Saturday 26 December 2015

தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.

தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.

உதயசங்கர்


இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிரும் உடலும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் உடையவை. ஒரு செல் உயிரி முதல் சிக்கலான செல்களின் கட்டமைப்பு கொண்ட மனிதன் வரை எல்லோரும் ஓர் நிறை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடமிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் இந்த பூமியின் உயிரோட்டத்துக்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பு செய்யவே செய்கிறார்கள். அந்தப்பங்களிப்பினால் மட்டுமே பூமியின் உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது? பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா?. மனிதர்களிடையே எப்படி இந்த மதிப்புச் சீர்குலைவு நேர்ந்தது. மனிதர்களை இப்படி மேல்கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடூரத்திட்டமே தீண்டாமை. தீண்டாமையில் உள்ள விசித்திரமே மனிதர்களை உடல்களாகப் பார்த்துப் பிரித்தது தான்.

பிராமணரும் தீண்டத்தகாதவரே. யாரையும் அவர்கள் தீண்ட மாட்டார்கள். யாரும் அவர்களைத் தீண்டவும் முடியாது. ஆனால் அவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் பிராமணர்கள். அதை எப்படிச் செய்தார்கள்? அவர்கள் மற்றவர்களைத் தீண்ட மறுத்ததின் விளைவாக தாங்கள் தீண்டத்தகாதவர்களானார்கள். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஒருவகையில் தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்களும் அதே தீண்டாமையின் அதலபாதாளத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் இடைநிலையில் மற்ற சாதியினரும் இருப்பதற்குக் காரணம் பிராமணர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதோடு அதைப் புனிதப்படுத்தவும் செய்தனர். இதன் விளைவாக யாருடனும் கலக்கவோ, ஒன்று சேரவோ அவர்கள் முன்வரவில்லை. இதனால் மற்ற சாதியினரும் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தங்களையும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மற்றவர்களோடு ஒன்று கலக்க விரும்பவில்லை. அதே நேரம் யாகங்கள், சடங்குகள் மூலம் அசுத்தத்தைத் தீட்டை கற்பிதமாகச் சுத்தம் செய்யும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், பௌதீகரீதியாக, உண்மையான செயல்களின் மூலம் அசுத்தத்தைச் சுத்தம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகவும் சமூகத்தில் வைத்திருப்பதற்கான காரணம் ஒரே மதிப்புடைய உடல்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்தது தான். பிராமணர்களும் தங்களுடைய தீண்டாமைநிலை காரணமாக எல்லாவற்றையும் தீண்டி விடமுடியாது. ஆனால் அவர்களுடைய தீண்டாமைநிலையின் அடிப்படை என்பது மற்றவர்கள் மீதான வெறுப்பு, மற்றவர்கள் மீதான அதிகாரம், மற்றவர்கள் மீதான நிராகரிப்பு, என்று சொல்லலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைநிலை என்பது சமூக இழிவு, சமூக அவமானம், சமூக நிராகரிப்பு. ஒத்த தன்மையுடைய ஒரே செயலின் இரண்டு விதமான விளைவுகளின் விசித்திரத்தை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்களே.

இன்னொரு வகையில் சொல்லப்போனால்  தீண்டாமை என்பது தீண்டத்தகாதவரின் குறையோ அல்லது செயலோ அல்லது இயலாமையோ அல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவரின் செயலின்மை அல்லது இயலாமை. ஆகவே தீண்டாமைநிலை என்பது தீண்டத்தகாதவரிடம் இல்லை. தீண்டத்தகாதவர் தம்மை தீண்டாமைநிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை தீண்டத்தகாதவர் என்று கற்பிக்கப்பட்டவர்களைத் தீண்ட மறுப்பவர்களிடமே குடியிருக்கிறது.

