Saturday 26 December 2015

தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.

தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.

உதயசங்கர்


இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிரும் உடலும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் உடையவை. ஒரு செல் உயிரி முதல் சிக்கலான செல்களின் கட்டமைப்பு கொண்ட மனிதன் வரை எல்லோரும் ஓர் நிறை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடமிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் இந்த பூமியின் உயிரோட்டத்துக்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பு செய்யவே செய்கிறார்கள். அந்தப்பங்களிப்பினால் மட்டுமே பூமியின் உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது? பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா?. மனிதர்களிடையே எப்படி இந்த மதிப்புச் சீர்குலைவு நேர்ந்தது. மனிதர்களை இப்படி மேல்கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடூரத்திட்டமே தீண்டாமை. தீண்டாமையில் உள்ள விசித்திரமே மனிதர்களை உடல்களாகப் பார்த்துப் பிரித்தது தான்.

பிராமணரும் தீண்டத்தகாதவரே. யாரையும் அவர்கள் தீண்ட மாட்டார்கள். யாரும் அவர்களைத் தீண்டவும் முடியாது. ஆனால் அவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் பிராமணர்கள். அதை எப்படிச் செய்தார்கள்? அவர்கள் மற்றவர்களைத் தீண்ட மறுத்ததின் விளைவாக தாங்கள் தீண்டத்தகாதவர்களானார்கள். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஒருவகையில் தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்களும் அதே தீண்டாமையின் அதலபாதாளத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் இடைநிலையில் மற்ற சாதியினரும் இருப்பதற்குக் காரணம் பிராமணர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதோடு அதைப் புனிதப்படுத்தவும் செய்தனர். இதன் விளைவாக யாருடனும் கலக்கவோ, ஒன்று சேரவோ அவர்கள் முன்வரவில்லை. இதனால் மற்ற சாதியினரும் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தங்களையும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மற்றவர்களோடு ஒன்று கலக்க விரும்பவில்லை. அதே நேரம் யாகங்கள், சடங்குகள் மூலம் அசுத்தத்தைத் தீட்டை கற்பிதமாகச் சுத்தம் செய்யும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், பௌதீகரீதியாக, உண்மையான செயல்களின் மூலம் அசுத்தத்தைச் சுத்தம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகவும் சமூகத்தில் வைத்திருப்பதற்கான காரணம் ஒரே மதிப்புடைய உடல்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்தது தான். பிராமணர்களும் தங்களுடைய தீண்டாமைநிலை காரணமாக எல்லாவற்றையும் தீண்டி விடமுடியாது. ஆனால் அவர்களுடைய தீண்டாமைநிலையின் அடிப்படை என்பது மற்றவர்கள் மீதான வெறுப்பு, மற்றவர்கள் மீதான அதிகாரம், மற்றவர்கள் மீதான நிராகரிப்பு, என்று சொல்லலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைநிலை என்பது சமூக இழிவு, சமூக அவமானம், சமூக நிராகரிப்பு. ஒத்த தன்மையுடைய ஒரே செயலின் இரண்டு விதமான விளைவுகளின் விசித்திரத்தை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்களே.

இன்னொரு வகையில் சொல்லப்போனால்  தீண்டாமை என்பது தீண்டத்தகாதவரின் குறையோ அல்லது செயலோ அல்லது இயலாமையோ அல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவரின் செயலின்மை அல்லது இயலாமை. ஆகவே தீண்டாமைநிலை என்பது தீண்டத்தகாதவரிடம் இல்லை. தீண்டத்தகாதவர் தம்மை தீண்டாமைநிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை தீண்டத்தகாதவர் என்று கற்பிக்கப்பட்டவர்களைத் தீண்ட மறுப்பவர்களிடமே குடியிருக்கிறது.

மனித குல வரலாற்றில் ஆதியிலிருந்தே சாதிகள் கிடையாது. சாதியமைப்பு முறை உருவான பிறகே அகமணமுறை உருவாகியிருக்கிறது. மனிதகுலம் ஆரம்பத்திலிருந்தே புறமணமுறையை, அதாவது கலப்பு மணமுறையை கடைப்பிடித்திருக்கிறது. சாதியமைப்பு முறை காப்பாற்றப்படுவதற்கு அகமணமுறை ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தச் சாதியமைப்பு முறையும் தோன்றிய காலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. 1871 ஆம் ஆண்டு காலனிய அரசு முறைசாரா கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னால் இருந்த சாதியநிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் பல சாதிகள் தங்களை வருணப்படிநிலைகளில் மேலே சென்றன. பல சாதிகளின் உட்கிளைகள் ஒன்று கலந்து ஒரே சாதியாக இறுகியதும் நடந்தது. காலனிய ஆட்சியில் கிடைக்கும் பொருளாதாரப்பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் உட்சாதிப்பிரிவுகள் ஒன்றிணைந்தன.

