Saturday, 23 April 2016

வாசிப்பு என் மூச்சு


வாசிப்பு என் மூச்சு

உதயசங்கர்

மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அதற்கான விதையை என்னிடம் ஊன்றியது என்னுடைய அம்மா கமலம். அந்தக் காலத்து நான்காவது ஃபாரம் படித்திருந்த என்னுடைய அம்மா குமுதம், கல்கண்டு, ஆகியவற்றின் வாசகியாக இருந்தார். அந்தப்புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிற நானும் அந்தப்புத்தகங்களை முதலில் பார்க்கவும் பின்பு படிக்கவும் தொடங்கினேன். அத்துடன் அன்றாடம் என் அப்பா சாப்பிடும்போது பழைய சோத்துக்கு தொட்டுக்கொள்ள மொச்சை, பக்கோடா, மிக்சர், என்று பக்கத்து கடைகளில் வாங்கிக் கொண்டு வருவேன். அந்தக்காகிதங்களில் என்ன எழுதியிருந்தாலும் வாசித்தேன். பின்பு நாங்கள் குடியிருந்த தெருவிலிருந்த கொஞ்சம் வசதியான பையன்கள் வாங்கிப்படிக்கிற அம்புலிமாமா, அணில், கண்ணன், இரும்புக்கை மாயாவி, மாயாவிகதைகள், பஞ்சதந்திர கதைகள், நண்பன் நாறும்பூநாதன் கொண்டு வந்து கொடுத்த ரஷ்யச் சிறுவர்கதைகள், இப்படி வாசித்தேன். எப்படியோ நண்பர்கள் மூலம் கோவில்பட்டி தெற்கு பஜாரில் இருந்த நூலகத்துக்குப் போனேன். ஓய்வு நேரங்களில் அங்கே சென்று என் கையில் கிடைக்கிற சிறுவர் நூல்களை வாசித்தேன். நான் பயின்ற ஆயிர வைசிய பள்ளிக்கூடத்தில் நெசவு வகுப்பு பெரும்பாலும் நூலக வகுப்பாகவே இருந்தது. பள்ளிக்கூட நூலகத்திலிருந்த புத்தகங்களில் கண்ணில் பட்டதை வாசித்தேன்.

 எந்த நோக்கமுமற்று வாசித்தேன். கதை கேட்பதற்கும் கதை சொல்வதற்கும் எனக்கு ஆர்வம் இருந்தது. நான் வாசித்த, கேட்ட, கதைகள் எல்லாம் என் கனவுகளில் வந்தன. ஏழு ராஜகுமாரர்கள், ஏழு ராஜகுமாரிகள், ஏழு குதிரைகள், அரக்கர்கள், பூதங்கள், மந்திரவாதிகள், தேவதைகள் பேய்கள், பிசாசுகள், ரத்தக்காட்டேரிகள், முனி, என்று என் கனவுகளில் அலைந்து திரிவார்கள். அந்த சாகசங்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருப்பேன். கனவுகளில் அவர்களை என் இஷ்டப்படி ஆட்டி வைப்பேன். அதே போல கதை சொல்லும்போதும் என் பாட்டுக்கு கதைகளை வளைத்து நெளித்து கதை சொல்வேன். பையன்களை விட பொம்பிளைப் பிள்ளைகளிடம் கதை சொல்வது ரெம்பப் பிடிக்கும். பையன்கள் கொஞ்ச நேரத்துக்கு மேலே பொறுமையாகக் கதை கேக்க மாட்டார்கள். இல்லையென்றால் விளையாடலாம் விளையாடலாம் என்று நச்சரிப்பார்கள். ஆனால் பொம்பிளைப்பிள்ளைகளிடம் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னால் போதும் அப்படியே குறளி வித்தைக்காரன் முன்னால் மந்திரித்து விட்ட மாதிரி நிற்கிற கூட்டத்தைப் போல அப்படியே இருப்பார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் டி.எஸ்.பாலையாவுக்கு கதை சொல்லும்போது டி.எஸ்.பாலையா பயப்படுவாரே அதமாதிரி பயமாருக்கு.. வீல்..கீச்.. என்று அவயம் போட்டுக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் முகத்தைப் பொத்திக்கொண்டும் அசையாமல் ஆனால் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

இத்தனைக்கும் நான் விளையாட்டில் சோடை கிடையாது. தெருக்களில் விளையாடும் பம்பரம், கோலி, செதுக்கு முத்து, கிட்டிப்புள், பீட்டர் லாஸ்ட், கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, கபடி, தொட்டுப்பிடிச்சி, எறிபந்து, ஒத்தையா ரெட்டையா, சிகரெட் அட்டை விளையாட்டு, தீப்பெட்டிப்படம் விளையாட்டு, சீட்டுக்கட்டு, என்று எல்லா விளையாட்டுகளையும் விளையாடுவதோடு கோவில்பட்டி ஃபேமஸ் ஹாக்கியையும் விளையாடுவேன். கல்லூரிக்காலத்தில் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், வேலைக்குப் போனபிறகு பால் பேட்மிண்டன், ஷட்டில் காக், என்று விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது விளையாட்டுகள் என்னை விட்டுப் போய் விட்டன. ஆனால் என்னுடைய வாசிப்பு இன்னும் தொடர்கிறது.

