Sunday 10 January 2016

நீங்கள் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது!

நீங்கள் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது!


உதயசங்கர்

எனக்கு முதன்முதலில் எழுத்தாளர் கௌரிஷங்கர் நேரடியாக அறிமுகமானது, 1979-ஆம் ஆண்டு. நாறும்பூநாதன் தலைமையில் நான் சாரதி, மறைந்த நண்பர் முத்துச்சாமி ஆகியோர் நடத்திய மொட்டுக்கள் என்ற கையெழுத்துப்பத்திரிகையை வாசிப்பதற்காக சுற்றுக்கு விட்டிருந்தோம். அந்தக் கையெழுத்துப்பத்திரிகை தான் எங்களுக்கு கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த எழுத்தாளர்கள் வட்டத்தையும், இடது சாரித் தோழர்களையும் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னால் ஓவியர் மாரீஸ் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தான். மிக அற்புதமான வடிவமைப்புடன் வந்து கொண்டிருந்தது. தேவதச்சன், கி.ரா. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, பசப்பல் ராஜகோபால், பிரதீபன், என்று எழுத்தாளர் குழாம் அதில் எழுதிக்கொண்டிநிறைந்திருந்தார்கள். அதில் எங்களுக்கு இடமில்லை. அந்தப்பொறாமையினால் தான் நாங்களும் கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம் என்று நினைக்கிறேன். மாரீஸோடு எல்லா எழுத்தாளர்களும் மிக நெருக்கமாக இருப்பார்கள். நாங்கள் தூரத்தில் இருந்து தேவதச்சன், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர்களைப்பற்றி யாரோ எப்படியோ சொல்லி சில மோசமான அபிப்பிராயங்கள் எங்களிடம் இருந்தன. அந்த வயதுக்கேயுரிய மனோநிலையில் லட்சியவாதத்தின் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கியிருந்த நாங்கள் அவர்களைச் சமூகப்பொறுப்பற்றவர்கள் என்றும், கலைகலைக்காக என்ற கொள்கை கொண்டவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு லட்சியக்காதலை மனதில் வரித்துக் கொண்டிருந்த எங்கள் பருவம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட விட்டேற்றியான போக்குகளை  கடுமையாக வெறுக்கச் செய்தது. மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகையில் அவர்களைக் கேலி செய்வதாக நினைத்து போலிக்காதல் என்ற தலைப்பில் எப்போது வேண்டுமானாலும் ஏறி இறங்கிச் செல்லும் டவுண்பஸ் என்கிற மாதிரியான அர்த்தத்தில் துணுக்கு எழுதியிருந்தோம். அது என்ன மாதிரியான விளைவை அவர்களிடம் ஏற்படுத்தும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பத்திரிகை சுற்றுக்குப் போனது. ஒரு நாள் மாலை எங்களை காந்திமைதானத்துக்கு வரச்சொல்லி மாரீஸ் அழைத்திருந்தான். அன்று இரவு ஏழு மணி இருக்கும். காந்திமைதானத்தில் உள்ள விசுவகர்மா ஆரம்பப்பள்ளியின் வாசல் திண்ணையில் தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் முருகன், உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருக்க, நான், நாறும்பூ, சாரதி, முத்துச்சாமி, நான்குபேரும் போய் நின்ற இடத்தில் தெருவிளக்கின் ஒளி சிந்திக்கொண்டிருந்தது. என்னுடைய நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?
அப்போது முதல் குரல் எழுந்தது. “ உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்? மொட்டுக்களாம் மொட்டுக்கள் அப்படியே மொட்டுக்களைக் கசக்கி எறிய வேண்டும். “ என்று முழங்கினார் கௌரிஷங்கர். அதைத் தொடர்ந்து அந்தக்கையெழுத்துப்பத்திரிகையை நார் நாராக கிழித்து எறிந்தார். அப்பாஸும், முருகனும் மாரீஸும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். தேவதச்சனும் ஏதோ சொன்னார். அவ்வளவு விரோதமாக அவர் ஏதும் சொன்னதாக நினைவிலில்லை. பத்து நிமிடங்கள் பொரிந்து தள்ளினார். எனக்கு அழுகையே வந்து விட்டது. எப்போது அந்த இடத்தை விட்டுப் போவோம் என்றிருந்தது. கௌரிஷங்கர் பேசி முடித்த பிறகு சிறு அமைதி. நாங்கள் ஏதோ சொல்லிவிட்டு போய் விட்டோம். அன்று எங்களுடைய மனநிலை மிகப்பரிதாபமாக இருந்தது. எங்களில் நாறும்பூ கொஞ்சம் தைரியமாக இருந்தான் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து எனக்கு கௌரிஷங்கரைக் கண்டால் பயம். பத்தடி தள்ளியே நிற்பேன்.
