Saturday 21 May 2016

மக்கள் நலக்கூட்டணி விளைவு

THE EFFECTS OF MNK

மக்கள் நலக்கூட்டணி விளைவு

உதயசங்கர்


தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானதும் விரக்தியும், கோபமும், வருத்தமும், பகிடியும், கேலியும் கிண்டலும் தெறிக்கும் விமரிசனங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. எப்போதும் தோல்விக்கு யாரையாவது பலிகடா ஆக்குவது வழக்கம்தான். அப்படியே இந்தத்தேர்தலிலும் பணநாயகம், அதிகார துஷ்பிரயோகம், பொருத்தமில்லாத கூட்டணி, பொருத்தமில்லாத தலைவர்கள், அவர்களுடைய பேச்சுகள், நடவடிக்கைகள், என்று ஆயிரம் காரணங்கள் கூரம்புகளென பாய்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் யதார்த்தநிலையும், களநிலவரத்தையும் உணர்ச்சிவசப்பட்டு மறந்து விடவும் நேரிடுகிறது. அது மக்கள் மீதான சாபமாகவும் மாறுகிறது. இனி தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்கிற மாதிரியும் பேசச்சொல்கிறது. மக்கள் நலக்கூட்டணி தோல்வியடைந்திருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் என்பது அதீதமான கற்பனை என்றாலும் ஒரு ஐந்து தொகுதியையாவது வென்றிருக்கலாம் என்ற ஆதங்கம் இடதுசாரி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு தொகுதி கூட பெறவில்லை என்பதில் மெய்யான ஆனந்தம் அடைகிற நடுநிலை (!) இடதுசாரி அறிவுஜீவிகள் கூட மேலுக்கு அவர்களும் காரணங்களைச் சொல்கிறார்கள். எல்லாக்கருத்துகளும் விமரிசனங்களும் வரவேற்கப்படவேண்டியவையே.

 இனி மக்கள் நலக்கூட்டணியின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் உரையாடிப்பார்க்கலாம்.

சாதகங்கள்:
1.   ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக அல்லது திமுக என்ற நிலைமையில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
2.   இதுவரை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி என்ற நிலைமை மாறி மக்கள் பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட குறைந்த பட்ச செயல்திட்டத்தினை உருவாக்கியிருக்கிறது.
3.   குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கியதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மகத்தானது.
4.   திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ்,பாமக, நாம்தமிழர் ( ஊழல், மதவாதம், இனவாதம்,சாதியவாதம்) அல்லாத கட்சிகளை அதாவது ஒருங்கிணைத்து பலருடைய வியப்புக்குறிகளுக்கு மத்தியில் தேர்தல் களம் கண்டிருப்பது நம்பிக்கையளிக்ககூடிய விஷயம்.
5.   மின்னணு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், மூன்றாவது அணி குறித்த விவாதங்கள் வெளியானது இளைய சமுதாயத்தினருக்குக் நம்பிக்கையளிக்கக்கூடிய விஷயம்.
6.   ஆறுமாதகாலத்தில் ஒரு கூட்டணி உருவாகி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு இவ்வளவு ஓட்டுகள் வாங்கியிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
7.   மக்கள் நலக்கூட்டணியின் மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைய முடிகிற வாய்ப்பை இந்தத்தேர்தல் கொடுத்திருக்கிறது.
8.   புதிய புதிய இடங்களில் மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவுத்தளங்களை அடையாளம் காட்டியிருக்கிறது.

பாதகங்கள்:

1.   மக்கள் நலக்கூட்டணி உருவாகி ஆறே மாதத்தில் ஒரு தேர்தலைச் சந்தித்தது இப்போது நடக்கத்தொடங்கியிருக்கும் குழந்தையை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடச் சொல்வது மாதிரி. அதற்கான விளைவை அடைந்திருக்கிறது.
2.   மக்கள் நலக்கூட்டணியிலுள்ள கட்சிகள் எல்லாம் ஊழல் கறையற்ற கட்சிகள் என்ற அடையாளம் மட்டுமே முக்கியமாக இருந்தது. சிலகட்சிகளின் கடந்த காலவரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள்.
3.   இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சித்தலைவர்கள் தானே கட்சி, தானே தலைவர் என்ற அளவில் இருப்பதால் அவர்கள் பேசும் பேச்சுகள், நடவடிக்கைகள் மக்கள் நலக்கூட்டணியைப் பாதிக்கத்தான் செய்யும். பாதித்தது.
4.   மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அனைத்தும் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய கட்சிகள் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகமெங்குமுள்ள கிராமங்களில் இந்தக்கட்சிகளுக்கு பெரிய அமைப்பு பலமே கிடையாது.
5.   பெரும்பாலும் கிராமங்களில் உள்ள ஊராட்சி, ஒன்றிய, பதவிகளில் அதிமுக, அல்லது திமுக சார்ந்தவர்களே இருக்கிறார்கள். ஏற்கனவே பெரிய அளவுக்கு அமைப்பு பலமே இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகள் மக்களிடம் தங்களுடைய சின்னங்களை ஓரளவுக்கேனும் அறிமுகப்படுத்தவே இந்தத் தேர்தல் பயன்பட்டிருக்கிறது.
6.   67-ல் இருந்து தேர்தல்களைச் சந்தித்து வரும் திராவிடக்கட்சிகளின் எந்த யுத்தியும் மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகளிடம் கிடையாது.
7.   பணம், அதிகாரம், இந்தத்தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகுந்து விளையாடியதைத் தடுக்கத் தேர்தல் ஆணையமும் சரி, மக்களும் சரி தயாராகவில்லை.
8.   மக்கள் மனநிலையில் ஒரு தேக்கம், இளைஞர்கள் மத்தியில் ஒரு விரக்தி ஆகியவையே ஓட்டுக்குப்பணம், நோட்டாவுக்கு ஓட்டு என்று இரண்டு எதிர்நிலைகளில் இயங்கியது
9.   முதலில் எழுந்து வந்த எழுச்சியைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் நலக்கூட்டணி தவறியது.
10.  தேமுதிக மீதான ஊடகவிமரிசனம் மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவுத்தளத்தைப் பாதித்தது.

இவையும் இன்னும் பல சாதகபாதகங்களும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் அமைப்புபலத்தை அதிகரித்து தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் வழியே மக்கள் நம்பிக்கையைப் பெறுவது ஒன்றே மக்கள் நலக்கூட்டணிக்கும் குறிப்பாக இடதுசாரிகள் ஒரு தீர்மானகரமான சக்தியாக உருவாவதற்கும் உள்ள ஒரே வழி.


