Sunday 7 April 2013

சாகச சந்நியாசி விமலாதித்தமாமல்லன்

உதயசங்கர்maamallan

கோவில்பட்டிக்கு எழுத்தாளர் ஜோதிவிநாயகம் வருகை தந்த பிறகு எங்கள் இலக்கிய, அரசியல், தத்துவப்பார்வை மேலும் விரிவடைந்தது. அவருடைய நுட்பமிக்க பார்வை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கட்சி சாராத இடதுசாரியாகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதனால் கட்சியின் நலன்சார்ந்த பார்வைகளைத் தாண்டிய இடதுசாரித் தத்துவங்களை, அரசியல் பார்வைகளை, மார்க்சீயஇலக்கிய விமர்சனங்களை வாசித்து எங்களிடம் வியாக்கியானம் செய்தார். எங்களை கட்சி உறுப்பினராக்குவதற்காகவே தூண்டில் போட்டுப் பிடித்த கட்சித்தோழர்களுக்கு அவருடைய இந்த வியாக்கியானங்கள் உவப்பாகவில்லை. அவர் உச்சரித்த கிராம்ஷி, ஜார்ஜ் லூகாக்ஸ், டெர்ரி ஈகிள்டன், டிராட்ஸ்கி, போன்ற பெயர்களும் இலக்கியம், பண்பாடு, குறித்த அவர்களுடைய பார்வையும் எங்களிடம் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தின.

ஜோதியிடம் நான் கண்ட ஒரு அபூர்வமான குணம் என்னவென்றால் அவர் ஒரு விஷயத்தையோ, ஒரு அநுபவத்தையோ மற்றவர்களிடம் ஒரு முறை சொல்லுவதோடு நிறுத்தமாட்டார். பார்க்கிற ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார் அல்லது விவாதித்துக் கொண்டேயிருப்பார். மேலோட்டமாக கேட்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லுவதைக் கேட்பதனால் ஒரு சலிப்பு உண்டாவதைப்போல இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவர் அந்த அநுபவத்தின் அல்லது கருத்தின் சாராம்சத்தை இன்னும் விளக்கமாக, இன்னும் நுட்பமாக அவரே புரிந்து கொள்ள செய்கிற முயற்சியாகவே எனக்குத் தெரியும். புதிது புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தார். விரிந்த படிப்பாளியில்லை. ஆனால் ஆழமான சிந்தனையாளர். கொஞ்சமாக வாசித்து அதன் வழியே வாழ்வின் சாராம்சத்தை கண்டுணரும் ஆவல் அவரிடம் இருந்தது. சிறந்த உரையாடல்காரர். எனக்கு தினமும் புதிதாக அவர் தெரிந்தார். எழுத்தில் மிக மோசமான கருமி. மிகக்குறைவாகவே எழுதுவார். ஆனால் அவருடைய சிறுகதைகள் ரெம்ப வித்தியாசமானதாக இருந்தன. வாசிக்கும்போது இதுவரை நாம் எதிர்கொண்டிராத ஒரு அபூர்வமான உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நான் எழுத ஆரம்பித்து கொஞ்ச நாட்களாகியிருந்தது. அப்போது தான் எழுந்து நடக்கத் தொடங்கிய குழந்தை தன் நிலையில்லாமல் தத்தக்கா புத்தக்கா என்று நடப்பதைப்போல கன்னாபின்னாவென்று எழுதிக்கொண்டிருந்தேன். அதைவிடக் கொடுமை எழுதியதையெல்லாம் ஜோதியிடம் கொண்டுபோய் படிக்கக் கொடுத்தேன். அவரும் பொறுமையாகப் படித்து அவருடைய அபிப்ராயங்களைச் சொன்னார். மனதார தன் ஆலோசனைகளைச் சொன்னார். இதனால் எனக்கு மேலும் நெருக்கமாகி விட்டார். இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே.

