Thursday 29 August 2019

அந்தர அறை


அந்தர அறை
உதயசங்கர்
 தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த நகருக்கு வந்திருந்தான் சதீஷ். கிட்டத்தட்ட எழுநூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தான். முகமறியாத ஊரில் யாருக்கும் தெரியாமல் செத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு பறவைகள் எப்படி இறக்கின்றன? எங்கே இறக்கின்றன? என்ற கேள்விகள் இருந்தன. நூற்றுக்கணக்கான வகை பறவைகள் இருக்கின்றன. அவை இறந்து போவது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. காகங்களின் இறப்பு அதுவும் விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தவிர மற்றபடி பறவைகளின் இறப்பை யாரும் பார்த்ததில்லை. அப்படி பறவைகள் போல யாருக்கும் தெரியாமல் இறந்து போகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஊரில் ஒரு நூறுபேருக்காவது அவனைத் தெரியும். அந்த நூறுபேரின் நினைவுகளில் சில நாட்களாவது அவன் தட்டுப்படுவான். மற்றவர்களின் நினைவுகளில் அவன் இருப்பதும் இல்லாமல் போவதும் வெறும் புவியியல் எல்லைகளுக்குள் இருக்கும் அவனுடைய பௌதீக நடமாட்டம் தானே தீர்மானிக்கிறது. அவனுடைய பாலியகால நண்பன் மௌலி இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தான். யாருடனும் தொடர்பில்கூட இல்லை. திடீரென போனமாதம் அங்கே மாரடைப்பினால் இறந்து போய்விட்டதாக ராம் சொன்னபோது எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அதோடு அவன் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தும் மறந்து போய்விட்டது.
அதோடு ஊரில் தற்கொலை செய்யப்பிடிக்கவில்லை. அவன் மனைவி, குழந்தைகள், அவனுடைய அப்பா, விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் உறவினர்கள், என்று எல்லோருக்கும் மிகுந்த துயரம் தரக்கூடியதாக அமைந்து விடும். குறிப்பாக மனைவிக்கு கணவன் இறந்ததை விட வேதனை தரும் சடங்குகளை நடத்துவார்கள். அகிலா இதையெல்லாம் தாங்கமாட்டாள். இறப்பைத் தொடர்ந்து நடக்கும் சடங்குகள் அலுப்பூட்டுபவை. பழைய நிலவுடமைச்சமூகத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சடங்குகள். அதை இத்தனை நூற்றாண்டுகளாய் தூக்கிச்சுமப்பதே கொடுமையான விஷயம். அவனும் அந்தச் சுமையை தன்னுடைய குடும்பத்தாருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அவனுடைய அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்த வினோத் திடீரென காணாமல் போய்விட்டான். முதல் ஆறுமாதத்துக்கு அவனை எல்லோரும் சல்லடைபோட்டு தேடினார்கள். அவனுடைய மனைவி மூன்று மாதங்கள் கழித்து கிட்டத்தட்ட நார்மலுக்கு வந்து விட்டாள். இதுவரை அவன் இருக்கிறானா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. போலீசில் ஏழு வருடம் கழித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் கொடுத்தால் அவனுடைய மனைவிக்கு வேலையும் வினோத்தின் பணிப்பயன்களும் கிடைக்கும். அதையும் மூன்று வருடங்களிலேயே வாங்கிவிட்டார்கள். அவன் மனைவியும், மற்ற உறவினர்களும் அவன் காசி, ஹரித்துவார் என்று சாமியாராகப் போய்விட்டான் என்று நினைத்தார்களே தவிர அவன் இறந்திருப்பான் என்று கற்பனை கூடச்செய்யவில்லை. அதனால் ஊரில் தற்கொலை வேண்டாம் என்று நினைத்தான். அதுமட்டுமில்லாமல் ஊரில் இரண்டு முறை முயற்சித்து தோற்றுப்போய்விட்டான்.
தற்கொலைப்பருவம் - 1
முதல்முறையாக பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்ய முடிவு செய்தான். அவன் தினமும் சினிமா பார்ப்பதனால் தான் தோல்வியடைந்தான் என்று அப்பா அடி வெளுத்து விட்டார். அவர் சொன்னது உண்மைதான். தினமும் சினிமாவுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒவ்வொரு சினிமாவையும் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்தான். சகலகலாவல்லவன் படத்தை மட்டும் இருபது தடவையாவது பார்த்திருப்பான். அப்படி விழுந்து விழுந்து சினிமா பார்த்ததற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அந்த நேரத்தில் அவன் மனநிலை அப்படியிருந்தது. அவ்வளவு தான். சினிமா வேறு ஒரு உலகத்துக்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனது. பள்ளிக்கூட ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் அப்பா வைத்திருந்த ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மூன்று நான்கை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து பால் ஐஸ் வாங்கிச் சப்பிக்கொண்டே தொண்டையில் போட்டு முழுங்கிவிட்டான். வீட்டுக்கு வந்த கொஞ்சநேரத்தில் தலை சுற்றிக் கீழே விழுந்து விட்டான். பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள்.
