Sunday 1 May 2016

எழுத்தாளர்கள் பராக்..பராக்

எழுத்தாளர்கள் பராக்..பராக்

உதயசங்கர்
( முன் குறிப்பு – இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் ” ஒட்டிப்புளுகுவது “ என்ற புதுமைப்பித்தனின் இல்லையில்லை…லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லஸ் பியூஸின் கலைக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இதில் பல அயதார்த்த, மாயக்காட்சிகளும் மறைவெளிக்கதாபாத்திரங்களும் உலவலாம் என்பதை முன் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். அப்படி யாரேனும் உங்கள் கண்களுக்குப் புலப்பட்டு விட்டால் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அடித்துக்கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். )
ராஜாதி ராஜ ராஜகம்பீர ராஜகுல திலக எழுத்தாளர் திரு, தோழர், எழுத்தாளர் பராக்…பராக்… என்று நாழிகைதோறும் முரசறைந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. தெருவிலோ, சாலையிலோ, போகும்போது அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நிற்க, அனைவரின் கண்களும் நமது எழுத்தாளரையே மொய்க்க, பெண்களின் மேகலை இளகி உருண்டோட நமது எழுத்தாளப்பெருந்தகை தலையில் கிரீடம் சூடி தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் சுழல ராஜநடை நடக்கிற அழகிருக்கே. ஐயோ பார்க்கக்கண் கோடி வேணுமே.
முதல் முதலாக ஒரு கவிதை எழுதியிருப்பார். அதிலும் ஒற்றுப்பிழை. ல, ழ, ள, குழப்பம். ண, ன, வுக்கு இரண்டுசுழியா, மூன்றுசுழியா, என்ற மயக்கம். இருக்கவே இருக்கிறது. ர, ற, கேட்கவே வேண்டாம். எல்லாகுழப்பங்களையும் ஒரே கவிதையில் எழுதி முடித்தபிறகு தலையை செண்டு மாதிரி தனியே தூக்கிக் கொண்டு தமிழில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை கவிதைகளையும் அவர் எழுதிய ஒரே கவிதை தாண்டிக் குதித்து விட்டது என்று நினைப்பார். யாமறிந்த புலவர்களில் வள்ளுவன் போல், கம்பனைப்போல், இளங்கோபோல்….அப்புறம் என்ன இந்த ஒரு கவிதைக்கவிஞரைத் தான் பாரதி சொல்லியிருப்பார்…வேற வழி…அடடா..பாரதி கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரே..என்று மனதுக்குள் ஆதங்கப்படுவார். எழுத்தாளரின் மைண்ட் வாய்ஸ்  உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைக்கிறீர்கள் தானே. கார்லஸ் பியூஸ் அவருடைய ஒட்டிப்புளுகும் கலைக்கோட்பாட்டில் இப்படியான ஜித்து வேலைகளைக் கற்றுக் கொள்ள சில நிகழ்கலை மந்திரங்களையும் தொன்மச்சடங்குகளையும் இதுவரை யாரும் போயிராத காட்டுக்கோயிலுக்குப் போய் செய்யச்சொல்கிறார். கிடாவெட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். சந்தனம் நீறுபூசி, சூடத்தின் சுடரை கண்களில் ஒத்தி நிறமிழந்த ஜீன்ஸ், டி சர்ட், அதில் LIFE IS SHIT என்ற வாசகங்களோடு, தோளில் தொங்கும் ஜோல்னாப்பைக்குள், ஓரான் பாமூக், புயண்டஸ், ஜெயமோகன், எஸ்.ரா, அப்புறம் கோணங்கி இல்லாமலா, பெரியார், அம்பேத்கர், போனால் போகிறதென்று மார்க்ஸ், இயற்கை வேளாண்மை, மரங்களின் தாய் வங்காரியின் வாழ்க்கை, என்று அவரவர் விருப்பப்படி ஒரு புத்தகம், அப்புறம் சமீபத்தில் வெளியான அவருடைய புத்தகம் இவற்றோடு வரவேண்டும். முற்போக்கு கவிஞர்களும் வரலாம். ஆனால் அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அநுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத்தான் கலையின் ரத்தப்பலி பிடிக்காதே.