ஒருமுறை அவரிடம் ஏன் அவர் கொஞ்சமாக எழுதுகிறார் என்று கேட்டதுக்கு அவர் நீங்கள் சோறு பொங்குறீங்க..சோறு அன்றாடம் சாப்பிட்டே ஆகணும் உயிர்தங்க வேறுவழியில்லை. நான் முந்திரிப்பருப்பு தயாரிக்கிறேன். எப்பவாவது சாப்பிட்டா தான் ருசி. என்று ஒரு வியாக்கியானம் சொன்னார். நானும் கோணங்கியும் அவருடைய அறையில் கிடையாகக் கிடந்தோம். அந்த நேரத்தில் தான் தேடல் பத்திரிகை வெளிவந்தது. கிட்டத்தட்ட கோவில்பட்டி இலக்கியமையம் விளாத்திகுளத்தை நோக்கி நகர்ந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் நிறைய எழுத்தாளர்கள் கோவில்பட்டிக்கு வராமலேயே விளாத்திகுளத்தை நோக்கிப் படையெடுத்தனர். வேறுவழியில்லாமல் கோவில்பட்டி எழுத்தாளர்களும் விளாத்திகுளத்துக்கு அன்றாடம் போய்வந்தும் ஜோதியின் அறையில் தங்கியும் இருந்தனர். ஜோதியின் செலவில் அவர் கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் மாதம் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தோம். அப்படித்தான் ஒரு முறை நானும் கோணங்கியும் கோவில்பட்டியிலிருந்து தோழர்களிடம் வழிச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு விளாத்திகுளத்துக்கு விடியற்காலையில் முதல் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம். அறையில் ஜோதி இல்லை. கம்மாய் வரை போயிருப்பதாக பக்கத்து வீட்டில் சொன்னார்கள். சரி என்று நாங்களும் கம்மாயைப் பார்த்து நடையைக் கட்டினோம். அந்தக் கம்மாயில் பெரிய ஆலமரம் ஒன்று பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. அதற்குக் கீழே ஒரு சிறுகூட்டம் நடந்து வந்து கொண்டிருந்ததுதான் முதலில் கண்ணில் பட்டது. அந்தக் கூட்டத்தில் செக்கச்சிவப்பாக ஒரு இளைஞன் காவியுடை தரித்து அடர்ந்து வளர்ந்த தாடியுடன் ஒளி சிந்தும் முகத்துடன், சுத்தியிருந்த கரிசக்காட்டுக் கறுப்பர்கள் நடுவே ஒரு கையை அருளாசி வழங்குகிற மாதிரி தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் கம்மாய்க்குச் சென்று கொண்டிருந்த கிராமத்துமக்கள் அந்தச் சாமியாரைப் பார்த்து கைகூப்பி வணங்கினர். அருகில் ஜோதி ஒரு புன்முறுவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் நெருங்கியதும் அந்த உருவத்தின் தேஜஸைப் பார்த்து சற்றுப் பின்வாங்கினேன். ஜோதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் விமலாதித்தமாமல்லன். ஆளுக்கேத்த மாதிரி பேரும் இருந்தது. அவர் புன்முறுவலோடு எங்களிடம் அறிமுகம் ஆனார். ஆனால் அவர் கண்களில் ஒரு அமைதியின்மையையும், குறும்பையும் காண முடிந்தது. வெகுநாள் பழகிய நண்பர்கள் போல ரெம்பச் சகஜமாகப் பேசிக்கொண்டு வந்தார். ஆனால் அறைக்கு வரும்வரை எதிரில் வந்தவர்களுக்கு அருளாசி வழங்கத் தான் அவருக்கு சரியாக இருந்தது.

