Thursday 29 August 2019

அந்தர அறை


அந்தர அறை
உதயசங்கர்
 தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த நகருக்கு வந்திருந்தான் சதீஷ். கிட்டத்தட்ட எழுநூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தான். முகமறியாத ஊரில் யாருக்கும் தெரியாமல் செத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு பறவைகள் எப்படி இறக்கின்றன? எங்கே இறக்கின்றன? என்ற கேள்விகள் இருந்தன. நூற்றுக்கணக்கான வகை பறவைகள் இருக்கின்றன. அவை இறந்து போவது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. காகங்களின் இறப்பு அதுவும் விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தவிர மற்றபடி பறவைகளின் இறப்பை யாரும் பார்த்ததில்லை. அப்படி பறவைகள் போல யாருக்கும் தெரியாமல் இறந்து போகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஊரில் ஒரு நூறுபேருக்காவது அவனைத் தெரியும். அந்த நூறுபேரின் நினைவுகளில் சில நாட்களாவது அவன் தட்டுப்படுவான். மற்றவர்களின் நினைவுகளில் அவன் இருப்பதும் இல்லாமல் போவதும் வெறும் புவியியல் எல்லைகளுக்குள் இருக்கும் அவனுடைய பௌதீக நடமாட்டம் தானே தீர்மானிக்கிறது. அவனுடைய பாலியகால நண்பன் மௌலி இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தான். யாருடனும் தொடர்பில்கூட இல்லை. திடீரென போனமாதம் அங்கே மாரடைப்பினால் இறந்து போய்விட்டதாக ராம் சொன்னபோது எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அதோடு அவன் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தும் மறந்து போய்விட்டது.
அதோடு ஊரில் தற்கொலை செய்யப்பிடிக்கவில்லை. அவன் மனைவி, குழந்தைகள், அவனுடைய அப்பா, விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் உறவினர்கள், என்று எல்லோருக்கும் மிகுந்த துயரம் தரக்கூடியதாக அமைந்து விடும். குறிப்பாக மனைவிக்கு கணவன் இறந்ததை விட வேதனை தரும் சடங்குகளை நடத்துவார்கள். அகிலா இதையெல்லாம் தாங்கமாட்டாள். இறப்பைத் தொடர்ந்து நடக்கும் சடங்குகள் அலுப்பூட்டுபவை. பழைய நிலவுடமைச்சமூகத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சடங்குகள். அதை இத்தனை நூற்றாண்டுகளாய் தூக்கிச்சுமப்பதே கொடுமையான விஷயம். அவனும் அந்தச் சுமையை தன்னுடைய குடும்பத்தாருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அவனுடைய அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்த வினோத் திடீரென காணாமல் போய்விட்டான். முதல் ஆறுமாதத்துக்கு அவனை எல்லோரும் சல்லடைபோட்டு தேடினார்கள். அவனுடைய மனைவி மூன்று மாதங்கள் கழித்து கிட்டத்தட்ட நார்மலுக்கு வந்து விட்டாள். இதுவரை அவன் இருக்கிறானா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. போலீசில் ஏழு வருடம் கழித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் கொடுத்தால் அவனுடைய மனைவிக்கு வேலையும் வினோத்தின் பணிப்பயன்களும் கிடைக்கும். அதையும் மூன்று வருடங்களிலேயே வாங்கிவிட்டார்கள். அவன் மனைவியும், மற்ற உறவினர்களும் அவன் காசி, ஹரித்துவார் என்று சாமியாராகப் போய்விட்டான் என்று நினைத்தார்களே தவிர அவன் இறந்திருப்பான் என்று கற்பனை கூடச்செய்யவில்லை. அதனால் ஊரில் தற்கொலை வேண்டாம் என்று நினைத்தான். அதுமட்டுமில்லாமல் ஊரில் இரண்டு முறை முயற்சித்து தோற்றுப்போய்விட்டான்.
தற்கொலைப்பருவம் - 1
முதல்முறையாக பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்ய முடிவு செய்தான். அவன் தினமும் சினிமா பார்ப்பதனால் தான் தோல்வியடைந்தான் என்று அப்பா அடி வெளுத்து விட்டார். அவர் சொன்னது உண்மைதான். தினமும் சினிமாவுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒவ்வொரு சினிமாவையும் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்தான். சகலகலாவல்லவன் படத்தை மட்டும் இருபது தடவையாவது பார்த்திருப்பான். அப்படி விழுந்து விழுந்து சினிமா பார்த்ததற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அந்த நேரத்தில் அவன் மனநிலை அப்படியிருந்தது. அவ்வளவு தான். சினிமா வேறு ஒரு உலகத்துக்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனது. பள்ளிக்கூட ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் அப்பா வைத்திருந்த ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மூன்று நான்கை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து பால் ஐஸ் வாங்கிச் சப்பிக்கொண்டே தொண்டையில் போட்டு முழுங்கிவிட்டான். வீட்டுக்கு வந்த கொஞ்சநேரத்தில் தலை சுற்றிக் கீழே விழுந்து விட்டான். பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள்.
தற்கொலைப்பருவம் - 2
இரண்டாவது முறையும் தற்கொலைக்கு தோல்வி தான் காரணம். ஆனால் காதல் தோல்வி. கல்லூரியில் படிக்கும்போது ஜெயாவை ஒரு தலையாகக் காதலித்தான். இவன் அவளைப் பார்க்கிறான் என்பது கூடத் தெரியாத அளவுக்கு அவளைக் காதலித்தான். தினமும் அவள் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டுவிட்டே தன்னுடைய அன்றாடக்காரியங்களை ஆரம்பிக்கிற அளவுக்கு காதல் ஊற்றெடுத்தது. ஜெயசதீஷ் என்ற பெயரில் கவிதைகள் கூட எழுதினான். ஒன்றிரண்டு தினமலர் வாரமலர் கடைசிப்பக்கத்தில் வந்தன. அவளைப்பார்ப்பதற்காக மணிக்கணக்காக தெருக்களில் காத்துக்கிடப்பது போன்ற வழக்கமான கிரித்திரியங்களை எல்லாம் செய்தான். வழக்கம்போல கல்லூரிப்படிப்பு முடிந்ததும், ஜெயா திருமணம் முடித்துக் கொண்டு போய்விட்டாள். அதுவரை பீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்த சதீஷ், இந்தத் தோல்விக்குப்பின் பிராந்தி, விஸ்கி, குடிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் குடிபோதையில் பாட்டிலை உடைத்து மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கொண்டான். மறுபடியும் அதே பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். முதல் தற்கொலைப்பருவத்திலிருந்த அதே மருத்துவர் அருணாச்சலம் தான் இருந்தார். காப்பாற்றிவிட்டார். மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபோது சொன்னார்.