நாம் வெல்வோம்!

Wednesday 18 May 2016

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

உதயசங்கர்

80-களில் கோவில்பட்டி நகரம் அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளாலும், சந்திப்புகளாலும், அரட்டைகளாலும், விவாதங்களாலும் அன்றாடம் நிரம்பி வழிந்தது. திடீரென ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள், எழுத்தாளர்களாக, சி.பி.எம்.மின் ஆதரவாளர்களாக உருவானார்கள். எங்களுக்கு முன்பே பாலு, சுவடி என்ற சுந்தரவடிவேலு, சி.எஸ்., என்ற சி.சுப்ரமணியன், ரவி, என்று ஒரு இளைஞர் குழாம் 70 –களில் இந்திய மாணவர் சங்கம் தொடங்கி கோவில்பட்டியில் இருந்த கோ.வெ.நா. கல்லூரியில் ஸ்டிரைக் அடித்து டிஸ்மிஸ்ஸாகி, பல்கலைக்கழகத்தின் சிறப்பு அநுமதியுடன் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் சுவடியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அரசியலில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள். சுவடி மட்டுமே கதை கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராமல் நாறும்பூநாதன் தலைமையில் நாங்கள் மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகை வழியாக இடது சாரி ஆதரவாளர்களாக அறிமுகமானோம். எங்களுக்குப் பின்னால் கிட்டத்தட்ட பத்து பதினைந்துபேர் திமுதிமுவென வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பும் ஏன் அதற்குப் பின்பும் கூட அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.
நாறும்பூ நாதன், உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி, சிவசு, ராஜூ, அப்பணசாமி, திடவைபொன்னுச்சாமி, கோணங்கி, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜன், ஞாபகமறதியின் அடுக்குகளில் சிக்கிய இன்னும் சிலபேர் என்று ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. போதாது என்று தமிழ்ச்செல்வனும் கோவில்பட்டி வந்து சேர்ந்தார்.
 அங்கிங்கெனாதபடி நேரங்காலம் தெரியாமல் நாள் முழுவதும் புதிய புதிய அநுபவங்கள், புதிய புதிய உரையாடல்கள், திடீரென தமிழிலக்கியத்தின் கேந்திரமான இடத்தை கோவில்பட்டி பிடித்தது. கோவில்பட்டியை நோக்கி எழுத்தாளர்கள் படைகுருவிகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து போயினர். கோவில்பட்டியில் முதல் நாள் பேசுகின்ற பாடுபொருள் மிக விரைவிலேயே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியது என்று சொல்வது மிகையாக இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் கோவில்பட்டி வந்து செல்கிற எழுத்தாளர்கள் அப்படியான செய்திகளை பரப்பி விடுவார்கள். ஏற்கனவே இடைசெவலில் கி.ரா, இருந்தார். கோவில்பட்டியில் தேவதச்சன், கௌரிஷங்கர், கிருஷி, சுவடி, ஆகியோர் இருந்தார்கள் என்றாலும் பெரிய அளவுக்கு ஒருவருக்கொருவர் ஊடாட்டமோ, சந்திப்புகளோ நிகழவில்லை. நெருக்கடி நிலைக்காலத்தில் தர்ஷனா திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 79-80 வாக்கில் தான் ஒரே ஊரில் பத்து சிறுகதையாளர்கள், ஒரு பத்து கவிஞர்கள், இரண்டு நாடகக்குழுக்கள், கண்காட்சிகள், என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தோம். ஒரு தடவை புதுமைப்பித்தன் நினைவு தினத்தன்று ஊரெங்கும் அவருடைய கட்டுரைகளிலிருந்தும், கவிதைகளிலிருந்தும் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, பற்றிய அவருடைய கருத்துக்களை அட்டைகளில் எழுதி மின்கம்பங்களில் தொங்கவிட்டிருந்தோம். எல்லாவேலைகளையும் நாங்களே செய்வோம். தட்டி போர்டு எழுதுவது, அதைத் தூக்கிக் கொண்டு போய் ரோட்டு முக்கில் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என்று அனைத்து வேலைகளையும் போட்டி போட்டுக் செய்தோம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன், கனவுகளுடன், சந்திப்போம். .எப்போதும் தெருக்களின் முக்கிலிருந்த டீக்கடைகளில், சந்து பொந்துகளில், சாலைகளில், மாலையில் காந்திமைதானத்தில் குறைந்தது நான்கு பேராவது கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருப்போம்.
அரசியல், தத்துவ விவாதங்களும் அனல் பறக்கும். சி.பி.எம். எதிர்ப்பாளர்களாக இருந்த நண்பர்களுக்கும், சி.பி.எம். ஆதரவாளர்களாக இருந்த எங்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். எங்கள் தரப்பில் நான் கொஞ்சம் பிடிவாதமாகவும், வறட்டுத்தனமாகவும் இருந்தேன். அதனால் மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பல எழுத்தாளர்கள், நண்பர்கள், என்னிடம் கொஞ்சம் தூரம் காட்டினர். அப்போது 1982-83 ஆண்டாக இருக்கலாம். ஆசிரமம் தெருவிலிருந்த தந்தி அலுவலகத்துக்கு கவிஞர் சமயவேல் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தோம். அலட்சியமான ஒரு முகபாவத்துடனும், கண்ணாடிக்குப் பின்னால் அலைபாயும் கண்களுடனும், லேசான திக்கலும் நக்கலும் கலந்த கூர்மையான வார்த்தைகளை பேசும் மெல்லிய குரலும் சமயவேலின் மீது ஒரு பயத்தை உருவாக்கியது. அவர் கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த நண்பர்களைப் போல இல்லை. இலக்கியத்தில் விரிந்து பரந்த வாசிப்பும், அரசியலில் கூரான இடது சாரிப்பார்வையும் இருந்தது. ஆனால் சி.பி.எம்மை அப்படி கேலி செய்வார். அதிதீவிர இடது சாரி இயக்கத்தோடு அப்போது தொடர்பு இருந்தது என்று நினைக்கிறென்.கலை குறித்த அவருடைய பார்வைகள் உலகளாவிய அன்றையப் போக்குடன் உடன் செல்பவை. மெல்ல, மெல்ல அவருடைய பேச்சுக்கு நாங்கள் வசமானோம்.
சமயவேல் கோவில்பட்டி எழுத்தாளர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கிண்டலடிப்பார். அவர்களுடைய படைப்புகளைக் கேலி செய்வார். கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால் எல்லோருடனும் உரையாடலை நடத்திக் கொண்டிருப்பார். அவருடைய அலுவலகம் இருந்த ஆசிரமம் தெருவிலேயே ஒரு அறையைப் பிடித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இரவென்றும் இல்லாமல் பகல் என்றும் இல்லாமல் அதிலேயே கிடந்தோம். அந்தச் சிறிய அறையில் சிலசமயம் பதினைந்துபேர் வரை படுத்துக் கிடந்திருக்கிறோம். இரவைச் சூடாக்கிய விவாதங்கள் நடுநிசியில் முடியும்போது குடிதண்ணீர் இருக்காது. ஒரு சிகரெட்டோ, பீடியோ, கூட இருக்காது. ஏற்கனவே குடித்து வீசிய கட்டை பீடிகளை எடுத்து குடிப்போம். சில சமயம் மறுபடியும் விவாதம் கிளம்பி விடும். இந்த ஆசிரமம் தெரு அறை பற்றிய அவருடைய கவிதை அற்புதமானது. சமயவேல் அந்தச் சமயத்தில் அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தார்.