தற்கொலைப்பருவம் - 2
இரண்டாவது முறையும் தற்கொலைக்கு தோல்வி தான் காரணம். ஆனால் காதல் தோல்வி. கல்லூரியில் படிக்கும்போது ஜெயாவை ஒரு தலையாகக் காதலித்தான். இவன் அவளைப் பார்க்கிறான் என்பது கூடத் தெரியாத அளவுக்கு அவளைக் காதலித்தான். தினமும் அவள் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டுவிட்டே தன்னுடைய அன்றாடக்காரியங்களை ஆரம்பிக்கிற அளவுக்கு காதல் ஊற்றெடுத்தது. ஜெயசதீஷ் என்ற பெயரில் கவிதைகள் கூட எழுதினான். ஒன்றிரண்டு தினமலர் வாரமலர் கடைசிப்பக்கத்தில் வந்தன. அவளைப்பார்ப்பதற்காக மணிக்கணக்காக தெருக்களில் காத்துக்கிடப்பது போன்ற வழக்கமான கிரித்திரியங்களை எல்லாம் செய்தான். வழக்கம்போல கல்லூரிப்படிப்பு முடிந்ததும், ஜெயா திருமணம் முடித்துக் கொண்டு போய்விட்டாள். அதுவரை பீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்த சதீஷ், இந்தத் தோல்விக்குப்பின் பிராந்தி, விஸ்கி, குடிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் குடிபோதையில் பாட்டிலை உடைத்து மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கொண்டான். மறுபடியும் அதே பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். முதல் தற்கொலைப்பருவத்திலிருந்த அதே மருத்துவர் அருணாச்சலம் தான் இருந்தார். காப்பாற்றிவிட்டார். மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபோது சொன்னார்.
“ சாகணும்னு முடிவு பண்ணிட்டயா.. யாராலும் காப்பாற்றமுடியாதபடி போயிரணும்.. சும்மா படம் காமிச்சுக்கிட்டிருக்கக்கூடாது… நீ எல்லாரையும் சாகடிச்சிட்டு தான் சாவே… டேமிட்..”
அவர் சிரித்துக்கொண்டே சொன்னதினால் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனால் அதில் இருந்த வன்மம் சதீஷின் காயத்தில் போய் ஊசியைப்போல குத்தியது. அடுத்தமுறை யாருக்கும் தெரியாமல் செத்துப்போய்விடவேண்டும் என்று முடிவெடுத்தான்.
அதன் பிறகு இருபது வருடங்கள் ஓடிவிட்டது.
தற்கொலைப்பருவம் – 3
கடந்த ஒரு மாதமாக இந்த எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. அது ஒரு ரகசிய ஆசையாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கள்ளக்காதலியுடன் கலவி கொள்ளும் உணர்ச்சி வேகம் அதை நினைக்கும்போது வந்தது. அவனுடைய பிரச்னைகளும் கூட தீர்ந்து போய்விடும். உலகின் அத்தனை பொருட்களும் அவனுடைய வசம் இருக்க வேண்டும் என்று அவனும் அவனுடைய மனைவியும் குழந்தைகளும் நினைத்தார்கள். மெய்நிகர் உலகமே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்தது. கோடிக்கணக்கான இணைய முகவரிகளின் வழியே உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் அவனுடைய தாகத்தைத் தீர்க்க பொருட்கள் வந்து அவனுடைய வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தன. அத்தனை பொருட்களுக்கும் அவன் வீட்டுக்கதவைத் திறந்து விட்டான். அந்தக் கதவின் வழியே அவனுடைய பேராசை மாறுவேடமிட்டு அவன் வேலைபார்த்த வங்கியின் கதவைத்தட்டியது. அவன் வங்கியில் கிட்டத்தட்ட இருபத்தியைந்து லட்சம் ரூபாயைக் கையாடல் செய்து விட்டான். பொய்யான பெயர்களில் லோன் போட்டு பணத்தை எடுத்து அவனுடைய பேராசையைத் திருப்தி செய்ய முயன்றான். கார், பெரிய வீடு, பொருட்கள் என்று வசதியாக வாழ்கிற ஒருவனைப்பார்த்து பொறாமை சும்மா இருக்குமா?. ஐந்து வருடங்களாக மறைந்திருந்த பூதம் இப்போது ஆடிட்டர் மூலம் வெளிவந்து விட்டது. இனி எதுவும் செய்யமுடியாது என்ற நிலைமை வந்தபோது இதுவரை மனதின் புதைசேற்றில் மறைந்திருந்த தற்கொலைச்சிந்தனை மளமளவென்று வளர்ந்து செழித்தது. அதிலிருந்து தற்கொலை பற்றிய செய்திகளை ஊன்றிப் படித்தான். முடிவில் கண்காணாத நகரத்துக்கு வந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.