கோவில்பட்டி வீதிகளில் ஸ்டெப் கட்டிங் வெட்டி தாடி வளர்த்த ஒரு இளைஞன் ஒரு கையில் ரோஜாப்பூவுடன் ஒரு பெண்ணின் பின்னால் போவதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். எப்போதும் கையில் புத்தகத்துடன் சைக்கிளில் எந்தத் தெருவிலிருந்தோ, எந்தச் சாலையிலிருந்தோ திடீரென புகுந்து வருகின்ற ஒரு இளைஞனைப் பார்த்தோம். இரவில் காந்தி மைதானத்தில் ஓங்கிய குரலில் இலக்கிய விவாதம் செய்யும் அந்த இளைஞனின் குரலில் இருந்த நம்பிக்கை, அலட்சியம், தீர்க்கம், அந்த இளைஞனுடைய நடை, உடை, எல்லாம் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எந்த விவாதத்திலும் விட்டுக்கொடுக்காத பிடிவாதமும் ஈவிரக்கமில்லாத விமரிசனமும் தன்னுடைய வாதத்திற்கு ஆதரவாக அவர் சொல்கிற தர்க்கவிவரணைகளும் அவரை மிகப்பெரிய ஆளுமையாக கட்டமைத்தது, கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் அனைவரும் கௌரிஷங்கரைப் பார்த்து கொஞ்சம் அச்சப்பட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். கவிஞர் வித்யாஷங்கர் சொன்னதைப்போல கம்பீரத்தில் கோவில்பட்டி ஜெயகாந்தனாக இருந்தார் கௌரிஷங்கர். புதிய எழுத்தாளர்கள் யாராவது சிக்கி விட்டால் அவரிடம் புதுமைப்பித்தனைப் படித்திருக்கிறாயா என்ற கேள்வியில் தொடங்கி மூச்சு முட்டும் அளவுக்கு கேள்விகளைக் கேட்டு திணறடித்து விடுவார். முதலில் எனக்கு அப்படி பேசுவது வெறுப்பாக இருந்தாலும் பின்னர் இலக்கியத்தை மிகவும் எளிமைப்படுத்துவதற்கு எதிரான, குரலாகப் புரிந்து கொண்டேன். பின்னர் எப்போதோ பேசிக்கொண்டிருக்கும் போது இதையெல்லாம் தாண்டி இலக்கியத்துப்பக்கம் வர்றவன் வரட்டும் என்று சொன்னார்.  
நாங்கள் அறிமுகமாவதற்கு முன்பே 1975-எமர்ஜென்சி காலகட்டத்தில் கோவில்பட்டியில் ஆதர்ஷா என்ற திரைப்படக்கழகத்தை இடதுசாரித்தோழர்களான பால்வண்ணம், ஜவஹர், ஆர்.எஸ். மணி ஆகியோருடன் இணைந்து நடத்தினார். அப்போது சென்னையில் மட்டும் தான் திரைப்படக்கழகம் இருந்தது. ஷியாம் பெனகலின் ஆங்கூர், நிஷாந்த், சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி, ரித்விக் கடக்கின் மேகதாகதாரா, கே.பாலச்சந்தரின் புன்னகை, கிரிஸ் காசரவள்ளியின் சோமனதுடி, போன்ற திரைப்படங்களை தேசியத் திரைப்படக்கழகத்திடம் வாங்கித் தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். அப்போது புனேயிலிருந்து திரைப்படச்சுருள் அடங்கிய இரும்புப்பெட்டி ரயிலில் வரவேண்டும். திரையிட்டபின் மீண்டும் அதை ரயிலில் அனுப்ப வேண்டும். ஓரிரண்டு வருடங்கள் ஆதர்ஷா திரைப்படக்கழகத்தின் செயலாளராக இருந்தார். இந்த அநுபவம் காரணமாகவோ என்னவோ சினிமாவின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. திரைப்படத்துறையில் நுழைவதற்கான முயற்சிகளையும் செய்தார். அத்தகைய முயற்சிகளின் விளைவாகத் தான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தார். பிற்காலத்தில்  தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களான வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரைப் பற்றியும் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் அறிமுகமான பின்னர் உருவான வீதிநாடக இயக்கமான தர்ஷனாவில் அவருடைய பங்களிப்பு அதிகம். வீதி நாடக இயக்கம் என்ற புதிய நாடக இயக்கம் தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்திருந்த காலம். கோவில்பட்டியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், களத்தில் இறங்கினோம். கௌரிஷங்கர், தேவதச்சன், வித்யாஷங்கர், மனோகர், மாரீஸ், திடவை பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, என்று எல்லோரும் பங்கேற்றோம். கௌரிஷங்கர் பல நாடகக்கருக்களை உருவாக்கித் தந்தார். கோவில்பட்டியிலும் சுத்துப்பட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிக்காசோ நூற்றாண்டு விழாவை ஓவியர் அஃக் பரந்தாமன் தலைமையில் நடத்தினோம். அதே போல கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். இவையெல்லாவற்றிலும் அவருடைய பங்களிப்பு அசாதாரணமானது.