அரசியல் விவாதங்களை ஒட்டி ஒரு நாள் எங்களை ஒரு வகுப்புக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார் சமயவேல். ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் உட்காரவைத்து கண்ணன் என்ற பெயருடைய தோழர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டம், நடைமுறை, அதன் தோல்விகள், பாராளுமன்றப்பாதையின் அபத்தம் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் திட்டம், என்று சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசினார். முடிவில் கேள்விநேரம். யாரும் வாயைத் திறக்கவில்லை. வகுப்பு எடுத்தவருக்குத் திருப்தியில்லை. திரும்பி ஊருக்குள் வருகிறவரை எல்லோரும் ஏதோ இழவு வீட்டுக்குப் போய் வந்த மாதிரி துக்கம் அனுசரித்தோம். அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றி அதற்கப்புறம் கூட பேசியதாக நினைவிலில்லை. ஆனால் பிரயாசைப்பட்டு எங்களையெல்லாம் திரட்டிய சமயவேல் விரக்தியடைந்து விட்டார். எங்களிடம், சி.பி.எம். உங்களை நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிட்டாங்க என்று சொன்னார். அதன்பிறகு எங்களிடம் அரசியல் பேசுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. கதையோ, கவிதையோ, கையெழுத்துப் பிரதியாக எழுதி எல்லோரிடமும் படிக்கக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. கோவில்பட்டி எழுத்தாளர்களே விமரிசனம் செய்வதில் கில்லாடிகள். ஆனால் சமயவேல் அனைவரிலும் கடுமையான விமரிசகராக இருந்தார். நான் கொடுத்த பல கதைகளை அப்படியே நிராகரித்தார். அவர் பரவாயில்லை என்று சொன்ன ஒரே கதை பாலிய சிநேகிதி. அது ஒரு செகாவ் கதையைப் போலிருக்கிறது என்றார். அவ்வளவு போதாதா? நான் தலைகால் புரியாமல் திரிந்தேன். அவருக்கு கோவில்பட்டியில் மிகவும் பிடித்த எழுத்தாளர் கோணங்கி மட்டும் தான். அவரும் கோணங்கியும் டேய் மாப்பிள்ள…டேய் மாப்பிள்ள என்று மூச்சுக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொள்வார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். சமயவேலுடனான உரையாடல்கள் எங்களுடைய இலக்கிய அறிவை விசாலமாக்கியது. படைப்பு நுட்பங்களைப் பற்றி அவருடன் பேசிய இரவுகள், உலக இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வையை எல்லாம் கோவில்பட்டி சுவீகரித்துக் கொண்டது.
1985-ஆம் ஆண்டு வேலை கிடைத்து நான் திருவண்ணாமலை சென்று விட்டேன். 1987-ஆம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு காற்றின் பாடல் வெளியானது. தமிழ்க்கவிதையுலகில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிய மிகச் சிறிய தொகுப்பு. அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே கவித்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை என்று கூறலாம். கவிதைகளில் ஈரம் ததும்பும் மானுடம் வானம்பாடி கவிதைகளுக்குப் ப்ன்பு புதிய பரிமாணத்தில் புதிய வீச்சில் வெளியாகியிருந்தது. பல கவிதைகள் முற்போக்காளர்களின் நிரந்தர கல்வெட்டு வாசகங்களாயிற்று.
கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்
இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்
இளங்காலை
ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்
நேற்றின் அயர்வுகள்
வாசலைத்தாண்டி
உப்புக்காரனின் குரலோடு
ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது
குளிக்க சாப்பிட வேலைக்கென
கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை
இன்றும் நேசிப்பேன்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் பின்னிணைப்பாக அமைந்த கேள்வி-பதில் கலை இலக்கியம், கவிதை குறித்த அவருடைய பார்வையை வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது. அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு அவருடைய அடுத்த கவிதைத்தொகுப்பு அகாலம் வெளிவந்தது. அரசியல், தத்துவம், விஞ்ஞானம் அனைத்தும் மனிதனைக் கைவிட்ட  நிலையில் அவர் தன்னுடைய கவிதைகளின் மீண்டும் அடிப்படையான அறவிழுமியங்களை நோக்கிப் பயணப்பட விரும்புகிறார். மனிதர்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதின் மூலம் மானுடத்தை உரப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்.
 “ வாழ்வின் இத்தனை சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவன் நான். சாய்வுகளில் தான் உண்மை திரிந்து விடுகிறது. பன்முகத்தோற்றம் தருகிறது. நமது சொந்தச்சாய்வை சுத்தமாய் விலக்கி வைத்துவிட்டு, ஒரேயொரு நிமிஷம் யோசித்தால் போதும்; எதைப்பற்றிய உண்மையும் நம்மில் ஊற்றெடுத்துப் பெருகுவதை உணர முடியும். இதற்கு ஞானியாக வேண்டிய அவசியமில்லை. தானற்ற, தன்னலமற்ற எளிய மனமே போதும். இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் எனது கவிதைகளும் எளிமையானவை தாம். மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் “
அகாலத்தில் உள்ள பிரகடனங்கள் வீழ்ந்த காட்டில் என்ற கவிதையை உச்சரிக்காத வாசகர்களோ, கவிஞர்களோ கூட இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சலிப்படையவே மாட்டேன்
மீண்டும் மீண்டும்
நான் நானாவே இருப்பேன்
வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒருபோதும் நிறுத்தேன்
உண்மையை மேலும் மேலும்
காதலிப்பேன்
எல்லாமதிப்புகளும் பூமியில்
இறந்து விட்டன என்னும்
நவீனவாதம் பொய்யாக்குவேன்
நேசம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்துவிட்டு
உழுது விதைவிதைப்பேன்
தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் சிதறட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.
தமிழ்க்கவிதையின் நவீனப்பிதாமகன் பிரமீள் காற்றின் பாடல் தொகுப்பைப் படித்து விட்டு எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.
“ பிதற்றவோ, போதிக்கவோ, மனித விரோதங்களைப் பிறர் மீது பீய்ச்சியடிக்கவோ செய்யாத கவிதைகள் “ என்று சொல்லியிருக்கிறார்.
சமயவேலின் கவிதையியல் நேரடியானது. எளிமையானது. அரசியல் பிரக்ஞையுடையது. ஆனால் அதன் கவித்துவம் மானுடம் போற்றும் மகத்தான தருணங்களைக் கொண்டது. நேரடிக்கவிதைகள் எல்லாம் பருண்மையான புறவயச் செயல்பாடுகளையே பிரகடனங்களாக வெளிப்படுத்த சமயவேலின் கவிதைகள் மனதின் நுண் தளத்தில் ஊடாடுகிறது. முற்போக்குக்கவிஞர்கள் சமயவேலின் கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய மூன்றாவது தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் 2010-ல் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் வெளியும் பாடுபொருளும் மேலும் விரிவடைந்து தமிழ்க்கவிதையுலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் சமயவேல். நேரடியான கவிதைகள் எழுதுகிற யாரும் சமயவேலைத் தவிர்க்க முடியாது.
நீண்டகாலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய புத்தகங்களை அவர் வாசித்திருப்பாரா என்பது கூட சந்தேகம். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தனின் திருமணநிகழ்விலும், மதுரையில் நடந்த கடவு இலக்கிய அமைப்பின் கூட்டத்திலும் சந்தித்தேன். நான் மொழிபெயர்த்து வெளியான மண்டோ கதையைப் படித்து விட்டு அவர் கையில் இருந்த மண்டோ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய சிறுகதை நூல் நான் டைகர் இல்லை என்ற புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அந்தப்புத்தகத்தை நான் உடனே வாசித்தேன். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவாக உவக்கவில்லை. கவிஞர் சமயவேல் தான் என மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும், உத்வேகமளிப்பவராகவும் இருக்கிறார்.

