Saturday 31 December 2016

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

” இயற்கையின் அற்புத உலகில் ” இது ஒரு குட்டிப்பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். முல்லைக்கொடி, ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள். அந்த அதிசயத்தை ஆராய்ந்து பார்க்கிறாள். அதற்கான காரணத்தைப் பொறுமையாகக் கண்டு பிடிக்கிறாள். தான் கண்டுபிடித்த விசயங்களைப் பற்றி யோசிக்கிறாள். அப்படிக் கண்டுபிடித்த தன்னை பாராட்டிக் கொள்கிறாள். தன்னை ஒரு துப்பறியும் நிபுணராக, கண்டுபிடிப்பாளாராக, நினைக்கிறாள். எதிர்காலத்தில் இயற்கை அறிவியலாளராக உருவாகவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவாகிறது.
அப்படி என்ன கண்டுபிடித்து விட்டாள் குட்டிப்பாப்பா? வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன? பார்க்க அருவெறுப்பாகத் தெரிகிற புழுக்களின் கதை என்ன? அந்தப்புழுவே தன்னுடைய வரலாற்றைச் சொன்னால் எப்படி இருக்கும்? கட்டெறும்புகள் தங்கள் வாயில் முட்டைகளோடு ஏன் வெயிலில் காய்கின்றன? கடி எறும்புகள் ஏன் படையெடுத்து மரத்தின் வேரை நோக்கி ஓடுகின்றன? குழிபறித்து தவறி விழும் எறும்புகளைத் தின்னும் குழியானை வளர்ந்து கொம்பன் யானையாகுமா? குயில்கள் ஏன் கூடு கட்டுவது கிடையாது? காக்கைக் கூட்டில் மட்டும் குயில்கள் முட்டையிடுவதின் ரகசியம் என்ன? காக்கைகளும், கழுகுகளும், மைனாக்களும் கழிவுகளைத் தின்று சுத்தப்படுத்த யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
எத்தனை விதவிதமான உயிர்கள்! எத்தனை விதவிதமான செடிகள்! எத்தனை விதவிதமான கொடிகள்? பறவைகள்! பூச்சிகள்! விலங்குகள்! மனிதர்கள்! எல்லோருக்கும் தனித்தனியான குணங்கள்! தனித்தனியான நிறங்கள்! வடிவங்கள்! ஆகா! என்ன அற்புதம்! அனைத்தும் இயற்கையின் மாபெரும் கலைப்படைப்புகள்! குட்டிப்பாப்பா எல்லாவற்றையும் பார்க்கிறாள். உற்று நோக்குகிறாள். ஆராய்கிறாள். உண்மையைத் தெரிந்து கொள்கிறாள். எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறாள். இது தான் குட்டிப்பாப்பாவின் கதை.
நீங்கள் வாசிக்கும்போது குட்டிப்பாப்பாவோடு கூட இருப்பீர்கள். குட்டிப்பாப்பா உங்களை உடன் அழைத்துச் செல்வாள். உங்களுக்கு இயற்கையின் அற்புதங்களைக் காட்டுவாள். வாசித்து முடிக்கும் போது பெரியவர்களானாலும் சரி குழந்தைகளானாலும் சரி சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். எறும்புகளுக்கும், புழுக்களுக்கும் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் செடி கொடிகளுக்கும் கூட வணக்கம் சொல்வீர்கள். இயற்கையின் மீது அன்பு பொங்கும். அனைத்து உயிர்களைகளையும் நேசிக்கத் தொடங்கிவிடுவோம்.  நாம் வாழும் இந்தப்பூமி நமக்கானது மட்டுமில்லை என்ற எண்ணம் உறுதிப்படும். அனைத்து உயிர்களின் மீதும் நேசம் ததும்பும்.
மலையாள சிறுவர் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாளியான பேரா.எஸ்.சிவதாஸின் மற்றுமொரு உன்னதமான படைப்பு. ஏற்கனவே தமிழில் இவருடைய வாசித்தாலும் வாசித்தாலும் தீராது என்ற புத்தகம் அறிவியல் இயக்க வெளியீடாகவும், மாத்தன் மண்புழு வழக்கு புக் ஃபார் சில்ட்ரன் வெளியீடாகவும் வந்துள்ளது. இந்தப்புத்தகத்தை வெளியிடும் வானம் பதிப்பக உரிமையாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும். இந்நூலுக்கு அழகிய ஓவியங்களை வரைந்து கொடுத்த ஓவியர். ராஜனுக்கும் நன்றி.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதே  குழந்தைகள் மனதில் ஒரு மாற்றம் உருவாகும் என்பது உறுதி.
வெளியீடு- வானம் பதிப்பகம்

Thursday 29 December 2016

பிறிதொரு மரணம்பிறிதொரு மரணம் - நூல்வெளியீடுநான் இப்போது கு.அழகிரிசாமியின் கதைபெற்ற ஸ்தலமான குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பணி புரிந்து வருகிறேன். காலங்காலமாக நான் அங்கேயே இருப்பதைப் போன்ற உணர்வு தோன்றுகிறது. கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் எழுதிய வேப்பமரம் இன்னும் சலசலத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஸ்டேஷன் மாஸ்டர் குடியிருந்த குவாட்டர்ஸ் இடிந்து விட்டதென்றாலும் அதைப்பார்க்கும் போது அதிலிருந்து ரயில் வரும் நேரத்தில் கிளம்பி வருகிற ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்க்க முடிகிறது. எந்த ரயிலும் இப்போது நிற்காத குமாரபுரம் ஸ்டேஷனில் இப்போதும் பயணிகள் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். குக்குக்கூ என்று ரயில் கிளம்புகிறது. நான் பச்சைக்கொடி அசைத்து வழியனுப்புகிறேன். பயணிகளில் இரண்டு பேர் மட்டும் ஏறவில்லை. சற்று தூரத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை காவியமாக்கிய கு.அழகிரிசாமி, மற்றவர் அவருடைய உற்ற தோழர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் எங்கள் நைனா கி.ரா.. லேசான புன்முறுவல். சிறுகையசைப்பு. அவர்கள் அங்கே கிடந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இலக்கியம் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாசனை என்னுடைய அறைக்கும் வருகிறது. குருமலையின் கணவாய்க்காற்று என்னைத் தழுவுகிறது. அவர்களுடைய பேச்சின் வழியே எனக்குள் சன்னதம் பெருகுகிறது….. உடம்பெல்லாம் நடுங்குகிறது. நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.. தொடர்ந்து…….

கு.அழகிரிசாமியின் ஆவி என் விரல்களில் இறங்கிக் கொண்டிருக்கிறது…. 

( முன்னுரையிலிருந்து )