“ சாகணும்னு முடிவு பண்ணிட்டயா.. யாராலும் காப்பாற்றமுடியாதபடி போயிரணும்.. சும்மா படம் காமிச்சுக்கிட்டிருக்கக்கூடாது… நீ எல்லாரையும் சாகடிச்சிட்டு தான் சாவே… டேமிட்..”
அவர் சிரித்துக்கொண்டே சொன்னதினால் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனால் அதில் இருந்த வன்மம் சதீஷின் காயத்தில் போய் ஊசியைப்போல குத்தியது. அடுத்தமுறை யாருக்கும் தெரியாமல் செத்துப்போய்விடவேண்டும் என்று முடிவெடுத்தான்.
அதன் பிறகு இருபது வருடங்கள் ஓடிவிட்டது.
தற்கொலைப்பருவம் – 3
கடந்த ஒரு மாதமாக இந்த எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. அது ஒரு ரகசிய ஆசையாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கள்ளக்காதலியுடன் கலவி கொள்ளும் உணர்ச்சி வேகம் அதை நினைக்கும்போது வந்தது. அவனுடைய பிரச்னைகளும் கூட தீர்ந்து போய்விடும். உலகின் அத்தனை பொருட்களும் அவனுடைய வசம் இருக்க வேண்டும் என்று அவனும் அவனுடைய மனைவியும் குழந்தைகளும் நினைத்தார்கள். மெய்நிகர் உலகமே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்தது. கோடிக்கணக்கான இணைய முகவரிகளின் வழியே உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் அவனுடைய தாகத்தைத் தீர்க்க பொருட்கள் வந்து அவனுடைய வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தன. அத்தனை பொருட்களுக்கும் அவன் வீட்டுக்கதவைத் திறந்து விட்டான். அந்தக் கதவின் வழியே அவனுடைய பேராசை மாறுவேடமிட்டு அவன் வேலைபார்த்த வங்கியின் கதவைத்தட்டியது. அவன் வங்கியில் கிட்டத்தட்ட இருபத்தியைந்து லட்சம் ரூபாயைக் கையாடல் செய்து விட்டான். பொய்யான பெயர்களில் லோன் போட்டு பணத்தை எடுத்து அவனுடைய பேராசையைத் திருப்தி செய்ய முயன்றான். கார், பெரிய வீடு, பொருட்கள் என்று வசதியாக வாழ்கிற ஒருவனைப்பார்த்து பொறாமை சும்மா இருக்குமா?. ஐந்து வருடங்களாக மறைந்திருந்த பூதம் இப்போது ஆடிட்டர் மூலம் வெளிவந்து விட்டது. இனி எதுவும் செய்யமுடியாது என்ற நிலைமை வந்தபோது இதுவரை மனதின் புதைசேற்றில் மறைந்திருந்த தற்கொலைச்சிந்தனை மளமளவென்று வளர்ந்து செழித்தது. அதிலிருந்து தற்கொலை பற்றிய செய்திகளை ஊன்றிப் படித்தான். முடிவில் கண்காணாத நகரத்துக்கு வந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.
காலையில் நகரில் வந்து இறங்கியதும் ஒதுக்குப்புறமாக ஒரு தங்கும் விடுதியைத் தேடினான். ஊருக்கு வெளியே புறவழிச்சாலையில் இருளடைந்த கருப்புநிறப்பதாகையில் மஞ்சள் எழுத்துகளில் ஜீவன் லாட்ஜ் என்று ஒரு விடுதி இருப்பதைக் கண்டுபிடித்தான். அந்த விடுதியின் முன்னால் ஒரு சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தான். இருட்டாயிருந்தது.
பழைய தேக்கு மரத்தாலான காலத்தால் பளபளப்பேறிய ஒரு கவுண்டர் இடதுபக்கம் இருந்தது. அந்த கவுண்டரின் மீது பழைய கணக்குப்பேரேடு ஒன்று விரித்து வைக்கப்பட்டிருந்தது. பித்தளைக் காலிங்பெல் ஒன்றும் இருந்தது. அதன் அமுக்குவிசை குழந்தையின் மானிபோல விரைப்பாய் நின்றது. சதீஷ் காலிங் பெல்லை அமுக்கினான். யாரும் இருப்பதற்கான அரவமேயில்லை. விடுதியில் ஆள் இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. திரும்பிவிடலாம் என்று நினைத்து கைப்பையை எடுத்தபோது திடிரென கவுண்டரில் ஒரு ஆள் தோன்றினான். எப்படி எங்கிருந்து வந்தான் என்று புரியாமல் குழம்பினான் சதீஷ். விடுதியின் மேலாளராக இருக்கவேண்டும். அழகாக இருந்தான். மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தான். நெற்றியில் மூன்று திருநீற்றுப்பட்டையும் நடுவில் ஒரு குங்குமத்தீற்றலும் இருந்தது. சதீஷின் குழப்பத்தை உணர்ந்தவன் போல ஒரு சிறிய புன்முறுவலுடன்,
“ கீழே ஒரு நிலவறை இருக்கிறது சார்! அங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வாரேன் “
என்றான். சதீஷ் பெருமூச்சு விட்டான்.
“ என்ன சார் ரூம் வேணுமா? சிங்கிளா.. டபுளா.ஏ.சி.யா.. நான் ஏ.சி.யா .” என்று மூச்சு விடாமல் கேட்டான். ஒரு கணம் யோசித்த சதீஷ்,
“ சிங்கிள் போதும்…. ரெண்ட் எவ்வளவு ? “
“ ஜஸ்ட் ஐம்பது ரூபா தான்..”
“ என்னது ஐம்பது ரூபாயா? “ என்று ஆச்சரியப்பட்டான் சதீஷ்.
“ எங்க முதலாளி ஒரு சேவையா இதை நடத்திக்கிட்டிருக்காரு… “
“ ஆச்சரியமா இருக்கே.. சரி.. ரூம் போட்டுருங்க.. “
“ இந்த ரிஜிஸ்டரில எழுதுங்க.. சார்..”