காலையில் நகரில் வந்து இறங்கியதும் ஒதுக்குப்புறமாக ஒரு தங்கும் விடுதியைத் தேடினான். ஊருக்கு வெளியே புறவழிச்சாலையில் இருளடைந்த கருப்புநிறப்பதாகையில் மஞ்சள் எழுத்துகளில் ஜீவன் லாட்ஜ் என்று ஒரு விடுதி இருப்பதைக் கண்டுபிடித்தான். அந்த விடுதியின் முன்னால் ஒரு சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தான். இருட்டாயிருந்தது.
பழைய தேக்கு மரத்தாலான காலத்தால் பளபளப்பேறிய ஒரு கவுண்டர் இடதுபக்கம் இருந்தது. அந்த கவுண்டரின் மீது பழைய கணக்குப்பேரேடு ஒன்று விரித்து வைக்கப்பட்டிருந்தது. பித்தளைக் காலிங்பெல் ஒன்றும் இருந்தது. அதன் அமுக்குவிசை குழந்தையின் மானிபோல விரைப்பாய் நின்றது. சதீஷ் காலிங் பெல்லை அமுக்கினான். யாரும் இருப்பதற்கான அரவமேயில்லை. விடுதியில் ஆள் இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. திரும்பிவிடலாம் என்று நினைத்து கைப்பையை எடுத்தபோது திடிரென கவுண்டரில் ஒரு ஆள் தோன்றினான். எப்படி எங்கிருந்து வந்தான் என்று புரியாமல் குழம்பினான் சதீஷ். விடுதியின் மேலாளராக இருக்கவேண்டும். அழகாக இருந்தான். மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தான். நெற்றியில் மூன்று திருநீற்றுப்பட்டையும் நடுவில் ஒரு குங்குமத்தீற்றலும் இருந்தது. சதீஷின் குழப்பத்தை உணர்ந்தவன் போல ஒரு சிறிய புன்முறுவலுடன்,
“ கீழே ஒரு நிலவறை இருக்கிறது சார்! அங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வாரேன் “
என்றான். சதீஷ் பெருமூச்சு விட்டான்.
“ என்ன சார் ரூம் வேணுமா? சிங்கிளா.. டபுளா.ஏ.சி.யா.. நான் ஏ.சி.யா .” என்று மூச்சு விடாமல் கேட்டான். ஒரு கணம் யோசித்த சதீஷ்,
“ சிங்கிள் போதும்…. ரெண்ட் எவ்வளவு ? “
“ ஜஸ்ட் ஐம்பது ரூபா தான்..”
“ என்னது ஐம்பது ரூபாயா? “ என்று ஆச்சரியப்பட்டான் சதீஷ்.
“ எங்க முதலாளி ஒரு சேவையா இதை நடத்திக்கிட்டிருக்காரு… “
“ ஆச்சரியமா இருக்கே.. சரி.. ரூம் போட்டுருங்க.. “
“ இந்த ரிஜிஸ்டரில எழுதுங்க.. சார்..”
