Sunday, 31 May 2015

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா


காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
உதயசங்கர்

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. ஆனால் இந்து மதம் மனித உடல் நிலையற்றது மனித உடல் தூய்மையற்றது. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயு,.என்ற தூய்மையின்மைகளால் அழுக்கானது. அழியக்கூடியது,  ஆன்மாவே பரிசுத்தமானது நிலையானது, அழியாதது என்று கூறுகிறது. அதனால் அழியும் உடலை உதாசீனப்படுத்துகிறது. ஆனால் காந்தி தன்னுடைய அரசியல் போராட்டங்களுக்கும், ஆன்மீகப்போராட்டங்களுக்கும் தன்னுடைய உடலையே ஆயுதமாக்கியதன் மூலம் இந்து மதக்கோட்பாட்டை மீறினார். அகிம்சை, உண்ணாவிரதம், பிரம்மச்சரியம், என்ற ஆயுதங்களைக் கொண்டே தன் வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டார். இந்த மூன்று ஆயுதங்களுக்கும் அடிப்படையான கச்சாப்பொருளாகத் தன்னுடைய உடலையே அவர் எடுத்துக் கொண்டார். இதில் அகிம்சையும் உண்ணாவிரதமும் அவர் சமூகவெளியிலும், அரசியல்வெளியிலும் பயன்படுத்திய ஆயுதங்கள் என்றால் அவருடைய அகவெளியின் ஆன்மபரிசோதனையாக பிரம்மச்சரியம் என்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்தினார்.
அவருடைய தத்துவப்பார்வையையும் தன் உடல் மூலமாகவே வெளிப்படுத்தினார்.  ஆன்மாவின் அழுக்கை ஆன்மரீதியிலான சமர்ப்பணம் மோட்சம் மூலமாகவே நீக்க முடியும். உடல் நிலையற்றது என்பதால் ஆன்மாவை சுமந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பயன்படாதது என்று சொல்கிற பிராமணிய இந்துத் தத்துவத்திலிருந்து காந்தி மாறுபட்டார். காந்தி உடலைப் போற்றினார். ஒவ்வொரு ஆன்மாவை வெளிப்படுத்துவது உடலே. எனவே உடலைச் சுத்தப்படுத்துவதன் மூலம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த முடியும் என்றார்.
அவருடைய அரசியல்வெளியில் காந்தி பயன்படுத்திய அகிம்சை என்ற ஆயுதத்திற்கும் இந்து மதத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏனெனில் இந்து மதம் என்றுமே அகிம்சையை கடைப்பிடித்ததில்லை. வன்முறையை நியாயப்படுத்துகிற, ஆதரிக்கிற மதம் இந்து மதம். பகவத்கீதை முழுவதும் வன்முறையினை நியாயப்படுத்துகிற தன்னை நிலைநிறுத்திக் கொள்ள யாரை வேண்டுமானாலும் சகோதரர்களாயினும் கொலைபுரியத் தயங்கக்கூடாது என்று அறிவுரைகள் கொட்டிக் கிடக்கும் ஒரு இடைச்செருகல் தான் பகவத்கீதை. காந்தி பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். அதை ஆன்மீகதளத்தில் நன்மை தீமைகளுக்கிடையிலான போராக உருவகித்திருக்கிறார். ஆனால் பிராமணீயஇந்துமதத்தின் பார்வையில் பின்பற்றியதில்லை. மாறாக ஜைன மதத்திலிருந்தே அவர் அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார். அதை மதம் சார்ந்த அறமாகப் பயன்படுத்தவில்லை. மதச்சார்பற்ற போராட்ட வடிவமாக மாற்றினார். அதனால் தான் அனைத்து மதங்களையும் சேர்ந்த கோடானுகோடி மக்கள் அகிம்சை கொள்கையைப் பின்பற்றினர். அடக்குமுறை ஆயுதங்களினால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தை நிராயுதத்தின் மூலம் எதிர்கொண்டார். இந்த நிராயுதத்தன்மை ஆங்கிலேயரின் தார்மீக அறத்தை கேள்விக்குள்ளாக்கியது. இந்தத் தார்மீக அறநெருக்கடியைத் தருவதற்கு தன்னுடைய உடலையே களமாகக் கண்டார்.
அதே போல மிகச்சாதாரணமாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக வீடுகளில் எல்லோரும் செய்கிற உண்ணாவிரதப்போராட்டத்தை பொதுப்போராட்டமாக மாற்றியது காந்தியின் படைப்பூக்கமே. இதுவும் தன் நியாயத்திற்காக நடத்துகிற அறப்போராட்டமே. தன் உடலினை வதைப்பதன் மூலம் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களிடமும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தினார். மனிதகுல வரலாற்றில் சகமனிதர்களிடம் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதில் இயேசுவுக்குப் பிறகு காந்தியே மிகச் சிறந்தவராக விளங்கினார்.
1857- ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க்கலகம் என்று சொல்லப்பட்ட முதல் சுதந்திரப்போராட்டத்திற்குப் பிறகு இந்திய தேசிய எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் உட்கூறுகளில் ஒன்றாக பிராமணிய எழுச்சியும் நிகழ்ந்தது. இந்தப்பிராமணிய எழுச்சி இந்து மத ஆன்மீகமரபை காலனிய அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டமைத்தது. வேதகால மரபை மீட்டெடுக்க அறைகூவல் விடுத்தது. சமஸ்கிருத மொழியினால் தான் இந்து மதம் அழியாமல் இருக்கிறது. ஒவ்வொரு இந்து மனதிலும் அத்வைதத்தத்துவமே இருக்கிறது. மேற்கத்திய அறிஞர்களால் சமஸ்கிருதக்கலாச்சாரமே ஆரியக்கலாச்சாரம் என்றும் மற்றவை எல்லாம் திராவிடக்கலாச்சாரம் என்றும் முன்வைக்கப்பட்டது. இதன் விளைவாக பிராமணியத்தின் அதிகாரமையம் மேலோங்கியது. பிராமணிய அதிகாரமையப்படுத்துதல் மிகச் சுலபமாக கலாச்சாரதேசியமாக செல்வாக்கு பெற்றது.
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது…என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இந்துத்வாவின் இந்து மதம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதில்லை. அது கற்பனாவாதவரலாற்றையும் இறுகிய தன்மையையும் கொண்டிருந்தது. அதன்மீது புனிதத்தை ஏற்றி ஒளி மிக்கதாக புனைவுகளை உருவாக்கி கதைகளின் மூலம் மீண்டும் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அத்வைதவாதிகள் என்று வெளிப்படுத்த நினைத்தது. இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுதலித்து இந்தியர்களையெல்லாம் இந்துக்களாக ஒன்று திரட்ட முயற்சித்தது. ஆரியப்பெருமையையும், பார்ப்பனப்பெருமையையும் மீட்டெடுப்பது தான் இந்துக்களின் குறிக்கோள் என்று இந்துமத அடிப்படைவாதம் முன்வைத்தது. இந்துக்கலாச்சாரத்தேசியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்துவும் தன்னுடைய உயிரையே கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டது. இதற்கு சாதகமாக புராண, இதிகாசக்கதைகளை மீண்டும் புனைந்தது. இந்துத்வவாதிகள் தங்களை இந்து மதத்தின் ஏகப்பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். மனுவின் சநாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்ததினால் பெண்களை அவமதிக்கவும் உதாசீனப்படுத்தவும், செய்தனர். வர்ணாசிரமக்கோட்பாட்டை தீவிரமாகப் பின்பற்றவும் அதை நிலைநிறுத்த முயற்சித்ததன் மூலம் தங்களுடைய மேலாண்மையை உறுதிப்படுத்த நினைத்தனர். அதன் மூலம் தீண்டாமை நிலைத்திருக்கச் செய்தனர்.
இதற்கு மாறாக காந்தி வரலாற்றை மேற்கத்திய நேர்கோட்டுச் சித்தரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது கடந்த காலத்தில் சொர்க்கமாக இருந்தது என்ற கற்பனாவாதத்தை நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது புனைவு. ஒற்றைப்பரிமாணத்தில் வரலாறு எழுதப்படுவதை நிராகரித்தார். வரலாற்றை மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம் என்று கருதினார். காந்தி தன்னை ஒரு இந்துவாக மட்டும் அடையாளப்படுத்துதலை மறுத்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை எதிர்த்தார். இந்துக்களை பன்மைத்தன்மை கொண்ட இந்தியர்களாக அடையாளப்படுத்தினார். ஆண்மை தான் வீரம் என்பதையும் இந்திய ஆன்மீக மரபை மீட்டெடுப்பதற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தேசியவாதிகளின் கருத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். பிராமணிய மரபான ஆன்மாவை முக்கியப்படுத்துவதை மறுத்தார். ராமராஜ்யத்தினை அறவழியிலான லட்சிய உலகாகவே காந்தி நினைத்தார். அதை இந்து மதம் சார்ந்த கலாச்சாரத்தேசியமாக மாற்ற நினைத்ததில்லை. அதனால் தான் பாகிஸ்தான் பிரிவினையைக் கடைசி வரை எதிர்த்தார். இந்துமதத்தின் பன்மைத்தன்மையினையும் இளகிய அதன் கட்டமைப்பையும் காந்தி காப்பாற்ற நினைத்தார். ஆண் / பெண் உடல்களைப் போற்றியதால் பெண்களையும் போற்றினார். இந்தியத்தாய் என்ற உருவகத்தை அவரே வளர்த்தவர். வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்தாலும் தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்தார் காந்தி.
காந்திக்கும் இந்து மத அடிப்படை வாதத்திற்கும் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் பௌத்த சமணத்திலுள்ள சாதகமான கோட்பாடுகளை ஏற்கனவே ஸ்வாகா செய்திருந்தது இந்துமதம். அதன் இறுகிய இளக்கமற்ற, சநாதன, பழமையான, காலத்துக்கொவ்வாத, விஞ்ஞானக்கண்ணோட்டமில்லாத பார்வைகளை மாற்ற உருவான இந்து சமய சீர்திருத்தவாதிகளான வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, கபீர்தாஸ், ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசண்ட், போன்ற எல்லோரையும் திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து அப்படியே தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டதைப் போல காந்தியையும் காந்தீயத்தையும் விழுங்கி செரித்து விட்டது. அதற்கான கூறுகள் காந்தீயத்திலும் காந்தியின் நடைமுறை வாழ்விலும் இருந்தன.
காந்தி இந்து மதத்தின் இறுகிய தன்மையை மறுத்தாலும் அவர் ஒரு இந்துவாக இருந்ததினால் பன்மைத்தன்மையை ஆதரித்த அவருடைய நிலைபாடு அழுத்தமாகத் தெரியவில்லை. காந்தியின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள் பிராமணியத்துக்குச் சாதகமாக இருந்தன. அவருடைய ராமராஜ்யம், குறித்த கருத்துக்களை இந்து மதக்கருத்துக்களாகவே புரிந்து கொண்டனர். அவருடைய பிரார்த்தனைக்கூட்டங்களில் சர்வமதங்களைச் சார்ந்த பைபிள், குரான், பகவத்கீதையிலிருந்து பிரார்த்தனை நடத்தினாலும் பைபிள், குரானுக்கு இணையாக பகவத்கீதையை இந்துக்களிடம் பிரபலப்படுத்தி அதை இந்துக்களின் வேதநூல் போல் உருவாக்கியதில் காந்திக்கு இருந்த பங்கினால் பிராமணியத்துக்கு துணைபோவதாக இருந்தது. தீண்டாமையை அவர் கடுமையாக எதிர்த்தாலும் வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்ததினால் அவருடைய தீண்டாமைஎதிர்ப்பை மிகச்சுலபமாக நீர்த்துப்போகச் செய்ய இந்துத்வசக்தியினால் இயன்றது. பொதுவாக இந்திய சுதந்திர எழுச்சிக்கான பிரச்சாரம் இந்து மதக்கொள்கைகள் வழியாகவே பரவியது. அதிலும் குறிப்பாக காந்தியின் மதநம்பிக்கை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதக்கோட்பாடுகளை, பரவலாக்கி, வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தப் பரவலான பிரச்சாரம் இந்துத்வாவுக்கு மிகச் சாதகமான அடித்தளத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் வழிபட்டுக் கொண்டும் சமஸ்கிருதப்பிரதிகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த ராமரை நாடு முழுவதும் ஜனநாயகப்படுத்தியதில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்து மத அடிப்படைவாதம் இந்து மதச்சீர்திருத்தங்களை உள்வாங்கிக் கொண்டு செரித்து மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
ஆனாலும் இந்து மத அடிப்படைவாதம் காந்தியைக் கொன்றது. காந்தி உயிரோடு இருந்தால் பிராமணிய மேலாண்மையை நிலைநிறுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமே காந்தியின் கொலையாக மாறியது. இந்து மத அடிப்படைவாதம் நினைத்த மாதிரியே காந்தி மறைந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்து மதத்திற்குள் இருந்து கொண்டே அதற்கு எதிராகப் போராடிய அனைவரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தத்துவச்செறிவும், நடைமுறை சடங்கியல் முறைகளையும் கொண்டது.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்வதற்கு, அங்கே கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும், மதச்சார்பற்ற, ஜனநாயக, அறிவியல் கலாச்சாரத்தை வளர்க்கத் தவறியதும் கூட காரணங்கள் என்று கிராம்ஷி கூறுகிறார். இந்தியாவிலும் இப்போது அது தான் நிலைமை. மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களுடைய வியூகங்களைத் திட்டமிட வேண்டும்.

( ஆதாரநூல் - காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் )
நன்றி - செம்மலர்

2 comments:

  1. பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

    சூத்திரன் என்றால் யார்?


    சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

    அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

    இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

    சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

    இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

    நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
    --------------------

    நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

    அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

    கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

    சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

    யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

    கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!


    கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

    *************

    மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

    "ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

    மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

    “பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

    மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

    “அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

    மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

    “வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

    மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

    “பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

    அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

    "பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

    அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

    "பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

    மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

    "வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
    .

    ReplyDelete
  2. கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”. தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

    இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

    ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

    இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

    இங்கே >>>கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? <<< சொடுக்கி படியுங்கள்.

    .

    ReplyDelete