சதீஷின் பக்கமாக அந்தப் பேரேட்டைத் தள்ளினான். சதீஷ் அந்தப் பேரேட்டை மேலோட்டமாகப் பார்த்தான். கடைசியாக போனவாரம் தான் இரண்டு பேர் அறை எடுத்திருக்கிறார்கள். பேரேட்டில் எதையும் உண்மையான தகவலை எழுதக்கூடாது என்று முன்பே யோசித்திருந்தான். பேனாவின் மூடியைத் திறந்து என்ன பெயரை எழுதலாம் என்று ஒரு நொடி தயங்கியபோது விடுதி மேலாளர்,
“ ஏதாச்சும் ஒரு பேரை எழுதுங்க…சார்.. அப்புறம் அட்ரஸ் முக்கியம்.. எந்த ஒரு கமா, புள்ளி கூட உண்மையா இருக்கக்கூடாது.. நீங்க வடக்கேயிருந்து வந்திருந்தா.. தெக்கே இருக்கிற ஒரு ஊர் அட்ரஸை எழுதுங்க.. தெக்கே இருந்து வந்திருந்தா வடக்கே உள்ள ஏதாச்சும் ஒரு ஊரை எழுதுங்க.. முக்கியமா நீங்க எழுதுற ஊரில் உங்க பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க.. யாரும் இருக்கக்கூடாது… அது ரொம்ப முக்கியம்..”
என்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். சதீஷ் அவன் கேலி செய்கிறானோ என்று நினைத்தான். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் எழுதினான். தங்குவதற்கான காரணம் என்ற பகுதிக்கு வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப்பத்தியில் ஏற்கனவே தற்கொலை என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. சதீஷ் நிமிர்ந்து பார்த்தான். மாறாத புன்னகையுடன் விடுதி மேலாளர்,
“ சார் சொல்ல மறந்துட்டேன்.. எப்படி சூசைட் பண்ணப்போறீங்க.. கயித்துல தொங்கப்போறீங்களா.. துப்பாக்கியால சுட்டுக்கப்போறீங்களா.. கத்தியால குத்திக்கிட்டு சாகப்போறீங்களா.. இல்லை விஷம் குடிச்சிச் சாகப்போறீங்களா.. மாடியிலிருந்து குதிக்கப்போறீங்களா.. ஏற்கனவே முடிவு எடுத்துட்டீங்களா? அப்படி எடுக்கலன்னா உங்களுக்கு ஆலோசனை சொல்ல இங்கே ஒரு சிறப்பு ஆலோசகர் இருக்கார்.. அவருக்குக் கட்டணம் ஐநூறு ரூபா… அவர் வேண்டாம் என்றால் உங்கள் விருப்பப்படி எல்லா தற்கொலை உபகரணங்களும் உங்கள் அறையில் வைக்கப்படும். பொதுவாக வி.ஐ.பி.களுக்குத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் இதைச் செய்வதில்லை. உங்களைப் பார்த்தால் கொல் அல்லது கொல்லப்படு சீரியலில் வருகிற கதாநாயகன் போலவே இருக்கிறீர்கள்.. அதனால் இந்தச் சலுகையைத் தரலாம் என்று நான் விடுதி விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் முடிவு செய்கிறேன்.. நீங்களே அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்..அப்படி முடிவு எடுத்திருந்தா வெளியிலிருந்து எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துட்டு வரக்கூடாது.. இங்கே தான் வாங்கணும்.. நாங்க தான் தருவோம்.. அது எந்த மாதிரியான தற்கொலைக்கருவியோ அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.. அப்புறம் இன்னொரு விஷயம் தற்கொலை செய்யத்தயக்கமா இருந்தா அதற்கும் உதவி செய்ய உதவியாளர்கள் தூக்கு மாட்டிவிட, விஷத்தைப்புகட்டிவிட, மாடியிலிருந்து தள்ளிவிட, துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள, கத்தியால் குத்திக்கொள்ள, என்று தனித்தனியான உதவியாளர்கள் அரசாங்கத்தின் சான்றிதழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள்… அவர்களுக்குக் கட்டணம் ஆயிரம் ரூபாய் 
உங்களுடைய தற்கொலையைப் பற்றி தொலைக்காட்சியில் விவாதமேடை நடத்தலாம். அதற்கென்றே இரண்டு சேனல்கள் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் அதில் பங்கு பெற்று ஒரே நாளில் ஓகோவென்று புகழ் பெறலாம். விவாதமேடையைப் பார்த்தால் கொலைகாரனாகிவிடலாம் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தற்கொலை நிகழ்வை பிரேக்கிங் நியூசாகப் போட்டு நேரடியாக உலகம் பூராவும் ஒளிபரப்ப முப்பது சேனல்கள் தயாராக இருக்கின்றன. நேரடி ஒளிபரப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறும். அதிக விளம்பரங்கள் கிடைக்கும்பட்சத்தில் உங்களுக்கு அதிலிருந்து ஒரு சிறு தொகையும் காப்புரிமைத்தொகையாகக் கிடைக்கும். நீங்கள் யோசித்துச் சொல்லலாம். என்ன கேரளாவில் ஒரு விவசாயியின் தற்கொலையை இப்படி ஒரு நேரடி ஒளிபரப்பாக எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் நடத்திவிட்டார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றபடி நீங்கள் தங்கும் அறையில் உங்கள் தற்கொலை நிகழ்வின் சமயம் நடக்கும் எந்தச் சேதத்திற்கும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. அத்துடன் இன்னொரு செய்தியையும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்களுடைய கடைசி இரவு உணவை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்… எப்படியிருந்தாலும் ஒரு உத்திரவாதத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும்.. தற்கொலை உங்கள் லட்சியமாகவோ, நோக்கமாகவோ, அசட்டு உணர்ச்சியாகவோ, பயமுறுத்தலாகவோ, என்ன வகை மாதிரியாக இருந்தாலும் இங்கே உள்ளே வந்தவர்கள் யாரும் உயிருடன் வெளியே போனதில்லை..”
என்று நீண்டதொரு உரைவீச்சை வீசினான். மேலாளரின் பேச்சைக்கேட்டுக் கொண்டே பேரேட்டில் கையெழுத்துப் போட்டு பணமும் கொடுத்துவிட்டான். ஆனால் சதீஷுக்குக் குழப்பமாக இருந்தது. எல்லாம் பிரமையாக இருக்கலாமோ. நிமிர்ந்து பார்த்தான். விடுதியின் சுவர்களில் விதவிதமான தற்கொலைக்கருவிகளின் படங்கள் ஃப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. அந்த படங்களின் அருகே அந்தந்தத் தற்கொலைக்கருவியைப் பயன்படுத்தி இறந்த பிரபலங்களின் பெயர்களும் இருந்தன.