சதீஷின் பக்கமாக அந்தப் பேரேட்டைத் தள்ளினான். சதீஷ் அந்தப் பேரேட்டை மேலோட்டமாகப் பார்த்தான். கடைசியாக போனவாரம் தான் இரண்டு பேர் அறை எடுத்திருக்கிறார்கள். பேரேட்டில் எதையும் உண்மையான தகவலை எழுதக்கூடாது என்று முன்பே யோசித்திருந்தான். பேனாவின் மூடியைத் திறந்து என்ன பெயரை எழுதலாம் என்று ஒரு நொடி தயங்கியபோது விடுதி மேலாளர்,
“ ஏதாச்சும் ஒரு பேரை எழுதுங்க…சார்.. அப்புறம் அட்ரஸ் முக்கியம்.. எந்த ஒரு கமா, புள்ளி கூட உண்மையா இருக்கக்கூடாது.. நீங்க வடக்கேயிருந்து வந்திருந்தா.. தெக்கே இருக்கிற ஒரு ஊர் அட்ரஸை எழுதுங்க.. தெக்கே இருந்து வந்திருந்தா வடக்கே உள்ள ஏதாச்சும் ஒரு ஊரை எழுதுங்க.. முக்கியமா நீங்க எழுதுற ஊரில் உங்க பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க.. யாரும் இருக்கக்கூடாது… அது ரொம்ப முக்கியம்..”
என்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். சதீஷ் அவன் கேலி செய்கிறானோ என்று நினைத்தான். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் எழுதினான். தங்குவதற்கான காரணம் என்ற பகுதிக்கு வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப்பத்தியில் ஏற்கனவே தற்கொலை என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. சதீஷ் நிமிர்ந்து பார்த்தான். மாறாத புன்னகையுடன் விடுதி மேலாளர்,
“ சார் சொல்ல மறந்துட்டேன்.. எப்படி சூசைட் பண்ணப்போறீங்க.. கயித்துல தொங்கப்போறீங்களா.. துப்பாக்கியால சுட்டுக்கப்போறீங்களா.. கத்தியால குத்திக்கிட்டு சாகப்போறீங்களா.. இல்லை விஷம் குடிச்சிச் சாகப்போறீங்களா.. மாடியிலிருந்து குதிக்கப்போறீங்களா.. ஏற்கனவே முடிவு எடுத்துட்டீங்களா? அப்படி எடுக்கலன்னா உங்களுக்கு ஆலோசனை சொல்ல இங்கே ஒரு சிறப்பு ஆலோசகர் இருக்கார்.. அவருக்குக் கட்டணம் ஐநூறு ரூபா… அவர் வேண்டாம் என்றால் உங்கள் விருப்பப்படி எல்லா தற்கொலை உபகரணங்களும் உங்கள் அறையில் வைக்கப்படும். பொதுவாக வி.ஐ.பி.களுக்குத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் இதைச் செய்வதில்லை. உங்களைப் பார்த்தால் கொல் அல்லது கொல்லப்படு சீரியலில் வருகிற கதாநாயகன் போலவே இருக்கிறீர்கள்.. அதனால் இந்தச் சலுகையைத் தரலாம் என்று நான் விடுதி விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் முடிவு செய்கிறேன்.. நீங்களே அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்..அப்படி முடிவு எடுத்திருந்தா வெளியிலிருந்து எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துட்டு வரக்கூடாது.. இங்கே தான் வாங்கணும்.. நாங்க தான் தருவோம்.. அது எந்த மாதிரியான தற்கொலைக்கருவியோ அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.. அப்புறம் இன்னொரு விஷயம் தற்கொலை செய்யத்தயக்கமா இருந்தா அதற்கும் உதவி செய்ய உதவியாளர்கள் தூக்கு மாட்டிவிட, விஷத்தைப்புகட்டிவிட, மாடியிலிருந்து தள்ளிவிட, துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள, கத்தியால் குத்திக்கொள்ள, என்று தனித்தனியான உதவியாளர்கள் அரசாங்கத்தின் சான்றிதழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள்… அவர்களுக்குக் கட்டணம் ஆயிரம் ரூபாய் 
உங்களுடைய தற்கொலையைப் பற்றி தொலைக்காட்சியில் விவாதமேடை நடத்தலாம். அதற்கென்றே இரண்டு சேனல்கள் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் அதில் பங்கு பெற்று ஒரே நாளில் ஓகோவென்று புகழ் பெறலாம். விவாதமேடையைப் பார்த்தால் கொலைகாரனாகிவிடலாம் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தற்கொலை நிகழ்வை பிரேக்கிங் நியூசாகப் போட்டு நேரடியாக உலகம் பூராவும் ஒளிபரப்ப முப்பது சேனல்கள் தயாராக இருக்கின்றன. நேரடி ஒளிபரப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறும். அதிக விளம்பரங்கள் கிடைக்கும்பட்சத்தில் உங்களுக்கு அதிலிருந்து ஒரு சிறு தொகையும் காப்புரிமைத்தொகையாகக் கிடைக்கும். நீங்கள் யோசித்துச் சொல்லலாம். என்ன கேரளாவில் ஒரு விவசாயியின் தற்கொலையை இப்படி ஒரு நேரடி ஒளிபரப்பாக எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் நடத்திவிட்டார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றபடி நீங்கள் தங்கும் அறையில் உங்கள் தற்கொலை நிகழ்வின் சமயம் நடக்கும் எந்தச் சேதத்திற்கும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. அத்துடன் இன்னொரு செய்தியையும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்களுடைய கடைசி இரவு உணவை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்… எப்படியிருந்தாலும் ஒரு உத்திரவாதத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும்.. தற்கொலை உங்கள் லட்சியமாகவோ, நோக்கமாகவோ, அசட்டு உணர்ச்சியாகவோ, பயமுறுத்தலாகவோ, என்ன வகை மாதிரியாக இருந்தாலும் இங்கே உள்ளே வந்தவர்கள் யாரும் உயிருடன் வெளியே போனதில்லை..”