வெட்டப்படும் கிடா வெட்டப்படுவதற்கு முன் அதன் கையால் இல்லை வாயால் ஒரு புத்தகவெளியீடும் நடந்தால் இலக்கியத்தன்மை சேர்ந்து விடும். ஓடுகிற ரயிலில் வெளியிட்டாச்சு. கூவத்தில் வீசி எறிந்து வெளியிட்டாச்சு. மதுக்கடையில் வெளியிட்டாச்சு. புதுசா யோசிக்கணும்ல. அதனால் கிடாவின் வாயில் கொடுத்து வெளியிட வேண்டும். அந்தப்புத்தகத்தைப் பற்றி கிடா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே கிடாயை வெட்டிரணும். கிடாக்கறி இருந்தால் கூடவே இத்யாதியும் இருக்கும்..இத்யாதி இருக்கும்போது புலவர்களுக்குள் போர் சார்வசாதாரணம். போர் என்று வந்து விட்டால் பல் உடைதல், மூக்குடைபடுவது, புறமுதுகிட்டு ஓடுவது, ஆதியில் கோபம் வந்த முதல் மனிதன் பேசிய கெட்ட வார்த்தையிலிருந்து இன்று வரையுள்ள கெட்டவார்த்தை அகராதியை புதுப்பித்து புதிய சொற்களஞ்சியத்தை உருவாக்குவது வரை எல்லாநிகழ்வுகளும் நல்லபடியாக நிறைவேற வேண்டும். இப்படியான சடங்குகளுக்கு சமீபகாலமாக ஒரு ஸ்டார் அட்ராக்சன் இருந்தால் நல்லது என்ற எண்ணம் வந்திருக்கிறது. ஒரு சினிமா டைரக்டரோ, ஒளிப்பதிவாளரோ, இல்லையென்றால் ஒரு உதவி இயக்குநர் கூட ஓ.கே. எப்படியோ சினிமாக்காரராக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். இந்தச் சடங்குகளுக்குப் பின் புலவர்களின் அணி சேர்க்கை மாறி கூட்டணி மாற்றம் ஏற்படும். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகள் ஆவார்கள். எதிரிகளாக இருந்தவர்கள் ஆப்தர்கள் ஆவார்கள். இதுவரை உன்னதமான எழுத்தாக இருந்தவையெல்லாம் குப்பையாகும். இதுவரை ஆபாசமாக இருந்ததெல்லாம் உன்னதமாகும். நேரிடையாகவும், மறைமுகமாகவும், அணிகளுக்கிடையில் இடையில் ஆங்காங்கே சொற்போர், எழுத்துப்போர், களப்போர் நடக்கும். சொற்போரிலும் களப்போரிலும் வேதகால பானங்கள் கிரியையூக்கிகளாக செயல்படும்.
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு புத்தகம் போட்டு உலக இலக்கியத்தில் தனக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்று நம்புகிறவர்களும், இடத்தை எப்படியாவது ரிசர்வ் செய்கிறவர்களும், வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படியானால் எல்லோருமே எழுத்தாளர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. பள்ளி, கல்லூரிக்காலங்களில் காதல் கவிதை எழுதாத பையன்கள் இருக்கிறார்களா என்ன? ( அது என்ன மாயமோ…பொம்பிளப்பிள்ளகளுக்கும் கவிதை எழுதறவன் பெரிய அறிவாளியா இருப்பான்னு நெனப்பு ) அப்படியானால் கணக்கு சரிதானே. கவிதையோ, கதையோ, தான் எழுதுவது தான் கவிதை, கதை என்று முன் தீர்மானத்தோடு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அவர்களே எழுதி, அவர்களே அச்சடித்து, அதற்கு ஒரு காதணி விழா ரேஞ்சுக்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, தன்னைத்தானே பாராட்டி, உருகி, அந்தப்புத்தகத்தை அந்த விழாவில் துட்டு கொடுத்து வாங்க வைத்து சமூகத்தின் மீதான தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொள்வார்கள்.
எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மனசாட்சி. எழுத்தாளர்களைக் கொண்டாடாத பூமி என்ன பூமி? ( (என்னவோ மற்ற எல்லோரையும் கொண்டாடித் தீர்த்த மாதிரி ) கேரளாவைப்பார்! கர்நாடகாவைப் பார்! மேற்குவங்கத்தைப் பார்! எழுத்தாளனாக வாழமுடியாத மண் இந்த மண், என்று முழக்கங்களை எழுப்பி, குளிர்ந்தஇரவுகளை சூடாக்கி புழுதி பறக்க வைப்பதில் எழுத்தாளர்கள் கில்லாடிகள்! இந்த சூட்சுமம் தச்சாசாரி, தங்காசாரி, டீ மாஸ்டர், தவசுப்பிள்ளை, மெக்கானிக்குகள், தையல்காரர்கள், மண்பானை