மனித குல வரலாற்றில் ஆதியிலிருந்தே சாதிகள் கிடையாது. சாதியமைப்பு முறை உருவான பிறகே அகமணமுறை உருவாகியிருக்கிறது. மனிதகுலம் ஆரம்பத்திலிருந்தே புறமணமுறையை, அதாவது கலப்பு மணமுறையை கடைப்பிடித்திருக்கிறது. சாதியமைப்பு முறை காப்பாற்றப்படுவதற்கு அகமணமுறை ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தச் சாதியமைப்பு முறையும் தோன்றிய காலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. 1871 ஆம் ஆண்டு காலனிய அரசு முறைசாரா கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னால் இருந்த சாதியநிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் பல சாதிகள் தங்களை வருணப்படிநிலைகளில் மேலே சென்றன. பல சாதிகளின் உட்கிளைகள் ஒன்று கலந்து ஒரே சாதியாக இறுகியதும் நடந்தது. காலனிய ஆட்சியில் கிடைக்கும் பொருளாதாரப்பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் உட்சாதிப்பிரிவுகள் ஒன்றிணைந்தன.

தற்காலத்தில் அகமணமுறையும் அந்தந்தச் சாதிகளிடம் இறுக்கமாக முன்பு போல இல்லை. பொருளாதாரக்காரணிகளின் விளைவாக கள்ளர், மறவர், அகமுடையார், போன்ற சாதியினருக்குள் பொதுவான மணஉறவு நடக்கிறது. அதே போல வெள்ளாளர், செட்டியார், முதலியார், போன்ற சாதியினருக்குள்ளும் மண உறவு நிகழ்கிறது. ஒருவகையில் சாதியமைப்பு முறை நீர்மையாவது போலத் தோன்றினாலும் இந்த ஒன்றிணைவு தலித்துகளைத் திட்டமிட்டு விலக்கி வைக்கின்றன. இதுவரை நடந்த மிகப்பெரும்பான்மையான கொலைகள், கௌரவக்கொலைகளில் ஆணோ, பெண்ணோ, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்ற குரூரமான உண்மையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.. அப்படியென்றால் சாதிகளின் இளக்கம் பூரணமானதில்லை. தீண்டுதல் என்பது ஏற்கனவே தங்களுக்குள் தீண்டிக் கொள்ளும் உரிமை பெற்ற சாதிகளுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ சாதியமைப்பில் சில மாற்றங்களை இது கொண்டுவரும். இதை கலப்பு மணம் என்றோ, புறமணம் என்றோ முழுமையாகச் சொல்லி விடமுடியாது. ஏனெனில் வருணப்படிநிலையிலும் சாதியப்படிநிலையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சாதிகளுக்கிடையிலான இணக்கமான உறவாகவே இதைச் சொல்ல முடியும். ஒரே காம்பவுண்டிற்குள் தனித்தனியாக கதவடைத்துக் கொண்டிருந்த வீடுகள் தங்கள் வீட்டுக்கதவுகளைத் திறந்து ஒரே வீடாக மாறியிருக்கிறார்கள்

ஆனால் வருணப்படிநிலையிலும், சாதியப்படிநிலையிலும் எல்லோரிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிற தலித்துகளுடனான மண உறவு ஒன்றே இந்த சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போவதற்கான அடிப்படையான விஷயமாக இருக்கும். தீண்டுதல் என்ற ஒன்று தார்மீகமாக அனைத்துச் சாதியினரிடமும் எந்தவித பேதமும் இல்லாமல் நிகழ முடியும் தீண்டுதல் கூட தன்னுணர்வுடன் விருப்புணர்வுடன் செய்யக்கூடிய காரியமாகும். ஆனால் ஒன்றுகலக்கும்போது யார் யாரென்ற அடையாளங்கள் மறைந்து போகும். அப்படி அடையாளங்கள் மறைந்த நிலை தான் ஒன்றில் ஒன்று கரைந்தநிலை.  இந்தத் தார்மீக உணர்வுநிலையில் மட்டுமே அனைத்துச் சாதிகளும் ஒன்றுகலத்தலும் தங்களுக்குள் கரைந்து போதலும் நிகழும். பகுத்தறிவும் விஞ்ஞானப்பார்வையும் கொண்ட புதிய சமூக ஒழுங்கு உருவாகும்போது ஒன்று கலந்து கரைந்துபோன நீர்மையான அந்த பரவச நிலையில் சாதிய அடையாளங்கள் கடந்த கால எச்சங்களாக மிதந்து கொண்டிருக்கும்.

தீண்டுதல் என்ற சொல் தீண்டாமையையும் தீண்டாமை என்ற சொல் தீண்டுதல் என்ற சொல்லினையும் உடன் அழைத்து வரும். நம்முடைய உடலை அதாவது ஒரு கை இன்னொரு கையைத் தொட்டால் அது தொடுதல். அதற்கு யாருடைய அநுமதியும் தேவையில்லை. ஆனால் அதேபோல மற்றவர்களை தீண்டும்போது அதற்கு தீண்டப்படுபவர்களின் ஒப்புதலும் வேண்டும். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஐம்புலன்களின் குணாம்சங்களில் தீண்டல் தான் அதாவது தொடுதல் தான் உயிர்கள் அனைத்திற்கும் உள்ள அடிப்படை இயல்பு. ஐம்புலன்களாலும் அனைத்து உயிர்களையும் அனைத்துப் பொருட்களையும் தீண்டியே உயிர்கள் தங்களை அறிந்து கொள்கின்றன எனலாம். நாம் தீண்டலின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிறோம். குழந்தையின் மீதான தாயின் தீண்டல் அன்பை, அக்கறையை, வெளிப்படுத்துகிற செயலாக இருக்கிறது. குழந்தையும் அந்தத் தீண்டலின் மூலம் தன்னை அறிந்து கொள்வது மட்டுமல்ல நம்பிக்கையும் கொள்கிறது. எனவே தீண்டுதல் என்பது பொருட்களில் உறைந்துள்ள அடிப்படைப்பண்பு..

ஒரு பொருளைத் தீண்ட வேண்டுமானால் அந்தப் பொருளை நோக்கி அருகில் செல்ல வேண்டும். அல்லது அந்தப்பொருள் நம்மை நோக்கி அருகில் வரவேண்டும். தீண்டலின் மூலம் இரண்டு பொருட்களிடம் உள்ள தூரம் குறைந்து விடுகிறது என்றும் சொல்லலாம். அந்த இரண்டிற்குமிடையே நம்பிக்கையும், அணுக்கமும் ஏற்படுகிறது. தீண்டுதலின் மூலம் தீண்டப்படுகிற பொருளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டப்படுகிற பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டுதலின் மூலம் அந்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட முடியும். தீண்டுதலின் மூலம் ஒன்றில் ஒன்று கரைந்து விட முடியும். இன்றையத்தேவையும் அது தான். மனப்பூர்வமான தீண்டுதல். எந்தத் தயக்கமும் இல்லாத தீண்டுதல். உடல்,பொருள்,ஆவி, அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல். மேல்,கீழ், என்ற பிரிவினையில்லாத தீண்டுதல். கருணையினாலோ, இரக்கத்தினாலோ, அல்ல. இந்த பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல். சாதி, மதம், இனம், மொழி, என்ற எல்லாவேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், நான், நீ, என்ற வேறுபாடு, ஆண்,பெண், மாற்றுப்பாலினம், சிறுபாலினம், என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனிதகுலத்தின் இன்றையத் தேவை.


Thursday 24 December 2015

மஞ்சள் நிற ரிப்பன்

மஞ்சள் நிற ரிப்பன்
உதயசங்கர்


ஏகாதசியை நமக்குப் பாடலாசிரியராகத் தெரியும். எளிய பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளை புதிய அர்த்தத்தில் கோர்க்கும் அவரது கவிதைகள், பாடல்கள், ஆச்சரியப்படவைக்கும், அதே போல இயக்குநராகவும் களம் கண்டவர். இப்போது மஞ்சள் நிற ரிப்பன் மூலம் சிறுகதையாசிரியராக அறிமுகமாகியுள்ளார். மதுரை மண்ணிலுள்ள காத்திரமான படைப்பாளிகளில் ஏகாதசி சற்று வித்தியாசமானவராக இந்தத் தொகுப்பில் தெரிகிறார்.
எளிய கிராமத்து மனிதர்களின் நம்பிக்கைகள், வலிகள், துன்பங்கள் ஏமாற்றங்கள், இவையே ஏகாதசியின் கதையுலகம். மதுரையின் மேற்கில் உள்ள வறண்ட கிராமத்து மனிதர்களையே தன் கதாபாத்திரங்களாக வார்த்திருக்கிறார். மனிதர்கள் தான் எத்தனை வகை,! எத்தனை ரகம்! 5.6 என்ற கதையில் கிராமத்துக்குப் போகும் ஒரு போட்டோகிராபரின் அந்த எளிய மக்களின் நம்பிக்கையை வைத்தே அவர்களைச் சமாளிப்பதை ரசமாகச் சொல்லியிருக்கிறார். பிள்ளைகளின் ஆசைகளை தன்னுடைய ஏழ்மையினால் நிறைவேற்ற முடியாத அப்பா எப்படிச் சமாளிக்கிறார் என்று சொல்லியிருக்கும் மஞ்சள் நிற ரிப்பன் கதை  தாழ் கதையில் ஆண்பெண் உறவைப் பற்றி கத்தி மேல் நடக்கிறமாதிரி அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஏகாதசி,. அம்மாவை விட்டு ஓடிப்போன அப்பாவைப் பற்றிய சித்திரத்தை அப்பா என்ற வெளியூர்காரன் என்ற கதையிலும், உதவி இயக்குநர்களின் அவலத்தை கதை வாங்கலியோ கதையிலும் இப்பொழுதும் பூக்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன என்ற கதையில் மகனால் நிராகரிக்கப்பட்ட தாயின் உணர்வுகளையும் மனம் வலிக்கும்படி எழுதிச் சென்றிருக்கிறார் மிகச்சிறந்த கதைசொல்லியாக ஏகாதசி உருவாகிக் கொண்டிருக்கும் அடையாளங்களை இந்தத் தொகுப்பு காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஏகாதசி!

வெளியீடு – எழுத்து


விலை – ரூ70/-

Saturday 19 December 2015

மெல்லின தேசம்

மெல்லின தேசம்
உதயசங்கர்


வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் மெல்லின தேசம் கவிதைப்புத்தகம் வாசித்தேன். அன்றாட வாழ்க்கையிலிருந்து அவர் தனக்கான கவிதைத் தருணங்களை கண்டடைகிறார். சுற்றிலும் நடக்கிற அத்தனை நிகழ்வுகளையும், கதாபாத்திரங்களையும் தன்னுடைய கவிதைகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார் கவுதமன். அபூர்வமான அவதானிப்பு சில கவிதைகளில் கவித்துவ அமைதியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அம்மாவைப்போலவே என்ற கவிதையின் முடிப்பில் ஒரு விந்தை நிகழ்கிறது.பெண்நிலை பற்றிய கவிதைகள் கவனிப்புக்குரியவை. சமூக மனதை நோக்கிய கேள்விகளும், சமூகப்பிரச்னைகளைப் பற்றிய கவிதைகளும் கலந்து விரவிக் கிடக்கின்றன. சற்றே பெரிய கவிதைகளில் கவிதை அமைப்பு இன்னும் மேம்பட வேண்டும். ஆனால் குறுங்கவிதைகளில் மிகச் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கவிதைத்தொகுப்பின் மூலம் மேலும் ஒருபடி முன்னேறி மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன். வாழ்த்துக்கள் கவுதமன்!

Thursday 17 December 2015

எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்


எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்-
நூல் அறிமுகம்


எம்.ஜி.ஆரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற சிறுகதை நூல் எம்.எம்.தீன் எழுதியது. நேற்று வாசித்தேன். முதல் சிறுகதைத்தொகுப்பு என்ற அடையாளமே இல்லை. 12 சிறுகதைகள். தேர்ந்த மொழிநடை. வழக்கமான கதை சொல்லல் முறையிலிருந்து வேறுபட்ட பாணி. மிக முக்கியமாக இந்தத் தொகுப்பில் வருகிற பெண்கள், ஆகா....பிரமாதம். கதைகளற்ற கதையில் நிழலாக வருகிற அம்மா, அவர் வருவாரா வில் வருகிற அமுதா, மௌன ஊஞ்சலில் வருகிற மாமி, ஒற்றைச்சிறகுவில் வருகிற சூடிப்பாட்டி, மிக அழகாக மனதுக்கு நெருக்கமாக உலவுகிறார்கள். மூன்று கதைகளைத் தவிர மற்ற கதைகளின் களம் சைவ, வைணவ, கிறித்துவ மரபு சார்ந்தது. இன்றைய காலகட்டத்தில் இதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அதோடு அந்த அநுபவங்களை இயல்பாக தீன் வெளிப்படுத்தியிருக்கிற விதம் அவரை ஒரு தேர்ந்த எழுத்தாளராகக் காட்டுகிறது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதை ஆனப்பாத்தீ. அதில் வருகிற அபுசாலிம் தமிழ் இலக்கியத்துக்குக் கொடை. விசாரணை வளையம் மிக முக்கியமான கதை. கதைகளற்ற கதை, புன்னகை, எம்.ஜி.ஆரோடு பேசிக்கொண்டிருக்கிறேன், ஒற்றைச் சிறகு, ஆகிய கதைகள் மிக நல்ல கதைகளாகத் தொகுப்பில் உருவாகியிருக்கின்றன. மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக எம்.எம்.தீன் உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.
வாழ்த்துக்கள் எம்.எம்.தீன்!


உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூலின் விலை-110/-


Tuesday 15 December 2015

நம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்

நம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்

உதயசங்கர்


கவிஞன் காலத்தின் மனசாட்சியாக இருக்கிறான். நம்முடைய காலம் நம்முடைய காலமாக இல்லை. ஒட்டு மொத்த சமூகமும் ஒரு வித பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த பைத்திய நிலைக்கு தான் செய்வது என்ன வென்று தெரியாது. உலகம் தப்பிக்க வழியின்றி மைதாசின் பேராசைக் கரங்களால் ஆவிச் சேர்த்து அணைக்கப்பட்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும் மனிதர்கள் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இனம், மதம், மொழி, பிரதேசம், கடவுள், சாதி, என்று எல்லாவற்றிகாகவும் யுத்தம் நடக்கிறது. என்ன ஆயிற்று இந்த உலகத்திற்கு? அதன் உன்மத்தநிலை ஒரு பச்சைக்குழந்தையை வெட்டிக் கொல்கிறது. தாய்மார்களை வன்புணர்வு செய்கிறது. மனிதர்களின் நிணத்தைப் புசிக்கிறது. பூக்களில் தேன் நஞ்சாகத் துளிர்க்கிறது. பழங்களின் விஷநாற்றம் குடலைப் புரட்டுகிறது. தானியங்கள் துப்பாக்கிக்குண்டுகளாகவே விளைகிறது. மனிதர்கள் ஒருவரையொருவர் விரோதமாகவே பார்க்கிறார்கள். எப்போதும் ஆயுதங்களைச் சுமந்து திரிகிறார்கள். யார் யாரை முதலில் கொல்வது என்பதே குறிக்கோளாக இருக்கிறது. நம் குழந்தைகளின் இதயத்தில் அன்பை ஊற்றி வளர்க்க மறந்து விட்டோம். அங்கே நஞ்சின் மலர்கள் பூத்து குலுங்குகிறது. தன்னைத் தவிர யாரும் எதுவும் முக்கியமில்லை என்ற எண்ணம், சிந்தனை, நோக்கம், வளர்ந்து தன் கொடுங்கரங்களால் எதிர்காலத்தை நெரிக்கிறது. பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் அகதிகளாய் அடைக்கலம் புகுகிறார்கள். அன்பெனும் நதி நஞ்சாய் மாறி பொங்கி நுரை தள்ளுகிறது.
நாம் வாழ்கின்ற காலம் அறமற்றதாக, நீதியற்றதாக, நேர்மையற்றதாக, அன்பற்றதாக, குரூரமானதாக, மாறி விட்டது. நவீன கவிதையின் புதிய முகமாக, தனக்கென ஒரு புதிய சொல்லாடலைக் கொண்டு இந்த சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற கவிதைகளை, அதன் முகத்தின் காறித்துப்புகிற கவிதைகளை, எழுதியவர் மனுஷ்ய புத்திரன். இறுக்கமான செறிவான, கட்டமைப்புடன் எழுதுவதே அரூபமான, காட்சிப்படுத்த முடியாத, கையில் பிடிபடாத தத்துவச்சிடுக்குகளை எழுதுவதே கவிதை என்றிருந்த நிலையில் ஒரு புதிய காற்று வீசுவதைப் போல  எழுதியவர் மனுஷ்ய புத்திரன். தொடர்ந்த கவிதை வெளிப்பாட்டில் தனக்கான கவிதையியலையும் உருவாக்கிக் கொண்டவர். எளிய சொற்களைக் கொண்டு அவர் கட்டியெழுப்புகிற காட்சிப்படிமங்கள் வாசித்து முடிக்கும்போது ஒரு பேருணர்வைத் தருகிற அநுபவமாக மாறுகிறது.
தற்செயலாய்க் கிடைத்தது
ஒரு நினைவுப்பதியன்
காலை முதல் மாலைவரை
மேலும் பல நாள்களுக்குத்
தோட்டத்தில் வேலை இருக்கிறது
இடம் வேண்டும்
புதர் நிலத்தில்
ஒரு நினைவுப்பதியனுக்கு
பிரமிப்பில் நடுங்கிய கால்களை
இறுகப்பிடித்துக் கொண்டாய்
நெகிழ்ந்து வெடித்த முத்தம்
உதடுகளில் தடவிய உமிழ்நீரில்
மூழ்கிற்று என் பிரபஞ்சம்
பின் நினைவுகளற்ற
விழிப்பு குறித்துப் பேசுகிறோம்
பின்னர் பூத்துவிடும்
ஒரு நினைவுப்பதியனிலிருந்து
பெரும் மலர்க்காடு.
தமிழ்மொழியின் அர்த்தசாத்தியங்களின் எல்லையை கவிஞனே விரித்துக் கொண்டு போகிறான். புதிய சொற்களைப் புடம் போட்டு துடைத்து துடைத்து விளக்கி புத்தம் புதுசாக்கி கவிதைக்குள் புழங்குகிறான். கவிதை புதிதாக அநுபவமாகிறது.
கோடையில் ஒரு நாள்
சூரியன்
ஏதோ ஞாபகத்தில்
மறைவதற்கு மறந்து விட்டது.
அந்த நீண்ட சாலையில்
நாங்கள்
சூரியனின் பிரமாண்ட சக்கரத்தை
கஷ்டப்பட்டு உருட்டியபடி
கடலை நோக்கிச் சென்றோம்.
கவிஞனால் மட்டுமே சூரியனை உருட்டமுடியும். அவனால் மட்டுமே கடவுள்களை கொல்ல முடியும். அவனால் மட்டுமே கடவுள்களின் மீது பரிதாபம் கொள்ளவும் முடியும்.
என் தெய்வங்கள்
எவ்வளவு பழமையானவர்கள்
எனக்கு
எவ்வளவு மூத்தவர்கள்
எவ்வளவு தளர்ச்சியும்
களைப்பும் அவர்கள்
உடலிலும் மனங்களிலும்
குடியேறியிருக்கும்?
கேட்க வந்த எதையும்
எப்போதும்
கேட்க முடியாமல்
கூச்சத்துடன் வெளியேறிப் போகிறேன்.
 மனித அவலம், நிராகரிப்பின்வலி, நிராதரவின் வேதனை, பிரிவின் துயரம், அன்பின் விஷம், என்று தன் கவிதைகள் அனைத்திலும் உணர்வு மயமாக காட்சிகளை உருவாக்குகிற மனுஷ்யபுத்திரன் நவீன கவிஞர்களில் மிக முக்கியமானவராக உருவானதில் ஆச்சரியம் என்ன?