Sunday 24 April 2016

பிரமீள் மேதையின் குழந்தமை

. பிரமீள் மேதையின் குழந்தமை

உதயசங்கர்

திருநெல்வேலியிலிருந்து விளாத்திகுளத்துக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வேலை மாற்றலாகி வந்த ஜோதிவிநாயகம் கோவில்பட்டியில் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத் தலையை கழுத்துக்கு ரெண்டடி மேலே தூக்கிக்கிட்டு திரிந்த எங்கள் தலையில் ஒரு தட்டு தட்டி ( அப்படி தட்டுகிற அளவுக்கு எங்கள் எல்லோரையும் விட ஆறடி உயரத்தில் இருந்தார் ) ஏல உங்களுக்கு என்னல தெரியும் உலக இலக்கியம் பத்தி? என்று கேட்டார். அதுவரை எங்களைக் கேள்வி கேட்க யாரிருக்கா என்று தெருக்களில் யாரும் இல்லாத ராத்திரிகளில் பேட்டை ரவுடிகள் மாதிரி கர்ஜித்து புகை விட்டுத் திரிந்து  கொண்டிருந்தோம். அவருடைய கேள்வியினால் எங்களுக்கானால் வெளம். எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? அதுக்கும் ஒரு காரணம் இருந்தது.

கோவில்பட்டிக்காரர்களான எங்களுக்கு ஒரு சிறப்புக்குணம் இருந்தது. அங்கே எழுதிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருக்கிற, நேற்றுத்தான் எழுதத் தொடங்கியிருக்கிற எல்லோருமே தாங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் உலக இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு ஒருத்தரை ஒருத்தர் தெரியாத்தனமாகக்கூட பாராட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் படைப்பை கொலைவெறியுடன் விமர்சனம் செய்தோம். எதிரிகள் போல பாவித்து விவாதம் செய்தோம். தத்துவங்கள் வழி பிரிந்து கிடந்தோம். பல இரவுப்பொழுதுகளில் கோவில்பட்டி காந்திமைதானம் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் தினமும் சந்தித்தோம். தினமும் விவாதித்தோம். இந்த சண்டை சச்சரவெல்லாம் எங்களுக்குள் தான். வெளியூரிலிருந்து யாராவது படைப்பாளிகள் வந்து விட்டார்களென்றால் அவர்கள் முதலில் ஓவியர் மாரீஸைத் தான் சந்திப்பார்கள். அவர் அவருடைய வீட்டில் தங்க வைத்து உணவளித்து ஓய்வெடுக்க வைத்து விட்டு ஊரிலுள்ள எழுத்தாளர்களுக்கு இப்படி இன்னாரின்னார் வந்திருக்கிறார்.. வாய்ப்பு இருக்கிறவர்கள் வந்து சந்தியுங்கள், என்று முரசறைவார். இப்போதென்றால் ஒரு குறுஞ்செய்தியோ, ஃபோனோ போதும். அது பழைய காலம் பெரும்பாலும் கால்நடையாக நடந்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் சென்று தகவல் சொல்ல வேண்டும். அதைச் சலிக்காமல் செய்தார் மாரீஸ்.

இப்படித் தகவல் கிடைத்ததும் எங்களுடைய ஆயுதங்களைத்தீட்டிக் கொண்டு அதுவரை பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஆளாக மாறி வியூகம் அமைத்து வந்தவர் மீது எல்லாவிதமான ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துவோம். அவர் படைப்பைப் பற்றி பேசினால் நாங்கள் தத்துவம் பற்றி கேள்வி கேட்போம். அவர் தத்துவம் பற்றிப் பேசினால் அரசியல் பற்றிக் கேள்வி கேட்போம். இப்படி அவரைச் சுத்திச் சுத்தி வளைச்சு அவர் களைச்சுப்போய் சரணாகதி அடையும்வரை இந்த விவாதத்தின் முடிவுக்காகத் தான் இந்த உலகம் கண்மூடாமல் காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து உரத்த குரலில் சத்தம் போடுவோம். ஒத்தை ஆள் பாவம் என்ன செய்வார்? கடைசியில் சரணாகதி அடைந்து விடுவார். நாங்களும் வெற்றிக் களிப்புடன் அவருடன் சேர்ந்து அவருடைய காசில் டீயும் சிகரெட்டும் புகைத்து விட்டு கலைந்து விடுவோம். இப்படிக் கொள்ளைப்பேரை கலாய்ச்சிருக்கோம். அதனால் எங்களிடம் ஜோதிவிநாயகம் கேட்டபோது தயாரானோம் மற்றுமொரு யுத்தத்துக்கு.

நீளமான தலைமுடியை ஆட்டி ஆட்டி நீண்ட கைகளையும் விரல்களையும் நடன நிருத்தியங்களைப் போல் விரித்தும் நீட்டியும் எங்களிடம் பேசிய ஜோதிவிநாயகத்திடம் நாங்கள் அனைவரும் சரணாகதி அடைந்தோம். ஒரே நாளிரவில் எங்களையெல்லாம் வென்று விட்டார் ஜோதி. அப்படிக் கட்டுண்டிருந்தோம் அவரிடம். அவருடைய பேச்சு, விசாலமான அறிவு, உலக இலக்கிய அறிவு, அளவிலாத அன்பு, எல்லோரையும் அரவணைத்த மனம், இப்படி நாங்கள் அதுவரை கண்டிராத ஆளுமையாக இருந்தார் ஜோதி. அவருடைய உலகளாவிய இலக்கியப்பார்வை எங்களுக்கு எவ்வளவு கொஞ்சமாய் தெரிந்திருந்தது என்பதை உணர்த்தியது. கொஞ்சநாளுக்கு எங்களுடைய சந்திப்பின் மையம் காந்திமைதானத்திலிருந்து விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்கு மாறி விட்டது. அது மட்டுமல்ல எப்போதும் யாராவது ஒருத்தர் ஜோதியின் கூடவே இருந்து கொண்டிருந்தோம்.

எல்லாஎழுத்தாளர்கள் மனதிலும் ஒரு ரகசியக்கனவு இருக்கும். அது தாங்கள் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பது தான். அந்தப் பத்திரிகை மட்டும் வெளியானால் போதும் தமிழிலக்கியமே தலைகீழாகப் புரண்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசிவரை இப்படியே ரகசியமாய் கனவுகண்டே காலத்தைக் கழிப்பவர்களும் இருப்பார்கள். சிலர் அசட்டுத் தைரியத்தில் கண்ட கனவை யதார்த்தத்தில் நிகழ்த்திவிட ஆசைப்படுவார்கள். ஆசை தானே எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணம். ஜோதியும் அப்படி ஒரு கனவு கண்டிருக்கிறார். பிறகென்ன அவருக்கு அருள் வர ஆரம்பித்துவிட்டது. போதாதுக்கு நாங்கள் வேறு ரெண்டாங்கு மேளத்தை டண்டனக்க டன் டண்டணக்க டன் என்று அடித்து அவருடைய அருள் குறையாமல் பார்த்துக் கொண்டோம்.

தேடல் என்ற நாமகரணம் சூட்டி காலாண்டிதழாக அந்தப் பத்திரிகை வெளிவந்தது. அந்தச் சமயத்தில் கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் எல்லோரும் விளாத்திகுளத்துக்கும் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர். கவிஞர் தேவதேவன் தூத்துக்குடியிலிருந்து அடிக்கடி கோவில்பட்டி வந்து செல்வார். அப்போது கவிஞர் பிரமீளுடன் மிக நெருக்கமாக இருந்தார். நவீன கவிதையின் மிகச் சிறந்த கவிஞர் பிரமீள். அவருடைய கண்ணாடியுள்ளிருந்து தொகுப்பு அப்போது தமிழ்க்கவிதையுலகில் பெரும்சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு அவருடைய கவிதை மீது மிகப்பெரும் காதல் இருந்தது. அவருடைய விமர்சனக்கட்டுரைகள், கலை இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் எல்லாம் புதிய ஒளியுடன் மனதுக்குள் வெளிச்சம் பாய்ச்சின. அவருடைய கவிதைகளை விட அவருடைய கட்டுரைகளை ஜோதிக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய மேதாவிலாசத்தைப் பற்றி, அவர் சொல்லியுள்ள கருத்துகளின் புதுமை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

பிரமீள் இலங்கையில் பிறந்தவரென்றாலும் அவருடைய முப்பதுகளிலேயே இந்தியாவுக்கு வந்து விட்டார். இலங்கையிலிருக்கும்போதே அவருடைய இருபதுகளில் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அவர் இந்தியாவுக்கு வந்த காலம் புதுக்கவிதை இயக்கமும் விமர்சன மரபும், தமிழில் வேரூன்றத் தொடங்கியிருந்த காலம். அதன் பிறகு அவர் தமிழ் எழுத்தாளராகவே தான் அறியப்பட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் மகத்தான ஒரு ஆளுமை பிரமீள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், சிற்பம், என்று பலதுறைகளிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியரென்றாலும் பிரமீளின் மேதைமை புதுக்கவிதையிலும் விமர்சனத்துறையிலும் விகசிக்கிறது. யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யமில்லாமல் தன் கருத்துக்களை முன்வைக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. தமிழில் முழுமையான படிமக்கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். புதுக்கவிதையின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய வாழ்நாள் முழுவதும் கவிதையை தன் வாழ்வின் இயக்கமாகக் கொண்டு இயங்கியதும் ஒரு காரணம்.  ஆரம்பத்தில் தன்னுடைய கவிதை இயக்கத்தை இதுவரை தமிழ்க் கவிதை உலகில் முன்னெப்போதும் ஒப்புவமை சொல்ல முடியாத படிமங்களின் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பிரமீள்.

 அவருடைய விடிவு என்ற கவிதையில்,

பூமித்தோலில்
அழகுத்தேமல்
பரிதிபுணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச்சிறகில்
மிதக்கும் குருவி.

என்று படிமங்களின் அழகியலில் வாசகனுக்குப் பிரமிப்பூட்டிய பிரமீள் பின்னால் கவிதையின்வழி ஆன்மீகப்பயணத்தைத் தொடர்ந்தார். அவருடைய E=Mc2 என்ற கவிதையும், கண்ணாடியுள்ளிருந்து கவிதையும் காவியம் கவிதையும், என்றென்றும் பிரமீளின் பெயர் சொல்லும் பல கவிதைகளில் சில. அந்த மகத்தான கவியாளுமையின் கவிதையியக்கத்தை இத்தனை சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பின்பு தமிழில் தோன்றிய மகத்தான ஒரு ஆளுமைக்கு உரிய கௌரவத்தை தமிழிலக்கியம் தரவில்லை என்றே அஞ்சுகிறேன்.

தமிழ் விமர்சன மரபென்பது இன்னமும் சோனிக்குழந்தையாகவே இருக்கிறது. அந்தத் துறையில் இயங்குவதற்கான தெம்பும் திராணியும் நம் இலக்கியவாதிகள் அநேகம்பேருக்கு இல்லை. ஆனால் தன்னுடைய இருபதுகளிலே சுயமான மதிப்பீட்டு உணர்வுடன் தமிழிலக்கியத்தில் இயங்கியவர் பிரமீள். அன்று அவருடன் வெங்கட்சாமிநாதன், கைலாசபதி, நா.வானமாமலை, தொ.மு.சி., சுந்தரராமசாமி, கா.சிவத்தம்பி போன்றோர் வேறு வேறு கோணங்களில் இயங்கினார்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட விமர்சன மரபு தொடரவே இல்லை என்பது தமிழின் துரதிருஷ்டம் தான். அ. மார்க்ஸ்ஸையும் எழுத்தாளர் ஜெயமோகனையும் தவிர வேறு யாரும் அத்தகைய சுயமான மதிப்பீடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனரா என்பது சந்தேகம். இப்போதைய விமர்சனங்கள் எல்லாம் ரசனை சார்ந்த மதிப்புரைகளாகவே இருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கால சுப்பிரமணியன் பிரமீளின் தமிழின் நவீனத்துவம் என்ற நூலின் முன்னுரையில்,

“ விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள்.  அழகியல் ரீதியிலான அநுபவத்தைச் சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். “

என்று சொல்வதை அவருடைய விமர்சனக்கட்டுரைகளை வாசிக்கிற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர். அத்தகைய ஆளுமையின் வாழ்நாள் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். மிகுந்த கூர்மையான தன்னுணர்வு மிக்கவராகவும், கூருணர்வுடையவராகவும் இருந்ததால் இந்தச் சமூகத்தோடும், நண்பர்களோடும் எல்லாநேரமும் எல்லாக்காலமும் ஒத்துப் போக முடியவில்லை. அதனால் ஏற்பட்ட காயங்கள், அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. எனக்கு அந்தக் குழாயடிச் சண்டைகள் அதுவும் குறிப்பாக மிகவும் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்களை கேரக்டர் அஸாஸினேஷன் செய்கிற மாதிரி எழுத்துகள் அருவெருப்பையே ஏற்படுத்தின. அந்த மகா ஆளுமையின் சித்திரத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட கோடுகளாகவே அவை தெரிந்தன. ஆனால் இவற்றையெல்லாம் சுண்டுவிரலால் புறந்தள்ளி விடுகிற அளவுக்கு மகத்தான படைப்பாளியாக பிரமீள் திகழ்ந்தார். அவருக்குத் தமிழ்ச்சமூகம் எந்த நியாயத்தையும் வழங்கவில்லை. தன்னுடைய சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் தன்னுடைய அறிவார்ந்த ஆளுமையைப் பற்றி அதற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. கால சுப்பிரமணியன் போன்ற மிகச்சில நண்பர்களின் உண்மையான அன்பிலேயே தன் பிற்காலத்தைக் கழித்தார். உடல் நலக்குறைவினால் 1997- ல் வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் மறைந்தார். இப்போதும் பிரமீளின் எழுத்துகள் அனைத்தும் நமக்குக் கிடைப்பதற்கு கால சுப்பிரமணியன் தான் காரணகர்த்தாவாக இருக்கிறார். இந்த ஒரு காரியத்துக்காகவே நம்முடைய தமிழ்ச்சமூகம் கால சுப்பிரமணியத்துக்கு நன்றிக்கடன் பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்ச்சமூகத்தின் எருமைத்தோலில் எந்த வெயிலோ, மழையோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையே. அதற்கு அன்றிலிருந்து இன்று வரை திரைப்படம் ஒன்று தான் ஞானப்பாலூட்டி வளர்க்கும் தாயாக இருக்கிறது.