இந்த வாழ்வின் மீது ஏற்பட்ட சலிப்பினாலும், நெருக்கடியினாலும் முற்றும் துறந்த சந்நியாசியாகப் போய்விட முடிவு செய்து கையில் ஒரு நயாபைசா இல்லாமல் உடுத்திய காவித்துணிகளோடு கிளம்பிவிட்டதாகவும், அப்படியே நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தரராமசாமி தொடங்கி ஒவ்வொரு ஊராக இறங்கி எழுத்தாளர்களைச் சந்தித்தபடியே வந்து கொண்டிருந்தார். அவர் சந்தித்த எல்லா எழுத்தாளர்களும் அவரிடம் லௌகீகவாழ்விலிருந்து கொண்டே இலக்கியப்பரிசாரகம் செய்யலாம் என்றும் அதற்காக முற்றும் துறக்கவேண்டியதில்லை என்றும் அதோடு தமிழ்ச்சமூகத்தில் ஒருவர் முழுநேரமும் எழுத்தாளராக வாழமுடியாது என்றும் நம்முடைய முன்னோடிகளான பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் தொடங்கி இன்றைய கவிஞர் விக்கிரமாதித்தயன் வரை தமிழ்ச்சமூகத்தில் வறுமையில் உழன்றே வாழ்ந்த கதையெல்லாம் சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். அவரும் தமிழ்ச்சமூகத்தின் துரதிருஷ்டத்தை நினைத்தபடியே சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போகும்வழியில் எழுத்தாளர்களைச் சந்தித்துக் கொண்டேயிருந்தார். அந்தப்படியே தான் விளாத்திகுளவிஜயமும்.

இரண்டு நாட்கள் தங்கியிருந்தார் என்று ஞாபகம். ஜோதியின் அறையை அதகளம் பண்ணிவிட்டோம். கோணங்கி யாருடனும் உடனே டா டே போட்டு பழகிவிடுவான். நான் கொஞ்சம் தயக்கத்தோடுதான் பழகுவேன். மாமல்லன் என் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். என்னிடம் மிகுந்த உரிமையோடு பழகி என் கூச்சஉணர்வைப் போக்கினார். இரண்டே நாட்களில் அத்யந்த நண்பர்கள் போல ஆகிவிட்டோம். அவருடனான உரையாடலில் சலிப்பூட்டும் பெருநகரவாழ்வின் அழுத்தத்தினால் சாகசங்களை விரும்புகிற ஒரு கலகக்காரனாகவே நான் அவரைக் கற்பனை செய்து கொண்டேன். எல்லாமதிப்பீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தினார். எல்லாஎழுத்தாளர்களையும் விமர்சனம் செய்தார். எல்லா அரசியல் நிலைபாடுகளையும் கேலி செய்தார். முதலில் அவருடைய துணிச்சலும், தயவுதாட்சண்யமில்லாத விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தன. யாரையும் முகம் பாராமல் தூக்கியெறிந்து பேச அவரால் முடிந்தது. தன்னை ஒரு கலகக்கார இலக்கியவாதியாகவே வரித்துக் கொண்டார். எந்த இலக்கியக்கூட்டமாக இருந்தாலும் விமலாதித்த மாமல்லன் அங்கு ஆஜராகி கூட்ட ஏற்பாட்டாளருக்கும், பிரதான எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கும் கிலியை உண்டு பண்ணினார். கூட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பிவிடும் வல்லமை அவருக்கு இருந்தது. இதில் உடனடியாக ஒரு நேர்மறைப்பலனும் இருந்தது. எல்லோரும் யார் இந்த விமலாதித்தமாமல்லன் என்று கவனித்தனர். அவருடைய கதைகளை வாசித்தனர். அவருடைய கதைகளுக்கு உடனடியான வாசகபலம் கூடியது. விமர்சனக்கவனிப்புகள் குவிந்தன. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே கன்னியாகுமரி முதல் சென்னை வரை இலக்கியவாதிகளிடம் பிரபலமாகி விட்டார். எதிர்மறைப்பலனும் இருந்தது. அந்தக்கலகக்குரல் காரணமாகவே அவரை எல்லோருக்கும் பிடிக்காமல் போய்விடும் ஆபத்து இருந்தது. அதை உணர்ந்தும் அவர் அப்படியே நடந்து கொண்டார். அதற்குக் காரணம் போலித்தனங்களோடு சமரசம் கொள்ள முடியாத கூருணர்வும், முழுமையை நோக்கிய தேடலும் தான் என்று நானாக நினைத்துக் கொள்கிறேன். அதனால் தான் அவரால் எதையும் யாரையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதையும் யாரையும் முழுமையாகச் சார்ந்து இருக்கவும் முடியவில்லை. எதிலும் திருப்தியில்லாமல், எப்போதும் அவருடைய மனமெனும் குளத்தில் தொடர்ந்து அலையடித்துக் கொண்டேயிருந்தது. அந்த அலைகள் அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. அதனால் தான் இரண்டுமுறை மிக இளம் வயதிலேயே சந்நியாசம் ஏற்கும் மனநிலைக்கும் பாபா ஆம்தேவின் இந்திய ஒருமைப்பாட்டுக்காக கன்னியாகுமரியி முதல் காஷ்மீர் வரை சைகிள் பயணம் போனதும், நாடகக்காரராக, சினிமாக்காரராக, தொலைக்காட்சிக்கலைஞராக, அவர் மனம் அலையடித்த இடத்துக்கெல்லாம் ஆவேசத்தோடு அலைந்து கொண்டேயிருந்தார். சமரசமில்லாமல் அவர் இந்த உலகத்தோடு சண்டைபோடும் மனநிலையில் இருந்தார். இலக்கிய உலகில் என்றில்லை; தெருக்களிலும் நியாயமில்லை என்று அவர் உணர்ந்து விட்டால் எதிலும் போய் தலையிட்டு கலகம் செய்கிறவர். ஆனால் அடிப்படையில் அன்புக்காக ஏங்குகிற ஒரு குழந்தையைப் போல மிகுந்த பிரியமுள்ளவர். எந்தப்பாசாங்குமின்றி உண்மையாக இருப்பவர்களிடம் அதே மாதிரியான உண்மையுணர்வுடன் நடந்து கொள்கிறவர். அவரை யாருக்கும் பிடிக்கவும் இல்லை. அதனாலேயே கூட அவருடைய சிறுகதைகளின் மேன்மை தமிழிலக்கியத்தில் போதிய கவனம் பெறவில்லையோ என்று நினைக்கிறேன்.