கோவில்பட்டி ஆசிரமம் தெருவில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறை இப்போது இல்லை. அன்று அந்த அறையில் டீயும் பீடியும் குடித்துக் கொண்டு விவாதங்கள் செய்த  இலக்கிய நண்பர்களில் பலர் மறைந்து விட்டனர். பலர் இலக்கிய உலகில் இல்லை. காலம் இரக்கமில்லாதது. எல்லாவற்றையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவுகளில் லேசான சிரிப்புடன் அவருடைய நக்கல் குரலில் சமயவேல் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போதும் சுடுகிறது. அந்தத்தெரு இப்போது மிகவும் உண்மையாக இருக்கிறது.
நன்றி-மலைகள் இணைய இதழ்

Sunday 15 May 2016

விகடன் சாய்ஸ்

இந்த வாரம் வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் விகடன் சாய்ஸ் என்ற பகுதியில் சிறுவர் இலக்கிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எஸ்.ராவின் மீசையில்லாத ஆப்பிள்,
யூமாவாசுகியின் பாலம்,
உதயசங்கரின் பச்சைநிழல்
வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் அந்துவான் - து- எக்சுபரி எழுதிய குட்டி இளவரசன்
விஷ்ணுபுரம் சரவணனின் வாத்துராஜா
ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கியம் குறித்த கவனம் கூடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி- ஆனந்த விகடன் 18-5-16

Saturday 7 May 2016

ஆனியின் மழைப்பயணம்

ஆனியின் மழைப்பயணம்

உதயசங்கர்

வெளியே துளித்துளியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆனி வாசல் அளிக்கதவு வழியாக மழை வானத்திலிருந்து சொய்ங்னு இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனிக்கு மழை என்றால் ரெம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று பயமுறுத்துவாள். ஆனி இரும்புக் கதவு வழியாக மழையைப் பிடிக்க கையை நீட்டினாள். மழையைத் தொட முடியவில்லை. மழைக்காத்து வீசியது. அவள் உடம்பு அந்தக் குளிர் காற்றில் லேசாக நடுங்கியது. வெளியே சரம் சரமாய் விழுந்து கொண்டிருந்த மழை அவளை வா..வா.. என்று அழைத்தது. ஆனி சத்தமில்லாமல் மெல்ல கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
வாசலில் நின்று கொண்டு மழையைக் கையில் பிடித்தாள் ஆனி. என்ன ஆச்சரியம்! அவள் பிடித்த மழைத்துளியின் வழியாக அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மழைத்துளியாகப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். அப்படியே ஏறி ஏறி மழை பொழிந்து கொண்டிருக்கும் மேகத்துக்கே போய் விட்டாள். பெரிய பஞ்சு மூட்டையை அவிழ்த்து பறக்க விட்ட மாதிரி மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மேகத்திலிருந்தும், பூ வாளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதைப் போல மழைத்துளிகள் அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருந்தன.
அவளுக்கு அங்கே குளிர் எடுத்தது. அவள் அந்த பஞ்சுப்பொதி நடுவே உட்கார்ந்து கொண்டு மேகத்திடம் கேட்டாள். “ எப்படி மாமா உங்க கிட்ட இவ்வளோ தண்ணீ வந்துச்சு ” என்று கேட்டாள்.
 அதற்கு  “ எல்லாம் கடலம்மாவின் கருணை தான். கடலம்மா கடல் பரப்பில் வெப்பத்தினால் கடல் நீர் ஆவியாக காற்றில் ஏறி வந்து இங்கே குளிர்ந்து விடும். அப்படிக் குளிர்ந்த அந்த நீரைத் தான் நான் மழையாக அனுப்புகிறேன். அந்த மழைநீர் ஆறாக, ஓடும். ஓடையாக மாறும். அப்படியே எல்லாம் மறுபடியும் கடலில் போய்ச் சேரும். கடலிலிருந்து ஆவியாகி மேலே வரும். குளம், குட்டை நீரும் ஆவியாகி மேலே வரும். நாங்கள் அதை திரும்ப அனுப்புவோம். மழையால் மண்ணும் மக்களும் செழிப்பார்கள். எப்படி ஆனி! “   என்றது மேகம்.
“ ஆகா பிரமாதம்! “ என்றாள் ஆனி. மழை குறைய ஆரம்பித்தது. ஆனியைத் திரும்ப அனுப்ப வேண்டுமே. மேகம் உடனே ஆனியை ஒரு பெரிய மழைத்துளிக்குள் வைத்து பத்திரமாகக் கீழே இறக்கியது. ஆனியும் மேகத்திடம் அடுத்த  மழைக்கு மறுபடியும் வருவதாகச் சொன்னாள். மேகம் சரி என்றது. ஆனி டாட்டா சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள். அவளுடைய வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு புல்லின் நுனியில் பொதுக்குன்னு விழுந்தாள். அப்படியே புல்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே தரையில் குதித்தாள். தரையில் கால் பட்டதும் ஆனி தன் சொந்த உருவத்தை அடைந்தாள். உடனே அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத்திறந்து வராந்தாவில் நின்றாள். தூங்கி எழுந்து வந்த அம்மாவும் வெளியே மழை பெய்திருப்பதைப் பார்த்து,  “ ஆனி மழையில நனைஞ்சியா..? “ என்று கேட்டாள். ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள்! ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ? அம்மா ஆனியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.
நல்லவேளை ஆனியின் கால்கள்  நனைந்திருப்பதை அம்மா பார்க்கவில்லை.

