சிரிப்பின் அழகு
உதயசங்கர்
காவூர்
காட்டில் ஏராளமான சிறு விலங்குகள் வாழ்ந்து வந்தன. முயல், அணில், ஓணான், சில்லான்,
பச்சோந்தி, குள்ள நரி, உடும்பு, கீரி, நல்லபாம்பு, சாரைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி
விரியன், கொம்பேறிமூக்கன், மண்ணுள்ளிப்பாம்பு, கட்டெறும்பு, தையல் எறும்பு, தீயெறும்பு,
கருப்பு எறும்பு, பறக்கும் எறும்பு, இலைவெட்டி எறும்பு, என்று எல்லா உயிரனங்களும் சேர்ந்து
வாழ்ந்தனர்.
அங்கே
இருந்த கருவை மரத்தின் அடியில் குத்துச்செடிகள் அடர்ந்த புதர் இருந்தது. அந்தப்புதரின்கீழ்
ஒரு முயல்வளை இருந்தது. அந்த வளை இலைதழைகளால் மூடப்பட்டிருந்தது. அந்த வளைக்குள் இரண்டு
முயல்குட்டிகள் பேசிக்கொண்டிருந்தன.
“
ம்ம்ம்ஹூஹூம்.. அம்மா இன்னும் வரலை…. ஹூம் ஹூம்..”
என்று
தம்பிமுயல் அழுது கொண்டு இருந்தது.
“
அம்மா இப்ப வந்துருவாங்கடா.. அழாத.. அம்மா வரும்போது உனக்கு இனிப்புக்காரட்டு கொண்டு
வருவாங்க.. இன்ன.. அழக்கூடாது…சிரிடா தம்பி.. எங்க சிரி..”
என்று
அண்ணன் முயல் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் தம்பிமுயல் சிரிக்கவே இல்லை. தம்பியின்
அழுகை அதிகமாகிக் கொண்டே போனது.
உண்மையில்
அம்மா போய் வெகு நேரமாகி விட்டது. எப்போதும் இவ்வளவு நேரம் ஆகாது. அம்மாவுக்கு ஏதாவது
ஆபத்து வந்திருக்குமா? அண்ணன் முயல் ஒரு கணம் அப்படி யோசித்தது. ஆனால் மறுகணமே அதன்
முகத்தில் சிரிப்பு வந்து விட்டது. ச்சேச்சே… அம்மா எவ்வளவு புத்திசாலி! எந்த ஆபத்திலிருந்தும்
தப்பித்து விடுவாள். ஆகா! அம்மான்னா அம்மா தான். ஆனால் தம்பிப்பயல் அழுகையை நிறுத்தமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறானே. என்ன செய்யலாம்? என்று யோசித்த அண்ணன் முயல் வெளியே எட்டிப்பார்த்தது.
ஒரு
சுடுகுஞ்சி இல்லை. வெயில் சுள்ளென்று அடித்தது.
உள்ளே
திரும்பி,
“
வா தம்பி! நாம போய் அம்மாவைத் தேடலாம்..”
என்று அழைத்தது. தம்பிமுயலும்
அழுதுகொண்டே
“
எனக்குப் பயமாருக்கு..” என்று திக்கித் திக்கிச் சொன்னது. அதற்கு
அண்ணன் முயல்,
“
எதுக்குப் பயப்படணும்?… இந்த உலகம் நம் எல்லோருக்குமானது.. எறும்புக்கு மட்டுமோ, இல்லை
சிங்கத்துக்கு மட்டுமோ சொந்தமானதில்லை.. நாம தைரியமா இருக்கணும்.. இன்ன.. “
என்று
தைரியம் சொல்லியது. இரண்டுபேரும் வளையிலிருந்து
இரண்டடி குதித்திருப்பார்கள்.
“
ம்ம் நில்லுங்கள்..” என்று ஒரு குரல் கேட்டது. அண்ணன் முயலும்
தம்பி முயலும் சுற்றிச் சுற்றிப்பார்த்தார்கள். யாரையும் தெரியவில்லை.
ஒரு
பச்சை வெட்டுக்கிளி மட்டும் கொளஞ்சிச்செடியின் உச்சியில் நின்று கொண்டிருந்தது. தம்பிமுயல்
பயந்து போய் மறுபடியும் அழுதது. அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே அந்த பச்சைவெட்டுக்கிளியின்
முன்னால்போய்
“
அண்ணே! நீங்களா கூப்பிட்டீங்க? “
பச்சைவெட்டுக்கிளி
முன்கால்களை அசைத்து,
“
என்ன விசயம்! வெளியே சுத்துறீங்க? உங்கம்மா என்கிட்டதான் உங்களைக் கவனிக்கச் சொல்லிட்டு
போயிருக்கா? “ என்று முன்காலை நீட்டி ஆட்டி எச்சரித்தது. அண்ணன் முயல் சிரித்துக்கொண்டே,
“
அம்மா இன்னும் வரலை.. அதான்.. வாராளான்னு பார்க்கோம்..”
“
அப்படியா? இந்தக்காட்டில கவனமா இருக்கணும் கண்ணுகளா.. ரொம்பமோசமான காடு..”
என்று
சொல்லி முடிக்குமுன்னே பின்னாலிருந்து ஒரு பச்சோந்தி தன்னுடைய நீண்ட நாக்கை நீட்டி
அந்த வெட்டுக்கிளியைப் பிடித்து விழுங்கிவிட்டது.
அதைப்பார்த்த
தம்பிமுயல் இன்னும் அழுதான். அண்ணன்முயல் பயந்தாலும் சிரித்துக் கொண்டே,
“
தம்பி அது ஓணான்.. நம்மை ஒன்னும் செய்யாது.. இல்லையாண்ணே..”
என்று
கேட்டது. பச்சை வெட்டுக்கிளியை விழுங்கிய மகிழ்ச்சியில் பச்சோந்தி மேலும் கீழும் முதுகை
ஆட்டியது. கண்களை உருட்டிக்கொண்டே,
“
பயப்படாதே தம்பி! காலையிலிருந்து ஒரே பசி! நான் உங்களை ஒண்ணும் செய்யமாட்டேன்..”
என்று
கரகரத்த குரலில் சொன்ன பச்சோந்தி தன்னுடைய நிறத்தை பச்சையாக மாற்றிக் கொண்டே சிரித்தது.
அண்ணன்
முயலும் தம்பிமுயலும் இன்னும் கொஞ்சதூரம் குதித்து ஓடின. ஒரு பச்சைத்தவளை அவர்களுக்கு முன்னால் வந்து குதித்தது.
அதைப் பார்த்ததும் தம்பிமுயல் மறுபடியும் அழுதான். அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே,
“
என்ன தவளையண்ணே! எங்கே கிளம்பிட்டீங்க? “
“
நான் போறது இருக்கட்டும்.. நீங்க எங்க கிளம்பிட்டீங்க? உங்கம்மா என்கிட்டே உங்களப்பார்த்துக்கிட சொல்லிட்டு போயிருக்கா? “
என்று
அது சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு குட்டிச்சாரைப்பாம்பு பின்னால்வந்து அந்தப் பச்சைத்தவளையைப்
பிடித்தது. அது பிடித்தவுடன் பச்சைத்தவளையின் தோலில் ஒரு திரவம் சுரந்தது. அவ்வளவுதான்.
பிடித்தவேகத்தில் தூ தூ தூவென்று துப்பிவிட்டது.
”
ச்சே! என்ன துர்நாற்றம்! நாத்தம்
பிடிச்சபயல்..” என்று கத்தியது.
பச்சைத்தவளை
சிரித்துக் கொண்டே தவ்வித்தவ்விப் அருகிலிருந்த புளியமரத்தின் அடியில் மறைந்து கொண்டது.
ஆனால் குட்டிச்சாரைப்பாம்பு இரண்டு முயல் குட்டிகளைப் பார்த்து வாயைத் திறந்து கொண்டே
வேகமாக வந்தது. அதைப் பார்த்த தம்பிமுயல் மறுபடியும் அழுதது. அண்ணன் முயல் சிரித்துக்
கொண்டே,
“
குட்டிச்சாரையே! எங்களைச் சாப்பிடுவியா? “ என்று கேட்டது. அதற்கு குட்டிச்சாரைப்பாம்பு
திறந்த தன் குட்டிவாயை மூடிக்கொண்டே,
“
ச்ச்சேச்சே.. என்னால முடியாதுப்பா.. நீங்க பெரிசா இருக்கீங்க.. எங்கம்மாவைக் கூட்டிட்டு
வாரேன்..” என்று திரும்பிப்போய் விட்டது. அதைக்கேட்ட
தம்பிமுயல் இன்னும் அழுதான். அண்ணன் முயல் சிரித்துக் கொண்டே,
”
தம்பி அவன் போயி.. அவங்கம்மாவைத்
தேடி.. கூட்டிட்டு வர்றவரைக்கும் நாம இங்க நின்னுக்கிட்டா இருப்போம்.. “
இரண்டு
முயல்களும் இன்னும் கொஞ்ச தூரம் குதித்து ஓடின. பார்த்தால் முன்னால் ஒரு குள்ளநரி சிவீர்னு
சிவப்பு நிறத்தில் நின்று கொண்டிருந்தது. அவ்வளவு தான். இரண்டுபேருக்கும் வெலவெலத்து
விட்டது. தம்பிமுயலின் அழுகை இன்னும் சத்தமாய் கேட்டது. ஆனால் அண்ணன்முயல் சிரித்துக்கொண்டே,
“
ஐயா! குள்ளநரி ஐயா நாங்க எங்கம்மாவைத் தேடிப்போறோம்..தம்பிக்கு ரொம்ப பசிக்குதாம்..
சாப்பிட்டுட்டு வாரோம்..”
என்று
தைரியமாகச் சொன்னது. அதன் தைரியத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட குள்ளநரி,
“
தம்பிகளா! பயப்படாதீங்க.. நான் இப்பதான் நாலு காட்டு எலிகளைச் சாப்பிட்டிருக்கேன்..
இப்ப பசியில்ல.. பசிச்சாதான் நாங்க வேட்டையாடுவோம்.. நீங்க போய் உங்கம்மாவைத் தேடுங்க..”
என்று
சொல்லிவிட்டு வாயை அகலத்திறந்து நீண்ட கொட்டாவி விட்டது. அப்புறம் படுத்துறங்க ஒரு
புதரைத்தேடிப் போனது. மறுபடியும் இரண்டு முயல்களும் குதித்து குதித்து ஓடின.
அங்கே
பச்சைப்பசேல் என்று ஒரு பரந்த புல்வெளி இருந்தது. அந்தப்புல்வெளியில் குறுந்தளிர்கள்
நிறைந்திருந்தன. இரண்டு குட்டிமுயல்களும் அந்தத் தளிர்புல்லைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
சாப்பிட்டுக்கொண்டே அழுதது தம்பி முயல்.
“
அம்மா.. அம்மா..”
“
அழாதே தம்பி! அழுதால் நம்முடைய
அறிவு வேலை செய்யாது.. கண்களைத் திறந்து சிரித்துப்பார்.. நமக்கு நம்பிக்கை வரும்..
தைரியம் அதிகமாகும்… சிரிச்சுப்பாரேன்.. அம்மாவும் வந்து விடுவாள்..”
என்று
அண்ணன் முயல் சொன்னதைக் கேட்ட தம்பிமுயல் சிரிக்க முயற்சி செய்தது.
ஹ்ஹ்ஹ்ஹா ஹா ஹா ஹா…
தம்பிமுயல்
சிரித்ததும் அதன் உடலும் சிரித்தது. கண்களை மூடித் திறந்தபோது, வாயில் கேரட் செடிகளுடன்
அம்மா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தது. உடனே தம்பிமுயல் அண்ணன்முயலிடம்,
“
அண்ணா! நான் இனி அழவே மாட்டேன்..”
என்று
சொல்லிச் சிரித்தது. அண்ணன் முயலும் சிரித்தது. அருகில் வந்து விட்ட அம்மாவும்,
“
ம்ம் அப்படித்தான் வாழ்க்கையைத் தைரியமா நம்பிக்கையோட சிரிச்சிக்கிட்டே எதிர்கொள்ளணும்..
சரியா எங்கே சிரிங்க “ என்று கூறியது.
ஹ்ஹ்ஹ்ஹா
ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா
அங்கே
ஒரே சிரிப்புச்சத்தம் தான்.
நன்றி - பொம்மி தீபாவளி மலர்