செய்யும் குயவர்கள், நெசவாளிகள், ஏன் வீட்டில் இருக்கும் பெண்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை. பல இலக்கியக்கூட்டங்கள் மலைப்பிரசங்கம் போல நடக்கும் வந்திருந்தவர்களும் கடன் வாங்கியவர்களைப்போல கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்க, சில கூட்டங்களில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்னாலேயே கூட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் எழுத்தாளர்கள். அவர்களுடைய நோக்கமே கேள்வி கேட்பது தான். கூட்டம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிப்பவர்கள் கூட்டம் முடியும்வரை கேட்பார்கள். கேள்வி கேட்டே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். கூட்டங்களுக்கு இப்படியானவர்கள் வராமலிருக்க முப்பத்திமுக்கோடி தெய்வங்களைக் கும்பிடுபவர்கள் ஒருபக்கம் என்றால் வருவதற்கு முன்பே அவர்களோடு நட்புபாராட்டி, விருந்தோம்பி வளைத்துப்போட முயற்சிப்பவர்கள் இன்னொரு பக்கம். இங்கெல்லாம் கூட சிலபல புதிய சிந்தனைகள், கருத்துக்கள், படைப்புகள் பற்றிய உரையாடல்கள் வந்து விடக்கூடும். ஆனால் மாறவே மாறாத சிலபஸ். மாற்றலே இல்லாத ஆசிரியர்கள். ஓரோண் ஒண்ணு.. ஈரோண் இரண்டு என்று விடாமல் வாய்ப்பாடு மாதிரி முற்போக்கு இலக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் கொள்ளைப்பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமே மேலிருந்து கீழே சிலபஸ் மாறியாச்சு அடுத்த பாடத்துக்குப் போங்கன்னு சொல்லணும். அந்தச் செய்தி கீழே வந்து சேரும் முன்னால் யுகங்கள் கழிந்து விடும். நமக்கு விடுதலை கிடைச்சாச்சா? என்று கேட்கிற மாதிரி புதுமைப்பித்தனா யாரு அவரு? என்று கேட்கிற இலக்கியப்பெருந்தகைகளும் இருக்கிறார்கள்.
இப்படி விதம்விதமாக எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகின்ற காலத்திலே ராஜாவும், ராணியும் மந்திரி பிரதானிகளும் அரசு அதிகாரிகளும் கூட எழுத்தாளர்களாக மாறிவிடுகிற மேஜிகல் ரியலிசமும் நடக்கும். அவர்களே தங்களுக்கான பட்டங்களை, விருதுகளை, விருதுதொகைகளை ஏற்பாடு செய்து போஸ்டர் அடித்து ப்ளக்ஸ் பேனர் கட்டித் தங்களைப்பற்றிப் புகழ்ந்து பாட புலவர்களையும் ஏற்பாடு செய்து கொள்வார்கள். இதைப்பார்த்து ஏழைத்தருமிகளின் வயிறு எரிய அதைப் பயன்படுத்தி தருமிகளிடமிருந்து பாடல்களை எழுதி  வாங்கிப் பரிசுகளும் பெறுகிற சொக்கநாதர்களும் உண்டு. ஊரிலோ நாட்டிலோ பேர் இல்லாட்டியும் எழுத்தாளர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் சலிப்பதில்லை. சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைக் குறித்தும் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது இந்த எழுத்தாளர்களின் தீர்மானமான நம்பிக்கை. முழுநேரமும் இலக்கியத்துக்காகவும், எழுத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் முன்பின் தெரியாத ஒரு ஊருக்கு விஜயம் செய்தார். அங்கேயுள்ள தங்கும்விடுதியில் வாடகைக்கு அறை எடுக்கப்போனார்.
வரவேற்பாளர் கேட்ட கேள்விக்கு, ” எழுத்தாளர் “ என்று பதில் சொன்னார். வரவேற்பாளர், “ எழுத்தாளர்னா..புரியல…சார் ” எழுத்தாளருக்குக் கோபம்னா கோபம் அப்படியொரு கோபம். இந்த நாட்டில் பிறந்ததுக்கு எவ்வளவு பாவம் பண்ணியிருக்கணும்? குரலை உயர்த்தி கோபத்தோடு “ WRITER “ என்றார். அதைக் கேட்ட வரவேற்பாளர் புன்முறுவலோடு கேட்டார்,
 “ அப்படி விளக்கமா சொல்ல வேண்டியது தானே… சரி..எந்த ஸ்டேஷன்ல சார் இருக்கிறீங்க? “



No comments:

Post a Comment