என்று நீண்டதொரு உரைவீச்சை வீசினான். மேலாளரின் பேச்சைக்கேட்டுக் கொண்டே பேரேட்டில் கையெழுத்துப் போட்டு பணமும் கொடுத்துவிட்டான். ஆனால் சதீஷுக்குக் குழப்பமாக இருந்தது. எல்லாம் பிரமையாக இருக்கலாமோ. நிமிர்ந்து பார்த்தான். விடுதியின் சுவர்களில் விதவிதமான தற்கொலைக்கருவிகளின் படங்கள் ஃப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. அந்த படங்களின் அருகே அந்தந்தத் தற்கொலைக்கருவியைப் பயன்படுத்தி இறந்த பிரபலங்களின் பெயர்களும் இருந்தன.
மேலாளர் அறையின் சாவியை அவரைப்போலவே திடீரெனத் தோன்றிய உதவியாளரின் கையில் கொடுத்து அறையை ஒழுங்குபடுத்த அனுப்பிவிட்டு அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.
“ சார் நீங்க கொடுத்துவைத்தவர்… நீங்க தங்கப்போற அறை எண் அஞ்சில தான் இருபது வருடங்களுக்கு முன்னால் கவர்ச்சிக்கன்னியாக இருந்த பி.கே.பாக்கியலட்சுமி தூக்குமாட்டி இறந்து போனார். அவர் இறந்தபின்பு எடுத்த படங்கள் இருக்கிறது பார்க்கிறீர்களா?...”
என்று சொல்லியபடி கவுண்டருக்குக்கீழே குனிந்து ஒரு பெரிய ஆல்பம் ஒன்றைக் கையில் கொடுத்தார். சதீஷ் அங்கே இருந்த மரநாற்காலியில் உட்கார்ந்து ஆல்பத்தைப் புரட்டினான்.
கண்முழி பிதுங்கி, நாக்கு தள்ளி, தூக்கு மாட்டி இறந்தவர்களின் படங்கள், துப்பாக்கியால் தலையில், வாயில், மூக்கில், நெஞ்சில், வயிற்றில், ஏன் குஞ்சில், சுட்டுக்கொண்டு இறந்தவர்களின் படங்கள், வாயில் நுரை தள்ளி, கைகால்கள் விரைத்துக்கோணிக் கொண்டு இறந்தவர்களின் படங்கள், கத்தியால் கழுத்தை அறுத்தவர்கள், கத்தியால் நெஞ்சில் குத்தியவர்கள், வயிற்றில் குத்தியவர்கள், என்று ரத்தக்களறியாக இறந்தவர்களின் படங்கள், மாடியிலிருந்து கீழே விழுந்து தலை சிதறியவர்கள், முதுகில் முகம் திருப்பியவர்கள், கைகால்கள் எட்டு கோணத்தில் திரும்பிக்கிடக்க இறந்தவர்களின் படங்கள் என்று குவிந்து கிடந்தன. எல்லாப்புகைப்படங்களிலும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. கடைசிப்பக்கத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த சதீஷ் அதிர்ச்சியடைந்தான்.
கண்கள் பிதுங்க, நாக்குத்தள்ளி, கழுத்து தொங்க சதீஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். துள்ளியெழுந்த சதீஷின் தோளில் மேலாளர் தட்டிக்கொடுத்தான்.
“ தேதி போடலையேன்னு கவலைப்படாதீங்க.. அது சின்ன வேலைதான்.. சரி.. நல்வாழ்த்துக்கள்!..” என்று சொல்லி அழகாகச் சிரித்தான் அந்த மேலாளர்.

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 205

3 comments: