உதயசங்கர்
ஜனநாயகயுகத்தில் பொதுவெளி என்று சொல்லும்போது சுதந்திரமான பொதுக்கருத்துக்கள், விவாதங்கள், கண்டடைதல்கள், வெளிப்படுத்தும் இடம் என்று சொல்லலாம். இவை அமைப்புகள் சார்ந்தும் சாராமலும் தனிநபர்கள் கூடி உருவாக்குவதாகவும் இருக்கலாம். இந்தப் பொதுவெளியில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. சமூகத்தைப்பற்றி, அரசைப் பற்றி, அதன் கொள்கைகள், நடைமுறைகள், எதிர்காலத்திட்டங்கள், இவற்றைப் பற்றியெல்லாம் விமரிசனம் செய்யக்கூடியதாக இந்தப் பொதுவெளி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நமது வரலாறு, கலாச்சாரம், சாதி,மதங்கள், அறிவியல், என்று சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தைப் பற்றியும் விவாதிக்கிற, களமாக இந்தப் பொதுவெளி இருக்கும். இந்த விமரிசனக் கருத்துக்களிலிருந்து அவரவருக்கு இணக்கமான கருத்துகளையோ, விவாதங்களையோ ஏற்றுக் கொள்ளவும் இணக்கமில்லாத கருத்துக்களோடு முரண்படவும் செய்யலாம். இந்தப் பொதுவெளி அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் எல்லோருக்கும் தருகிற ஒன்றாகத் திகழும்.
என்னுடைய கல்லூரிக்காலத்தில் நாங்கள் நண்பர்கள் கூடி இப்படியான ஒரு பொதுவெளியை உருவாக்கியிருக்கிறோம். சமூகம், அரசியல், தத்துவம், சினிமா, சாதி, மதம், இலக்கியம் என்று எல்லாவற்றையும் பற்றி பேசியிருக்கிறோம். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் எங்களுக்கு முகைதீன் பாய் டீக்கடை இப்படியான பொதுவெளியாக மாறியது. எங்களுடன் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தார்கள். ஜோதிபாசு சலூனே ஒரு பொதுவெளியாக மாறியிருந்தது. அங்கே எப்போதும் ஒரு விவாதம், உரையாடல், நிகழ்ந்து கொண்டேயிருந்தது. காலையில் தினசரிகளைப் படித்து விட்டு விவாதம் செய்கிற நண்பர்கள் இருந்தார்கள். மாலையில் தொழிற்சங்க வாதிகள், கூடிப்பேசி விட்டு போன பிறகு, அரசியல் கட்சி நண்பர்கள் வருவார்கள். பின்பு இலக்கியவாதிகள், இளம் எழுத்தாளர்கள் வருவார்கள். இரவுகளில் காந்திமைதானம் விவாதங்களின் வெப்பத்தினால் புழுதி பறந்தது. மார்க்ஸும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் மோதிக்கொண்டனர். லெனினும் கிராம்ஷியும் தங்கள் நடைமுறைக்கோட்பாடுகள் குறித்து வேறுபட்டு நின்றனர். சோல்ஜெனிட்சனும் மாக்சிம் கார்க்கியும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தனர். அத்வைதமும் பௌத்தமும் சமணமும் கிறித்துவமும், இஸ்லாமும் கலந்து குழம்பின. காந்தியும் நேருவும், இந்திராகாந்தியும், இ.எம்.எஸ்ஸும், டாங்கேயும் தங்களைப்பற்றிய விமரிசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் அங்கே எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எப்போதும் விவாதித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கிற நண்பர்கள் சுதந்திரமான கருத்துரிமை வழங்கிய ஒரு பொதுவெளியை உருவாக்கினார்கள் என்பதில் ஐயமில்லை.
அத்துடன் அந்தக்காலகட்டத்தில் திராவிடக்கட்சிகள் நமது மொழி, இனம், பண்பாடு, மதம், மூடநம்பிக்கைகள் குறித்த பொதுவிவாதங்களை தங்களுடைய பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றனர். இடதுசாரிகள் அரசியல், சமூகமாற்றம் குறித்த விவாதங்களையும் விமரிசனங்களையும் முன் வைத்தனர். இந்தக் கருத்துகள் அதன் சார்புநிலை தாண்டி மாற்றுக்கருத்துகளையும் மக்கள் மதிக்கின்ற பக்குவத்தைக் கொடுத்தன. வாரந்தோறும் அரசியல்கூட்டங்கள் நடந்தன. ஒருவருக்கொருவர் பதில் சொல்லினர். புதிய விவாதங்களை உருவாக்கினர். கூட்டங்களில் பத்துப்பேரோ, நூறுபேரோ கவலைப்படவில்லை. டீக்கடைகளும் சலூன்களும் புத்தகக்கடைகளும் படிப்பகங்களும், முச்சந்திகளும், மைதானங்களும், கூட்டங்களும், பத்திரிகைகளும் தான் பொதுக்கருத்துக்களை உருவாக்குகிற பொதுவெளியாக இருந்தன.எல்லா ஊர்களிலும் இப்படியான பொதுவெளிகள் இருந்திருக்கும். இந்தப் பொதுவெளிகள் ஜனநாயகப்பண்புகள் கொண்டதாக, இருந்தது. ஆராய்ந்து, பகுத்தறிவுடன் தங்கள் விவாதங்களை வைக்கிற வெளியாக இருந்தது. இதன் தாக்கம் சமூகவெளியெங்கும் பிரதிபலித்தது. அதனால் தான் பெரியார், அண்ணா, போன்ற பகுத்தறிவாளர்களும், ஜீவா, பி.ராமமூர்த்தி, போன்ற இடதுசாரிகளும் தங்கள் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணரவைக்க முடிந்தது.
ஆனால் இன்று அத்தகைய பொதுவெளிகள் சுருங்கி விட்டன. சுதந்திரமான, கருத்துரிமைக்கான வாய்ப்புகளை மின்னணு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் பறித்துக் கொண்டன. திட்டமிட்ட முறையில் கருத்துக்களை உற்பத்தி செய்து அதைப் பரப்புகிற வியாபாரிகளாக ஊடகங்கள் மாறிவிட்டன. இன்று பிரம்மாண்டமான அரசியல் கூட்டங்களைத் தவிர சிறிய அளவிலான கூட்டங்கள் குறைந்து விட்டன. டீக்கடைகளும் சலூன்களும் உணவகங்களும், ஹை டெக் ஆகி சுதந்திரமான உரையாடல் களத்தை விலக்கி வைக்கின்றன. ஆக பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகப்பண்புகள் மிக்க அறிவியல் பார்வை கொண்ட சுதந்திரமான கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகளை பழமைவாதம் அபகரித்துக் கொண்டது. மீண்டும் சநாதனமான மனுசாஸ்திரம் கோலோச்சத் துவங்கியுள்ளது. சடங்குகளும் சாஸ்திரங்களும், பூஜை புனஸ்காரங்களும், நாள் நட்சத்திரங்களும், ஆண்டு முழுவதும் சோதிடப்பலன் புத்தகங்களும், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சமூகத்தைப் பின்னோக்கி தள்ளுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ,இதற்கு பழமைவாதச்சிந்தனையிலிருந்த சமூகத்தில் பகுத்தறிவையும், ஜனநாயகப் பண்புகளையும், புரட்சிகரச் சிந்தனைகளையும் விதைத்த திராவிடக்கட்சிகளும் இடதுசாரிகளுமே இந்தப் பொதுவெளிகளைக் காப்பாற்றவோ, வளர்த்தெடுக்கவோ தவறியதும் ஒரு முக்கியக் காரணம். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த விபத்துக்கு பொதுக்கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகள் சுருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இன்று கணினியில் சில மறைவெளிகள் ( VIRTUAL ) உருவாகியுள்ளன. முகநூல், வாட்ஸப், வலைப்பூ, டிவிட்டர், இது போன்ற பொதுவெளிகளில் விவாதங்கள், உரையாடல்கள், நடக்கின்றன. கூர்மையான விமர்சனங்களும், அறிவார்ந்த கேலிகளும், கிண்டல்களும், தகவல்களும், செய்திகளும், கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, அரசியல், மருத்துவம், உடல்நலம், சுற்றுச்சூழல், உதவிகள், என்று வேறு விதமான ஒரு சமூகப்பொதுவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவைகள் சிறு குழுக்களாகவும், பெருங்குழுக்களாகவும் ஒருங்கிணைகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தப் பொதுவெளிகள் மறைவெளிகளாக இருப்பதால் இதுவரை பேசாத பலகுரல்கள் பேசுகின்றன. இது ஒரு நேர்மறையான அம்சம் என்றாலும் இந்த மறைவெளியைத் தாண்டி பலரும் வருவதில்லை.
மக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்கின்றனர். இப்படி ஊடகங்கள் பொதுவெளிகளின் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தங்களுடைய வர்க்க நலன்களுக்கேற்ற மேலாண்மையை உருவாக்குகின்றனர். இது பேரலகு ( MACRO ) என்றால் இதற்கு மாற்றாக ஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.
ஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.
ReplyDeleteஉண்மை ஐயா உண்மை
காலத்தின் தேவையும் கூட
வணக்கம்
ReplyDeleteவிரிவாக சொல்லியுள்ளீர்கள் உண்மையில் சமத்துவமிக்க சமூகம் உருவாகும். காலம் விரைவில் உருவாகும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுருங்கி விட்டதா பொது வெளி? = மக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். =
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Udhayasankar