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நானும் அவரும் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தோம். 1983-ல் அறியாத முகங்கள் என்ற அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பும், 1986-ல் முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள் மற்ரும் பிற கதைகள் என்ற சிறுகதைதொகுப்பும், 1994-ல் உயிர்த்தெழுதல் என்ற சிறுகதைத் தொகுப்பும், 2010-ல் விமலாதித்தமாமல்லன் கதைகள் என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைகளில் அலுவலகம், அதிலேயே வாழ்ந்து வரும் அதிகாரிகள், குமாஸ்தாக்கள், நான்காம்நிலை சிப்பந்திகள் என்றொரு உலகமும், சென்னையின் வறட்சியான, வெறுமையான, யந்திரமயமான உறவுகளும், வாழ்க்கையும் அதன் சகல கோரமான பக்கங்களும் நேர்த்தியாகவும், செறிவாகவும் பதிவாகியிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் குடும்பத்தின் போலியான உறவுமுகங்களின் கிழிந்து தொங்கும் வாழ்வின் அநுபவங்கள் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. செறிவான மொழியும், தேர்ந்த கட்டமைப்பும், அநுபவங்களின் மீதான விசாரணையும், இந்தக் கதைகளை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. சமூகப்பிரச்னைகளை எள்ளலோடும், அமானுஷ்யமான அநுபவங்களின் அதிசயமான உணர்வும் அந்தக்கதைகளைத் தாண்டியும் நம்மை யோசிக்க வைக்கிறது. ஆனால் எல்லாக்கதைகளின் அடிநாதமும் இந்த வாழ்வின் மதிப்பீடுகள் குறித்த விசாரணை தான். மதிப்பீடுகள் குறித்த விமர்சனம் தான். ஒரே நேரத்தில் சிறந்த கதைசொல்லியாகவும், தேர்ந்த சிறுகதைக்கலைஞராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் விமலாதித்தமாமல்லன். மிகக்குறைந்த கதைகளே எழுதியுள்ள மாமல்லன் தமிழ்ச்சிறுகதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக சிறுமி கொண்டு வந்த மலர், முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள், என்ற சிறுகதைகள் இரண்டும் தமிழ்ச்சிறுகதைக்கு மாமல்லன் கொடுத்த கொடையெனச் சொல்லலாம்.

வேலை தேடி சென்னையை நோக்கி வரிசையாக கோவில்பட்டியிலிருந்து படையெடுப்பு நடந்தது. முதலில் கௌரிஷங்கரும், வித்யாஷங்கரும், பின்னர் மனோகரும் சென்றனர். வித்யாஷங்கர் பத்திரிகையிலும் சினிமாவிலுமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் தான் எனக்கு எழுதிய கடிதங்களில் ஊரில் சூழல் சரியில்லையென்றால் சென்னைக்கு வா பார்க்கலாம் என்று தைரியம் சொன்னவர். வீட்டிலும் நெருக்கடி அதிகமாகவே சென்னை சென்று என் நல்வாய்ப்பைப் பரிசோதித்து விடுவதெனத் தீர்மானித்தேன். அதோடு சென்னையி கால் வைத்தால் போதும் நம்ம அறிவுக்கு எப்படியும் பொழச்சுக்கலாம்னு ஒரு நப்பாசை. நானும் சென்னைப்பட்டணம் பிரயாணமானேன். எங்களுடைய சிருஷ்டி என்ற நாடகக்குழு ஒரு நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை போகும்போது நானும் அப்படியே சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுகளோடு ரயில் ஏறினேன். எங்களுடைய கோவில்பட்டி அப்போது மிஞ்சிப் போனால் பத்துபதினைஞ்சு தெருக்களோடும் ஒரே ஒரு கடைத்தெருவும், மூன்று சினிமா தியேட்டர்களும் கொண்டு ஒரு ஒன்றரை கி.மீ. சுற்றளவுக்குள் தான் இருக்கும். ஆனால் சென்னை?

இறங்கியதிலிருந்து என் பதட்டம் தணியவில்லை. பிரம்மாண்டங்களும், சாலைகளும், திசையில்லாத சாலைகளும், எங்கு பார்த்தாலும் விதவிதமான மனிதர்களுமாக சென்னை வெருட்டியது. நாடகவிழா முடிந்து தோழர்கள் எல்லாம் ஊர் திரும்பிவிட்டார்கள். நான் கோவில்பட்டித் தோழர் சி.எஸ்.சின் அறையில் தங்கியிருந்தேன். அப்போது விமலாதித்தமாமல்லன் வேலையில் சேர்ந்து விட்டார். செண்ட்ரல் எக்ஸைஸ் என்று இப்போது ஞாபகத்தில் நிழலாடுகிறது. அவருடைய அலுவலகத்துக்குச் சென்று பார்த்தேன். அவருக்கு தெக்கத்தி இலக்கியவாதிகள் மீது தனீ பிரீதி. அதன்பிறகு சென்னை விட்டு வரும்வரை அவருடைய கைப்புள்ளையாகவே இருந்தேன். அவருடைய அலுவலகத்துக்கு மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளி வழியாக எஸ்.ஐ.இ.டி.கல்லூரி தாண்டி தினமும் நடந்து போவேன். அவர் அலுவலகம் முடிந்ததும் அவருடைய சைக்கிளில் என்னை டபுல்ஸ் ஏற்றிக்கொள்வார். என் வேலை விஷயமாகவும், இலக்கியக்கூட்டங்களுக்கும் போவோம். அங்கேயும் அப்படித்தான். எல்லாக்கூட்டங்களிலும் அவருடைய குரல் அவருடைய சிறுகதைகளைப் போல தனித்து ஒலிக்கும். தெருக்களில் செல்லும்போதும் அவருக்கு நியாயமில்லாத எந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும் உடனே சைக்கிளை நிறுத்தி அங்கே போய் தலையிடுவார். எனக்குப் பயமாக இருக்கும். ஆனால் கொஞ்சநாட்களில் எனக்குப் பழகிவிட்டது. நானும் சென்னை பிஸ்தாவாகிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் என் கனவில் ஒரு நாள் கடும்மழை பெய்தது. என் குணாதிசயத்துக்கு மாறாக நான் கட்ட ஆசைப்பட்ட என் கனவுக்கோட்டை சிலபல துளிகளிலேயே கரைந்து போய் விட்டது. எழுதியதே மறந்து போன ஒரு ரயில்வே சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். அதற்கான அறிவிப்புக் கடிதம் ஊருக்கு வந்திருந்தது. உடனே ஊரிலிருந்து கிளம்பிவரச்சொல்லி கடிதம் வர சென்னை என்னிடமிருந்து பிழைத்துக் கொண்டது. ( இப்படித்தாய்யா கொள்ளைப் பேரு சொல்லிக்கிட்டு திரியிறீங்க என்ற சென்னையின் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.)