சென்னை புத்தகக்கண்காட்சியில்.....
நூல்வனம் வெளியீடு

Sunday 25 December 2016

மனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்

மனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்

உதயசங்கர்


ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும்  தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன் அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம் போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும் பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில் உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ  சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப் போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.
80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக் கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச் சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக காய் விட்டனர். புத்தகங்களுக்காகப் பழமும் விட்டனர். அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. காகிதத்தில் கற்சிற்பம் வடித்ததைப் போல மனதை விட்டு நீங்க மறுத்தது. அப்படி ஒரு புத்தக வடிவமைப்பை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல் எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஓவியர் அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார். மிகச் சாதாரணமான டெடில் பிரசில் தன் கலையாளுமையை முழுவதும் செலுத்தி அச்சிட்டிருந்தார். அப்போது வடிவமைப்புக்காகப் பரிசும் வாங்கியதாக ஞாபகம். சிற்பங்களைப் போல எழுத்துகள் மனதில் பதிந்தன. அந்த மகத்தான ஓவியர் அஃக் பரந்தாமன் நாங்கள் நடத்திய பிகாசோ நூற்றாண்டு விழா ஓவியக்கண்காட்சியைத் திறந்து வைக்க கோவில்பட்டி வந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது பயமாக இருந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட வில்லனின் அடியாட்களைப் போல முகத்தில் பாதி கிருதாவுடன் சுருட்டை முடியுடன் கருஞ்சிலையென இருந்தார். அருகில் செல்ல பயந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் ஒரு குழந்தையைப் போல பழகினார். ஓவியக்கண்காட்சி முடிந்ததும் எங்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட அவருடைய புகைப்படம் இப்போதும் மாரீஸிடம் இருக்கிறது.  ( ஆனால் இப்போது அஃக் பரந்தாமன் ஏதோ முதியோர் இல்லத்திலோ ஆதரவற்றோர் இல்லத்திலோ இருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவலைக் கேள்விப்பட்டேன்.)
வண்ணதாசனின் சிறுகதைகளை வாசிக்க வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய் இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள். வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை மாற்றி விட்டார்.. மனிதர்களிடம் எதைப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தன அவருடைய கதைகள். இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும் வண்ணதாசனின் கதைகளை நாங்கள்  கொண்டாடினோம்.
குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம் முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது. என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும், புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும், குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும், சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.
காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம் மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின் கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின் கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த என் இனிய நினைவுகள் தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.
ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன், புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின் போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும் என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள் என்றால்  வண்ணதாசன் எந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத் துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின் தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை.
மிச்சத்தில் கசக்கிப்பிழியப்பட்டு மிச்சமாய் வருகிற அவளையும் குட்டியப்பனையும் மறக்கமுடியுமா? தனுமையில் வருகிற ஞானப்பனில் நானும் ஏன் நீங்களும் கூட இருக்கிறீர்கள் தானே, தேரி மணலில் கெந்தி கெந்தி மென்மையாய் நடந்து வருகிற தனலட்சுமி மட்டுமல்ல, தடித்தடியாய் தரை அதிர நடக்கும் டெய்சி வாத்திச்சியும், வேண்டியர்வர்களாக இருக்கிறார்களே. கலைக்க முடியாத ஒப்பனையில் கோவிலில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியை மேய்த்துக் கொண்டு வரும் பாப்பா ஏன் அவனைச் சீண்டிக் கொண்டேயிருக்கிறாள்? அவனிடம் நெருக்கமாய் இருக்க எடுக்கும் முயற்சிகளால் எதை உணர்த்த விரும்புகிறாள்? பாம்பின் காலில் வருகிற சவரக்கலைஞரின் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளுமே. உல்லாசபயணத்தில் வருகிற கடைசி ஒற்றை வார்த்தையில் நம் மனம் அதிர்ந்து போகுமே… பிச்சுவும் புட்டாவும், பிரபாவும், ஆச்சியும், எத்தனையெத்தனை மனிதர்கள்? உணர்ச்சிகளின் சிகரங்களில் மனிதர்கள் எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும், ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும், அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும், என்று உலகம் இப்படியும் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? கவித்துவமான ஒற்றைவரியில் மனநிலையை உணர்த்த முடியுமா? சிலவரிக்காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் குணத்தை வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப் பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும் மனிதர்களைப் பார்க்கையில் அன்பும் கருணையும் சுரக்கும். அதன் பிறகான நம்முடைய வார்த்தைகளில் மனிதர்களின் மீதான பிரியம் பொங்கும். அஃக் பரந்தாமன் அச்சிட்ட வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தை வாசித்த பிறகு நானும் வசியத்தில் விழுந்தவனைப் போல ஆகி விட்டேன்.
82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்தில்  கிராஜூவேட் பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப் படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.
வேலை கிடைத்து வடமாவட்டங்களில் ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன் அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல், எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனக்கிடலாக இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப் போல.

எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை மீண்டும் நான் காண்பேன். அந்தக் கனவுகளைக் காண்பதற்காகவே மீண்டும் மீண்டும் வண்ணதாசனை வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!
( மீள் பதிவு )


Monday 31 October 2016

தூரம் அதிகமில்லை -நூல்மதிப்புரை

நூல் மதிப்புரை
உதயசங்கர் எழுதிய
தூரம் அதிகமில்லை
சிறுகதைகள்
பேரா.பெ.விஜயகுமார்
தமிழ்ச்சிறுகதை ஜாம்பவான்கள் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, தொடங்கி இன்று அதன் தொடர்ச்சியாக உதயசங்கர் வரை எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லாத ஊர் கோவில்பட்டி. அதிலும் உதயசங்கர் தமிழ்ச்சிறுகதை மரபை அதன் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார். சிறுகதைகள் மட்டுமின்றி உதயசங்கரின் கட்டுரைகளும் வாசகர்களை வாஞ்சையுடன் ஈர்க்கக்கூடியன. ” முன்னொரு காலத்திலே…” மற்றும் ” நினைவு எனும் நீள்நதி “ ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகளும் அவரின் காத்திரமான படைப்புகள். நிறைய மலையாளப் படைப்புகளையும் உருது எழுத்தாளர் சதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
நகைச்சுவை உதயசங்கருக்கு மிகவும் இயல்பாக கைவரப்பெற்ற வரம். எப்போதுமே உதயசங்கரின் படைப்புகளில் அவருக்கும் அவர் வாசகர்களுக்கும் இடைவெளி இருப்பதில்லை. ஆங்கில இலக்கியத்தில் சார்லஸ் லாம்ப் ( Charles lamb ) இவ்வாறு இடைவெளியின்றி எழுதிச் செல்பவர். எலியா என்ற புனைபெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் வாசகர்களுடன் மிகுந்த நட்புடன் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசிச் செல்வார். கட்டுரைகளைப் படிக்கும்போது ஏதோ அவர் நம்முடன் பேசிக்கொண்டே வருவது போல் இருக்கும். இத்தகு அநுபவமே உதயசங்கரின் கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும்போது ஏற்படுகிறது.
“ தூரம் அதிகமில்லை “ உதயசங்கரின் சமீபத்தியச் சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பில் உள்ள பதிமூன்று கதைகளிலும் பளிச்சென்று மிளிர்வது நகைச்சுவை. நடுத்தரவர்க்க மக்களின் அன்றாடப்பிரச்னைகளே கதைகளின் கருப்பொருள். அவர்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இவைகளுக்கிடையே உள்ளார்ந்திருக்கும் அன்பு, அறம், வெகுளித்தனம், என அனைத்தையும் எழுதி நிறைவு செய்கிறார்.
வீடு கட்டுதல் என்பது நடுத்தரவர்க்கத்தினரின் மிகப்பெரும் கனவு. இந்தக் கனவை நனவாக்க அவர்கள் படும்பாடு சொல்லித்தீராதது. இவர்களின் இந்த ஆசையை வளர்த்துக் கொள்ளை லாபம் அடித்து குபேரர்கள் ஆகும் ரியால்டர்கள் எனப்படும் புதுவகை வியாபாரிகள் பெருநகரங்களில் பெருகியுள்ளனர். “ நகரின் மையமான பகுதியில் வீட்டுமனை “ அல்லது “ ”நகரப்பேரூந்து நிலையத்திற்கு மிக அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பு “ என்ற இவர்களின் பகட்டான விளம்பரங்களில் ஏமாந்துபோய் மனைகளையும், குடியிருப்புகளையும் வாங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இத் தொகுப்பில் நான்கு கதைகள் இந்த அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கஷ்டப்பட்டு கட்டிய வீட்டையே காணாது தவிக்கிறார் “ தொலைந்தது “ கதையின் நாயகன். போதாததற்கு அவர் மனைவியும் இந்த வேதனை தாங்காது தன் தாய் வீட்டிற்குச் சென்று விடுகிறார். ஒரே வீட்டு மனையை ஈவு இரக்கமின்றி இருவருக்கு விற்று பணம் சம்பாதிக்கும் கும்பலால் பாதிக்கப்படும் தம்பதியரை இக்கதையில் காட்சிப்படுத்துகிறார் உதயசங்கர். “ தூரம் அதிகமில்லை “ கதையில் கருணையானந்தம் சொந்த வீடு கட்டுவதில் அதிக லாபம் இல்லை அதில் பிரச்னைகள் தான் மிஞ்சும் என்ற எண்ணம் கொண்டவன். நண்பர்களிடம் எல்லாம் “ வீடு கட்டுவதைப்போல ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட் வேறு ஏதும் கிடையாது..” என்று சொல்லி வந்தவன் தான். இருப்பினும் அவன் மனைவி சாந்தலெட்சுமி விடுவதாக இல்லை. இருவரும் ஊரெல்லாம் அலைந்து திரிந்து வீட்டுமனை வாங்குகிறார்கள். வாங்கிய மனையில் வீடு கட்டலாம் என்ற ஆசையில் இஞ்சினியர் நண்பனைக் கூட்டிக் கொண்டு போகும்போது தான் தெரிகிறது “ தூரம் அதிகமில்லை “ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வாங்கிய மனை வெகுதூரத்தில் இருப்பது. அந்த மனையில் வீடு கட்டுவதே சாத்தியமில்லை என்று சொல்லி அடுத்த இடியையும் இறக்குகிறான் இஞ்சினியர் நண்பன். பாவம் நடுங்கி ஒடுங்குகிறார்கள் தம்பதியர்கள்.
இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளின் படிப்பு அனுபவம் அலாதியானது.
வெளியீடு – கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தி.நகர்.,
சென்னை-600 017
விலை – 120/-
தொடர்புக்கு – 044-24345641Wednesday 19 October 2016

அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

அய்யாச்சாமி தாத்தாவும்
ஆட்டுக்கல் மீசையும்
மதிப்புரை
தமிழில் சிறுவர் பாடல்கள் வெளிவந்த அளவிற்கு சிறுவர் கதைகள் வெளிவரவில்லை. அப்படி வெளிவந்த ஒரு சில சிறுவர் கதை நூல்களும் ஆசிரியர்களின் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக இருக்கிறதே தவிர, சிறுவர்களின் மனதை பற்றிப் படரும் வகையைச் சார்ந்ததாக இல்லை.
சிறுவர்களுக்காக எழுதுகிறவர்கள் சிறுவர்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது; சிறுவர்களோடு இணைந்து சிந்திக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் இந்த நூல் சிறுவர்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிறப்புக்குரியதாகும்.
மலையாள எழுத்துலகில் சிறுவர்களுக்காக எழுதிக் குவித்த மாலி இந்த நூலை மலையாளத்தில் எழுத, மூலத்தின் ரசனை குறையாமல் அழகு தமிழில் பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
‘அய்யாச்சாமி தாத்தாவின் பலாமரம்’, ‘ஆட்டுக்கல் மீசை’, ‘சங்கரநாராயணனும் கிங்கர யானையும்’, ‘பல்லின் வேலை நிறுத்தம்’, ‘தாமரைப் பூவும் வண்டும்’, ‘சொர்க்கமும் நகரமும்’, ‘கொண்டையில்லாத சேவல்’, ‘அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும்!’, ‘திருடன் கொண்டுபோன நாய்க்குட்டி’, ‘ரேடியோ பல்லி’, ‘பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?’, ‘மந்திரமும் தந்திரமும்’, ‘கயிறு இழுக்கும் போட்டி’, ‘பழிக்குப் பழி’, ‘வௌவாலுக்கு நன்றி’, ‘நெருப்போடு விளையாடினால்?’, ‘ஓநாயை ஏமாற்றிய முயல்’, ‘கடல் பிரயாணத்தில் அதிசயங்கள்’ என மொத்தம் 18 கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் அமைந்திருப்பதும், குழந்தைகள் படித்துப் படித்துச் சிரித்து மகிழும் வகையிலிருப்பதும் இந்த நூலின் தனித்துவமாகும்.
இந்த நூலின் முதல் கதையான ‘அய்யச்சாமி தாத்தாவின் பலாமரம்’ என்ற கதையில் அய்யாச்சாமி தாத்தாவின் தலைமுடியும் தாடியும் வைக்கோல் நிறத்தில் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு பலாப்பழம் என்றால் கொள்ளை ஆசை. ஒருமுறை அய்யாச்சாமி தாத்தா கொட்டையுடன் பலாச் சுளையைச் சாப்பிட்டு விடுகிறார். அவருடைய வயிற்றில் அந்தக் கொட்டை செடியாக வளர்ந்து அவருடைய காது வழியாக கிளை பரப்பி மரமாக வளர்ந்து விடுகிறது. இதற்கு மேலும் இந்தக் கதையைப் படிக்கும் சிடு மூஞ்சிகள் கூட சிரிக்காமல் இருக்க முடியாது.
என்னுடைய பேத்தி யூ.கே.ஜி. படிக்கிறாள். சனியும் ஞாயிறும் மதிய வேளையில் அவளுக்கு நான் கதை சொல்ல வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவளுக்கு அய்யாச்சாமி தாத்தா காதில் பலாமரம் வளர்ந்த கதையை நான் சொன்ன போது என் பேத்தி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
சில மேதாவிகள் இப்படியெல்லாம் கற்பனை செய்து குழந்தைகளுக்கு எதார்த்தத்தைப் புரியவிடாமல் செய்யலாமா? என்பர். வயதுக்கு வந்தவர்களே சிரிப்பைத் தொலைத்துவிட்டு வாழுகின்ற காலமிது! அதனால் முதலில் குழந்தைகளைச் சிரிக்க வைப்போம்; அதன்பின் குழந்தைகளே சிந்திக்கத் தொடங்கி விடுவர்.
மனிதன் தெய்வங்களைப் படைத்தபோது பிள்ளையாருக்கு எலியை வாகனமாகவும், முருகனுக்கு மயிலை வாகனமாகவும் வைத்தானே எதற்கு? எலி பிள்ளையாரைச் சுமக்குமா? மயில் முருகனைத் தாங்குமா? என்று எந்த பக்திமானும் நினைப்பதில்லை. பக்திமான்களின் நெஞ்சங்களில் தெய்வங்களைப் பதியவைப்பதற்கு இந்தக் கற்பனை இன்றும் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே போன்று சிறுவர்கள் மனதில் கதைகளைப் பதிவு செய்ய இந்த நூலாசிரியர் கைக்கொண்டிருக்கும் யுக்தி சிறப்பானதாகும்.
சிறுவர்கள் மட்டுமல்ல; பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படிப்பதன் வழியாக தாங்கள் மறந்துபோன சிரிப்பை மறுபடியும் கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்; அதன் வழியாக சிறுவர்களின் முகங்களில் சிரிப்பைக் காணலாம்.
- பாரதி லெனின்
நன்றி-மேன்மை
அக்-16