தற்காலத்தில் அகமணமுறையும் அந்தந்தச் சாதிகளிடம் இறுக்கமாக முன்பு போல இல்லை. பொருளாதாரக்காரணிகளின் விளைவாக கள்ளர், மறவர், அகமுடையார், போன்ற சாதியினருக்குள் பொதுவான மணஉறவு நடக்கிறது. அதே போல வெள்ளாளர், செட்டியார், முதலியார், போன்ற சாதியினருக்குள்ளும் மண உறவு நிகழ்கிறது. ஒருவகையில் சாதியமைப்பு முறை நீர்மையாவது போலத் தோன்றினாலும் இந்த ஒன்றிணைவு தலித்துகளைத் திட்டமிட்டு விலக்கி வைக்கின்றன. இதுவரை நடந்த மிகப்பெரும்பான்மையான கொலைகள், கௌரவக்கொலைகளில் ஆணோ, பெண்ணோ, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்ற குரூரமான உண்மையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.. அப்படியென்றால் சாதிகளின் இளக்கம் பூரணமானதில்லை. தீண்டுதல் என்பது ஏற்கனவே தங்களுக்குள் தீண்டிக் கொள்ளும் உரிமை பெற்ற சாதிகளுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ சாதியமைப்பில் சில மாற்றங்களை இது கொண்டுவரும். இதை கலப்பு மணம் என்றோ, புறமணம் என்றோ முழுமையாகச் சொல்லி விடமுடியாது. ஏனெனில் வருணப்படிநிலையிலும் சாதியப்படிநிலையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சாதிகளுக்கிடையிலான இணக்கமான உறவாகவே இதைச் சொல்ல முடியும். ஒரே காம்பவுண்டிற்குள் தனித்தனியாக கதவடைத்துக் கொண்டிருந்த வீடுகள் தங்கள் வீட்டுக்கதவுகளைத் திறந்து ஒரே வீடாக மாறியிருக்கிறார்கள்

ஆனால் வருணப்படிநிலையிலும், சாதியப்படிநிலையிலும் எல்லோரிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிற தலித்துகளுடனான மண உறவு ஒன்றே இந்த சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போவதற்கான அடிப்படையான விஷயமாக இருக்கும். தீண்டுதல் என்ற ஒன்று தார்மீகமாக அனைத்துச் சாதியினரிடமும் எந்தவித பேதமும் இல்லாமல் நிகழ முடியும் தீண்டுதல் கூட தன்னுணர்வுடன் விருப்புணர்வுடன் செய்யக்கூடிய காரியமாகும். ஆனால் ஒன்றுகலக்கும்போது யார் யாரென்ற அடையாளங்கள் மறைந்து போகும். அப்படி அடையாளங்கள் மறைந்த நிலை தான் ஒன்றில் ஒன்று கரைந்தநிலை.  இந்தத் தார்மீக உணர்வுநிலையில் மட்டுமே அனைத்துச் சாதிகளும் ஒன்றுகலத்தலும் தங்களுக்குள் கரைந்து போதலும் நிகழும். பகுத்தறிவும் விஞ்ஞானப்பார்வையும் கொண்ட புதிய சமூக ஒழுங்கு உருவாகும்போது ஒன்று கலந்து கரைந்துபோன நீர்மையான அந்த பரவச நிலையில் சாதிய அடையாளங்கள் கடந்த கால எச்சங்களாக மிதந்து கொண்டிருக்கும்.

தீண்டுதல் என்ற சொல் தீண்டாமையையும் தீண்டாமை என்ற சொல் தீண்டுதல் என்ற சொல்லினையும் உடன் அழைத்து வரும். நம்முடைய உடலை அதாவது ஒரு கை இன்னொரு கையைத் தொட்டால் அது தொடுதல். அதற்கு யாருடைய அநுமதியும் தேவையில்லை. ஆனால் அதேபோல மற்றவர்களை தீண்டும்போது அதற்கு தீண்டப்படுபவர்களின் ஒப்புதலும் வேண்டும். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஐம்புலன்களின் குணாம்சங்களில் தீண்டல் தான் அதாவது தொடுதல் தான் உயிர்கள் அனைத்திற்கும் உள்ள அடிப்படை இயல்பு. ஐம்புலன்களாலும் அனைத்து உயிர்களையும் அனைத்துப் பொருட்களையும் தீண்டியே உயிர்கள் தங்களை அறிந்து கொள்கின்றன எனலாம். நாம் தீண்டலின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிறோம். குழந்தையின் மீதான தாயின் தீண்டல் அன்பை, அக்கறையை, வெளிப்படுத்துகிற செயலாக இருக்கிறது. குழந்தையும் அந்தத் தீண்டலின் மூலம் தன்னை அறிந்து கொள்வது மட்டுமல்ல நம்பிக்கையும் கொள்கிறது. எனவே தீண்டுதல் என்பது பொருட்களில் உறைந்துள்ள அடிப்படைப்பண்பு..

ஒரு பொருளைத் தீண்ட வேண்டுமானால் அந்தப் பொருளை நோக்கி அருகில் செல்ல வேண்டும். அல்லது அந்தப்பொருள் நம்மை நோக்கி அருகில் வரவேண்டும். தீண்டலின் மூலம் இரண்டு பொருட்களிடம் உள்ள தூரம் குறைந்து விடுகிறது என்றும் சொல்லலாம். அந்த இரண்டிற்குமிடையே நம்பிக்கையும், அணுக்கமும் ஏற்படுகிறது. தீண்டுதலின் மூலம் தீண்டப்படுகிற பொருளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டப்படுகிற பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டுதலின் மூலம் அந்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட முடியும். தீண்டுதலின் மூலம் ஒன்றில் ஒன்று கரைந்து விட முடியும். இன்றையத்தேவையும் அது தான். மனப்பூர்வமான தீண்டுதல். எந்தத் தயக்கமும் இல்லாத தீண்டுதல். உடல்,பொருள்,ஆவி, அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல். மேல்,கீழ், என்ற பிரிவினையில்லாத தீண்டுதல். கருணையினாலோ, இரக்கத்தினாலோ, அல்ல. இந்த பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல். சாதி, மதம், இனம், மொழி, என்ற எல்லாவேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், நான், நீ, என்ற வேறுபாடு, ஆண்,பெண், மாற்றுப்பாலினம், சிறுபாலினம், என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனிதகுலத்தின் இன்றையத் தேவை.


No comments:

Post a Comment