விமலாதித்தமாமல்லன் நிறைய எழுதவில்லையோ என்று சந்தேகப்படுகிறேன். அல்லது எனக்குத் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறேன். ஏனெனில் நான் சென்னையை விட்டு வந்தபிறகு அவருடனான தொடர்பு விட்டுப்போயிற்று. இடையறாது உறவுகளைப் பேணுவதிலும் தொடர்புகளைக் காப்பாற்றுவதிலும் நான் மிகவும் பலகீனமானவன். மிக நீண்ட வருடங்களாகிவிட்டது மாமல்லனைப் பார்த்து. ஆனால் சென்னையின் சாலைகளில் சைக்கிள் முன்பார் கம்பியில் என்னை உட்காரவைத்து சுற்றித் திரிந்த அந்த துறுதுறு இளைஞன் விமலாதித்தமாமல்லனை என்னால் மறக்கவே முடியாது. இன்று ஜோதிவிநாயகம் இல்லை ஆனால் அன்று அவருடைய தோழமையின் வழி எனக்குக் கிடைத்த அத்தனை நண்பர்களுக்கும், நான் கண்டடைந்த அறிவுக்கும் என் அன்புக்குரிய ஜோதிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.,அன்று ஜோதி இல்லையென்றால் எனக்கு விமலாதித்தமாமல்லனின் நட்பு கிடைத்திருக்காது. மாமல்லனின் நட்பு இல்லையென்றால் நான் சென்னையில் ஒரு நாள்கூடத் தங்கியிருக்க மாட்டேன். என் இனிய நண்பா மாமல்லன்! நம் இளமைக்காலநட்பை நினைத்து பெருமிதமடைகிறேன். நண்பா…மாமல்லனே…

Friday 5 April 2013

எதிர்காலத்தின் சொந்தக்காரர்கள்

குழந்தைகளின் அற்புத உலகில்- 25

உதயசங்கர்

India-children-006

குழந்தைகள் அவரவர் பெற்றோர்கள்வழி வந்திருந்தாலும் அவர்கள் மானுட இனத்திற்கே சொந்தமானவர்கள். மனித இனம் தழைக்க, நீடித்திருக்க, வந்த அற்புத மலர்கள். ஒவ்வொரு குழந்தையும் இந்த சமூகத்தின் பொக்கிஷம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாத்து, போஷித்து, உற்றுக்கவனித்து, அன்பே உருவான அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, சுதந்திரமான, ஜனநாயகபூர்வமான, பங்கேற்புள்ள கல்வியை அவர்களுக்குக் கொடுத்து ஏற்றத்தாழ்வுகளில்லாத சமத்துவமான ஒரு சமூகத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

