Monday 8 February 2021

கோணலூர் நாட்டின் கோணல்ராஜா

 

கோணலூர் நாட்டின் கோணல்ராஜா

உதயசங்கர்


முன்னாடி ரொம்ப காலத்துக்கு முன்னாடி கோணலூர் கோணலூர்னு ஒரு நாடு இருந்தது. அந்தப் பேர் கூட அப்புறம் வந்தது தான். முதலில் அந்த ஊருக்கு அதுக்கு முன்னாடி கேணியூர் என்று பெயர் இருந்தது. நாடெங்கும் கிணறுகளும் வீடெங்கும் கேணிகளும் ( (சிறுகிணறு) இருந்தன. அப்போது அந்த நாட்டுக்கு ராஜாவே கிடையாது. ராஜா இல்லைன்னா எப்படி? மக்களே ஆட்சி செய்தார்கள். நாடு செழிப்பாக இருந்தது. விவசாயம் நன்றாக நடந்தது. வாணிபம் கொழித்தது. மற்ற நாடுகளில் உள்ள மக்களை விட கேணியூர் நாட்டு மக்கள் நாகரிகமானவர்களாக இருந்தார்கள். ஆனால் எல்லாம் சில வருடங்களில் மாறி விட்டது. எப்படி தெரியுமா?

 கோணல்ராஜாவின் கூட்டத்தினர் அந்த நாட்டுக்கு வந்தனர். அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அந்த நாட்டுக்கு வந்தனர். கேணியூர் மக்கள் ரொம்ப நல்லவர்களாகவும் வெள்ளந்திகளாகவும் இருப்பதைப் பார்த்து அவர்களை ஏமாற்றி நாட்டைப் பிடித்துக்கொண்டனர். அப்போதிருந்து கோணல்ராஜாக்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர்.

எந்த ராஜா வந்தாலும் அந்த ராஜாவின் பெயர் கோணலாகத்தான் இருக்கும். முதல் கோணல்ராஜா, முற்றும் கோணல் ராஜா, அரைக்கோணல் ராஜா, முக்கால் கோணல் ராஜா, என்று பெயர்களை மாற்றிக்கொண்டே அவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போதிருக்கிற எட்டுக்கோணல் ராஜா அவருக்கு முன்னால் ஆண்ட அத்தனை கோணல்ராஜாக்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவதைப்போல சட்டங்களை இயற்றினார். அதனால் மக்கள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

காலையில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவிப்பணம் வழங்குவதாக முழங்குவார். மாலையில் விவசாயிகள்அவர்களுடைய நிலங்களையெல்லாம் பிரபுக்களிடம் விற்று விடவேண்டும் என்று பேசுவார். மத்தியானம் ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்லுவார். சாயந்திரம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கத்துவார். நள்ளிரவில் இளைஞர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் எல்லோரும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார். எல்லாமதங்களும் என் மதமே என்று முரசறையச் சொல்லி ஆணையிடுவார். அந்த நேரத்திலேயே அவருடைய மதத்தைத் தவிர மற்ற மதங்களின் கோவில்களை இடித்துத் தள்ளுவார்.

இப்படி நாட்டுமக்களை நிம்மதியாக இருக்கவிடாமல் மாறி மாறிச் சட்டங்கள் போட்டுக்கொண்டேயிருந்தார் எட்டுக்கோணல்ராஜா.  அதுமட்டுமில்லாமல் தினசரி வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியில் தோன்றி தான் மக்கள் நனமைக்காகத்தான் சட்டங்கள் போட்டதாக விளக்கம் கொடுப்பார்.

எட்டுக்கோணல் ராஜாவின் கோணல்த்தனங்களைப் பார்த்து மக்கள் கொந்தளித்து போராட்டங்கள் நடத்தினர். குழந்தைகள் போராடினர். ஆண்கள் போராடினர். இளைஞர்கள் போராடினர். பெண்கள் போராடினர். வயதானவர்கள் போராடினர். விவசாயிகள் போராடினர். தொழிலாளிகள் போராடினர். அலுவலர்கள் போராடினர். வியாபாரிகள் போராடினர்.  எல்லோரும் போராட்டம் நடத்தவே எட்டுக்கோணல் ராஜா மந்திரிசபையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

“ மகா மந்திரிகளே! மக்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? யாராவது சரியான காரணத்தைச் சொல்ல முடியுமா?..என்று கத்தினார். எல்லோரும் யோசித்தார்கள். யோசித்தார்கள். அப்படி யோசித்தார்கள்.