 அவருடைய காதல் கவிதைகளைத் தொகுத்து மழை வரும்வரை என்ற புத்தகம் வெளியானது. வித்தியாசமான புகைப்படங்களுடன் வடிவமைப்பில் ஒரு மாபெரும் புரட்சியாகத்தான் அந்தப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. மாரீஸ் அதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டான். அந்த நூலை சென்னையில் கவிஞர் நா.காமராசன் வெளியிட்டார். எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. அதே போல முந்நூறு யானைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.அந்தத் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய எழுத்தாளர்கள் கௌரிஷங்கர் சிறுகதைகளின் வடிவநேர்த்தியை வியந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஒரு சொல் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நேர்த்தி இருந்தது. வேலையில்லாத இளைஞனின் பிரச்னைகள், திருமணமாகாத பெண்களின் ஏக்கம், உதிரித்தொழிலாளிகளின் வாழ்க்கை, என்று அவருடைய கதைகளில் சமூகத்தின் கீழ்மத்தியதர வர்க்கத்து மக்களே நிறைந்திருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய முந்நூறு யானைகள் தொகுப்பைப் பற்றியும் கௌரிஷங்கரைப் பற்றியும் விரிவாக அவருடைய கதாவிலாசத்தில் எழுதியிருப்பார். அவருடைய கதைகளின் வடிவ நேர்த்தி என்னை மிகவும் பாதித்தது. கதைமொழியைப் பற்றி, கதையில் பாரா பிரிப்பதைப் பற்றி, கதையின் முதல்வரி, கதையின் கடைசிவரி, என்று நிறையப் பேசுவார். அவருடைய கதைகளில் ரேஷன் கடை, தலைவாழை, மிச்சம், முந்நூறு யானைகள், ஆகியவை மிக முக்கியமான கதைகளாகத் தோன்றுகின்றன. கவிதைகளில் கூட அந்தக்காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த புவியரசு, கங்கை கொண்டான், இவர்களின் சாயலும், மத்திய தரவர்க்கத்து காதல் ஏக்கம், கிளிஷேக்களுமாக இருந்தன என்று இப்போது தோன்றுகிறது. அவருடைய படைப்புகள் குறித்த விமரிசனங்களை மூர்க்கமாக எதிர்ப்பவர் என்ற வகையில் தன்னுடைய படைப்புகள் குறித்து அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர் கௌரிஷங்கர் என்று சொல்லலாம்.
கூடிப்பேசும் காந்தி மைதானத்தில் பல தடவை அவருடைய படைப்புகள் குறித்தும் விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அநேகமாக அங்கே விவாதங்களுட்படுத்தாத படைப்புகளே இல்லை என்று சொல்லலாம். கௌரிஷங்கருக்கு வருவாய்த்துறையில் வேலை கிடைத்த பிறகு அவருடைய இலக்கிய நாட்டம் மெல்ல மெல்லக்குறைந்து போனது. மிக நீண்ட காலம் வேலையில்லாமல் போராடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ வேலையில் தீவிரப்பிடிப்பும், வருவாய்த்துறைக்கே உரிய குணாதிசயங்களும் அவரிடம் வந்து விட்டன. எனக்கும் வேலை கிடைத்து திருவண்ணாமலை விருத்தாசலம், கொரடாச்சேரி, நெய்வேலி, என்று சுற்றிக் கொண்டிருந்தபோது கோவில்பட்டிக்குச் செல்லும் விடுமுறை நாட்களில் மாரீஸ், சாரதி, சிவசு, பாலு, ரெங்கராஜ், என்ற அளவில் என் பழக்கமும் குறைந்து விட்டது. கோவில்பட்டியில் சுழன்றடித்த கலாச்சாரப்புயல் கரை கடந்து விட்டது என்று கற்பனை செய்து கொண்டேன்.
நீண்ட கால வேலைக்குப்பின் தாசில்தாராக, டெபுடி கலெக்டராக பணி ஓய்வு பெற்ற கௌரிஷங்கருக்கு சமகால இலக்கியத் தொடர்பே இல்லாமல் போனது. அவரும் மீண்டும் அந்தத் தொடர்பை ஏற்படுத்தி விட முனைந்தார். வம்சி பதிப்பகத்திலிருந்து பின் செல்லும் குதிரை என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பும் அன்றில் என்ற தலைப்பில் கவிதைத்தொகுப்பும் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தித்த கௌரிஷங்கரிடம் பழைய கம்பீரம் இல்லை. இலக்கியம் பற்றி பேச்சு வரும்போது கொஞ்சம் தயங்கினார். தன்னுடைய படைப்புகள் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. மீண்டும் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்போதும் அவர் எழுபதுகள், எண்பதுகள் குறித்து பேசும்போது ஆதெண்டிக்காகப் பேசுவார். விவாதங்களில் முனைப்பாகப் பேசுவார். சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். சந்திக்கும் நேரங்களில் மிகுந்த உற்சாகத்தோடும், பாராட்டுகளோடும் என்னிடம் பேசுவார். கௌரிஷங்கரின் ஆக்ரோஷத்துக்கு நேர் எதிரான மென்மையான போக்குடைய கவிஞர் தேவதச்சன் தான் அவருடைய நீண்டகால நண்பர். இருவரும் பல விஷயங்களில் முரண்பாடுடையவர்கள் என்றாலும் தினமும் சந்தித்து அளாவளாவுவார்கள். தேவதச்சனைப் பார்க்க வருகிற கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்களோடு கௌரிஷங்கரும் விவாதிப்பார். சிலசமயம் பழைய ஆவேசமான கௌரிஷங்கரைப் பார்க்க முடியும்.
ஒரு வருடத்துக்கு முன் முதல் நெஞ்சுவலி வந்தபிறகு மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார். நேற்று முன்தினம் 18-12-15 இரவு மறுபடியும் வந்த நெஞ்சுவலியை மரணத்தின் முதல் அழைப்பென அவர் நினைத்துப்பார்க்கவில்லை. ஆங்கில மருத்துவம் படிக்கும் மகனின் சொல்லையும் கேட்கவில்லை. அவருடைய படைப்புகள் மீது அவருக்கிருந்த நம்பிக்கையைப் போல அவருடைய உயிரின் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. நேற்று 19-12-15 காலையிலிருந்து விட்டு விட்டு வந்த வலியையும் பொறுத்துக் கொண்டார். மாலைவரை வலியின் வேகம் கூடி மருத்துவரும் கைவிட்ட சில மணித்துளிகளில் எழுத்தாளர் கௌரிஷங்கர் காலமாகி விட்டார்.
கோவில்பட்டியில் மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் பண்பாட்டுஅசைவுகளுக்கும், கலாச்சாரமேன்மைக்கும் மொழிக்கும், இலக்கியத்துக்கும், பங்களிப்பு செய்தவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி அந்த ஊர் அறிவதில்லை. 70-களிலும், 80,-களிலும் கோவில்பட்டியில் நிகழ்ந்த பண்பாட்டு நிகழ்வுகளின் சூட்சுமமான விளைவுகள் காந்தி மைதானத்திலும், கதிரேசன் கோவில் மலையிலும், புழுதி பறக்கும் கோவில்பட்டி தெருக்களிலும் பரவிக் கிடக்கின்றன. கௌரிஷங்கரும் அப்படியான பங்களிப்பைச் செய்தவர். காலம் மாறியிருக்கலாம். இன்று அவருடைய படைப்புகளுக்கு மிகக்குறைந்த மதிப்பே கிடைக்கலாம். ஆனாலும் என்ன? அவர் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது.
இன்று காலை தகவல் தெரிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவருடைய இல்லத்துக்குப் போயிருந்தோம்.. மிகக்குறைவான ஆட்கள் அதுவும் உறவினர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். மரணத்தைப் போல குளிர்ந்த அந்த கண்ணாடிப்பெட்டியில் பட்டு வேஷ்டியும் பட்டுச்சட்டையும் அணிந்து கண்களை மூடிக் கிடந்தார் எங்கள் கௌரிஷங்கர்! அவருடைய உதடுகளில் நுரை தள்ளியிருந்தது. வலியை மென்று முழுங்கி வெளியான அந்த நுரை இன்னும் காயவில்லை. நெஞ்சு ஒரு கணம் அதிர்ந்தது. அவருடைய உதடுகளில் இன்னும் அவர் பேசுவதற்காக மிச்சம் வைத்திருக்கும் அந்தத் தர்க்கம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
எங்கள் அன்புக்குரிய ஆசானே போய் வாருங்கள்!

உங்கள் படைப்புகள் எங்களோடு வாழும்! 

நன்றி- உயிரெழுத்து ஜனவரி 2016