Friday 7 October 2016

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

உதயசங்கர்

குழந்தை இலக்கியமா அல்லது சிறுவர் இலக்கியமா இதிலேயே நிறைய்யப் பேருக்குக் குழப்பம். ஏனெனில் குழந்தை என்றால் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் சிறுவர் என்றால் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நம்முடைய பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. ஆனால் இது வரை வெளிவந்துள்ள நம்முடைய குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இப்படியான எந்த விவாதங்களோ உரையாடல்களோ இல்லை எனலாம். இன்னும் சொல்லப்போனால் இப்போது தான் குழந்தை இலக்கியத்தின் மீது சிறிது வெளிச்சம் படர ஆரம்பித்திருக்கிறது. அதனால் இனிமேல் தான் விவாதங்களும் உரையாடல்களும் உருவாக வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு ஒரு நூறு புத்தகங்களாவது வெளிவந்தால் மட்டுமே ( மொழிபெயர்ப்பு நூல்களைத் தாண்டி ) அடுத்த கட்டத்தை நோக்கி சிறுவர் இலக்கியம் நகரும் என்று நம்புகிறேன். அது விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையை இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர் குழாம் அளிக்கிறார்கள்.
மனிதமனம் கதைகளால் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக இருந்தபோது கேட்ட கதைகளே அவனுடைய ஆழ்மனதில் அவனுடைய அக உலகைத் தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் தன்னுடைய குழந்தைப்பருவத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே அவன் தன் அநுபவங்களை கதைகளாகச் சொல்கிறான். சினிமா பார்க்கிறான். பத்திரிகைகள் படிக்கிறான். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை வாசித்துக் கொண்டிருக்கிறான். மனிதனுடைய மொழி அடிப்படையில் கதை மொழி. அதனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒவ்வொரு கதையாக மாறுகிறது. இந்த வெளியெங்கும் இப்படியான கதைகளே மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தக்கதைகள் தான் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால மதிப்பீடுகளையும், எதிர்காலக்கனவுகளையும் மனித மனதில் விதைத்துக் கொண்டேயிருக்கின்றன. 
குழந்தைகளின் மிக உயர்ந்த படைப்பூக்கியாகக் கதைகளே செயல்படுகின்றன. கதைகள் மீதான குழந்தைகளின் பிரியமே அவர்களிடம் எதையும் எதிர்கொள்ளும் திறனையும், நம்பிக்கையையும், அன்பையும் உருவாக்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல குழந்தைகள் கதைகளின் மீது மொய்க்கிறார்கள். கனவுகளின் வண்ணங்களைப்பூசிக் கொண்டு அவர்கள் கட்டற்ற கதையுலகில் பறந்து திரிகிறார்கள். அவர்களின் பறத்தல் எல்லையில்லாதது. கவிஞர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், அறிவொளி இயக்க செயல்பாட்டாளர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் என்று பன்முகப்பரிமாணம் கொண்ட மு.முருகேஷின் சிறுவர் கதைப்புத்தகம் ” பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும் ” என்ற நூல் அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது.  
சிறுவர் கதைப்புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் அட்டைப்படமும், வடிவமைப்பும், ஓவியங்களும் அமைவது தான். பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் நூலின் வடிவமைப்பும் கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள பனிரெண்டு கதைகளிலும் மு.முருகேஷ் புதிய மதிப்பீடுகளை குழந்தைகளிடம் உருவாக்குகிறார். சமகால சமூகச் சூழல்களுக்கேற்ப புதிய அறவிழுமியங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார்.
’ காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி “ கதையில் உருவத்தை வைத்தோ, நிறத்தைவைத்தோ, ஒருவரைக் குறைத்து எடை போடக் கூடாது என்ற மதீப்பீட்டை குழந்தைகள் மனதில் பதியும்படி சொல்கிறார் மு.முருகேஷ். கல்யாணியின் மோதிர வளையல் கதையில் பழைய முடிச்சேயானாலும் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான கதைகளை எழுதுவதின் மூலம் குழந்தைகள் தங்களின் படைப்பூக்கத்தைக் கூர் தீட்ட முடியும். எலி ராஜாவுக்குக் கலியாணம் கதையில் உள்ள கதைப்பயணம் மிகுந்த சுவாரசியமுள்ளது.  உயிர்க்குரல் கதையில் சமகால சமூகத்தில் மிக முக்கியமான விழுமியம் நிலைநிறுத்தப்படுகிறது. சில நாரைகளும் ஒரு நண்டு அக்காவும் கதை திருட்டைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றைய குடும்பத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியதை ஒரு காட்சியின் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். நாங்க நகரத்தைப் பார்க்கப் போறோம்… என்ற கதையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து அல்லல்பட்டு திரும்ப கிராமத்துக்கே போகத்துடிக்கும் எளிய உயிர்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறார். அலுவலகவேலைக்காரர்களை உயர்வாகவும் உடலுழைப்பை. தாழ்வாகவும் மதிக்கும் எண்ணம் மிகுந்த சமூகம் நம்முடைய சமூகம். இந்த மதிப்பீட்டைத் தகர்த்து நொறுக்கிறது பாதி முட்டாளும் முழுச்சம்பளமும் என்ற கதை. பறக்குது பார் பச்சோந்தி அவரவர் திறமைகளை உணர்ந்து கொள்ளச் சொல்கிறது. நான்குபங்கு திருடர்கள் பேராசையினால் ஒருவருக்கொருவர் கொன்றுவிடக்கூடிய அளவுக்குப் போவதைச் சொல்கிறது. குட்டி முயலின் சமயோசிதத்தை புதிய முறையில் விவரிக்கும் டாம் மச்சான்..டூம் ம்ச்சான் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் கதையில் வழக்கம்போல் ராஜா மூடனாக இருக்கிறது. ராஜாக்களைப் பற்றிய இப்படியான கதைகள் ராஜாக்களைப் பற்றிய கதைகள் மட்டுமில்லை என்று புரிந்து கொண்டால் கதை வேறு வேறு தளங்களுக்கு விரிவதைப் பார்க்க முடியும்.
பனிரெண்டு கதைகளில் பெரும்பாலான கதைகளில் மிருகங்கள், பறவைகளே கதை மாந்தர்களாக வந்து கதைகளை சுவாரசியமாக்குகின்றனர். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான எளிய மொழியில் எழுதியிருக்கிறார் மு.முருகேஷ். சமீபத்தில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் ஒரு காத்திரமான புத்தகமாகத் திகழ்கிறது. வாசிக்கும் குழந்தைகளின் சிறகுகள் விரியும். பப்பி பூக்களைப் போல பறந்து திரிவார்கள் கதை வானில்……….

வெளியீடு – அகநி வெளியீடு
வந்தவாசி
விலை 40/

நன்றி – புத்தகம் பேசுது அக்16

Tuesday 4 October 2016

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது என்னுடைய மாயக்கண்ணாடி சிறுவர் கதைகள் நூலுக்குக் கிடைத்துள்ளது. 
புத்தகத்தை அற்புதமாக வடிவமைத்த நூல்வனம் பதிப்பாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும் அன்பும் நன்றியும்.
நூலைத் தேர்வு செய்த தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தேர்வுக்குழுவினருக்கு மிக்க நன்றி!