புகைப்படம்- மோகன் தாஸ் வடகரா



எது மருத்துவம்?

எது மருத்துவம்?



“ ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள். “


“ எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது. “


தனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்க்குறிகளையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?

வெளியீடு-நூல்வனம் பதிப்பகம்,

விலை-50/

தொடர்புக்கு- 9176549991












Friday 6 May 2016

தமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு

தமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு




உதயசங்கர்
சற்றே உயரமான பஸ்ஸில் இடுக்குப் பிடித்த சீட்டுகளில் கால்களை ஒடுக்கிக் கொண்டு  உட்கார்ந்திருந்த மாதிரிதான் விமானத்தில் இருந்தது. உள்ளே எரிந்த மஞ்சள், வெள்ளை விளக்குகள், மலாய் விமானப்பணிப்பெண்கள், ஆண்கள் அதை ஒரு நாடக அரங்கு போலவோ, திரைப்பட செட்டிங் போலவோ உணர வைத்தார்கள்.  ஓடுதளத்தில் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டபோது ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டது. வேகமாக ஓடி திடீரென மேலெழும்பிய கணத்தில் வயிற்றில் லேசாய் புளியைக் கரைத்த மாதிரி ரங்கராட்டினத்தில் சுற்றும் போது மேலே போகும்போது குடல் மேலே எழும்புமே அந்த மாதிரி இருந்தது. எழும்பிய வேகத்தில் அப்படியே கீழே இறங்கியது. இப்பவும் வயிறு தான் குதித்தது. காதில் இரைச்சல் கூடி வலிக்க ஆரம்பித்தது. சன்னல் வழியே வெளியே பார்த்தால் திருச்சிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறோம். ஒரு குதூகல உணர்வு. பெருமிதம். நானும் வெளிநாடு செல்கிறேன். அதுவும் ஒரு எழுத்தாளன் என்ற அங்கீகாரத்தோடு மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறேன். நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது.
பயணங்களில் விமானப்பயணம் தான் எல்லா மனிதர்களின் ஆசையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஊரில் மேலே வானத்தில் விமானம் பறக்கிற சத்தம் கேட்டதும் அண்ணாந்து பார்க்காத மனிதர்கள் உண்டா? மனிதனின் பறக்கிற ஆசையை பூர்த்தி செய்தது விமானக்கண்டுபிடிப்பு தானே. விமானம் மேகங்களிலிருந்த எல்லாவிதமான மேடுபள்ளங்களிலும் ஏறி இறங்கி ஒரு நிதானத்துக்கு வந்தது. எனக்கு எதிர்பக்கத்தில் எழுத்தாளர் காமுத்துரை. முன்னால் எழுத்தாளர் கமலாலயன். இந்தப்பயணத்துக்கு மூலகாரணம் எழுத்தாளர் கமலாலயன். அதற்கான திட்டம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தவர்கள் சென்னையிலுள்ள கலைஞன் பதிப்பகமும், மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப்பிரிவும், இந்தியவியல் துறை மலேயா பல்கலைக்கழகமும் தான். சென்னை-கோலாலம்பூர் இரட்டை நகர தமிழ்-மலேசிய எழுத்தாளர்களின் மாநாடும், புத்தகவெளியீடுகளும் என இரண்டு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வெளிநாடு ஒன்றில் அறுபது தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு மாநாடும் நடத்தியது என்பது தமிழிலக்கியச்சூழலில் மிக முக்கியமான நிகழ்வு. கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.நந்தன்மாசிலாமணி அவர்களும் மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கத்துறை அதிகாரி முனைவர் கிருஷ்ணன்மணியம் அவர்களும் கோலாலம்பூர் விமானநிலையத்தில் சென்று இறங்கியதிலிருந்து மறுபடியும் விமானநிலையத்தில் ஏற்றி விடும்வரை கூடவே இருந்து சின்னச்சின்ன விஷயங்களையும் கவனித்துக் கொண்டார்கள்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட அனைத்துலக இளைஞர் மையத்தில் தான் மாநாடும், கருத்தரங்கும், புத்தகவெளியீடும் நடந்தேறின. மாநாட்டைத் துவக்கிவைக்க மலேய இளைஞர் நலத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணனும், மலேய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சாலே அகமத், மலேய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மன்னர் மன்னனும் வந்திருந்தார்கள். அமைச்சர் டத்தோ சரவணன் வெளியிட சாலே அகமத் பெற்றுக் கொண்டார். அமைச்சர் என்ற பந்தா சிறிதளவும் இல்லாத டத்தோ சரவணன் அவர்களின் பேச்சு பழந்தமிழ்இலக்கியம் சார்ந்ததாக இருந்ததும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மலேசிய தமிழர்களின் வாழ்நிலை சமூகநிலை பற்றி முனைவர் கிருஷ்ணன்மணியத்தின் உரை வெளிச்சம் தருவதாக இருந்தது.