இப்போதும் என் கனவுகளில் புதுமைப்பித்தன் சுற்றிலும் நாங்கள் நிற்க யாரையோ ஒரு எழுத்தாளரைக் கேலி செய்து தன் எத்துப்பற்கள் தெரிய வெற்றிலைச்சாறு தெறிக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். மௌனி தன் வெறித்த பார்வையுடன் காந்தி மைதானத்தில் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் போகும் பெண்களை உற்றுப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார். கு.ப.ரா. தன் மென்மையான குரலில் அவருடைய சிறிது வெளிச்சம் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் குறைந்த அந்த ஒளியில் எங்கள் கண்முன்னே அந்தக் கதை நிகழ்வதைப் பார்க்கிறோம். ஜெயகாந்தனின் கம்பீரமான குரல் மேடைக்கு முன்னால் வசீகரிக்கிறது. கி.ரா.வின் கீற்றான உதடுகளின் அசைவில் கரிசக்காடு அசைந்து புரள்கிறது. தி. ஜானகிராமனின் ஜமுனாவை மோகித்த முள்ளாக நான் காத்திருக்கிறேன். புளியமரத்தடியில் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. கலையின் அத்துகள் பற்றி பேசும்போது அந்த மரத்தடியைக் கடந்து ரத்னாபாய் போய்க்கொண்டிருக்கிறாள்.

 டவுண் நயினார் குளம் கலுங்குக்கல்லில் உட்காந்திருக்கும் கோமதிக்குப் பக்கத்தில் இருந்த பாப்பையாவின் முகத்தை நெருங்கிப் பார்க்கும்போது அது நானாக இருக்கிறேன். என்னுடன் இருக்கும் வண்ணநிலவன் “ வே.. அது நான் தாம்வே..கோட்டி..கோட்டி..” என்று சொல்லிச் சிரிக்கிறார். மரங்களடர்ந்த பங்களாத்தெருவில் தூரத்தில் வருகிற தனலட்சுமியாக நானே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எதிரே வந்து கொண்டிருக்கிற செபாஸ்டியன் எப்படி வண்ணதாசனாக மாறினான்? வடக்கூரானைப் போட்டுத்தள்ளி விட்டு தலைமறைவாய் திரிகிற பூமணிக்கு தூக்குவாளியில் சாப்பாடு கொண்டுட்டு போகிறேன். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் என்னிடம் அந்த அடவுகளைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறான். உள்மனிதனின் விவகாரங்களைக் காரசாரமாக எங்கள் அருமை மேலாண்மை பொன்னுச்சாமி விவாதித்துக் கொண்டிருக்கிறார். கந்தர்வனின் துண்டு என் தோளில் கிடக்கிறது.கோணங்கியின் கருப்புரயில் என் மகளின் விளையாட்டு பொம்மையாக என் வீட்டு தட்டட்டியில் ஓடிக்கொண்டிருக்கிறது. கிடைக்காத வார்த்தைக்காக விக்கித்துப் போய் உட்கார்ந்திருக்கும் தமிழ்ச்செல்வனின் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மந்திரமலரைக் கொடுத்து விட்ட போன அந்தக்குழந்தை எங்கிருந்து வந்தாள்? எங்கே போனாள்? என்று விமலாதித்த மாமல்லனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வெயிலைக் கொண்டுவாருங்கள் என்று இருட்டுக்குள்ளிருந்து எஸ்.ரா.விடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிமிர்ந்து பார்க்காமல் டைப் அடித்துக் கொண்டேயிருக்கும் ஜெயமோகனின் கணிணியில் உள்ள விஷ்ணுபுரம் கோபுரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறேன். காவல்கோட்டத்தின் வரலாற்றை ஓங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் சு.வெங்கடேசனைப் பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். லிபரல் பாளையத்தை கேள்வி கேட்கும் ஒரே ஆளான மனுவிரோதி ஆதவன் தீட்சண்யாவுடன் ஒரு டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். மூவலூர் ராமாமிருதத்தம்மாளை கண்முன்னே நடமாட விட்ட எழுத்தாளர் ஜீவசுந்தரியிடம் அவருடைய அநுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி நேற்று வாசித்த தமிழ்க்குமரனோடு அலைபேசியில் அவருடைய கதைகளைப் பற்றி சொல்லும்போது குறுக்கே பொன்ராஜ் கிராஸ்பண்ணி பேசுகிறார். என் அருமை நண்பன் நாறும்பூநாதனின் ஆச்சி எனக்கு கொழுக்கட்டை அவித்து கொடுத்து “ ஏல தின்னுல மூதி..எப்படி மெலிஞ்சி போயிக்கிடக்கே..” என்று அங்கலாய்க்கிறார். இப்படி அனுதினமும் நான் புத்தகங்களையே கனவுகளாகக் கண்டு கொண்டிருக்கிறேன். அப்படி கனவுகள் காண்பதற்காகவே வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் கனவுகளில் வருகிற கதாபாத்திரங்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தத்துவவாதிகள் என்னோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடனான உரையாடல் என் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. அந்த அர்த்தம் தான் என் வாழ்வின் சாராம்சம் என்று உறுதியாக நம்புகிறேன்.

என் வாழ்வின் சாராம்சத்தை செழுமைப்படுத்தவே நான் இன்னமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்கும்போது என் மனம் விசாலமாகிறது. வாசிக்கும்போது என் மனதில் ஈரம் படர்கிறது. வாசிக்கும்போது என் மனதில் அன்பு ஊற்றெடுக்கிறது. வாசிக்கும்போது என் மனதில் மாற்றம் நிகழ்கிறது. வாசிக்கும்போது ஜனநாயகம் தழைக்கிறது. வாசிக்கும்போது சமூகத்தை மாற்றச் சொல்கிறது. வாசிக்கும்போது சமத்துவம் பிறக்கிறது. எனவே நான் வாசிக்கிறேன்.


  

       

1 comment:

  1. எழுத்தையும் படிப்பையும் நேசிக்கிறவர்கள்
    சமூகத்தை நேசிக்கிறார்கள்.
    என் போன்றோர்க்கு ஊக்கமளிக்கும்
    நல்ல பதிவு தோழர் வாழ்த்துக்கள்/

    ReplyDelete