Friday 16 September 2016

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்
உதயசங்கர்
கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம், இலக்கியப்புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிலிருந்தது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலை போல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும். உலகமே என் வார்த்தைகளில் இருண்டுவிடுமோ என்று பயந்துபோய் பேசாமலிருந்து விடுவேன்.
இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும், என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஓடித்திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத்துணிந்தேன். அப்போது என் பள்ளித்தோழனாகவும், கல்லூரித்தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும் அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீதுபொறாமைப்பட்டிருக்கிறேன்.
இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப் பார்க்க இடைசெவல் போகலாம் வர்றியா? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம். அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்து விட்டதா நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ரா.வைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அதற்குக் கொஞ்சம் முன்னால் அவருடைய கதவு சிறுகதைத்தொகுப்பையும் குறுநாவலையும் படித்திருந்தேன். அதைப் படித்தபோது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும் மாரீஸூம், கவிஞர் முருகனும், சென்றிருந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்துக்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பல சமயங்களில் இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்குப் பலமணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். ஓரிருமுறை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.
அவருடைய வீட்டில், அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் எழுத்தாலர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்ற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சி செய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம். பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத்தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும், பீடிகளின் அருகில் வைத்திருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையைக் கத்தரித்த பின்னால் புகைக்கத் தொடங்குவார். அதைப்பார்க்க பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.
கரிசல் வட்டாரச்சொல்லகராதிக்கான சொற்களை அகரவரிசைப்படுத்தும் வேலையை நானும், மாரீஸும், முருகனும் செய்தோம். கணவதியம்மா நாங்கள் போனதும் மணக்கும் மோரும், மதியம் சாப்பாடும், சாயங்காலம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும், தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறு யார் வீட்டிலும் நான் பார்த்ததில்லை.
சுரங்கத்தைத் தோண்டியெடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும். உரையாடல் தொடங்கிவிடும். உரையாடல் ஒரு கலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கியசர்ச்சைகள், என்று பேசிக்கொண்டேயிருப்பார். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சமவயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம்.
அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், பூமணி, கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூ நாதன், திடவை பொன்னுச்சாமி, சாரதி, அப்பணசாமி, சோ.தர்மன், முருகன், ராம், என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத்திசை வழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கியவாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம்..விவாதம்… விவாதம்.. கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக்கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கியவட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கியது. இதெற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களில் பங்கெடுத்ததில்லை. இலக்கியக்கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதும் இல்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததும் இல்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச்சூழலுக்குப் பின்திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை எல்லோரிடமும் சொல்லிச் சிலாகித்தார். எங்களின் தார்மீக பலமாக அவர் இருந்தார். இத்தனைக்கும் விமரிசன விவாதங்களில் நாங்கள் அவரை விட்டு வைத்ததும் இல்லை.
அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாகத் தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல்மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டார இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறையான விமரிசனங்கள் வந்த போதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.
பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட,  மக்களின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினா தான். இன்று வட்டாரமொழி இலக்கியம் இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச்செயல்பாடுகளே காரணம். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனியாக நின்று செய்தவர். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச்சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.
பலசமயங்களில் நானும் மாரீஸும் பேசிக்கொள்ளும்போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும். இடைசெவல் சென்று வந்ததைப்பற்றி, நயினாவைப்பற்றி, கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வெவ்வேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான ஒரு நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்துக்கு ஒரு எழுத்தாளர் தாலி எடுத்துத் தர வேண்டும் என்று தோழர்கள் பேசி முடிவு செய்தார்கள். உடனடியாக எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கை தட்டி கலியாணம் என்று பெயர்பெற்ற என் திருமண புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். எழுத்திற்கும் எனக்கும் இன்று வரையிலான உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
எண்பத்தியைந்து வயதைக்கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்துக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்றால் மிகையில்லை. மாரீஸிடம் நான் சொன்னேன்,
“ நயினாவை அவருடைய நூறாவது வயதில் சென்று பார்க்க வேண்டும்..”
அதற்கு அவர் சொல்கிறார்,
“ அதென்ன பிரமாதம்! அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்..”
உண்மை தானே!
( பத்து வருடங்களுக்கு முன்பு முன்னொரு காலத்தில் நூலில்

நான் எழுதிய கட்டுரை.)
 

அய்யாச்சாமித்தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

குழந்தமையின் மாயாஜாலம்
உதயசங்கர்
பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.
இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.
குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
மற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் குழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.

குழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.
( முன்னுரையிலிருந்து..)

Tuesday 2 August 2016

சிறுவர் இலக்கியம் - இரண்டு நூல்கள் வெளியீடு

பறந்து பறந்து
சி.ஆர்.தாஸ்
தமிழில்-உதயசங்கர்
வெளியீடு-வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 9176549991

பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள். ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப்பருவத்தையே கனவாகக் காண்பவர்கள். படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால், அவற்றைச் செயல்படுத்த முடியுமானால், இந்த உலகமே வண்ணமயமான கனவாகி விடும். குழந்தைகளின் உலகில் மாயாஜாலங்களே நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் ஒரு தீப்பெட்டியை பஸ்ஸாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்கள். நான்கு தீப்பெட்டிகள் சேர்ந்தால் அதுவே ரயிலாக மாறிவிடும். பார்க்கிற அனைத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி போலச்செய்து பார்க்கிறவர்கள். பெற்றோர்களும் கல்விமுறையும் எவ்வளவுதான் அவர்களை வசக்கினாலும், மூளைச்சலவை செய்தாலும் தங்கள் குழந்தைமையை, படைப்பூக்கத்தைத் துளிர் விடச்செய்யும் மந்திரம் தெரிந்தவர்கள்.
முன்னுரையிலிருந்து...
மரணத்தை வென்ற மல்லன்
உரூபு
தமிழில் - உதயசங்கர்
வெளியீடு- வானம் பதிப்பகம்
தொடர்புக்கு-9176549991

யதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க, அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களே மாயச்செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. மாயாஜாலங்களை மனம் நம்புகிறது. நம்பவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அயதார்த்தமும், மாயஎதார்த்தமும் குழந்தை மனதின் விளைவே. குழந்தைகளே மாயாஜாலங்களின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தமையை இழந்து விடாத பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச்சிறகுகளைப் பூட்டி அவ்வப்போது தங்கள் குழந்தமைவானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.
முன்னுரையிலிருந்து..