மேலாளர் அறையின் சாவியை அவரைப்போலவே திடீரெனத் தோன்றிய உதவியாளரின் கையில் கொடுத்து அறையை ஒழுங்குபடுத்த அனுப்பிவிட்டு அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.
“ சார் நீங்க கொடுத்துவைத்தவர்… நீங்க தங்கப்போற அறை எண் அஞ்சில தான் இருபது வருடங்களுக்கு முன்னால் கவர்ச்சிக்கன்னியாக இருந்த பி.கே.பாக்கியலட்சுமி தூக்குமாட்டி இறந்து போனார். அவர் இறந்தபின்பு எடுத்த படங்கள் இருக்கிறது பார்க்கிறீர்களா?...”
என்று சொல்லியபடி கவுண்டருக்குக்கீழே குனிந்து ஒரு பெரிய ஆல்பம் ஒன்றைக் கையில் கொடுத்தார். சதீஷ் அங்கே இருந்த மரநாற்காலியில் உட்கார்ந்து ஆல்பத்தைப் புரட்டினான்.
கண்முழி பிதுங்கி, நாக்கு தள்ளி, தூக்கு மாட்டி இறந்தவர்களின் படங்கள், துப்பாக்கியால் தலையில், வாயில், மூக்கில், நெஞ்சில், வயிற்றில், ஏன் குஞ்சில், சுட்டுக்கொண்டு இறந்தவர்களின் படங்கள், வாயில் நுரை தள்ளி, கைகால்கள் விரைத்துக்கோணிக் கொண்டு இறந்தவர்களின் படங்கள், கத்தியால் கழுத்தை அறுத்தவர்கள், கத்தியால் நெஞ்சில் குத்தியவர்கள், வயிற்றில் குத்தியவர்கள், என்று ரத்தக்களறியாக இறந்தவர்களின் படங்கள், மாடியிலிருந்து கீழே விழுந்து தலை சிதறியவர்கள், முதுகில் முகம் திருப்பியவர்கள், கைகால்கள் எட்டு கோணத்தில் திரும்பிக்கிடக்க இறந்தவர்களின் படங்கள் என்று குவிந்து கிடந்தன. எல்லாப்புகைப்படங்களிலும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. கடைசிப்பக்கத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த சதீஷ் அதிர்ச்சியடைந்தான்.
கண்கள் பிதுங்க, நாக்குத்தள்ளி, கழுத்து தொங்க சதீஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். துள்ளியெழுந்த சதீஷின் தோளில் மேலாளர் தட்டிக்கொடுத்தான்.
“ தேதி போடலையேன்னு கவலைப்படாதீங்க.. அது சின்ன வேலைதான்.. சரி.. நல்வாழ்த்துக்கள்!..” என்று சொல்லி அழகாகச் சிரித்தான் அந்த மேலாளர்.

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 205

Sunday 11 August 2019

நஸ்ரியாவின் செடி


நஸ்ரியாவின் செடி
உதயசங்கர்

நஸ்ரியா ஒரு குட்டிப்பாப்பா. குட்டிப்பாப்பா என்றால் மூன்று வயது முடிந்த குட்டிப்பாப்பா. வீட்டுக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டாள். ஒரே ஓட்டம் தான்.
உம்மா கூட, “ ஒரு இடத்துல நிக்குதா பாரு.. அங்கிட்டும் இங்கிட்டும் ஓட்டமும் சாட்டமும்.. “ என்று சொல்லிச் சிரிப்பாள். அப்படி ஓடும்போது நஸ்ரியா அப்படி இப்படித் தடுமாறுவாள். கால்கள் பின்னும். கீழே விழப்போவதைப் போல சாய்வாள். ஆனால் விழாமல் சமாளித்து விடுவாள். அப்போது யாராவது அவளுடைய வாப்பாவோ, உம்மாவோ இருந்தால் அவர்களைப் பார்த்துச் சிரிப்பாள். எப்படித் தெரியுமா? வாயிலிருந்து கெக்கேக் கீக்கி என்ற சத்தம் வரும். எளிறும் பால்பற்களும் தெரிய பளீரெனச் சிரிப்பாள்.. பெருமை. கீழே விழாமல் சமாளித்து விட்டாளாம்.
அப்படி யாரும் இல்லையென்றால் நஸ்ரியா சிரிக்கமாட்டாள்.. அடுக்களையில் இருக்கும் உம்மாவையோ தோட்டத்தில் இருக்கும் வாப்பாவையோ தேடிப்போவாள். அப்பவும் ஓட்டம் தான். போய் அவர்களுடைய முகத்தைத் திருப்பி நேராகப் பார்த்துக் கொண்டு சிரிப்பாள். அவர்களுக்கு நஸ்ரியா எதுக்குச் சிரிக்கிறாள் என்று தெரியாது. ஆனால் நஸ்ரியாவுக்குத் தெரியுமே.
நஸ்ரியாவுக்கு தோட்டம் தான் மிகவும் பிடித்த இடம். தென்னை மரங்கள், மாமரங்கள், ஒரு பெரிய வேப்பமரம், ஒரு புளிய மரம், சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, என்று பூச்செடிகள், காட்டுச்செடிகள், நெருஞ்சி, தும்பை, கொளுஞ்சி, தாத்தாச்செடி, முசுமுசுக்கை, நுணாக்கொடிகளும் நிறைந்திருக்கும். அதிகாலையில் ஒரு கருங்குயிலின் கூக்கூக்க்கூகூ சத்தம் தான் நஸ்ரியாவை எழுப்பிவிடும். அவள் எழுந்தவுடன் தோட்டத்திற்குத் தான்போவாள். எப்படியாவது அந்தக்குயிலக்காவைப் பார்க்கவேண்டும் என்று அங்கும் இங்கும் ஓடுவாள். சத்தம் வரும். ஆனால் பார்க்க முடியாது. சில நேரம் கருகருவென குயிலக்காவின் வாலின் நுனி மட்டும் தெரியும்.
 “ கண்ணாமூச்சி ஆடுறியா.. இரு  இரு வாப்பாகிட்டச் சொல்லி உன்னைப் பிடிச்சித்தரச்சொல்றேன்..”
