Monday, 17 September 2018

எட்டு டுட்டுவான கதை


எட்டு டுட்டுவான கதை

உதயசங்கர்
இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்பாடம் படிக்கும் போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, டுட்டு, ஒன்பது, பத்து…. என்று தான் படிக்கிறார்கள். யாராவது நாட்டில் எட்டு என்று சொல்லி விட்டால் போதும். அவ்வளவு தான் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. படைவீரர்கள் வந்து கைது செய்து  ராஜாவின் முன்னால் நிறுத்தி விடுவார்கள். ராஜா என்ன என்று கூட கேட்க மாட்டார். ஐந்து டுட்டு கசையடி கொடுக்கச்சொல்லி ஆணையிடுவார். அந்த நாட்டில் எட்டு எப்படி டுட்டுவாச்சு? மாணவர்கள் ரகசியமாய் உறங்கும்போது அப்பாஅம்மாவிடம் கேட்பார்கள். அவர்களும் வாயை மூடிக்கொண்டு அந்தக்கதையைச் சொன்னார்கள். வாயைத்திறந்தால் அவ்வளவுதான். திடீரென்று வீட்டுக்குள் ராஜாவே வந்து விடுவாரே. அந்த பயம் தான்.
 சரி. சரி . கதைக்கு வருவோம்.
முன்பு ஒரு காலத்தில் எட்டூர் என்ற பெயர் இருந்தபோது, நடந்த கதை. அந்த எட்டூர் நாட்டில் விவசாயம் தான் முக்கியமான தொழில். அந்த நாட்டு மக்கள் எல்லோரும் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சாமை, சோளம், எள், உளுந்து, துவரை, கடலை, என்று பயிர் செய்வார்கள். அதே போல கத்தரி, வெண்டை, வெங்காயம், பச்சைமிளகாய், பூசணிக்காய், தடியங்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய், என்று காய்கறிகளைப் பயிர் செய்வார்கள். கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, போன்ற கிழங்குகளையும் பயிரிட்டார்கள். காலையில் ஆறு மணிக்கு விவசாய வேலைகளுக்காக காடுகரைகளுக்கு மக்கள் போவார்கள். மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி சமையல் செய்து சாப்பிட்டுத் தூங்குவார்கள். எட்டூர் நாடு முழுவதும் பச்சைப்பசேல் என்று மரங்கள், செடிகொடிகள், மலைகள், அருவிகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள், என்று நாடு செழிப்பாக இருந்தது.
 பக்கத்து நாடான கொடுக்கா சும்மா இருக்குமா? எப்படியாவது எட்டூரை தன்னுடைய  அடிமை நாடாக மாற்றி விடவேண்டும் என்று திட்டம் போட்டது. கிட்டுராஜா யார் சொன்னாலும் கேட்பார். என்ன சொன்னாலும் கேட்பார். அவருக்கு மூன்று வேளையும் பீட்சாவும் பர்கரும் வேண்டும். மற்றபடி எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். அதனால் எட்டூர் அரசாங்க அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி சட்டம் போடுவார்கள்.
இனி யாரும் யாருடனும் பேசக்கூடாது. பேசினால் ஐம்பது கசையடி.
தனியாக காட்டுக்குள் போய் தனியாகப் பேசிக்கொள்ளலாம்.
ராஜாவைப்பார்க்க யாரும் வரக்கூடாது.
வந்தால் அவர்கள் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட வேண்டும்.
என்று ஏராளமான சட்டங்கள் போட்டார்கள். கொடுக்கா நாட்டு ஒற்றர்கள் எட்டூர் நாட்டு வளமைக்கு காரணம் என்ன என்று ஒற்று அறிய வந்தார்கள். ஒரு வாசனைத் திரவியத்தைக் கொடுத்ததும் அரசாங்க அலுவலர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்.
எட்டூர் நாட்டின் எட்டு வழிகளிலும் எட்டு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வற்றாத அந்த ஆறுகளால் எட்டூரில் எப்போதும் விவசாயம் நடந்து கொண்டேயிருக்கும். மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
உடனே கொடுக்கா நாட்டு ராஜா கொடுக்கு எட்டூருக்கு வருகை புரிந்தார். எட்டூர் ராஜா கிட்டுவுக்கு உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பீட்சாவும், பர்கரும், வாங்கிக்கொண்டு வந்து பரிசாகக் கொடுத்தார். அதைப்பார்த்த கிட்டு ராஜாவுக்கு வாயில் எச்சில் வழிந்தது. அந்த நேரத்தில் எட்டு ஆறுகள் ஓடும் பாதைகளில் எட்டு பாலங்களை கொடுக்கா நாட்டிலிருந்து கட்ட வேண்டும். அப்படிக் கட்டி விட்டால் உலகின் எட்டு திசைகளிலிருந்தும் மூன்று வேளையும் சுடச்சுட பீட்சாவும் பர்கரும், சாண்ட்விச்சும் உடனுக்குடன் வந்து சேரும். ராஜா மட்டுமல்ல மக்களும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம் என்று சொன்னார். கிட்டு ராஜா யோசிக்கவே இல்லை. உடனே கொடுக்கா நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.
அவ்வளவு தான் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினார்கள். மக்கள் அலறி அடித்துக் கொண்டு கிட்டு ராஜாவிடம் போய் முறையிட்டாரகள்.
ஆறுகள் இல்லை என்றால் விவசாயம் இல்லை ராஜாவே
விவசாயம் இல்லை என்றால் உணவில்லை ராஜாவே
உணவில்லை என்றால் உயிர்வாழ முடியாது ராஜாவே
என்று கதறினார்கள். அப்போது தான் பொரித்திருந்த பிஎஃப்சி கோழித்துண்டை கடித்து இழுத்துக்கொண்டிருந்த கிட்டு ராஜா புது ஆறுகளை உருவாக்குவோம் என்றார். நாடு முழுவதும் மக்கள் அழுதனர். எங்குபார்த்தாலும் எட்டு ஆறுகளைப் பற்றியே பேசினார்கள்.
அன்றிலிருந்து தான் கிட்டு ராஜா எட்டு என்ற எண்ணையே நாடு கடத்தி விட்டார்,
மக்களின் அழுகுரல் கேட்டு எட்டு ஆறுகளின் எட்டு தேவதைகளுக்கும் கோபம் வந்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆறுகளின் மீது கொட்டப்பட்ட மணலை ஊதினார்கள். அந்த மணல் எல்லாம் எட்டு திசைகளில் இருந்தும் கிட்டு ராஜா அரண்மனை மீது கொட்டியது. மணல் மழை மாதிரி கொட்டி அரண்மனையை மூடி விட்டது. கொடுக்கா நாட்டை மக்கள் விரட்டி அடித்தனர். எட்டூர் நாட்டு மக்களே எட்டூர் நாட்டை ஆட்சி செய்தனர். எட்டு ஆறுகளின் தேவதைகளும் மழை பொழிந்து வாழ்த்தினார்கள்.
அட! கிட்டு ராஜா எங்கே?
தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று தலை தெறிக்க அதோ ஓடிக்கொண்டிருக்கிறார் கிட்டு ராஜா.
நன்றி - வண்ணக்கதிர்No comments:

Post a Comment