 கடைசியில் கல்வித்துறை மந்திரி தான் காரணத்தைச் சொன்னார்,

“ ராஜாவே! எல்லோரும் கல்வி கற்றதினால் தான் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்து விட்டது.. முன்பெல்லாம் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களும் மட்டும் தான் கல்வி கற்றனர்.. ஆனால் இப்போது எல்லோரும் படிக்கிறார்கள்.. அதனால் தான் அவர்கள் நாம் சொல்வதை நம்பாமல் கேள்விகள் கேட்கிறார்கள்.. எனவே அவர்களைப் படிக்கவிடாமல் செய்து விட்டால் போராடமாட்டார்கள்.. “

என்று விளக்கமாகச் சொன்னார். எட்டுக்கோணல் ராஜா தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே,

“ திடீரென்று எப்படி அவர்களைப் படிக்கவிடாமல் தடுக்க முடியும்? “ என்று கேட்டார்.

“ ரொம்ப சிம்பிள்..ராஜா “

“ எப்படி? “

“ பரீட்சை.. தேர்வு.. எக்ஸாம்.. ரேங்க்.. கிரேடு… எவாலுவேஷன்…. தகுதி.. திறமை.. இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கிறது ராஜா.. அதன்படி திட்டங்கள் தீட்டினால் எல்லோரும் படிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.. “

“ ஆகா.. கேட்கவே இனிக்கிறது.. உடனே திட்டம் போடுங்கள்.. “

என்று எட்டுக்கோணல் ராஜா உத்தரவிட்டார். அவ்வளவு தான். எல்லாமந்திரிகளும் கூடி திட்டங்களைத் தீட்டினர்.

மறுநாள் அறிவிப்பு வெளியானது.

குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு தேசிய அளவிலான ஒரு பரீட்சை வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே கிண்டர்கார்டனில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்… கிண்டர்கார்டனில் சேர்ந்த குழந்தைகளுக்கு தேசிய அளவில் ஒரு தேர்வு வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே எல்கேஜியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.. இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் தேசிய அளவிலான டெஸ்ட் வைத்து மேலே கல்லூரி வரையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்… கல்லூரி சேரும்போது அதுவரை வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தேசிய அளவிலான தேர்வு வைக்கப்படும்.. பெற்றோர்களும் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே குழந்தைகள் கல்லூரிக்குப் போகமுடியும்.

அறிவிப்பை பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி. எல்லோருக்கும் கல்வியே இன்னும் முறையாகச் சென்று சேராத நிலைமையில் இப்படி யாரையும் கல்வி கற்கவிடாமல் விரட்டியடிக்கிற வேலையைச் செய்கிறாரே இந்த எட்டுக்கோணல் ராஜா.

ஏற்கனவே பரீட்சை, தேர்வு, எக்ஸாம், என்று நொந்து போயிருந்த குழந்தைகளும், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அழுது குமுறினர். இந்த நிலைமையில் போனால் மக்கள் எல்லோரும் முட்டாள்களாகி விடுவார்களே. மீண்டும் மூடநம்பிக்கை, சர்வாதிகாரம், வளர்ந்து விடுமே என்று பயந்தனர். இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று கூட யோசித்தனர். பின்னர் எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

எட்டுக்கோணல்ராஜாவுக்கும் அவருடைய மந்திரிகளுக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வைக்கும் பரீட்சையில் தேர்ச்சியடைந்து விட்டால் அவர்கள் சொன்னபடி செய்கிறோம் என்று எட்டுக்கோணல் ராஜாவுக்குத் தூது அனுப்பினார்கள். எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும்

“ ப்ப்பூ! இவ்வளவுதானா? சரி.. வைத்துக்கொள்ளலாம்..என்று சொல்லியனுப்பினார்கள். பரீட்சை அரண்மனைக்கு முன்னாலிருந்த பெரிய மைதானத்தில் நடந்தது. கேள்விகளையும் பதில்களையும் சரியா தவறா என்று சொல்ல ஒரு வெளிநாட்டிலிருந்து ஐந்து அறிவியலறிஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தவறான விடைகளுக்கு சிவப்பு விளக்கை எரிய விடுவார்கள்.