தீராத்தனிமையை எழுதித் தீர்த்த ஒற்றைக் கலைஞன் உதயசங்கர்

தீராத்தனிமையை எழுதித் தீர்த்த ஒற்றைக் கலைஞன் 

உதயசங்கர்
-    பவா செல்லதுரை

அது அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டதொரு இன்லேண்ட் லெட்டர். இதற்கு மேல் வார்த்தைகளைச் சுருக்கிவிட முடியாது.
 “அன்புமிக்க பவா,
நான் உதயசங்கர், இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உதவி நிலைய அதிகாரியாக வேலை கிடைத்து உங்கள் ஊருக்கருகே வேளானந்தல் ரயில்வே ஸ்டேஷனில் ஒத்தையில் நிக்கேன். உங்களைச் சந்திக்க வேண்டும். நேரம் வாய்த்தால் ஸ்டேஷனுக்கு வாங்க
கடிதத்தை எப்போதும் போல் இரண்டு மூன்றுமுறைப் படித்தேன். அடுத்தநாள் மதியம் நானும் கருணாவும் தனித்தனி சைக்கிள்களில் ரயில்வே தண்டவாளத்தின் வழியே ஒதுங்கிக்கிடந்த மண்சாலையில் இறைந்து கிடந்த ஜல்லிக்கற்களை உரசியவாறே வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கிப் போனோம். கற்களின் உரசல் ஜாலியான மனநிலையைக் கொடுத்தது.
பெரும் மரங்கள் அடைகாத்த பேய்ப் பங்களா மாதிரி அப்பழைய கட்டிடம் திப்பக்காட்டின் ஒரு பக்கமாக நின்றிருந்தது. சீமை ஓடுகள் சரிந்து கிடந்த ஊழியர்களுக்கான குவார்ட்டஸ்கள் பாம்படையும் புற்றுகளாகியிருந்தன.
கொஞ்சம் சுமாரான ஒரு வீட்டின் பழைய சிமெண்ட் தரையில் பாய்விரித்து, கையை தலையணையில் ஊன்றி குள்ளமான ஒரு மனிதர் படுத்துக்கொண்டே படித்துக் கொண்டிருந்தார். கதவு திறந்தேதான் கிடந்தது.
‘‘நான் பவா’’ எனத் துவங்கும் முன்,
‘‘தெரியும் வாங்க, இது கருணாதானே’’ என அறிமுகத்தை வெகு சுலபமாக்கிக் கொண்டார்.
பாதியில் மூடிவைக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன்.
தாஸ்தாவேஸ்கியின்குற்றமும் தண்டனையும்இத்தனைப் பெரிய புத்தகத்தை தனிமையில் படிக்க வாய்ந்திருந்த கணமே என்னைக் கொஞ்சம் பொறாமைப்படுத்தியது.
அப்போது நாங்கள், கலை இரவு, இலக்கியக்கூட்டம், நாடகம், போஸ்டர், போராட்டம், என அலைந்து, திரிந்து வாசிப்பை இரண்டாவதாக வைத்திருந்த நாட்கள்.
அவர் கோவில்பட்டியின் இலக்கியச் சூழல் பற்றிப் பேச ஆரம்பித்தார். எந்நேரமும் நாங்கள் ஓடிவிடக் கூடுமென நினைத்தோ என்னமோ எங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டே பேசினார்.
வாத்தியார் ராமகிருஷ்ணன் (க்ருஷி) தமிழ்ச்செல்வன், கோணங்கி, தேவதச்சன், சாரதி, அப்பணசாமி, நாறும்பூநாதன், திடவை பொன்னுசாமி என சென்ற அவர் பேச்சு ஒரு ஊரில் இத்தனை படைப்பாளிகளாவென ஆச்சர்யபட வைத்தது.
நைனாதான் எங்க எல்லோருக்குமே முன்னத்தி ஏர். அழகிரிசாமியும், புதுமைப்பித்தனும் அதற்கும் மேலேநான் சராசரிக்கும் மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்த அந்த ரயில்வே குவார்ட்டர்ஸின் சுவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் கறுப்பு வெள்ளையிலான ஒரு சின்னப் புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. பழைய கல்யாண போட்டோக்களைச் சட்டமிடும் பிரேமில் சிறு கண்ணாடியிடப்பட்டிருந்தது. எங்கள் பேச்சை மீறி அப்புகைப்படம் என்னை வசீகரித்தது.
தரைப் படுக்கைக்கருகே பிரிந்து படித்தும் படிக்காமலும் பத்திருபது இன்லேண்ட் கடிதங்கள் பரப்பி வைக்கப்பட்ட மாதிரியிருந்தன. எழுதப்படாத ஐம்பதுக்கும் மேற்பட்ட இன்லேண்ட் கடிதங்கள் ஒரு பெரிய புத்தகத்தின் நடுவில் துருத்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
உதயசங்கர் என் கவனிப்பை நுட்பமாய் யூகித்து,
இது  நண்பர்களுக்கு எழுத
கூட படிச்சவன், கவிஞன், எழுத்தாளன், என்னை இருமுறை நிராகரித்தவள் என பெயர் ஞாபகம் வரும் எவருக்கும் கடிதம் எழுதுவேன். இத்தனிமையை இப்படி மட்டுமே கரைத்துக் கொள்கிறேன்.
நாங்கள் ஒரு சராசரியான மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது. எப்போதும் மனித நெரிசலில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எனக்கும் கருணாவுக்கும் இம்மனிதனின் தனிமை வியப்பளித்தது.
எங்கள் உரையாடல் நீண்டு கொண்டேயிருந்தது. சூரியனின் மறைவு அறையிலிருந்த எங்கள் மூவரையும் வெளியே வரவழைத்தது. தண்டவாளத்திற்கு எதிர்ப்புறம் முழுக்கக் காடு. ஒரு ரயில் போகுமளவிற்கு மட்டுமே இடைவெளி. தூரத்தில் யாரோ சில பெண்கள் தலையில் விறகுச்சுமையோடு கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தார்கள்.
பெருமரங்களினூடே எழுந்த காற்றின் சப்தம் பழக்கப்படாதவர்களைப் பயமுறுத்தும். எங்கள் இருவரையும் பயமுறுத்தியது. உதயஷங்கர் பழக்கப்பட்டிருந்தார்.
என் நினைவு சரிதானெனில் அன்றிரவு அவருடனேயே படுத்துறங்கினோம். எங்கே உறங்கினோம்? பின்னிரவு வரை பேசிக் கொண்டிருந்தோம். அதிகாலையின் குளிர் காற்றினூடே அவரோடு கை குலுக்கியபோது நேற்றிலிருந்து என்னை வசீகரித்த அப்படத்தை காட்டி,
‘‘இது யார் சங்கர்?’’ எனக் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா, காலமாயிட்டாரு, பேரு விருத்தாச்சலம்’’ என சிறு புன்னகை உதட்டோரம் ஒதுங்க உதயசங்கர் சொல்லி, எங்களை சைக்கிள் மிதிக்க அனுமதி தந்தார்,
வீடடைந்ததுமே அவர் சொன்ன புத்தகங்கள், அவர் பேச்சில் தெறிந்த சிறு பத்திரிகைகள், அவர் பார்த்த திரைப்படங்கள் என தேட ஆரம்பித்தேன்.
அப்போதுசுபமங்களாவை கோமல் பொறுப்பேற்று புதுப் பொலிவோடு நடத்த ஆரம்பித்திருந்தார். மூலக்கடை சௌந்தர் கடையில் காத்திருந்து அதை வாங்கிக் கொள்வதுண்டு. ஆர்வத்தை வீடு வரை கொண்டு போக முடியாத அவசரத்தில் அங்கேயே பிரித்துப் பக்கங்களைப் புரட்டுவேன்.
ஒரு முழுப்பக்கத்தில் நேற்று உதயசங்கரின் குவார்ட்டர்ஸில் பார்த்த அவர் சித்தப்பாவின் படம் பிரசுரமாகியிருந்தது. படத்திற்கு கீழே விருதாச்சலத்திற்குப் பதில் புதுமைப்பித்தன் என அச்சாகியிருந்தது. என் குழப்பத்தைத் தீர்க்க தொலைபேசியில்லை. அன்றும் மதிய வெயிலில் வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கி தனியாளாக சைக்கிள் மிதித்தேன். நான் ஸ்டேஷனை அடைந்தபோது ஷங்கர், ஒயிட் அண்ட் ஒயிட் சீருடையில் கையில் ஒரு பச்சைக் கொடியோடு ஏதோ ஒரு ரயிலின் வருகைக்காக, தென்பக்கமாய்ப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்.
நான் அவரருகில் நின்று மூச்சு வாங்கியதைக் கூட உணராமல் வெகுதூர ரயில் சத்தத்திற்கு தன் காதுகளை ஒப்படைந்திருந்தார்.
மிகுந்த இரைச்சலோடு ஒரு ரயில் நிற்காமல் எங்களை கடந்து போனது. நான் காதுகளில் கை வைத்து கொஞ்சம்பாவ்லாகாட்டிக் கொண்டேன்.