கிட்டத்தட்ட மலேசிய மக்கள் தொகை மூன்று கோடி என்றால் மலேய, சீன, மக்களுக்கு அடுத்தபடியாக 24 லட்சம் பேரைக்கொண்ட தமிழ்ப்பெருங்குடி இருக்கிறது. தமிழகத்தைப்பூர்விகமாக கொண்ட தமிழர்கள், இலங்கையிலிருந்து குடியேறிய தமிழர்கள், வேலைக்காக இந்தியாவிலிருந்து சென்று வரும் தமிழர்கள் என்று வேறு வேறு வகைப்பாடில் இருக்கிறார்கள். 524 தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் அவற்றில் ஒரு லட்சம் மாணவர்களும் படித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடான மலேசியாவில் 2500க்கும் மேற்பட்ட  பெரிய இந்துக்கோவில்களை அரசு பராமரித்து வருகிறது. மலேசியக்காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் கேபினட் மந்திரியும், துணையமைச்சர்களும் தமிழர்கள் இருக்கிறார்கள். நூற்றாண்டுகளாய் கூடி வாழ்வதால் தமிழ்-மலேயப்பண்பாடு கலந்திருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஐந்து எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தங்களுடைய எழுத்தநுபவங்கள் குறித்து உரையாற்றினர். தமிழகத்திலிருந்து சென்றிருந்த அனைவரும் உரையாற்றினார்கள். எழுத்தாளர்கள் சுப்ரபாரதி மணியன், கௌதமசித்தார்த்தன், எஸ்.சங்கரநாராயணன், ம.காமுத்துரை, கமலாலயன், உதயசங்கர், உமர்பாரூக், கன்னிக்கோவில் ராஜா, குமுதம் மணா, பிரபு சங்கர், சாருகேசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவில் நடந்த மலேய நடனக்கலைஞர்களின் நடனமும், மலேயக்கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வும் புதிய அநுபவமாக இருந்தது. சமீபமாக எழுத்துருக்களைக் கண்டடைந்திருக்கிற மலேயக்கவிதைகள் மற்ற மொழிக்கவிதைகளின் தரத்தை நெருங்கியிருக்கின்றன.
இரண்டு நாள் மாநாடு முடிந்ததும் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.
தமிழ்-மலேயப்பண்பாட்டுக் கலப்பின் உதாரணமாக காம்பங் செட்டி என்ற ஒரு இனம் இருக்கிறது. வியாபாரத்துக்காக மலேசியா சென்ற தமிழக வம்சாவளியினர் அங்கு மலேயப்பெண்களைத் திருமணம் முடித்து தமிழ் இந்துப்பண்பாட்டையும் மலேய மொழியையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மாரியம்மன் கோவிலில் மலேய மொழியில் தங்கள் வேண்டுதல்களை அங்குள்ள தமிழ்ப்பூசாரியிடம் சொல்கிறார்கள். அந்தத் தமிழ்ப்பூசாரி தமிழில் பூஜை செய்கிறார். அனைத்து தமிழ் இந்து பண்பாட்டு விழாக்களையும் கொண்டாடும் அவர்களின் பெயர்கள் நடராஜன், வெண்ணிலா என்பதாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மலேசிய தொன்மைத் தலைநகரமான மலாக்கா சென்றோம். சர்வதேச மானுடத்தை அங்கே காணமுடிந்தது. எங்கும் தமிழர்களைக் காண முடிந்தது. மறுநாள் மலேசியாவின் பத்துக்குகை முருகன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் நிர்வாகம் தமிழர்களிடமே இருக்கிறது. இயறகையான சுண்ணாம்பு பாறையால் உருவான அந்த மலையும் குகைகளும் உண்மையில் அதிசயம் தான். மலேசியாவின் நிர்வாகத் நகரான புத்ரஜெயா, சைபர்ஜெயா இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாக விமானத்தில் ஏறினோம். எதிர்காலத்தில் இரண்டு நாடுகளின் கலாச்சாரப்பரிவர்த்தனைக்கு இது ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தப்பயணம் ஏற்படுத்தியது.
இப்போது அசைபோடும்போது மிகவும் வளமான நாடான மலேசியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால் எங்கும் நெருக்கடி இல்லை. கார்கள் அதிகம். இருசக்கர வாகனங்கள் மிகவும் குறைவு. இருபத்திநாலு மணிநேரமும் திறந்திருக்கும் சாப்பாட்டுக்கடை. சாலைகளின் சுத்தம், ஹார்ன் சத்தமே இல்லாத போக்குவரத்து. சாலைகளில் மக்கள் கடக்க நிற்கிறார்கள் என்றால் கார்களை நிறுத்தி வழி விடுகிறார்கள். தமிழர்கள் அங்கே ஆங்கிலக் கலப்பின்றி தமிழை அழகாகப் பேசுகிறார்கள். போய் இறங்கியவுடன் எங்களை வரவேற்ற பேராசிரியர் கிருஷ்ணன்மணியம் கேட்டார்,” பசியாறிட்டீங்களா? “

தமிழ் தான். ஒருகணம் ஏதோ வேற்றுமொழியைக் கேட்ட மாதிரி முழித்தோம்.

Wednesday 4 May 2016

மீன் காய்க்கும் மரம்-புதிய நூல் வெளியீடு

வெளிவந்து விட்டது!

