Thursday, 28 April 2016

தமிழின் பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சா.

தமிழின் பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சா.
உதயசங்கர்

ஐக்கிய நாடுகளின் கல்வி மற்றும் சமூகப்பண்பாட்டு அமைப்பு உலகத்தில் தற்போது புழங்கி வரும் 6000 மொழிகளில் ஆறு மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகளாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹீப்ரு, கிரீக், ஆகிய மொழிகளே அவை. அவற்றில் லத்தீனும், கிரீக்கும் வழக்கிழந்து போய்விட்டன. சமஸ்கிருதம் கோவில்களில் மட்டும் புழங்கும் மந்திர மொழியாகி விட்டது. வெகுமக்களால் பேசப்படும் மொழிகளாக சீனமும், தமிழும் மட்டுமே உள்ளன. அதிலும் சீனமொழி ஓவியங்களை எழுத்துருக்களாக கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடையாத எழுத்துருக்களை கொண்டது தமிழ்மொழி. பன்னாட்டு மொழியாகவும், வெகுமக்களின் பேச்சு, எழுத்து மொழியாகவும், சமூக விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டே வருகின்ற மொழியாகவும் இருக்கின்ற மொழி நம்முடைய தமிழ்மொழி.
இத்தனை பெருமைகளையும் உடைய நம்முடைய தமிழ்மொழியின் தொன்மையையும், இலக்கியவளத்தையும், தனித்துவத்துவதையும் உலகிற்கு முன்னால் நிலைநிறுத்தியவர் உத்தமதானபுரம் வே.சாமிநாதைய்யர் என்ற நம்முடைய தமிழ்த்தாத்தா உ.வே.சா. இன்று நாம் நம்முடைய பழம்பெருமை பேசுவதற்கு எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்களையும், புறநானூறு, அகநானூறு ஐம்பெருங்காப்பியங்கள், என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே இவை அத்தனையையும் ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுத்தவர் உ.வே.சா. படியெடுத்த பிரதிகளைப் பாடபேதம் பார்த்து, புரியாத பதங்களுக்காக சமண, பௌத்த சமய மரபுகளைக் கற்றவர் உ.வே.சா. படியெடுத்து பாடபேதம் பார்த்து அவற்றை நூல்களாக பதிப்பித்தவர் உ.வே.சா. 62 ஆண்டுகால உழைப்பில் 102 நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். தமிழ்த்தாத்தா உ.வேசா. எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அவர் செய்த அருந்தொண்டினால் தான் உலக மொழிகளில் தமிழ் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.
1855 ஆண்டு தஞ்சை மாவட்டம் சூரிய மூலை கிராமத்தில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் உ.வே.சா. அவருடைய பதிமூணாவது வயதில் மதுராம்பாளை திருமணம் செய்து கொண்டார். அவருடைய வாழ்வின் திருப்புமுனையாக கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துவந்த தியாகராஜ செட்டியார் இருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழ்ப்பாடம் கற்றுக் கொண்டிருந்த உ.வே.சா. மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மறைவுக்குப் பின்னர் தியாகராஜ செட்டியாரின் கடும் முயற்சியினால் ஆதீனத்திலிருந்து வெளிவந்து கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலையில் சேர்ந்தார். . 25-வது வயதில் தற்செயலாக கும்பகோணம் முன்சீப்பாக வேலை பார்க்க வந்த சேலம் ராமசாமி முதலியாரைப் பார்க்கப்போன உ.வே.சா.வுக்கு அதுவரை தான் பாடம்படித்த நூல்களைத் தாண்டி வேறொரு புதிய இலக்கிய உலகம் இருப்பதை அறிந்தார். அன்றிலிருந்து தொடங்கியது உ.வே.சாவின் முடிவில்லாத பயணம். சேலம் ராமசாமி முதலியார் கொடுத்த சீவக சிந்தாமணியே அவருடைய தேடலைத் தூண்டியது.  
அதுவரை பக்தி இலக்கியங்களே அதுவும் சைவம் சார்ந்த நூல்களே தமிழின் தொன்மை நூல்களாக இருந்தன. சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உ.வே.சா வின் சமயம் கடந்த தமிழ்ப்பணியினால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழினத்தின் பண்பாட்டை, வீரத்தை, ஞானத்தை, வரலாற்றை இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
பதிப்பு பணியென்றால் கிடைத்ததை அப்படியே அச்சில் ஏற்றுவதல்ல. எல்லாப்பாடங்களையும் பாடபேதங்களையும் புரிந்து கொள்ள கடுமையான உழைப்பைச் செலுத்தினார்.உ.வே.சா. சமண இலக்கியப்பிரதிகளான சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், போன்றவற்றை புரிந்து கொள்ள சமண சமயத்தைச் சார்ந்தவர்களைச் சென்று சந்தித்தார். பௌத்த இலக்கியமான மணிமேகலையிலுள்ள சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள பௌத்தர்களைச் சென்று சந்தித்தார். கிராமங்களில் இருந்த கவிராயர்களையும் புலவர்களையும், அறிஞர்களையும் சென்று சந்தித்து ஐயந்திரிபற உணர்ந்த பின்னரே அனைத்து நூல்களையும் பதிப்புகளாகக் கொண்டு வந்தார். அதன் மூலம் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் மீட்டெடுத்திருக்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தேசிய அரசியலின் எழுச்சிக்கு தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் புறநானூற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தைத் பாரதி துவக்கினான்  என்றாலும் தேசியத்தலைவர்கள் அதை நிராகரித்து சநாதன மதம் சார்ந்தே எழுச்சியைக் கட்டமைத்தனர். அதே போல திராவிட அரசியலின் வெகுஜன எழுச்சிக்கு உ.வே.சா. பதிப்பித்த புறநானூறும் சங்க இலக்கியங்களும் பேருதவி புரிந்திருக்கின்றன என்றால் மிகையில்லை.
தன்னுடைய பரந்த அறிவாலும் ஞானத்தாலும் உ.வே.சா. செய்த அருந்தமிழ்ப்பணி அவரை காலத்தில் அழியாத காவியமாக்கி விட்டது. தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் தமிழ்த்தாத்தா உ.வே.சாவினால் தலைநிமிர்ந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
நன்றி - மின்னம்பலம்

No comments:

Post a Comment