நிறைவின் ஆசுவாசத்தோடு திரும்பி ஸ்டேஷனுக்கு போகையில் நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.
சம்பிரதாயங்களோடு சில கடமைகளைச் செய்து முடித்து, வேறு யாரிடமோ எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு,  ‘குவார்டர்ஸ்க்கு போலாமா?’ என என் முகத்தை ஏறெடுக்கையில்தான் அவர் முகத்தின் ஓரத்தில் ததும்பி நின்ற ஒரு குறும்புப் புன்னகையைக் கவனித்தேன்.
‘‘அப்புறம்?’’
‘‘இது யார் சங்கர்?’’ என நேற்றைய கேள்வியை மறுபடியும் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா’’
‘‘பேரு’’
‘‘விருத்தாச்சலம்’’ நேற்றைய நிதானத்தோடேயே அவர் சொன்னார்.
 ‘‘இல்ல, புதுமைப்பித்தன்’’ இது கோபமேறிய நான்,
அவர் வாய்விட்டு சிரித்தார்.
நான் கொடுத்த சுபமங்களாவைப் பார்த்துக்கொண்டே,
விருத்தாச்சலமும், புதுமைப்பித்தனும் ஒருத்தர்தான் பவா, புதுமைப்பித்தனை தெரியாம நீயெல்லாம் கதை எழுத ஆரம்பிச்சிட்டே என்ற வார்த்தைகளில்தான் திருநவேலிக் குசும்பை முதன்முதலாய்க் கேட்டேன்.
பதிலுக்கு நானும் சிரித்துக் கொண்டேன். அன்றிரவு அவரிடமிருந்து வாங்கிவந்த என்.பி.டி. வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியும் உதயசங்கர் என்ற சிறுகதையாளனை நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்ட விதத்தை சொல்லலாம்.
இந்த மத்தியான நேர சைக்கிள் பயணங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கையில் அவரின் முதல் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்சென்னை புக்ஸ் பாலாஜியால் கொண்டுவரப்பட்டது.
களச் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள்தமுஎசவின் நிகழ்வில் ஒன்றாய் அதற்கான வெளியீட்டு விழாவை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரீப்பர் பட்டைகள் உடைந்த அதன் நீண்ட ஹாலில் ஏற்பாடு செய்தோம்.
நிகழ்ச்சியை நடத்தி முடிக்க இரண்டாயிரம் செலவாகும். புத்தகம் எழுதின உதயசங்கரின் ரயில் வரும்வரை காத்திருந்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு நிதி வசூலுக்கு அலைவோம்.
ஐம்பது ரூபாய் கொடுக்கும் ஆள் கடவுள். கடவுள் எப்போதும் எங்கள் கைகளுக்கு அகப்பட்டதேயில்லை.
எழுத்தாளர். . தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட தோழர் ஆரோக்கியசாமி அதைப் பெற்றுக்கொண்டு பேசினார். அந்த நிகழ்விற்கு இரண்டு மூன்று நாட்களுக்குமுன் இரவில்தான் அத்தொகுப்பை முழுவதுமாய்ப் படித்து முடித்தேன். தாங்கிக்கொள்ள முடியாததொரு மௌனத்தில் கிடந்த நான், அடுத்த நாள் அத்தொகுப்பில்  ‘ஒரு பிரிவுக் கவிதைஎன்றொரு கதை படித்தேன். கதையென்றா சொன்னேன்? இல்லை. ஒரு மிக நீண்ட கவிதை அது. கவிதையிலான உரைநடையென்றும் சொல்லலாம்.
ஆனந்த், சேது, அவள்.
ஆனந்த் அவள் கணவன், சேது அவள் காதலன் மூவரும் ஆளரவமற்ற அந்த ரயில்வே நிலையத்தில் எப்போதோ வரப் போகிற ஒரு ரயில் வண்டியை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.
மௌனத்தால் மட்டுமே கதை நகரும். உரையாடல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதொரு புனைவு அது.
சேதுவை ரயிலேற்ற ஆனந்தும் அவளும் நிற்பார்கள். அவர்களுக்கான ஒரு தனிமையை உருவாக்க வேண்டி  ஆனந்த் தூரத்திலிருக்கும் ஒரு பெட்டிக்கடையை நோக்கி சிகரெட் வாங்க போவான்.
அவனின் இச்செயல் அவளுக்கு அருவெறுப்பூட்டும். ஆனாலும் அந்நிமிடத்திற்கே காத்திருந்தது போல் அவர்களிருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் மேலெழும். தொட்டால்இல்லையில்லைபெயர் சொல்லியழைத்தாலே அழுதுவிடுவது போலிருப்பாள் அவள்.
அவர்கள் மூவரின் உலகத்தில் இதற்கும் மேல் ஒரு அங்குலமும்  என்னால் நுழைய முடியாது. நீங்கள் வேண்டுமானால் முயன்று பாருங்கள்.
டிகிரி படித்து முடித்து வேலைகிடைக்காமல் அலைக்கழிப்புகளும் அவமானங்களும் நிறைந்த முதல் பத்தாண்டுகளின் துயர வடுவை இன்னமும் உதயசங்கர் நடுநெஞ்சில் தடவிப்பார்த்துக் கொள்கிறார். எழுதியெழுதித் தீர்த்த பின்னும் அது வளரும் புற்றாக எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
.நா.சு. தான் இறப்பதற்கு முன் தினமணியின் நடுப்பக்கத்தில் தமிழ் சிறுகதைச் சூழலைப்பற்றி எழுதின ஒரு முக்கியமான கட்டுரையில், நம்பிக்கையளிக்கும் இரு சிறுகதைத் தொகுப்புகளென உதயசங்கரின் யாவர் வீட்டிலும்ஐயும் கௌதம சித்தார்த்தனின்  ‘மூன்றாவது சிருஷ்டியையும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இலக்கியச் சூழல் எப்போதும் இருவேறு துருவங்களாகவே பிரிந்து கிடந்திருக்கிறது. ஒன்று முற்றிலும் வெகுஜன வாசிப்பு சார்ந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என அது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு இவர்களின் படைப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தது.
கோபிகிருஷ்ணன், சம்பத், பாதசாரி, ஆத்மநாம், பிரமிள் என சிறுபத்திகைகளை மட்டுமே நம்பி எழுதின படைப்பாளிகள். இரண்டாம் வகை.
கந்தர்வன், உதயசங்கர், தமிழ்செல்வன், வேலராமமூர்த்தி, லட்சுமணபெருமாள் மாதிரியான அலாதியான படைப்பாளிகள், இவை இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டவர்கள்.
எப்போதும் மழைநிழல் பிரதேசவாசிகள் இவர்கள். இரு தரப்பு வாசகர்களும் தவறவிட்ட பெரும் படைப்புகளை வெகுகாலம் கழித்து இப்போதுதான் தமிழ்ச்சூழல் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது காலம் கடந்த கவனிப்பு. ஆனால் படைப்புகளுக்கு ஏது காலம்? அது எப்போதுமே சாகாவரம் பெற்றவைகளே. பொருட்படுத்தாமை நம் துரதிஷ்டமே.
ஆனால் இது அவனைப் பற்றி என்றொரு குறுநாலை உதயசங்கர் எழுதியிருக்கிறார். ‘ஆட்டோகிராப் என்ற சேரனின் திரைப்படம் அக்கதையின் சாரம்தான்.
ஒரு மனிதனின் மொத்த ஜீவிதத்தில் குறைந்தது ஆறேழு பெண்கள் வந்து போய்விடுகிறார்கள். ஓரிருவர் தங்கி விடுகிறார்கள்.
கோலம் போட்டு அதைக் கவனிக்கும் கண்களைச் சந்தித்துப் பிரியும் ஒரு கணம் வந்துபோன கோமதியோ, எதேச்சையான ஒரு சந்திப்பில் விடுதியறையில் தங்க நேரிடும் சங்கரியாகவோ, வாழ்நாளெல்லாம் கடிதமெழுதி, ரத்தக் கையெழுத்திட்டு ஒரு மாலையில் சொல்லாமல் பிரியும் வசந்தியாகவோ அப்பெண்கள் நம் வாழ்வைத் தீண்டிச் செல்லும்தீ ஜுவாலைகள்.
உதயசங்கர் தன் குறுநாவலில் அவர்களை அத்தனை அழகாக வரிசைப்படுத்தியிருப்பார்.
சில எழுத்தாளர்கள் அவர்களின் ஆக சிறந்த கதை ஒன்றின் பெயரின் அடைமொழியோடே அழைக்கப்படுவதுண்டு.
சாயாவனம், சா.கந்தசாமி, கோவேறு கழுதைகள், இமயம், இடைவெளி சம்பத், மனர்குடம் மாதவராஜ் இப்படி பெரு நாட்கள் உதயசங்கரும், சக மனிதன் உதயசங்கர் என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.
இரவு கடைசி டவுன் பஸ்ஸில் ஒரு அலுவலக ஊழியனும், ஒரு சம்சாரியும் பயணிப்பார்கள். அரசு ஊழியன் அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் மறதியில் பேண்ட் பாக்கெட்டில் கிடந்தது.
இன்னொருவேன் சம்சாரி, மளிகைக் கடைக்காரனுக்கு தரவேண்டி எடுத்து வந்த ஐநூறு ரூபாய், மளிகைக் கடை பூட்டியிருந்தால் பையில் இருந்தது.
எதேச்சையாக இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அமர நேர்கிறது.
இருவருமே ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர். சம்சாரியின் முகத்திலிருந்த வெட்டுத் தழும்பு அவன் பாக்கட் அடிப்பவனேயென அரசு ஊழியனை நம்ப வைக்கும்.
எதுவுமே நேராமல் பஸ் பயணம். சகமனிதர்களை சந்தேகப்படும் படியானதொரு உலகில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது.
ஒரு நிறுத்தத்தில் இருவருமே இறங்கிக் கொள்பார்கள்.  வாழ்வு ஆளுக்கொரு திசைக்கு அவர்களை செலுத்தும். கொஞ்ச தூரம் நடந்து போய் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொள்வர்கள். எப்படியானதொரு குரூரமான சமூக விளிம்பில் சக மனித அன்பு சிக்கித் தவிக்கிறது!
உதயசங்கரின் எல்லாக் கதைகளுமே எளிமையும், சிடுக்கல் இல்லாதவைகளும்தான். அது தெளிந்த நீரில் விழும் நாணயத்தைப் போல் நம் கண்ணெதிரே தரையைத்தொடும்.
உதயசங்கரின் மாஸ்டர் பீஸ் கதை ஒன்று உண்டு. ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் ஒவ்வொரு படைப்பாளியையும் தன் வாழ்நாளில் லௌகீக நச்சரிப்பு இப்படி ஒரு கதை எழுத வைத்திருக்கிறது.
கந்தர்வன் தன் ராமன் சாரை முதல் பென்ஷன் பணத்தில் புல்புல்தாரா வாங்க வைத்ததும்,
தமிழ்செல்வன் கருப்பசாமியின் அய்யா இசக்கிமுத்துவை சதுரம் சதுரமாய் இட்லி சுட வைத்ததும்,
நான் என் ஏழுமலையை பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் பழக்கூடை சுமக்க வைத்ததும்,
உதயசங்கர் தன் டேனியல் பெரியநாயகத்தின் தூசடைந்து மூலையில் கிடக்கும்  புல்லாங்குழலை தன் மகனே எடுத்து அப்பாவை வாசிக்க சொல்வதும் தற்செயலானவைகள் அல்ல.
ஒரு சமூகம் கலைஞர்களிடம் காட்டும் குரூரம் அது. அச்சமூக வாழ்வியலைக் கூர்ந்து அவதானிக்கும் ஒரு படைப்பாளி, பிரதேசங்கள் மாவட்டங்களைத் தாண்டி தன் அசலான மனிதர்களை படைப்பாக்குகிறான். அப்படித்தான் கலைவயப்பட்ட கலைஞர்களை லௌகீகமும், அரசும் புதைகுழியில் நெட்டித்தள்ளுவதை இவர்கள் எல்லோருமே படைப்பாக்கியிருக்கிறார்கள்.
டேனியல் பெரிய நாயகத்தின் மகன் ஏசுராஜைப் போல சில மகன்கள் மட்டும் அதிசயமாக புதைகுழியிலிருந்து மீள அப்பாக்களுக்கு தங்கள் பிஞ்சுக் கரங்களை நீட்டுகிறார்கள்.
உதயசங்கர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் எழுத்தாளனில்லை. கரிசல் மண்ணிலிருந்து எழுதத் துவங்கியிருப்பினும், பணி நிமித்தம் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வு வேர்பிடிக்க ஆரம்பிக்கையில் வேறொரு இடத்தில் பிடுங்கி நடப்பட்டவர் அவர். அதனாலேயே அவர் படைப்பு முழுவதையும் பொதுவான மனித மனங்களே ஆக்ரமித்துக் கொள்கின்றன.
ஒரு பிரிவுக் கவிதைடேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்பெயிண்டர் பிள்ளையின் ஒருநாள் காலைப் பொழுதுபூனை வெளி ஆகிய நான்கு கதைகளும் வேறு எவராலும் எழுதிவிட முடியாத அசாத்திய படைப்புகள். இந்த உயரத்தை அடைவதற்கே ஒவ்வொரு படைப்பாளியும் தன் ஜீவிதம் முழுக்க எழுதியெழுதித் தீர்க்கிறான். உதயசங்கர் மிக எளிமையாக இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதே நம் பெருமிதங்களில் ஒன்று.
வேளானந்தல் ஸ்டேஷனுக்கு பக்கத்து ஸ்டேஷன் தண்டரை. இதுவும் திப்பக்காட்டின் தென்பக்க நீட்சிதான். அதுவும் எப்போதாவது பயணிகள் வந்து போகும் ஒரு ரயில் நிலையம்தான். திருச்சூரிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மலையாள இலக்கியமறிந்த வெங்கடேஸ்வரன் அதன் ஸ்டேஷன் மாஸ்டர்.
சற்று நின்று கிளம்பும் ரயிலில் அவர் ஏறி பக்கத்து ஸ்டேஷனில் உயிர்ப்புடன் இயங்கும் இன்னொரு படைப்பாளியோடு எப்போதும் தன் இலக்கிய, அரசியல் உரையாடலைத் துவக்குவார். இருவருக்குமே மார்க்சியம்தான் அடிப்படை.
அவர் பஷீரை சொல்லும்போது, பதிலுக்கு இவர் ஜி. நாகராஜனை அறிமுகப்படுத்துவார். இப்படித்தான் உதயசங்கர் மலையாளம் கற்று, தேர்ந்து, பல மலையாளக் கதைகளை தமிழ்ப்படுத்தினார். இது இன்னொரு மொழியின் மீதுள்ள பற்று மட்டுமல்ல. வெறி. அம்மொழியைக் கற்று அந்த இலக்கியங்களை அதன் சொந்த வாசனையோடு முகர்ந்துவிட வேண்டுமென்ற அதீத ஆர்வம். அதையும்கூட வேளானந்தல் ஸ்டேஷனின் பிடுங்கித் தின்னும் தனிமையே அவருக்குக் கற்றுத்தந்தது.
தோழர் வெங்கடேஸ்வரன் கடைசிவரை கற்றுக் கொடுப்பவராக மட்டுமேயிருந்தார். கற்றுக் கொள்ளவேயில்லை. இருந்திருந்தால் பல நல்ல தமிழ்ப் படைப்புகள் மலையாளத்திற்குப் போயிருக்கும்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பாடல், ஓமியோபதி மருத்துவம் என உதயசங்கரின் உலகம் விரிந்து கொண்டேயிருக்கிறது. இது ஒரு வகை அசாத்தியம்தான். ஆனால் என் பார்வையில் சிறுகதைகளில்தான் உதயசங்கர் வேறொரு உயரத்தை எட்டியிருக்கிறார். இயற்கையாகவே இதன் அடுத்த பரிணாமம் நாவல். அவருக்கமைந்த மொழியிலேயே கரிசல் நிலப்பரப்பைத் தாண்டி முப்பது வருடங்களுக்கும் மேலாக அலைக்கழித்த அவர் வாழ்வையும், சந்தித்த மனிதர்களையும், கவித்துவத்திற்கு வெகு அருகாமையில் அமைந்த அவர் மொழியில் எழுத வேண்டி ஒரு பெரும் நாவல் அவருக்கெதிரே அரூபமாய் நிற்பதாகவே தோன்றியது.
கோபல்லபுரம் போலவோ, நீலகண்டபறவையைத் தேடி போலவோ ஒரு பெரும் வாழ்வை எழுதுவதற்கான வலுப்பெற்ற கலைஞன்தான் உதயசங்கர் என்ற ஐந்தடிக்கும் குறைவான அந்த மனிதன்.
நான் அவர் வலைப்பக்கத்தை எப்போதும் பார்ப்பதில்லை. முகநூல் பக்கம் போனதில்லை. இந்த சாதரணங்கள் முப்பது வருடங்களுக்கு முன்பான எங்கள் தோழமையை அழித்து விடக்கூடும் என்ற அச்சம் உள்ளூரக் காரணமாயிருக்கலாம்.

மழையில் நனைந்து, வெயிலைக் குடித்து வேளானந்தல் ரயில் நிலைய அகன்ற தண்டவாள வெளிகளில் பேசித் தீர்த்த பல மணி நேர ஈரம் மிகுந்த உரையாடல்கள் மட்டும் போதும் எனக்கு.
நன்றி - செம்மலர் ஆகஸ்ட் 2016