மீன் காய்க்கும் மரம்
சிறுவர் கதைகள்
மலையாளத்தில்-வைசாகன்
தமிழில்-உதயசங்கர்
வெளியீடு-நூல்வனம்
விலை-ரூ40/
தொடர்பு எண்-9176549991

Sunday 1 May 2016

எழுத்தாளர்கள் பராக்..பராக்

எழுத்தாளர்கள் பராக்..பராக்

உதயசங்கர்
( முன் குறிப்பு – இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் ” ஒட்டிப்புளுகுவது “ என்ற புதுமைப்பித்தனின் இல்லையில்லை…லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லஸ் பியூஸின் கலைக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இதில் பல அயதார்த்த, மாயக்காட்சிகளும் மறைவெளிக்கதாபாத்திரங்களும் உலவலாம் என்பதை முன் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். அப்படி யாரேனும் உங்கள் கண்களுக்குப் புலப்பட்டு விட்டால் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அடித்துக்கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். )
ராஜாதி ராஜ ராஜகம்பீர ராஜகுல திலக எழுத்தாளர் திரு, தோழர், எழுத்தாளர் பராக்…பராக்… என்று நாழிகைதோறும் முரசறைந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. தெருவிலோ, சாலையிலோ, போகும்போது அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நிற்க, அனைவரின் கண்களும் நமது எழுத்தாளரையே மொய்க்க, பெண்களின் மேகலை இளகி உருண்டோட நமது எழுத்தாளப்பெருந்தகை தலையில் கிரீடம் சூடி தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் சுழல ராஜநடை நடக்கிற அழகிருக்கே. ஐயோ பார்க்கக்கண் கோடி வேணுமே.
முதல் முதலாக ஒரு கவிதை எழுதியிருப்பார். அதிலும் ஒற்றுப்பிழை. ல, ழ, ள, குழப்பம். ண, ன, வுக்கு இரண்டுசுழியா, மூன்றுசுழியா, என்ற மயக்கம். இருக்கவே இருக்கிறது. ர, ற, கேட்கவே வேண்டாம். எல்லாகுழப்பங்களையும் ஒரே கவிதையில் எழுதி முடித்தபிறகு தலையை செண்டு மாதிரி தனியே தூக்கிக் கொண்டு தமிழில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை கவிதைகளையும் அவர் எழுதிய ஒரே கவிதை தாண்டிக் குதித்து விட்டது என்று நினைப்பார். யாமறிந்த புலவர்களில் வள்ளுவன் போல், கம்பனைப்போல், இளங்கோபோல்….அப்புறம் என்ன இந்த ஒரு கவிதைக்கவிஞரைத் தான் பாரதி சொல்லியிருப்பார்…வேற வழி…அடடா..பாரதி கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரே..என்று மனதுக்குள் ஆதங்கப்படுவார். எழுத்தாளரின் மைண்ட் வாய்ஸ்  உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைக்கிறீர்கள் தானே. கார்லஸ் பியூஸ் அவருடைய ஒட்டிப்புளுகும் கலைக்கோட்பாட்டில் இப்படியான ஜித்து வேலைகளைக் கற்றுக் கொள்ள சில நிகழ்கலை மந்திரங்களையும் தொன்மச்சடங்குகளையும் இதுவரை யாரும் போயிராத காட்டுக்கோயிலுக்குப் போய் செய்யச்சொல்கிறார். கிடாவெட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். சந்தனம் நீறுபூசி, சூடத்தின் சுடரை கண்களில் ஒத்தி நிறமிழந்த ஜீன்ஸ், டி சர்ட், அதில் LIFE IS SHIT என்ற வாசகங்களோடு, தோளில் தொங்கும் ஜோல்னாப்பைக்குள், ஓரான் பாமூக், புயண்டஸ், ஜெயமோகன், எஸ்.ரா, அப்புறம் கோணங்கி இல்லாமலா, பெரியார், அம்பேத்கர், போனால் போகிறதென்று மார்க்ஸ், இயற்கை வேளாண்மை, மரங்களின் தாய் வங்காரியின் வாழ்க்கை, என்று அவரவர் விருப்பப்படி ஒரு புத்தகம், அப்புறம் சமீபத்தில் வெளியான அவருடைய புத்தகம் இவற்றோடு வரவேண்டும். முற்போக்கு கவிஞர்களும் வரலாம். ஆனால் அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அநுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத்தான் கலையின் ரத்தப்பலி பிடிக்காதே.
வெட்டப்படும் கிடா வெட்டப்படுவதற்கு முன் அதன் கையால் இல்லை வாயால் ஒரு புத்தகவெளியீடும் நடந்தால் இலக்கியத்தன்மை சேர்ந்து விடும். ஓடுகிற ரயிலில் வெளியிட்டாச்சு. கூவத்தில் வீசி எறிந்து வெளியிட்டாச்சு. மதுக்கடையில் வெளியிட்டாச்சு. புதுசா யோசிக்கணும்ல. அதனால் கிடாவின் வாயில் கொடுத்து வெளியிட வேண்டும். அந்தப்புத்தகத்தைப் பற்றி கிடா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே கிடாயை வெட்டிரணும். கிடாக்கறி இருந்தால் கூடவே இத்யாதியும் இருக்கும்..இத்யாதி இருக்கும்போது புலவர்களுக்குள் போர் சார்வசாதாரணம். போர் என்று வந்து விட்டால் பல் உடைதல், மூக்குடைபடுவது, புறமுதுகிட்டு ஓடுவது, ஆதியில் கோபம் வந்த முதல் மனிதன் பேசிய கெட்ட வார்த்தையிலிருந்து இன்று வரையுள்ள கெட்டவார்த்தை அகராதியை புதுப்பித்து புதிய சொற்களஞ்சியத்தை உருவாக்குவது வரை எல்லாநிகழ்வுகளும் நல்லபடியாக நிறைவேற வேண்டும். இப்படியான சடங்குகளுக்கு சமீபகாலமாக ஒரு ஸ்டார் அட்ராக்சன் இருந்தால் நல்லது என்ற எண்ணம் வந்திருக்கிறது. ஒரு சினிமா டைரக்டரோ, ஒளிப்பதிவாளரோ, இல்லையென்றால் ஒரு உதவி இயக்குநர் கூட ஓ.கே. எப்படியோ சினிமாக்காரராக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். இந்தச் சடங்குகளுக்குப் பின் புலவர்களின் அணி சேர்க்கை மாறி கூட்டணி மாற்றம் ஏற்படும். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகள் ஆவார்கள். எதிரிகளாக இருந்தவர்கள் ஆப்தர்கள் ஆவார்கள். இதுவரை உன்னதமான எழுத்தாக இருந்தவையெல்லாம் குப்பையாகும். இதுவரை ஆபாசமாக இருந்ததெல்லாம் உன்னதமாகும். நேரிடையாகவும், மறைமுகமாகவும், அணிகளுக்கிடையில் இடையில் ஆங்காங்கே சொற்போர், எழுத்துப்போர், களப்போர் நடக்கும். சொற்போரிலும் களப்போரிலும் வேதகால பானங்கள் கிரியையூக்கிகளாக செயல்படும்.
