரு விஷயம் உறுதி. உன்னுடைய பெயரை முன்பு எங்கேயோ நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

Tuesday 11 September 2018

புனிதப்பசு


புனிதப்பசு

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் ஒரு பையன் ரோட்டுக்குப்பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த வாழைப்பழத்தோல்களை எடுத்துத் தின்று கொண்டிருந்தபோது ஒரு பசு அவனுக்கு அருகில் வந்தது. அவன் கையிலிருந்த பழத்தோலைக் கடித்து இழுத்தது.
பையனுக்குக் கஷ்டமாகி விட்டது. அவன் பசுவை விரட்டினான். பசு உரக்கக்கத்திக்கொண்டே ரோட்டில் ஓடியது.
உட்னே சாமியார்கள் தோன்றினார்கள்.
“ புனித மிருகமான பசுவினை நீயா தொந்தரவு செய்தாய்? “
என்று அவர்கள் பையனிடம் கேட்டார்கள். அதற்கு அந்தப்பையன்,
“ நான் தொந்தரவு செய்யலை.. நான் தின்னுக்கிட்டிருந்த பழத்தோலை அந்தப்பசுதான் கடித்து இழுத்தது. அதனால் நான் அதை விரட்டி விட்டேன்…”
என்று சொன்னான். உடனே சாமியார்கள்,
“ உன்னுடைய மதம் எது? என்று கேட்டனர். அதற்கு அந்தப்பையன்,
“ மதமா.. அப்படின்னா என்ன? “ என்று கேட்டான்.
“ நீ இந்துவா? முஸ்லீமா?.. கிறிஸ்தவனா? நீ கோவிலுக்குப்போவாயா? சர்ச்சுக்குப் போவாயா? “ என்று சாமியார்கள் கேட்டனர்.
“ நான் எங்கேயும் போகமாட்டேன்..” என்று அந்தப்பையன் சொன்னான். உடனே அவர்கள்,
“ அப்படின்னா நீ கடவுளை நம்பல இல்லையா? “ என்று கேட்டனர். அதற்குப் பையன்,
“ நான் எங்கேயும் போகமாட்டேன்.. எனக்குச் சட்டை கிடையாது.. என்னுடைய டவுசரின் பின்னால கிழிஞ்சிருக்கு..”
என்று சொன்னான். உடனே சாமியார்கள் ஒருமித்த ஒரே குரலில்,
“ நீ முஸ்லீம்தான்.. புனிதப்பசுவினைத் துன்புறுத்தி விட்டாய்..” என்று கூறினர்.
அதைக்கேட்ட அந்தப்பையன்,
“ நீங்கள் பசுவுக்குச் சொந்தக்காரர்களா? “ என்று கேட்டான்
சாமியார்கள் அந்தப்பையனின் கழுத்தை நெறித்துக்கொன்று அந்தக்குப்பைத்தொட்டியிலேயே போட்டார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் ஒரே குரலில்,
“ ஓம் நமச்சிவாய.. உங்கள் திருநாமம் போற்றப்படுவதாக..”
என்று கூவினார்கள்.

Sunday 9 September 2018

கிழட்டு ஆடு



கிழட்டு ஆடு
மலையாளத்தில்- மாதவிக்குட்டி

தமிழில்- உதயசங்கர்

அவளுடைய நாற்பத்தி மூன்றாவது வயதில் மூத்த மகன் வேடிக்கையாக, “ அம்மா.. உங்களைப்பாத்தா.. ஒரு கிழட்டு ஆட்டைப்பாக்கிற மாதிரியே இருக்குதும்மா..” என்று சொன்னான். அவளும் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். ஆனால் அன்று அவர்கள் எல்லோரும் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, அவள் கண்ணாடியை எடுத்து கவலையோடு தன்னுடைய முகத்தைப் பரிசோதித்தாள். தன்னுடைய ஒட்டிய கன்னங்களில் மறுபடியும் சதை வைக்க ஏதாவது வழியிருந்தால் தன்னுடைய வாழ்க்கையும் அதோடு சேர்ந்து புஷ்டியாகும் என்று அவளுக்குத் தோன்றியது. இளமையும் அழகும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய் விரித்துப் படுத்துறங்கியது கிடையாது. ஆனால் ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப்பார்த்துக்கொண்டே இருப்பதற்கு அவளுக்கு மனசு வரவில்லை. அடுப்பில் பால் பொங்கத்தொடங்கிவிட்டது.
காலை முதல் நடுநிசி வரை ஓய்வில்லாமல் வேலைசெய்து அவள் குடும்பத்தை வளர்த்து வந்தாள். மெலிந்து வெளுத்துப்போய் அங்கேயிங்கே ஒடிந்து போனமாதிரியிருந்தது அவளது தேகம். ஆனால் அவள் ஒருதடவை கூட தளர்ந்து படுக்கையில் விழவோ, ஆவலாதிகள் சொன்னதோ கிடையாது. அதனால் அவள் தண்ணீர் நிறைந்த குடங்களைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு நடந்தலையும்போது அவளுடைய கணவனோ, வளர்ந்த பெரிய மகன்களோ, உதவி செய்ய முனைந்ததில்லை. அவள் படிப்பும் நாகரீகமும் இல்லாதவள். வீட்டைப்பெருக்கித் துடைத்துச் சுத்தப்படுத்தவும், சமையல் செய்யவும், துணிமணிகளைத்துவைத்து இஸ்திரி போட்டு வைக்கவுமான அவளது திறமையைப் பற்றி அவர்கள் எப்போதாவது இடையிடையில் புகழ்ந்து பேசுவார்கள். அந்தப்பாராட்டைக் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய தேய்ந்த பற்களைக்காட்டி அவள் புன்சிரிப்பைத் தூவுவாள். ஒருதடவை அவளுடைய இளையமகன் ஸ்கூலிலிருந்து வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று அடுக்களை இருட்டில் நின்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள். நாளாவட்டத்தில் அவனுடைய பார்வையிலும் அவள் ஒரு பிசாகி விட்டாள். ஸ்கூலில் நடக்கிற டிராமா பார்ப்பதற்கு அவளும் வருவதாகச் சொன்னபோது,
“ அம்மா நீ வரவேண்டாம்.. எனக்கு அவமானமாக இருக்கும்…”
என்று அவன் சொன்னான். அதற்கு அவள்,
“ ஏன் அப்படிச்சொல்றே..நான் பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்.. என்னோட கல்யாணச்சேலை..”
என்று சொன்னான். அதற்கு அவன்,
“ இல்லை.. வேண்டாம்..”
என்று சொல்லிவிட்டான். மெலிந்த கால்கள் இரண்டு அறைகளுக்குள்ளே அந்தச் சிறிய வீட்டில் ஓய்வில்லாமல் நடந்து கொண்டேயிருந்தன. முடிவில் அந்த இயந்திரத்துக்கும் கேடு வந்தது. அவளுக்குக் காய்ச்சலில் ஆரம்பித்து வயிற்றில் வலியும் துவங்கியது. இஞ்சிச்சாறும், மிளகுரசமும், அவளுக்கு உதவவில்லை. பத்தாவது நாள் டாக்டரிடம் காண்பித்தபோது, அவர்
“ இவங்களை உடனே ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போகணும்… இது சீரியஸான மஞ்சள்காமாலை கேஸ்..”
என்று சொன்னார். பாடப்புத்தகங்களூக்கு நடுவில் உட்கார்ந்திருந்த மகன்கள் அதைக்கேட்டதும் நடுங்கினார்கள். ஒரு பணியாளர் அவளை சக்கரக்கட்டிலில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி அறைக்குள் நுழைந்தபோது கண்களைத்திறந்த அவள்,
“ அய்யோ பருப்பு கருகிப்போச்சு..”
என்று சொன்னாள். அவளுடைய கணவரின் கண்கள் நனைந்தன.