80- களில் பிரமீளின் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக்கொண்டுவர கவிஞர் தேவதேவன் முயற்சி எடுத்தார். அதற்காக அவருடைய கைப்பிரதிகளை வாங்கி படியெடுத்துக் கொடுக்க என்னிடம் கொடுத்திருந்தார் தேவதேவன். மகத்தான சந்தர்ப்பமென அவற்றை நானும் வாங்கி படியெடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நினைத்தபடி வேலையை உடனே முடிக்க முடியவில்லை. வேலையில்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதால் வீட்டில் கடும்நெருக்கடி. பாதி நாள் வீட்டிலில்லாமல் யார் எந்த ஊருக்குக் கூப்பிட்டாலும் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் காதல் நெருக்கடிகள் வேறு. இதனால் தேவதேவன் எவ்வளவோ அவகாசம் கொடுத்தும் அந்தக் கட்டுரைகளை படியெடுத்து முடிக்கவில்லை. இது தெரியாமல் பிரமீள் தேவதேவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதம் ஏற்படுத்திய வருத்தத்தில் தேவதேவனும் எனக்கு கோபமாக எல்லா கைப்பிரதிகளையும் திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் போட்டார். கடிதம் கண்டவுடன் நான் குற்றவுணர்ச்சி பொங்க என் சூழ்நிலையை விளக்கி ஒரு கடிதத்தை தேவதேவனுக்கு எழுதி விட்டு சில நாட்களிலேயே அந்தக் கைப்பிரதிகளைப் படியெடுத்து ஒரிஜினலையும் சேர்த்து அனுப்பி விட்டேன். பின்னர் அதை மறந்தும் விட்டேன். ஒரு மாதம் கழித்து ஒரு அஞ்சலட்டை வந்தது. பிரமீள் எழுதியிருந்தார். அவர் தவறுதலாக தேவதேவனைக் கடிந்ததின் விளைவே தேவதேவன் உங்களைக் கடிந்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்தும், நன்றி பாராட்டியும் எழுதியிருந்தார். எப்படியிருக்கும்? அந்தக் கடிதத்தை நான் காட்டாத ஆளில்லை.

என் ஆதர்சமான ஆளுமையிடமிருந்து கடிதமென்றால் சும்மாவா? அதன் பிறகு 90-களில் எழுதிய கட்டுரை ஒன்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் சிறுகதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர் தூத்துக்குடிக்கு தேவதேவனைப் பார்ப்பதற்காக வந்தவர் விளாத்திகுளத்துக்கும் ஜோதியைப் பார்ப்பதற்காக வந்தார். நான் தற்செயலாக அன்று விளாத்திகுளத்தில் இருந்தேன். அவரைப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு புறம் தேவதேவனும், இன்னொருபுறம் ஜோதியும் ஒரு பரவச உணர்வோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னே குட்டோட்டமாக வந்து கொண்டிருந்தேன். ஒரு மேதையின் அறிவு விசாலத்தை அன்று நேரில் கண்டேன். எந்த சிரமமுமில்லாமல் அலட்டலுமில்லாமல் அத்தனை விஷயங்களைப் பற்றியும் ஆதாரபூர்வமாக, விளக்கமாக, எளிமையாக, சொல்லிக் கொண்டு வந்தார். அவர் பேசியதைக் கேட்டபோது அதிலிருந்த தெளிவு என்ன அதிசயப்படுத்தியது. எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் பேசினார். நாங்கள் மூன்று பேரும் அப்படியே மெய்ம்மறந்த மாதிரி நடந்து கொண்டிருந்தபோது  விளாத்திகுளம் பேரூந்து நிலையத்துக்குள் ஒரு பேரூந்து அப்படியே  வளைந்து திரும்பியது. ஒரு கணம் தான் பிரமீள் தன் உதடுகளைப் பிதுக்கி ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒலியெழுப்பியபடியே சின்னப்பயனைப் போல இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கை வளைத்துக் கொண்டு ரோட்டில் கொஞ்சதூரம் ஓடிப் போனார். பின் நின்று திரும்பி மறுபடியும் எங்களிடம் வந்தார். நாங்கள் அப்படியே அசந்துபோய் நின்றோம். அருகில் வந்ததும் புன்னகை மாறாமல் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார் அந்த கவியாளுமை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒரு கூட்டத்துக்காக நான் விளாத்திகுளம் சென்றிருந்தேன். பேருந்து நிலையம் மாறவில்லை. அன்று போலவே பேருந்து வளைந்து திரும்புகிறது. அதோ எனக்கு முன்னால் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தமெழுப்பியபடி பிரமீள் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த மேதையின் குழந்தமை விளாத்திகுளம் பேருந்து நிலையப் புழுதியில் அழியாக்கல்வெட்டாய் பதிந்திருக்கிறது. 
பிரமீள்..எங்கள் அன்புக்குரிய பிரமீள்…
( மீள்பதிவு )

No comments:

Post a Comment