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு புத்தகம் போட்டு உலக இலக்கியத்தில் தனக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்று நம்புகிறவர்களும், இடத்தை எப்படியாவது ரிசர்வ் செய்கிறவர்களும், வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படியானால் எல்லோருமே எழுத்தாளர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. பள்ளி, கல்லூரிக்காலங்களில் காதல் கவிதை எழுதாத பையன்கள் இருக்கிறார்களா என்ன? ( அது என்ன மாயமோ…பொம்பிளப்பிள்ளகளுக்கும் கவிதை எழுதறவன் பெரிய அறிவாளியா இருப்பான்னு நெனப்பு ) அப்படியானால் கணக்கு சரிதானே. கவிதையோ, கதையோ, தான் எழுதுவது தான் கவிதை, கதை என்று முன் தீர்மானத்தோடு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அவர்களே எழுதி, அவர்களே அச்சடித்து, அதற்கு ஒரு காதணி விழா ரேஞ்சுக்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, தன்னைத்தானே பாராட்டி, உருகி, அந்தப்புத்தகத்தை அந்த விழாவில் துட்டு கொடுத்து வாங்க வைத்து சமூகத்தின் மீதான தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொள்வார்கள்.
எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மனசாட்சி. எழுத்தாளர்களைக் கொண்டாடாத பூமி என்ன பூமி? ( (என்னவோ மற்ற எல்லோரையும் கொண்டாடித் தீர்த்த மாதிரி ) கேரளாவைப்பார்! கர்நாடகாவைப் பார்! மேற்குவங்கத்தைப் பார்! எழுத்தாளனாக வாழமுடியாத மண் இந்த மண், என்று முழக்கங்களை எழுப்பி, குளிர்ந்தஇரவுகளை சூடாக்கி புழுதி பறக்க வைப்பதில் எழுத்தாளர்கள் கில்லாடிகள்! இந்த சூட்சுமம் தச்சாசாரி, தங்காசாரி, டீ மாஸ்டர், தவசுப்பிள்ளை, மெக்கானிக்குகள், தையல்காரர்கள், மண்பானை செய்யும் குயவர்கள், நெசவாளிகள், ஏன் வீட்டில் இருக்கும் பெண்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை. பல இலக்கியக்கூட்டங்கள் மலைப்பிரசங்கம் போல நடக்கும் வந்திருந்தவர்களும் கடன் வாங்கியவர்களைப்போல கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்க, சில கூட்டங்களில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்னாலேயே கூட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் எழுத்தாளர்கள். அவர்களுடைய நோக்கமே கேள்வி கேட்பது தான். கூட்டம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிப்பவர்கள் கூட்டம் முடியும்வரை கேட்பார்கள். கேள்வி கேட்டே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். கூட்டங்களுக்கு இப்படியானவர்கள் வராமலிருக்க முப்பத்திமுக்கோடி தெய்வங்களைக் கும்பிடுபவர்கள் ஒருபக்கம் என்றால் வருவதற்கு முன்பே அவர்களோடு நட்புபாராட்டி, விருந்தோம்பி வளைத்துப்போட முயற்சிப்பவர்கள் இன்னொரு பக்கம். இங்கெல்லாம் கூட சிலபல புதிய சிந்தனைகள், கருத்துக்கள், படைப்புகள் பற்றிய உரையாடல்கள் வந்து விடக்கூடும். ஆனால் மாறவே மாறாத சிலபஸ். மாற்றலே இல்லாத ஆசிரியர்கள். ஓரோண் ஒண்ணு.. ஈரோண் இரண்டு என்று விடாமல் வாய்ப்பாடு மாதிரி முற்போக்கு இலக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் கொள்ளைப்பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமே மேலிருந்து கீழே சிலபஸ் மாறியாச்சு அடுத்த பாடத்துக்குப் போங்கன்னு சொல்லணும். அந்தச் செய்தி கீழே வந்து சேரும் முன்னால் யுகங்கள் கழிந்து விடும். நமக்கு விடுதலை கிடைச்சாச்சா? என்று கேட்கிற மாதிரி புதுமைப்பித்தனா யாரு அவரு? என்று கேட்கிற இலக்கியப்பெருந்தகைகளும் இருக்கிறார்கள்.
இப்படி விதம்விதமாக எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகின்ற காலத்திலே ராஜாவும், ராணியும் மந்திரி பிரதானிகளும் அரசு அதிகாரிகளும் கூட எழுத்தாளர்களாக மாறிவிடுகிற மேஜிகல் ரியலிசமும் நடக்கும். அவர்களே தங்களுக்கான பட்டங்களை, விருதுகளை, விருதுதொகைகளை ஏற்பாடு செய்து போஸ்டர் அடித்து ப்ளக்ஸ் பேனர் கட்டித் தங்களைப்பற்றிப் புகழ்ந்து பாட புலவர்களையும் ஏற்பாடு செய்து கொள்வார்கள். இதைப்பார்த்து ஏழைத்தருமிகளின் வயிறு எரிய அதைப் பயன்படுத்தி தருமிகளிடமிருந்து பாடல்களை எழுதி  வாங்கிப் பரிசுகளும் பெறுகிற சொக்கநாதர்களும் உண்டு. ஊரிலோ நாட்டிலோ பேர் இல்லாட்டியும் எழுத்தாளர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் சலிப்பதில்லை. சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைக் குறித்தும் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது இந்த எழுத்தாளர்களின் தீர்மானமான நம்பிக்கை. முழுநேரமும் இலக்கியத்துக்காகவும், எழுத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் முன்பின் தெரியாத ஒரு ஊருக்கு விஜயம் செய்தார். அங்கேயுள்ள தங்கும்விடுதியில் வாடகைக்கு அறை எடுக்கப்போனார்.
வரவேற்பாளர் கேட்ட கேள்விக்கு, ” எழுத்தாளர் “ என்று பதில் சொன்னார். வரவேற்பாளர், “ எழுத்தாளர்னா..புரியல…சார் ” எழுத்தாளருக்குக் கோபம்னா கோபம் அப்படியொரு கோபம். இந்த நாட்டில் பிறந்ததுக்கு எவ்வளவு பாவம் பண்ணியிருக்கணும்? குரலை உயர்த்தி கோபத்தோடு “ WRITER “ என்றார். அதைக் கேட்ட வரவேற்பாளர் புன்முறுவலோடு கேட்டார்,
 “ அப்படி விளக்கமா சொல்ல வேண்டியது தானே… சரி..எந்த ஸ்டேஷன்ல சார் இருக்கிறீங்க? “