Friday 16 September 2016

அய்யாச்சாமித்தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

குழந்தமையின் மாயாஜாலம்
உதயசங்கர்
பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.
இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.
குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
மற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் குழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.

குழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.
( முன்னுரையிலிருந்து..)

1 comment: