Sunday 31 May 2015

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா


காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
உதயசங்கர்

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. ஆனால் இந்து மதம் மனித உடல் நிலையற்றது மனித உடல் தூய்மையற்றது. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயு,.என்ற தூய்மையின்மைகளால் அழுக்கானது. அழியக்கூடியது,  ஆன்மாவே பரிசுத்தமானது நிலையானது, அழியாதது என்று கூறுகிறது. அதனால் அழியும் உடலை உதாசீனப்படுத்துகிறது. ஆனால் காந்தி தன்னுடைய அரசியல் போராட்டங்களுக்கும், ஆன்மீகப்போராட்டங்களுக்கும் தன்னுடைய உடலையே ஆயுதமாக்கியதன் மூலம் இந்து மதக்கோட்பாட்டை மீறினார். அகிம்சை, உண்ணாவிரதம், பிரம்மச்சரியம், என்ற ஆயுதங்களைக் கொண்டே தன் வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டார். இந்த மூன்று ஆயுதங்களுக்கும் அடிப்படையான கச்சாப்பொருளாகத் தன்னுடைய உடலையே அவர் எடுத்துக் கொண்டார். இதில் அகிம்சையும் உண்ணாவிரதமும் அவர் சமூகவெளியிலும், அரசியல்வெளியிலும் பயன்படுத்திய ஆயுதங்கள் என்றால் அவருடைய அகவெளியின் ஆன்மபரிசோதனையாக பிரம்மச்சரியம் என்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்தினார்.
அவருடைய தத்துவப்பார்வையையும் தன் உடல் மூலமாகவே வெளிப்படுத்தினார்.  ஆன்மாவின் அழுக்கை ஆன்மரீதியிலான சமர்ப்பணம் மோட்சம் மூலமாகவே நீக்க முடியும். உடல் நிலையற்றது என்பதால் ஆன்மாவை சுமந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பயன்படாதது என்று சொல்கிற பிராமணிய இந்துத் தத்துவத்திலிருந்து காந்தி மாறுபட்டார். காந்தி உடலைப் போற்றினார். ஒவ்வொரு ஆன்மாவை வெளிப்படுத்துவது உடலே. எனவே உடலைச் சுத்தப்படுத்துவதன் மூலம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த முடியும் என்றார்.
அவருடைய அரசியல்வெளியில் காந்தி பயன்படுத்திய அகிம்சை என்ற ஆயுதத்திற்கும் இந்து மதத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏனெனில் இந்து மதம் என்றுமே அகிம்சையை கடைப்பிடித்ததில்லை. வன்முறையை நியாயப்படுத்துகிற, ஆதரிக்கிற மதம் இந்து மதம். பகவத்கீதை முழுவதும் வன்முறையினை நியாயப்படுத்துகிற தன்னை நிலைநிறுத்திக் கொள்ள யாரை வேண்டுமானாலும் சகோதரர்களாயினும் கொலைபுரியத் தயங்கக்கூடாது என்று அறிவுரைகள் கொட்டிக் கிடக்கும் ஒரு இடைச்செருகல் தான் பகவத்கீதை. காந்தி பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். அதை ஆன்மீகதளத்தில் நன்மை தீமைகளுக்கிடையிலான போராக உருவகித்திருக்கிறார். ஆனால் பிராமணீயஇந்துமதத்தின் பார்வையில் பின்பற்றியதில்லை. மாறாக ஜைன மதத்திலிருந்தே அவர் அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார். அதை மதம் சார்ந்த அறமாகப் பயன்படுத்தவில்லை. மதச்சார்பற்ற போராட்ட வடிவமாக மாற்றினார். அதனால் தான் அனைத்து மதங்களையும் சேர்ந்த கோடானுகோடி மக்கள் அகிம்சை கொள்கையைப் பின்பற்றினர். அடக்குமுறை ஆயுதங்களினால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தை நிராயுதத்தின் மூலம் எதிர்கொண்டார். இந்த நிராயுதத்தன்மை ஆங்கிலேயரின் தார்மீக அறத்தை கேள்விக்குள்ளாக்கியது. இந்தத் தார்மீக அறநெருக்கடியைத் தருவதற்கு தன்னுடைய உடலையே களமாகக் கண்டார்.
அதே போல மிகச்சாதாரணமாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக வீடுகளில் எல்லோரும் செய்கிற உண்ணாவிரதப்போராட்டத்தை பொதுப்போராட்டமாக மாற்றியது காந்தியின் படைப்பூக்கமே. இதுவும் தன் நியாயத்திற்காக நடத்துகிற அறப்போராட்டமே. தன் உடலினை வதைப்பதன் மூலம் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களிடமும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தினார். மனிதகுல வரலாற்றில் சகமனிதர்களிடம் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதில் இயேசுவுக்குப் பிறகு காந்தியே மிகச் சிறந்தவராக விளங்கினார்.
1857- ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க்கலகம் என்று சொல்லப்பட்ட முதல் சுதந்திரப்போராட்டத்திற்குப் பிறகு இந்திய தேசிய எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் உட்கூறுகளில் ஒன்றாக பிராமணிய எழுச்சியும் நிகழ்ந்தது. இந்தப்பிராமணிய எழுச்சி இந்து மத ஆன்மீகமரபை காலனிய அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டமைத்தது. வேதகால மரபை மீட்டெடுக்க அறைகூவல் விடுத்தது. சமஸ்கிருத மொழியினால் தான் இந்து மதம் அழியாமல் இருக்கிறது. ஒவ்வொரு இந்து மனதிலும் அத்வைதத்தத்துவமே இருக்கிறது. மேற்கத்திய அறிஞர்களால் சமஸ்கிருதக்கலாச்சாரமே ஆரியக்கலாச்சாரம் என்றும் மற்றவை எல்லாம் திராவிடக்கலாச்சாரம் என்றும் முன்வைக்கப்பட்டது. இதன் விளைவாக பிராமணியத்தின் அதிகாரமையம் மேலோங்கியது. பிராமணிய அதிகாரமையப்படுத்துதல் மிகச் சுலபமாக கலாச்சாரதேசியமாக செல்வாக்கு பெற்றது.
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது…என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இந்துத்வாவின் இந்து மதம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதில்லை. அது கற்பனாவாதவரலாற்றையும் இறுகிய தன்மையையும் கொண்டிருந்தது. அதன்மீது புனிதத்தை ஏற்றி ஒளி மிக்கதாக புனைவுகளை உருவாக்கி கதைகளின் மூலம் மீண்டும் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அத்வைதவாதிகள் என்று வெளிப்படுத்த நினைத்தது. இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுதலித்து இந்தியர்களையெல்லாம் இந்துக்களாக ஒன்று திரட்ட முயற்சித்தது. ஆரியப்பெருமையையும், பார்ப்பனப்பெருமையையும் மீட்டெடுப்பது தான் இந்துக்களின் குறிக்கோள் என்று இந்துமத அடிப்படைவாதம் முன்வைத்தது. இந்துக்கலாச்சாரத்தேசியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்துவும் தன்னுடைய உயிரையே கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டது. இதற்கு சாதகமாக புராண, இதிகாசக்கதைகளை மீண்டும் புனைந்தது. இந்துத்வவாதிகள் தங்களை இந்து மதத்தின் ஏகப்பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். மனுவின் சநாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்ததினால் பெண்களை அவமதிக்கவும் உதாசீனப்படுத்தவும், செய்தனர். வர்ணாசிரமக்கோட்பாட்டை தீவிரமாகப் பின்பற்றவும் அதை நிலைநிறுத்த முயற்சித்ததன் மூலம் தங்களுடைய மேலாண்மையை உறுதிப்படுத்த நினைத்தனர். அதன் மூலம் தீண்டாமை நிலைத்திருக்கச் செய்தனர்.
இதற்கு மாறாக காந்தி வரலாற்றை மேற்கத்திய நேர்கோட்டுச் சித்தரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது கடந்த காலத்தில் சொர்க்கமாக இருந்தது என்ற கற்பனாவாதத்தை நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது புனைவு. ஒற்றைப்பரிமாணத்தில் வரலாறு எழுதப்படுவதை நிராகரித்தார். வரலாற்றை மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம் என்று கருதினார். காந்தி தன்னை ஒரு இந்துவாக மட்டும் அடையாளப்படுத்துதலை மறுத்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை எதிர்த்தார். இந்துக்களை பன்மைத்தன்மை கொண்ட இந்தியர்களாக அடையாளப்படுத்தினார். ஆண்மை தான் வீரம் என்பதையும் இந்திய ஆன்மீக மரபை மீட்டெடுப்பதற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தேசியவாதிகளின் கருத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். பிராமணிய மரபான ஆன்மாவை முக்கியப்படுத்துவதை மறுத்தார். ராமராஜ்யத்தினை அறவழியிலான லட்சிய உலகாகவே காந்தி நினைத்தார். அதை இந்து மதம் சார்ந்த கலாச்சாரத்தேசியமாக மாற்ற நினைத்ததில்லை. அதனால் தான் பாகிஸ்தான் பிரிவினையைக் கடைசி வரை எதிர்த்தார். இந்துமதத்தின் பன்மைத்தன்மையினையும் இளகிய அதன் கட்டமைப்பையும் காந்தி காப்பாற்ற நினைத்தார். ஆண் / பெண் உடல்களைப் போற்றியதால் பெண்களையும் போற்றினார். இந்தியத்தாய் என்ற உருவகத்தை அவரே வளர்த்தவர். வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்தாலும் தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்தார் காந்தி.
காந்திக்கும் இந்து மத அடிப்படை வாதத்திற்கும் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் பௌத்த சமணத்திலுள்ள சாதகமான கோட்பாடுகளை ஏற்கனவே ஸ்வாகா செய்திருந்தது இந்துமதம். அதன் இறுகிய இளக்கமற்ற, சநாதன, பழமையான, காலத்துக்கொவ்வாத, விஞ்ஞானக்கண்ணோட்டமில்லாத பார்வைகளை மாற்ற உருவான இந்து சமய சீர்திருத்தவாதிகளான வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, கபீர்தாஸ், ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசண்ட், போன்ற எல்லோரையும் திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து அப்படியே தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டதைப் போல காந்தியையும் காந்தீயத்தையும் விழுங்கி செரித்து விட்டது. அதற்கான கூறுகள் காந்தீயத்திலும் காந்தியின் நடைமுறை வாழ்விலும் இருந்தன.
காந்தி இந்து மதத்தின் இறுகிய தன்மையை மறுத்தாலும் அவர் ஒரு இந்துவாக இருந்ததினால் பன்மைத்தன்மையை ஆதரித்த அவருடைய நிலைபாடு அழுத்தமாகத் தெரியவில்லை. காந்தியின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள் பிராமணியத்துக்குச் சாதகமாக இருந்தன. அவருடைய ராமராஜ்யம், குறித்த கருத்துக்களை இந்து மதக்கருத்துக்களாகவே புரிந்து கொண்டனர். அவருடைய பிரார்த்தனைக்கூட்டங்களில் சர்வமதங்களைச் சார்ந்த பைபிள், குரான், பகவத்கீதையிலிருந்து பிரார்த்தனை நடத்தினாலும் பைபிள், குரானுக்கு இணையாக பகவத்கீதையை இந்துக்களிடம் பிரபலப்படுத்தி அதை இந்துக்களின் வேதநூல் போல் உருவாக்கியதில் காந்திக்கு இருந்த பங்கினால் பிராமணியத்துக்கு துணைபோவதாக இருந்தது. தீண்டாமையை அவர் கடுமையாக எதிர்த்தாலும் வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்ததினால் அவருடைய தீண்டாமைஎதிர்ப்பை மிகச்சுலபமாக நீர்த்துப்போகச் செய்ய இந்துத்வசக்தியினால் இயன்றது. பொதுவாக இந்திய சுதந்திர எழுச்சிக்கான பிரச்சாரம் இந்து மதக்கொள்கைகள் வழியாகவே பரவியது. அதிலும் குறிப்பாக காந்தியின் மதநம்பிக்கை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதக்கோட்பாடுகளை, பரவலாக்கி, வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தப் பரவலான பிரச்சாரம் இந்துத்வாவுக்கு மிகச் சாதகமான அடித்தளத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் வழிபட்டுக் கொண்டும் சமஸ்கிருதப்பிரதிகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த ராமரை நாடு முழுவதும் ஜனநாயகப்படுத்தியதில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்து மத அடிப்படைவாதம் இந்து மதச்சீர்திருத்தங்களை உள்வாங்கிக் கொண்டு செரித்து மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
ஆனாலும் இந்து மத அடிப்படைவாதம் காந்தியைக் கொன்றது. காந்தி உயிரோடு இருந்தால் பிராமணிய மேலாண்மையை நிலைநிறுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமே காந்தியின் கொலையாக மாறியது. இந்து மத அடிப்படைவாதம் நினைத்த மாதிரியே காந்தி மறைந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்து மதத்திற்குள் இருந்து கொண்டே அதற்கு எதிராகப் போராடிய அனைவரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தத்துவச்செறிவும், நடைமுறை சடங்கியல் முறைகளையும் கொண்டது.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்வதற்கு, அங்கே கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும், மதச்சார்பற்ற, ஜனநாயக, அறிவியல் கலாச்சாரத்தை வளர்க்கத் தவறியதும் கூட காரணங்கள் என்று கிராம்ஷி கூறுகிறார். இந்தியாவிலும் இப்போது அது தான் நிலைமை. மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களுடைய வியூகங்களைத் திட்டமிட வேண்டும்.

( ஆதாரநூல் - காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் )
நன்றி - செம்மலர்

Saturday 30 May 2015

கிளிக்கூண்டு கனவு


கிளிக்கூண்டு கனவு
உதயசங்கர்

மத்தியான நேரம். கிருஷ் அவனுடைய பள்ளிக்கூடத்தில் இருந்த வேப்பமரத்தில் இரண்டு கிளிகள் பறந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். இளம்பச்சை நிறமும் கரும் பச்சை நிறமும் கலந்த உடல். கழுத்தைச் சுற்றி வரைந்து வைத்த மாதிரி ஒரு கருப்புக் கோடு., அழகான சிவந்த அலகுகள். உருண்டை விழிகள். நீளமான வால். அடடா..எவ்வளவு அழகாக இருக்கிறது. கிருஷுக்கு உடனே அதைத் தொட்டுத் தடவிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிளிகள் கீ கீகீ கீக்கீ என்று பேசிக்கொண்டு ஒவ்வொரு கொப்பாகத் தாவித் திரிந்து கொண்டிருந்தன.
அப்போது கூட இருந்த அபி
“ டேய் கிளியைப் பிடிச்சி கூண்டில வச்சு வளப்பாங்க.. அது நாம சொல்றத அப்படியே திருப்பிச்சொல்லும்… எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பாட்டி வளக்கிறாங்க.. அவங்க வீட்டுக்கு யார் போனாலும் அது யார் நீங்க…யார் நீங்க…ன்னு கேக்கும்… நல்லாருக்கும்ல… “
அதைக் கேட்ட கிருஷ் அண்ணாந்து கிளிகளை ஆசையோடு பார்த்தான். கிளிகள் மேலே வானத்தில் பறந்து கொண்டிருந்தன.
சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் “ அம்மா எனக்குக் கிளி வேணும்..” என்றான். அவனுடைய அம்மா, “ கிளி பொம்மையெல்லாம் இப்ப கிடையாதுடா…” என்று சொன்னாள். உடனே கிருஷ்ஷுக்கு கோபம் வந்து விட்டது. “ எனக்கு உயிரோட கிளி வேணும் நான் வளக்கப்போறேன்..” என்று சொன்னான். அதைக் கேட்ட அவனுடைய அம்மா திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தார். அவன் அழுது விடுவதைப் போல முகத்தைக் கோணினான்.
“ அதெல்லாம் பாவம்டா கிருஷ்… பறக்கிற பறவையைக் கூண்டில அடைக்கக்கூடாதுடா..கண்ணு ..எஞ்செல்லமில்ல.சொன்னா கேளுடா.”
அதைக் கேட்டதும் அழவே ஆரம்பித்து விட்டான் கிருஷ். அழுது கொண்டே,
“ எனக்கு வேணும்.. நான் அதுக்குப் பேசச் சொல்லிக் கொடுப்பேன்…எனக்கு விளையாட யாரிருக்கா…” என்று சொன்னான். கிருஷ் அழுவதைப் பார்த்த அம்மாவுக்கு சங்கடமாகி விட்டது. அவள் கிருஷை பக்கத்தில் இழுத்து அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டாள்.
“ அழக்கூடாதுடா செல்லம்.. இப்ப என்ன உனக்குக் கிளி வேணும் அவ்வளவு தானே அப்பா வரட்டும் சொல்லி பிடிச்சித்தரச் சொல்றேன்… ஆனா கொஞ்சம் யோசிச்சிப்பாரேன்.. நல்லா ஓடியாடித் திரியற உன்னயப் பிடிச்சி ஒரு கூண்டுக்குள்ள போட்டு ஆடறா.. பாடறா.ன்னு சொன்னா செய்வியா….”
அம்மா சொன்னதைக் கேட்டதும் கிருஷ் கத்தி அழ ஆரம்பித்து விட்டான்.. அப்போது அலுவலகத்திலிருந்து அப்பா வந்து விட்டார். கிருஷ் அழுவதைப் பார்த்த அவர்,
“ ஏண்டா கண்ணா அழறே..”
என்று கேட்டார். கிருஷ் அழுகையை அடக்கிக் கொண்டே அவன் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளைப் பற்றிச் சொன்னான். அவனுடைய ஆசையைச் சொன்னான். உடனே அப்பா,
“ இவ்வளவு தானே நாளைக்கி குருமலை கந்தசாமி அண்ணாச்சிகிட்ட சொல்லி ரெண்டு கிளியப் பிடிச்சித்தாங்கன்னு சொன்னாப்போச்சி… இதுக்குப் போயி அழலாமா? ..”
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். உடனே கிருஷின் அழுகை சட்டென நின்று விட்டது. உடனே அப்பாவிடம்,
“ நாளைக்கே கிடைச்சிருமாப்பா..”
என்று கேட்டான். அதற்கு அப்பா, “ இன்னும் மூணு நாளைக்குள்ள உங்கூட கிளிகள் பேசிக்கிட்டிருக்கும்… சரியா..” என்று சொன்னார். கிருஷ் முகம் மலர்ந்து சிரித்தான். உடனே சுறுசுறுப்பாய் பாடங்களைப் படித்தான். அம்மா சுட்டுத் தந்த தோசைகளை முரண்டு பண்ணாமல் சாப்பிட்டான். அவனுடைய நினைவில் எல்லாம் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளின் ஞாபகம் தான். படுத்தவுடன் தூங்கியும் விட்டான்.
அப்போது தான் விடிந்திருந்தது. கிளிகளின் கீச்சட்டம் அவனை எழுப்பியது. கண்விழித்துப் பார்த்தான். அவனைச் சுற்றிலும் கிளிகள். பறந்து கொண்டும் கீ கீ என்று பேசிக் கொண்டும் நடந்து கொண்டும் இருந்தன. சில கிளிகள் பறந்து அவனுடைய படிப்பு மேசை மீது உட்கார்ந்திருந்தன. ஒரு கிளி சன்னல் கம்பியில் தலைகீழாக நடை பழகிக் கொண்டிருந்தது. ஒரு கிளி மின்விசிறி மீது உட்கார்ந்து தலையைத் திருப்பி எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கிளிகள் தங்களுடைய அலகுகளால் ஒன்றோடொன்று உரசிக் கொஞ்சிக் கொண்டிருந்தன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் ரெண்டு கிளிகள் தானே கேட்டோம். எதுக்கு இத்தனை கிளிகளை வாங்கிட்டு வந்தார் என்று நினைத்தான். திரும்பி அப்பாவைக் கூப்பிட வாயெடுத்தான். அய்யோ அவனால் திரும்பவே முடியலயே. அசைய முடியாமல் கிடந்தான். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது அவன் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பது. அவனுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு, ஒரு தண்ணீர் பாட்டில். எல்லாம் இருந்தன. ஆனால் அவனால் நிமிர்ந்து நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. அவன் உட்கார மட்டுமே இடமிருந்தது. அம்மாவையோ அப்பாவையோ காணவில்லை. அவனைச் சுற்றி பெரிய வயதான கிளிகள், இளம் கிளிகள், குஞ்சுக்கிளிகள் என்று கூட்டமாக இருந்தன. அவனுடைய கூட்டைச் சுற்றி பெரிய கிளிகள் நின்று கொண்டு கீ…கீ..கீ..கீ… என்று தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவனுக்கு அழுகையாக வந்தது. அவன் அம்மாவையும் அப்பாவையும் கத்திக் கூப்பிட்டான். கூண்டை திறக்க முயற்சித்தான். எதுவும் நடக்கவில்லை. வயிறு பசித்தது. அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு அருகில் இருந்தது. ஆனால் சாப்பிடப்பிடிக்கவில்லை. அவனுக்கு இப்போது பள்ளிக்கூடம் போகவேண்டிய நேரம். அவன் ஒரு நாள் கூட பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் இருந்ததில்லை.
அவனுடைய வீட்டுக்குள் பறந்து கொண்டிருந்த கிளிகள் எல்லாம் சேர்ந்து ஒரே குரலில் கீ கீ கீ கீ என்று கத்தின. முதலில் எதுவும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது. அந்தக் கிளிகள் அதனுடைய மொழியை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கின்றன. அவனுடைய முகம் கோணியது. அழுகை பொங்கி வர பெரிய குரலில் அழத்தொடங்கினான்.

அம்மா கிருஷைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள். கண்விழித்துப் பார்த்தான் கிருஷ். கூண்டையோ கிளிகளையோ காணவில்லை. எழுந்து உட்கார்ந்து ஒரு நிமிடம் அவன் கண்ட பயங்கர கனவை நினைத்துப் பார்த்தான். உடனே அம்மாவிடம், “ அம்மா எனக்கு கிளி வேண்டாம்மா…நான் மரத்திலேயே பாத்து ரசிக்கிறேன்.. பறவைன்னா பறக்கணும்.. மனுசன்னா நடக்கணும் ..இல்லியாம்மா….” என்று சொன்ன கிருஷை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அம்மா.
நன்றி- மாயாபஜார் தமிழ் இந்து

Tuesday 26 May 2015

வேதங்களின் அறம்

 

உதயசங்கர்Mohan Das (54)

 

அறம் என்றும் அறவுணர்ச்சி என்றும் அறவிழுமியங்கள் என்றும் பலவாறு சொல்லப்படுகிற சொல்லின் அரத்தம் என்ன? மனித குல வரலாற்றில் எப்போதும் அறவிழுமியங்கள் ஒன்று போல இருந்திருக்கிறதா? எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று இருக்கிறதா? வேதகாலம் பொற்காலம் என்றும் அதில் உன்னதமான அறவிழுமியங்கள் இருந்ததாகவும் கூறப்படுவது உண்மையா? அப்படி ஏதேனும் அறவிழுமியங்கள் இருந்தால் அவை எப்படிப்பட்டவையாக இருந்தன?

அறம் என்றால் அந்தந்தக்கால சமூக வாழ்க்கையில் உருவான மதிப்பீடுகள், தர்ம அதர்மக்கோட்பாடுகள், நாகரீக வளர்ச்சியினால் பெறப்படும் மதிப்பீடுகள், அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மதிப்பீடுகள், என்று சொல்லலாம். இந்த சமூக அறவிழுமியங்கள் தனிமனிதர்களையும், சமூகத்தையும் தார்மீகமாக அல்லது மானசீகமாகக் கட்டுப்படுத்துகிறது. சமூகத்தின், தனிமனிதர்களின் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் நன்மை, தீமைகளைச் சொல்கிறது. பண்பாடு, பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் வழி சமூக மனதையும், தனி மனித மனதையும், கட்டமைக்கிறது. கிட்டத்தட்ட அந்தந்தக்கால சமூகப்பொருளாதார அமைப்பின் ஆன்மாவாகச் செயல்படுகிறது எனலாம்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்திக்கருவிகளுக்கும் இடையில் ஊடாடும் உறவையே நாம் உற்பத்தி உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி உறவுகள் நீடித்திருக்க உற்பத்தி சக்திகளைக் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமானது பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, நீதிநெறிமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை, உணவு, உடை, உறையுள், முதலான லௌகீக வாழ்க்கையை, இவையெல்லாவற்றின் அடிப்படையில் உருவாக்கிய அறவிழுமியங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதற்கு தன்னுடைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்துகிற விதத்தில் கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, சட்டம், நீதி, மதம், என்று எல்லாவிதங்களிலும் தன்னுடைய ஆக்கிரமிப்பை மக்கள் மனங்களின் மீது செலுத்துக்கிறது. இந்த கலாச்சாரமேலாண்மை மூலம் தன் அதிகாரத்துக்குத் தேவையான இசைவை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. உற்பத்திசக்திகளின் நிலைத்த தன்மைக்கு அறவிழுமியங்களும் அவசியம் என்று தெரிகிறது.

வர்க்க சமூதாயத்தில் வர்க்க அறமே மேலோங்கியிருக்கும். முதலாளித்துவம் தனக்குச் சாதகமான அறவிழுமியங்களையே பிரச்சாரம் செய்யும். முன்னெடுக்கும். இதற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் வரலாற்றிலுள்ள முற்போக்கான அறவிழுமியங்களையெல்லாம் தொகுத்து ஒரு மாற்று, புதிய பாட்டாளி வர்க்க அறவிழுமியங்களை முன்னெடுக்கும். அதற்கு முதலில் எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் எல்லாவர்க்கத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் கிடையாது என்பதை புரிந்து கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அறவிழுமியங்களும் மாறும். அப்படியானால் வேதகாலத்தில் எப்படிப் பட்ட அறவிழுமியங்கள் இருந்தன?

சிந்து வெளி நாகரீகத்தின் பொற்காலம் என கி.மு.2500 ஆம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். அதாவது இந்தியாவில் ஆரியர்கள் கி.மு. 1500 –க்கு முன்னால் வந்திருக்க வாய்ப்பில்லை. வேதங்களில் மிகப்பழமையான ரிக் வேதத்தை முதலில் இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும், குறைந்தது முந்நூறு வருடங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரிக் வேதத்தில் ஆரியர்களுக்கும் சிந்து வெளி மக்களுக்கும் இடையில் நடந்த சண்டை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையாகக் காட்டப்படுகிறது. அதன் பிறகு ஆரிய மன்னர்களான திவோதாஸ்-சுதாஸ் காலமான கி.மு. 1200 ஆம் ஆண்டு வரையிலான காலம் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் இல்லை.

ஆரியர்கள் கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாகவும் இருந்தனர். அப்போது அவர்களிடையே எந்த உடமை வர்க்கமும் உருப்பெறவில்லை. ஒருவகையான ஆதிப்பொதுவுடைமை சமுதாயமாக இருந்ததெனக் கருதலாம். மேய்ச்சல் நிலம் தேடியே வந்தவர்கள். சிந்துவெளியில் அப்போதிருந்த நாகரீக வளர்ச்சி என்பது பழங்குடிச்சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட புராதன நிலவுடைமைச் சமூகமாக மாற்றமடைந்திருக்கும் நிலைமையை ஒத்திருந்தது. வர்க்க வேறுபாடுகள் தோன்றியிருந்தன என்பதை அங்கிருந்த குடியிருப்புகள் காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வளவு முன்னேறிய சமூகத்தையே நாகரீகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டுமிராண்டிகாலத்தின் உயர்ந்த நிலையில் இருந்த ஆரியர்கள் அழித்திருக்கிறார்கள்.. எனவே ரிக், வேதத்தில் உள்ள பாடல்களில் பாரம்பரியமாக தாங்கள் வணங்கும் இந்திரன் முதலான கடவுள்களின் புகழைப்பாடியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டியும், அதற்காக சோமபானம் அருந்த வேண்டியும், வேள்விகளைப் பற்றியும், உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் எதிரிகளாக தாசர்களையும் தஸ்யூக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வேதகாலத்துக்கு முன்பும் பல ஆரிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் சண்டை நடந்திருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க யுத்தங்களைப் பற்றிய பாடல்கள் கொண்டதே ரிக் வேதம். இந்த யுத்தமும் சமயக்கோட்பாடுகளின் வேற்றுமையினால் விளைந்ததாகவே ரிக் வேதம் சொல்கிறது. யாகங்களையோ, பலிகளையோ செய்யவில்லை, இந்திரனைக் கும்பிடவில்லை, எனவே ஆரியரல்லாத அவர்களை அழிக்க வேண்டும். ரிக் வேதத்தின் ஒவ்வொரு பாடலிலும் அதைப் பாடிய ரிஷி குறிப்பிட்ட நோக்கத்தை அடைய விரும்பி குறிப்பிட்ட கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கிற பாடல்களின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

” நீங்கள் எப்போது யக்ஞம் செய்தாலும் தேவர்களான இந்திரனையும், அக்னியையும், புகழத் தவறாதீர்கள். அவர்கள் நிலையை உயர்த்தி அவர்களது புகழைக் காயத்திரி சந்தத்தில் பாடுங்கள்” ( ரிக் வேதம் 1.21.2 )

” இந்திரன், வருணன், அக்னி, ஆகியோரின் மனைவியர் என் வீட்டுக்கு வந்து சோமரசம் பருக விரும்புகிறென்.”

“ ஓ இந்திரனே நீ வீரன். நீ வந்து நாங்கள் தயாரித்திருக்கும் சோமரசத்தைப் பருகி எங்களுக்குச் செல்வத்தைக் கொடு. உனக்கு நிவேதனம் கொடுக்காதவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அதை எங்களுக்குக் கொடு.” ( ரிக் வேதம் 1.81-8-9 )

” இந்திரனே எங்களைக் காப்பாற்றும்! நீர் எங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பவர். நீர் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுபவர். மலைகளைத் தூளாக்கும் வஜ்ராயுதம் படைத்தவர் நீர். குதிரைகள் மேல் சவாரி செய்யும் நீர் எங்களுக்கு பலவித உணவு வகைகளையும், செல்வங்களையும் வழங்குவீர்! “ ( 6-17-2 )

இதைத்தவிர அறநெறிகளாகவோ, ஆன்மீகதத்துவமாகவோ மனிதனை ” உயர்ந்த “ நிலைக்குக் கொண்டு செல்பவை என்று எதையும் சொல்ல முடியாது. சரி ரிக் வேதம் தான். இப்படி யென்றால் யஜூர் வேதம் வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களைப் பற்றிய தொகுப்பு. அசுவமேத யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும். ராஜசூய யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும் என்பது போன்ற பாடல்களின் தொகுப்பு எனலாம். அவையும் பெரும்பாலும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.