ஐந்தாம் வகுப்பு மாணவன் நெடுஞ்செழியன் மேடையில் வந்து நின்றான்.

அவன் முதல் கேள்வியைக் கேட்டான்.

“ பூமி எப்படி உருவானது? “

“ ஹா.. இது தெரியாதா? பூமியைக் கடவுள் தான் படைத்தார்..

சிவப்பு விளக்கு எரிந்தது.

அடுத்த கேள்வி.

“ பூமி சூரியனைச் சுற்றுகிறதா? சூரியன் பூயைச் சுற்றுகிறதா? “

உடனே எட்டுக்கோணல்ராஜா நல்லநாள் கிழமை பார்த்துச் சொல்லும் பஞ்சாங்கமந்திரியைப் பார்த்தார். பஞ்சாங்கமந்திரி,

“ சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது… நம்ம பஞ்சாங்கத்திலேயே போட்டிருக்கே..

என்றார். சிவப்பு விளக்கு எரிந்தது. அடுத்த கேள்வி.

“ நம்முடைய பால்வெளியில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன? “

ஜோசிய மந்திரி உடனே சொன்னார்.

“ இருபத்தியேழு.. அதைத்தானே நாம் குழந்தைகள் பிறந்த நாள் நட்சத்திரம் என்று சொல்றோம்.. “

சிவப்பு விளக்கு எரிந்தது. எட்டுக்கோணல் ராஜாவின் பரிவாரம் பயந்து போனார்கள். அடுத்தகேள்வி.

“ மனிதன் எப்படித் தோன்றினான்? “

புளுகு மந்திரி சொன்னார்.

“ கடவுள் களிமண்ணை உருட்டி ஊதி மனிதனைப் படைத்தார்..

இப்போதும் சிவப்பு விளக்கு எரிந்தது.

சாதாரணமான அறிவியல் கேள்விகளுக்கும் தவறான பதிலைச் சொன்ன எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அறிவியலைப் படிக்க அனுப்பப் பட்டனர்.

கோணலூர் நாட்டில் மீண்டும் மக்கள் ஆட்சி செய்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நன்றி - வண்ணக்கதிர்

Sunday 7 February 2021

யார் நீ? - சிறார் கதை

 

யார் நீ?


உதயசங்கர்


” யார் நீ? கீச் கீச்ச் “

“ நீ யார்? கீச் கீச் கீச் “

“ நீ எப்படி எங்கூட்டுக்குள்ளே வந்தே? கீச்கீச்ச்ச் “

“ சொல்லு. கீச்.”

” சொல்லு கீச் ”

“ இப்படி கேட்டா சொல்லமாட்டான்.. எல்லாரும் போடுங்க ஒரு கொத்து..கீச் கீச் கீச்..”

அங்கேயிருந்த தவிட்டுக்குருவிகள் எல்லாம் கோபத்துடன் நெருங்கின.

“ ச்சேச்சே.. அதெல்லாம் வேண்டாம்பா.. பாவம் சின்னப்பிள்ள “

என்று ஒரு மூத்த தவிட்டுக்குருவி சொன்னது. அதைக்கேட்ட பிறகு மற்ற குருவிகள் லேசாய் தத்தி பின்வாங்கின. இத்தனைக்கும் பின்னால் ஒரு மெலிதான சத்தம் கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த சத்தங்கள் எங்கிருந்து வருகின்றன? குட்டித்தம்பி பாரி தேடிப் பார்த்தான். அவனுடைய வீட்டுக்குப் பின்னாலிருந்த புதரிலிருந்து தான் இந்தச் சத்தங்கள் வந்தன. அங்கே ஐந்தாறு தவிட்டுக்குருவிகள் கூட்டமாய் நின்று கத்திக் கொண்டிருந்தன. ஏற்கனவே சிவப்பாய் இருக்கும் கண்களில் இப்போது கோபம் தெரிந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னால் தவிட்டுக்குருவியை விட அளவில் பெரியதாய் பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஒரு குட்டிப்பறவை பாவமாய் நின்று கொண்டிருந்தது. அது தலை குனிந்து ஏதோ முனகியது. ஆனால் அது என்ன சொல்லியது என்று யாருக்கும் கேட்கவில்லை.

       குட்டித்தம்பி பாரி தூரமாய் நின்று அதைக் கவனித்தான். அவனுடைய அப்பா பறவைக்கவனிப்பாளர். அதனால் எப்படி பறவைகளைத் தள்ளியிருந்து கவனிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே புதருக்கருகில் கூடி கய்யா முய்யா என்று சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு முன்னால் பழுப்பும் கருப்பும் கலந்த குட்டிப்பறவை தலையைத் தரையோடு குனிந்தபடி அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்

“ எனக்குப் பயமாருக்கு.. எனக்கு ஒண்ணுமே புரியல,,, க்ளவ்..கூகூகூ ..என்று சொல்லிக் கொண்டிருந்தது.

அப்போது தான் குட்டித்தம்பி பாரி கவனித்தான். அந்தக்குருவிகள் கூட்டமாய் இருந்த இடத்துக்கு புதருக்கருகில் ஒரு தவிட்டுக்குருவியின் கூடு இருந்தது. அந்தக்கூட்டில் இன்னும் இரண்டு தவிட்டுக்குருவிக் குஞ்சுகள் இருந்தன. அந்தக்குருவிகள் சின்னதாக இருந்தன. ஆனால் பழுப்பும் கருப்பும் கலந்த பறவைக்குஞ்சோ அந்தக்குஞ்சுகளை விட மட்டுமல்ல சுற்றியிருந்த தவிட்டுக்குருவிகளை விடவும் பெரியதாக இருந்தது.

தாய்த்தவிட்டுக்குருவியின் அருகில் தத்தித்தத்தி வந்த இன்னொரு தவிட்டுக்குருவி,

“ எப்படி உன் கூட்டுக்குள்ளே இவன் வந்தான்? “

“ அதானே எனக்குத் தெரியல..என் முட்டைகளோட தான் இவனும் பொறிந்து வளர்ந்தான்.. மற்ற குஞ்சுகளை விட முண்டி முண்டி இரையைச் சாப்பிட்டான்.. இப்ப வளர வளரப் பார்த்தா அவன் நெறமும் குரலும் வேறயா இருக்கு….

இவன் நம்ம இனத்தான் இல்லையே.. .

“ அதான் எனக்கும் புரியல… ஆமா.. . பேச்சைப் பாரு சகிக்கல.. கூகூகூன்னு கூவுறான்..

குட்டித்தம்பி பாரிக்கு அங்கே நடந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இருந்த இடத்திலேயே மூச்சு விடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். எல்லாக்குருவிகளும் ஒரு தடவையாவது அந்தப்புதிய பறவைக்குஞ்சின் அருகில் வந்து கீச் கீச்ச் கீச் முட்டாள்.. ஏமாற்றுக்காரா..என்று வைதுவிட்டு பறந்து சென்றன.

அந்தப் புதிய பழுப்பும் கருப்பும் கலந்த பறவை சோகத்துடன் மெல்ல அந்த இடத்தை விட்டு தத்தித் தத்தி போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை குதிக்கும்போதும்,

“ கூ கூ  நான் யாரு..? இங்கே எப்படி வந்தேன்..? “ என்று புலம்பிக்கொண்டே சென்றது. அப்போது எங்கிருந்தோ கூ கூ கூ கூ என்று ஒரு சத்தம் கேட்டது. அதைக்கேட்டதும் குஞ்சுப்பறவையின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. உடனே அதுவும் கூகூகூகூ என்று கூவியது. உடனே அருகிலிருந்த கருவேலமரத்திலிருந்து ஒரு அக்காக்குயில் பறந்து வந்து அந்தக் குஞ்சின் அருகில் உட்கார்ந்தது.

“ அட நான் அக்காக்குயிலா? “ என்று உற்சாகமாய் கூவியது குஞ்சுப்பறவை. இரண்டும் மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டிருந்தன. அப்படியே பறந்து கருவேலமரக்கிளைக்கும் பறந்து போய் ஒளிந்து கொண்டன.

குட்டித்தம்பி பாரி மெல்ல யோசித்துக் கொண்டே வீட்டுக்குள் போனான். அங்கே அப்பா கணிணியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். குட்டித்தம்பி பாரி அப்பாவைப் பார்த்து,

“ ஏன் நான் தவிட்டுக்குருவியோட கூட்டில பொறந்து வளர்ந்தேன்....? “ என்று கேட்டான். அதைக்கேட்ட அப்பா ஒரு நொடி யோசித்துவிட்டு,

“ அதுவாக்கண்ணு.. எல்லாம் இயற்கையன்னையின் தந்திரம் தான்.. “

“ தந்திரமா? “

“ காக்கா.. தவிட்டுக்குருவிகளோட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கையன்னை குயில்களைத் தான் நியமிச்சிருக்காங்க.. “

“ ஓ.. அப்படியா? ஆனா புரியலயே..

அட படுக்காளிப்பயலே அப்பாவைக் கலாய்க்கிறீயா..? குயில்களுக்குக் கூடு கட்டத்தெரியாது.. அதனால புள்ளிக்குயில் மரத்தில கூடு கட்டுற காகத்தை ஏமாத்தி அந்தக் கூட்டுல முட்டை போட்டுரும்.. அதே மாதிரி அக்காக்குயிலும் தரையில கூடு கட்டுற தவிட்டுக்குருவியோட கூட்டுல முட்டை போட்டுரும்.. இது அந்தப் பறவைகளுக்கே தெரியாது.. அதுக நம்ம முட்டை தான்.. நம்ம குஞ்சு தான்னு நெனைச்சு வளர்த்து வரும்.. பெரிசான பிறகு இரண்டு பேருக்கும் தெரிஞ்சுபோகும்.. அப்புறம் என்ன கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு அவுக அவுக கூட்டத்துக்குப் போயிருவாக.. அம்புட்டுதான்.. “

“ இதுல எப்படி தவிட்டுக்குருவிக் கூட்டம் கொறையும்.. “

“ அது கொஞ்சம் சோகமான கதை தான்.. ஆனால் இயற்கையில் எதுவும் சோகம், பயங்கரம், கொடூரம்னு எதுவும் கிடையாது.. அதனதன் இயல்புப்படி.. எல்லாம் நடக்கும்.. முதல்ல குயில் முட்டைபோடும்போதே தவிட்டுக்குருவியோட முட்டைகளைக் கூட்டிலேர்ந்து தள்ளி விட்டுரும்.. அந்த முட்டைகள் பொரிக்காது.. இல்லையா? அப்புறம் குயில் குஞ்சு வளரும் போது மற்ற குஞ்சுகளை விட அதிகமான தீனியைச் சாப்பிடும்.. மற்ற குஞ்சுகளைக் காலால தள்ளியும் விட்டுரும்.. அதுல அந்தக் குஞ்சுகள் பலவீனத்தாலோ, தாக்குதலாலோ செத்தும் போயிரும்..

குட்டித்தம்பி பாரியின் முகத்தில் வருத்தம் வந்தது. உடனே அப்பா,

பார்த்தியா.. நான் சொன்னேன்ல.. இதுல வருத்தப்பட எதுவுமில்ல.. எல்லாம் வாழ்க்கைக்கான போராட்டம்.. அந்தப் போராட்டத்துல.. இயற்கையன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான இயல்புகளைக் கொடுத்திருக்காங்க..

என்று சொன்னார். அப்போது பாரிக்கு ஒரு சத்தம் கேட்டது.

ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்

அந்தச் சத்தத்தை அவன் இதுவரை கேட்டதில்லை. உடனே பாய்ந்து தோட்டத்துக்குச் சென்றான். குட்டித்தம்பி பாரி தான் இப்போது குட்டிப்பறவைக் கவனிப்பாளராகி விட்டானே!

 நன்றி - துளிர் பிப்ரவரி 2021