குழந்தைகளை விலங்குகள் போல் நடத்துவது, மனதாலும் உடலாலும் துன்புறுத்துவது, பாலியல் சுரண்டலுக்கு பலியாக்குவது, குழந்தைகளின் மீது அதிகாரம் செலுத்துவது, அலட்சியப்படுத்துவது, சமத்துவமற்ற ஏற்றதாழ்வுகளைக் கற்பிப்பது, தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவது, நிற, இன, மத, சாதி, வேறுபாடுகளைக் கற்பிப்பது, சாதிய, நிற, வேறுபாட்டினால் அவமானப்படுத்துவது, மதரீதியான வேறுபாடுகளினால் அந்தந்த மதப்பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது, குழந்தைகளின் அபிப்பிராயங்களைக் கேட்க மறுப்பது, அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை மதிக்க மறுப்பது, பொதுவெளியிலும், குடும்பத்துக்குள்ளும் குழந்தைகளை மதிக்க மறுப்பது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு பெற்றோரும், தனிமனிதனும், சமூகமும் செய்து வரும் கொடுமைகளைக் கணக்கிட முடியாது. இந்தப் பூமியின் எதிர்காலச்சொந்தக்காரர்களை பெரியவர்களாகிய நாம் நடத்துகிற விதத்தைப் பார்த்தால் அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்று தோன்றும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியில்லை. பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலும், வெளியிலும், பள்ளியிலும், சமூகத்திலும் ஒடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைமையைத் தொலைத்தவர்கள். பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் நோயுற்றவர்கள், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே பெரியவர்களைப் போல நடந்து கொள்பவர்கள் அல்லது அப்படி நடக்கும்படி வற்புறுத்தப்படுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் வேலை செய்து சம்பாதித்துக் குடும்பத்துக்குக் கொடுப்பவர்கள், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது பாலியல் சுரண்டலுக்கு ஆளானவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் வன்முறையினால் துன்புறுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடத்தின், ஆசிரியர்களின் அடக்குமுறையினால் மனம் கூம்பியவர்கள், பெரும்பாலான குழந்தைகள் அடக்குமுறைக்குப் பயந்து கேள்வி கேட்க அஞ்சுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் மற்றும் சமூகத்தின் அறிவியல்பூர்வமற்ற வாழ்க்கைப்பார்வையினால் மூடநம்பிக்கைகளின் தாக்கத்துக்கு ஆளானவர்கள்,பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பைத்தியக்காரத்தினால் அல்லது மந்தைபுத்தியினால் தனித்துமிக்க தங்கள் திறமையைத் தொலைத்தவர்கள், ஆக குழந்தைகளுக்குச் சொந்தமான இந்த உலகத்தில் அந்தக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் செயல்களே நடந்து கொண்டிருக்கின்றன என்றால் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்கள் இந்த உலகை, சகமனிதர்களை, இயற்கையை, ஜீவராசிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?

நம்மிடம் குழந்தைகளின் உளவியல் சம்பந்தமான ஆய்வுகள் இல்லை. நம்மிடம் குழந்தைகளைப் பற்றிய புத்தகங்கள் சிலவே உள்ளன. அதை வாசிக்கும் பெற்றோரும் மிகச்சிலரே. நம்மிடம் குழந்தைகள் இலக்கியம் இன்னும் போதுமான அளவுக்கு வளரவில்லை. ஏனெனில் பாடப்புத்தகங்களைப் படித்தால் போதும் என்ற மனநிலை பெற்றோர்களுக்கு இருக்கிறது. நம்மிடம் குழந்தைப்படைப்பாளிகள் இல்லை. ஏனெனில் குழந்தைகளின் படைப்பூக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிகிற வேலையை பள்ளிக்கூடமும் பெற்றோரும் செய்கிறார்கள். நம்மிடம் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் அதிகம் இல்லை. அதெல்லாம் மேல்தட்டு, உயர்மத்தியதரவர்க்கத்துக்குச் சொந்தமானதென்று யாரும் கவலைப்படுவதில்லை. நம்மிடம் அறிவியல்பூர்வமான வாழ்க்கைப்பார்வையை உருவாக்கவும், குழந்தைகளுடைய படைப்பூக்க உணர்வை வளர்த்தெடுக்கவும் அமைப்புகள் துளிர் தவிர வேறு எதுவும் இல்லை. ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை பற்றிக் கவலைப்பட நமக்கு நேரம் இல்லை. குழந்தைகளுக்கான மாற்றுப்பள்ளிக்கூடங்கள் நம்மிடம் அதிகம் இல்லை. குழந்தைகளுக்கான மாற்றுப்பண்பாட்டு நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சி நிரல் நம்மிடம் இல்லை. அதனால் மதநிறுவனங்கள் குழந்தைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. குழந்தைகளுக்கான உரிமைகளுக்காகப் போராடுவதற்கு எந்த அமைப்பும் இல்லை. ஏனெனில் சமூகத்தில் இன்னும் பழைய சநாதனக்கருத்துகளே ( குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களின் சொத்து அவர்கள் அடிக்கலாம் மிதிக்கலாம் உதைக்கலாம் ஏன் கொலை கூடச் செய்யலாம்) மேலோங்கி நிற்கின்றன.

ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த சமூகமே குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது தான் யதார்த்தம். நடக்கின்ற சின்னச்சின்ன சீர்திருத்த நிகழ்வுகள் எல்லாம் ஒட்டுமொத்த குழந்தைகளின் பரிதாபநிலைமையில் எந்தப் பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் இந்த முதலாளித்துவ அரசின் நோக்கம் சிறந்த, சமத்துமிக்க, எதிர்காலம் அல்ல. அதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான். லாபம் மட்டும் தான். அதற்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும். தாயை, தந்தையை, குழந்தைகளை, பெண்களை, எல்லோரையும் பண்டமாக்கி விற்று விடும். அதற்கு எந்த மனித மாண்புகளும் கிடையாது. எந்த மதிப்பீடுகளும் கிடையாது. சகமனிதன் உட்பட எந்த ஜீவராசிகள் மீதும் அக்கறை கிடையாது. அதற்கு இந்தப்பிரபஞ்சத்தையே விற்றாலும் அதன் லாபவெறி அடங்காது. அதற்குத் தயங்கவும் தயங்காது. இத்தகைய நிலைமையில் ஜனநாயக உணர்வுள்ளோர், இடது சாரிகள், சமூக அக்கறையுள்ள அறிவுஜீவிகள் ஆகியோரின் தலையீடு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கான பாலர் அமைப்புகள், குழந்தைகளுக்கான வயது, வாசிப்புத்திறனுக்கேற்ற பத்திரிகைகள், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், குழந்தைகளைப் பற்றிய நூல்கள், குழந்தைகள் எழுதும் நூல்கள், குழந்தைகளின் உளவியல் குறித்த ஆராய்ச்சிகள், குழந்தைகளின் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள், அறிவியல்பூர்வமான வாழ்க்கைப்பார்வையை உருவாக்கும் பயிற்சிமுறைகள், குழந்தைகளுக்கான விழாக்கள், குழந்தைகளுக்கான கல்விமுறையில் மாற்றங்கள், குழந்தைகளைப் பற்றி, அவர்களுடைய உளவியல்பற்றி, அவர்களுடைய தனித்துவமிக்க திறமைகளைப் பற்றி பெற்றோர்களை ஆற்றுப்படுத்துதல், என்று நாம் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பாதையும் நெடிது. நாம் மிகச்சில தப்படிகளே எடுத்து வைத்திருக்கிறோம்.

தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. இளைஞர்களின் உரிமைக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. பெண்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த பூமியின் எதிர்காலச்சொந்தக்காரர்களான குழந்தைகளின் உரிமைகளுக்காக, அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்காக, அவர்களின் படைப்பூக்க மலர்ச்சிக்காக யார் போராடுவது? குழந்தைகளைப்பற்றி இந்தச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சநாதனக்கருத்துகளை மாற்றப்போராடப் போவது யார்? மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள்.

நன்றி- இளைஞர் முழக்கம்