நஸ்ரியாவுக்குக் கோபமாக வந்தது. சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். வாப்பா தூரத்தில் பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்படியே உட்கார்ந்து மண்ணைக் கிளற ஆரம்பித்து விட்டாள். வேப்பமரத்தடியில் நிறைய வேப்பங்கொட்டைகள் கிடந்தன. அதில் ஒரு கொட்டையை எடுத்து வாய்க்கருகில் கொண்டு போனாள்.நஸ்ரியா. அந்தக் கொட்டை கசந்தது. முகத்தைச் சுளித்தாள். நஸ்ரியாவுக்குத் தான் கசப்பு பிடிக்காதே. அப்படியே அந்தக்கொட்டையை அவள் தோண்டியிருந்த சின்னப்பள்ளத்தில் போட்டாள். மண்ணைப் போட்டு மூடினாள். அவள் மூடிக்கொண்டிருக்கும்போது மாமரத்தில் இருந்து அணில் அண்ணன் வீச் வீச் என்று சத்தம் கொடுத்துக் கொண்டே ஓடினான். நஸ்ரியாவுக்கு அணில் அண்ணனின் வாலைத் தொடவேண்டும் போலிருந்தது. கைகளை நீட்டினாள். அணில் அண்ணன் அவளைக் கவனிக்கவில்லை.. நஸ்ரியா அணில் அண்ணனோடு டூ விட்டாள். அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. அழலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அப்போது ஒரு செவலை நிறக்கும்பிடு பூச்சி அவளுக்கு முன்னால் வந்து
“ காலை வணக்கம் குட்டிப்பாப்பா..”  என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தூக்கிக்கும்பிட்டது. நஸ்ரியாவும் அவளுடைய இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டு
“ குட்மார்னிங்..” என்றாள். உம்மா இங்கிலீஷில் தான் சொல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். கை கொடுக்கலாம் என்று அவளுடைய கையை நீட்டினாள். ஆனால் கும்பிடுபூச்சி அதை விரும்பவில்லை. பறந்து விட்டது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் இறங்கினாள். உடம்பு புல்லரித்தது. நஸ்ரியாவின் முழங்கால் அளவு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அப்படியே உட்கார்ந்து தப்பளம் போட்டாள். தண்ணீர் அவளுடைய முகத்தில் தலையில் உடம்பெங்கும் தெறித்தது. அப்படியே வெளியேயும் மழைத்துளிகளைப் போலத் தெறித்தது.
உம்மா வந்து கூட்டிக்கொண்டு போனாள். நஸ்ரியா இப்போது எல்.கே.ஜி. போகிறாள். பள்ளிக்கூடம் போவதுக்கு முன்னால் தான் இந்தத்தோட்ட வேலை எல்லாம் நடக்கிறது. நாலைந்து நாட்கள் கழித்து குயிலக்காவின் குரலைக் கேட்டு தோட்டத்துக்குப் போன நஸ்ரியா அன்றும் பார்க்கவில்லை. எப்படி பார்ப்பது ? என்று ஆழ்ந்த சிந்தனையில் மண்ணில் உட்கார்ந்த நஸ்ரியா அப்போதுதான் கவனித்தாள்.
அவளுக்கு அருகில் ஒரு சிறு வேப்பஞ்செடி இரண்டு இலைகள் விட்டு விதைப்பருப்போடு எழுந்து நின்று கொண்டிருந்தது. அவளுடைய குட்டி விரல்களால் அதைத் தடவிக் கொடுத்தாள். மகிழ்ச்சி. அவளுக்குச் சிரிப்பு வந்தது. கெக்கே கெக்க்கே என்று சிரித்தாள். கீழே உருண்டு புரண்டு சிரித்தாள். திரும்பத் திரும்ப அந்த குட்டிச்செடியைப் பார்த்துச் சிரித்தாள். நஸ்ரியாவின் சிரிப்பைப் பார்த்த அந்தக்குட்டி வேப்பமரமும் காற்றில் தலையாட்டிச் சிரித்தது..
நன்றி - வண்ணக்கதிர்

Thursday 8 August 2019

அப்பாவின் கைத்தடி
அப்பாவின் கைத்தடி
உதயசங்கர்

வீடு ஏன் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது என்று ரேவதிக்குத் தெரியவில்லை. இராத்திரி பனிரெண்டு மணி மில் சங்கு ஊதி கொஞ்சநேரம் ஆகியிருக்கும். எப்போதும் மேலே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் உள்ள ஓட்டைகள் வழியேயும், மண் சுவருக்கும் கூரைக்கும் நடுவே உள்ள அரையடி இடைவெளி வழியாகவும் வெளிச்சம் பொழிந்து கொண்டேயிருக்கும் என்றாலும், இன்று இரவிலும் பகலைப்போல அப்படி இருந்தது அல்லது அப்படி இருப்பதாக ரேவதிக்குத் தோன்றியது. தோணல்கள் தானே வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகிறது. ரேவதியின் ஒட்டிய கன்னங்கள் இரண்டு பக்கமும் லேசாக விரிந்தன. அவள் இன்னும் சற்று நேரத்தில் மூன்று மணி மில் சங்கு ஊதியவுடன் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். மில் வாசலுக்கு அடுத்த ஹூசைன்பாய் டீக்கடை முக்கில் கட்டையன் காத்துக்கொண்டிருப்பான். காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவர்களுடைய கால்மாட்டில் அப்பா படுத்திருந்தார். அவர் சட்டடியாகப் படுத்து ஆறு மாதங்களாகி விட்டது. அதற்கு முன்னால் அவர் கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தார். ஆனால் படுத்தபிறகும் அவருடைய பக்கத்தில் அந்தக் கைத்தடி கிடந்தது. எப்போது வேண்டுமானாலும் எழுந்து நடந்து விடுவதைப்போல. பலமுறை அப்பாவின் கால்களைத் தட்டிவிட்டிருக்கிறது. ஆனாலும் அவர் அந்தக் கைத்தடியை விடுவதாயில்லை. பிறந்ததிலிருந்து கூடவே இருக்கிறமாதிரி ஒரு பாசம். கைத்தடியில்லை என்றால் அவருக்குப் பயம் வந்து விடும். வழிதவறிவிடுவோமோ என்று பயப்படுவார். பல நேரங்களில் அவர் கைத்தடியை வைத்திருக்கிறதா? அல்லது அவரைக் கைத்தடி வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் வரும்.  அந்தக் கைத்தடியை வைத்துத்தான் ரேவதி இரண்டாவது முறையாக வீட்டைவிட்டு வெளியேறிய போது அடித்தார். அது நடந்து நாலைந்து வருடம் இருக்குமா? அவன் தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்தான். அது நடந்திருந்தால் இந்நேரம் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியிருப்பாள். ஆனால் அன்று அப்பாவிடம் மாட்டிக்கொண்டாள். அவள் எழுந்து போகும்போது அப்பா குறுக்கே வைத்திருந்த கைத்தடி காலைத்தட்டி விட கீழே விழுந்துவிட்டாள். விழுந்தவள் அந்த அறையின் ஒரு பகுதியாக இருந்த அடுக்களையில் உள்ள பாத்திரங்களைக் கடமுடா என்று உருட்டிவிட்டாள். பார்த்தவுடன் புரிந்து கொண்டார் அப்பா.
“ யார் அவன்? என்ன ஆளுக..? “ என்று கத்தினார்.
அவள், “ தெரியாது “ என்றாள்.
தெரியாது என்ற வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம் அப்பாவின் கைத்தடி ஆவேசமாக அப்பாவின் கையைத்தூக்கியது. அடி என்றால் அந்த அடி இந்த அடி என்றில்லை. ரேவதி எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகிவிட்டது. நல்லவேளை இதையெல்லாம் பார்ப்பதற்கு அம்மா இல்லை. தீப்பெட்டிக்கம்பெனிக்குப் போய்விட்டு வந்து வாசலில் உட்கார்ந்தாள்.
“ ஈசுவரி.. நெஞ்சைக்கரிக்கிற மாதிரி இருக்கு. குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் போட்டுக் கொண்டா..”
என்றாள் அம்மா. ஈசுவரியக்கா வெந்நீர் போட்டுக் கொண்டுவருவதற்குள் கீழே சாய்ந்திருந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள் ரேவதி. பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்கா ம்ம்ம் என்று முனகிக்கொண்டே உடம்பை முறுக்கினாள். பார்த்தால் வலிப்பு வந்த மாதிரி இருந்தது. அவ்வளவு அசதி அவளை அமுக்கிக்கொண்டிருந்தது. உடல் அசதியை மீறி அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. இப்போது ஈசுவரி இரண்டு வாரமாய் மில் வேலைக்குப்போகிறாள். காண்டிராக்ட் கூலி. இன்னும் ஒரு பைசா வாங்கிக்கையில் பார்க்கவில்லை. உள்ளே ஆண்கள் செய்கிற அத்தனை வேலையையும் செய்யச்சொல்கிறார்கள். ஈசுவரியின் உதட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த தெத்துப்பல் எல்லோரையும் தொந்திரவு செய்கிறது. தொத்தலான அந்த உடம்பில் எந்தச்சதைப்பிடிப்பும் இல்லை. தோலை எலும்புகளின் மீது ஒட்டி வைத்த மாதிரி இருந்தாள் ஈசுவரி. மில்லுக்குள் அவளை ஏறிட்டுப்பார்க்கக்கூட யாரும் கிடையாது. அவள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கெட்டவார்த்தைகளைப் பேசுவதும், கெட்டவார்த்தைக்கதைகளைச் சொல்லிச் சிரிப்பதும் கூட நடக்கும். மிஷின்கள் ஓடும் சத்தத்தில் அவர்கள் பேசுவது ஈசுவரிக்குச் சரியாகக் கேட்காது. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தான் காதில் விழும். அவர்களுக்கு எல்லாவார்த்தைகளும் எப்படி தெளிவாகக் கேட்கிறதோ? காதில் விழும் அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளே அவளுடைய அடிவயிற்றில் ஒரு இளக்கத்தை ஏற்படுத்தும். அவளுக்கு அந்தக்கணத்தில் ஏற்படும் கிறக்கத்துக்காக அவள் ஏங்க ஆரம்பித்தாள். அந்தக் கதைகளைக் கேட்பதற்காக ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தாள். இப்போதும் அந்த முனகல் வந்தது. அந்த முனகலோடு ஒரு சிரிப்பு உதடுகள் பிரிந்து ஏக்கத்துடன் ஒரு சிரிப்பு வந்து மறைந்தது. அதென்ன? சிரிக்கும்போது எல்லாமனிதர்களும் அழகாகி விடுகிறார்கள்.
ரேவதி அக்காவைப் பார்த்தபடியே கிடந்தாள். பாவம் ஈசுவரி! இந்தத்தரித்திரம் பிடித்த வீட்டை விட்டு அவளும் விடுதலையடைய வேண்டும். அக்கா உனக்கும் ஒருத்தன் இருப்பான். அந்த மில்லிலேயே கூட இருக்கலாம். எப்படியாச்சும் தப்பித்துவிடு. அவளுடைய கண்கள் சுவற்று ஆணியில் தொங்கவிட்டிருந்த பிக்‌ஷாப்பர் பையைப் பார்த்தாள். பை சிரித்தமாதிரி இருந்தது. இந்த முறை எப்படியும் வெளியே போயிருவேன் என்று பையிடம் சொல்லி சடைத்துக்கொண்டாள். அருகில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் கைத்தடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. மூணாவது முறையாக அவள் வீட்டைவிட்டு ஓடிப்போகத் திட்டம் போட்டிருக்கிறாள். அவளுக்கு எல்லாமே மூன்றாவது முறை தான் கிடைக்கிறது. முக்கா முக்கா மூணு ஆட்டை அவளுடைய பாலிய காலத்திலிருந்து பின்தொடர்கின்ற ஒரு விளையாட்டு மந்திரம். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலும் விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி, பரீட்சையாக இருந்தாலும் சரி, ஒப்பிக்கிறதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் மூணு தடவை செய்யணும். அப்போது தான் அவளுக்குத் திருப்தி வரும். முதல்தடவையே அவள் சரியாகச் செய்து விட்டாலும் அவள் விடுவதில்லை. திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருப்பாள்.
இந்த முறை கட்டையனே வரவில்லை என்றாலும் அவள் போய் விடுவாள். எங்கே போக முடியும்? அவளுக்குத் தெரிந்து திருநெல்வேலி தான் அவள் போயிருக்கிற தூரத்து ஊர். வடக்கே போனதேயில்லை. கட்டையன் என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. கட்டையனின் பெயர் என்ன என்றே நினைவிலில்லை. அவன் அப்படியொண்ணும் கட்டையுமில்லை. யாரோ கூப்பிட்டிருக்கிறார்கள். அந்தப்பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. அந்தப் பகுதியில் உள்ள கிளப்புக்கடைகளுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றுவான். டேபிள் துடைப்பான். விறகு கொண்டு வந்து போடுவான். சொல்கிற எடுபிடி வேலைகளைச் செய்வான். வீட்டுக்கு விருந்தாட்கள் வந்தால் கடனுக்கு டீ வாங்க அவள் உசேன்பாய் கடைக்குப் போவாள். அங்கே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பான். டீக்கிளாசுகளைக் கழுவிக்கொண்டோ, அருகில் உள்ள வணிகவளாகங்களில் ஆர்டர் செய்த டீ தூக்கை எடுத்துக்கொண்டோ போய்க்கொண்டிருப்பான். அவன் ஒருபோதும் அவளை ஏறிட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் அவள் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் பார்க்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
எந்த பெரிய லட்சியங்களும் இல்லாத கட்டையன் அவளைப் பார்த்ததும் லட்சியவாதியானான். அவளுக்கு வளையல், ரிப்பன், பிளாஸ்டிக் கம்மல்கள் வாங்கிக்கொடுத்தான். கிளப்புக்கடையிலிருந்து பலகாரங்களை தெரிந்தும் தெரியாமலும் கொடுத்தான். எல்லாவற்றையும் விட அவளை ரகசியமாகச் சந்திக்கும் பீக்காட்டில் அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உடம்பில் வண்ணத்துப்பூச்சிகள் ஊர்வதைப் போல புளகாங்கிதமடைய வைத்தது. மெலிந்து முற்றிய வெண்டைக்காய் போலிருந்த அவளுடைய விரல்களைத் தொட்டபோது அவனுடைய உயிரில் ஒரு கொதிநிலை கூடியது. அவனுடைய கண்களில் பொங்கிய தாபத்தை ரேவதி அவன் விரல்களின் வழியாக உணர்ந்தாள். அவன் அவளுடைய எந்தப்பேச்சுக்கும் மறுப்பு சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் வார்த்தைகளை அவளிடமே தொலைத்தவனாக இருந்தான். அவளே அவனுடைய வார்த்தையாக இருந்தாள். அவளுக்கு முன்னால் ஒரு பணிவான வேலைக்காரனைப் போலவே கட்டையன் நடந்து கொண்டான். அவளுக்குக் கர்வமாக இருந்தது. பெருமிதம் அவளுடைய உதடுகளில் ஒரு புன்னகையாகத் தங்கிவிட்டது. எப்படியாவது கட்டையனைப் பிடித்துக்கொண்டு கரையேறிவிட வேண்டும் என்று நினைத்தாள். இனி இந்த நரகத்தில் இருக்க முடியாது. அப்பா படுக்கையில் விழுந்தபிறகு பட்டபாடுகள். நினைக்கும்போதே பயத்தில் நடுங்குகிறது.
அப்பாவின் கண்களுக்கு எதிரே அந்தப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப்புகைப்படத்தில் அப்பா, அம்மா, கவுன் போட்ட ஈசுவரியக்கா, கைக்குழந்தையாய் ரேவதி, ஏரோப்பிளேனில் உட்கார்ந்திருப்பதைப்போல கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். நேஷனல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம். அப்போது ஊருக்குள் மூன்று இடங்களில் கிளப்புக்கடை நடந்து கொண்டிருந்தது. காந்திமதி கிளப்புக்கடை, முருகன் கிளப்புக்கடை, சுகுணவிலாஸ் கிளப்புக்கடை என்று மூன்று கடைகள் ஓகோவென்று ஓடிக்கொண்டிருந்தது. அப்பா காலையில் ஒரு கடையில், மத்தியானத்தில் ஒரு கடையில், இரவில் ஒரு கடையில் என்று ஓடிக்கொண்டிருந்தார். பணத்தை எண்ணமுடியாமல் அப்படியே துணிப்பைகளில் கட்டி பலநாட்கள் பர்மாத்தேக்கில் செய்யப்பட்ட மிகப்பெரிய பீரோவில் கிடக்கும். கட்டில், நாற்காலி முக்காலி, என்று எல்லாம் பர்மாத்தேக்கில் செய்தது. எல்லாம் புளியங்குளம் மாரியப்பன் ஆசாரியின் கலை.. அப்படி ஒரு வேலைப்பாட்டை அதுக்கப்புறம் எந்த ஆசாரியிடமும் பார்க்கவில்லை என்று அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். வீடு நிறைய ஆட்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், வந்தவர்கள், போனவர்கள், எப்போதும் கூட்டமாய் இருக்கும். பலபேரின் முகம்கூட தெரியாது.
ஊர் மாறியது. புதிதாய் ஹோட்டல்கள் வந்தன. பவன்கள் வந்தன. பழைய கிளப்புக்கடைகள் இப்போது வயதான குமரியாகத் தெரிந்தன. சன்னம் சன்னமாக வியாபாரம் குறைந்தது. அப்பாவின் வைராக்கியம் மீதத்தை அழித்தது. கையில் எதுவும் இல்லாமல் போனபிறகும் கடன்வாங்கி கோவில்பட்டி ரயில்வேஸ்டேஷனில் மரக்கறி உணவகத்தைத் தொடங்கினார். தினசரி இரண்டே இரண்டு பயணிகள் அங்கே டிபன் காசு கொடுத்து வாங்கினார்கள். கடனைக் கட்டமுடியாமல் வீட்டை விற்று முடித்தார். நேருநகரில் ஒரு இடத்தைத் தரைவாடகை பேசி அங்கே ஆஸ்பெஸ்டால் ஷீட்டை வாங்கி ஒரு அறையைக் கட்டினார். அங்கேயும் கூட வாசலில் இட்லிக்குண்டானை வைத்து இட்லி வியாபரம் செய்ய முயற்சித்தார். எப்படியாவது மறுபடியும் காந்திமதி கிளப்புக்கடையைத் தொடங்கிவிடவேண்டும். அது அவருடைய அம்மாவின் பெயரில் தொடங்கப்பட்ட கடை. அதிலிருந்து தான் மற்ற கடைகளை ஆரம்பித்தார். அதனால் மீண்டும் எழுந்து பழைய மாதிரி ஆகி விடலாம் என்று அவர் படுக்கையில் விழும்வரை நினைத்துக்கொண்டிருந்தார். வெளியே சைனீஸ், தந்தூரி, அயிட்டங்கள் எல்லாம் நவநாகரீகப்பெயர்களில் வந்ததை அவர் அறியவில்லை. எல்லாம் போனாலும் அவருடைய கைத்தடி மட்டும் அவரைவிட்டுப் போகவில்லை. அது அவருடைய இன்னொரு கண்ணாக, கையாக, காலாக, இருந்தது.
படுக்கையில் விழுந்தபிறகு ஈசுவரியக்காவைப் பற்றியும், ரேவதியைப் பற்றியும் கவலைப்பட்டார். அவருடைய தங்கை ஒருத்தி திருப்பூரில் இருக்கிறாள். அவளுக்குக் கடிதம் போட்டு வரச்சொன்னாள். ஒண்ணுவிட்ட, இரண்டுவிட்ட என்று தெரிந்த எல்லோருக்கும் கடிதம் போட்டார். ஆனால் யாரும் வரவில்லை. இரவு முழுவதும் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய அசைய முடியாமல் கிடந்தார். அவருடைய கைத்தடியில் கண்ணீரின் தடங்கள் விருவோடிக்கிடந்தன. அசையாமல் படுத்துக்கிடந்ததால் படுக்கைப்புண் வந்து விட்டது. ஈசுவரியும் ரேவதியும் அப்பாவைப் பராமரிக்க வம்பாடு பட்டார்கள். ரேவதியின் தீப்பெட்டிக்கம்பெனித்தோழி கூட,
“ பேசாம எண்ணெய் தேய்ச்சுக்குளிப்பாட்டி கோழிக்குழம்பும் வைச்சுக்குடுடி… நிம்மதியா பெருசு போய்ச்சேந்துரும்.. இருந்துகிட்டு சீம்பாடுபடுதாருல்ல.. எங்க ஆச்சியை நாங்க அப்படித்தான் வழியனுப்பி வைச்சோம்..”
என்று சொன்னாள். ஆனால் ரேவதிக்கு அப்படிச் சிறுசலனம் கூட ஏற்படவில்லை. அப்பா அசையாமல் கிடக்கும்போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பா நீங்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டீர்கள். இந்த இருட்குகையில் எங்களையும் சிறைவைத்து தோல்வியை எங்கள் மீதும் திணிக்கப்பார்க்கிறீர்கள். இல்லை அப்பா. நான் தோற்க மாட்டேன். ஒருநாள் ஒரு பொழுது இந்தக்குகையிலிருந்து நான் தப்பித்து விடுவேன். அப்போதும் எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருப்பேன். தோற்றவர்கள் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கிறார்கள். எப்படித் தோற்றார்கள் என்று அவர்கள் அவர்களுடைய வாழ்வின் மூலம் விளக்குகிறார்கள். எப்படித் தோற்றுவிடக்கூடாதென்று எச்சரிக்கிறார்கள். அந்தவகையில் நான் எந்தநிலைமையிலும் உங்களை மறக்க மாட்டேன். ரேவதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்துக் கொண்டே வந்த ஈசுவரியக்கா அவளுடைய தலையைக் கோதி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அவள் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டாள். எல்லாப்பழிபாவங்களுக்கும் மனதைத் தேற்றிக் கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்காவிடமிருந்து மெல்லிய குறட்டைச்சத்தம் வந்தது. ரேவதி மெல்ல எழுந்தாள். அவளுடைய அசைவைப் பார்த்ததும் அப்பாவின் கைத்தடி உஷாரானது. அவள் அங்கணக்குழியில் மூத்திரம் பெய்து தண்ணீர் ஊற்றினாள். இருளோடு இருளாக சில நிமிடங்கள் நின்றாள். வெளியில் அமைதி. சுவர்க்கோழியின் கீச் கீச் கீச் என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் இல்லை. தூரத்தில் இரண்டுபேர் பேசிக்கொண்டு போனார்கள். காற்றின் ஊதல் குளிர்ந்து வீட்டு ஓட்டைகளின் வழியே உள்ளே வந்தது. கட்டையன் வருவானா? அவன் எப்படிப்பட்டவன்? எதுவும் தெரியாது. இத்தனைக்கும் அவன் அவளைக் கூப்பிடவில்லை. அவள் தான் அவனைக் கூப்பிட்டாள். வேறு ஊரில் போய் கலியாணம் செய்து கொள்ளலாம் என்றாள். அவன் தயக்கத்துடன் தான் சம்மதித்தான். தோற்றுப்போன ஊரில் இருக்கமுடியாது. தோல்வியின் ஞாபகங்கள் கொலைவாளினை விடக் கொடியது. ரணமாய் அறுக்கும். அவள் ஒரு புதிய ஊரில் புதிய வீட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கையைத் திகட்டத்திகட்ட வாழவேண்டும். கட்டையன் என்றில்லை. யாருடன் வேண்டுமானாலும் அவள் வாழ்வதற்குத் தயாராக இருந்தாள். வாழ வேண்டும். இதுவரை வாழாத வாழ்க்கையை வாழவேண்டும். மீளமுடியாத புதைசேற்றில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை விட வரப்போவது என்னவென்று தெரியாத ஒரு நாளை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தாள். அப்பாவின் தோல்வியை அவள் சுமக்க விரும்பவில்லை. ஏன் சுமக்க வேண்டும்? அப்பாவே அந்தச் சுமையிலிருந்து எங்களை விடுவித்திருக்கவேண்டும். பாவம் அப்பா. அவருடைய கைத்தடியின் சமிக்ஞைகளை மீற முடியாதவர். இற்றுப்போயிருந்தாலும் அந்தக் கைத்தடி இல்லாமல் வாழமுடியாதவர்.
இன்னும் மூன்று மணிச்சங்கு ஊதவில்லை. அவள் இருளில் படுக்கையில் உட்கார்ந்தாள். ஓட்டைகளின் வழியே மங்கலாகத் தெரிந்த வெளிச்சப்புள்ளிகளை எண்ணத்தொடங்கினாள். இருபதுக்கும்மேல் எண்ணிக்கை குழம்பியது. கண்களை மூடி மூடி விழித்தாள். உறங்கிவிடக்கூடாது. அப்போது தான் அவள் வாழ்வின் விடியலே போல மில்லிருந்து சங்கு ஊதத்தொடங்கியது. சங்கொலி முடியும்வரை காத்திருந்தாள். ரேவதி ஆணியில் தொங்கிய பிக்‌ஷாப்பர் பையை எடுத்தாள். மெல்ல வாசல் பக்கம் நகரும்போது அப்பாவின் கைத்தடி தவறுதலாகத் தொட்டு விட்டாள். உடனே அது கீழே அவளுடைய கால்களுக்குக் குறுக்கே விழுந்தது. அவள் பொறுமையாக அந்தக்கைத்தடியைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டினாள்.
போகிறவழியில் சாக்கடை இல்லாமலா போகும்?

நன்றி - செம்மலர்