பிந்தைய வேதமான அதர்வண வேதத்தில் பேய், பிசாசு, பில்லி,சூனியம் நோய்நொடி, இவற்றை விரட்டுவதற்கான மந்திரங்களின் தொகுப்பு. உதாரணத்துக்கு, காய்ச்சலுக்கெதிரான மந்திரம், மலச்சிக்கல், சிறுநீர் போகாமை இவற்றுக்கான மந்திரம், கண்டமாலை நோய்க்கெதிரான மந்திரம், பொறாமையைச் சாந்தப்படுத்தும் மந்திரம், எலும்பு முறிவுக்கு மந்திரம், குழந்தைகளிடம் காணப்படும் புழுக்களுக்கெதிரான மந்திரம், பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திரம், கணவனை அடைவதற்கு மந்திரங்கள், கருத்தரிப்பதற்குத் தாயத்தாக கையில் அணியும் காப்பு, சுகப்பிரசவத்துக்கு மந்திரம், பெண்ணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திரம், ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திரம், ஆணின் ஆண்மையை அழிக்கும் மந்திரம், குழந்தைக்கு முதல் இரண்டு பல் ஒழுங்கின்றி முளைப்பதன் தோஷத்தை நீக்கும் மந்திரம், கால்நடைகள் செழிக்க மந்திரம், சூதாட்டத்தில் வெற்றி பெற பிரார்த்தனை, என்று அன்றாட வாழ்வின் அத்தனை விஷயங்களுக்கும் மந்திரங்கள், மருத்துவம் என்று நிரம்பி வழிகிறது அதர்வண வேதம். சாம வேதமோ ரிக் வேதத்தை கிட்டத்தட்ட திரும்பச்சொல்வதைப் போன்றது. நாகரிகத்தின் ஆரம்பநிலையில் இருந்த ஒரு இனக்குழுவின் வாழ்க்கைப்பிரச்னைகள் அதற்கான கற்பனையான தீர்வுகளாகவே அதர்வண வேத சுலோகங்கள் இருக்கின்றன.

ஆரியமொழி பேசிய இனக்குழுக்கள் மேய்ச்சல் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட வேதங்களில் நாகரிகமற்ற, புராதன, தொன்மங்களைச் சமயங்களாகக் கொண்ட ஒரு மக்கள் திரளின் சமயக்கோட்பாடே வெளிப்படுகிறது. அந்தச் சமயக்கோட்பாட்டுக்கு எதிரான அல்லது மாற்றான சமயக்கோட்பாட்டைக் கொண்டவர்களை எதிரிகளாகப் பாவித்ததும் அவர்களை வெற்றி கொள்ள தங்களுடைய இஷ்ட தெய்வங்களைப் போற்றி பிரார்த்திக்கும் பாடல்கள் நிறைந்தது. உணவு, உடை, உறையுள், பாலியல் உறவுகள், பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் புராதன இனக்குழு சமுதாயத்தின் எச்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எந்த வேதத்திலும் மனிதனை மேன்மைப்படுத்தும் அறநெறிகள் இல்லை.

வேதங்களில் எந்த அறவிழுமியங்களும் இல்லை என்று வேதகாலத்திலேயே ஆதிப்பொருள்முதல்வாதிகளான சார்வாகர்கள், பிரகஸ்பதிகள் முழங்கியிருக்கிறார்கள்.

“ அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசி, திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களுக்கு வயிறு வளர்க்கும் வழிகளே..” என்றும்

“ சிரார்த்தம் நடத்துவது இறந்தவர்களுக்குத் திருப்தியளிக்கும் என்றால் இங்கேயும்கூட பயணம் செய்பவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து விடுவது அவசியமில்லை…..”

“ வேதங்கள் மூன்று குறைபாடுகளால் கறைப்பட்டுள்ளது.- உண்மையில்லாதது, தனக்குத் தானே முரண்படுவது, கூறியது கூறல் என்பவை இந்த முரண்பாடுகள்..”

என்றும் கூறுகிறார்கள். நாகரிகத்தின் ஆரம்பநிலையில் உள்ள விசித்திரமான சித்திரங்களே வேதங்கள். இந்த விசித்திரங்களையோ, காலத்துக்கு ஒவ்வாத பிரார்த்தனகளையோ, வேள்விகளையோ யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாதென்பதற்காகவே வேதங்கள் புனிதமானவை என்றும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையென்றும் வெளிப்படையான தோற்றத்தை விட உள்ளார்ந்த ரகசியங்கள் நிரம்பியது என்றும் வேதங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல வைக்கப்படுகிறது. மனுவின் வர்ணாசிரமம் இந்திய சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாகப் பிரித்தது. சாதிகளாகப் பிரித்தது. சாதிவாரியாகத் தொழில்களைப் பிரித்தது. எல்லா சாதியினருக்கும் சாஸ்திர சடங்கியல், வழிபாட்டு முறையில் படிநிலைகளை ஏற்படுத்தி அதன் சிகரத்தில் பிராமணியத்தை வைத்ததன் மூலம் இந்து சமூகத்திற்கு நிர்வாகரீதியான சட்டத்திட்டங்களை, தண்டனைகளை உருவாக்கியது மனுவின் வர்ணாசிரமம். இந்த கூம்பு வடிவ சமூக அமைப்பிற்கு தலைமையில் பிராமணர்களும் அடுத்தடுத்த கீழ்நிலையில் மற்றவர்களையும் வைத்தது. இந்துத்வ பழமைவாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கம் தெரியாமலிருக்க தங்களுடைய நோக்கங்களுக்கு புனிதத்தையும் பழம்பெருமையும் வேண்டி வேதங்களைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே வேளாண்மை செய்த அரைநாடோடி இடையர் குலம் தங்களுடைய புராதன சமய வழிபாடு, தெய்வங்கள், நம்பிக்கைகள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், இனக்குழு பழக்கங்கள் இவைகளைப் பற்றி பாடித் தொகுத்த தொகுப்பே வேதங்கள். மற்றபடி வேதங்களில் என்றும் நிலைத்திருக்கும் அறவிழுமியங்கள் என்று ஒரு சுக்கும் இல்லை.

துணை நூல்கள்- 1. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்

2. ரிக் வேதகால ஆரியர்கள்-ராகுல்ஜி

3. வேதங்கள் ஒரு ஆய்வு- சனல் இடமருகு

4. பண்டைக்கால இந்தியா – டி.என்.ஜா

நன்றி - வண்ணக்கதிர்

Tuesday 19 May 2015

சடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை

உதயசங்கர்

revolution 4

பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.

ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பத்தின் நலன்களைப் பராமரிக்க சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள் ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான். மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “

( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )

அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும்  அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம். இப்படி பெண்களின் ஆன்மீக உரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.

“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )

“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )

“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “

( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)

பெண்களை இழிவு படுத்தும் மனு,  புத்தருக்குப் பின் வந்தவர். புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆதி மனிதகுலத்தில் நிலவி வந்த தாய்வழிச்சமூகத்தில் பெண்ணே தலைமைப் பொறுப்பை வகித்து வந்தாள். வேட்டைச்சமூகமாக இருந்தவர்கள் நிலையாக ஓரிடத்தில் வாழத்தொடங்கிய பின்னர் விவசாயம் வளர வளர கிடைத்ததைப் பகிர்ந்துண்ட வேட்டைச்சமூக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தேவையைத் தாண்டிய உபரி தனிச்சொத்துடமையை அறிமுகம் செய்தது. தனிச்சொத்துடமையின் விளைவாகவே பெண்ணின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களின் பாலியல் சுதந்திரம்.

ஒரு காலத்தில் உற்பத்தி / மறு உற்பத்தியின் குறீயீடாக  பெண்ணின் யோனி வணங்கப்பட்டது. அப்போது தாயே வாரிசுகளுக்கு அடையாளமாக இருந்தாள். ஆண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. சொத்துடமை தோன்றிய பிறகு ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கினான். அதற்காகவே பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த விரும்பினான். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தின் பத்தினி / பரத்தை என்று ஆணை மையமாக வைத்து எதிர்மைகளை உருவாக்கினான். உற்பத்தியின் ஊற்றாக இருந்த யோனி இப்போது பாவக்குழியாகியது. உற்பத்தியின் முன்னறிவிப்பான பூப்பு இப்போது தூமையென்று இழிவானதாக, தீட்டாக, உருவகிக்கப்பட்டது. இந்தத் தீட்டை உற்பத்தி செய்கிற பெண்ணும் இழிவானவளாக கருதப்பட்டாள்..

பெண்கள் தங்கள் விருப்பம் சார்ந்து பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது பாவம் என்றும் அதற்குக் கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன / நிறைவேற்றப்படுகின்றன. இதில் எல்லாமதங்களும் ஒன்று போல கை கோர்த்து செயல்படுவது யதேச்சையானதாகக் கருத முடியாது. அவர்கள் உலவும்சமூகவெளியைச் சுருக்கி வீட்டுக்குள் முடக்கினார்கள். அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.

“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )

“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”

( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )

ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது? மீண்டும் வாசிக்க 213. அத்தியாயம் 2-டை. பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.

அதுமட்டுமில்லாமல் பிறந்ததிலிருந்து ஆடை, ஆபரணங்கள், அலங்காரங்கள், தலைமுடி வளர்த்து பூச்சூடி, பொட்டிட்டு, அறிந்தோ அறியாமலோ ஆண்களின் கண்களுக்குக் காமப்பண்டமாகவும், அதே ஆடை அலங்கார விவகாரங்களே பெண்ணின் விலங்குகளாகவும் மாறி விடும் விந்தையினை நாம் பார்க்கிறோம். பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கம் அதன்மீது தன் வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறது. பெண்ணின் சமூகஅதிகாரம் பறிக்கப்பட்டபிறகு நடந்த வரலாற்றின் சுவடுகளில் பெண்ணின் இரத்தமும் தெறித்திருக்கின்றன. பெண்ணின் பாலியல் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு சாதித்தூய்மை அல்லது இனத்தூய்மைக் கொள்கையும் ஒரு காரணம். இன்றளவும் சாதியத்தூய்மையைக் காப்பாற்றும் காவலாளியாகப் பெண்ணையே பொறுப்பாக்குகிறார்கள். வர்ணாசிரம அதர்மத்தின் அரிய கண்டுபிடிப்பான அகமணமுறையின் மூலம் சாதியத்தூய்மையைக் காப்பாற்ற பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த அகமணமுறையக் காப்பாற்றவே வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே இத்தனை சடங்குகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றை தீட்டு / புனிதம் என்ற கருத்தாக்கங்களின் மூலம் மனங்களில் விதைத்து வளர்ப்பதன் மூலம் நிலை பெறச்செய்கின்றனர் சநாதன வாதிகள்.

கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம். எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறாள்.

பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது. இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.

“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “

பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனுதர்மத்தைக் கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சடங்குகளிலிருந்து, சாஸ்திரங்களிலிருந்து பெண்கள் தங்களை விடுவிக்காதவரை மனிதகுல விடுதலை முழுமையடையாது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.

Show details

Wednesday 13 May 2015

சுருங்கி விட்டதா பொது வெளி?

revolution 3 

உதயசங்கர்

ஜனநாயகயுகத்தில் பொதுவெளி என்று சொல்லும்போது சுதந்திரமான பொதுக்கருத்துக்கள், விவாதங்கள், கண்டடைதல்கள், வெளிப்படுத்தும் இடம் என்று சொல்லலாம். இவை அமைப்புகள் சார்ந்தும் சாராமலும் தனிநபர்கள் கூடி உருவாக்குவதாகவும் இருக்கலாம். இந்தப் பொதுவெளியில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. சமூகத்தைப்பற்றி, அரசைப் பற்றி, அதன் கொள்கைகள், நடைமுறைகள், எதிர்காலத்திட்டங்கள், இவற்றைப் பற்றியெல்லாம் விமரிசனம் செய்யக்கூடியதாக இந்தப் பொதுவெளி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நமது வரலாறு, கலாச்சாரம், சாதி,மதங்கள், அறிவியல், என்று சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தைப் பற்றியும் விவாதிக்கிற, களமாக இந்தப் பொதுவெளி இருக்கும். இந்த விமரிசனக் கருத்துக்களிலிருந்து அவரவருக்கு இணக்கமான கருத்துகளையோ, விவாதங்களையோ ஏற்றுக் கொள்ளவும் இணக்கமில்லாத கருத்துக்களோடு முரண்படவும் செய்யலாம். இந்தப் பொதுவெளி அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் எல்லோருக்கும் தருகிற ஒன்றாகத் திகழும்.

என்னுடைய கல்லூரிக்காலத்தில் நாங்கள் நண்பர்கள் கூடி இப்படியான ஒரு பொதுவெளியை உருவாக்கியிருக்கிறோம். சமூகம், அரசியல், தத்துவம், சினிமா, சாதி, மதம், இலக்கியம் என்று எல்லாவற்றையும் பற்றி பேசியிருக்கிறோம். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் எங்களுக்கு முகைதீன் பாய் டீக்கடை இப்படியான பொதுவெளியாக மாறியது. எங்களுடன் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தார்கள். ஜோதிபாசு சலூனே ஒரு பொதுவெளியாக மாறியிருந்தது. அங்கே எப்போதும் ஒரு விவாதம், உரையாடல், நிகழ்ந்து கொண்டேயிருந்தது. காலையில் தினசரிகளைப் படித்து விட்டு விவாதம் செய்கிற நண்பர்கள் இருந்தார்கள். மாலையில் தொழிற்சங்க வாதிகள், கூடிப்பேசி விட்டு போன பிறகு, அரசியல் கட்சி நண்பர்கள் வருவார்கள். பின்பு இலக்கியவாதிகள், இளம் எழுத்தாளர்கள் வருவார்கள். இரவுகளில் காந்திமைதானம் விவாதங்களின் வெப்பத்தினால் புழுதி பறந்தது. மார்க்ஸும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் மோதிக்கொண்டனர். லெனினும் கிராம்ஷியும் தங்கள் நடைமுறைக்கோட்பாடுகள் குறித்து வேறுபட்டு நின்றனர். சோல்ஜெனிட்சனும் மாக்சிம் கார்க்கியும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தனர். அத்வைதமும் பௌத்தமும் சமணமும் கிறித்துவமும், இஸ்லாமும் கலந்து குழம்பின. காந்தியும் நேருவும், இந்திராகாந்தியும், இ.எம்.எஸ்ஸும், டாங்கேயும் தங்களைப்பற்றிய விமரிசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் அங்கே எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எப்போதும் விவாதித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கிற நண்பர்கள் சுதந்திரமான கருத்துரிமை வழங்கிய ஒரு பொதுவெளியை உருவாக்கினார்கள் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் அந்தக்காலகட்டத்தில் திராவிடக்கட்சிகள் நமது மொழி, இனம், பண்பாடு, மதம், மூடநம்பிக்கைகள் குறித்த பொதுவிவாதங்களை தங்களுடைய பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றனர். இடதுசாரிகள் அரசியல், சமூகமாற்றம் குறித்த விவாதங்களையும் விமரிசனங்களையும் முன் வைத்தனர். இந்தக் கருத்துகள் அதன் சார்புநிலை தாண்டி மாற்றுக்கருத்துகளையும் மக்கள் மதிக்கின்ற பக்குவத்தைக் கொடுத்தன. வாரந்தோறும் அரசியல்கூட்டங்கள் நடந்தன. ஒருவருக்கொருவர் பதில் சொல்லினர். புதிய விவாதங்களை உருவாக்கினர். கூட்டங்களில் பத்துப்பேரோ, நூறுபேரோ கவலைப்படவில்லை. டீக்கடைகளும் சலூன்களும் புத்தகக்கடைகளும் படிப்பகங்களும், முச்சந்திகளும், மைதானங்களும், கூட்டங்களும், பத்திரிகைகளும் தான் பொதுக்கருத்துக்களை உருவாக்குகிற பொதுவெளியாக இருந்தன.எல்லா ஊர்களிலும் இப்படியான பொதுவெளிகள் இருந்திருக்கும். இந்தப் பொதுவெளிகள் ஜனநாயகப்பண்புகள் கொண்டதாக, இருந்தது. ஆராய்ந்து, பகுத்தறிவுடன் தங்கள் விவாதங்களை வைக்கிற வெளியாக இருந்தது. இதன் தாக்கம் சமூகவெளியெங்கும் பிரதிபலித்தது. அதனால் தான் பெரியார், அண்ணா, போன்ற பகுத்தறிவாளர்களும், ஜீவா, பி.ராமமூர்த்தி, போன்ற இடதுசாரிகளும் தங்கள் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணரவைக்க முடிந்தது.

ஆனால் இன்று அத்தகைய பொதுவெளிகள் சுருங்கி விட்டன. சுதந்திரமான, கருத்துரிமைக்கான வாய்ப்புகளை மின்னணு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் பறித்துக் கொண்டன. திட்டமிட்ட முறையில் கருத்துக்களை உற்பத்தி செய்து அதைப் பரப்புகிற வியாபாரிகளாக ஊடகங்கள் மாறிவிட்டன. இன்று பிரம்மாண்டமான அரசியல் கூட்டங்களைத் தவிர சிறிய அளவிலான கூட்டங்கள் குறைந்து விட்டன. டீக்கடைகளும் சலூன்களும் உணவகங்களும், ஹை டெக் ஆகி சுதந்திரமான உரையாடல் களத்தை விலக்கி வைக்கின்றன. ஆக பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகப்பண்புகள் மிக்க அறிவியல் பார்வை கொண்ட சுதந்திரமான கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகளை பழமைவாதம் அபகரித்துக் கொண்டது. மீண்டும் சநாதனமான மனுசாஸ்திரம் கோலோச்சத் துவங்கியுள்ளது. சடங்குகளும் சாஸ்திரங்களும், பூஜை புனஸ்காரங்களும், நாள் நட்சத்திரங்களும், ஆண்டு முழுவதும் சோதிடப்பலன் புத்தகங்களும், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சமூகத்தைப் பின்னோக்கி தள்ளுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ,இதற்கு பழமைவாதச்சிந்தனையிலிருந்த சமூகத்தில் பகுத்தறிவையும், ஜனநாயகப் பண்புகளையும், புரட்சிகரச் சிந்தனைகளையும் விதைத்த திராவிடக்கட்சிகளும் இடதுசாரிகளுமே இந்தப் பொதுவெளிகளைக் காப்பாற்றவோ, வளர்த்தெடுக்கவோ தவறியதும் ஒரு முக்கியக் காரணம். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த விபத்துக்கு பொதுக்கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகள் சுருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்று கணினியில் சில மறைவெளிகள் ( VIRTUAL ) உருவாகியுள்ளன. முகநூல், வாட்ஸப், வலைப்பூ, டிவிட்டர், இது போன்ற பொதுவெளிகளில் விவாதங்கள், உரையாடல்கள், நடக்கின்றன. கூர்மையான விமர்சனங்களும், அறிவார்ந்த கேலிகளும், கிண்டல்களும், தகவல்களும், செய்திகளும், கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, அரசியல், மருத்துவம், உடல்நலம், சுற்றுச்சூழல், உதவிகள், என்று வேறு விதமான ஒரு சமூகப்பொதுவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவைகள் சிறு குழுக்களாகவும், பெருங்குழுக்களாகவும் ஒருங்கிணைகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தப் பொதுவெளிகள் மறைவெளிகளாக இருப்பதால் இதுவரை பேசாத பலகுரல்கள் பேசுகின்றன. இது ஒரு நேர்மறையான அம்சம் என்றாலும் இந்த மறைவெளியைத் தாண்டி பலரும் வருவதில்லை.

மக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்கின்றனர். இப்படி ஊடகங்கள் பொதுவெளிகளின் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தங்களுடைய வர்க்க நலன்களுக்கேற்ற மேலாண்மையை உருவாக்குகின்றனர். இது பேரலகு ( MACRO ) என்றால் இதற்கு மாற்றாக ஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.