Monday, 25 April 2016


இத்தனைக்கும் மேலே இனி ஒன்று ஐயா

உதயசங்கர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வளம் கொண்ட தமிழ்ச்சமூகம் அதனுடைய அறிவுலக, இலக்கியப் படைப்பாளிகளை எங்ஙனம் வைத்திருந்தது? எங்ஙனம் வைத்திருக்கிறது? என்று யோசித்தோமானால் என்ன தவம் செய்தனையோ இங்கு வந்து எழுத்தாளனாவதற்கு என்ற இழிவரல் தான் தோன்றுகிறது. இது நவீன இலக்கியத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட சாபமா? பழந்தமிழ் இலக்கியம்  படைத்தவர்கள் எல்லோரும் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன் இருந்தார்களா? சங்கப்பாடல்களில் பாதிக்கு மேல் அழிந்து விட்டது. அதை எழுதியவர்களின் பெயரே தெரியவில்லை. அந்தக்காலத்திலேயே ஔவை ஊர் ஊராய் நாடு விட்டு நாடு ஒரு சாண் வயிற்றுக்காக அலைந்து திரிந்திருக்கிறார். ஒரு வேளை சாப்பாட்டுக்காய் பாட்டு எழுதியிருக்கிறார். சடையப்ப வள்ளல் என்ற புரவலர் இல்லையென்றால் கம்பர் வீட்டுக் கட்டுத்தறி களி கிண்டத்தான் பயன்பட்டிருக்கும். அப்போதும் அரச கட்டளைக்குப் பயந்து தான் மக்கள் கோவில்களுக்குச் சென்று இதிகாசங்களைக் கேட்டிருக்கிறார்கள். மற்றபடி இப்பமாதிரியே அப்பவும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கவே மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

நவீன காலத்தில் படைப்பும் அறிவும் ஜனநாயகப்படுத்தப்பட்ட பின்னர் என்ன நிலைமை? ஏற்கனவே வசதி படைத்தவர்கள் எழுதினால் எப்படியோ தப்பித்துக் கொண்டார்கள்.ஆனால் புதிதாக படித்த மத்தியதர வர்க்கத்தினர் எழுத்தையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று எண்ணிக் குதித்தவர்கள் பாழுங்கிணத்தில் குதித்தவர்களானார்கள். மீளவே முடியவில்லை. புதுமைப்பித்தன் தொடங்கி இன்று புதிதாய் மாயமானைப் பார்த்து எழுந்த சீதாகிளர்ச்சியினால் எழுத்தே லட்சியமாய் எழுதத்தொடங்கிய இளவல்கள் வரை எல்லோரையும் பார்த்து புதுமைப்பித்தன் சிரிக்கிறார்.

பலபேர் புதுமைப்பித்தன் என்ற பெயரைக் கேட்டதும் சார் அது புதுமைப்பித்தன் இல்லை புலமைப்பித்தன் சினிமாவுல பாட்டு எழுதுவாரு..அவரைத்தானே சொல்றீங்க..என்பார்கள். விதியே தமிழ்சமூகத்தை என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டுக் கொண்டு விலகிப் போய்விட வேண்டியது தான்
.
 நவீன தமிழிலக்கியத்தினை உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்
.
காலத்தைக் கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும் கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள், மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.

சோகை பிடித்திருந்த தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும் எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி, செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன்.
 
15 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமரிசனங்கள், பத்திரிகைத் தொழில், சினிமா, என்று சிலாவரிசை போட்டு கம்பு சுத்திய புதுமைப்பித்தன் தன்னுடைய 42-ஆவது வயதில் காசநோயினால் இறந்து போனார்.


இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்பு கட்டி
கல்லில் வடித்து
வையாதீர்
வானத்து அமரன்
வந்தான் காண்
வந்தது போல்
போனான் காண்
என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்

என்று பகிடி செய்த புதுமைப்பித்தன் தன்னுடைய கடைசி நாட்களில் தமிழ்ச்சமூகத்திடம் தான் உயிர்வாழ பிச்சை கேட்டார். அவரை மட்டுமா? பாரதியின் நிலை என்ன? எம்.வி.வெங்கட்ராமை வறுமையினால் அழவைத்தது. கு.ப.ராவின் கண்பார்வையைப் பறித்தது. சி.சு.செல்லப்பாவின் நூல்கள் பதிப்பிக்கத் தயாரில்லை. க.நா.சு.விற்கு டைப்ரைட்டரை மட்டும் விட்டு வைத்தது. ஆத்மநாமைத் தற்கொலைக்குத் தள்ளியது. ஜி.நாகராஜனை மதுரையின் தெருக்களில் அலைய வைத்தது. விக்ரமாதித்தியனை ஊர் ஊராக அலைய வைத்துக் கொண்டிருக்கிறது. கோணங்கிக்கு குடும்பஅமைப்பு அலர்ஜியாகியிருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் வேண்டுவது என்ன? அவர்களுடைய படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். எழுத்தாளனாக ஜீவியம் செய்ய வழிவகை வேண்டும். மற்றபடி லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களைப் போல பண்ணை வீடுகளையோ, மாடமாளிகைகளோ இல்லையே.

ஆனால் ஏன் இன்னமும் போலிகளை, பொய்களை, தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நம்முடைய தமிழ்ச்சமூகம்.? தமிழ்ச்சமூகத்தின் உளவியல் குறித்து ஆராய வேண்டியுள்ளது.

( இன்று புதுமைப்பித்தன் பிறந்த தினம் .)

 25-4-2016




1 comment:

  1. புதுமைப்பித்தனின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete